சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 19 ...

8. தொண்டிப் பத்து

     பாண்டியர்க்குக் கொற்கையும், சோழர்க்குப் புகாரும் போன்று, சேரர்க்குரிய புகழ் பெற்ற கடற்கரைப் பேரூராக அந்நாளிலே விளங்கியது தொண்டிப் பட்டினமாகும். இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும் தொண்டியினை ஆசிரியர் உவமையாக எடுத்துக் கூறுவதால் இஃது இப்பெயர் பெற்றது.

     அந்தாதித் தொடையிலமைந்த செய்யுட்களாக விளங்கும் சிறப்பையும் இச்செயுட்களிலே காணலாம். அந்தாதி நயம் விளங்கப் பாடும் பழைய மரபுக்கும் இதுசிறந்த சான்றாகும். பொதுவாகத் தொண்டியின் எழிலும் வளமும் தலைவியின் எழிலுக்கும் சிறப்புக்கும் உவமிக்கப்படுகின்றன. இதனால், ஆசிரியரின் நாட்டுப் பற்றுப் புலனாவதுடன், தொண்டியின் சிறப்பும் விளங்கும்.

     இத்தொண்டியை இந்நாளைய 'அகலப் புழை' (Alleppy) என்னும் மலைநாட்டு நகராக இருக்கலாம் என்பர். இராமநாதபுர மாவட்டத்தும் ஒரு தொண்டிப் பட்டினம் உள்ளது.

171. நெஞ்சு கொண்டோள்!

     துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு செல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது.

     (து.வி.: இயற்கைப் புணர்ச்சி பெற்றுக் களிமகிழ்வுற்ற தலைவன், அதனின் நீங்கித் தன் ஆயத்தோடு செல்லும் தலைமகளைக் காதலோடு நோக்கி, வியந்து, தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது
     முழவிமிழ் இன்னிசை மறுகுதொ றிசைக்கும்
     தொண்டி யன்ன பணைத்தோள்
     ஒண்டொடி யரிவை என் நெஞ்சுகொண் டோளே!

     தெளிவுரை: கடலலைகள் முழங்கும் இனிதான இசையொலியோடே கலந்து, அயலதாகிய முழவுகளும் முழங்கும் இனிதான இசையும் தெருக்கள் தோறும் என்றும் ஒலித்தபடியே இருப்பது தொண்டி. அதன் செழுமைபோலப் பணைத்த தோள்களையும், ஒள்ளிய தொடிகளையும் கொண்ட அரிவையாள், என் நெச்சினைக் கவர்ந்தாளாய்த் தன்னோடும் கொண்டு செல்வாளே!

     கருத்து: 'என் நெஞ்சம் அவளோடேயே செல்லுகின்றதே' என்றதாம்.

     சொற்பொருள்: இன்னிசை - இனிதாக ஒலிக்கும் இசை. அளைஇ - கலந்து. இமிழ்தல் - முழங்கல். மறுகு - தெரு.

     விளக்கம்: கடலலைகளின் முழக்கத்தோடே கலந்து மக்கள் முழக்கம் முழுவுகளின் முழக்கொலியும் இனிதாக ஒலிக்கும் தெருக்களையுடையது தொண்டி என்பது, அதன் களிப்பான வாழ்வைப் புலப்படுத்தக் கூறியதாம். 'இன்னிசை' என்றது, கேட்பார்க்கு இனிமை கருதலோடு, மென்மேலும் கேட்பதிலே விருப்பமும் மிகச் செய்யும் இசையொலி என்றதாம். 'மருகுதொறு இசைக்கும்' என்றது, ஒரு தெருவும் விடாதே எழுந்து ஒலிக்கும் என்பதாம். தெருத்தொறும் முழவொலி எழுதல், அங்கு வாழ்வாரின் மகிழ்வினைக் காட்டுவதாம். பணைத்தோளுக்கு அத்தகு தொண்டியை உவமை சொன்னது, அதுவும் நினைவில் அகலாதே நின்று களிப்பூட்டி வருதலால்.

     உள்ளுறை: திரையொலியோடு முழவொலி கலந்து இனிதாக ஒலிக்கும் என்றது, உடன்போகும் ஆயமகளிரின் ஆரவார ஒலியோடு, எதிர் வருகின்றாரான உழையாரின் மகிழ்ச்சியொலியும் ஒன்று கலந்து இனிதாக எழுந்ததனை, வியந்து கூறியதாம்.

     நீங்காதே தொடர்ந்து ஒலிக்கும் கடலலையோடு, காலத்தோட மக்கள் முயற்சியால் எழுந்தொலிக்கும் முழவெலி சேர்ந்து ஒலிக்கும் என்றது, பிறவிதோறும் தொடர்ந்துவரும் தலைவன் தலைவியென்னும் தொடர் உறவோடு, அன்று தோன்றி நெஞ்சு கொண்டேகும் அன்புச் செரிவும் அவளைத் தன்னோடும் பிணைத்த செவ்வியை நினைந்து கூறியதாம்.

