உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 15 ... 4. பாணற்கு உரைத்த பத்து பாணன் தலைவனின் வாயில்கள் (ஏவலர்கள்) பலருள் முதன்மையான ஒருவன். இவனே தலைவனைப் பரத்தையருடன் சேர்த்துவைப்பவன். கலைஞனாயினும், தலைவனின் சபல உணர்வுகளுக்குத் துணைநின்று பலரின் தூற்றலையும் பெற்று வருபவன். அவற்றை அதிகமாகப் பாராட்டாதே தலைவனின் ஏவலை நிறைவேற்ற முயலும் இயல்பும் கொண்டவன். இவன் தலைவன் பொருட்டாகத் தலைவிபாற் சென்று, தலைவன் சொன்னதைச் சொல்லும் வாயில் உரிமையும் பெற்றவன். தலைவனின் புறத்தொழுக்கத்ததால் வருந்தி வாடியிருந்த தலைவியிடம், பாணன் சென்று, 'தலைவனின் காதன்மை பற்றிக் கூறி, அவனை வெறுக்காது ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றான். அவனுக்குத் தலைவி விடை சொல்லுவதாக அமைந்தவையே இந்தப் பத்துச் செய்யுட்களும் ஆம். 131. கௌவை எழாதேல் நன்று! துறை: வாயில் வேண்டி வந்த பாணன், தலைமகனது காதன்மை கூறினானாகத், தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. (து.வி.: தலைவனைத் தலைவி உவந்தேற்று இன்புறுத்த வேண்டும் என்று கேட்கின்ற பாணன், தலைமகன் அவள்மீது கொண்டுள்ள காதலன்பைப் போற்றிக் கூறுகின்றான். அதற்கு இசைய மறுப்பவள், அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
நன்றே, பாண! கொண்கனது நட்பே - ததில்லை வேலி யிவ்வூர்க் கல்லென் கௌவை எழாக் காலே! தெளிவுரை: பாணனே, கேளாய்! தில்லை மரங்களையே வேலியாகப் பெற்றுள்ள இவ்வூரின் கண்ணே, கல்லென்னும் படி அலரானது எழுந்து பரவாதாயின், தலைவனது நட்பும் பெரிதும் நன்றே யாகும்! கருத்து: 'ஆனாற் கௌவைதான் எழுந்து, எங்கும் பரவி, அலராகின்றதே' என்றதாம். சொற்பொருள்: தில்லை - ஒருவகை மருந்துமரம்; தில்லைப் பால் மேனியிற் பட்டால் புண்ணாகும் என்பார்கள். ஊரைச் சுற்றித் தில்லை மரங்கள் அடர்ந்திருந்தமையின் 'தில்லை வேலி இவ்வூர்' என்றனள். நெய்தற் பாங்கில் இம்மரம் மிகுதி. விளக்கம்: 'கௌவை எழா அக்கால் நட்பு நன்று' என்றது, 'எழுந்து விட்டமையின், அதுதான் நன்றாகாதாயிற்று; எனவே, நின் வேண்டுதலை யாம் ஏற்கோம்' என்றதாம். தில்லையைத் தழுவுவார் உடற்புண் உறுதலைபோலத் தலைவனைத் தழுவுமாறும் மனப்புண்ணும் உடல் நலிவும் உறுவர் என்றதுமாம். 132. அலராகின்றது அருளும் நிலை! துறை: வாயில் வேண்டி வந்த பாணன், ''நீர் கொடுமை கூறல் வேண்டா; நும்மேல் அருளடையர்'' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. (து.