உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
![]() |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 11 ... 10. எருமைப் பத்து இப்பகுதியிடத்தே வரும் செய்யுட்கள் பத்திலும் எருமை பற்றிய செய்திகள் வருவதனால், இவ்வாறு தலைப்புத் தந்தனர். நீர் வளத்தையும் பசும்புல்லையும் விரும்பி வாழும் எருமையினம் மருதத்தாரின் உறுதுணைச் செல்வமாகவும், பாற்பயன் அளிக்கும் பெருமையுடையதாகவும் விளங்குகின்றன. பெருவலிமையும், கடும் உழைப்பிற்கேற்ற பாங்கும் கொண்டுள்ளமையால், எருமைகள் உழுதொழிலாளரால் விருப்போடு இன்றும் பேணப்பெற்று வருகின்றன. எருமையின் செயல்கள் பலவும் இச் செயுட்களிலே மாந்தரின் செயலோடு உவமை பெற்றுச் சிறக்கின்றன. இது, புலவர் நாடோறும் கண்டின்புற்ற மனத்தோய்விலே நின்றும் எழுந்த சுவைமிகுந்த காட்சிகளே! 91. கருப்பம்பூ மாலையள் இவள்! துறை: குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள்; விளைவு இலள்' எனச் சேட் படுத்தது. (து.வி: தலைமகளைக் கொண்டு காமுற்றுக் கருந்தழிந்தவன். பலகால் முயன்றும் அவள் இசைந்து இணங்காளாக, அவள் தோழியிடம் தன் குறை தீர்க்க வேண்டிக் கேட்டு நிற்கின்றான். அவனுக்கு, அவள், 'தலைவி இன்னமும் காதலிக்கும் பருவத்தை அடையாத இளையள்' என்று கூறி, அவனை விலக்குதற் பொருட்டுச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. குறிஞ்சித் திணைத் துறையேனும், 'எருமை' என்னும் கருப் பொருள் வந்து, மருதத்திணையிற் கொளப்படுதலைப் பெற்றது.)
நெறிமருப் பெருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை யாம்பல் மயக்கும் கழனி யூரன் மகள்இவள்; பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. தெளிவுரை: நெறித்த கொம்பையுடைய எருமையின் கருமையான பெரிய கடாவானது, மணமுள்ள மலர்கள் நிறைந்த பொய்கையிலே சென்று, அதனிடத்தேயுள்ள ஆம்பலைச் சிதைக்கும். அத் தன்மையதும், கழனிகளை உடையதுமான ஊரனுக்கு இவள்தான் மகளாவாள். இவள், பழனங்களிலுள்ள கரும்பிடத்தே பூத்த மணமற்ற பூவால் தொடுத்து விளங்கும் மாலையினையும் உடையவள் காண்பாயாக! கருத்து: 'அத்தகு மடமை கொண்டவளை விரும்பிச் சுற்றாதே போய்வருவாயாக' என்றதாம். சொற்பொருள்: நெறிமருப்பு - நெறித்தலுடைய கொம்பு; நெறித்தல் - வளைதல்; முறுக்குடன் தோன்றுதல். 'நீலம்', கருமை குறித்தது. போத்து - எருமையின் ஆண்; எருமைக் கடா. வெறி - மணம். மயக்கும் - சிதைத்து அழிக்கும். கழனி - விளைவயல்கள். வெதிர் - கரும்பு; 'பழன வெதிர்' எனவே, தானே கிளைத்து வளர்ந்துள்ள கரும்பு என்க; இது உண்ணற்காக வேழக் கரும்பும் பேய்க்கரும்பும் போல்வன. கொடிப் பிணையல் - பிணைத்துக் கொடி போலக் கட்டிய மாலை. விளக்கம்: வெறிமலர் அருமையும் ஆம்பலின் மென்மையும் அறியமாட்டாத எருமைப் போத்தானது. பொய்கையுட் புகுந்து தான் நீராடிக் களிக்கும் வகையால், அவற்றைச் சிதைக்கும் ஊரன் மகள் என்றனள், இதனால், அவள் தந்தை தன் செயலிலே ஈடுபடுங்கால், பிறருக்கு நேரும் அழிவைப் பற்றி எல்லாம் நினைத்து ஒதுங்கும் தன்மையற்ற மடமையோன் என்றதாம். இதனால், இவள் தந்தையும் ஐயன்மாரும் நின் செயலறியின் நினக்கு ஊறு செய்வதிலே தப்பார் என்றும் சொல்லி எச்சரிக்கின்றனள். சிறப்பற்ற பழனவெதிரின் பூவைக் கொய்து, மாலை தொடுத்திருக்கம் தன்மையள் எனவே, அதுதான் சூடற்காக என்பதும் அறியா நனிபேதையள் அவள்; அவளை நீ விரும்புதல் யாதும் பயனின்று என்பதாம். மேற்கோள்: திணை மயக்குறுதலுள் மருதத்துள் குறிஞ்சி நிகழ்ந்தது; இஃது இளையள் விளைவிலள் என்றது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். அகத், 12). 92. நும் ஊர் வருதும்! துறை: 'நினக்கு வரைந்து தருதற்குக் குறை, நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினாற் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் சொல்லியது. (து.வி: 'இவள் இந்நாள்வரை மணம் பெறாமல் வாடி நலிவது, நின் தமர் வந்து வரையாததன் குறையே' என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள். தலைவியின் குறிப்பும் அதுவே யாதலை அறிந்த தலைமகன், 'வரைவதற்குரிய நிலைமை சிறப்பின் யானே வரைவொடு வருவேன்' எனத், தன் உள்ளவுறுதி தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