     குறிப்பு: 'ஆயத்தோடும் உழையரோடும் கலந்துவிட்ட அவளை, இனி எவ்வாறு மீளவும் காண்போமோ?' என்னும் ஏக்கவுணர்வும், அவனுள்ளம் செயலற்று மெலிந்து சோர்ந்த எளிமையும், இதனால் உணரப்படும். 'வளைகடல் முழவின் தொண்டி' என்று கடல் ஒலியை முழவொலிக்கு ஒப்பிட்டுக் காட்டும் பதிற்றுப்பத்து (88); இங்கோ இரண்டொலியும் இசைந்தெழுந்து இனிமை பரப்புதலைச் சுட்டுகின்றனர்.

172. நானும் துயிலறியேனே!

     துறை: ''கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?'' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.

     (து.வி.: காதலி நினைவால் இரவெல்லாம் துயிலற்றுச் சோர்கின்ற தலைவனைப் பரிவோடு நெருங்கி, 'இதற்குக் காரணம் என்னவோ?' என்று வினவுகின்றான் பாங்கன். அவனுக்குத் தலைமகன் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     ஒண்தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
     வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
     உரவுக்கடல் ஒலித்திரை போல,
     இரவி னானும் துயிலறி யேனே!

     தெளிவுரை: ஒளி செய்யும் தொடியணிந்த அரிவை யானவளோ என் நெஞ்சினைத் தன்னோடும் கவர்ந்து போயினள். வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த துறையைக் கொண்ட தொண்டிப் பட்டினத்தின்கண், பரந்த கடலானது ஒலித்தெழுப்புகின்ற அலைகளைப் போல, இரவென்றாலும் துயில்தல் அறியேனாய், யானும் ஓயாது புலம்புதலோடு வருந்தியிருப்பேன்.

     கருத்து: 'நெஞ்சிழந்தவன் உறங்குவது எவ்வாறு?' என்றதாம்.

     சொற்பொருள்: 'அரிவை' என்றது தன் மனங்கவர் காதலியை. இமிர்தல் - ஒலியோடு பற்றல். பனி - குளிர்ச்சி. உரவுக் கடல் - பரந்த கடல்; வலிய கடலும் ஆம்.

     விளக்கம்: உயிர்த்தெழுந்து வரும் கடலலையானது கரையில் மோதியதும் அடங்கித் தளர்ந்து மீள்வதுபோல, அவன் நெஞ்சமும் அவளை அடைகின்ற நினைவினாலே பெரிதெழும் மனவெழுச்சியாலும், அவளை அடைய வியலாதோ என்னும் கவலையினாலே வருந்திச் சோரும் மனத் தளர்ச்சியாலும், அடுத்தடுத்துத் தொடர்ந்து நலிதலால், அவன் உறங்குதல் என்பதே அறியான் ஆயினன் என்று கொள்க.

     'இரவினானும்' என்றது, பகலிற்றான் அவனைக் காண மாட்டேமா என வழிநோக்கி இருந்துவாடுவது இயல்பேனும், இரவுப் போதும் அவள் நினைவின் அழுத்தம் வருத்தலால் உறக்கத்தை ஓட்டியது என்றற்காம்.

     உள்ளுறை: 'வண்டிமிர் பனித்துறைத் தொண்டி' என்றது, 'அறுகாற் சிறு உயிர்க்கும் தான் விரும்பியதைக் களிப்போடு பெற்று மகிழ்தற்கு உதவும் தொண்டி' என்று சுட்டி, தனக்கும் அவளை அடையும் மகிழ்வு வாய்க்கும் என்று கூறியதாம் . 'கடல் ஒலித்திரை போல... துயிலறியேனே' என்றது, நினைவு அவளிடத்தேயும் துயிலடத்தேயும் மாறிமாறிச் சென்று வருதலால், துயிலற்றேன் என்றதுமாம்.

     உரவுக் கடல் ஒலித்திரை இரவினும் ஓயாதே எழுந்து மோதித் துன்புறுமாறு போல, யானும் துயிலிழந்து உணர்வெழுந்து அலைக்கழிப்ப வருந்தியிருப்பேன் என்றதுதாம்.

     மேற்கோள்: 'ஆக்கல் செப்பல்' என்பதற்குக் களவியலுரையுள் இம்பூரணர் இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 9).

173. அரவுறு துயரம்!

     துறை: தலைமகன் குறிவழிச் சென்று, தலைமகனைக் கண்ட பாங்கன், தன்னுள்ளே சொல்லியது.

     (து.வி.: தலைமகன் குறித்துச் சொன்னவாறே சென்று தலைமகளைக் கண்டான் பாங்கன். அவளைக் கண்டதும் வியப்புற்றோனாக, அவன் தன்னுள்ளே கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     இரவி னானும் இன்றுயி லறியாது
     அரவுறு துயரம் எய்துப தொண்டி
     தண்ணறு நெய்தலில் நாறும்
     பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே!