வி.: ''அவர்மீது கொடுமை சொல்லாதீர்; அவர் நும்மீது என்றும் பேரருளுடையவர்'' என்று தலைவிக்குப் பாணன் கூற, அதுகேட்டு, அவள் விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, பாண! புன்னை அரும்புமலி கானல் இவ்வூர் அலரா கின்றுவ ரருளு மாறே! தெளிவுரை: பாணனே, வாழ்க நீ! புன்னையின் பூவரும்புகள் மலிந்து கிடக்கின்ற கான்றஃசோலையினையுடைய இவ்வூரிடத்தே, அவர் நமக்கு அருளுந்திறந்தான், பலராலும் பழித்துப் பேசும் அலராக உள்ளதே! கருத்து: 'அவர் அருள் மறந்தார்' என்றதாம். சொற்பொருள்: கானல் - கானற்சோலை. அருளுமாறு அருளும் திறம். விளக்கம்: அரும்புமலி கானலைக் கொண்ட இவ்வூரும் அவரைக் குறித்தெழுந்த அலரினாலே மலிந்ததாயிற்று; ஆதலின் அருள்மறந்த அவரை யாம் அடைதலை இனியும் விரும்பேம் என்றதாம். மேலாகப் புன்னை அரும்பால் மலியினும், உண்மையிற் கானலே இவ்வூர்; அவ்வாறே பேச்சில் நயமுடையராயினும், உளத்தே நயமற்றார் காதலர் என்றதுமாம். 133. புல்லென்றன தோள்! துறை: வாயிலாய்ப் புகுந்த பாணன், தலைமகள் தோள் மெலிவு கண்டு, ''மனைப்புறத்துப் போய் வந்த துணையானே நீ இவ்வாறு வேறுபடுதல் தகாது,'' என்றாற்கு, அவள் சொல்லியது. (து.வி.: தலைவனுக்குத் தூதாக வந்தவனான பாணன், தலைவியின் தோள் மெலிவைக் கண்டு, 'தலைவன் மனைப் புறத்துப் போய் வந்ததற்காக நீ இவ்வாறு வருந்தித் தோள்மெலிதல் தகாது' என்று கூறித் தேறுதல் கூறித் தெளிவிக்க முயல்கின்றான். அவனுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுத் இது.)
யானெவன் செய்கோ, பாண! - ஆனாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென் றனவென் புரிவளைத் தோளே! தெளிவுரை: பாணனே! மெல்லிதான நெய்தல் நிலத்தானான நம் தலைவன், என்னை மறந்தானாகிப் பிரிந்து போயினான் என்பதாக, என் முறுக்குண்ட வளைகளணிந்த தோள்கள் ஆற்றாதே, தாமே மெலிவுற்றனவே! யான் யாது செய்வேன்? கருத்து: ''அவன் பிரிவைத் தாங்காதேனான என்னையும் அவன் பிரிந்தானே'' என்றதாம். சொற்பொருள்: மெல்லம் புலம்பன் - மென்னிலமாகிய நெய்தல் நிலத்தான்; நெய்தல் மென்னிலமாவது மணற்பாங்கே மிகுதியாகி, வனைமையற்று விளங்கலின். புரி - முறுக்கமைந்த. வளை - தோள்வளை. விளக்கம்: தோள் மெலியச் செய்தானை இடித்துக் கூறித்திருத்த முயலாது, 'மெலிந்தேன்' என்று மட்டும் இவண் வந்து கேட்கின்றனையோ?' என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க. 'அப்படிப் பிரிதற்கு உதவியாக நின்றவனான நீயோ வந்து இப்படிச் சொல்வது?' என்று பாணனைச் சுட்டிச் சினந்து கூறியதும் ஆகும். மேற்கோள்: இது நெய்தற்கண் மருதம். தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12). 134. கொண்கனோடு கவினும் வந்தது! துறை: பிரிவின்கண், தலைமகள் கவின்தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத், தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. (து.வி: தலைமகன் பிரிவாலே தலைவி கவின் இழந்தாள். அதனைக் கண்டு, அது தகாதென்று ஒதுங்கிச் சென்றனன் பாணன். தலைமகன் வந்துசேர அவள் கவினும் மீண்டும் வந்து விடுகின்றது. அப்போது, அவள் பாணனுக்குத் தன்னுடைய உளநிலையைக் காட்டிக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)
