சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 10 ...

9. புலவி விராய பத்து

     இத் தலைப்பின் கூழ் வருவன பத்துச் செய்யுட்களும் புலவி பொருளாகத் தலைவியும் தோழியும் பரத்தையும் கூறுவனவாக அமைந்துள்ளன. புலந்து கூறி வாயில் மறுத்தலும் இவ்வற்றுட் காணப்படும். ஆகவே, புலவி விராய பத்து எனப் பெற்றது.

81. மனையோள் வருந்துவள்!

     துறை: 'தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள்' என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

     (து.வி: 'தன்னைப் பற்றித் தலைவி கொடுமை கூறினாள்' என்று கேட்ட பரத்தைக்குத் தலைவியின் மீது சினம் உண்டாகின்றது. எனினும், தலைவியைப் போலத் தனக்கு உரிமைப் பிடிப்பு இல்லாததனையும் அவள் மறந்தளில்லை, உள்ளம் பதறித் துடித்தவாறிருக்கின்றாள். அவ்வமயம், தலைவன் வந்து, அவள் முகம் கொடாமை கண்டு, அவள்பால் தான் கொண்டுள்ள அன்புடைமை பற்றிச் சொல்லி, அவளைத் தெளிவிக்க முயல்கின்றான். அப்போது, அவனுக்குச் சொல்வாள் போலத் தலைவியின் பாங்காயினாரும் கேட்டுணருமாறு, அப்பரத்தை சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
     அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
     மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ
     என்னை 'நயந்தனென்' என்றி; நின்
     மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே!

     தெளிவுரை: குருகுகள் உடைத்து உண்டு கழித்த வெள்ளிய வயிற்றையுடைய யாமையது இறைச்சியினை, அரிப்பறையை முழக்கும் தொழிலுடையோரான உழவர்கள், தம் மிக்க உணவோடு சேர்த்து உண்ணும், மலர்களால் அழகு பெற்ற நீர்த்துறைகளைக் கொண்ட, பொய்கைகள் விளங்கும் ஊரனே! நீதான் இங்கே வந்தனையாய், 'என்னையும் விரும்பினேன்' என்றும் கூறுகின்றனை. இதனை நின் மனையோள் கேட்டனளாயின், மனம் பொறாதாளாய் மிகவும் வருந்துவள் காண்!

     கருத்து: ஆகவே, 'நீயும் என்னை மறத்தலே நன்று' என்றதாம்.

     சொற்பொருள்: குருகு - நீர்ப்பறவை. அகடு - வயிறு. அரிப்பறை - அரித்தெழுகின்ற ஓசையுடைய உழவர் முழக்கும் பறை; அறுவடைக்கு முன்னர், வயலை வாழிடமாகக் கொண்ட புள்ளும் பிறவும் அவ்விடம் விட்டு அகன்று போதற் பொருட்டு, உழவர் பறை முழக்குதல் என்பது அருள்மிகுந்த தமிழ் மரபாகும். வினைஞர் - தொழிலர்; உழவர். அல்குமிசை - மிக்க உணவு: இட்டுவைத்து உண்ணும் கட்டுணவும் ஆம். வாயில் - நீர்த்துறை, மனையோள் - மனையாட்டி.

     விளக்கம்: குருதினம் உண்டு கழித்த யாமையின் இறைச்சியை உழவர் தம் கட்டுச் சோற்றோடும் கூட்டியுண்பர் என்றது. அவ்வயல்கள் வயலாமைகள் மிக்குவாழும் நீர்வளம் மலிந்தன வென்பதாம். அரிப்பறை ஒலிகேட்டு அவை அகல, உழவர் குருகினம் விட்டுச் சென்ற மிச்சிலைத் தம் உணவோடு கூட்டி உண்பர் என்க. 'மலரணி வாயில் பொய்கை' என்றது, மலரால் அழகு பெற்று விளங்கும் பொய்கை என்றதாம். 'என்னை நீ விரும்பினேன் என்று கூறியதைக் கேட்டால், நின் மனைவி பெரிதும் மனம் வருந்துவாள்' என்றது. 'அவளினும் நீயே எனக்கு மிகவும் விருப்பினள்' என்று கூறுவான் என்பதறிந்து கூறியதாம். அதனைக் கேட்கும் தலைவியின் பாங்கியர் தலைவியிடம் கூற, அவள், தலைவனைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாமைக்கு நெஞ்சழிந்து மேலும் நலிவாள் என்பதாம்.

     உள்ளுறை: குருகுகள் உண்டுகழித்த யாமையின் இறைச்சியை, உழவர்கள் தம் சோற்றோடு சேர்த்து உண்பது போல, யாம் நுகர்ந்துகழித்த தலைவனைத் தலைவியும் விரும்பி நுகர்வாள் என்று, உள்ளுறைப் பொருள் தோன்றக் கூறியதாம்.

     பாடபேதம்: 'வினைஞர் நல்குமிசை' எனவும் பாடம். நல்கு மிசை என்பது, பலர்க்கும் நல்கித் தாமும் உண்ணும் கட்டுணவு. இதற்கு, நின் மார்பினைத் தான் துய்த்தலன்றி, யாமும் துய்த்தற்கு உரிமையுடையோம் என்பதைத் தலைவி அறியாது போயினள் என்றதாம்.