     தெளிவுரை: தொண்டி நகரத்துக் குளிர்ந்த நறுமண மிக்க நெய்தலைப் போல மணம் கமழும், பின்னப்பட்ட கருங்கூந்தலை உடையாளான இவளாலே தாக்கி வருத்தப்படுதலைப் பெற்றவர்கள், இரவு நேரமானாலும், இனிய துயிலைப் பெறாதே, பாம்பு தீண்டினாற்போலும் பெருந்துயரத்தையே அடைவார்கள்!

     கருத்து: 'தலைவனின் பெருவருத்தம் இயல்பே' எனத் தெளிந்ததாம்.

     சொற்பொருள்: அரவுறு துயரம் - அரவாலே தீண்டப்பெறுதலினாலே கொள்ளும் துயரம் நொடிக்கு நோடி மேலேறிப் போதல். நாறும் - மணங்கமழும். அணங்குற்றேர் - தாக்கி வருத்தப் பெற்றோர்.

     விளக்கம்: தலைவன் சொல்லியபடியே அவளைக் கண்டு, தலைவனின் மயக்கம் சரியானதுதானா என்று தெளியச் சொன்றவன் பாங்கன். அவன் அவளின் பின்னலிடப் பெற்று கருங் கூந்தலின் அழகு நலத்திலேயே தன்னை இழந்து விட்டான். அதனின்று வந்த நறுமணம் நெய்தலின் குளிர் மணம் போன்று விளங்கும் கீர்த்தியும் உணர்ந்தான். 'இவளால் தாக்கி வருத்தம் செய்யப்பட்டவர்கள், இரவிலும் இனிய துயிலறியாராய், அரவு நீண்டியது போன்ற வேதனையையும் காண்பார்' என்று வியந்து போற்றுகின்றான்.

     குறிப்பு: கூந்தல் நெய்தலின் நாறுதல், அவள் நெய்தற் பூச்சூடுதலால், 'அரவுறு துயரம்' என்றது, துயருற்ற அரவு சீறியெழுந்தும் அடங்கியும் வருந்துவது போன்ற துயரம் என்றதும் ஆகலாம். கண்மூடவும் அவள் கனவிலே தோன்ற ஆர்வமுடன், எழுவன், காணாதே சோர்ந்து படுத்து மீளவும் கண்மூடவும், அவள் மீளவும் தோன்ற எழவுமாக வருந்தும் தொடர்ந்ததுயிலற்ற துயரநிலை இது.

     உள்ளுறை: தொண்டியின் தண்ணறு நெய்தல், தொலைவுக்கும் மணங்கமழ்ந்து உணர்வெழுச்சி யூட்டலே போலத், தன்னூரிலிருக்கும் அவளும் தொலைவிடத்தானை தலைவனிடத்தேயும் தன்நினைவாலே எழும் உணர்வு மீதூறச் செய்வாள் என்பதாம்.

     மேற்கோள்: பாங்கன், தலைவனை நோக்கி, 'நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தாள்?' என வினாய், அவ்வழிச் சென்று தலைவியைக் கண்டனன் எனக் காட்டுவர் இளம் பூரணம் - (தொல். களவு, 1). பாங்கன், கிழவோனை இகழ்ந்ததற்கு இரங்கல் என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர்.

174. பொழிற்குறி நல்கினள்!

     துறை: குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

     (து.வி.: தலைவன் சொன்னபடியே சென்று, குறித்த இடத்திலே தலைமகள் நிற்பதைக் கண்டவனாகத் திரும்பவும் தலைவனிடம் வந்து, 'அவள் நிற்கின்றாள்' என்று சொல்லுகின்றான் பாங்கன். அதனைக் கேட்டதும், அங்குச் செல்ல நினைத்தானாகிய தலைவன், தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
     மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழை
     பொங்கரி பரந்த உண்கண்
     அம்கலிழ் மேனி அசைஇய எமக்கே

     தெளிவுரை: தெய்வம் இருத்தலை உடையதான குளிர்ந்த நீர்த் துறையையுடைய தொண்டியைப் போல மணங்கமழும் பொழிலின் கண்ணே, நுண்ணிய இழையினையும், மிகுந்த செவ்வரிபரந்த மையுண்ட கண்களையும், அழகு பொருந்திய மேனியையும் உடையாளான வள், அவளை அடைதலையே நினைந்து மெலிந்தோமாகிய எமக்கும், அவளைக் காணற்குரியதான இடத்தையும் ஈதெனக் கூறித்துக் காட்டினள்.

     கருத்து: 'அவ்விடத்தே சென்று அவளை அடைவேன்' என்றதாம்.

     சொற்பொருள்: அணங்கு - தெய்வம்; நீருறை தெய்வம் என்பர். பொழில் - சோலை. நுணங்கு இழை - நுண்ணிய வேலைப்பாடமைந்த இழை. அரி - செவ்வரி; 'பொங்கு அரி' என்றது மிக்கெழுந்த செவ்வரி என்றற்கு. அம்கலிழ் மேனி - அழகு ஒழுகும் மேனி. அசைஇய - மெலிவுற்ற.