கருங்கோட் டெருமைச் செங்கண் புனிற்றாக் காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் நுந்தை, நும்மூர் வருதும் ஒண்தொடி மடந்தை! நின்னையாம் பெறினே. தெளிவுரை: கரும் கொம்புகளையுடைய எருமையின், சிவந்த கண்களையுடைய புனிற்றாவானது, தன் அன்புக் கன்றுக்குச் சுரக்கும் முலையினைத் தந்து பாலூட்டும் நின் தந்தைக்குரிய நினது ஊருக்கு, ஒள்ளிய தொடியணிந்த படந்தையே! நின்னை யான் மனையாட்டியாகப் பெறுதல் கூடுமாயின், யானே வரைவொடு வருவேன! கருத்து: 'தமர் வரவு தாழ்த்தவிடத்தும், தான் தாழாதே வரைந்து வருவேன்' என்று கூறியதாம். சொற்பொருள்: கருங்கோடு - கரிய கொம்பு. செங்கண் புனிற்றா - ஈன்றதன் அணிமையும், சிவந்த கண்களையுடைய தாய் எருமை. ஊறுமுலை - பால் ஊறுகின்ற முலை; பால் ஊறுதல் ஈன்றதன் பின்னரே என்பது குறிக்க, 'ஊறுமுலை' என்றனர். மடுக்கும் - உண்பிக்கும்; அதுதானே உண்ணாமையான், தான் அதன் வாயிலே பால்முறை சேர்த்து அதனை உண்பிக்கும் என்றதாம். நுந்தை நும்மூர் - நின் தந்தையதாகிய நுமது ஊர். பெரின் - பெற்றனமானால்; பலகாலமும் அடையப் பெறாதே ஏங்கித் திரும்பும் தன் ஏக்கம்புலப்படக் கூறியது. தான் வரைந்துவரின், தமது மறுப்பினும் தலைவி அறத்தொடு நின்றேனும், அவளைத் தான் பெறற்காவன செயல் வேண்டும் என்றதும் இதுவாகலாம். உள்ளுறை: 'தலைவியின் தாய் தன் மகள் மீதுள்ள பேரன்பால், தமர் மறுத்தவிடத்தும், அறத்தொடுநின்று மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவள்' என்னும் உறுதியைப் புலப்படுத்தவே, அவ்வூர்க் கன்றீன்ற எருமையும், தன் கன்றுக்கு ஊறுமுலை மடுக்கும் அன்பு மிகுதியைச் சுட்டிக் கூறினன் எனலாம். 'பெறினே வருதும்' 'என்றது, ''பெறுவதனால் வரைவொடு வருவோம்'' எனவுரைத்து, தோழியது ஒத்துழைப்பையும் விரும்பியதாம். மேற்கோள்: 'கிழவோன் சொல்லும் உள்ளுறையவுமம் தன்னுடைமை தோன்றச் சொல்லப்படும்; 'கருங்கோட்டு... பெறினே' என்றவழி, தாய் போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க'' எனக் காட்டுவர் பேராசிரியர். (தொல். உவம, 27). துணைமயக்குறுதலுள் இது மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என நச்சினார்க்கினியரும். (தொல். அகத், 12); திணை மயக்குறுதலுள் குறிஞ்சிக்குரிய புணர்தல் மருதத் திணையோடு மயங்கி வந்தது என இலக்கண விளக்க உரைகாரரும். (இ.வி. 394); இச் செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவர். 93. தாதுண்ணலை வெறுத்த வண்டு! துறை: முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால், பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, இதற்குக் காரணம் ஏன்?' என்று வினாவிய செவிலித்தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. (து.வி: களவிற் கலந்து இன்புற்று தலைவியின் மேனியிலே எழுந்த நறுமணத்தால் வண்டினம் மிகுதியாக வந்து மொய்க்கின்றன. அதுகண்டு ஐயுற்று வினாவிய செவிலித்தாய்க்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது. சிறப்புறத்தானாகிச் செவ்வி பார்த்திருக்கும் தலைவனும் கேட்டு, இனித் தலைவி இச்செறிக்கப்படுதலும் நேரும்; ஆகவே விரைந்து வரைந்து கொள்ளலே செயத்தக்கது என்று துணிவான் என்பதாம்.)