82. வெகுண்டனள் என்ப!

     துறை: மனைவயிற் புகுந்த பாணற்கும் தலைமகன் கேட்கு மாற்றல் தலைமகள் சொல்லியது.

     (து.வி: பரத்தையுறவினனான தலைமகன், தன் பாணனோடும் தன் வீட்டிற்கு வருகின்றான். வந்தவன், ஆர்வத்தோடு தன் மனைவியை அணுக, அவள், பாணனுக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
     'மகிழ்நன் மார்பின் அவிழிணர் நறுந்தார்த்
     தாதுண் பறவை வந்து, எம்
     போதார் கூந்தல் இருந்தன' வெனவே!

     தெளிவுரை: பாணனே! மகிழ்நனது மார்பிடத்தேயுள்ள கட்டவிழ்ந்த பூங்கொத்துக்களோடும் கூடிய நறுமண மாலையிடத்தே மொய்த்துத் தேனுண்ட வண்டினம், எம்முடைய மலரணிந்த கூந்தலிலேயும் பின்னர் வந்து இருந்தன என்பதற்கே, நின் தலைவியாகிய பரத்தை வெகுண்டனள் என்று கூறுகின்றனரே!

     கருத்து: 'அதற்கே வெகுள்பவள், தலைமகன் என்னைத் தழுவினனாயின் பொறுப்பாளோ?' என்றதாம்.

     சொற்பொருள்: அவிழிணர் - இதழவிழ்ந்த மலர்க் கொத்து. நறுந்தார் - நறுமணம் கமழும் மாலை. தாதுண் பறவை - தேன் அருந்தும் வண்டினம். போதார் கூந்தல் - மலரணிந்த கூந்தல்.

     விளக்கம்: மலர்தொறும் சென்று தேனுண்ணத் தாவும் வண்டினம் ஆதலின், அவன் மார்பிடத்துத் தாரில் மொய்த்தது தலைவியின் கூந்தலிற் சூடிய மலரிடத்தும் பின்னர்ச் சென்று மொய்த்தது என்க. இதனைக் கேட்கும் பரத்தை, அவர்கள் அத்துணை நெருங்கியிருந்தனர். அது தழுவல் குறித்ததே எனக் கொண்டு, தலைவன் மீது வெகுண்டாள் என்பதாம்.

     'தாதுண் பறவை' போன்று, பெண்களை நாடித் திருபவன் தலைவன்' என உட்பொருள் தோன்றக் கூறி, அவன் அப் பரத்தையையும் ஒரு நாள் கைவிட்டு, இன்னொருத்திபாற் செல்வான் என்று சொன்னதும் ஆம்.

     தலைமகன் மார்பின் மாலையினை 'அவிழ் இணர் நறுந்தார்' எனவும், தன் கூந்தல் மலர்களைப் 'போது' எனவும் குறிப்பிட்ட சிறப்பும் காண வேண்டும். தேனுண்ணற்கான அவன் மார்பின் மாலை மலர்களைவிட்டு எழுந்து. போதாக மலரும் செவ்வி நோக்கி இருக்கும் தன் கூந்தல் மலர்களில் மொய்த்தது பற்றிக் கூறியது. அதுதான் தான் விரும்பும் இனிய நுகர்வை அடையாது போகும் பேதைமை பற்றிக் கூறியதாம். இது மணம் பெற்று என்னோடும் கூடியின் புற்றிருந்த தலைவன், தன் பேதைமையாலே, இன்ப நுகர்வுக்குரிய பக்குவமும் பெறாத இளையாளான பரத்தையை நச்சித் திரிவானாயினனே என்று தலைவனின் அறியாமை சுட்டிக் கூறியதுமாகும்.

83. பையப் பிரிந்து வாழ்க!

     துறை: வரைந்து அணிமைக் கண்ணே, தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி, அவனோடு புலந்து சொல்லியது.

     (து.வி: தலைவியை மணந்து மனையறம் தொடங்கி நெடுங்காலங்கூடக் கழியவில்லை. அதற்குள்ளேயே அவளை விட்டுப் பரத்தையுறைவை நாடிச் செல்வானானான் தலைவன். அதனைப் பலரும் சொல்லக் கேட்ட தலைவி, அவன் தன்னை அணுகும்போது புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
     தணந்தனை யாகி, உய்ம்மோ - நும்மூர்
     ஒண்தொடி முன்கை ஆயமும்
     தண்துறை ஊரன் பெண்டெனப் படற்கே.

     தெளிவுரை: எம்மை விரும்பி மணந்து கொண்டோனாகிய நீதான், எமக்கு அருள் செய்தலைக் கைவிடுவாய் ஆயினும், நின் ஊரிடத்தேயுள்ள ஒள்ளிய தொடிவிளங்கும் முன் கையினரான பரத்தையர் மகளிர் பலரும், 'தண்ணிய துறை கொண்ட ஊருக்குரிய நின் பெண்டு' எனச் சொல்லப் படுவதற்கு உரியளாகுமாறு மெல்லமெல்ல எம்மை நீங்கினையாகிச் சென்று ஒழுகுவாயாக!