     விளக்கம்: நீர்த்துறையிடத்தே அணங்குகள் உளவாம் என்பதும், அவை அங்குச் செல்வாரைத் தாக்கி வருத்தும் இயல்பின என்பதும் முன்னோர் நம்பிக்கை. 'தொண்டிப் பனித்துறையும் அணங்குடைத்து' என்பது இச்செய்யுள். மணங்கமழ் பொழில் தொண்டி போல்வதெனவும், அவள் அதன்கண் அணங்கனையள் எனவும் பொருத்திக் கொள்க. 'நுணங்கிழை பொங்கும் அரி பரந்த உண்கண்' என்று கொண்டு, வளைந்த இழையான நெற்றிச்சுட்டி அசைந்தாடிய படி விளங்கும் செவ்வரி பரந்த மையுண்ட கண்' என்றும் பொருள் சொல்லலாம். மேனி அசைஇய - மேனியை நினைந்து மெலிவுற்று வாடிய. குறி நல்கினள் - சந்திக்கும் இடம் ஈதென்று குறித்துக் காட்டினள்.

     மேற்கோள்: இனி உள்ளப் புணர்ச்சியானன்றி இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி, பின்தலைமகள் குறியிடம் கூறிய வழி, அதனைப் பாங்கற்கு உரைத்தல் என்று இச்செய்யுளைக் குறிப்பிட்டுக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு, 12).

     ''தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்திக் தலைவன் கூறலின், இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனம் கூறினான்'' என்று அஞ்சித், தோழி உணராமல், தலைவி தானே கூடிய பகுதிக்கு உதாரணம்'' என்று காட்டிக் கூறுவர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (களவு, 11) காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் என்றும் அவரே கூறுவர் - (களவு, 28).

175. நன்னுதல் அரிவையொடு வந்திசின்!

     துறை: பாங்கற்கூட்டம் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து, நின் தோழியோடும் வரவேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது.

     (து.வி.: பாங்கனின் உதவியாலே தலைவியைக் கூடியபின், தலைவியைப் பிரிகின்ற தலைவன், 'இனி நீயும் நின் தோழியின் துணையோடும் வருக; தனியாக ஒருபோதும் வருதல் வேண்டா' எனத் தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     எமக்கு நயந் தருளினை ஆயின், பணைத்தோள்
     நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி
     வந்திசின் வாழியோ, மடந்தை
     தொண்டி யன்ன நின் பண்பு பல கொண்டே.

     தெளிவுரை: மடந்தையே, நீ வாழ்வாயாக! தொண்டி நகரே போலகின்ற நின் பண்புகள் பலவற்றையும் கொண்டனையாய், எம்பாலும் விருப்பங் கொண்டு வந்து, எமக்கும் அருளிச் செய்தனை! ஆயின், இனி, பணைத்த தோள்களையும் நறிய நுதலையும் கொண்டாளான நின் தோழியோடும் கூடியவாறே, மெல்ல மெல்ல நடந்தனையாகி, இவ்விடத்துக்கு வருவாயாக! தனியே வருதல் வேண்டா!

     கருத்து: 'நின் தோழியின் காவல் துணையோடு எச்சரிக்கையோடே வருக' என்றதாம்.

     சொற்பொருள்: நயந்து - விருப்புற்று மென்மெல இயலி - மெல்லென நடந்து. வந்திசின் - வருவாயாக. பண்பு பல - பலவான எழிற் பண்புகள். கொண்டே - கொண்டனையாய்.

     விளக்கம்: 'மென்மெல இயலி' என்றது, மென்மலர்ப் பாதவெழிலை நினைந்து கூறியது; 'சிலம்பு நகச் சின்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி' என அகமும் கூறும் - (அகம், 261). தோழியிற் கூட்டம் வேண்டுவான், தலைவிக்கு உறுதுணையாக, பாதுகாவலாக அமைவாள் ஒருத்தியையும் விரும்புகின்றான் என்று கொள்க. அவளுக்கு வழியிடையே ஏதும் இடையூறு நேராதிருத்தல் கருதிக் கூறினதால், அவள் மீது அவன் கொண்டுள்ள காதன்மையும் விளங்கும்.

     இனி, 'எமக்கு நயந்து அருளினையாயின், அரிவையோடு வந்திசின்' என்று கொண்டு, 'எமக்கு விருப்புற்று அருளிச் செய்தலான களவுக் கூட்டத்தைத் தருதற்கு நினைந்தனையாயின், இனி நின் தோழியொடும் கூடியே வருக' என்றும் பொருளை கொள்ளலாம். கருத்து, அவள் துணையில்லாது தனித்து வருதலை வேண்டாமையே 'நயந்து' என்றது அவளும் விரும்பிக் கூடிய களவுறவு என்றதாம்.

     தோழியின்றித் தனியாகச் செல்லின், பிறர் ஐயுறவு கொண்டு பழித்துப்பேச நேரும் என்று நினைத்து இவ்வாறு கூறியதாகவும் கொள்க.