எருமைநல் லேற்றினம் மேயல் அருந்தென பசுமோ ரோடமோ டாம்பல் ஒல்லா செய்த வினைய மன்ற பல்பொழில் தாதுண் வெறுக்கைய வாகி, இவள் போதுவிழ் முச்சி யூதும் வண்டே. தெளிவுரை: பலவான பொழில்களிலும் உள்ளவான மலர்களிலே சென்று தேனுண்ணல் வெறுத்தனவாகிய வண்ணினம், இவளது இதழ்விரி புதுமலர் விளங்கும் கூந்தலிலே வந்து மொய்த்தன. அதுதான் எருமையின் நல்ல ஏற்றினம் மேய்ந்துவிட்டதாலே, பசிய செங்கருங்காலியும் ஆம்பலும் பொருந்தாவாயினமை கண்டு, செய்தவோர் ஓர் வினையும் ஆகும். கருத்து: 'வண்டினம், புதுமைதேடி இவள் பூவிரி கூந்தலில் மொய்த்தனவன்றிப், பிற காரணம் ஏதுமன்று' என்றதாம். சொற்பொருள்: மேயல் அருந்தென - மேய்ந்து அருந்தி விட்டதாக பசுமோரோடம் - பசிய செங்கருங்காலி; இதன் பூ மிக்க நறுமணமுடையது; நறுமோரோடம் என்று நன்றிணை கூறும் (337). சிறுமாரோடம் என்பது குறிஞ்சிப் பாட்டு (78). மகளிர் கூந்தலின் இயல்பான நறுமணத்திற்கு மோரோடப் பூவின் மணத்தையும் ஆம்பலின் மணத்தையும் உவமிப்பது மரபு. செய்த வினைய - செய்ததான செயலாகும். வெறுக்கைய - வெறுத்தனவாக; செறிவுடையனவாகியும் ஆம். போதவிழ்முச்சி - இதழ்விரிந்த மலரணிந்த கூந்தல். விளக்கம்: புணர்ச்சியிலே திளைத்த மகளிர் மேனியிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் போன்றவொரு நறிய மணம் எழும் என்பதும், அஃதுணர்ந்த செவிலி ஐயுற்று வினவினள் என்பதும், அவள் ஐயத்தைத் தெளிவிக்கத் தோழி இவ்வோதம் புனைந்து கூறியதாகவும் கொள்க. மகளிர் கூந்தலின் மணத்தாற் கவரப் பெற்று, பூநாடிப் போகும் வண்டினம் மொய்க்கும் என்றது, பலரானும் காட்டப்பெறும் நிகழ்வாகும். இதனால், செவிலி ஐயுற்றனள் என்பதும், இனித் தலைவிக்குக் காவல் மிகவே, களவு கைகூடல் அரிதென்பதும், தலைவனுக்கு உணர வைத்தனள். மோரோடம் நிலத்தின் மரம்; ஆம்பல் நீர்க்கண் உள்ளது; இரண்டையும் எருமையேறு தின்று அழிக்கவே, அவை நாடிப் போகாமல், தலைவியின் போதவிழ் முச்சியை நாடின என்கின்றனள்; வண்டினத்து அறியாமையன்றிப் பிறிதல்ல அது என்பதாம். ஊரலர் எழும் என்றதும் ஆம் எப்போதும் தேனையே தேடிச் சென்று உண்ணலே தொழிலாக வுடைய வண்டினம், அதனை மறந்து, வாளாதே கூந்தலில் சென்று மொய்த்து முரலுதல், அவை அவ்வினை முடித்ததனாலே எனவும், கூந்தன் மலர்களை நாடி எனவும் கொள்க. 94. ஊர் இலஞ்சிப் பழனத்தது! துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீள்கின்றான் சொல்லியது. (து.வி: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன், மீண்டு வரும்போது, அவளூரைத் தன் பாகனுக்குச் சுட்டிக்காட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)
மள்ளர் அன்ன தடங்கோட் டெருமை மகளிர் அன்ன துணையொடு வதியும் நிழன்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே கழனித் தாமரை மலரும் கவின்பெறு சுடர்நுதல் தந்தை யூரே. தெளிவுரை: கவின் பெற்று ஒளிசுடர்கின்ற நுதலுடையாளின் தந்தையது கழனிக்கண்ணே, தாமரை மிகுதியாக மலர்ந்திருக்கும் ஊரானது, மள்ளரைப் போன்ற பெரிய கொம்புகளையுடைய எருமையேறுகள், அவர்தம் மகளிரைப் போலும் தத்தம் துணைகளோடே சேர்ந்தவாய்த் தங்கியிருக்கும், நிழல் செறிந்த நீர்நிலையோடு கூடிய பழனத்திடத்தது ஆகும்! கருத்து: 'அவ்வூரை நோக்கித் தேரினை விரையச் செலுத்துக' என்றதாம். சொற்பொருள்: மள்ளர் - போர் மறவர்; மகளிர் - அவர் தம் காதலியர். தடங்கோடு - பெரிய கொம்பு. இலஞ்சி - நீர் நிலை. நிழல் முதிர் - நிழல் செறிந்து அடர்ந்த. பழனம் - ஊர்ப் பொது நிலம். கவின் - எழில்; 'கவின் பெறு சுடர் நுதல்' என்றது, கவினைப் பெற்றுச் சுடரெரிக்கும் எழில் நுதல் உடையாளான தலைவியை நினைந்து கூறியதாம். விளக்கம்: 'எருமைகள் தத்தம் துணையோடும் சேர்ந்தவாக நிழன்முதிர் இலஞ்சிப் பழனத்து வதியும் ஊர்' என்றதும் அதனை மள்ளரும் அவர் மகளிரும் சேர்ந்து வதிதல் போல என்று உவமித்ததும், தான் தலைவியோடு கூடிச் சேர்ந்திருப்பதனை நினைவிற் கொண்டு கூறியதாகும். 'நிழல் முதிர் இலஞ்சி' என்றது, மரங்கள் அடர்ந்து நிழல் செய்தபடி களவிற்கூடியின்புற்ற இடம் அதுவெனலால், அதனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க. 'கழனித்தாமரை மலரும்' என்றது. தான் அவளை வரைந்து மணங்கொள்ள ஊரவர் அனைவரும் களிப்படைந்தாராய் மகிழ்வர் என்பதாம். 'கழனித்தாமரை மலரும் கவினைப் பெற்றுச் சுடர்கின்ற நுதல்' என்று தலைவியின் நுதலழகை வியந்ததாகக் கொள்ளுதலும் உணரப்படும். 'மள்ளர்' என்னும் சொல்லே 'மல்லர்' என்றாகிப், பொதுவாக மற்போரிடும் தன்மையரைக் குறிப்பதாயிற்று. 95. பகலும் நோய் செய்தனள்! துறை: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப், பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. (து.வி: பரத்தையின் உறவுடையோன், தன் உணவுக்கு மட்டும் மனைநாடி வந்து போயினதால், அவனைக் காணுதலும் பேணுலுமாகிய அவற்றாலேனும் சிறிதளவுக்கு மன அமைதி பெற்று வந்தாள் தலைவி. அதனையும் கைவிட்டு, அவன் பரத்தையின் வீடே தங்குமிடமாகவும் அமைத்துக் கொள்ள, அந்தச் சிறிய மனவமைதியையும் இழந்தாள் அவள். அக்காலத்து ஒருநாள், தலைவன் வருகை தெரிவித்து வந்தாரான ஏவலர்களுக்கு அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கருங்கோட் டெருமை கயிறுபரிந் தசைஇ, நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும் புனன்முற் றூரன் பகலும் படர்மலி யருநோய் செய்தனன் எமக்கே. தெளிவுரை: கரிய கொம்புகளையுடைய எருமையானது, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று, நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரினைத் தன் நாளுணவாக மேய்ந்திருக்கும், நீர்வளம் சூழ்ந்துள்ள ஊரன் தலைவன். அவன்தான், எமக்குப் பகற்போதிலும் படர்ந்து பெருகும் தீராத பெருநோயினைச் செய்தனனே! கருத்து: 'அவன் எம்மை முற்றவும் மறந்தனன்' என்ற தாம். சொற்பொருள்: பரிந்தசைஇ - அறுத்துச் சென்று. நாள் மேயல் - அற்றை நாளுக்கு உண்ணற்கான உணவு. புனல் - நீர். முற்றுதல் - சூழ்ந்திருத்தல் - நிரம்பியவும் ஆம். படர் மலி நோய் - படர்ந்து பெருகும் நோய்; காமநோய். 'அருநோய்' என்றது, செய்தானையன்றிப் பிறவற்றால் தீராத அரிய தன்மையுடைய நோய் என்றதால். விளக்கம்: 'பகலும்' என்பதிலுள்ள உம்மை இரவின் கண்ணும், அவனைப் பிரிந்துறையும் துயரினால் நோயுற்றக் கண்ணும் படாதே நலிபவன், பகற் போதிலும் அவன் செயலின் கொடுமை பற்றிய நினைவாலும், அறிந்து வந்து பழிப்பாரின் பேச்சாலும், மனையறத்தின்கண் அவனில்லாதே விளையும் குறைகளாலும், மேலும் மனம் புண்பட்டு வருந்துவள் என்பதாம். ஆகவே, ''பொறுத்துப் பொறுத்துப் பழகிய இத்துயரோடேயே யான் அமைவேன்; மீளவும் என்பதால் மறைந்த உணர்வுகளை எழுப்பிவிட்டு என்னை வருத்தல் வேண்டா'' என்று வாயில் மறுத்ததாகக் கொள்க. உள்ளுறை: 'எருமை தன்மைக் கட்டிய கயிற்றை அறுத்துப் போய், நெற்பயிரைச் சென்று மேயும் ஊரன்' என்றது, அவ்வாறே தலைவனும் தன் குடிப் பெருமையும், காதன் மனைவிக்குச் செய்யும் கடமையுமாகிய கட்டுப்பாடுகளை விட்டு நீங்கிச் சென்று, பரத்தையோடு உறவாடிக் களிப்பானாயினான் என்றதாம். உழவரின் சினத்துக்கும் ஒறுப்புக்கும் சிறிதும் அஞ்சாதே தன் நாச்சுவையே கருதிச் செல்லும் எருமைபோல, ஊராரின் பழிக்கும் உறவினரின் வெறுப்புக்கும் கவலையற்றுத், தன்னின்பமே நச்சித்திரியும் மடவோனாயினன் தலைவன் என்பதும், அவனைத் தகைப்பாரிலரே என்பதும் ஆம். இனி, எருமை, கட்டிய கயிறறுத்துப்போய் விளைவயலை மேய்ந்து களித்தாற்போலப், பரத்தையும், தன் தாயின் கட்டுக் காவலை மீறிச் சென்று தலைவனோடு உறவாடி இன்புறுவதன் மூலம், விளைவயல்போலப் பெரும் பயன் தருதற்குரிய தலைவியின் மனையற வாழ்க்கையைச் சிதைப்பாளாயினள் என்றலும் பொருந்தும். 96. கழனி யூரன் மகள்! துறை: பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு, பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள், தம்முள்ளே சொல்லியது. (து.வி: தன்னைப் பிரிவாலும், ஊரவரின் அலர்ச் சொற்களாலும் நலியச் செய்தனவாகப், பரத்தையர் பலரோடும் களித்துத் திரிந்த தலைவனின் கொடுமையைப் பொறாதே வருந்தியிருந்தாள் ஒரு தலைவி. ஆனால் அவன், ஒரு சமயம் தன் மனையிடத்தேயும் புகுந்தபோது, அவள் தன்னுடைய வேதனையை எல்லாம் மறந்து, அவனோடும் இசைந்துகூடி அவனை இன்புறுத்தினள். அவளது, அந்தக் கற்புச் செவ்வியைக் கண்ட அவ்வீட்டு வேலையாட்கள், தமக்குள்ளே வியந்து, பெருமையோடு பாராட்டிச் சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)