     கருத்து: 'இதனையாவது அருளிப் பேணுவாயாக' என்ற தாம்.

     சொற்பொருள்: பைபய-மெல்லமெல்ல. தணந்தனையாகி - நீங்கினையாகி. 'ஆயம்' பரத்தையர் மகளிரைக் குறித்தது. 'ஊரன் பெண்டு' என்றது, 'ஊரனுக்கு உரியவளான பெண் இவள்' எனப் பேர் பெறுவது.

     விளக்கம்: தலைவனின் பிரிவால் மனம் வருந்திய தலைவி. இவ்வாறு பதைத்து மொழிந்தனள் எனவும் கொள்ளலாம். 'ஆயம்' என்பது, பொதுவாக மகளிரது உடன் விளையாட்டுத் தோழியரையே குறிக்கும்; எனினும், இங்கே தலைவனுக்குச் சார்த்திச் சொன்னது, அவன் பரத்தையரோடு புதுப்புனலாடியும் பிறவாறும் ஆடிக்களிக்கும் இயல்பினன் என்பதனால் ஆகும். எனக்கு, 'நின் பெண்டு' எனப்படும் தன்மையை மணத்தால் தந்துவிட்ட நீதான், அவர்க்கும் அப் பெருமையைத் தருதற்கு நினைப்பினும்,அ தனை மெல்லமெல்லச் செய்வாயாக' என்றனளாம். 'நின் பெண்டு' என்னும் பெயர் மட்டுமே தந்து, அதற்குரிய இன்ப வாழ்வைத் தருதற்கு மறந்து, புறத்தொழுகுவோன் எனப் பழித்து ஊடினள் எனவும் கொள்க. 'தண்துறையூரன்' என்றது, அவன் அவருடன் கூடி நீர்விளையாட்டயர்ந்து மகிழ்ந்ததனைத் தான் அறிந்தமை உணர்த்தினதும் ஆகும்.

84. கண்டால் என்னாகுவளோ?

     துறை: பரத்தையர் மனைக்கண் தங்கிப், புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தோழி சொல்லியது.

     (து.வி: தலைவன் பரத்தையுடன் மகிழ்ந்துவிட்டு, அடுத்துத் தன் வீட்டிற்கும் விரைந்து வருகின்றான். யாதும் அறியானே போல அவன் தலைவியை அணுக, அவள் ஊடி ஒதுங்குகின்றாள். அப்போது தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     செவியின் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்,
     கண்ணிற் காணின், என்னாகுவள் கொல் -
     நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
     தைஇத் தண்கயம் போலப்,
     பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே?

     தெளிவுரை: மகிழ்நனே! நறுமண மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மகளிர்கள் படிந்தாடும், தைத்திங்கள் நாளிலே விளங்கும் குளிர்நீர்க் குளத்தைப் போல, பலரும் தழுவிக் கிடந்து நுகரும் நின் பரத்தைமை கொண்ட மார்பினைப், பிற மகளிர் சிறப்பித்துக் கூறுவதைச் செவியாற் கேட்டாலும், சொல்லுதற்கரிய கடுஞ்சினம் கொள்வோளான நின் தலைவி, நின் மார்பிற் காணும் இப்புணர்குறிகளைக் கண்ணாற் கண்டனளாயின், என்ன நிலைமையள் ஆவாளோ?

     கருத்து: 'அவள் துடிதுடித்துப் போவாளே' என்றதாம்.

     சொற்பொருள்: சொல் இறந்து - சொல்லும் அடங்காமற்படிக்கு. வெகுள்வோள் - சினங்கொள்வோள்; என்றது தலைவியை. ஐம்பால் - கூந்தல்; ஐம்பகுதியாகப் பகுத்து முடித்தலையுடையது. பரத்தை மார்பு - பரத்தையுடைய மார்பு; என்றது தலைவனின் மார்பினை உண்ணல் - நுகர்தல்; மார்பை உண்ணலாவது, அணைத்துத் தழுவி மகிழ்தல்.

     விளக்கம்: பிற மாதரோடு நீ தொடர்புடையை எனக் கேட்டாலே சொல்ல முடியாத சினம் கொள்பவள். நீ புணர் குறியோடும் வருகின்ற இந்நிலையையும் கண்டால் என்னாகுவளோ? ஆதலின், இவ்விடம் விட்டு அகன்று போவாயாக என்பதாம். 'மகளிர் நீராடும் தண்கயம்' என்று உவமித்தது, அவர் கழித்த மலரும் சாந்தும் கொண்டு அது விளங்கும் தன்மைபோல, அவன் மார்பும் அவற்றோடு சேர்ந்ததாக விளங்கிற்று என்றற்காம். மகளிர் தைத்திங்கள் தண்கயம் ஆடி நோன்பு பூணல் தமக்கேற்ற துணைவரைப் பெருதற் பொருட்டாதலின், அவன், நின் மார்பினையும் 'விரும்பியாடி நின்னைத் தம் புகலாகப் பெற்றனர் என்பதுமாம். 'என்னாகுவள் கொல்?' என்றது, உயிர் நீப்பள் என்று எச்சரித்தாம்.

     இவராடிய குளம் எனப் பிறர் ஒதுக்காது, தாமும் புகுந்து நீராடலே போல, நின் மார்பைப் பரத்தையர் பலர் முன் தழுவினர் என்பதறிந்தும், புதியரும் நீ தரும் இன்பத்திற்கும் பொருளுக்குமாக நின்னை வெறாது விரும்பித் தழுவி இன்புறுத்துவர்; ஆயின், அது தலைவியின் மாட்டும் கருதினை யாயின் பொருந்தாது என்கின்றனள். இதனால், தோழி வாயில் மறுத்தாள் என்பதும் அறியப்படும்.

85. நின்னைக் காண்பவர் சிரியாரோ?

     துறை: தலைமகன் பரத்தையர் மேற் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வழி மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.

     (து.வி: தலைமகன் பரத்தையரை நாடிச் செல்வதற்குப் புறப்பட்டவன், சிறிது காலம் தாழ்த்துப் போகவேண்டியதாகவே, தன் மனையினுள்ளே சென்று புகுந்தான். அவன் ஒப்பனையும் பிறவுமறிந்த தலைவி, வருந்திக் கூறி, அவனைப் போக்கு விலக்கியதாக அமைந்த செய்யுள் இது.)

     வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை
     தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும்
     மறுவில் யாணர் மலிகேழ் ஊர! நீ
     சிறுவரின் இனைய செய்தி;
     நகாரோ பெரும! நிற் கண்டிசி னோரே?

     தெளிவுரை: வெண்மையான தலையையுடைய சம்பங் கோழியின், அரித்த குரலையுடைய பேடையானது, தன் சேவல் பிரிந்ததென்று, கெளிர்ந்த நறுவிய பழனங்களிலுள்ள, தன் கிளைகளோடு சொல்லிச் சொல்லிக் கூவியபடியிருக்கும், குற்ற மற்ற மிகுதியான புதுவருவாயினைடைய ஊரனே! நீதான் சிறுவரைப் போல பின்விளைவு கருதாயாய் இத்தகைய செயலைச் செய்கின்றாயோ! நின்னைக் கண்டோர், நின் செயலைப் பற்றி எள்ளி நகையாட மாட்டார்களோ?

     கருத்து: 'குடிப்பழி மிகுதலை நினைத்தாயினும், நின் பொருந்தாப் போக்கைக் கைவிடுக' என்றதாம்.

     சொற்பொருள்: 'நுதல்' என்றது தலையின் மேற் பகுதியை; சம்பங்கோழியின் தலையின் மேற்பக்கம் வெள்ளையாயிருக்கும் என்பது இது. கம்புள் - சம்பங்கோழி. அரிக்குரல் - அரித்தரித்தெழும் குரல். கிளை - தன்னினப் பிற கோழிகள். ஆலும் - கூவும். மறுவில் - குற்றமற்ற; மறிவில் எனவும் பாடம்; தடையற்ற என்பது பொருள். 'நறும் பழனம்' என்றது, அதிலுள்ள பூக்களால். செய்தி - செய்வாய்.

     விளக்கம்: சேவலைப் பிரிந்த கோழி, தன் துயரைச் சொல்லித் தன் இனத்தோடு கூவியபடியிருக்கும் பழனம்' என்றது, தானும் அவ்வாறே புலம்ப வேண்டியிருந்தும், குடிநலன் கருதித் தன் துயரை அடக்கியிருக்கும் தன் பெருந்தகைமை தோன்றக் கூறியதாம். சிறுவர், செய்வதன் பின் விளைவு அறியாதே செய்து, பின் பலராலும் நகையாடப் படுவர் என்பாள், 'சிறுவரின் இனைய செய்தி' என்றனள்; 'நீதான் பொறுப்புடைய குடித்தலைவன் ஆயிற்றே, அதனை மறந்தனையோ?' என்றனளுமாம். 'கண்டோர் நகாரோ' என்றது, 'ஊர் பழிக்கும் செயல் பரத்தமை' என்றும் சொல்லித், தாய் போல அறிவுறுத்தியதாம்.

     'தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கு உரித்தென மொழிப' என்னும் கற்பியல் சூத்திரத்தின் விளக்கம்போல அமைந்தது இச்செய்யுளாகும். (தொல். கற்பு, 32).

     'நின் சிறுவரின்' என்பது பாடமாயின், 'அவன் புதல்வன், அழைக்கும் மாதரிடமெல்லாம் தாவிச் சென்று, அவர் அணைத்து முத்தமிடக் களிக்கும் அத் தன்மைபோல' என்றதாம். 'அவன் சிறுவன்; காமம் அறியான்; நீயும் அவ்வாறே செய்யின் நின் எண்ணத்தைக் குறித்து ஊர் பழியாதோ என்றதாம்.'

