உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 16 ... 5. ஞாழற் பத்து 'ஞாழல்' என்பது கொன்றை மர வகையுள் ஒன்று. கடற் கானற் கழிப்பகுதிகளிலே, மிகுதியாகக் காணப் பெறுவது. 'புலிநகக் கொன்றை' இது வென்பர். நெய்தல் நிலத்து மகளிர், இதன் நிழலிலே ஆடியும் பாடியும் இன்புறும் வழக்கத்தினர். இப்பத்துச் செய்யுட்களும் ஞாழல் தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன. ஆதலின், இதனை ஞாழற்பத்து என்று தொகுத்து அமைத்துள்ளனர் எனலாம். 141. பயலை செய்தன துறை! துறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. (து.வி.: வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்து போயின காலத்திலே, அந்தப் பிரிவையும் தாங்கமாட்டாது வருந்தி நலிகின்றாள் தலைமகள். அது குறித்து அவளைக் கேட்கும் தோழிக்கு, அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே! தெளிவுரை: நீர் கொண்டு வந்து இட்டதான மணல் மேட்டினிடத்தே, ஞாழலோடு செருந்தியின் பூக்களும் ஒருசேர மணங்கமழ்ந்திருக்க, குளிர்ந்த நீர்த்துறையானது தண்ணிய திவலையான நீர்த்துளிகளை எம்மேல் வீசிப், பயலை நோயினையும் செய்தது காண்! கருத்து: 'இயற்கையும் இன்ப வேட்கையை மிகுவித்தலால் ஏக்கமுற்று வாடலானேன்' என்றதாம். சொற்பொருள்: எக்கர் - நீர் கொண்டு இட்ட மணல்மேடு பயலை - பசலை நோய். பனிபடுதுறை - குளிர்ச்சியமைந்த நீர்த் துறை; கடற்கரையிடம். விளக்கம்: வரைவிடை வைத்த பிரிவென்று கொண்டு யான் ஆற்றியிருப்பேன். ஆயின், ஞாழலும் செருத்தியும் பூத்துப் பரந்த புதுமணமும், குளிர்ந்த நீர்த்துறையிலே அலைகள் என் மீது எறியும் நீர்த்துளிகளும், என் இன்ப நினைவை எழுப்பி, என்னைப் பெரிதும் வாட்டுகின்றனவே என்கின்றாள் தலைவி. ஞாழல் செருந்தியோடு கமழ்கின்றது, யான் அவரோடு சேர்ந்து மணக்கவில்லையே என்றதும் ஆம். மேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்கு, துறை இன்பமுடைத்தாகலன் வருத்திற்கு எனத் தலைவி கூறியது; சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குள் பாலை வந்தது (தொல். அகத், 9) என்பர் நச்சினார்க்கினியர். 142. என் கண் உறங்காவே! துறை: வரையாது வந்தெழுகும் தலைமகன், இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயில்தல் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (து.வி.: தோழியும் தலைவியும் வரைந்து கொள்ளலை வற்புறுத்திப் பல நாட் கூறியும், களவுறவையே வேட்டு, இரவுக் குறியிடத்தேயும் வந்து, தோழி அகன்று போவதற்குரிய ஒலிக்குறிப்பையும் செய்கின்றான் தலைவன். அதனைக் கேட்டாலும் கேளாதுபோல், தோழி, 'இப்படி உறக்கம் கெட்டால் நின்கதி யாதாகும்? நின் நலன் கெடுமே?; அதற்காகவேனும் அவனை மறந்து விடுவாய்' என்கிறாள் தலைவியிடம். அவள், தன் தோழிக்கு, அதற்கு விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது. இதனைக் கேட்பவள் வரைதலுக்கு விரைபவனாவான் என்பது தேற்றம்.)
எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப் புள்ளிறை கூரும் துறைவனை உள்ளேன் - தோழி! - படீஇயர் என் கண்ணே! தெளிவுரை: தோழி! மணல்மேட்டிலுள்ள ஞாழலின் தாழ்வான கிளைகளிலேயுள்ள பூங்கொத்துக்களிடையே, கடற்புட்கள் வந்து தங்கும் துறையினையுடைய நம் தலைவனை, நீ கூறியவாறே இனி நினையேன்! என் கண்களும் இனி உறங்குவனவாக! கருத்து: 'மறக்கவும் ஆற்றேன்; உறக்கமும் இழந்தேன்' என்றதாம். விளக்கம்: 'உள்ளேன்' எனவும் 'படீஇயர்' எனவும் சொன்ன சொற்கள், தன்னால் அவை இயலாமை குறித்தும், அதனால் கண்படுதல் வாயாமை சுட்டியும் சொன்னவாம். 'புள் இறை கூரல்'த்தம் இணையுடன் என்றும் கொள்க. உள்ளுறை: ஞாழலின் தாழ்ந்த பூச்சினைகள் புள்ளினம் வந்தமரத் தாம் வருந்திக் கெடுதலுறுமாறு போல, பிரிவென்னும் துயரம் என்பதால் வந்து தங்குதலாலே, யானும் படர்மிகுந்து வருந்தி நலிவேன் என்றதாம். புள்ளினமும் உரிய நேரத்தில் வந்து தங்குதலை அறிந்திருக்கத், தலைவன் நம்மை மணந்து நம்மோடு இல்லிருந்து வாழ்தலை அறியாதே போயினனே என்பதுமாம். 143. இனிய செய்து பின் முனிவு செய்தல் துறை: புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. (து.வி.: தலைவியைப் பிரிந்து பரத்தையில்லிலே சிலநாள் தங்கியிருந்தபின், மீண்டும், தன்மனைக்கு வந்த தலைவனுக்குத், தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை, இனிய செய்து! நின்று, பின் முனிவு செய்த - இவள் தடமென் தோளே! தெளிவுரை: எக்கரின் கண்ணுள்ள ஞாழலிடத்தே, புள்ளினம் ஆரவாரித்தபடியிருக்கும் அகன்ற துறையிமத்தே, இவளுடைய பெரியவான மென்தோள்கள், முன் களவுக் காலத்தே நினக்கு இனிமையைச் செய்து, பின்னர் இப்போதெல்லாம் நினக்கு வெறுப்பையும் செய்துள்ளனவே! கருத்து: 'நீதான் இவள்பால் இப்போது அன்பற்றவனாயினாய்' என்றதாம். சொற்பொருள்: புள்ளிமிழ் - புட்கள் ஆரவாரிக்கும். முனிவு - வெறுப்பு; அது பிரிவாற்றாமையினாலே அழகு கெட்டு மெலிந்ததனால் விளைந்தது. விளக்கம்: களவுக் காலத்தே, எக்கரிடத்து ஞாழற்சோலையிலே போற்றிக் கூடி மகிழ்ந்த நிகழ்ச்சியையும், அவன் இப்போது அவளை வருத்தி நலியச் செய்யும் கொடுமையையும், தலைவியின் தோள் நலத்தின்மீது சார்த்தித், தோழி இவ்வாறு வெறுப்புற்றுக் கூறுகின்றனள். 'தடமென் தோள்' பற்றிக் கூறியது, முன் அவனே வியந்து பாராட்டியதனைச் சொல்லிக் காட்டியதுமாம். உள்ளுறை: 'ஞாழலின் பூச்சினை வருந்தப் புள்ளினம் தங்கி ஆரவாரிக்கும்' என்றது, இவள் நின் பிரிவால் வருந்தி நலிய, நீயோ பரத்தையரோடு களித்திருப்பவனாவாய் என்றதாம். வரைவிடைப் பிரிவாயின், நீ நின் செயலிலேயே மனஞ்செலுத்தி இவளை மறந்திருப்பாய் என்றதாகக் கொள்க. பிறபாடம்: நின் துயில் துணிவு செய்த - இப்பாடத்திற்கு, முன் இவட்கு இனிய செய்த நின் முயக்கம், நீ புறத்துத் தங்கிவந்தாய் என்னும் நின் வேற்றுறவின் நினைவால், இதுகாலை வெறுப்பினைப் பயப்பதாயிற்றுப் போலும் என்று கூறினளாகக் கொள்க. 144. இனிப் பசலை படராது! துறை: 'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொருக்கமே விரும்பி ஒழுகா நின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாதது ஒழிய வேண்டும்' என்று தோழிக்குச் சொல்லியது. (து.