சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 17 ...

6. வெள்ளாங் குருகுப் பத்து

     வெள்ளாங் குருகின் செய்திகள் வந்துள்ள பத்துச் செய்யுட்களைக் கொண்டமையால், இப்பகுதி இப் பெயரினைப் பெற்றுள்ளது.

     'துறைபோது அறுவைத் தூமடியன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகு' என, நற்றிணை இக்குருகினை நமக்கு அறிமுகப்படுத்தும். கடற்கரைகளில் மிகுதியாகக் காணப்பெறும் கடற்பறவை வகைகளுள் இவையும் ஒன்று.

     ''வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை'' என்னும் இரண்டு அடிகளும் பத்துச் செய்யுட்களினும் தொடர்ந்து வருகின்றன.

     வெள்ளாங் குருகு என்றது பரத்தையாகவும், பிள்ளை என்றது, அவளோடு தலைமகனுக்கு உளதாகிய ஒழுக்க மாகவும், காணிய சென்ற மடநடை நாரை என்றது வாயில்களாகவும், செத்தென என்றது அவ்வொழுக்கம் இடையிலே நின்றதாக எனவும் பொதுவாகக் கொண்டு-

     தலைமகன் ஒரு பரத்தையோடு மேற்கொண்டிருந்த ஒழுக்கமானது இடையிலே நின்றுவிட்டதாக, மீண்டும் அவள் உறவை நாடிய தலைவன் வாயில்கள், அவளிடம் சென்று பேசி, அவளது நெஞ்சம் நெகிழ்த்த தலைவன்பாற் செல்லுமாறு நயமாகச் சொல்லுவதாகவும் உள்ளுறை பொருள் கொள்ளல் வேண்டும்.

     இவ்வாறு பழைய உரையாளர் விளக்கி, இதற்கேற்பவே பொருள் கொள்வர். உரைப் பெருகும் பேராசிரியரான சித்தாந்தச் செம்மல் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்களோ, 'செத்தென' என்பதற்குப் 'போலும்' என்று பொருள்கொள்வர்.

     'வெள்ளாங்குருகின் பிள்ளையைத் தன் பிள்ளையென்று கருதியதாய்க் காணச் சென்ற மட நடை நாரை' என்பது அவர்கள் கொண்டது. இதற்கேற்பவே அவர்கள் விரிவான பொருளையும் இயைபுபடுத்திக் கூறுவார்கள்.

     'வெள்ளாங்குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநட நாரை' என்று நேராகவே பொருள் கண்டு இத்தெளிவுரையானது செல்கின்றது.

     தலைவன் ஊர்த்தலைவன் என்னும் பெருநிலையினன் ஆதலின், அவன் உறவாலே அடையும் பயன்களை நாடும் பரத்தையர், அவனை எவ்வாறு தமக்கு வசமாக்க முயல்கின்றனர். அவன் கலையார்வம் மிகுந்தவனாதலின், பாணன் ஒருவனும் அவனோடு பழகி வருகின்றான். அவன் பரத்தையர் குடியிற் பிறந்தவனே. அவனும், தலைவனின் பரத்தமை உறவாலே தானும் பயனடையலாம் என்று நினைத்து வருகின்றவனே!

     ஊர் விழாக்களிலும், கடலாடு விழாக்களிலும் பரத்தையர்கள் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்விப்பர். ஊர்த்தலைவன் என்ற முறையில், தலைவனும் அவ்விழாக்களில் அவர்களோடு கலந்து கொள்வான். அவ்வேளையிலே இளையாள் ஒருத்தியைச் சுட்டிக்காட்டி,அ வள் தன் உறவினள் எனவும், தலைவனை அடைவதையே நாடி நோற்பவள் எனவும் அறிமுகப்படுத்துகின்றான் பாணன்.

     பின்னொரு சமயம், தலைவனின் இன்ப நுகர்ச்சியார்வம் அடங்காமல் மேலெழவும், அவன் மனம் பரத்தையர் உறவை நாடுகின்றது. அவ்வேளை பாணன் காட்டிய பெண்ணின் நினைவும் மேலெழுகின்றது. அவனைப் பாணன் உதவியோடு காணச் செல்லுகின்றான். சேரிப்பெண்டிர் பலர் அவனைக் கவர்கின்றனர். ஒருவரை மாற்றி ஒருவர் என்ற நிலையில் அவன் தாவிக் கொண்டிருக்கின்றான்.

     இந்நிலையில், முன் நுகர்ந்து கைவிட்ட ஒருத்தியின் நினைவு ஒரு நாள் மிகுதியாக, அவளிடம் வாயில்களை அனுப்புகின்றான். இவன் செயல் ஊரே பழிப்பதாகின்றது.