     மேற்கோள்: இவ்வாறு கடிபவள், தலைவனை வெறுக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வாள் என்பதாம். மகனும் ஆற்றாமை வாயிலாகத் தலைமகன் வந்தபோது, தலைமகள் எதிர்கொண்டு சொல்லியது என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர்; அப்போது, புறம்போகப் புறப்பட்டவன் தன் மகனைக் கண்டதும், அவனை எடுத்துணைத்தவாறே மனைபுகத், தலைவி எதிர்கொண்டு சொல்வதாகக் கொள்க.

86. நின் மனையாளோடும் வாழ்க!

     துறை: 'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை, அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

     (து.வி: தன் புதல்வன் சொல்லிய செய்தியைத் தலைவியின் பாங்கியர் வந்து சொல்ல, அப்படியே கேட்டு நடந்தான் தலைவன், அவன்பால் பேரன்புடையவன் ஆதலால். இதனையறிந்த பரத்தை, 'நின் மகன்மேல் நின் அன்பு அத்தகையதாயின், நீ இனி நின் மனைவியோடேயே இன்புற்றனையாகி, நின் இல்லிடத்தே இருப்பாயாக; இவண் வாரற்க' என்று சொல்லி ஊடுகின்றனள் எனக் காட்டுவது இச்செய்யுள்.)

     வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குரல்
     நீள்வயல் நண்ணி இமிழும் ஊர!
     எம்மிவண் நல்குதல் அரிது!
     நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.

     தெளிவுரை: வெண்மையான தலையையுடைய குருகினது மெல்லப் பறத்தைலையுடைய பார்ப்புக்களின் கூப்பீடு குரலானது. நெடிய வயற்புறங்களையும் அடைந்து ஒலிக்கின்ற ஊரனே! இனி, நீதான் இவ்விடம் வந்து எமக்கு இன்பம் நல்குதல் என்பதும் அரிதாகும். நின் மனையிடத்தாளான மனையாட்டியோடும் கூடியிருந்து, அவளுக்கே என்றும் இன்பந் தந்தனையாய் வாழ்வாயாக!

     கருத்து: 'நின் நினைவெல்லாம் நின் மகன் மீதே' என்றதாம்.

     சொற்பொருள்: மென்பறை - பார்ப்புகள். விளிக்குரல் - அழைக்கும் குரல். இமிழும் - ஒலித்தபடி இருக்கும். 'மடந்தை' என்றது தலைவியை; அவள் மகப்பெற்று நலிவெய்தித் தன் அழகிழந்து முதுமையுற்றாள் என்றற்காம். நல்குதல் - இன்பம் தரல். தலைப்பெய்தல் - அருள் செய்தல்; கூடி மகிழல்.

     விளக்கம்: 'குருகுப் பார்ப்புகள் தம் கூட்டிலேயிருந்தபடி கூவி அழைக்கும் குரலானது, வயலிடமெல்லாம் ஒலிக்கும் என்றது, அவ்வாறே நின் புதல்வனும் நின்னை அழைத்துக் கூப்பிடும் செய்தியானது, பரத்தையர் சேரிமுற்றவும் வந்து பரவுதலுற்றது' என்பதாம். 'அவனை மறக்கவியலாதவன் நீயாதலின், இனி இவண் வாராதிருக்க' என்கின்றாள். 'எம்' என்று தன்னோடும் பிற பரத்தையரையும் உளப்படுத்திக் கூறினாள் எனலாம். 'நும் மனை' என்றது. அதனிடத்தே தமக்கேதும் உரிமையில்லை என்பதனையும், அது முற்றவும் தலைவிக்கே உரிமையுளதென்பதையும் நினைந்து கூறியதாம். 'குருகும் பார்ப்புக்குரல் கேட்டதும் பாசத்தோடு திரும்பிவரும்' ஊரனாதலின், அவன் தன் மகன் பேச்சைக் கேட்டதும், பிறவற்றை மறந்து, அவன்பாற் செல்ல முந்துவானாயினான்' என்றதாம்.

87. மனையோள் யாரையும் புலக்கும்!

     துறை: 'தலைமகள் தன்னைப் புறங்கூறினாள்' எனக் கேட்ட காதற் பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகனோடு புலந்து சொல்லியது.

     (து.வி: தன்னைத் தலைமகள் பழித்தாள் என்று கேட்டாள், தலைமகனின் காதற் பரத்தை. தலைவன் அவளிடம் வந்தபோது, தலைமகனின் பாங்கியர் கேட்டுணருமாறு, அவள் தலைமகனோடு ஊடிப் பேசுவதாக அமைந்த செய்யுள் இது.)

     பகன்றைக் கண்ணி பல்லான் கோவலர்
     கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
     யாணர் ஊர! நின் மனையோள்
     யாரையும் புலக்கும்; எம்மை மற் றுவனோ?

     தெளிவுரை: பகன்றைப் பூக்களைத் தொகுத்துத் தலைக்கண்ணியாகச் சூடியவரும், பலவான ஆனிரைகளை உடையவருமான கோவலர்கள், கரும்பைக் கையின் குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனிகளை உதிர்க்கின்ற, புதுவருவாயினை உடைய ஊரனே! நின் மனையாள் யாவரையும் புலந்து பேசுபவளாதலின், அவ்வாறே எம்மையும் புலந்து கூறினாள் என்பது என்ன முதன்மைத்தோ?

