தேசிய கீதங்கள் 1. பாரத நாடு 1. வந்தே மாதரம் ராகம் - நாதநாமக்கிரியை
தாளம் - ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1 ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2 ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3 ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4 எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5 புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6 2. ஜய வந்தே மாதரம் ராகம் - ஹிந்துஸ்தானி பியாக்
தாளம் - ஆதி பல்லவி வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம். சரணங்கள் ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) 1 ஆரிய பூமியில் நாரிய ரும்நர சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே) 2 நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர் உவந்தே சொல்வது (வந்தே) 3 ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) 4 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |