உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 2 ... 1. வேட்கைப் பத்து 'வேட்கை' என்பது விருப்பம் ஆகும்; புறத்தொழுக்கிலே நெடுநாள் ஒழுகிய தலைவனின் உடனுறைவின்பம் பெற்றிலாத காலத்திலே, தலைவியின் மனவேட்கை எவ்வாறு பொறுப்புணர்வோடு சென்றது என்பதும், அவள் நலத்தையே கருதியவரான தோழியரின் மனவேட்கை எவ்வாறு நிகழ்ந்தது என்பதும், இதன் கண் விரிவாக உரைக்கப்படுகின்றன. தானிழந்த கூட்டத்தின் இன்பம் பற்றிய மனக்குறையும், தன்னை ஒதுக்கிச் சேரிப் பரத்தையரை நச்சித்திரியும் தலைவனின் போற்றா ஒழுக்கத்தின் அவலநினைவும் உடையவளேனும், தலைவி, தன்னுடைய இல்லறக் கடமைகளிலே தன் மனத்தை முற்றச் செலுத்தியிருக்கும் மனையறமாண்பினையும் இப்பகுதியிற் காணலாம். அவள் தோழியரோ, 'இத்தகு பண்பினாளின் பிரிவுத்துயரம் தீரும் நாள் வாராதோ?' என்று, அவளைப் பற்றியே நினைத்தவராக, அவள் நலத்தையே விரும்பி வேண்டுகின்றனர். இவ்வேட்டலை, இறையருளை விரும்பி வழிபட்டு வேட்டலாகவே கொள்க. 1. நெற்பல பொலிக! துறை: புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டும் தலைவியோடு கூடி ஒழுகா நின்று தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு, அவள் சொல்லியது. (துறை விளக்கம்) 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தினனாகத் தலைவன் தன்னில்லம் மீண்டான். தலைவியோடும் கூடி இன்புற்றும் ஒழுகி வருகின்றான். அக்காலத்து, அவன் உள்ளம், 'அந்நாட்களிலே தன்னைப் பற்றி இவர்கள் எவ்வாறு நினைத்திருப்பார்கள்?' என்று அறிகின்றதிலேயும் சற்று வேட்கை கொள்ளுகின்றது. அவன், தலைவியில்லாத இடத்தே, அதுப்பற்றித் தோழியிடம் உசாவுகின்றான். அவள், அவனுக்குத் தலைவியின் உயர்வைக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யு இது.
'வாழி ஆதன்; வாழி அவினி! நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!' எனவேட் டோளே யாயே; யாமே, 'நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன். வாழ்க! பாணனும் வாழ்க!' என வேட்டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நெல் பலவாக விளைவதாக; பொன்வளம் பெரிதாகிச் சிறப்பதாக' எனத் தலைமகள் வேண்டினால். 