     கருத்து: 'நின் தலைவி பழித்துப் பேசுவது எதற்கோ?' என்றதாம்.

     சொற்பொருள்: பகன்றை - வெண்ணிறப் பூப்பூக்கும் ஒருவகைச் செடி; பூக்கள் பெரிதாகக் கிண்ணம்போல் பனிநீர் நிறைந்து காலையில் தோன்றும் என்பர்! சிவதைச் செடி என்றும் கூறுவர். கண்ணி - தலைக்கண்ணி. கோவலர் - பசுமந்தை உடையோர். குணில்- குறுந்தடி.

     விளக்கம்: 'மனையோள்' என்றது, மனைக்குரியோளான தலைவியை, 'யாரையும்' என்றது. தலைவனோடு உறவுடைய பிற பெண்டிரையும் என்றதாம். அன்றி, அவன் எவரொடும் மகிழ்ந்து உரையாடினாலே அதுபற்றிப் புலந்து கூறும் இயல்பினள் என்பதும், 'யாரையும் புலக்கும்' என்றதாற் கொள்ளப்படும்.

     உள்ளுறை: கரும்பைக் கைக்கொண்ட கோவலர், அதனைச் சுவைத்து இன்புற்றதோடும் அமையாராய், அதனையே குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனியையும் உதிர்க்கும் வளமுடைய ஊரன் என்றனள். இவ்வாறே, தலைவனும் பரத்தையரை நுகர்ந்து இன்புற்றபின், அவரையே இகழ்ந்து கூறித் தலைவியைத் தெளிவித்து, அவளையும் அடையும் இயல்பினன் என்று கூறுகின்றனள்.

     'கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் ஊர' என்றது. யாங்கள் பழித்தேமென்று அவட்கு இனிய சொல் கூறி, அவள் எங்களைப் பழித்துக் கூறும் சொற்களை, நினக்கு இனியதாகப் பெறுவாய்' என்றவாறு என்பது பழையவுரை.

88. யாம் அது வேண்டுதும்!

     துறை: தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பில்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது.

     (து.வி: 'தன்னிடமிருந்து தலைவனை முற்றவும் பரத்தையால் பிரித்துக் கொள்ள முடியாது' என்றும், 'அவள் விருப்பம் என்றும் நிறைவேறாது இடையிற் கெடும்' என்றும் தலைமகள் சொன்னாள். அதனைக் கேட்ட பரத்தை, தன்பாற் சொல்லிய தன் பாங்காயினார்க்குத் தன்னுடைய மேம்பாட்டைச் சொல்லுவதாக அமைந்த, செய்யுள் இது.)

     வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
     தண்டுறை யூரனை, எவ்வை எம்வயின்
     வருதல் வேண்டுது மென்பது
     ஒல்லேம் போல், யாம் அது வேண் டுதுமே.

     தெளிவுரை: வளமான நீர்த்துறைகளிடத்தே எல்லாரும் விருப்போடே வேண்டியவளவு கொய்த்து கொள்ளுமாறு, வளவிய மலர்கள் மிகுதியாகப் பூத்திருக்கும் பொய்கையின், தண்ணிய நீர்த்துறையினையுடைய ஊரன் தலைவன். ''அவனை எம்மிடத்தேயே வருதலை வேண்டுகின்றோம்' என்று, தன் தங்கை புறங்கூறினாள்'' என்பர். யாம் அதற்கு விரும்பாதேம்போலப் புறத்தே காட்டிக் கொள்ளினும், உள்ளத்தே, அதனை நிகழ்தலையே வேண்டுகின்றோம்!      கருத்து: 'அவனை எம்மிற் பிரியாதிருக்கச் செய்தலையே' யாமும் வேண்டுகின்றேம் என்றதாம்.

     சொற்பொருள்: வண்டுறை - வளவிய துறை; வளமை நீர் என்றும் வற்றாதிருக்கும் தன்மை. 'வண்டு உறை நயவரும்' எனக்கொண்டு, வண்டினம் நிலையாகத் தங்குதலை விரும்பும் என்பது பொருளாதல் கொளக்கூடும். 'வளமலர்' என்றது, செழுமையும் செறிவும் மிகுதியாகி அழகோடு மலர்ந்திருக்கும் நாளின் புதுமலர்களை. எவ்வை: 'எம் அவ்வை' எவ்வை என்று ஆயிற்று. தலைவனைத் தானும் அடைந்துள்ள முறை பற்றித் தலைவியைத் தன் மூத்தாளாகக் கொண்டு கூறியதாம். 'எவ்வை' என்றதற்கு, எவ்வகையினும் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்; தங்கை எனவும் கூறுவர். ஒல்லேம்போல் - பொருந்தேம் என்பது போலவே. வேண்டுதும் - விரும்புவோம்.