     மீண்டும் தலைவியை நாடுகின்ற மனமும் ஏற்படுகின்றது. அவளும் அவள் தோழியும், அவன் உறவை ஏற்க மறுத்து வெறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுட்கள் இவை எனலாம்.

151. நெக்க நெஞ்சம் நேர்கல்லேன்

     துறை: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது.

     (து.வி.: தலைவனை ஏற்றுக்கொள்வாய் என்று தன்னை வந்து வேண்டிய தன் தோழிக்குத், தலைவியானவள் அதற்கு இசைய மறுப்பாளாகச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     மிதிப்ப, நக்க கண்போல் நெய்தல்
     கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
     நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே!

     தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது மிதிப்பவும், அதன் மடச்செயலைக் கண்டு நகைப்பதுபோல மலர்ந்த கண் போன்ற நெய்தலின் தேன்மணம் இடைவிடாதே கமழும் துறைவனுக்கு, நெகிழ்ந்து நெகிழ்ந்து வலியிழந்து போன நெஞ்சத்தினையுடையளான நான், அவரை ஏற்றலாகிய அதற்கு இனியும் இசையேன்!

     கருத்து: 'அவரை இனியும் ஏற்பதில்லேன்' என்பதாம்.

     சொற்பொருள்: மடநடை - மடமையோடு கூடிய நடை; கால் மடங்கி நடக்கும் நடையும் ஆகும். நக்க - நகையாடிய, கள் - தேன். நெக்க - நெகிழ்ந்து சிதைந்த. நேர்கல்லேன் - இசையேன். பிள்ளை - பறவைக்குஞ்சின் பெயர். நாரை - நீர்ப் பறவை வகை; நாரம் (நீர்) வாழ் பறவை நாரையாயிற்று; நாரணன் என வருவதும் காண்க.

     விளக்கம்: செத்தென - போலும் என்று; செத்ததென்று எனலும் பொருந்தும். அப்போது, மரத்திலே உடன்வாழ் உறவு நெருக்கத்தால் சாவு விசாரிக்கச் சென்றதென்று கொள்க. மடநடை - நடைவகையுள் ஒன்று; கடுநடை தளர்நடை போல்வது; இது கால் மடங்கி நடக்கும் நடை. நக்க - நகைத்த; இது நெய்தல் இதழ்விரிந்து மலர்ந்திருத்தலைச் சுட்டியது; அது மலர்தல், நாரையின் செயல்கண்டு நகைப்பது போலும் என்க. கள் - தேன்; தேனே பண்டு கள்ளின் மூலப்பொருளாயிருந்தது.

     'நெக்க நெஞ்சம் நேர் கல்லேன்' என்பதற்கு, 'நெகிழ்ந்து வலியற்றுப் போயின நெஞ்சினளான யான், இனியும் அவனை விரும்பி ஏற்கும் ஆர்வநிலையினள் அல்லேன்' என்பதாகக் கொள்க.

     உள்ளுறை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலும் என்று அருளோடும் காணச்சென்ற நாரையின் மடச் செயலைக் குறித்தும் கண்போல் நெய்தல் நகையாடி மலர்ந்தாற்போல, இன்னார் உறவல்லோ என்னும் அருளாற் சென்ற தலைவன், அப்பரத்தைபால் மயங்கி நடந்துகொண்ட நிகழ்ச்சியைக் குறித்து ஊர்ப்பெண்டிர் நகையாடினார் என்பதும், மலர்ந்த நெய்தலின் தேன்மணம் துறையிடமெங்கும் கமழ்தலே போல, அவர் கூறும் பழிச் சொற்களும் ஊர் எங்கும் பரவி நிறைந்தன என்பதும் உள்ளுறுத்துக்கூறி, அதனால் தலைவனைத் தான் ஏற்க மறுப்பதாகத் தலைவி கூறினதாகக் கொள்க.

     மேற்கோள்: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது; திணை மயக்குறுதலுள் இப்பத்தும், நெய்தற்கண் மருதம் என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12).

152. அறவன் போலும்

     துறை: தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையன்; ஆதலால், நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி வாயில் நேர்விக்கும் தோழிக்கு, அவள் சொல்லியது.

     (து.வி.: பரத்தையாளனான தலைவனின் பொருட்டாக வந்த வாயில்களிடம் தலைவி இசைவுமறுத்துப் போக்கி விடுகின்றனள். அது கண்ட தோழி, அவன் பிழையாதாயினும், அவன் நின்பால் அன்பும் உடையவன்; நின் உறவையும் விடாதே தொடர்பவன்; ஆகவே ஒதுக்காது ஏற்றின்புறுத்தலே தக்கது என்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லும் விடையாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     கையறுபு இரற்று கானலம் புலம்பந்
     துறைவன் வரையும் என்ப;
     அறவன் போலும்; அருளுமார் அதுவே!

     தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது, அது அதன் பிள்ளையில்லாமை நோக்கிச் செயலற்று ஒலித்தபடி இருக்கும் கானலைச் சேர்ந்த கடற்றுறை நாட்டின் தலைவன், அவனையும் போய் வரைந்து கொள்வான் என்பார்கள் அவன் என்றாப் கொண்டுள்ள அருளுடைமையும் அச்செயலே! அவன் துணையற்ற பரத்தையர்க்குத் துணையாகி உதவும் அறவாளன் போலும்!

     கருத்து: 'அன்பும் அறமும் மறந்தானுக்கு அகம் கொள்ளேன்' என்றதாம்.

     சொற்பொருள்: கையறுபு இரற்று - செயலற்றுத் துயரக் கூப்பீடு செய்யும் இரற்று கானலம் புலம்பு - அவ்வொலி கேட்டபடியே இருக்கும் கான்றஃசோலையைக் கண்ட கடற்கரை நிலப்பாங்கு புலம்பு கடல் நிலம். அறவன் - அறநெறி பேணுவோன்; அருள் - அனைத்துயிர்க்கும் இரங்கி உதவும் மன நெகிழ்ச்சி.

     விளக்கம்: குருகின் பிள்ளைபோலும் எனக் கருதிக் காணச் சென்ற நாரையானது, அவ்விடத்தே துயருற்று அரற்றும் குரலொலி கேட்டபடியே இருக்கும் கானற்சோலை என்க. 'வரையும்' என்ப என்றது. தான் விரும்பிய பரத்தையை வரைந்து இற்பரத்தையாக்கிக் கொள்ளப் போகின்றான் எனப் பிறர் கூறிய செய்தியாகும். அவனோ அறவன், அவன் அருளும் அதுவே அன்றோ? எனவே, அவனை இனி யான் விரும்பேன் என்கின்றனள்.

     உள்ளுறை: தான்றிந்தாளின் உறவல்லளோவென்று அருளோடு காணச் சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி மீளவகையின்றி அரற்ற, அக்குரல் ஊரெல்லாம் ஒலிக்கும் அலராயிற்று என்று உள்ளுறுத்துக் கூறுவாள், 'காணிய சென்ற மடநடைநாரை கையறுபு இரற்று கானல் அம் புலம்பு அந்துறைவன்' என்கின்றனள்.

     மேலும் அவன், அவளை வரைந்து உரிமையாக்கிக் கொள்ளப் போவதையும் சொல்லி, அவன் தன்பால் அருளற்றவனானதையும், கொண்ட மனையாளை நலிவிக்கும் அறமிலாளன் ஆயினமையும் சொல்லித், தான் அவனை ஏற்க விரும்பாத மனநிலையையும் விளக்குகின்றாள் தலைவி என்று கொள்க.

153. நாடுமோ மற்றே!

     துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றல், வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி கூறியது. வாடி இருக்கின்றான் தலைவன். அவன் அவளைச் சினந்தணிவித்துத் தன்னை ஏற்குமாறு விட்ட வாயில்களையும் மறுத்துப் போக்கினாள். தன் குறையுணர்ந்த தலைவன். அவற் விருப்பம் மேலெழ, தன் வாயிலோரை முன்போக இல்லததுள் போக்கித், தான் அங்கு நிகழ்வதை அறியும் விருப்போடு புறத்தே ஒதுங்கி நிற்கின்றான். வாயிலோரை எதிர்வந்து தடுத்த தோழி, அத் தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுத் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     கணிய சென்ற மடநடை நாரை
     உளர வொழிந்த தூவி குவவுமணற்
     போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
     நன்னெடுங் கூந்தல் நாடுமோ மன்றே!

     தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளையோ எனக் காணச் சென்ற மடநடை நாரையானது, அங்கே அதனைக் காணாத துயரத்தாலே கோதிக் கழித்து தூவிகள் , உயர்ந்த மணல் மேட்டிடத்தே நெற்போர்போலக் குவிந்திருக்கும் கடற்றுறைக்கு உரியவனான தலைவனின் கேண்மையினை, நல்லநெடிய கூந்தலை உடையவளான தலைவி தான், இனியும் நாடுவாளோ?

     கருத்து: 'அவள் நாடாள் ஆதலின், நாடுவார்பாலே செல்லச் செல்லுக' என்பதாம்.