     மேற்கோள்: தோழியுடம்பாட்டினைப் பெற்று களவுறவு மகிழற்கு இளம்பூரணர் இச்செய்யுளைக் காட்டுவர் - (தொல். களவு, 16). இது, பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், 'நீ வருமிடத்து நின் தோழியோடும் வரவேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது எனவும் - (தொல். களவு, 1); தோழியுடம்பாடு பெற்று மனமகிழ்தல் எனவும் - (தொல். களவு' 11) நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுவர்.

176. கூறுமதி தவறே!

     துறை: தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது.

     (து.வி.: தலைமகள் யாதோ எண்ணினளாகித், தலைவனோடு மனம் பொருந்தாதே விலகி ஒதுங்கி நிற்கின்றாள். அதனால் பெரிதும் வருத்தமுற்றனன் தலைமகன். அவளும் தோழியும் ஒருங்கே நின்றபோது, அவ்விடம் சென்று, தோழிக்குச் சொல்வான் போல அவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
     தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்தொடி,
     ஐதுமைந் தகன்ற அல்குல்,
     கொய்தளிர் மேனி! - கூறுமதி தவறே.

     தெளிவுரை: தொண்டியின் குளிர்ந்த மணம் கமழுகின்ற புதுமலரைப் போல மணம் மகழ்கின்றவளே! ஒளியமைந்த தொடியினையும், அழகிதாக அமைந்தும் அகன்றும் விளங்கும் அல்குல் தடத்தினையும் கொண்டவளே! கொய்யத் தூண்டும் மென்தளிரைப் போன்ற மேனிக்கவினையும் பெற்றவளே! எனக்குரிய பண்புகளையும், என் உறக்கத்தையும், நின் தோழி கவர்ந்து கொண்டாளே! அதற்கு, யான் செய்த தவறுதான் யாதெனக் கூறுவாயாக!

     கருத்து: 'இவளின் இந்தச் சினம் எதன் பொருட்டோ?' என்றதாம்.

     சொற்பொருள்: பண்பு - உள்ள உரனும் பிறவும். ஐது - அழகிதாக. பாயல் - உறக்கம். 'புதுமலர்' என்றது, நெய்தல் மலரை. நாறும் - மணம் கமழும்; அவர் நெய்தற் புதுமலரினைக் கொய்து கூந்தலில் அணிந்திருந்த வனப்பை வியந்து கூறியது. கொய் தளிர் மேனி - கொய்யத் தூண்டும் வனப்புடைய மாந்தளிர் போன்ற மேனி; அவ்வாறே கண்டார் அடையக் காமுறும் மேனி என்றதுமாம். கூறுமதி - கூறுவாயாக.

     விளக்கம்: 'தண்கமழ் புதுமலர் நாறும், ஐதமைந்தகன்ற அல்குல் கொய்தளிர்மேனி, ஒண்தொடி, பண்பும் பாயலும் கொண்டனள்' எனத் தலைவியோடு பொருந்தியும் பொருள் உரைக்கலாம். ''இத்துணை நலமுடையாள் அத்தகு கொடுமை செய்ய யான் செய்த தவறுதான் யாதோ?'' என்று கேட்பதாக அப்போது கொள்க. மதியுடம்படுத்தல் வேண்டித் தோழியைக் குறையுறுகின்றவன் தலைவனாகவே, அவளையே போற்றியதாக இவ்வாறு கொள்ளலும் தவறாகாது.

     தன்னை நலிவித்துப் பாயலும் இழக்கும்படி பிரிவு நோய்க்கு உட்படுத்தினான் என்று ஊடிய தலைவியைக் குறித்து, ''அவள் நலனில் குறைந்தாளல்லள்; யானே அவளால் பண்பும் பாயலும் இழந்து நோவேன்'' என்கின்றான் தலைவன்.

     மேற்கோள்: 'தோழி, இவள் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள் மேலே சேர்த்தி, அதனை உண்மையென்று உணரத் தலைவன் கூறுதல் இதுவெண்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 11).

177. தவறிலராயினும் பனிப்ப!

     துறை: தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி. 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத், தோழி நகையாடிச் சொல்லியது.

     (து.வி.: 'இவள் என்பால் எந்தத் தவறு நினைந்து என்னை இவ்வாறு வருத்தமுறச் செய்கின்றாள்?' என்று கேட்கின்றான் தலைவன். அவனுக்கித் தோழி நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     தவறில ராயினும் பனிப்ப மன்ற
     இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
     முண்டக நறுமலர் கமழும்
     தொண்டி யன்னோள் தோள்உற் றோரே!

     தெளிவுரை: ஒன்றினொன்று மேம்பட்டதாக எழுந்து மோதும் அலைகளாலே கொழித்திடப் பெற்ற மணல் பரந்த உயர்ந்த கரையிடத்தேயும், முண்டகத்தின் நறுமலர்களின் மணம் கமழுந்து கொண்டிருப்பது தொண்டிப்பட்டினம். அதனைப் போன்று நலமிக்கவளான தலைவியின் தோளை அடைந்தோர், தாம் தம்மிடத்தே தவறேதும் உடையவரல்லராயினும், தவறினார் போன்றே தளர்ந்து நடுங்குவர் போலும்!

