சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 13 ...

2. தோழிக்கு உரைத்த பத்து

     தலைமகள், தன் தோழிக்குத் தன் உள்ளத்தின் போக்கைச் சொல்வதாக அமைந்த இப்பத்துச் செய்யுட்களும். ஆதலின் இத்தலைப்பின்கீழ் தொகுத்துள்ளனர். தலைமகளின் ஆர்வமும் பண்பும், பேசும் பேச்சின் சால்பும், இவற்றுட் காணப்படும்.

111. பிரிந்தும் வாழ்ய்துமோ!

     துறை: 'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள், வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லியது.

     (து.வி: தலைவியை வரைந்து மணத்து கொள்வதற்கு முயலாது, களவின்பத்தையே பெரிதும் நாடுபவனாகத் தலைவன் தொடர்ந்து வருகின்றனன். தன் களவுறவைப் பெற்றோர் அறிந்தனராதலின் இற்செறிப்பு நிகழும் எனவும், அவனுக்கு ஊறு விளையும் எனவும், அவனைக் காணல் இயலாது எனவும் பெரிதும் அஞ்சுகின்றாள் தலைவி. குறித்த இடத்தே வந்து, செவ்வி நோக்கித் தலைவியைத் தழுவுதற்குக் காத்திருப்பவனாக, ஒரசார் மறைந்திருந்து, தான் வந்துள்ள குறிப்பைஉம் தலைவன் உணர்த்துகின்றான். அதனைக் கேட்டு, அவன் வரவு அறிந்த தலைவி, அவன் மனம் வரைதலில் விர்வுறுமாறு, தன்னுடன் இருக்கும் தன் தோழிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டறியச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி! பாணன்
     சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீச்
     சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
     பிரிந்தும் வாழ்துமோ நாமே -
     அருந்தவம் முயறல் ஆற்றா தேமே?

     தெளிவுரை: தோழி, இதனைக் கேட்பாயாக! பாண்மகன், கழிகள் சூழ்ந்த இடத்தே சென்று, தூண்டிற் கயிற்றிலே இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றவரும் சினைப்பட்ட கயல்மீன்களை அகப்படுத்திக் கொல்லும் துறையையுடையவனின் உறவினைப் பிரிந்தும் நாம் உயிருடன் வாழ்வோமோ! அங்ஙனம் பிரிந்தும் உயிர்வாழ் வதற்கேற்ற மனவலுவைத் தரும் அரிய தவத்தினை மேற்கொள்ளவும், நாம் இயலேம் அல்லம் அன்றோ!

     கருத்து: 'நம் இத்தகு அவலநிலையினை அவன் உணர மாட்டானோ?' என்பதாம்.

     சொற்பொருள்: கழி சூழ் மருங்கு - கழிகள் சூழ்ந்துள்ள கடற்கரைப் பாங்கர். நான் இரை கொளீஇ - நாணிலே இரையினைக் கொழுவி வைத்து. முயலல் - செய்தல். ஆற்றாதேம் - இயலாதேம். ஆசையை அடக்குதலே தவம்; அதுவே மிக்கெழுதலால் 'அருந்தவன் ஆற்றாதேம்' என்கின்றனள்.

     விளக்கம்: 'நாணிலே மீனுக்குரிய இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றும் சினைகயல் தூண்டில் முள்ளிலே மாட்டிக் கொள்ளத், தான் அதனைப் பற்றிக் கொல்லும் பாணன்' என்றது, அவ்வாறே பொய்ச்சூள் பலவும் நமக்கு நம்பிக்கையுண்டாகுமாறு சொல்லி, நம்மைத் தெளிவித்துத் தன்னோடும் சேர்த்துக் கொண்ட நம் காதலன், நம்மை மணப்பதற்கு முயலாதே போவதால், நாம் இற்செறிப்பால் நலிந்து, பிரிவினாற் பெருகும் காமநோயால் இறந்து படுதலையையும் செய்யும் அருளில்லாக் கொடியனாயினான் என்பதாம்.

     இதனைக் கேட்கும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் வரைவு முயற்சியினை விரையச் செய்தலிலே மனஞ் செலுத்துவான் என்பதாம்.

