உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 14 ... 3. கிழவற்கு உரைத்த பத்து தலைமகனுக்குச் சொல்லிய பத்துச் செய்யுட்களின் தொகுப்பு இப்பகுதி. 'தலைமகன்', 'தலைவன்' என்னும் பெயர்களே, அவர்கள் குடிநெறி பிறழாத் தலைமை வாழ்வினரென்றும், தம்முடைய தலைமைப்பாட்டையும் அறநெறிகளையும் பேணுதற்கு உரியர் என்றும் காட்டும். இத்தகு தலைமையினைப் பிறப்பால் உடையாரும் தவறும்போது, அவர்க்குப் பிறர் அதனை உணர்த்திச் சொல்வன, ஆழமான உணர்வுநயச் சொற்களாகும். 'தலைவன்', 'கிழவன்' என்னும் உரிமைப் பெயரோடும் சுட்டுப்படுதலின், 'கிழவற்கு உரைத்த பத்து' என்றனர். 121. நின் கேளைக் கண்டோம்! துறை: பரத்தை தலைமகற்குச் சொல்லிது. (1) 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகா நின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத்தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவியை நீக்கக் கருதிய தோழி, அவள் இளமை கூறி நகையாடிச் சொல்லியதூஉம் ஆகும். (2). (து.வி.: தலைவன் தன்னை மறந்தானாய்க் கைவிட்டுத், தன் மனைவியிடத்தே போதற்கு நினைகின்றான் என்பதனைக் குறிப்பால் உணர்ந்தாள், பரத்தை. அவள், அவனுக்கு அது பற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (1). தலைவன் பரத்தையுறவினன் என்று அறிந்து, அவனோடு புலந்து ஒதுங்குகின்றாள் தலைவி. அதனை நீக்கிக் கூடியின் புறவும், அவளைத் தெளிவிக்கவும் கருதிய தலைவன், 'தான் ஏதும் பிழை பாடாக நடத்திலன்' என்று தோழிக்கு உறுதிகூறி, அவள் உதவியை நாடுகின்றான். அவள் தலைவியின் இளமைப் பற்றிச் சொல்லி, அவளை மறந்து பரத்தைமை நாடித் திரியும் அவன் இழுக்கம் பற்றியும் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (2). இப்பகுதிச் செய்யுள்கள் அனைத்திற்குமே இத்துறைகளுள் ஒன்றே பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும். ஒரே துறையமைதியுடனும் அமைந்த பத்துச் செய்யுட்கள் இவை. 29, 30ஆம் செய்யுட்கள் காணப்பெறவில்லை; அதனை அறிந்து வருந்த வேண்டும்.)
கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே! தெளிவுரை: கொண்கனே! கழிமுள்ளிப் பூவாலே தொடுத்தணிந்த தன் தலைக்கோதை நனையுமாறு, தெளிந்த அலைகளையுடைய கடலின் கண்ணே பாய்ந்து, தான் தனியாக நீராடி நின்றவளான, நினக்கு உறவுடையாளை, யாமும் அன்று கண்டனம் அல்லமோ! கருத்து: 'யாம் கண்டதை மறைத்துப் பொய்கூறேம்' என்பதாம். சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ - கண்டேம் அல்லமோ; தலைவனும் தானும் கண்டிருந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கூறியது; 'இகும்' என்னும் இடைச்சொல் தன்மைக் கண்ணும் வந்தது இது. (தொல். இடை, 27. இளம், நச், சேனா.) முண்டகம் - கழிமுள்ளி; முண்டகப் பூவைக் கோதையாகக் கட்டிச் சூடிக் கடலாட்டயர்வது நெய்தன் மகளிரின் இயல்பாதலை இதனால் அறியலாம். பௌவம் - கடல். நின்றோள் - நீராட்டயராதே நின்னை