அணிநடை எருமை ஆடிய அள்ளல், மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் கழனி யூரன் மகள், இவள்; பழன ஊரன் பாயலின் துணையே! தெளிவுரை: அழகான நடையையுடைய எருமையானது புகுந்து கலக்கிய சேற்றினிடத்தே, நீலமணியின் நிறத்தைக் கொண்ட நெய்தலோடு, ஆம்பலும் தழைக்கின்ற கழனிகளையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான் பழனங்களையுடைய ஊரனாகிய தலைவனின் பாயலிடத்தே பொருந்தி விளங்கும் இனிதான துணையாகவும் ஆயினளே! கருத்து: 'இவள் கற்பின் மாண்புதான் என்னே!' என்றதாம். சொற்பொருள்: அணிநடை - அசைந்தசைந்து பெருமிதம் தோன்ற நடக்கும் நடை; 'அணிநிறம்' எனவும் பாடம். ஆடிய அள்ளல் - உழக்கிய சேறு. கலிக்கும் - முளைத்துச் செழித்து வளர்ந்திருக்கும். கழனி - வயல். பாயல் இன்துணை - பள்ளியிடத்தே இனிதான துணையாக விளங்கும் உயிர்த்துணை. பழனவூரன் - பொதுநிலம் உள்ள ஊரன்; இது அவன் பரத்தை பலருக்கும் உவப்பளிப்பானாக விளங்கிய பொதுத் தன்மை சுட்டியது. விளக்கம்: தாம் செழித்து வளர்தற்குரிய இடமான கழனியிடத்தே புகுந்து, தம் நிலைக்க ஆதாரமான சேற்றிலே நடந்தும் புரண்டும் அதனை உழக்கி அழிவு செய்த எருமையின் மீது ஆத்திரப்படாமல், தான் மீண்டும் கலித்துச் செழித்து அதற்கே உணவாகிப் பலனளிக்கும் நெய்தலையும் ஆம்பலையும் கொண்ட கழனிகளுக்கு உரியவன் இவளின் தகப்பன்! அவன் மகளாதலின், இவளும், தனக்கே துயரிழைத்த தலைவனுக்கும் அத்துயர் மறந்து தண்ணருள் செய்வாளாய்ப், பாயலின் இன்துணையாக இன்புறுத்தும் செவ்வியளாயினள் என்பதாம். இக்கறுப்புச் சால்பு அவள் பிறந்து வளர்ந்த குடிமரபிலே வந்து படிந்து வலுப்பெற்ற பெருந்தகைமை என்றும் வியந்தனராம்! உள்ளுறை: தலைவன் ஊர்ப் பொது நிலம் போலப் பரத்தையர் பருக்கும் இன்பளிக்கும் தன்மையனாயினும் அவள் உரிமையுடைய கழனியைக் காத்துப் பயன்கொள்ளும் ஊரனின் மகளாதலின், அவன் தனக்கேயுரியவன் என்னும் மணம் பெற்று உரிமையால், அவனை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சி தந்து உதவும் செவ்வியளாயினள் என்றதாம். மேற்கோள்: வாயில்கள் தலைவியது கற்புக் கூறியது என்று இச்செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 11). 97. பொய்கைப் பூவினும் தண்ணியள்! துறை: புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், உளதென்று அஃது உடையான் என நினைத்து ஊடியிருந்த போதில், அவ்வூடலைத் தன் தெளிவுரைகளாலும் பிறபிற அன்புச் செயல்களாலும் நீக்கித் தெளிவித்து, அவளோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான். அவன், அக் கூடலின் இறுதிக்கண், தலைவியின் தன்மையைத் தன்னுள்ளே நினைந்து வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
பகன்றை வாற்மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை யூரன் மகள் இவள் பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே. தெளிவுரை: பகன்றையது வெண்மையான மலர்கள் சுற்றியிருந்த தன் தாயது கொம்பைக் கண்டு, கருங்கால்களையுடைய அதன் கன்றானது அஞ்சும் தன்மையுடைய, பொய்கை விளங்கும் ஊரனின் மகள், இவள்! இவள்தான், அப்பொய்கையிடத்தே பூக்கின்ற ஆம்பற் பூவினும் மிகவும் குளிர்ச்சியான அன்புள்ளவள் ஆவாளே! கருத்து: 'இவள் என்றும் என்பாற் குளிர்ந்த அன்பினளே' என்று வியந்ததாம். சொற்பொருள்: வான்மலர் - வெண்ணிறப் பூ. வெரூஉம் - அஞ்சும். பொய்கைப் பூ - பொய்கையிடத்தே பூத்திருக்கும் ஆம்பற் பூ. தண்ணியள் - தண்மையானவள்; தண்மை அன்பின் நெகிழ்வு குறித்தது; இதன் எதிர் சினத்தின் வெம்மை. விளக்கம்: சேற்றையாடி வரும் எருமைக் கொம்புகளிலே சில சமயம் பூக்களோடு விளங்கும் பகன்றைக் கொடி சுற்றிக் கொண்டிருப்பதும் உண்டு, இதனை, 'குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும்' என்று, அகநானூற்றினும் காட்டுவர் - (அகம், 316). 'பொய்கைப் பூவினும் தண்ணியள்' என்றது. இயல்பாகவே தண்மையுடைய மலரினும், பொய்கை நீரிடத்தேயே பூத்திருக்கும் பூவிடத்தே தண்மை மிகுதியாயிருக்கும் என்பதறிந்து கூறியதாகும். இதனால், தன் மனைவியின் செவ்வியைப் பெரிதும் எண்ணி வியந்து போற்றினனாம். 