     'நாளிரை' என்பதும் பாடம்; இதற்குப் பாணன் தன் நாளுணவை கொண்டபின், சினைக்கயலைச் சென்று மாய்க்கும் என்றும் பொருள் கொள்ளலாம். கூடியின்புற்று மகிழ்ந்த தலைவன், நம்மை முறையாக மணந்து வாழ்விக்க நினையாதே, மீளவும் களவுக்கூட்டமே கருதி வருவானாய், நம்மை இன்பம் காட்டிப் பற்றிப், பின் மாய்க்கும் துயருட் செலுத்துகின்றான் என, அதற்கேற்பப் பொருள் கொள்க. 'அருந்தவம் முயலல் ஆற்றாதேம்' என்றது, அவனை விரைந்து வரைவொடும் வருமாறு செய்தற்கும், அது பிழைத்த வழி பிரிவுத்துயர் பொறுத்திருந்து உயிரைப் போகாதே தடுத்துக் காத்தற்கும், 'இரண்டு ஆற்றாதேம்' எனத் தம் ஏலாமை கூறினாள் என்க.

     உள்ளுறை: 'சூழ்கழி மருங்கில், பாணன், நாண் இரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன்' என்றது, தன் பேச்சிலே நமக்கு நிலையான இன்பமே கருதினான் போல உறுதி காட்டி, அதனை வாய்மையாகக் கொண்டு நாம் பற்றிக் கொள்ளவும், நம்மை அருளின்றி அழியச் செய்யும் இயல்பினன் ஆயினான் அவனும் என்பதை உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.

112. வரக் காண்குவோமே!

     துறை: களவு நீடுவழி, 'வரையலன் கொல்' என்று அஞ்சிய தொழிக்கு, தலைமகன் வரையும் திறம் தெளிக்கத், தெளிந்த தலைமகள் சொல்லியது.

     (து.வி: தலைவன் தலைவியரிடையே களவுறவே தொடர்ந்து நீடிக்கின்றதனைக் கண்ட தொழி, 'இவன் இவளை வரைவான் அல்லன் போலும்!' என்று நினைத்து அஞ்சுகின்றாள். குறிப்பால் அதனை அறிந்த தலைவன், தான் தலைவியை வரைவதற்கான முயற்சிகளைச் செய்து வருதல் பற்றிக் கூறித் தலைவியைத் தெளிவுபடுத்துகின்றான். அவள், தன் தோழியின் அச்சம் நீங்கக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     அம்ம வாழி, தோழி! பாசிலைச்
     செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
     தான்வரக் காண்குவம் நாமே
     மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே!

     தெளிவுரை: கேட்பாயாக தொழி! பசிய இலைகளையுடைய செருந்தி மரமானது பரந்து கிளைத்திருக்கும் பெரிய கழியினையுடைய சேர்ப்பன், நம்மைத் தெளிவித்தபோது சொல்லிய உறுதிமொழிகளை எல்லாம், நாணத்தையுடைய நெஞ்சினேமாதலின், நாம் போற்றாதே மறந்தேமாய், அவன் வரைவொடும் விரைய வராமை பற்றியே அஞ்சிக் கலங்கினோம். அவன், தான் சொன்னவாறே வரைவொடு வருதலையும், இனி நாமே விரைவிற் காண்போம்!

     கருத்து: ''அவன் சொற் பிழையானாய் வந்து நம்மை மணப்பான்'' என்றதாம்.

     சொற்பொருள்: பாசிலை - பசுமையான இலை. செருந்தி - நெய்தற் பாங்கிலே செழித்து வளரும் மரவகையுள் ஒன்று. இருங்கழி - கரிய வழி.

     விளக்கம்: 'நெருந்தி தாய' என்பதற்கு, செருந்தி மலர்கள் உதிர்ந்து கிடைத்தலையுடைய எனவும், செருந்தி கிளைத்துப் படர்ந்து தாழ்ந்து நிழல் செய்ய எனவும் பொருள் கூறலாம். கருங்கழியிலே நெருந்தியின் மலர்கள் உதிர்ந்து கிடத்தலைப் போல, இவள் கூந்தலில் மலர்சூட்டிக் கொள்வள் என்பதும் கொள்க. 'மறந்தேம்' என்றது, அவன் அது மறந்திலன் என்பதை வலியுறுத்தற்காம். 'நாணுடை நெஞ்சு' என்றது, அவனைக் களவிற் கூடும்போதும், 'விரைய வேட்டு வந்து என்னை மணங்கொள்க' என்று வலியுறுத்தற்கு மாட்டாது, வாயடைத்துவிட்ட நாணம் கவிந்த நெஞ்சம் என்றதாம்.

     உள்ளுறை: இருங்கழியிடத்தும், பாசிலைச் செருந்தி தாய அழகினைக் கொண்ட சேர்ப்பன் அவனாதலின், அவனும் தானாகவே வந்து நமக்கு நலன் விளைக்கும் பெருந்தன்மை உடையவனாவான் என்பதாம்.