     கருத்து: 'தவறு ஏதும் இல்லாதேயே நீயும் இவ்வாறு நடுங்கிக் கூறுவது ஏன்?' என்றதாம்.

     சொற்பொருள்: இவறுதல் - மென்மேல் ஏறுதல்; உலாவுதல். திளைக்கும் - பொருதும். இடுமணல் நெடுங்கோட்டு - குவித்த மணல்மேட்டின் உச்சியில். முண்டகம் - கழிமுள்ளி. பனிப்ப - நடுங்குப.

     விளக்கம்: நீர்க் கண்ணேயே செழிக்கும் முண்கமானது, அலைகள் மென்மேல் எழுந்து மோதுதலாலே அலைப்புண்டு, குவித்த மணல்மேட்டின் உச்சியிடத்தே சென்று கிடந்து மலர்வதாயிற்று. நீரற்ற அவ்விடத்தும் முண்டக நறுமலர் மணம் கமழ்தலே போலத், தவறற்ற தலைவனிடத்தும் தவறுளபோலத் தலைவிக்குத் தோன்றிற்று என்பதாம்.

     பாட்டிலே சொல்லிய பொருளுக்கு ஒத்துமுடிவதனை உள்ளுறை உவமம் எனவும், புறமாகி வேறுபட முடிவதனை இறைச்சி எனவும் கொள்வது முறை. இதை நினைவிற்கொண்டே இக் கருப்பொருளை நோக்கல் வேண்டும்.

     இறைச்சி: 'நீர் அறா நிலத்து முண்டக நறுமலர் கமழும் தொண்டியன்னோள்' என்றது, 'இவள் நாம் அணுகி நுகர்தற்கு அரியவள்' என்று தலைவன் சொன்னனதாம்.

     குறிப்பு: 'இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் கமழும்' என்றது, அது அதற்குரிய இயல்பு அல்லவெனினும், மோதும் அலைகளாலே அவ்விடத்தே சேர்க்கப்பட்டது என்பது உண்மையாகும். இவ்வாறே தலைவியின் உள்ளத்தே நின்பால் தவறு காணும் இயல்பு இல்லையேனும், அஃது அலருரை பகர்வார் இட்டுக் கூறியதனாலே நின்பால் ஐயற்று விளைந்த விளைவு என்று தோழி சமாதானம் சொல்வதாகச் சொல்லின், இது உள்ளுறை உவமமாக அமைந்து நிற்கும்.

     'இவள் தோளுற்றோர் தவறிலராயினும் பனிப்ப' என்றதை, 'இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் தன் தவறற்ற போதும், அலையின் மோதற் செயலாலே வருந்தி நடுங்கும்' என்றதனோடு இணைத்துப் பொருள் கூறலும் கூடும். 'நின்பால் தவறில்லை எனினும், 'நின் சூழ்நிலை காரணமாக இவளைக் காணவியலாதே நீ துயருட்பட்டு வருந்துவாயாயினை' என்று தலைவனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்ளலாம்.

     ''மணல் மேட்டின் உச்சியிடத்தே முண்டக நறுமலர் கமழும் தொண்டியன்னோள்'' என்றது, அதன் மணத்தைப் பலரும் அறியுமாறு போல, இவள் நலத்தையும் அறிந்தார் பலராதலின், இவளை வரைந்து கெள்ளற்கு அவரவர் முந்த விரைபவராவர்; அவ் வேற்று வரைவினை நினைந்தே இவள் வாடுவள்; அது தீர விரைந்து வந்து மணங்கொள்க' என்றதுமாம்.

178. வாழ்தல் ஒல்லுமோ?

     துறை: தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது.

     (து.வி.: தலைமகன் தோழியை இரந்து வேண்டித், தனக்குத் தலைவியை இசைவிக்கக் கேட்பவன், சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     தோளும் கூந்தலும் பலபா ராட்டி
     வாழ்தல் ஒல்லுமோ மற்றே - செங்கோற்
     குட்டுவன் தொண்டியன்ன
     எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே?

     தெளிவுரை: செங்கோன்மையாளனாகிய குட்டுவனின் தொண்டி நகரைப் போலும் என்னைக் கண்டு, நீயும் விருப்போடே அருள் செய்யாவிடத்து, இவளுடைய தோளும் கூந்தலும் பலவாகப் பாராட்டியபடி இவளோடு நெடுகிலும் கூடிவாழும் இல்வாழ்க்கைதான், எனக்கும் வாழ்க்குமோ?

     கருத்து: 'என் இல்வாழ்வுக்கு நீயே உறுதுணையாய் நின்று உதவுதல் வேண்டும்' என்றதாம்.

     சொற்பொருள்: ஒல்லுமோ - பொருந்துமோ. எற்கண்டு - என்னைப் பார்த்து. நயந்து - விரும்பி. நல்காக்கால் - அருளாவிட்டால்.

     விளக்கம்: 'குட்டுவன் தொண்டி' எனத் தொண்டிக் குரிய சேரனைப் பற்றியும், 'அவன் செங்கோன்மை பிறழா தவன்' என்பான் 'செங்கோற் குட்டுவன்' எனவும் கூறினான், தானும் 'நெறிபிறழா நேர்மையன்' என்று தன் மேம்பாடு சுட்டிக் கூறுதற்காம்.