'பொய்கை' அணுகும் போதெல்லாம் தண்மையே தந்து இன்புறுத்தலேபோலப், பொய்கையூரனின் மகளான இவளும் எனக்கு என்றும் இனியவே செய்யும் இயல்பினளாயினள்' என்கின்றான். உள்ளுறை: தாயெருமையின் கோட்டிற் கிடந்த பகன்றை மலரைக் கண்டு, அதனை வேறாக நினைத்து அதன் கன்று வெருவினாற் போலத், தன் மார்பிடத்து மாலையினைக் கண்டு, பிறர் சூட்டியது எனப் பிறழக்கொண்டு, தன்னை வேறுபட்டானாக நினைத்துத் தலைவியும் வெறுவி அஞ்சினள் என்றதாம். கன்று அஞ்சினும், அதனை நெருங்கி அதன் அச்சம் தீர்த்துப் பாலூட்டி இன்புறுத்தும் தாயொருமையின் செவ்வி போல, அவள் தன்னைப் புறத்தொழுக்கத்தானென மயங்கிப் புலப்பினும், தான் அப்புலவி நீக்கி அவளை இன்புறுத்தும் அன்புச் செவ்வியின் எனத் தலைவன் சொல்வதாகவும், உவமையால் உய்த்து உணரப்படும். பொய்கைப் பூவானது நீரிடையுள்ளதன் வரையுமே அழகும் தண்மையும் பெற்று விளங்கி, நீரற்றபோதில் வாடியழிவதே போலத், தலைவியும் தன் காதலன்பிலே திளைக்கும் வரையும் அழகும் தண்மையும் உடையளாகி, அதிற் குறையுறின் வாடி நலனழியும் மென்மையள் என்று போற்றுவான், 'பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியள்' எனப் புகழ்ந்தான் என்பதும் ஆம். 98. இவளின் கடியரோ? துறை: புறத்தொழுக்கம் உளதாகிய துணையானே புலந்து, வாயில் நேராத தலைமகள் கொடுமை, தலைமகன் கூறக் கேட்ட தொழி, அவற்குச் சொல்லியது. (து.வி: தலைவன் புறத்தொழுக்கம் உடையவனாகவே, தலைவி புலந்து ஊடியிருந்தாள். தலைவன் அஃதறிந்து, அவள் ஊடலைத் தீர்த்துத் தலையளி செய்ய, வாயில்கள் மூலம் முயன்றான். தலைவியோ இசைய மறுத்துக் கடுஞ்சொற் கூறி அவரைப் போக்கி விடுகின்றாள். இதனைப் பற்றித் தலைவன், தலைவியின் தோழியிடம் கூற, அவள் அவனுக்குப் பதிலுரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
தண்புன லாடும் தடங்கோட் டெருமை திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர! ஒண்தொடி மடமகள் இவளினும் நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே! தெளிவுரை: தண்ணிய புனலின் கண்ணே நீராடியபடியிருக்கும், பெரிய கொம்பினையுடைய எருமையானது, திண்ணிதாகப் பிணிக்கப்படுதலையுடைய அம்பிபோலத் தோன்றும், ஊரனே! நின்பாற் குறை காணும் போதிலே, அது குறித்து நின்னைக் கடிவதிலே, நின் தந்தையும் தாயும், ஒள்ளிய கொடியணிந்த மடமகளான இவளினும் காட்டில் கடுமையானவர்களோ? கருத்து: 'நின்னைக் கடிந்து கூறித் திருத்தும் உரிமையுடையவள் நின் தலைவி' என்றதாம். சொற்பொருள்: அம்பி - படகு. திண்பினி - திண்மையாகச் சேர்த்துக் கட்டப் பெற்ற; அம்பியின் அமைப்புக் குறித்தது இது! பல மரங்களைச் சேர்த்துத் திண்மையாகக் கட்டியிருப்பது. மடமகள் - மடப்பம் பொருந்திய தலைவி. விளக்கம்: நீரிலே திளைத்தாடும் எருமையின் முதுகிலே சிறார்கள் பலரும் அமர்ந்து வருகின்ற தோற்றத்தை, மக்களை ஏற்றியபடி நீரில் மிதந்துவரும் அம்பிக்கு (படகுக்கு) நிகராகக் கண்டனர். இஃது தலைவனும் அவ்வாறே பரத்தையர் பலருக்கும் களித்தற்கு உரியனாக விளங்கும் இயல்பினனாவான் என்று சுட்டிப் புலந்ததாம். தனக்குரியனாகிய நீதான் அவ்வாறு பிறர்க்கும் உரியனாகி ஒழுகும் தன்மை பெறாதாளான தலைவி, நின்னைக் கடிதலும் பொறுந்துவதே, செயவேண்டுவதே, என்கின்றாள் தோழி! தம் குலமரபிற்குப் பழியென்று கருதி நின் தந்தையும் தாயும் நின்னைக் கடிவதினும், நின்னையே துணையாகக் கொண்டு மனையறம் பூண்டவள், நீதான் அது சிதைப்பக் கண்டு, நின்னை அவரினும் பெரிதாகக் கடிதலும் வேண்டுவதே, என்பதுமாம். ஒண்தொடியும் மடப்பமும் கொண்ட இவளும் கடிந்து உரைக்கும்படியான இழிவுடைய நடத்தை மேற்கொண்டது, அத் தலைவியால் மட்டுமின்றி, எம்போல்வாராலும் கண்டித்தற்குரியது என்கின்றனளும் ஆம். உள்ளுறை: ஆம்பி தன்மேற் கொண்டாரையெல்லாம் கரை சேர்த்து இன்புறுத்துவது; அதுவே தொழிலாக உடையது; நீராடும் எருமையோ தன் மேல் ஏறியிருக்கும் சிறுவர் பற்றி எதுவும் கருதாமல், தான் நீராடும் இன்பிலேயே முற்றத் திளைத்து இன்புறுவது. இவை தலைவனின் வரை கடந்த பரத்தைமைக்கு நல்ல உவமைகளாயின. அவன் பரத்தையர் தரும் இன்பமன்றி, அவர் வாழ்வு நலம் பற்றி யாதும் அக்கறையற்றவன் என்பதும் கூறினளாம். 99. நோய்க்கு மருந்தாகியவள்! துறை:தோழி முதலாயினோர், தலைமகன் கொடுமை கூறி விலக்கவும், தலைமகள் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது. (து.