113. எம்மை என்றனென்!

     துறை: வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தொழிக்குச் சொல்லியது.

     (து.வி: வரைவினை வேட்கும் தலைவி, மறைவாக நிற்கும் தலைவன் கேட்டு உணருமாறு, தன் தோழிக்குச் சொல்வது போல அமைந்ததே இச் செய்யுளும். நடந்ததாக நிகழ்ச்சி யொன்றைப் படைத்து நயம்படவும் அத்தலைவி கூறு கின்றனள்.)

     அம்ம வாழி, தோழி! நென்னல்
     ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
     ஊரார், 'பெண்டு'டென மொழிய, என்னை
     அதுகேட்டு 'அன்னாய்' என்றனள், அன்னை;
     பைபய 'எம்மை' என்றனென், யானே!

     தெளிவுரை: தோழி வாழ்க! இதனையும் நீ கேட்பாயாக; நேற்று, ''உயர்ந்த அலைகள் வெண்மணலிடத்தை வந்து அலைக்கும் துறைவனுக்கு இவள்தான் பெண்டாயினாள்'' என்று, என்னைச் சுட்டி ஊரார்கள் அலர் கூறினர். அதனைக் கேட்டுச் சினந்தாளான செவிலித்தாய். என்னை நோக்கி, 'அன்னாய்'! என்றனள். யானும் மெல்ல மெல்ல, 'எம்மை' என்ற சொல்லைக் கூறினேன்.

     கருத்து: 'அவள் நற்றாயிடம் உரைக்க, இனி நாம் இற்செறிக்கப்படுதல் உறுதியாகும்' என்றதாம்.

     சொற்பொருள்: ஓங்குதிரை - ஓங்கி உயர்ந்தெழும் கடலலை உடைக்கும் - அலைத்துச் சிதறச் செய்யும். ஊரார் - அலருரைக்கும் இயல்பினரான ஊர்ப்பெண்டிர். பெண்டு - மனையாள். அன்னாய் - அன்னையே; இஃது அலர் சொல்வது மெய்யோ என வினவிய சினத்தால் எழுந்த ஒரு குறிப்புச் சொல்.

     விளக்கம்: ஓங்கு திரை வந்து மோதிமோதி வெண் மணலை அலைத்து வருத்தலேபோல, அலருரைக்கும் பெண்டிர்கள் தம் பழி பேச்சால் நம்மை மிகவும் அலைத்து வருத்துவாராயினர் என்பதாம். 'எம்மை' என்றது கேள்வியின் விடையாக, 'எம்மையோ பழித்தனர், அதனை நீயும் நம்புகதியோ?' எனச் சொல்லித் தெளிவித்ததாகவும் கொள்க; 'எம்.ஐ' எனப் பிரிந்து, 'ஆம், அவனே எம் தலைவன்' எனக் குறிப்பாற் புலப்படுத்தியதெனலும் பொருந்தும்.

     மேற்கோள்: ஈண்டு பெண்டென் கிளவி என்றே பாடங் கொள்ள வேண்டும். 'ஊரார் பெண்டென மொழிய' எனச் சான்றோர் கூறலின் என நச்சினார்க்கினியரும் - (தொல். பெயர், 9) உரைப்பர். பெண்டென்றதனைக் கேட்டு, 'அன்னாயென்றள் அன்னை' என அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு இதுவெறும் அவரே களவியலுள்ளும் காட்டுவர் - (தொல். களவு, 24).

     உள்ளுறை: 'ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவன்' என்றது, அவனும் தான் வரைவொடு வந்து நம்மை மணத்து கோடலினாலே, அலர்வாய்ப் பெண்டிரின் வாயடங்கச் செய்வான் என்பதனை உள்ளூறுத்துக் கூறியதாம்.

114. நாம் செல்குவமோ?

     துறை: இடைவிட்டு ஓழுகும் தலைமகன், வந்து, சிறைப்புறத்தானாயினமை அறிந்த தலைமகள், அவன் கேட்கு மாற்றால் தொழிக்குச் சொல்லியது.