இன்னொருத்தியுடன் கண்டதும் செயலற்றுக் கோதை நனைய நின்றவள். கேள் - உரிமை கொண்டவள். விளக்கம்: நீராடி நின்னோடும் மகிழ்தற்குத் தன்னைப் புனைந்தவள், நீதான் வேறொருத்தியோடும் நீராட்டயர்தலைக் கண்டதும், தான் தனியளாகக் கடலிற் பாய்ந்து, நின் செயலாலே மனம்வருந்தித் தன் முண்டகக் கோதை நனையத் தான் நீராடாமற் செயலற்று நின்றனளே! அவளை யாமும் கண்டேம் அல்லமோ! ஆதலின் மறைத்துப் பயனில்லை; தலைவியை இரந்து வேண்டித் தெளிவித்து, அவள் இளமை வேகமும், அவள் நினக்கு உறவாட்டியென்னும் உண்மையும் உணர்ந்தாயாய் நடப்பாயாக என்றதாம். "பரத்தை சொன்னதாகக் கொள்ளின், 'நின்கேள் அவ்வாறு நின்றது கண்ட நீ, அவள்பால் நெஞ்சம் தாவிச் செல்ல, என்னையும் மறந்து அன்று மயங்கினையல்லையோ?" என்றதாகக் கொள்க. தோழி கூற்றாயின், 'அவளைத் தனித்து நீராடும் துயரிலே வீழ்த்திவிட்டு, நீ இன்னொருத்தியோடு சென்று கடலாடலை, யாம் எம் கண்ணாரக் கண்டேமாயிருந்தும், நீதான் பொய்யுரைத்தல் எதற்கோ? இனியேனும், அவள் இளமை நெஞ்சறிந்து, அவள் நின் கேளென்ற நினைவின் உணர்வோடு, அவளைப் பிரிந்து வாடி நலனழியவிட்டுப் கூடியின்புற்று புறம் போகாவாறு, வாய்வாயாக' என்றதாகவும் கொள்க! 122. குருகை வினவுவோள்! துறை: மேற்செய்யுளின் துறையே இதுவும்.
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே! தெளிவுரை: கொண்கனே! தன் ஒள்ளிய இழையானது மணல் மேட்டிலே வீழ்ந்ததென்று, மிகவும் வருந்தியவளாக, அருகே காணப்பெற்ற வெள்ளாங்குருகினை விளித்து, 'நீ கண்டனையோ?' என்று வினவுகின்ற நின் உரிமையாட்டியை யாமும் கண்டேம் அல்லமோ! கருத்து: 'அவள் நின் கேள் அல்லவோ!' என்றதாம். சொற்பொருள்: உயர் மணல் - மணல்மேடு. ஒள்ளிழை - ஒளி மிகுந்த இழை; எளிதாகவே கண்ணிற் படக்கூடியது என்பது கருத்து. வெள்ளாங் குருகு - கடற்பறவை இனத்துள் ஒன்று. விளக்கம்: 'அத்தகு முதிரா அறிவினளின் நெஞ்சை நைந்து நோகச் செய்தல் நினக்குத் தகாது' என்பதாம். இது தலைவனிடமிருந்து உண்மையினை அறிவதற்காகச் சொல்லப்படும் குற்றச் சாட்டாகலாம். காமஞ்சாலா இளமையோளையும் நாடிப் பின்செல்லும் நீ, மடமையுற்றாய் என்றதாம். மேற்கோள்: காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையில் முடிக்கும் பொருளின்கண் தலைவிக்குக் கூற்று நிகழும், (தொல். கற்பு, 6) எனவும், தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகனது குறிப்பினை அறிதற்கும் உரியள். (தொல். பொருள். 38) எனவும், இளம்பூரணனார், தலைவி கூற்றாகவே இச் செய்யுளைக் காட்டுவர். திணைமயக்குறுதலுள் இப்பத்தும் நெய்தற்கண் மருதம்; இவை பெதும்பை பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித், தலைவன் குறிப்புணர்ந்து - (தொல். அகத், 12) எனவும்; தலைவன் வரையக் கருதினாளோர் தலைவியை, 'இனையள்' எனக்கூறி, அவன் குறிப்பறியக் கருதுதலின் வழுவாய் அமைந்தது. (தொல். பொருள், 40) எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர். முதலில் தலைவி கூற்றாகவும், பின் தோழி கூற்றாகவும் அவள் கொள்வதும் ஓர்க. உள்ளுறை: வெள்ளாங்குருகு ஒள்ளிழை தேடித் தராதவாறு போல, அவளை நாடும் நின் நாட்டமும் என் வழியாக நினக்குப் பயன்தராது என்று கொள்க. 123. ஆயம் ஆர்ப்பத் திரை பாய்வோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே? ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே! தெளிவுரை: கொண்கனே! ஒளியமைந்த நெற்றியையுடைய ஆயமகளிர்கள் பலரும் ஆரவாரம் செய்ய, தண்ணென விளங்கும் பெருங்கடலிலே, அலையிற் பாய்ந்து கடல் நீர் ஆடுவாளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேமல்லமோ? கருத்து: ''ஏன் பொய்யுரை புகல்கின்றனை?'' என்றதாம். சொற்பொருள்: ஆயம் - ஆயமகளிர்; விளையாட்டுத் தோழியர். ஆர்ப்ப - ஆரவாரித்து ஒலி எழுப்ப. விளக்கம்: அலையிலே பாய்ந்தாடுவாளை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சினாலே, கரையிலுள்ள தோழியர் ஆரவார ஒலி எழுப்புவர் என்பதாம். அந்த ஒலியால் எம் கவனம் ஈர்ப்புற, அவளை, அங்கே யாமும் காண நேர்ந்தது என்றதாம். பரத்தை கூற்றாயின், 'திரைபாய்வோளைத் தலைவியெனவும், தோழி கூற்றாயின் பரத்தையாகவும் கொள்க அவளையே சென்று இப்போதும் இன்புறுத்துக என்றதாம். 124. கடல் தூர்ப்பாள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே? வண்டற் பாவை வௌவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே! தெளிவுரை: கொண்களே! தானிழைத்து விளையாடிய வண்டற்பாலையைக், கடலலை மேலிவர்ந்து வந்து அழித்தனாலே சினங்கொண்டு, நுண்ணிய பொடிமணலை வாரி எறிந்து கடலையே தூர்க்கா நின்றவளான, நின் உரிமை யாட்டியை யாமும் கண்டுள்ளேம் அல்லமோ! கருத்து: ''ஏன் மறைத்துப் பொய் புகல்வாய்?'' என்றதாம். சொற்பொருள்: வண்டற்பாவை - மணற்பாவை. வௌவல் - கவர்ந்து போதல். நுண்பொடி - நுண்ணிய பொடி மணல். அளைஇ - அள்ளித் தூற்றி. விளக்கம்: தன் மணற்பாவையைக் கடலலை அழித்ததற்கே அவ்வாறு சினந்து ஆத்திரப்பட்டவள், நீயும் கொடுமை செய்தால் ஏற்றுப் பொறுமையாயிருப்பாளோ? ஆதலின் அவள் பாலே செல்க என்று தோழி கூறியதாகக் கொள்க. பரத்தை கூற்றாயின், நுண்பொடி யளைஇக் கடலைத் தூர்த்தல் இயலாதவாறுபோல, நின்னை அலர் கூறி என்னிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், அவளால் ஒருபோதும் இயலாது என்றதாம். 125. அழுது நின்றோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! - நின் கேளே? தெண்டிரை பாவை வௌவ உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே! தெளிவுரை: கொண்கனே! தெளிந்த கடலலையானது தானிழைத்து வண்டற் பாவையினைக் கவர்ந்து போகக்கண்டு, தன் மையுண்ட கண்கள் சிவப்ப அழுது நின்றோளான, நின் உரிமையாட்டியை நாமும் கண்டுள்ளேம் அல்லமோ! கருத்து: 'அவள் உறவை மறைப்பதேன்?' என்றதாம். விளக்கம்: திரை மணற்பாவையை அழித்தற்கே வருந்தி, உண் கண் சிவப்ப அழுதவள், நீ அவள் வாழ்வையே