     சொற்பொருள்: உளர - கோத; ஒழிந்த - கழித்து வீழ்ந்த, குவவு மணல் - காற்றால் குவிக்கப் பெற்று உயர்ந்த மணல்மேடு. போர்வில் பெறூஉம் - நெற்போர் போலக் குவிந்து கிடக்கும். நன்னெடுங் கூந்தல்; தலைவியைச் சுட்டியது. நாடுமோ - விரும்புமோ?

     விளக்கம்: வெள்ளாங் குருகின் குஞ்சோவெனக் காணச் சென்ற நாரை தன் இறகைக் கோதிக் கழிக்க. அதுதான் போர் போல மணல் மேட்டிற் குவிந்து கிடக்கும் என்பது, அதன் துயர் மிகுதி கூறியதாம். கேண்மை - கேளாம் தன்மை; உறவாகும் உரிமை.

     உள்ளுறை: 'நாரை உளர வொழிந்த தூவி போர்வில் பெறூஉம் துறைவன்' என்றது, பரத்தைபால் அருளோடு சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி வாரியிறைத்த பொன்னும் பொருளும் அளவில என்பதாம்.

     குறிப்பு: 'நாணுமோ மற்றே' எனவும் பாடம்.

154. இவ்வூரே பொய்க்கும்!

     துறை: தோழி வாயில்வேண்டி நெருங்கிய வழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

     (து.வி.: பரத்தையிற் பிரிந்து வந்தானை, நின்பால் வரவிடுக என்று தலைவியிடம் சொல்லுகின்றாள் தோழி. 'அவனை வரவிடேன்' என்று மறுக்கும் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     கானற் சேக்கும் துறைவனோடு
     யானஎவன் செய்கோ? பொய்கும் இவ்ஊரே?

     தெளிவுரை: 'வெள்ளாங் குருகின் பிள்ளையோ' எனக் கருதிக் காணச் சென்ற மடநடை நாரையானது, கானலிடத்தே தங்கியிருக்கும் துறைவனோடு, யான் என்னதான் செய்வேனோ? இவ்ஊரும் அவனைக் குறித்துப் பொய்த்துப் பேசுகின்றதே!

     கருத்து: 'அவன்பால் எவ்வாறு மனம் பொருந்துவேன்' என்றதாம்.

     சொற்பொருள்: கானல் - கானற் சோலை. சேக்கும் - தங்கும். பொய்க்கும் - பொய்யாகப் பலவும் கூறும்.

     விளக்கம்: 'யான் எவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே' என்றது, இவ்வூரனைத்தும் கூடிப் பொய் சொல்லுமோ? அதனை நம்பி நோவாதே யானும் யாது செய்வேனோ? அத்தகையானிடத்தே என் மனமும் இனிச் செல்லுமோ? என்பதாம்.

     உள்ளுறை: வெள்ளாங் குருகின் பிள்ளையோவெனக் காணச் சென்ற மடநடை நாரையானது கானலிடத்தேயே தங்கிவிட்டாற் போல், தானறிந்தாள் ஒருத்தியின் மகளோ வென்று கருதிச் சென்ற தலைவன், அச்சேரியிடத்தேயே மயங்கிக் கிடப்பானாயினான் என்று உள்ளுறுத்துக் கூறுகின்றனள். இதனால், அவன் நம் மீது அன்பாற்றான் என்கின்றனள்; உறவும் பழமை என்கின்றனள்.

155. பாவை ஈன்றெனன்!

     துறை: பலவழியாலும் வாயில்நேராளாகிய தலைமகள், 'மகப்பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: தோழியும் பலவாறு சொல்லிப் பார்க்கின்றாள். தலைவியோ தன் மனம் இசையாதேயே இருக்கின்றாள். முடிவாக 'மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிந்து போகும் படியாக, நீதான் பிடிவாதமாக நடக்கின்றாயே' என்று, அவளது மனையறக் கடனைச் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு இசையுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
     ஓதமொடு பெயரும் துறைவற்குப்
     பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யான!

     தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமெனப் பார்க்கச் சென்ற மடநடை நாரையானது, சிறகடித்தபடியே அங்குமிங்கும் அசைதலினாலே, நெருங்கிய நெய்தல்கள் கழியிடத்தே மோதிச் செல்லும் அலைகளோடே சேர்ந்து போகும் துறைவனுக்கு, யான் பைஞ்சாய்ப் பாவையினைப் பெற்றுள்ளேனே!

     கருத்து: 'அதுவே எனக்கு இப்போதும் போதும்' என்றதாகும்.

     சொற்பொருள்: பதைப்ப - அசைய. ததைந்த - நெருங்கிய. ஓதம் - கடல் அலை. பைஞ்சாய்ப் பாவை - சிறுமியாயிருந்த போது வைத்தாடிய கோரைப் பாவை.