வி.: தலைவன் சொல்லிச் சென்றவாறு வரைந்து வந்திலன் என்று வருந்தியிருக்கின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் சொற்பிழையானாய் வந்து, நின்னை முறையே மணப்பான் என்று தோழி சொல்லித் தேற்ற முயல்கின்றாள்.)
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குரு குறங்கும் துறைவற்கு இனிப்பசந் தன்று - என் மாமைக் கவினே! தெளிவுரை: எக்கரிடத்தே, ஞாழலின் பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைக் கண்ணே, துணை பிரிந்து தனிமைப்பட்ட குருகானது உறக்கங்கொள்ளும் துறைவனின் பொருட்டாக, என் மாமைக்கவின், இப்போது பசப்பெய்துவதாயிற்றே! கருத்து: 'இதுகாறும் சொற்பேணாதவன் இனியுமோ பேணுவான்?' என்றதாம். சொற்பொருள்: பொதும்பர் - சோலை. தனிக்குருகு - துணைபிரிந்து தனித்திருக்கும் குருகு. உறங்கும் - தூங்கும். மாமைக் கவின் - மாந்தளிரனையை கவின். விளக்கம்: 'எக்கர் ஞாழல்இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும்' துறைவனாதலின், நம்மையும், நாம் அளித்த இன்பத்தையும், அன்பையும் அறவே மறந்தானாய்த், தனித்து வாழ்தல் அவனுக்கு எளிதுதான். ஆயின், அவனை நினைந்து நினைந்து என் மாமைக்கவினும் இப்போது பசந்து போயிற்றே! இதற்கு யாது செய்வாம்? என்பதாம். 'இப்போது பசந்தது' என்றது, முன்னர், அவன் சொல்லை வாய்மையாகக் கொண்டு ஏமாந்திருப்பேமாகிய நம்நிலை அறியாமல், 'அவன் புதுவதாகச் சொன்ன உறுதியை நம்பி வந்து நீ கூறுதலால்' என்று கொள்ளலாம். உள்ளுறை: 'எக்கர் ஞாழல் குருகு தனித்து உறங்கும்' என்றது, காலம் வாய்த்தவிடத்தும் வரைந்து கொண்டு ஒன்றுபட்டு வாழ்தலை நினையாதே, தனித்துறைதலையே விரும்பும் இயல்பினன் தலைவன் என்றதாம். 145. பசலை நீக்கினன் இனியே! துறை: வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றல், சான்றோரைத் தலைமகன் விடுத்ததறிந்த தோழி, தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது. (து.வி.: தலைவன் வரைந்து வந்தபோது, தலைவியின் தமர் இசைவளிக்காதே மறுத்துப் போக்கினர். அவன், அதன் பின், அவர் உடம்படுமாறு சான்றோரை அவர்பால் விடுக்கின்றான். அவர் வரத் தமரும், உடம்படுகின்றனர். இஃதறிந்த தோழி, தலைமகள் கேட்க, அச்செய்தியைக் கூறுகின்றாள்.)