காண்மதி, பாண! இருங்கழிப் பாய்பரி நெடுந்தேர்க் கொண்கனொடு தான்வந் தன்றென் மாமைக் கவினே! தெளிவுரை: பாணனே, காண்பாயாக! பெரிய கழியிடத்தே பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட நெடிய தேருக்குரியவனான தலைவனின் வருகையோடு, என் மாந்தளிர் போலும் மேனிக்கவின், தானும் என்பால் வந்ததே! கருத்து: 'இனியேனும் அவன் பிரிவுக்குத் துணை செய்யாதே' என்றதாம். சொற்பொருள்: பாய்பரி - பாய்ந்து செல்லும் குதிரைகள். நெடுந்தேர் - பெரிய தேர். மாமை - மாந்தளிரின் தன்மை. விளக்கம்: 'இருங்கழியிலும் பாய்ந்துவரும் குதிரைகள் பூட்டிய நெடுந்தேர்க் கொண்கன்' எனவே, அவன் வளமலிந்த பெருநிலை பெற்ற தலைமையோன் என்பதும் அறியப்படும். 'அவனொடு கவின் வந்தது' எனவே, அவனொடு கவினும் போயிற்றென்பதும், இனியும் போகும் என்பதும் உணர்த்தினள். 135. யாம் வருந்தேம்! துறை: பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி, அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றதறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றாற் பாணற்குச் சொல்லியது. (து.வி: பரத்தை ஒருத்தியைத் தனக்கு உரியவளாக்கிக் கொள்ள முயல்கின்ற தலைவன், அதனை மறைத்தபடியே நடந்து வருக்கின்றான். இதனை அறிந்தாள் தலைமகள். அவன் கேட்குமாறு, அவன் பாணனுக்குச் சொல்வாள்போலச் சொல்லுகின்றாள்.)
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள் ஐதமைந் தகன்ற வல்குல் நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே! தெளிவுரை: பாணனே! மூங்கிலனைய தோள்களையும், மெல்லியதாய் அமைந்து அகன்ற அல்குல் தடத்தினையும், நெய்தலின் மலர்போலும் அழகிய கண்களையும் உடையாளை, யாம் எம் எதிரேயே காணப்பெறுவேமாயினும், அது குறித்து யாதும் யாம் வருத்தம் அடைவோம் அல்லேம்! கருத்து: 'அது அவன் விருப்பிற்கு உட்பட்டது' என்றதாம். சொற்பொருள்: பாணை - மூங்கில். ஐது - மெல்லிது. 'நெய்தல் மலர் போலும் அழகிய கண்ணி' என்பதும், பிறவும் இகழ்ச்சிக் குறிப்பாகச் சொன்னதாகக் கருதலே பொருந்தும். விளக்கம்: இதனைக் கேட்கும் தலைவன், தலைவி தன்னுடைய பரத்தைமை இழக்கக் கேட்டை அறிந்தாள் என்பது தெளிதலின், மேலும் அதனைத் தொடராது திருந்துவன் என்பதாம். 'நேர்தல் பெறினே' என்றது, அது பெறாததனைக் கூறியதாம். இது தலைமகன் பாகனிடம் சொல்வது போலப் படைத்துத் தலைவி நகையாடிக் கூறியதெனக் கொள்ளுல் இன்னும் சிறப்பாகும். 136. நாணில நீயே! துறை: வாயிலாய்ப் புகுந்து, தலைமகன் குணம் கூறிய பாணற்கு, வாயின் மறுக்கும் தலைமகள் சொல்லியது. (து.வி: தலைவனுக்கு ஆதரவாகத் தலைவியிடம் சென்று வேண்டுவானான பாணன். தலைவனின் உயர்குண நலன்களை எடுத்துக்கூறித், தலைவியிடம் மனமாற்றத்தை உருவாக்க முயல்கின்றான். அவனுக்கு, அவள் கூறும் பதிலுரையாக அமைந்த செய்யுத் இது.)