     (து.வி: தலைவன் தலைவியரின் களவுக் காதற் சந்திப்புகள் தொடர்ந்து நிகழவில்லை. இடையிடையே பல நாட்கள் அவன் வாராதானாக, இவர்கள் ஏமாற்றத்தோடு வீடு திரும்பலும், அது குறித்து வருந்தி வாடுதலும் நிகழ்ந்தன. ஒரு நாள, குறித்தவிடத்தே வந்து, தலைவியும் தோழியும் இருப்பதைக் கண்டவன், தோழியை விலகச் செய்யும் குறிப்பொலியை அருகே ஒருசார் மறைந்திருந்து எழுப்புகின்றான். அப்போது தலைவி, அவனும் கேட்டுத் தம்முடைய துயரநிலையை உணரும்படியாகத், தான் தன் தோழியிடம் சொல்வது போலச் சொல்லும் செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி! கொண்கன்
     நேரேம் ஆயினும் செல்குவங் கொல்லோ
     கடலின் நாரை இரற்றும்
     மடலம் பெண்ணை அவனுடை நாட்டே?

     தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக; நம் காதலை நம்பால் வரைந்து வருவதற்குக் காணப் பெறாதேம் நாம் ஆயினேம்; அதனால், கடல்நாரை தங்கியிருந்து ஒலித்தபடியே யிருக்கும். மடல் பொருந்திய பனைகளைக் கொண்டு அவனுடைய நாட்டிற்கு, நாமே சென்று அவனைக் கண்டு நம் துயரைச் சொல்லி வருவோமோ?

     கருத்து: 'அவன் நம்மை வரைதற்கு நினைத்திலனே' என்பதாம்.

     சொற்பொருள்: நேரேம் - நேராக வருதலைக் காணப் பெற்றிலேம். கடலின் நாரை - கடற் பாங்கிலே வாழும் நாரை. இரற்றும் - பெரிதாகக் குரலெடுத்து ஒலிக்கும் பெண்ணை - பனை. செல்குவம் கொல்லே - செல்வோமா?

     விளக்கம்: 'நாமே செல்குவம் கொல்லோ?' என்றது, நம்மால் அவனைப் பிரிந்து உயிர்வாழ்தல் என்பது இயலாமையினால், அவன் நம்மை மறந்திருந்தானாயினும், அவனை மறவாதே, வாடி நலனழிந்து நலியும் நாமாவது, அவனைப் போய்க் காண்பேமா என்றதாம். இதனால் தலைவியின் ஏக்கத்தையும் காதல் மிகுதியையும் உணரும் தலைவன் அவளை வரைதற்கு விரைவிற் கருத்துக் கொள்வான் என்பதாம்.

     'கடலினாரை யிரற்றும்' என்பதற்குக் கடல் முழக்கினைப் போன்று நாரைகள் குரலெழுப்பும் என்று பொருள் கூறலும் பொருந்தும். 'நேரேமாயினும்' என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்க வியலாமல் செய்து வருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.

     உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்க வியலாமல் செய்து வருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.

     உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்று சொன்னது, அவ்வாறே தன் செயலால் நம்மை இடையிற் பலநாட்கள் மறந்திருந்த தலைவன், அது முடிந்ததும், இப்போது வந்து, நம்மை யழைத்தானாகக் குரலெழுப்புகின்றான்'' என்பதாம்.

     பாடபேதங்கள்: கொண்கனை, நேரேனாயினும், பெண்ணையவருடை.

115. அன்னை அருங்கடி வந்தோன்!

     துறை: இற்செறிப்புண்ட பின்னும், வரைந்துகொள்ள நினையாது, தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி: தலைவியின் களவு பற்றிய ஊரலரும், அவள் அழகழிந்த நிலையும், அவளை ஐயுற்று இற்செறிப்புக்குத் தாயை உட்படுத்தச் செய்தன. தோழி மூலம் இஃதறிந்தும், வரைந்து வராதே காலம் கடத்தி வந்தான் தலைவன். அவன் ஒரு நாள் இரவு, தலைவியின் வீட்டுப் பக்கம் வந்து நின்று, தன் வருகையை அறிவிக்கும் குறிப் பொலியைச் செய்ய, தோழியுடன் அவ்விரவுக் குறியிடத்தே வந்திருந்த தலைவி, தலைவன் உள்ளத்திலே நம் துயரம் பற்றிய தெளிவு ஏற்படுமாறு, தான் தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி தோழி! பன்மாண்
     நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
     தண்ணந் துறைவன் மறைஇ,
     அன்னை அருங்கடி வந்துநின் றோனே!

     தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் கேட்பாயாக; பலவான காட்சிகளையுடைய, நுண்மணல் செறிந்த கடற்கரையிடத்தே, நம்மோடும் கூடியாடினவனாகிய, குளிர்ந்த துறைவனான தலைவன், அன்னையின் அரிய காவலமைந்த நம் இல்லின் புறத்தேயும் வந்து நின்றனனே!