     விளக்கம்: 'தலைவனை ஏற்றுக் கொள்வது பற்றியே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றாயே; அவன் நம்மேல் சற்றும் அருள் அற்றவன்; பரத்தையர்பால் அன்புகாட்டுபவன்; பழிக்கஞ்சி இங்கு வரும்போதும், வாயில்கள் வந்து பரத்தை வாடி நலிவதாகக் கூறவும், அப்படியே அவர் பின்னாற்போய் விட்டவன்' என்று கூறித் தலைவி மறுத்து உரைக்கின்றாள் என்று கொள்க. மகப்பேற்றுக்கு உரிய காலமாயினும், உரிமையுடையவளும் யானே என்பது அறிந்தானாயினும், அவன் என்னை அறவே மறந்து பரத்தையர் சேரியிடத்தேயே வாழ்பவனாயினானே! இனி, நாம் முன் சிறுபோதிலே வைத்தாடிய பஞ்சாய்ப் பாவையினைப் பிள்ளையாகக் கொள்ள வேண்டியது தான்போலும் என்று வாழ்வே கசந்தவளாகத் தலைவி கூறுகின்றாள்.

     உள்ளுறை: 'நாரை பதைப்பத் தகைந்த நெய்தல், கழிய ஓதமொடும் பெயரும் தறைவன்' என்றது, பெரியோர் இடித்துக் கூறுதலாலே எம்மை நோக்கி வருகின்றானான தலைவன், வாயில்கள் வந்து பரத்தையின் வருத்தம் பற்றிக் கூறவும், அவள்மேற்கொண்ட மருளால், அவர் பின்னேயே போவானாயினான் என்பதாம்.

156. எனக்கோ காதலன்!

     துறை: பரத்தையிடத்து வாயில்விட்டு ஒழுகுகின்ற தலைமகனது, வாயிலாய் வர்த்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது.

     (து.வி.: ஊடியிருந்தாளான பரத்தையிடம் தூதுவிட்டு, போயினவர் சாதகமான பதிலோடு வராமையாலே வருந்தி, தன் மனைவியிடமாவது செல்லலாம் என்று வீட்டிற்குத் தன் வாயில்களைத் தாதனுப்புகின்றான். அவர்களுக்குத் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
     தெண்கழிப் பரக்கும் துறைவன்
     எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!

     தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரை, தன் இறகுகளைக் கோதுதலாலே கழித்த செவ்விய புள்ளிகளையுடைய தூவிகள் தெளிந்த கழியின் கண்ணே பரக்கும் துறைவன், என்னளவிலே தலைவிபால் காதலனாகவே தோன்றுகின்றான்; ஆனால், தலைவிக்கோ வேறாகத் தோன்றுகின்றனனே! அதற்கு யான் யாது செய்வேன்?

     கருத்து: 'அவள் அவனைத் தானும் வெறுத்தனள்' என்றதாம்.

     சொற்பொருள்: 'அன்னை' என்றது தலைமகளை; அவளின் மனைமாண்புச் செவ்வியறிந்து போற்றிக் கூறியதாகும். 'பதைப்ப' என்றது, தன் குஞ்சாகாமை நோக்கிப் பதைப்புற்று என்றதும் ஆம். மறு - புள்ளிகள்.

     'எனக்கோ காதலன் அனைக்கோ வேறே' என்றது, எனக்கு அவன் தலைவிபால் அன்புடையவன் என்பது கருத்தேயானாலும், அன்னையான தலைவியின் மீதோ அன்பு மறந்து கொடுமை செய்தவனாயிற்றே' என்பதாம். இதனால் அவள் ஏற்க இசையாள் என்று மறுத்துப் போக்கினள்.

     உள்ளுறை: 'நாரை பதைப்ப வொழிந்த செம்மறுத் தூவி தெண்கழிப் பரக்கும்' என்றது, தலைவன் உறவாடிக் கழிக்க வாடிவருந்தும் பரத்தையரின் துயரமும் வருத்தமும் ஊரெல்லாம் பரவி அலராயிற்று என்பதாம்.

     மேற்கோள்: பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிய ஒழுகா நின்றாய் என நெருங்கிய தோழிக்கு, 'யான் களவின்கண் மகப்பெற்றேன்' எனக் காய்ந்து கூறியது இது வென்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு,6).

157. என் காதலோன் வந்தனன்!

     துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுஙுகுகின்ற தலைமகள், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைமகள், புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது.