நாணிஇலை மன்ற, பாண! - நீயே கோணோர் இலங்குவளை நெகிழ்த்த கானலம் துறைவற்குச் சொல்லுகுப்போயே! தெளிவுரை: பாணனே! நீயோர் நாணமில்லாதவனாயினையே! கொள்ளுதல் அமைந்த அழகிய வளைகள் நெகிழுமாறு, பிரிவு நோயைச் செய்தவனாகிய கடற்கான்றஃ சோலைத் தலைவனின் பொருட்டாக வந்து, சொற்களை வீணாகவே உதிர்த்தபடி நிற்கின்றனையே! கருத்து: 'நின் பேச்சுப் பயனற்றது' என்றதாம். சொற்பொருள்: கோள் நேர் இலங்குவளை - கொள்ளுதல் அமைந்த அழகான வளைகள்; 'கொள்ளுதலாவது' செறிவாகப் பொருந்தி அமைதல். சொல் உகத்தல் - பயனின்றிச் சொற்களைச் சொல்லிப் பொழுதை வீணடித்தல். விளக்கம்: 'அவன் பொருந்தாத மனப்போக்கால வளைநெகிழ வாடியிருக்கும் என்முன்னே நின்று, அவன் குண நலன்களைப் போற்றிப் பலவாறு பேசுதலால், நீயோர் வெட்கங்கெட்டவன்' என்று சொல்லி, அவன் பேச்சை மறுக்கின்றாள் தலைவி. பொய்யெனத் தெளிந்தும் சொல்லலால் 'நாணிழந்தான்' ஆயினன். 'கான்றஃசோலைத் துறைவன்' இவ்வெம்மை விளைத்தல் இயல்பே என்னும் நுட்பமும் காண்க. வளை, கடற்கரைக்குரியதாகலின், அது நெகிழ்த்தல் அவன் தொழில் என்பதுமாயிற்று. 137. தம் நலம் பெறுவரோ? துறை: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும், அவன் முன்பு செய்து தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி 'இந்த வேறுபாடு ஏன்?' என்று வினவிய பாணற்கு, அவள் சொல்லியது. (து.வி.: பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து தலைவியின் புலவி நீக்கி இன்புற்றவனாகி, அவளைப் பிரிந்தும் எங்கோ போயிருந்தனன். அவன் முன்பு செய்த தீமையையே நினைந்து வாடியிருந்தாளே அல்லாமல், அவன் வந்து செய்த தண்ணளியால் அவள் சிறிதேனும் களிப்படைந்திலள். அதுகுறித்து வினாவிய பாணனுக்கு, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
நின்னொன்று வினவுவல், பாண! - நும்ஊர்த் திண்தேர்க் கொண்கனை நயந்தோர் பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே? தெளிவுரை: பாணனே! நின்னை ஒன்று கேட்பேன். அதற்கு நேரான விடையாகச் சொல்வாயாக. திண்மையான தேரினியுடைய நம் தலைவனை விரும்பியவரான பெண்களுக்கே, யாரேனும், தம் பழைய அழகினை, நும் ஊரிடத்தே இதுகாறும் அழியாதே பெற்றுள்ளார்களோ? கருத்து: 'அவனை விரும்பினார் நலன் கெடுதலே இயல்பல்லவோ' என்றதாம். விளக்கம்: 'திண்தேர்க் கொண்கன்' ஆதலின், அவன் பிறர் தம் வருத்தம் நோக்காது தன் போக்கிலேயே செல்லும் வன்மனமும் உடையன் என்கின்றான். 'நும் ஊர்' என்றது, தன்னை அவன் ஊரின் உறவினின்றும் பிரித்துக் கூறியது; அவனை மணந்து அவன் மனையாட்டியாகியவள் அவனூரைத் தன்னூர் என்றே கொள்ளல் இயல்பேனும், மனம் நொந்ததால் 'நும் ஊர்' என்றனள். 'பண்டைத் தம் நலம்' என்றது. அவனை நயந்து கூடுதற்கு முன்பு பெற்றிருந்த கன்னிமைப் பெருநலம். 'எவரும் தம் பண்டைநலம் பெறாதபோது, யான்மட்டும் பெறுதல் என்பது கூடுமோ?' என்பாள், அவன் செயலால், தானடைந்திருக்கும் வேதனையை உணர்த்துகின்றாள். 'நயந்தோர் பெறுபவோ' என்று, அவன் பெண்டிர் பலரென்பதும் உரைத்தாள். 138. பண்பிலை பாண! துறை: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. (து.