     கருத்து: 'அவன் ஊன்றிச் செல்லவேண்துமே என்றதாம்.'

     சொற்பொருள்: பன் மாண் - பலமான மாட்சிகள்; இவை புன்னை நிழலும் பிறவும் போன்றவை; 'பன்மாண் நம்மோடாடிய' எனச் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். அடைகரை - கடற்கரைப் பாங்கர். அருங்கடி - அரிய காவல்; அதையுடைய தம் வீட்டைக் குறித்தது; ஆகு பெயர்.

     விளக்கம்: 'அன்னை அருங்கடி வந்து, மறைஇநின்றோன் என்பதனால், 'அவன் வருகையைத் தான் அறிந்த போதிலும் அவனை அவ்விடம் சென்று சேரற்கு விரும்பிய போதிலும் அன்னையின் அருங்காவலால் அதுதான் இயலாதே போகப் பெரிதும் ஏக்கமுற்று வாடினதும் உணர்த்துகின்றாள். இதனால் வரைந்து மணங்கொண்டாலன்றி தலைவன் தன்னைப் பெறவியலாது என்பதை உணர்த்தி, அதனில் மனம் விரையத் தூண்டியதாம். 'பன்மாண் நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன்' என்றது, அத்தகு காதன்மை காட்டிக் களவிலே துய்த்து மகிழ்ந்தவன் முறையாக மணம் பேசிக் கொள்ளற்கு மறைந்தனனே' என்ற ஏக்கத்தாற் கூறியதாம். இதனை உணரும் தலைவன் வரைந்து கோடலே இனி அவளை அடையும் ஒரே வழியென்று, அதன்பால் கொள்வான் என்க.

     உள்ளுறை: 'பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய துறைவனை' என்றது, இவன் முன்பு நம்பாற் காட்டிய அந்த அன்பினை மறந்தான் என்றும், அவ்வாறு ஆடிய அவனைப் பலரும் அறிவாராதலின், மறைந்து நிற்பதனைக் காணின் ஐயுற்று ஊறிழைப்பர் என்பதை ஊணரானாயினான் என்றும் உட்பொருள் புலப்படக் கூறியதாம்.

     மேற்கோள்: 'பெற்ற வழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச்செய்யுளை இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 21, உரை)

116. மாலை வந்தன்று மன்ற!

     துறை: ஏற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்பத், தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: பகலெல்லாம் தலைவனைக் குறியிடத்தே எதிர்பார்த்து, அவன் வராமையால் சோர்ந்து வாடிய தலைமகள், அவன் மாலைப்போதிலே வந்து, சிறைப்புறத்தே செவ்வி நோக்கி நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டுணருமாறு, தன்னுடைய துயரநிலையைத் தெறிவுபடுத்துவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     அம்ம வாழி தோழி! நாம் அழ
     நீல இருங்கழி நீலம் கூம்பும்
     மாலை வந்தன்று, மன்ற -
     காலை யன்ன காலைமுந் துறுத்தே.

     தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக. எம்மைப் போன்ற கொடிய தென்ற்றஃகாற்றை முற்பட விட்டுக் கொண்டதாக, நான் அவன் பிரிவுக்கு ஏங்கி அழும்படியாகச் செய்வதும் கருமையான பெரிய கழியிடத்து நீலமலரைக் குவியச் செய்வதுமான, மாலைப்போதும் வந்ததே!

     கருத்து: 'எவ்வாறு தாங்கியிருப்பேனோ?' என்றதாம்.

     சொற்பொருள்: நீலம் - நீல மலர்கள்; 'அவை கூம்பும்' என்றது இதழ் குவிந்து ஒடுங்கும் என்றதாம்; அவ்வாறே தலைவியும் தன் ஊக்கமிழந்து ஒடுங்கிச் சோர்வாளாயினள் என்பதாம்; காலையன்ன - காலனைப் போன்ற காலை முந்துறத்து - தென்றற் காற்றை முன்னாக வரவிட்டு.