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன், இனியே! தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளையைக் கடல்நீர் வளைக்கும் துறைவன், இப்போது, மாமை நிறத்தாளான இவளின் பசலை நோயினையும் நீங்கிச் செய்தனனே! கருத்து: 'இவள் இனி இன்பமே காண்பாள்' என்றதாம். சொற்பொருள்: ஓதம் - கடல்நீர் - வளைத்துக் கொள்ளும். மாயோள் - மாமைக் கவினுடையாளான தலைவி. நீக்கினன் - நீங்கச் செய்தனன். விளக்கம்: கடல்நீர் பொங்கியெழுந்து மோதுதலால், ஞாழலின் பெருஞ்சினையும் வளைந்து தாழும் என்றது, அடிமண் அரிப்புறலால் என்று கொள்க. இவ்வாறே தலைவியின் தருமம் சான்றோரின் பேச்சுக்களால் தம் உறுதியினைத் தளர்த்தினராக, வரைவுக்கு உடன்பட்டனர் என்றும் கொள்க. 'நீக்கினன்' என்று இறந்தகாலத்தாற் கூறினாள், நீங்குதல் விரைவிலே நிகழும் என்னும் உறுதி பற்றியதாகும். 'இறந்தகாலம் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள் எம்னமனார் புலவர்' என்ற விதியைக் காண்க. (தொல். சொல், 243). உள்ளுறை: ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, தன் வழி வராத தலைவியின் சுற்றத்தாரைச் சாற்றோர் மூலம் தன் வழியாக்கும் உறதியினன் தலைவன் என்று கூறி, அவன் உறுதிக்கு வியந்ததாகும். இதனைக் கேட்கும் தலைவியும், தன் மனக்கலக்கம் நீங்கி மகிழ்வடைவாள் என்பதாம். 146. கவின் இனிதாயிற்று! துறை: வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, 'நம்மை எவ்வளை நினைத்தார் கொல்லோ' என்று ஐயுற்றிருந்த தலைமகள், வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. (து.வி.: வரைவினைத் தலைவி பலகால் வேண்டியும், தலைவன் வரையாதே ஒழுகிவர, அதனால் 'அவன் நினைவுதான் என்னவோ?' என்று வேதனைப்பட்டிருந்தாள் தலைவி. ஒருநாள், அவன் வரைவொடு தன் மனைக்கண் வரக்கண்டவள், தோழிக்கு மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர் நறிய கமழும் துறைவற்கு இனிய மன்ற - எம் மாமைக் கவினே. தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் அரும்பு முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துக்கள், நறுமணம் கமழ்கின்ற துறைவனுக்கு, எம் மாமைக்கவின் இனிமையானதே காண்! கருத்து: 'அவன் என்னை விரும்புவோனே' என்பதாம். விளக்கம்: ஞாழல் அரும்பு மலர்ந்து மணம் வீசும் தறைவன் ஆதலின், அவன் மனமும் நம்மை மணந்து கொள்வதை மறந்திலது என்கின்றனள். உள்ளுறை: ஞாழல் அரும்பு முதிர்ந்து அவிழ் இணர் நறிய கமழுமாறுபோல, அவன் அன்பும் முறையாக நிரம்பி வெளிப்பட்டு, இப்போது மணமாகவும் உறுதிப்பட்டது என்பதாம். அரும்பு முதிர்ந்து அவிழ்ந்த இணர் நறுமணத்தைத் துறையிடமெல்லாம் பரப்பல்போல, அவன் முயற்சி நிறைவுற்று மணம் வாய்த்தலால், அனைவரும் மகிழ்வெய் தினம் என்பதுமாம். 147. நாடே நல்கினன்! துறை: சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல்லியது. (து.