'பூவரும்புகள் கொண்ட காஞ்சி மரத்தையும், சினைகளைக் கொண்ட சிறுமீன்களையும் மிகுதியாகவுடைய ஊருக்குரியவனாகிய தலைவன் வாழ்க; அவன் ஏவலனாகிய பாணனும் வாழ்க!' என, யாங்கள் வேண்டினோம்.' கருத்து: 'தன் இல்லறக் கடமைகள் சிறப்பதற்காவன வற்றைத் தலைவி விரும்பி வேண்டினாள்; யாங்களோ, அவள் நலன் பெருகுவதற்காக, நின் நலனை வேண்டினோம்.' சொற்பொருள்: வேட்டல் - வேண்டுதல். யாய் - தாய்; தலைவியை அவளின் சால்புமிகுதியால் சிறப்பித்துக் கூறியது; அவன் புதல்வனைப் பெற்ற தாய் என்பதும் ஆம்: தன்னைத் தலைவன் துறந்தமைக்கு நோவாது, தன் இல்லத்தைத் தாயாகித் தாங்கும் அறநெறிக் கடனிலேயே மனஞ்செலுத்தின உயர்வை நினைந்து கூறியதாகவும் கொள்ளலாம். நனை - பூவரும்பு. சினை - முட்டை. சிறுமீன் - சிறிய உருவுள்ள மீன். ஊரன் - ஊரே தன்னுரிமையாகக் கொண்ட தலைவன். விளக்கம்: 'ஆதன் என்றது குடியினையும், 'அவினி' என்றது அக்குடியினனாகத் தம் நாட்டினைக் காத்துவந்த அரசனையும் குறிப்பதாம். காவலன் நெறியோடே காவாதவிடத்து அறமும் நிலைகுன்றுமாதலின், 'அவன் வாழ்க' என முதற்கண் வாழ்த்தினள். 'நெற்பல பொலிக' என்றது. உயிர்களின் அழிபசி தீர்த்தலான பேரறத்திற்கு உதவியாகும் பொருட்டு; 'பொன் பெரிது சிறக்க' என்றது. நாடிவந்து இரவலர்க்கு வழங்கி உதவுதற்கு. தலைமகளின் வேட்கை அறம்பேணும் கடமைச் செறிவிலே சென்றதால், அத்தகைய அவள் வாழ்வு சிறக்கத் தலைவனின் நலத்தைத் தோழியர் வேண்டுகின்றனர். பாணனும் வாழ வேட்டது, அத்தகு பெருங் கற்பினாளுக்குத் தலைவன் துயர்விளைத்தற்குக் காரணமாகிய பரத்தையைக் கூட்டுவித்த அவன், அத்தீச்செயலின் விளைவாலே துயருறாதபடிக்கு இறையருளை விரும்பி வேட்டதாம். இது, அவன் தலைவனின் ஏவலால் இயங்கிவனேயன்றித் தன்னளவில் தலைவிக்கு ஊறு செயநினைந்து எயற்பட்டிலன் என்பதனை நினைந்த அருளினாலும் ஆம். ஆகவே, தலைவனும் ஊறின்றி வாழ வேண்டினதும் கொள்க. உள்ளுறை: 'நாளைய காஞ்சியும் சினைய சிறுமீனும் முகுதியாகவுடைய ஊரன்' என்றது, முகுதியென்ற நிலையில் உயர்ந்த ஒன்றையும் இழிந்த ஒன்றையும் ஒருசேர இணைத்துக் கூறுதலேபோலத், தலைவியையும் பரத்தையையும் காம நுகர்வு பற்றிய மட்டிலே ஒன்று போலவே நினைத்த பேதையாளனாயினாள் என்றதாம். மேற்கோள்: 'இது வாழ்த்தல் என்னும் மெய்ப்பாட்டில் வந்தது' என இளம்பூரணனார் காட்டுவர். (தொல் - மெய்ப் பாட்டியல், சூ. 12 உரை). குறிப்பு: 'வாழி ஆதன்' என்பதனை, 'வாழியாதன்' எனவே கொண்டால், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறிப்பதும் ஆகலாம். அப்போது, அவனுக்கு உட்பட்ட குறுநிலத் தலைவனாக 'அவினி'யைக் கொள்க. கொங்கு நாட்டு 'அவினாசி' என்னும் ஊர்ப் பெயர் அவினியை நினைவுபடுத்தும். மதுரைப் பக்கத்து 'அவனியா புரம்' அவினி அப்பகுதித் தலைவனாகப் பாண்டியனுக்கு உட்பட்டிருந்தவன் என்று நினைக்கவே நம்மைத் தூண்டும். 2. விளைக வயலே! துறை: மேற்செய்யுளின் துறையே யாகும்.