     விளக்கம்: 'நாம் அழ' என்றது, மாலையின் குறும்புக்கும் பிரிவென்னும் படர் நோய்க்கும் ஆற்றாதே துயருட்படுவதைக் குறித்ததாம். 'நீல இருங்கழி நீலம் கூம்பும் மாலை' என்றது. அவ்வாறே பகற்போதெல்லாம் தோழியருடன் பேசியும் ஆடியும் மறந்திருந்த பிரிவின் வெம்மை, மாலைப்போதில் மேலெழுந்து வாட்டித் துயருறச் செய்வதைக் கூறியதாம். மாலை - மாலை நேரம்; மயக்கத்தையும் குறிக்கும்; அதுவே பிரிந்தாரைப் பெரிதும் துயர்ப்படச் செய்தலால். 'தென்றலை முன்னாக விட்டுத் தொடர்ந்து வரும் மாலை 'காலன் போன்றது' என்பது, இவளை விரைவில் மணந்து கொண்டாலன்றி, இவளை இழக்கவே நேரும்' என்பதைத் தலைவனுக்கு உணர்த்தற்காம்.

117. சேர்ப்பனை மறவாதீம்!

     துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: இதுவும் வரைதல் நினையாதே களவுறவிலேயே நாட்டம் மிகுந்தவனாகிய தலைவனுக்குத், தன் நிலைமை புலப்படுத்துவாள், தலைவி, தோழிக்குக் கூறுவாள் போற் கூறியதே யாகும்.)

     அம்ம வாழி, தோழி! நலனே
     இன்ன தாகுதல் கொடிதே - புன்னை
     அணிமலர் துறைதொறும் வரிக்கும்
     மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.

     தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனைக் கேட்பாயாக! புன்னையின் அழகான மலர்கள் ஒழுங்குபட உதிர்ந்தவாய்த் துறைதோறும் கோலஞ் செய்யும், கருநீலக் கடல் நீரையுடையனாகிய தலைவனை, மறவாதே எப்போதும் நினைத்திருப்போமாகிய நமக்கும், நம் நலன் இத்தன்மைத்தாகிக் கெடுதல்தான் மிகக் கொடியதேயன்றோ!

     கருத்து: 'எம் நிலைதான் இனி யாதாகுமோ?' என்றதாம்.

     சொற்பொருள்: நலன் - பெண்மை நலனாகிய பெருங்கவின்! 'இன்னதாகுதல்' என்றது, பசலையால் உண்ணப் பெற்றுக் கெட்டழிந்ததனைக் காட்டிக் கூறியதாம். கொடிதே - ஒழுங்குபட உதிர்க்கும். மணிநீர் - நீலமணிபோலும் நீர்: தெளிநீர் என்றும் பாடம் கொள்வர்; அதுவாயின் 'கழிவுநீர்' என்று கொள்க.

     விளக்கம்: 'சேர்ப்பனை மறவாதோர்' என்றது, சேர்ப்பன் தந்த இன்பத்தினையும், அவன் நினைவையும். இவ்வாறு, அவனை நாம் நம் மனத்தகத்தேயே மறவாதே கொண்டிருக்கும் போதும் அவன் பிரிந்தான் என நம் நலன் அழிந்தே கெடுவதேன்? அது கொடிது அலவோ! என்கின்றனள். இதனால் தன் காதல் மிகுதியும் ஆற்றினும் அடங்காத் துயரமிகுதியும் புலப்படுத்தி, விரைய வரைதற்குத் தலைவனைத் தூண்டினளாம்.

     உள்ளுறை: 'புன்னையின் அணிமலர் துறைதோறும் வரிக்கும் மணிநீர்ச் சேர்ப்பன்' என்றது. அதனைக் காண்பவன் உள்ளத்திலே தன் திருமணத்தைப் பற்றிய நினைவு தோன்றிற்றில்லையே என்பதை உள்ளுறுத்துக் கூறியதாம். புன்னை மலர்வது நெய்தல் நிலத்தார் மணங்கொள்ளும் காலம். ஆதலால் இவ்வாறு சொல்லியதும் பெருந்தும் என்க.

     மேற்கோள்: காம மிக்கவழித் தலைவி கூறுதல் என இச்செய்யுளை இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 21).

118. பின் நினைந்து பெரய்த்தேன்!

     துறை: சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயின் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூ உமாம்.

     (து.வி.: தலைவன் வரையாது, களவே மேற்கோள்ளலால் வருந்தித் தோழி வாயின் மறுத்தனள். மறுநாளும் தலைமகள் வரத், தலைமகள், தோழி தடுக்கவும் நில்லாதே அவன்பாற் சென்றனள். பின் அவள் வந்து, தோழிக்குச் சமாதானம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி! யானின்று
     அறனி லாளற் கண்ட பொழுதில்,
     சினவுவென் தகைக்குவென் சென்ற னென்,
     பின்நினைந்து திரங்கிப் பெயர்தந் தேனே!