     'நீ நல்காக்காலே... வாழ்தல் ஒல்லுமோ?' என்பான், தோழியைப் பெருமைப்படுத்திக் கூறி, மனத்தைத் தன்பால் இளகச் செய்தற்கு முயல்கின்றான்.

     ''தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல்' என்றது. உரிமையோடு, ஊரவர் வாழ்த்த வாழும் இல்லறவாழ்வினை. தழுவக் களிப்பூட்டும் தோளும், மலர்பெய்து எழிலகண்டு இன்புறும் கூந்தலும் சுட்டினான். அவளோடு பிரியாது கலந்து வாழும் இல்லற வாழ்வினைத் தான் உறுதியாக வேட்பதைத் தோழியாகிய அவட்கு உணர்த்தற்காம்.

     'தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல் ஒல்லுமோ?' என்றது. நீ உதவாவிடில், யான் தோளும் கூந்தலும் பலவாகப் பாராட்டிக் கூடிமுயங்கி வாழ்கின்ற வாழ்வுப் பேற்றினைப் பெறுவேனோ? பெறேன் ஆதலின், நீதான் விரும்புதலோடு என் குறை முடித்தலும் வேண்டும்'' என்று தலைவியையே குறையிரந்து நின்றதாகவும் கொள்ளலாம்.

     மேற்கோள்: தோழியைக் குறையுறும் பகுதி என்பர் இளம்பூரணர் - (தொல். களவு, 12). மதியுடம்பட்ட தோழி, 'நீர் கூறிய குறையை யான் மறந்தேன்' எனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால், தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையையும் தலைவன் கூறுதல் இதுவென்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 11).

179. நின்னலது இல்லா நுதல்!

     துறை: குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரவு கடாயது.

     (து.வி.: பகற் குறியீடத்தே கூடி மகிழ்ந்தனர் காதலர்கள். தலைவனும் பிரியா விடை கொண்டு பிரிகின்றான். பிரிந்து போகும் அவனைத் தனியே வழியில் எதிர்ப்படும் தோழி, விரைவிலே அவர்கள் மணத்துக்கு முயலுமாறு வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப!
     அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
     இன்னொலித் தொண்டி அற்றே
     நின்னல தில்லா இவள்சிறு நுதலே!

     தெளிவுரை: பெருநீரான கடலின் கரையிடத்தோனாகிய சேர்ப்பனே! அலவன் தாக்குதலினாலே நீர்த்துறையிடத்தேயுள்ள இறால்மீன்கள் புரள்கின்றதும், இனிதான ஒலியைக் கொண்டதுமான தொண்டியின் எழில்போலும் இவளது சிறுநுதலின் அழகானது, நின்னைத் தன் அருகாமையிலேயே எப்போதும் பெறின் அல்லது இல்லையாகிப் போகும். அதனை யுணர்ந்து, நீயும் இவளுக்கு அருளினையாய் வாழ்வாயாக!

     கருத்து: 'இவளை விரைவிலேயே மணந்து கொள்வதற்கு முயல்க' என்றதாம்.

     சொற்பொருள்: நளி - பெருமை; தண்மையுமாம். நல்குமதி - விரைந்து மணங்கொண்டு அருள்வாயாக. அலவன் - நண்டு. பிறழும் - துயருற்றுப் புரளும். இன்னொலி - இனிய இசையொலிகள்.

     விளக்கம்: 'அலவன் தாக்கத் துறையில் இறால் புரளும் துன்பத்தை யடைதலை' திருமணத்துக்கு விரையத் தூண்டுதற்கு எடுத்துக்காட்டுகின்றாள். இறால்மீனைத் தாக்கற்கு எவ்விதக் காரணமும் இல்லாதபோதும் அலவன் தாக்கிப் புரளச் செய்தலேபோல, இவளைப் பழிச் சொற்களால் துடிக்கச் செய்யும் மகளிரும் இவ்வூருட் பலராவர் என்பதாம். ஆகவே வரைதலில் விரைக என்றதாம். சிறுநுதல் - சிறுத்த நுதல்; இல்லாத்தாவது - ஒளிமழுங்கி மெலிந்துபோதல். 'இன்னொலித் தொண்டி' என்றது, தொண்டி மக்கள் மகிழ்ச்சியாற் செய்யும் ஆரவாரத்தையும், இசை எழுச்சிகளையும் ஆம்.

     உள்ளுறை: அலவன் தாக்கத் துறையிறாப் பிறழுவது போன்றே, உங்கள் களவுறவை யறிந்த அலவற் பெண்டிர் பழிதூற்றத் தலைவியும் அதனாற் பெரிதும் நலிவடைவாள் என்பதாம்.