     (து.வி.: பரத்தையிற் பிரிந்துபோன தலைவன் மீண்டும் தலைவியை மனந்தெளிவித்து அடைய விரும்பிப் பலரைத் தூதனுப்பி முயன்றும், அவள் தன் உறுதி தளராதிருக்கின்றாள். அப்போது, தெருவிலே விளையாடியிருக்கும் புதல்வனைத் தூக்கியபடி அவன் வருவான் என்று கேட்டு, அப்படி வரும் அவனை வெறுத்துப் போக்க முடியாதே என அஞ்சுகிறாள். அவ்வேளையிற் புதல்வன் மட்டுமே விளையாடிவிட்டுத் தனியே வரக்கண்டவள், நிம்மதி பெற்றுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     காலை யிருந்து மாலை சேக்கும்
     தெண்கடற் சேர்ப்பனொடு வாரான்
     தான்வந் தனனெங் காத லோனே!

     தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளையோ என்று காணச் சென்ற மடநடை நாரையானது, காலையிலேயிருந்து மாலை வரை அக்கான்றஃ சோலையிலேயே தங்கும் குளிர்ந்த கடற்சேர்ப்பான தலைவனோடும் சேர்ந்து, எம். காதன் மகன் வரவில்லை; அவன் மட்டுமே தான் தனியாக வந்தனன்!

     கருத்து: 'ஒரு இக்கட்டிலே இருந்து விடுபட்டேன்' என்றதாம்.

     சொற்பொருள்: சேக்கும் - தங்கும். 'காதலோன்' என்றது புதல்வனை. 'சேர்ப்பன்' என்றது தலைவனை. 'காலையிலிருந்து மாலை' என்றது, எப்போதும் என்னும் குறிப்பினதாம்.

     விளக்கம்: புதல்வனை எடுத்துக்கொண்டு தலைவன் வீட்டினுள் வந்தால், தலைவியால் அவனைச் சினந்து பேசி ஒதுக்க முடியாதென்பதும், புதல்வன் தகப்பனிடம் விளையாடிக் களிப்பதைத் தடுக்க இயலாது என்பதும், சூழ்நிலையுணராத புதல்வன் இருவரிடமும் கலந்து விளையாடி மகிழத் தொடங்கின் அதனால் தானும் தலைவனுடன் நகைமுகம் காட்டிப்பேச நேரும் என்பதும் கருதி, தலைவி இவ்வாறு கூறி, மனநிம்மதி பெற்றனள் என்று கொள்க.

     உள்ளுறை: காலையிலே சென்ற நாரையானது, மாலை வந்தும் கூட்டுக்குத் திரும்ப நினையாது தன் மடமையால் கழிக்கரை மரத்திலேயே தங்கிவிடும் தெண்கடற் சேர்ப்பன் அவன் ஆதலால், அவனும் நிலையாகப் பரத்தையர் இல்லிலேயே தங்கியிருப்பவனாகிவிட்டான் என்று உள்ளுறை பொருள் தோன்றக் கூறுகின்றாள்.

     பரத்தையிடத்தே இவன் காலையில் போகவிட்ட வாயில்கள், அவள் இசைவினை மாலைவரையும் பெறாதே வருந்தி, இரவிலும் இசைவுவேண்டி அங்கேயே துயல்வாராயினர் என்றதாகவும் கொள்க.

     மேற்கோள்: வாயில்வேண்டி ஒழுகுகின்றான், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைவி, அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது இது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6).

158. எம் தோழி துயரைக் காண்பாயாக!

     துறை: பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி, தலைமகற்கு வயில் மறுத்தது.

     (து.வி.: பரத்தை புலந்த போதிலே, தான் தன் மனைக்குப் போவது போலக் காட்டினால், அவள் புலவி தீர்வாள் என்று நினைத்து வந்தான் தலைவன். அவன் வந்த குறிப்பறிந்த தோழி, வாயில் மறுப்பாளாகக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
     தண்ணந் துறைவன் கண்டிகும்
     அம்மா மேனியெந் தோழியது துயரே!

     தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரையானது, அதை மறந்து, கானலின் பெருந்துறையிடத்தே தன் துணையோடு திரியும் குளிர்ந்த கடற்றுறைத் தலைவன், அழகிய மாமைநிறங் கொண்ட மேனியளான எம் தோழியது துயரத்தைத் தீர்க்கும் பொருட்டு வந்துள்ளதைக் கண்டனமே! இஃது என்னே வியப்பு!

     கருத்து: 'நின் பரத்தை இல்லிற்கே சென்று, அவள் புலவியை நீக்கி இன்புற்றிருப்பாயாக' என்றதாம்.

     சொற்பொருள்: கண்டிகும் - கண்டோம். அம் மாமேனி - அழகிய மாமை நிறம் அமைந்த மேனி. கொட்டும் - திரியும்.