வி.: தலைமகன் தன் காதலியின் பெற்றோரை வரைவொடு வந்த சான்றோருடன் அணுகுகின்றான். பெற்றோரும் அவந்து வரவேற்று அவளை மணத்தால் தருவதாயின், இன்னின்ன எல்லாம் வரைபொருளாகத் கருதல் வேண்டும் என்கின்றனர். அவற்றை அளித்துர, அதன்மேலும் தந்து அவரை மகிழ்விக்க, அவர்கள் அவன் மாச்டி போற்றி உவகையோடு இசைகின்றனர். இதனைக் கண்ட தோழி, உள்வீட்டில் இருக்கும் தலைவியிடம் சென்று, உவகை ததும்பக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் மலரின் மகளிர் ஒண்தழை அயரும் துறைவன் தண் தழை விலையென நல்கினன் நாடே. தெளிவுரை: மகளிர்கள், எக்கரிடத்து ஞாழலின் மலர்களைக் காணாமையாலே, அதன் ஒள்ளிய தழைகளைக் கொய்து தொடுத்த தழையுடையினை அணிந்தவராக விளையாட்டயரும் துறைவனான நம் தலைவன், நினக்குரிய தண்ணிய தழையுடையின் விலையாகத், தனக்குரிமையான ஒரு நாட்டையே நல்கினானடீ! கருத்து: 'நினக்காக அவன் எதனையும் தருபவன்' என்ற தாம். சொற்பொருள்: அயர்தல் - வினையாடி மகிழ்தல் தழைவிலை - மணப் பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் உரைப்பர். நாடு - அவன் வென்று கொண்ட நாடுகளுள் ஒன்றென்க; அவன் உயர்வும் இதனால் விளங்கும். விளக்கம்: தலைவியின் தமர் கேட்பவெல்லாம் தந்து களிப்பித்தவன், 'இந்நாடும் கொள்க' என்று அளிக்கவும், அவன் மாட்சியறிந்த அவர், அவனைப் போற்றி மகளைத் தர உடனேயே இசைந்தனர் என்பதாம். அத்துடன், அவன் அத்தகு வளமான பெருங்குடியினன் என்பதும், தலைவி மாட்டுப் பெருங்காதலினன் என்பதும் அறிந்து போற்றினர் என்பதுமாம். உள்ளுறை: ஞாழலிலே மலரில்லாமை கண்ட மகளிர் அதன் பசுந்தழையைக் கொய்து தழையுடையாக்கிக் கொண்டாற்போல, நினக்கு முலைவிலையாக உலகையே தருதற்கான உள்ளத்தானெனினும், அஃதில்லாமையாலே, தன்பாலிருந்த நாட்டை மட்டும் நல்கினன் என்று கொள்க. 148. நீ இனிது முயங்குவாய்! துறை: களவொழுக்கத்தின் விளைவறியாது அஞ்சிய வருத்தம் நீங்கக், கரணவகையான் வதுவை முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி, சொல்லியது. (து.வி.: 'தான் கொண்ட வதுவையில் முடியுமோ?' என்று கவலையுற்று வாடிய வருத்தம் நீங்கக், கரணவகையால் ஊரும் உறவும் களிகொள்ளத் தலைவியின் வதுவையும் நிறைவு செய்தியது. அதன்பின், தலைமகளைத் தலைவனுடன் இன்புற்று தோழி, உவகையோடு, அவளை வாழ்த்திச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை வீயினிது கமழும் துறைவனை நீயினிது முயங்குமதி காத லோயே! தெளிவுரை: அன்புடையாளே! எக்கர் ஞாழலினிடத்தே, வரம்பு கடந்து ஓங்கும் பெரிய சினையிடத்தே பூத்த பூக்கள், இனிதாக நாற்புறமும் மணம் கமழும் துறைவனை, இனி, நீதான் இனிதாகத் தழுவி இன்புறுவாயாக! கருத்து: 'இனி ஏதும் துனி இடைப்படுதல் இல்லை' என்பதால், 'இனிது முயங்குமதி' என்கின்றனள், களிப்பால். சொற்பொருள்: வீ - பூ. இகந்து படல் - வரம்பு கடந்து உயரமாக விளங்கல், பெருஞ்சினை - பெரிய கிளை. முயங்கல் - தழுவி இன்புறல். விளக்கம்: தாழ்ந்துபடு சினைகளின் மலர்களை மகளிர் தம் துழையுடையில் தொடுத்தற்கும், கூந்தலிற் சூடற்கும் கொய்து போயினபோதும், பெருஞ்சினையிலுள்ள பூக்கள் மணம் பரப்பி நிற்கும் துறைக்குரியான் என்கின்றாள். அதன் மணம் இனிது எங்கணும் மகழ்தல் போல, நின் மணவாழ்வும் இனிதாகப் பலரும் வியக்க அமைக என்றதாம். 