     குறிப்பு: அவள் அத்துயரம் தாழாதே, இறத்தலும் நேரலாம் என்பவள் 'இல்லா' என்கின்றனள். இஃது தலைவன் உளத்திலே விரைய வரையும் பொறுப்புணர்வைத் தூண்டுவது உறுதி என்பதாம். 'நளிநீர்ச் சேர்ப்ப!' என்றது, அவனும் கடல்போல் தண்ணளி உடையவன் என்றதாம்.

180. சிறுநணி வரைந்தனை கொண்மோ!

     துறை: தாழ்ந்து வரையக் கருகிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது.

     (து.வி.: களவின்பக் களிப்பிலே திளைப்பவன், அதிலேயே சிறிது காலம் இன்புற்றுப் பின்னர் மணக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாமென நினைக்கின்றான். அவன் நினைவுப் போக்கைக் குறிப்பால் உணர்ந்த தோழி, 'விரைவிலேயே வரைதல் வேண்டும்' எனச் சொல்லுவதாக அமைந்த செய்யுல் இது.)

     சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
     வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
     பறைதபு முதுகுருகு இருக்கும்
     துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே!

     தெளிவுரை: கடலிடத்தே வலைவீசிப் பரதவர் பற்றிக் கொணர்ந்த கொழுமையான மீனுணவின் ப ஒருட்டாக, பறத்தலைத் தன் முதுமையினாலே கைவிட்டகிழக்குருகானது சென்று தங்கியிருக்கும், துறை பொருந்தியது தொண்டி அதனைப் போன்ற இவளது நலத்தினை, நீயும் மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே, நினக்கு உரியதாக்கிக் கொள்வாயாக!

     கருத்து: 'மிக விரைவிலேயே மணங் கொள்க' என்றதாம்.

     சொற்பொருள்: சிறுநணி - மிக விரைவிலேயே; சிறுநனி என்பதும் பாடம். பெருநீர் - கடல். வலைவர் - வலையினாலே வளம் கொள்ளும் மீனவர்; 'வலைஞர்' என இன்றும் விளங்குவர். வல்சி - உணவு. பறைதபு - பறத்தலை விட்ட. இருக்கும் - எதிர்பார்த்தபடி தங்கியிருக்கும். நலன் - அழகு.

     விளக்கம்: வலைவர் தம் பெருமுயற்சியாலே கொணர்ந்து போடும் மீன்களைத், தன் உணவுக்காகக் கவர்ந்து கொள்ளப் பறத்தற்கு இயலாதாய்க் கிழடுபட்டுப் போன குருகு சென்று காத்திருக்கும் துறைக்காட்சியைக் காட்டிக்கூறி, அவ்வாறே நின் காதன்மையாலே உரிமை கொண்ட இவள் நலனை, வேற்றார் வரைந்து வந்து பெறுதற்குக் காத்திருக்கின்றனர் என்கின்றாள். அப்படிக் கேட்டு வருவோர் முதுசான்றோர் எனவே, முதுகுருகைக் கூறினள். 'முதுகுருகும் வலைவர் தரும் மீனுண்டு பசியாறும் துறையினன்' என்றது, எவரும் துன்பந் தீர்ந்து இன்புறுதற்கு அருள்பவன் தலைவன் என்று, அவன் அருளுதற் பெருமை கட்டிப் புகழ்ந்ததுமாம்.

     உள்ளுறை: 'வலைவர் தந்த கொழுமீன் வல்சிக் கண்ணே பறத்தல் கெட்ட முதுகுருகு இருக்கும்' என்றது, வேற்றுவரவு வேட்டு முதியோர் வருதற்குரியர் என்றதாம்.

     குறிப்பு: வேற்றார் வரவு நேராமுன் மிகவிரைவில் நீயே வந்து வரைந்து கொள்க என்கின்றாள், 'சிறுநனி வரைந்தனை கொண்மோ' என்கின்றனள். வலைவர் சிறுபொழுது ஏமாறினால், முதுகுருகு கொழுமீனைப் பற்றிக் கொண்டு போதலேபோல, நீயும் காலங்கடந்தஃதினால் இவளை இழந்து போகவே நேரும் என்று எச்சரித்ததும் ஆம். முதுமை கண்டு இரங்கியும், வலைவர் தாமே மீனைத் தந்து விடாமைபோல, நொதுமலர் வரைவுக்கு உடன்படா வண்ணம் யாமும் அறத்தொடு நிற்பேம் என்பாள், 'முதுகுருகு இருக்கும்' என அதன் இருத்தல் மட்டுமே கூறி, அது கொண்டதென்று ஏதும் குறித்துக் கூற்றிற்றிலள்.

     பறைதபு முதுகுருகு, பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சியை எதிர்பார்த்து இருத்தலேபோல, இவள் பெற்றோரும் இவள் மூலம் பெறும் வரைபொருள் மிகுதிக்கு எதிர்பார்த்தபடி யுள்ளனர் என்பதும் ஆம்.

     சொல்வகையால் தொடர்ச்சி பெற்று அந்தாதித் தொடை பெறுதலோடு, கிளவி வகையாலும், சொல்லும் வகையாலும் தொடர்ச்சியுடையவை இப்பத்துச் சொய்யுட்களும் என்பதும் அறிக.