     விளக்கம்: வெள்ளாங் குருகின் பிள்ளையோ என்று போன நாரை, அதை மறந்து துணையோடு திரியும் கானலம் துறைவன் என்றனள், அவன் புதல்வனிடத்தும் அன்புற்றவனாகிப் பரத்தை மயக்கிலேயே திரிவானாயினன் என்றற்கு துறைவன் கண்டிகும் என்பது எள்ளி நகையாடிக் கூறியதாம். அம்மாமேனி எம் தோழியது துயருக்கே காரணமாயின இவன், அது தீர்க்கும் உணர்வோடு வாரானாய்த், தன் பரத்தையின் புலவி தீர்க்கக் கருதி இல்லந்திருப்புவான் போல வருகின்றான் என்று, தான் அறிந்ததை உட்கொண்டு கூறியதாம்.

     'கண்டிகும் அம் மாமேனி எம்தோழியது துயரே' என்றது. நின் பரத்தையின் பிரிவுத் துயரையும் யான் கண்டேன். ஆதலின், நீதான் அவள் பாற் சென்று அவள் புலவி தீர்த்து இன்புறுத்துவாயாக என்று மறுத்துப் போக்கியதுமாம்.

     உள்ளுறை: பிள்ளை காணச் சென்ற நாரை, அதனை மறந்து தன் துணையொடு சுற்றித் திரியும் கானலம் பெருந்துறைத் துறைவன் என்றது, அவனும், தன் புதல்வனைக் காணும் ஆர்வத்தனாகக் காட்டியபடி இல்லம் வந்து, தலைவியுடன் இன்புற்றிருத்தலை நாடியவனாயுள்ளான் என்றதாம்.

     மேற்கோள்: தண்ணம் துறைவன் என்பது விரிக்கும் வழி விரித்தல் எனக் காட்டுவர் இளம்பூரணரும் சேனாவரையரும் - (தொல். எச்ச, 7).

159. நலன் தந்து போவாய்!

     துறை: மறாமற் பொருட்டு, உண்டிக் காலத்தே வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

     (து.வி.: உணவு நேரத்திற்கு வீடு சென்றால், தலைவி தன்னை மறுத்துப் போகுமாறு சொல்லமாட்டாள் என்று, அவள் குடும்பப்பாங்கினை நின்கறிந்த தலைவன், அந்த நேரமாக வீட்டிற்கு வருகின்றான். அப்படி வந்தவனைத் தோழி கண்டு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     பசிதின அலகும் பனிநீர்ச் சேர்ப்ப!
     நின்னொன்று இரக்குவென் அல்லேன்;
     தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே!

     தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலுமெனக் கருதிக் காணச் சென்ற மடநடை நாரையானது, பசியானது வருத்த வருந்தியபடி இருக்கும் குளிர்ந்த நீர் வளமுடைய சேர்ப்பனே! நின்னிடைத்தே யான் யாதொன்றும் தருகவென இருக்கின்றேன் அல்லேன். நீதான் கவர்ந்து போயினையே இவளுடைய அழகு, அதனை மட்டுமேனும் மீண்டும் இவளுக்குத் தந்துவிட்டுச் செல்வாயாக!

     கருத்து: ''நின் கொடுமையால் இவள் நலினழந்தாள்'' என்றதாம்.

     சொற்பொருள்: பசிதின - பசி பெரிதும் வருத்த. பனிநீர் - குளிர்ச்சியான நீர். அல்கும் - தங்கியிருக்கும்.

     விளக்கம்: 'உன்னிடம் யாதும் இரக்கவில்லை அன்பனே! இவளிடமிருந்து பறித்துப் போயின நலத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போவாய்' என்கிறாள் தோழி. 'வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே' என அகநானுற்றும் இப்படிக் கூறுவதாக வரும் - (அகம், 376) கலி 128-இலும் இவ்வாறு சொல்வதாக வரும் நின்பால் நினக்குரியதான் ஒன்றை இரப்பின் நீ தரலாம், தராது மறுக்கலாம்; ஆயினும், எம்மிடமிருந்து கவர்ந்து போயினதைத் தந்துவிட்டுப் போவதுதான் நின் ஆண்மைக்கு அழகு என்பதும் புலப்பட வைக்கின்றனள்.

     உண்டி காலத்துத் தலைவி மறாமைப் பொருட்டு விருந்தோடு கூடியவனாகத் தலைவன் தன் வீட்டிற்கு வந்தான் என்று கொள்ளலும் பொருந்தும். விருந்தாற்றற் கடமையும், அவர்முன் தலைவனிடம் சினத்து கொள்ளாத அடக்கமும் தலைவியின் பண்பாதலை அறிந்தவன், அவள் சினத்தைத் தணிவிக்க இவ்வாறு வந்தனன் என்க.