வி: தலைமகன், தலைவியைப் பிரிவு நோயாலே வாடச் செய்து, பலநாளும் பரத்தையர் சேரியே தன் வாழிடமாகக் கொண்டு விளங்கினதால், அவள் தோழியரும் பிறரும் அவன்பால் வெறுப்பும் சினமும் மிக்கவராயினர். ஒருநாள் அவன் தன் மனைக்கு வர, அவனோடு உறவு வேண்டாதே அவனை விலக்குக என அவரெல்லாம் தலைவிக்கு உரைத்தவராக, இடைப்புகுந்து அவளை விளக்குகின்றனர். தலைவியோ, அவனை வெறாதே ஏற்று, மனைக்குள்ளேயும் அழைத்துச் சென்று, அவன் விரும்பியவாறு எல்லாம் நடந்து அவனை மகிழ்விக்கின்றனள். அவள் பண்பினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த தலைமகன், தன்னுள் உவந்தானாகச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி எருமை கதிரொடு மயக்கும் பூக்கஞ லூரன் மகள், இவள்; நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே! தெளிவுரை: பழனத்துப் பாகலிலேயுள்ள முயிறுகள் மொய்த்து உறைகின்ற கூடுகளை, கழனியிடத்தே மேய்கின்ற எருமையானது நெற் கதிரோடும் சேர்த்துச் சிதைக்கும் தன்மை கொண்ட, பூக்கள் நிறைந்த ஊரனின் மகளான இவள்தான், யான் கொண்ட காமமாகிய நோய்க்கு மருந்தாக விளங்கி, அதனைத் தீர்த்த பணைத்த தோள்களையும் உடையவளாவாள்! கருத்து: 'நோய்க்கு மருந்தாகும் தோளாள் இவள்' என்றதாம். சொற்பொருள்: முயிறு மூசு குடம்பை - முயிறுகள் மொய்த்த படியிருக்கும் கூடு; முயிறுகள் மரத்தின் இலைகளைப் பிணைத்துத் தாம் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பெற்று வளர்த்தற்கான கூடுகளை அமைப்பதை இன்றும் காணலாம். 'பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி நாரை உறைத்தலின், நெந்நெல், விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்' என அகநானூறும் காட்டும். (அகம், 255). மயக்கும் - சிதைக்கும். நோய் - காமநோய். விளக்கம்: உழவர்க்கே கழனியிடத்துப் பயன்காணலிலே உதவி நின்று சிறத்தற்குரிய எருமையானது, அக் கழனியிடத்தே பயன் நிரம்பிய நெற்கதிரைச் சிதைத்தலோடு, புறத்தே பழனத்திடத்தே பாகலில் விளங்கும் முயிறுகளின் கூடுகளையும் சிதைக்கின்ற கொடுமையினையுடைய ஊரனின் மகள் என்றது. ஆங்கதுதான் நெருக்கித் திருவாரின் இயல்பென உணர்ந்த வளாதலின், யான் எருமை விளைவயற்கதிர் சிதைத்தாற் போல அவளின் இல்லறத்தைச் சிதைவித்ததும், எருமை புறத்தே பழனப்பாகல் முயிறுமூசு குடம்பையை அழித்தாற் போல, பரத்தையர் சேரியிலே தாயரின் கட்டுக்காவலைக் கடந்துவரச் செய்து பரத்தையர் பலரை மயக்கி இன்பம் நுகர்ந்தபின் கைவிட்டதும் பற்றியெல்லாம், என்னைச் சினந்து வெறுத்தொதுக்காது, பூக்கஞல் ஊரனின் மகள், ஆதலின், தான் தன் நறும் பண்பிலேயே மேம்பட்டு நின்றாளாய், என் நோய்க்கும் மருந்தாகி, என்னையும் வாழ்வித்தனள் என்றனன். உள்ளுறை: இனித் தோழியரும் உறவோரும் என் கொடுமையினை எடுத்துரைத்து? அவள்பாலுள்ள அன்பின் மிகுதியாலே, அவளுக்குக் கொடுமை செய்த என்னை ஏற்காதபடி விலக்கவும், அவள் என்னை வெறுத்துப் போக்காளாகித், தன் கற்பின் பெருமிதத்தால் என் நோய்க்கு மருந்தாகி, எனக் கிசைந்து, யான் இன்பம் எய்துவதற்குத் தன்னை தந்து உதவியும் சிறந்தனள் என்று உள்ளுறையால் கூறினதும் ஆம். இவ்வாறு கொள்ளின் முயிறுமூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை மயக்கும் என்றதனை, யான் செய்த கொடுமையையும், அவர்கள் என்மேல் சினமுற்றுக் கூறியவற்றையும் சிதைத்து, என்பக்கலேயே அவள் நின்றாள் என்று, வியந்து போன்றி உரைத்ததாகக் கொள்க. 100. நரம்பினுன் இன கிளவியள்! துறை: வாயில் நேர்தற் பொருட்டு, முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழித், தலைமகள் இயற்பட மொழிந்த திறம், தலைமகற்குத் தோழி சொல்லியது. (து.வி: பரத்தைமை பூண்டிருந்த தலைவன், தன் மனைவியின் நினைவெழத், தான் மனைக்கு வருவதான செய்தியை ஏவலர் மூலம் சொல்லி விடுகின்றான். அவர் வந்து கூறத், தலைவியின் உடனிருந்தாளான தோழி, தலைவி அவனை ஏற்றலே செயத்தக்கது என்னும் கருத்தினளாயினும், தலைவனின் கொடுமை கூறிப் பழித்து, அவள் இசையாள் என மறுத்து அவரைப் போக்க முற்படுகின்றாள். அப்போது, தலைமகள், தான் இசைவதாகச் சொல்லியனுப்புகின்றாள். அவள் சொவ்வியை வியந்து போற்றிய தோழி, தலைவன் வந்தபோது, அவனுள்ளத்தில் படுமாறு, அதனைப் பற்ற உரைக்கின்றதாக அமைந்த செய்யுள் இது.)