அழிக்க முயலின் என்னாகுவளோ? என்பது தோழி கூற்றாகும். பரத்தை கூற்றாயின், 'காமவுறவுக்குப் பொருந்தாத அத்தகு இளையோளையோ நீயும் விரும்பினை' என்றதாகக் கொள்க. 126. திரை மூழ்குவோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? உண்கண் வண்டினம் மாய்ப்பத் தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே! தெளிவுரை: கொண்கனே! மைதீற்றிய தன் கண்ணிலே, வண்டினம் மலரென மயங்கி வந்து மொய்க்கவும், அதனைப் பொறாதே, தெளிந்த கடலின் பெரிய அலையிடையே மூங்குவோளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ! கருத்து: ''அவள் நிலைதான் இனி என்னாகுமோ?'' என்றதாம். சொற்பொருள்: உண்கண் - மையுண்ட கண். நீலமலர் போலத் தோற்றலால் வண்டு மொப்ப்பவாயின. இது அவளது கண்ணெழில் வியந்ததும், முதிரா இளமைச் செவ்வி சுட்டிக் கூறியதுமாம். ''வண்டு மொய்ப்பத் திரை மூழ்குவோள், துயர் எழின் உயிர் வாழாள்'' என்றதாம். 127. மாலை விலக்குவாள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? தும்பை மாலை இளமுலை நுண்பூண் ஆகம் விலங்கு வோளே! தெளிவுரை: கொண்கனே! தும்பை மாலையணிந்ததும், இளமுலைகள் பொருந்தியதும், நுண்ணிய பூண் அணிந்ததுமாகிய தன் மார்பினை, நீ தழுவாவகையிலே விலக்கிச் சொல்வோளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ! கருத்து: ''அவள் புலவியை நீக்கி அவளையே போய் இன்புறுத்துக'' என்றதாம். விளக்கம்: தும்பைமாலை - தும்பைப் பூவாற் கட்டிய மாலை. 'இளமுலை' என்றது பருவம் முதிராதாள் என்றற்கு; இது பழமை சுட்டியது. அன்று நின்னை விலக்கினாள், இன்றும் நின்னை விலக்காளோ என்பதும் தோழி கூற்றாகும். 128. பாவை ஊட்டுவோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே? உறாஅ வறுமுலை மடாஅ, உண்ணாப் பாவை யூட்டு வோளே! தெளிவுரை: கொண்கனே! உண்ணுதல் செய்யாத தன் மரப்பாவைக்கு, பாலூறிச் சுரக்கும் நிலையெய்தாத தன் வறிய முலையை வாயிலிட்டுப் பாலூட்டி மகிழ்வாளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டுள்ளேம் அல்லமோ! கருத்து: 'அவள் ஆர்வத்தைச் சிதைத்தனையே?' என்றதாம். சொற்பொருள்: உறாஅ வறுமுலை - பால்சுரத்தலைப் பெறாத முலைகள்; உறா வறுமுலை எனவும் பாடம். மடாஅ-வாயிலிட்டு ஊட்டுவாளாக. உண்ணாப் பாவை - மரப்பாவை. விளக்கம்: மனைவாழ்விலே அத்துணை ஆர்வத்தை அன்றே உடையாளை மறந்து, பரத்தைபாற் செல்வதேன் என்ற தோழி கூறியதாகக் கொள்க. பரத்தை கூற்றாகக் கொள்ளின், தலைவியைச் சிறுமியென நகையாடிக் கூறியதாகக் கொள்க. 129. *** 130. *** இப்பகுதி பொதுவாக இளமையின் அறியாமைச் செயல்களையே சுட்டியவாய் அமைந்துள்ளன. பரத்தை கூற்றாயின், அத்தகு சிறுமித்தன்மை மாறாதவள் தலைவி என்று குறித்ததாகவும், தோழி கூற்றாயின், அத்தகு மெல்லுணர்வுகளைச் சிறுபோதிலேயே கொண்டவளாதலை அறிந்தும், தலைவன் அவளை வருந்தச் செய்வதன் கொடுமையைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க. |