http://www.chennailibrary.com


இருண்ட வீடு

1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.

கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

*****

அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான்.

2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.

தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!

*****

பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று,
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.

3. பையன் காலைக்கடன் முடிக்காமல் உணவுண்ணத் தொடங்கினான்;
இரண்டு பற்களின் மறைவு.

பிட்டுக் காரி தட்டினாள் கதவையே
திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வில்லம்பு போல மிக விரை வாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathidasan/irundaveedu.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.