'காதலோய்' என்றது, தன் அன்புத் தோழியாதலாற் கூறியது; அல்லது, 'தலைவன் மாட்டு ஆராக் காதலுடையாளே! நீ, அவனை இனிது முயங்கி இனி இன்புறுவாயாக!' என்று வாழ்த்தியதுமாம். உள்ளுறை: நிலைகடந்த பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவன் என்றது, அவனும் நம் தமர் விரும்பிய வெல்லாம் தந்து களிப்பித்து, நின்னை முறையாக வதுவை செய்து கொண்ட வரம்பிலாப் பெருங்காதலன் என்றதாம். முன் செய்யுளின் 'நல்கினன் நாடே' என்பதனோடு சேர்த்துப் பொருள்நயம் காண்க. பெருஞ்சினை வீ இனிது கமழுதல் போலப் பெருங்குடியினனான அவனும் இனிதே நடந்தனன் என்றுதுமாம். 149. அணங்கு வளர்த்து அகலாதீம்! துறை: வரைந்து எய்திய தலைமகன், தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. (து.வி.: வரைந்து மணந்து கொண்டபின், தலைமகனும் தலைமகளும் பள்ளியிடத்து இருந்துவிடத்தே, அவர்களின் களவுக் காலத்துக்கு உறுதுணையாயிருந்த தோழி, தலைவனை வேண்டி வாழ்த்துவதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு அணங்கு வளர்த் தகறல் வல்லா தீ மோ! தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் பூவைப்போலச் சுணங்குகள் படர்ந்துள்ள, இளைய முலைகளுடைய மடந்தையான இவளுக்கு, வருத்தத்தை வளரச் செய்து, இவனைப் பிரிதலை ஒருபோதும் மேற்கொள்ளாதிருப்பீராகுக! கருத்து: 'என்றும் பிரியாது இவளை இன்பமாக வைப்பீராக' என்றதாம். சொற்பொருள்: சுணங்கு - அழகுத்தேமல்; ஞாழற்பூவின் அன்ன சுணங்கு என்றதால், இளமஞ்சள் நிறத்துப் பொட்டுப் பொட்டாகப் படர்ந்து அழகு செய்வது என்க. இளமுலை - இளமைக் கவின் கொண்ட முலை. அணங்கு வளர்த்தல் - வருத்தம் வளரச் செய்தல். வல்லாதீமோ - வன்மையுறாதிருப்பீராகுக. விளக்கம்: 'வல்லாதீமோ' என்றது, அத்தகு வன்கண்மை என்றும் பேணாது ஒழிவீராக என்றதாம். 'சுணங்குவளர்' இளமுலை மடந்தைக்கு அணங்கு வளர்த்தலைச் செய்யாதீராகுக என்று சொல்லும் சொல் நயத்தோடு, மனமுவந்து வாழ்த்தும் மனத்தையும் காண்க. அருமையான திருமண வாழ்த்துக்கள் இவை. மேற்கோள்: தலைவனைப் பாங்கி வாழ்த்துதலுக்கு எடுத்துக் காட்டுவார் நம்பியுரைகாரர் - (கற்பு - 4). 150. புணர்வின் இன்னான்! துறை: முன்பொருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்துழி, அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?' என்று வினவிய தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. (து.வி.: முன்பொருகாலத்துத் தலைவி வருந்துமாறு பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து அவளைத் தெளிவித்துக் கூடியின்புற்றிருந்தான். அவளும், அவன் தன் சபலத்தை மறந்தான் என்று மனநிம்மதி பெற்றாள். மீண்டும் அவள் வாடப் பிரிந்து போய்த் திரும்பவும் வந்து அவளை முயங்க விரும்பினான் தலைவன். அவள் அவன் முயக்கிற்கு விரும்பாது ஒதுங்கினாள். 