'வாழி ஆதன்; வாழி அவினி! விளைக வயலே; வருக இரவலர்!' எனவேட் டோளே! யாயே; யாமே, 'பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்துறை யூரன் கேண்மை வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வயல் விளைக; இரவலர் வருக' எனத் தலைமகள் விரும்பி வேண்டினாள். 'பலவான இதழ்களைக் கொண்ட நீலத்தோடு நெய்தலும் நிகராக மலர்ந்திருக்கும், குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊருக்கு உரியவனான தலைவனின் நட்பானது, தலைவியோடே வழிவழிச் சிறப்பதாக' என, யாங்கள் வேண்டினோம். கருத்து: தலைமகளோ, 'தன் இல்லறம் செழிக்க அறநெறி காக்கும் அரசன் நன்கு வாழ்தலையும், வயல்கள் பெருக விளைதலையும், வரும் இரவலர் உதவி பெற்று மகிழ்ந்து போதலையுமே' வேண்டினாள். யாமோ, 'நின் நட்பு வழிவழி அவள்பாற் சிறப்பதனையே வேண்டினோம்' என்பதாம். சொற்பொருள்: நீலம் - கருங்குவளை; மருதத்து நீர் நிலைகளில் பூப்பது. நெய்தல் - நெய்தல் நிலத்து நீர்நிலைகளிலே பூப்பது. கேண்மை - நட்பு; கேளிராக அமையும் உறவு. வழிவழி - பிறவிதோறும் புதல்வன், அவன் புதல்வன் எனத் தொடர்ந்து, குடிபெருகி வழிவழிச் சிறத்தலைக் குறிப்பதும் ஆம்; 'வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொள்ளம்' என மதுரைக் காஞ்சியிலே குறித்தாற் போன்று கொற்றம்' என மதுரைக் காஞ்சியிலே குறித்தாற் போன்று (194), நாள்தோறும் சிறக்க எனப் பொருள் கொள்வதும் பொருந்தும். விளக்கம்: வயல் விளைக என்றது விருந்தாற்றுதற்கும், இரவலர் வருக என்றது எளியோரைப் பேணுதற்கும் மனங்கொண்ட அறக்கட்டமை உணர்வே மேலோங்கி, தலைவியிடம் நின்றதெனக் காட்டுவதாம். தொழியரோ, அவள்தன் இன்ப நலமும் வழிவழிச் செழிப்பதன் பொருட்டு வேண்டினர்; அவர்கள் கேண்மை வழிவழி சிறப்பதனையும் விரும்புகின்றனர். பிறவி தோறும் நீங்கள் இப்படியே தலைவன் தலைவியராகி இன்புற்று மகிழ்க என்பது தோழியர் வேண்டுதற் கருத்தாகும். உள்ளுறை: மருதத்திற்கு உரிமையோடு கூடிய நிலத்துக்கு நிகராக, உரிமையற்ற நெய்தலும் செயித்து மலர்ந்திருக்கும் ஊரன் என்றது, உரிமையாட்டியான தலைவிக்கு நிகராக உரிமையற்ற பரத்தையையும் ஒப்பக் கருதி விரும்பித் திரியும் தலைவனின் இழுக்கத்தைச் சுட்டி காட்டுதற்கு. 3. பால் பல ஊறுக. துறை: இதுவும் மேற்சொல்லிய துறையினதே.
'வாழி ஆதன் வாழி அவினி! பால்பல ஊறுக; பகடு பல சிறக்க! என வேட்டோளே' யாயே; யாமே, 'வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன்மனை வாழ்க்கை பொலிக' என வேட்டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பசுக்களிடத்திலே பாற்பயன் மிகுதியாகச் சுரப்பதாக; பகடுகள் பலவாகப் பெருகுக' என வேண்டினள் தலைமகள். யாமோ, வயல்களிலே விதைவிதைத்துத் திரும்பும் உழவர்கள், அவ்வடிடியிலே நெல்லைக் கொண்டவராகத் தம் வீடுநோக்கிச் செல்லும், பூக்கள் நிரம்பிய ஊரனான, தலைவனின் மனையற வாழ்க்கை என்றும் சிறப்பதாக' என வேண்டினோம். கருத்து: தலைவியோ இல்லறக் கடனாற்றுவதில் முட்டுப் பாடற்ற வளமை முகுதியையே வேண்டினாள்; யாங்களோ நுங்கள் மனைவாழ்க்கை சிறப்படைவதையே விரும்பி வேண்டினோம். சொற்பொருள்: ஊறுக - சுரக்க, பகடு - எருமை வித்திய - விதைத்த. கஞல் - முகுதியாகவுடைய, மனைவாழ்க்கை - மனையாளோடு கூடிவாழும் இன்ப இல்லற வாழ்க்கை. விளக்கம்: குடும்ப நல்வாழ்வுக்குப் பாற்பயன் முகுதியும், வயல்வளம் செழித்தற்குப் பகடுகளின் பெருக்கமும் தலைவி வேண்டினாள், அவளது இல்லறக் கடனைச் செழுமையாக நிகழ்த்தலின் பொருட்டு என்க. 