வி.: தலைமன், தூது அனுப்பித் தலைவியின் இசைவு பெற்று வந்து, தலைமகளோடேயும் கூடியிருக்கின்றான். அஃதறியாதே வந்து, அவனுக்காகப் பரிந்து தலைவியிடம் வேண்டுகின்றான் பாணன். அவனுக்கு, அவள் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பண்பிஇலை மன்ற, பாண! - இவ்வூர் அன்பில கடிய கழறி, மென்புலக் கொண்கனைத் தாரா தோயே! தெளிவுரை: பாணனே! மென்புலத் தலைவனாகிய கொண்கனைக் கண்டு, அன்பில்லாதனவும் கடியத்தக்கனவுமான சொற்களைச் சொல்லியேனும், அவன் பொருந்தாத போக்கை மாற்றி, இவ்வூரிடத்தே எம்மனைக்கண் கொண்டு தராதிருக்கின்றவனாகிய பொறுப்பற்ற நீயும், மக்கட் பண்பான இரக்கம் என்பதே இல்லாதவன் ஆவாய் காண்! கருத்து: 'அவனைத் திருத்தும் நற்பண்பில்லாதவன் நீ' என்றதாம். சொற்பொருள்: பண்பு - பாடறிந்து ஒழுகும் இயல்பு. அன்பில கடிய - அன்பற்றவும் கடியவுமான சொற்கள். விளக்கம்: 'தலைவன் தவறான போக்கினனாகும் போதிலே, அவனை இடித்துப் பேசித் திருத்தி நடக்கச் செய்யுப் பண்பில்லாதவன் பாணன்' என்று கடிந்து சொல்கின்றாள் தலைவி. அவன் தவற்றொழுக்கினும் அவனையே சார்ந்து நின்று, அவன் பொருட்டு வாயிலாகவும் செயற்படும் பாணனின் போக்கைக் கடிந்து சொன்னது இதுவாகும். 139. நின்னின் பாணன் கொடியன்! துறை: ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. (து.வி.: தலைவியின் உறவை மறக்கவியலாத ஆற்றாமை நெஞ்சமே வாயிலாகத், தலைவனும் தன் மனைக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனைத் தேடியவனாகப் பாணனும் அங்கே வந்து சேர்கின்றான். அவனுக்குத் தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, கொண்க! எம்வயின் மாணலம் மருட்டும் நின்னினும் பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே. தெளிவுரை: கொண்கனே! எம்மிடத்தே பொருந்தியிருந்த சிறந்த நலத்தை எல்லாம் அலைக்கழிக்கும் நின்னைக் காட்டினும், நின் பாணன், தன் பேச்சாற் பிற பெண்டிரை மயக்கி நினக்குக் கூட்டிவைக்கும் அந்தச் செயலினாலே, பல பெண்களின் அழகு நலங்களை மிகவும் சிதைத்து வருகின்றான்! அவன் வாழ்க! கருத்து: 'அவன் என்று திருந்துவானோ' என்றதாம். சொற்பொருள்: மாண்நலம் - மாட்சி பொருந்திய அழகு நலம். மருட்டும் - அலைக்கழிக்கும்; சிதைக்கும். நல்லோர் - பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது; நல்லழகியர் என்பதாம்; இகழ்ச்சிக் குறிப்பு. விளக்கம்: 'என் நலன் ஒன்றே கெடுக்கும் நின்னினும், நினக்காகப் பல பெண்டிரை மயக்கி இசைவிக்கும் நின் வாயிலான இந்தப் பாணன் மிகவும் கொடியவன்' என்பதாம். 'நல்லவர் நலம் சிதைப்பவன் எவ்வளவு கொடியவன்?' என்று உலக வறத்தின்பால் இணைத்துக் கூறியதாகவும் கொள்க. 140. நீ சொல்லுதற்கு உரியை! துறை: பாணன் தூதாகச் செல்ல வேண்டும் கெறிப்பினளாகிய தலைமகள், அவற்குத் தன் மெலிவு காட்டிக் கூறியது. (து.வி.: தலைமகனை அடைய வேண்டும் என்னும் ஆசை வேகம் மிகுதியாகின்றது தலைவிக்கு. தலைவனைத் தேடியவனாக வீட்டின்பால் வந்த பாணனிடம், தன் மெலிவைக் காட்டி, தலைவனைத் தன்பால் வரத் தூண்டித் திருத்துமாறு இப்படிக் கூறுகின்றாள்.
