![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
அபிமானம் சென்ற ஆண்டின் தேசிய ரீதியில் ‘சிறந்த நடிகன்’ என்ற பட்டம் எனக்குக் கிடைத்திருக்கிறது. சினிமா உலகிற்கு வந்து, குறுகிய காலத்திலேயே எனக்குக் கிடைத்த முதல் பட்டம் என்பதில் எனக்கு பெருமிதம் தான். வெறும் பட்டம் மட்டும் அல்ல. அதற்கான தங்க மெடலுடன், ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகை வேறு. ஷண்முகானந்த ஹால் ‘களை’ கட்ட ஆரம்பிக்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கான பரிசளிப்பு விழா இன்னும் சில வினாடிகளில் ஆரம்பிக்கப் போகிறது. பரிசு பெறவிருக்கும் சக நடிகர், நடிகைகளும் பகட்டான உடையில் மேடையில் பவனி வர, நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்கிறேன். ஏதோ சொர்க்கத்தில் ஒரு அழகான சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் உணர்ச்சியில், என் மனம் உல்லாசப் பறவையாக என்னுள் சிறகடிக்கிறது. “சந்திரகாந்த் வாழ்க... சந்திரகாந்த் வாழ்க...” என் ரசிகர்களின் இந்த ஆரவாரம், என் நெஞ்சில் ஆனந்த அலைகளாக அடிக்க, அந்த பெருமிதத்தில் என் சக நடிகர்களையும் ஒரு வித பூரிப்புடன் பார்க்கிறேன். இதோ இன்னும் சில நொடிகளில் ஜனாதிபதியின் கையில் பட்டமும், பரிசும் வாங்கப் போகிறேன். உணர்ச்சிப் பெருக்கில் என் உடம்பில் உதறல் ஏற்பட ஆரம்பிக்கிறது. என் பெயர் அழைத்தாகிவிட்டது. டென்ஷனை அடக்கிக் கொண்டு ஸ்டைலாக மெதுவாக நடந்து ஜனாதிபதியின் அருகில் நிற்கிறேன். பட்டத்தையும், ஐம்பதாயிரத்திற்கான காசோலையையும் அவர் கையிலிருந்து பெற்றுக் கொள்கிறேன். ஏகப்பட்ட கேமரா பிளாஷ் வெளிச்சத்தில் என் கண்கள் கூச ஆரம்பிக்க, ரசிகர்களின் கைத்தட்டலில் என் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகம்தான். மறக்க முடியாத இந்த நிலையில் என் மனம் மயங்கிக் கிடக்கும் போது தான் ஜனாதிபதி தங்க மெடலை எனது கோட்டின் இடதுபக்கம் குத்துகிறார். என் நெஞ்சுக்குள் ஏதோ சுரீரென்றது. என் மனசாட்சியையும் சேர்த்து குத்திவிட்டாரா என்ன? அலட்டிக் கொள்ளாமல் ரசிகர்களுக்கு வணக்கம் காண்பித்துவிட்டு என் இருக்கையில் அமர்கிறேன். ‘இந்தப் பரிசுக்குக் காரணம் யார்? நீயா?’ எங்கோ இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த என் மனசாட்சி கட்டவிழ்க்கப்பட்டு விட்டதா என்ன? என்னமாய் கேட்டு விட்டது இந்தக் கேள்வியை. எந்த வேடத்தில் நான் சிறப்பாக நடித்ததற்காக இந்தப் பட்டம் என்பதை இக் கட்டத்தில் நான் சொல்லித்தான் ஆக வேண்டும். மனநிலை சரியில்லாத ஒரு பிச்சைக்காரன் வேடம். கடைசியில் பரிதாபமாய் சாகிறான். அந்த வேடத்தை, அவ்வளவு சிறப்பாகச் செய்ததற்கு காரணம் நானே அல்ல. ஆம் என் எதிர் வீட்டு மரத்தடியே தன் நிரந்தர இருப்பிடமாகக் கொண்ட அந்த மென்டல் பிச்சைக்காரன் தான். அவனுடைய மேனரிசத்தைத்தான் நான் அந்த கேரக்டரில் முழுக்க முழுக்க கையாண்டிருந்தேன். அந்தப் படத்தின் டைரக்டரும் இதற்கு சம்மதிக்க, ஒரு நாளைக்கு நூறு தடவையாவது அணு அணுவாக அவனுடைய ஒவ்வொரு அசைவையும் பார்த்த வண்ணம் எத்தனை நாள் என் ஜன்னல் கம்பிகளுக்குள் அவனை சிறை வைத்திருப்பேன். யோசித்துப் பார்க்கிறேன். நான் அவனுக்கு இது நாள் வரை ஏதாவது செய்திருக்கிறேனா? ஒரு நாளைக்கு ஒரு ஐம்பது பைசாவாவது அவனுக்குப் போட்டிருப்பேனா? ஆனால் அவனைப் போல நடித்த என் கையில் இப்போது ஐம்பதாயிரம். என் இதயம் கனக்க, ஆரம்பிக்கிறது. இதற்குப் பரிகாரமாக நீ அவனுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். குற்ற உணர்ச்சியில் குமுறிக் கொண்டிருக்கும் என்னை குற்றேவல் புரிய ஆரம்பிக்கிறது என் மனசாட்சி. காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், என் எண்ணமெல்லாம்... “நாளையிலிருந்து அவன் பிச்சைக்காரன் அல்ல. அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து நாளடைவில் அவனை ஒரு சராசரி மனிதனாக்கி விட வேண்டும். என் லட்சியமும் அதுவே. கார் என் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மரத்தடியில் என்ன அவ்வளவு கூட்டம்? காரிலிருந்து இறங்கியவன் அவர்களை நோக்கி வேகமாகச் செல்கிறேன். “பாவம் சார். சும்மாதான் இருந்துகிட்டிருந்தான். எங்கேயிருந்துதான் அந்தப் பாம்பு வந்துச்சோ. அது கடிக்கவும், பாம்பு... பாம்புன்னு கத்தி துடியா துடிச்சிட்டான். அந்தச் சந்த்தம் கேட்டுத்தான் நாங்க வெளியே வந்தோம்” என்றார் பக்கத்து வீட்டுக்காரர். கடைசியாக நான் அந்தப் பிச்சைக்காரனைப் பார்க்கிறேன். வாயில் நுரை தள்ளியபடி, மண்ணில் மல்லாந்து கிடந்தது அவனது உடம்பு. சற்று நேரத்திற்கு முன் ஆனந்தக் கண்ணீரை சிந்திய என் கண்கள், இப்போது அவனுக்காக சோகக் கண்ணீர் வடிக்கிறது. இரண்டு நாள் கழித்து... ஒரு நாளிதழில்... ”நடிகர் சந்திரகாந்த் அரசு மனநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக ரூபாய் ஐம்பதாயிரம் கவர்னரிடம் அவரது இல்லத்தில் சந்தித்து கொடுத்தார். நடிகர் சந்திரகாந்த் சென்ற ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே...” இந்த வரிகளைப் படித்த என்னுள், அந்தப் பிச்சைக்காரன் ஒரு அழகான, அறிவான மனிதனாக, கலைஞனாக ஒரு ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறான். ஏளனமாய் என்னை பல கேள்விகள் கேட்ட என் உள்மனம் இப்போது எங்கே போய்விட்டது? |