அழகின் சிரிப்பு ... தொடர்ச்சி ... கடல் முழக்கம்
இடையிலே கிடைக்கும் வெள்ளம் எழில்வீணை; அவ்வீணைமேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத் தின்பத்தை வடிக்கின்ற புலவன்! தம்பி வண்கடல் பண்பா டல் கேள்! 11 நடுப்பகலிற் கடலின் காட்சி
புழுங்கிய மக்கள் தம்மைக் குளிர்காற்றால் புதுமை செய்து முழங்கிற்றுக் கடல்! இவ்வைய முழுவதும் வாழ்விற் செம்மை வழங்கிற்றுக் கடல்! நற்செல்வம் வளர்கின்ற கடல்பார் தம்பி! 12 நிலவிற் கடல்
தன்இடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள், தம்பி என்னென்று கேள்; அதோபார் எழில் நிலா ஒளிகொட் டிற்று! மன்னியே வாழி என்று கடலினை வாழ்த்தாய் தம்பி. 13 3. தென்றல்
மென்காற்றும் வன்காற்றும்
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே! திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர் துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14 தென்னாடுபெற்ற செல்வம்
சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும் தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத் தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 15 தென்றலின் நலம்
ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின் கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும், வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 16 அசைவின் பயன்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார், என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17 தென்றலின் குறும்பு
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும் சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18 குழந்தையும் தென்றலும்
குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின் கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும் வழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 19 தென்றல் இன்பம்
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற் பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 20 தென்றலின் பயன்
வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்; 'எழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை' என்று கேட்டேன், புழுதியைத் துடைத்தேன் என்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை! 21 தென்றற்கு நன்றி
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள் தமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம் அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 22 தென்றலின் விளையாட்டு
துளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி, வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க் கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 23 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |