http://www.chennailibrary.com



சமகால இலக்கியம்


Google

பழந்தமிழ் இலக்கியம்






இளைஞர் இலக்கியம்

1. தமிழ்
1. தமிழ் வாழ்த்து

தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

2. முத்தமிழ்

படிப்பும் பேச்சும் இயற்றமிழ்!
பாடும் பாட்டே இசைத்தமிழ்!
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்.

முடிக்கும் மூன்றும் முத்தமிழே!
முத்தமிழ் என்பது புத்தமுதே!
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.

3. மூவேந்தர்

சேர வேந்தர் தமிழ் வேந்தர்!
சிறந்த சோழர் தமிழ் வேந்தர்!
பாரோர் எல்லாம் புகழ்கின்ற
பாண்டிய வேந்தர் தமிழ் வேந்தர்!

நேரே தமிழைக் காத்தாரே!
நீண்ட நாட்டை ஆண்டாரே!
வீரத் தாலே புகழெல்லாம்
விளைத்த இவரே மூவேந்தர்.



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathidasan/ilanjarilakkiyam.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




பிற செய்திகள்




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்

தரவிறக்கம்


தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.