'ஏன் இவ்வாறு செய்தனை?' எனத் தோழி வினவ, அவளுக்குத் தலவி, தலைமகனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே! தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் நறியமலர் களையுடைய பெருங்கிளையானது கடல்லைகளைச் சென்று தழுவி இன்புறுகின்ற துறைவன் நம் தலைவன். அவன் நம்மைப் புணரினும், அதனால் இன்பமளித்தலாயமையாது, தொடரும் பிரிவின் நினைவாலே எமக்குத் துன்பந் தருபவனாகவே இருப்பான்; மேலும், எப்போதோ நம்மை அருமையாக வந்து கூடிச் செல்பவன் அவன்; தழுவலை இன்றும் பெறாததால் யாதும் எமக்கு வருத்தமில்லை காண்! கருத்து: 'அவன் அணைப்பிலே இன்பம் கொள்ளேன்' என்றதாம். சொற்பொருள்: புணரி - கடல் அலை. திளைக்கும் - அலையைத் தழுவித் தழுவி மகிழ்ந்தாடும். புணர்வின் - புணர்ச்சிக் காலத்தில், அரும்புணர்வினன் - அருமையாக எப்போதோ வந்து சேர்பவன். விளக்கம்: இதனால், அவன் நாட்டமெல்லாம், பரத்தையர் பாலேயாக, அவன் ஊர்ப்பழி கருதியே எம்மையும் நாடி வளருவானேயன்றி, எம்மை முற்றவும் மறந்துவிட்ட அன்பிலாளனே காண் என்றனளாம். உள்ளுறை: எக்கர் ஞாழல் நறுமலரப் பெருஞ்சினையானது புணரியால் மோதுண்டு திளைக்கும் துறைவன் என்றது, அவ்வாறே நிலைஆன மனையற வாழ்விலே நில்லாது, பரத்தையரால் தழுவப் பெற்றுத் தன் பெருமையும் பொருளும் சிதைப்பதிலே ஈடுபடும் இயல்பினன் தலைவன் என்றதாம். நறுமலர்ப் பெருஞ்சினையை அலைகள் வந்து மோதி மோதிச் செல்வதுபோல, அவனும் நம்பால் நிலையாகத் தங்கி வாழானாய், வந்து வந்து பிரிந்து போகும் வாழ்க்கையன் என்றும் கொள்ளலாம். பிறபாடம்: புணர்வின் அன்னான். குறிப்பு: இச்செய்யுட்களுள், 48, 49ஆம் செய்யுட்கள் தோழியர் திருமண மக்களை உவந்து வாழ்ந்தும் சிறந்த வாழ்த்தியல் உரைகளாகவும் விளங்குகின்றன. அவை,
'நீ இனிது முயங்குமதி காத லோயோ' எனத் தலைவியை வாழ்த்துவதும்,
'அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமே' எனத் தலைவனை வாழ்த்துவதும் ஆகும். இவை நல்ல அறவுரைகளும் ஆகும். 'தலைவனோடு இனிதாகக் கலந்திருந்து வாழ்க' என்பதில், அவனை இன்புறுத்தியும் அதிலே நீயும் இன்புற்றும், அவனைப் புறம்போக நினையாவாறு காத்தும் இனிது வாழ்க' என்னும் கருத்தும் காணப்படும். 'பிற ஆடவர் போல நயும் இவளைப் பிரிவால் நலியச் செய்து வருத்தமுற வாட்டாதே, என்றும் கூடியிருந்து மகிழ்விப்பாயாக' என்னும் கருத்து, தலைவனை வாழ்த்தும், 'அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமே' என்பதால் புலப்படும். அன்புத் தோழியரின் இந்த நெருக்கமான அன்புடைமை இல்லாதபோதும், இன்றும் மணமனையில், 'தோழியர்தாம் மணப்பெண்ணுக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சிகட்கு உதவுகின்றனர். இது இந்தப் பழமையிலேயிருந்து வந்த எச்சமேயெனலாம். |