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை, மணலாடு சிமையத் தெருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள், இவள்; பாணர் நரம்பினு மின்கிள வியளே. தெளிவுரை: புனலாடச் செல்வாரான பெண்கள் இட்டுச் சென்ற ஒள்ளிய அணிகலன்களை, அம் மணற் குன்றின் மேலிருந்து எருமைகள் கிளைத்து வெளிப்படுத்தும், புதுவரு வாயினையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான், பாணரது இசைழெயுப்பும் யாழினது நரம்பினுங்காட்டில் இனியவான சொற்களையும் உடையவள்காண்! கருத்து: 'என்றும் இனியவே பேசுபவள் என் தலைவி' என்று போற்றியதாம். சொற்பொருள்: சிமையம் - உச்சி. கிளைக்கும் - காற்குளம்பாலும் கொம்பாலும் கிளைத்து வெளிப்படுத்தும். பாணர் நரம்பு - யாழ் நரம்பு; அதில் இசைத்தெழும் இன்னிசை சுட்டிற்று. கிளவி - பேச்சு. விளக்கம்: 'புனலாடப் போவாரான மகளிர்கள், தாம் மணற் குன்றின்மேலே புதைத்துவைத்து, பின் மறந்து போயின ஒள்ளிய இழைகளைத், தான் மணலைக் கிளைத்து ஆடி மகிழ்ந்திருக்கும் எருமையானது, கிளைத்து வெளிப்படுத்தும் யாணர் ஊரனின் மகள்' என்றனள். இஃது எருமைகளும் கூடப் பெண்டிர்க்குத் தம்மையறியாதேயே உதவுகின்ற இயல்புடைய ஊரனின் மகள் தலைவி என்றதாம். ஆகவே, அம்மகளிர் தம் ஒள்ளிழைகளைச் சிலகாலம் இழைந்தாற்போல் கவலையுறினும், மீளவும் அவற்றைப் பெறுவர் என்பதாம். அவ்வாறே, சிலநாள் நின்னைப் பிரிந்து வருந்தினும் மீளவும் பெறுவோம் என்ற நம்பிக்கையிலே உறுதி கொண்டாளாதலின், நின் வரவை உவந்தேற்று இன்சொற் கூறினள் என்று, தலைவியின் குடிமரபின் வந்த சால்பைப் போற்றியதாம். புனலாடு மகளிர்தம் ஒள்ளிழைகள் புனலிடத்தே வீழ்ந்து போகாமற்படிக்கு, அவற்றைத் தாம் எளிதாக அடையாளங் கண்டு எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, மணல் மேட்டு உச்சியிலே வைத்துவிட்டுச் சென்று நீராடுவர். அப்படி வைத்தவற்றைக் காற்றாலும் பிறகாணத்தாலும் மேல் விழுந்து மணல் கிளைத்தாடும் எருமை அதனைக் கிளைத்து வெளிப்படுத்தி, அவருக்கு மகிழ்வூட்டும் என்று கொள்க. உள்ளுறை: 'மகளிரது மறைந்த இழையை எருமை கிளைக்கும் ஊரன் மகள்' என்றது, இப்போது வாயில் நேர்ந்தலேயன்றிக் களவுக் காலத்து நீ செய்த நன்மை மறைந்தனவும் எடுத்துக் கூறினாள்' என்பதாம், என்னும் பழைய உரைக் கருத்தும் கொள்க. மாறா அன்பிலே கனுந்து வரும் இனிய சொற்களாதலின், அதன் இனிமைக்குப் பாணர் மீட்டி எழுப்பும் யாழ் நரம்பிலிருந்தெழும் இசை நயத்தினை உவமிக்க எண்ணி, அதுவும் செவ்வியால் பொருந்தாமை கண்டு, 'அதனினும் இனிய சொல்லினள்' என்றனன். இவ்வாறு, மருதத்திணையின் நுட்பங்களை எல்லாம் உணரக் காட்டுவனவாக அமைந்த, ஓரம்போகியாரின் செய்யுட்கள் நூறும் அறிந்தனம். இந்நூறு பாட்டுகளையும் பத்துக் குறுந் தலைப்புகளின் கீழ், அவ்வத் தலைப்புகளோடு இசைந்து வரத் தொகுத்திருக்கும் சிறப்பினையும் கண்டோம். மருதம் நாகரிகச் செவ்வியாலே சிறப்பது. மன உணர்வுகள் கலைநயத்தோடு செயற்படுத்தப்படும். விரைவிலே, கடமையுணர்வுகள் வலுவற்றுப் பின் தங்கிப் போதலும் நிகழ்கின்றன. இந்த இழுக்கத்தின் விளைவே பரத்தைமையும் பிறவுமாகும். இவ்வாறு இலக்கியத்திலேயும் ஏறுதல் பெற்ற இழுக்கம் பரவலான மக்கட்பண்பு என்பது தவறு. துறைநயம் காட்டலின் பொருட்டாகப் புலமையாளர் கற்பித்துக் கொண்டனவும் பல என்னும் நினைவோடேயே இதனைக் கற்று இன்புறல் வேண்டும். மனைத் தலைவியின் வருத்தத்தை மிகுவிப்பது, மணந்தானின் பரத்தைமைப் பிரிவே எனினும், அதனையும் தன் பொருந்தகையால் அடக்கிக் கொண்ட, குடிமாண்பு போற்றும் பெண்மைச் சால்பினை வியந்து காட்டலே நோக்கமாகப், புலவர்கள் பலப்பல நிகழ்ச்சிகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். இதுவே நிலையாகும். அன்றிக் கட்டவிழ்ந்த காமத்தளர்ச்சியர் பண்டைத் தமிழரெனக் கொள்ளல் கூடவே கூடாது. அது தமிழ்ப் பண்பும் அன்று; மரபும் அன்று. |