     விளக்கம்: 'இவ்வாறு என்மேற் பழிகூறுதலைத் தலைவி இனி நிறுத்திலளாயின், அதனை அவ்வாறே முடியாது யானும் செய்து விடுகின்றேன்' என்று கூறுகின்றனள். எவ்வைக்குத் தங்கையென்பது, தலைமகன் எப்போதும் தன் மனைவியினும் இளமை வனப்புடையவளையே பரத்தமைக்கு உரியாளாக நாடுதலின் பொருந்தாதென்க. புதல்வனைப் பெற்றுத் தளர்ந்தவள் தலைவி என்பதும் இதனாற் பெறப்படும்.

     உள்ளுறை: வள்ளிய துறையிடத்தே பூத்துக் கிடக்கும் வளவிய புதுமலர்களைக் கொண்ட பொய்கையுடைய ஊரன் என்றது, காண்பார் யாரும் விருப்போடே தாம் வேண்டுமட்டும் கொய்து கொள்ளுதலைப் போலத், தலைவனும், அவனை விரும்பும் மகளிரெல்லாம் எளிதாக அடைந்து இன்புறுதற்குரிய பொதுநிலைத் தன்மை கொண்டவன் என்றதற்காம்.

89. எவன் பெரிது அளிக்கும் என்ப!

     துறை: தலைமகன், 'தலைமகளைப் போற்றி ஒழுகா நின்றான்' என்பது கேட்ட காதற் பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

     (து.வி: 'தலைமகன் இப்போதெல்லாம் தலைவியின் பாலேயே அன்புற்றுப் பெரிதும் களித்திருக்கின்றான்' என்று தன் தோழியர் மூலம் கேள்விப்பட்ட பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாள்போலத், தலைவியின் தோழியரும் கேட்டறியச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, பாண! எவ்வைக்கு
     எவன்பெரி தளிக்கும் என்ப - பழனத்து
     வண்டு தாதூதும் ஊரன்
     பெண்டென விரும்பின்று, அவள்தன் பண்பே.

     தெளிவுரை: பாணனே, நீ வாழ்க! பழனங்களிலே, வண்டினங்கள் மலர்களில் மொய்த்துத் தேனுண்டபடியே இருக்கும் ஊரன் நம் தலைவன். 'அவன் தலைவிக்குப் பெரிதும் தலையளி செய்திருக்கின்றான்' என்று நீ சொல்வது என்னையோ? அவளைத் தனக்கேற்ற காதன்மைக்குரிய பெண்டு என்று எண்ணி அவன் அவ்வாறு அவளிடத்தே ஒழுகுகின்றான் அல்லன். அவள் தன் மனைவியாக (மனைப் பாங்கின் தலைவியாக) ஒழுகும் அந்தப் பண்பினைக் கருதியே, அவளுக்குத் தலையளி செய்து, தன் கடமையாற்றுகின்றான்!

     கருத்து: 'அவன் என்னிடத்தேயே பெருங் காதலுடையான்' என்றதாம்.

     சொற்பொருள்: 'எவ்வை' தலைவியைக் குறித்தது. அளித்தல் - கூடியின்புறுதலாலே அவளுக்கு இன்பமும் மனநிறைவும் அளித்து உதவுதல். பெண்டு - காதற்பெண்டு. பண்பு - மனைவியாம் இல்லறத் தலைமைப் பண்பு.

     விளக்கம்: தலைவிபால் காதலன்பு ஏதும் பெற்றிலன் எனினும், தன் மனையறம் செவ்வியதாக நிகழும் பொருட்டாகவும், ஊரவர் பழியாதிருக்கவும், அவள் தன்பாற் கொண்டுள்ள பற்றுதல் நீளவும், அவளுக்கும் தலைவன் தலையளி செய்வான் என்பதாம். ஆகவே, மீளவும் தன்பால் வருவான்; தலைவி அதுபற்றிய நினைவோடிருப்பாளாக என்று எச்சரித்ததாம்.

     உள்ளுறை: 'பழனத்து வண்டு தாதூரம் ஊரன்' என்றது, அவ்வாறே பொதுமகளிர் சேரியிடத்தேயுள்ள இளம் பரத்தையரை ஒருவர் ஒருவராக நாடிச் சென்று இன்புறும், காமங் கட்டவிழ்ந்த இயல்பின்ன தலைவன் என்று கூறியதாம்.

     பாட பேதம்: 'வேண்டென விரும்பின்று' எனவும் பாடம்; இப்பாடத்திற்கு, அவளை விரும்பியொழுகு என்று வாயில்கள் வேண்ட, அவன் அவளைச் சென்றுகூடித் தலையளி செய்தனன் என்று பொருள் கொள்ளுக.

90. யார் குணம், எவர் கொண்டது?

     துறை: தலைமகன், தன் மனைக்கண் செல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதற்பரத்தை, தலைமகன் கேட்குமாற்றால், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

     (து.வி: 'தலைமகன், தன்னை விரும்பி வராமற்படிக்குத் தடுப்பவள் காதற் பரத்தையே' என்று, தலைமகள், ஒருநாள் பழித்துக் கூறினாள் என்று கேள்வியுற்றவள். அத்தலை மகட்குத் தோழியர் கேட்குமாறும், தலைமகனும் கேட்டுணருமாறும் கூறுவதாக அமைந்த, செய்யுள் இது.)

     மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
     வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
     அன்ன தாகலும் அறியாள்
     எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.

     தெளிவுரை: மகிழ்நனின் மாண்பமைந்த குணங்களை வண்டுகள் கைப்பற்றிக் கொண்டனவோ? அன்றி, வண்டுகளின் மாண்புள்ள குணங்களை நம் மகிழ்நன்தான் கைப்பற்றிக் கொண்டானோ? அன்னது எங்ஙனம் ஆகலுற்றதெனவும், அவன் புதல்வனின் தாயான தலைவியானவள் அறிந்திலள். எம்முடனே வீணே புலக்கின்றனளே!

     கருத்து: 'அவள் தலைவனை அறியாமல் என்னைப் பழிப்பது அறியாமையாகும்' என்றதாம்.

     சொற்பொருள்: மாண்குணம் - மாண்புற்ற குணம்; 'இல்லவள் மாண்பானால்' எனக் கூறும் குணவமைதி. வண்டினம் புதுமலரையே தேடிக் கொண்டு பறத்தலே போலத், தலைவனும் புதியரான பரத்தையரையே நாடித் திரிபவனாவான் என்றதாம். இதனால் என்னைக் குறித்து மட்டும் பழிப்பது எதற்காகவோ என்கின்றனள். 'அவன் புதல்வன் தாய்' என்றது. மனைவியை; அவள் புதல்வனைப் பெற்றுத் தளர்ந்து மெலிந்தமை தோன்றவும், அவளின் குடிகாக்கும் உரிமையினை எவரும் எதனாலும் பறித்தல் இயலாதென்பது விளங்கவும் சொல்லியதாம்.

     விளக்கம்: 'அவன் புதல்வன் தாய்' என்று தலைவியைக் குறித்தது, அவ்வுரிமை பெற்றாள் அவள்; யான் அது பெற்றிலேன் என்றதுமாம். வண்டின் மாண்குணம் புது மலரைத் தேர்ந்தே சென்று சென்று தேனுகர்தலும், அதன்பின் அவற்றை முறையே கழித்து விடுதலும் ஆம்; இக் குணத்தை நம் தலைவனிடமிருந்தே வண்டினம் பெற்றுள்ளன. ஆயின், முன் நுகர்ந்து கழித்த மகளிரையே ஓரொருகால் மீளவும் நாடிச் சென்று இன்புறுத்தலையும் நம் தலைவன் செய்வான்; இக்குணத்தை மட்டும் வண்டினத்தினும் மேலாக அவன் உடையன் என்றும் குறித்ததாம். ஆகவே, வண்டினத்தினம் ஒரோவகையில் தலைவனே நல்லவன் என்றதுமாம். இப்போது, என்னையும் பிரிந்து பிறள்பாற் செல்லும் அவனை நினைந்து, யானும் அதுகுறித்து மெலிவுற்று வாடியிருப்பதறியாத தலைமகள் என்னையே அவனைத் தடுப்பதாகக் கூறிப் பழிப்பது சற்றும் பொருந்தாது என்றனளுமாம்.

     அவட்காவது 'புதல்வனின் தாய்' என்னும் உரிமையும், அப் புதல்வனின் முகமும் செயலும் கண்டு மனந்தேறும் வாய்ப்புகள் உள்ளன; யானோ அதுவும் தானும் பெற்றிலேன் என்று மனம் நொந்து உரைத்தனளும் ஆம்.

     இதனைக் கேட்கும் தலைமகன், தன் நிலைக்கு நாணி, தன் காதற் பரத்தைக்குத் தலையளி செய்தற்கு மனங்கொள்வான் எனவும், தன் புதல்வன் நினைவே மேலெழுத் தன் மனையகம் சென்று, தலைவியைப் புலவி நீக்கி இன்புறுத்தி மகிழ்வான் என்பதும் கொள்க.

     குறிப்பு: பரத்தையர் இவ்வாறு தலைவியைக் குறிக்கப் 'புதல்வன் தாய்' என்ற மரபை அடிக்கடி பேணுதல், அன்றைய சமுதாயம் அவர்க்கு அவ்வுரிமையை வழங்காததனை எண்ணிப் பொருமும் ஏமாற்றத்தாலேயே எனலாம்.

     தலைவனுக்கே பிறந்தாரேனும், பரத்தையர்க்குப் பிறந்த புதல்வரும் புதல்வியரும், மனைவிக்குப் பிறந்தாரைப் போலக் குலப் பெருமைக்கும், குடியுரிமைச் சொத்துகளுக்கும், குடிப் புகழுக்கும் உரிமையாளர் ஆகமாட்டார் என்பதே அன்றைய சமுதாய நிலை. அவர் மீண்டும் தத்தம் குலத்தொழிலே செய்து வரலே அன்றைய ஒழுக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் மேற்குலத்தாரின் மேலாண்மை பிறப்புரிமை என்னும் நம்பிக்கையே காரணமாகவும் நின்றது.