காண்மதி, பாண! - நீ உரைத்தற் குரியை - துறைகெழு கொண்கன் பிரிந்தென இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே! தெளிவுரை: பாணனே! துறை பொருந்திய கொண்கன் பிரிந்தனனாக, சந்து பொருந்தி விளங்கும் எம் ஒளிவளைகள் நெகிழ்ந்து நீங்கிப் போயினதான இந்த அவல நிலைமையினைக் காண்பாயாக. எம் இந்நிலையினைத் தலைவனிடம் சென்று நீதான் சொல்லுதற்கு உரியை யாவாய்! கருத்து: 'என் மெலிவைச் சொல்லி அவரை வரச் செய்க' என்பதாம். சொற்பொருள்: துறை - கடற்றுறை. இறை - சந்து, கேழ் - பொருந்திய. எல்வளை - ஒளிவளை. விளக்கம்: தலைவன் சார்பினனே பாணன் எனினும், தன் மெலிவை நோக்கியாவது, தலைவனிடம் சென்று, தன் நலிவைப் பற்றிச் சொல்லி, அவனை இல்லத்திற்குத் திரும்புமாறு செய்வதற்கு வேண்டுகின்றாள் தலைவி. பரத்தையிற் பிரிந்தவழித் தலைவன் பாணனின் பேச்சையே பெரிதும் கேட்பவனாகிய மயக்கத்தோடு விளங்குவான்; ஆதலால், இவ்வாறு, அவனையே தனக்காக அவனிடத்தே தூது செல்ல வேண்டுகின்றாள் தலைவி. தலைவிபாலும் மதிப்பும் அன்பும் மிகவுடையனாதலின், பாணனும், அவள் நலமழியாது விளங்கத் தலைவனிடம் சென்று பரிந்துரைப்பான் என்றும் கொள்க. 'அவன் பிரிய இறைகேழ் எல்வளையும் பிரிந்தது' என்ற சொல்லிலே சோகம் அளவிறந்து புலப்படுதலையும் நினைக்க! பரத்தைமை உறவிலே தலைவனுக்கு வேண்டியவே செய்யும் வாயிலாகச் செயற்படுபவன் பாணனே! ஆகவே; அவன் செயலால் புண்பட்ட தலைவியேனும், தலைவனை அடைய விரும்பும் ஏக்கத்தின் மிகுதியினால், அந்தப் பாணனையே இப்படி உதவுதற்கு வேண்டும் அவலத்தையும் காண்கின்றோம். கலைக் குடிப் பாணன், குலமகளிரின் இல்லற அமைதியைக் கலைத்துக் கெடுக்கும் கொடியவனாகவும், தன் சுயநலத்தால் பண்பிழந்து நடக்கும் அவலத்தையும் காண்கின்றோம். அவனுக்கு ஒரு முதன்மையும் சில சமயம் இப்படி ஏற்பட்டு விடுவதனையும் பார்க்கின்றோம். |