     உள்ளுறை: 'நாரை பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப' என்றது, பரத்தை நாட்டமேயுடைய நீயும், மிக்க பசி எழுந்தமையாலே வீட்டுப் பக்கம் உணவுக்காக வந்தனை போலும் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். நின் வயிற்றுப் பசிக்கு உணவு நாடி வந்தாயன்றி, நீ கவர்ந்து சென்ற தலைவியின் அழகை மீட்டும் தருதற்குரிய அருளோடு வந்தாயல்லை என்று வாயில் மறுத்ததும் ஆம்.

160. முயங்குமதி பெரும!

     துறை: புலந்த காதற்பரத்தை, புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது.

     (து.வி.: காதற்பரத்தையானவள், புலந்து தலைவனை ஒதுக்கியிருந்தாள். அவன் அவளைத் தனக்கு இசைவிக்கச் செய்தவனான முயற்சிகள் ப லனளிக்காது போகவே, அவன், தான் தன் மனைவியிடம் போயினால், அவள் தன்னை முற்றவும் மறப்பானோ என்று அஞ்சித் தனக்கு இசைவாள் என்று கருதினான். ஆகவே, மனைவியை நாடியும் வீட்டிற்கு வருகின்றான். அவன் குறிப்பறிந்த தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
     காணிய சென்ற மடநடை நாரை
     நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ!
     பண்டையின் மிகப்பெரிது இனைஇ
     முயங்குமதி பெரும! மயங்கினள் பெரிதே!

     தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று நினைத்துக் காணச்சென்ற மடநடை நாரையானது, நொந்து வருந்தியதன் மேலும் மிகுதியாகவும் வருந்தும் துறைக்கு உரியவனே! நின் காதற்பரத்தை நீதான் இங்கே வருவதறிந்து பெரிதும் வருந்தி மயங்கினள். ஆதலின், அவன்பாற் சென்று முன்னையினும் மிகப் பெரிது அன்புகாட்டி, அவளைத் தழுவி இன்புறுத்துவாயாக!

     கருத்து: 'நின் காதற் பரத்தையையே சென்று இன்புறுத்துக' என்றதாம்.      சொற்பொருள்: இனைஇ - வருந்தி, முயங்குமதி - தழுவுவாயாக.

     விளக்கம்: முன்னும் அவள் ஊடுதலும், நீ அது தீர்த்துக் கூடுதலும் உண்டே! இப்போது அவள் முன்னிலும் மிகப் பெரிதாக வருந்தினள், பெரிதும் மயங்கவும் செய்தனள்.

     ஆகவே, அவளைத் தெளிவித்துப் பண்டையினும் பெரிதாக அன்புகாட்டி மகிழ்விப்பாயாக! என்று தலைவி கூறுகின்றனள். அவன் தன்பால் வருதலையே உள்ளம் நாடினும், அவன் பரத்தைமையால் மனம் வெதும்பிக் கூறியது இது.

     உள்ளுறை: நாரை நொந்ததன் தலையும் நோய் மிகும் என்றது, நினக்கு வாயிலாகச் சென்றவர்கள், அவள் வருத்தங்கண்டு தாமும் வருந்தி நலிந்தாராய், அவள் பாலே அவளைத் தேற்றுவாராய்த் தங்கி விட்டனர். என்றதாம் இது, வாயிலாக சென்றவரும் அவள் ஊடலின் துயரம் நியாயமானதென்று கொண்டு மேலும் வருந்துவாராயினர் என்பதாம்.

     நாரையும் குருகும் கடற்புட்களாயினும், இனத்தால் வேறானவை எனினும், உடன்வாழ் உறவினைக் கருதி அன்பு காட்டல்மேற் சென்றது நாரை. எனினும் அது சென்ற அவ்விடத்தே, தன் பழைய உள்ளக்கசிவை விட்டு, வேறுவேறு நிலைகளில் இயங்கலாயிற்று.

     இவ்வாறே ஊர்த் தலைவனும் உயர்குடியினனுமாகிய தலைவன், பரத்தையர் மாட்டும் தன் ஊரவர் என்று விழவிற்கலந்து களித்தாடற் பொருட்டுச் சென்றவன், அதனை மறந்து, அவர்பாலே இன்பந்துய்ப்பானாகவும், அவர்க்கு வாரிவழங்கி மனையை மறந்தானாகவும் ஆயினன் என்க. அன்றி, இவ்வாறு கற்பித்து ஊடியதாகவும் நினைக்க.