     தெளிவுரை: தோழி வாழ்வாயாக! இதனைக் கேட்பாயாக. இன்று, அறனில்லாதவனாகிய தலைவனைக் கண்ட பொழுதிலே 'அவன்பாற் சினங்கொள்வேன்; இனி அவன் இவண் வராதிருக்க என்று அவன் வரவையும் தடுப்பேன்'' என்றே நினைத்துச் சென்றேன். பின்னர், அது செய்தலால் பெருந்துயரமாம் என்று இரக்கமுற்றவளாய், யாதும் அவன்பாற் சொல்லாதேயே மீண்டேன்!

     கருத்து: 'அவனை மறத்தல் நமக்கும் இயல்வதில்லையே' என்றதாம்.

     சொற்பொருள்: அறநிலாளன் - அறமே அறியாதவன். தலைவனைச் சுட்டியது; அறமாவது களவிற் கலந்தானை அலராகா முன்பே மணங்கொண்டு, இல்லத் தலைவியாக்கிக் கொள்வது. தகைக்குவேன் - என்று எண்ணி; தகைத்தல் அவன் வரவை மறுத்தல். பின் நினைந்து - பின் விளைவை நினைந்து.

     விளக்கம்: 'பின் நினைந்து இரங்கிப் பெயர்ந்தேன்' என்றது, ''அவனை வெறுத்து ஒதுக்கின், உயிர் வாழாமையே நம்முடைய நிலையாதலின், அவனை வெறுக்கவும் தடுக்கவும் முயலாதே, அவனுடன் இசைந்து ஒழுகி மீண்டேன்; இதனை நீயும் அறிவாய்; ஆதலின் என்னைப் பொறுப்பாய்'' என்பதாம். தொழியும், தலைவியின் கற்புச் செவ்வி நோக்கி, அவள் செயலையே சரியாகக் கொள்வாய் என்பதாம்.

119. பெரிதே அன்பிலன்!

     துறை: 'வரைதற்கு வேண்டுவன முயல்வோம்' எனச் சொல்லி, வரையாது ஒழுகுகின்ற தலைமகன் சிறப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி: 'வரைதலுக்கு முயல்வேன்' என்று உறுதிகூறிச் சென்றவன், அது செய்யாது, மீண்டும் களவையே விரும்பி வந்து, சிறைப்புறத்தானாகியது அறிந்த தலைவி, அவனும் கேட்டு அறியுமாறு, தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     அம்ம வாழி, தோழி! நன்றும்
     எய்யா மையின் ஏதில பற்றி,
     அன்பிலன் மன்ற பெரிதே -
     மென்புலக் கொண்கன் வாராதோனே!

     தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும், நீ கேட்பாயாக. நெய்தல் நிலத்தானாகிய தலைவன், நம்மை வரைதலான நல்ல மரபினை அறியாதேயே உள்ளனன்; அதனாலே, அயலானவைகளைப் பற்றியே செல்லுகின்றனன். அவன் நம்மீது பெரிதும் அன்பிலாதான் என்றே நாமும் அறிகின்றோம். (என் செய்வேம்.)

     கருத்து: 'அவனை நம்பி நம்மைத் தந்த நாமே தவறினோம்' என்பதாம்.

     சொற்பொருள்: மென்புலம் - நெய்தல் நிலம். நன்றும் - நன்மை தருவனவான ஒழுக்கங்களையும். எய்யாமை - அறியாமை. ஏதில - அயலான ஒழுக்கங்கள்; களவே நாடிப் பொறுப்பை உதுக்கிவரும் செயலும், நினைவும்.

     விளக்கம்: அவன் வரைந்து வாராமை பிறவற்றால் அன்று; நமக்கு நன்மையாவது மணவாழ்வே என அறியாதவனாதலின், களவே நமக்கு இன்பமாவது என எண்ணி, அதுவே பற்றி நடந்து வருகின்றனன். ஆதலால், அவன் அன்பில்லாதவன் என்பதும் தெரிந்தோம். இனி நம் நிலை துயரேதான் போலும் என்று வருந்திக் கூறுவதுபோலக் கூறியதாகக் கொள்க. இதனைக் கேட்டவன், அவள்மேல் பேரன்பின்னாதலின் மேலும் காலம் நீட்டிக்காது வரைதற்கு முயல்வன் என்பதாம்.

120. நல்லவாயின தோளே!

     துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், வந்து சிறைப்புறத்தானாகத், தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

     (து.வி: வரைவுக்குக் குறித்த காலம் கழிந்தும், வரைவொடு வராதவன், களவுறவை நாடியவனாக வந்து, குறியிடத்தே இருப்பதறிந்த தலைவி, பெருகிய மனத்துயரோடு, அவனும் கேட்டுணருமாறு, தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     அம்ம வாழி, தோழி! நலமிக
     நல்ல வாயின, அளிய மென் தோளே -
     மல்லல் இருங்கழி மல்கும்
     மெல்லம் புலம்பன் வந்த மாறே!

     தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக; வளம் பெற்ற கரிய கழியினத்தே, நீர்வளம் மிகுந்து விளங்கும் நெய்தல் நிலத்தானாகிய நம் தலைவனும் வந்தனன். அதனாலே, நலம்கெட்டு அளிக்கத்தக்கவாயிருந்த எம் மெல்லிய தோள்களும், நலம் மிகுந்தவாய்ப், பண்டேபோல் நல்லெழில் உடையவாயினவே!

     கருத்து: 'இனி, அவன் வரைவொடு இனி வருவான்' என்பதாம்.

     விளக்கம்: 'மணப்பின் மாணலம் எய்திக் தணப்பின் நெகிழ்ப தடமென் தோளே' என்று குறுந்தொகையும் (299) கூறும், செவ்வியலே எழில் பெற்றன தலைவியின் தோள்கள் என்க. : 'மாறு'; ஏதுப் பொருள்படும் ஓர் இடைச்சொல். 'கழி நீர் அறல் விரியும்' எனப் பாடங்கொண்டு, 'கழிநீர் பெருகிப் பரந்து பலவிடமும் படர்தலாலே அறல்பட்டு அவ்விடங்களும் விளங்கும் என்றும் உரைக்கலாம். அவ்வாறே, அவன் வரைவொடும் வருதலாலே தலைவியும் புதிதான அழகு பெறுவாள் என்க.

     'மல்லல் இருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன்' அவன் ஆதலின், அவனும் மிகத் தண்மையுடையான்; நமக்கு வெம்மை மிகுக்கானாய் இனி வரைந்து வருவான் என்று சொன்னதாம்.

     மேற்கோள்: : ''பெற்றவழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும் என்று இளம்பூரணனாரும். (தொல். களவு, 21); தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்ற ஞான்று புதுவது மலியின், அவளுக்குக் கூற்று நிகழும்'' என நச்சினார்க்கினியரும். (தொல். களவு, 20), இச் செய்யுளைக் காட்டிக் கூறுவார்கள்.

     இப் பத்துச் செய்யுட்களும், பழந்தமிழ்க் காதல் வாழ்வில், தோழியின் சிறப்பான இடத்தை உணரச் செய்வனவாகும். உயர்குடிப் பிறந்து, குடித் தகுதியும் மரபும் பிறழாதே வாழும் தலைவி, பெரும்பாலும், இல்லத்துப் புறம் போந்து உலகநடையும் பிறவும் அறிந்து தெளிதற்கு வாய்ப்பற்றவளாகவே இருப்பள். இந்நிலையிலே அக்கட்டுப்பாட்டு வேலை தடை செய்யாதே எங்கும் செல்லவும் எவருடனும் பேசிப் பழகும் உரிமையும், அதற்கேற்ற மனவுறனும் பெற்றவளாகத் திகழும் தோழி, தலைவியினும் எதையும் முடிவு செய்யும் அறிவாற்றல் உள்ளவளும் ஆகின்றாள். மேலும், பாசத்தாலே அறிவின் நிதானத்தைத் தவறவிடும் நிலைமையும் அவள்பால் இல்லை. இத்துடன், தலைவியின் நல்வாழ்விலே அவள் மிகவும் அக்கறையும் பொறுப்புணர்வும் மிக்கவள். அவள் இன்ப துன்பங்களைத் தனதாகவே கருதிப் பேசும் பாங்கினள். எனவே, அவள் உடன்பாடு தலைவன் தலைவர்க்கு மிகவும் தேவையாகின்றது. இல்லத்தாரும் தலைவியின் உறுதுணையாகத் திகழும் அவளிடமே, தலைவியின் நினைவகம் செயலும் பற்றிய பலவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கின்றது.

     நாணமும் மடமும் குடிப்பண்பும் தலைவியின் பேச்சைத் தடை செய்வன போலத் தோழியின் பேச்சைத் தடுப்பவனல்ல. அவள் பேச்சிலும் செயலிலும் தெளிவும் துணிவும் உடையவள். இப்படி ஒரு துணையை வகுத்துள்ள இலக்கியப் பாங்கும், அதற்குள்ள பொறுப்பான நிலையும் மிகவும் வியக்கற்பாலனவாம்.