'வித்திய உழவர் நெல்லோடு பெயரும்' என்றது, முன் வித்தி விளைந்ததன் பயனைக் கைக்கொண்டு மீள்வர் என்பதாம். இஃது பயிர்த் தொழில் இடையறாது தொடரும் நீர்வளமிக்க ஊரன் என்பதற்காம். 'பூக்கஞல் ஊரன்' என்றது மணமலர் மிகுந்த ஊர் என்றற்காம். உள்ளுறை: தானடைதற்கு விரும்பிய பரத்தைக்கு வேண்டுவன தந்து, அவளோடு துய்ப்பதற்கான கலாச் செவ்வியை எதிர்நோக்கும் தலைவன், முன்னர் அவ்வாறு தந்து கூடுதற்கு முயன்ற மற்றொருத்தி, அப்போதிலே இசைவாகிவர, அவளோடுஞ் சென்று கூடி இன்புறுவானாயினான் என்பதைக் குறிப்பாகச் சுட்டி உணர்த்த, 'வித்திய உவார் நெல்லொடு பெயரும்' என்று கூறினளுமாம். 2. 'பூக்கஞல் ஊரன்' என்றது, மலர்கள் மிகுதியாகி மணம் பரப்பி மகிழ்வூட்டுதலே போன்று, பரத்தையரும் பலராயிருந்து, நாள்நாளும் இன்பமூட்ட, அதிலேயே மகிழ்பவன் தலைவன் என்பதை உணர்த்துவதாம். 3. 'பால் பல ஊறுக' என்றது, தலைவி மகப் பெற்ற தாயாகி மாண்படைந்தவள் என்னும் சிறப்பைக் குறிப்பாகச் சுட்டும். இறைச்சி: 'ஊரன் தன் மனைவாழ்க்கை பொலிக' என வேட்டேம்' என்றது, அதனைக் கைவிட்டுப் புறம்போன செயலால் அவளடைந்த துயரம் இனியேனும் நிகழாதிருப்பதாக என்று தெய்வத்தை வேண்டியதாம். தலைவனுடனிருந்து இயற்றுவதே மனைவாழ்க்கையிற் பொலிவான சிறப்புத் தருவது என்பது கருதி, அதற்கருளத் தெய்வத்தை வேண்டியதுதாம். 4. பகைவர் புல் ஆர்க! துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே ஆகும்.
'வாழி ஆதன்; வாழி அவினி! பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக! என வேட்டோளே யாயே; யாமே, 'பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் கழனி யூரன் மார்பு பழன மாகற்க' எனவேட் டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பகைவர், தம் பெருமிதமிழந்து தோற்றாராய்ச் சிறைப்பட்டுப் புல்லரிசிச் சோற்றை உண்பாராக! பார்ப்பார், தமக்கான கடமையினை மறவாதவராக, தமக்குரிய மறைகளை ஓதிக்கொண்டே இருப்பாராக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ, 'பூத்த கரும்புப் பயிரையும், காய்த்த நெற்பயிரையும் கொண்ட கழனிகளையுடைய ஊரனின் மார்பானது, பலருக்கும் பொதுவான பழனமாகாதிருப்பதாக' என வேண்டினேம். கருத்து: தலைவியோ, நாடு பகை யொழிந்து வாழ்கவெனவும், மாந்தர் அவரவர் கடமைகளைத் தவறாது செய்திருக்க எனவும், பொதுநலனே என்றும் செழிக்க வேண்டினாள். யாமோ, தலைவன் புறவொழுக்கம் இல்லாதானாக, அவளுக்கே என்றும் உரிமையாளனாக, அவளுடனேயே பிரியாது இன்புற்று இருக்குமாறு அருளுதலை வேண்டினோம். சொற்பொருள்: புல் ஆர்க - பகைத்தெழுந்தவன் தோற்றுச் சிறைப்பட்டாராய்த் தம் பழைய செழுமையிழந்து புல்லரிசிச் சோறே உண்பவர் ஆகுக; பகையொழிக என்பதாம் பார்ப்பார் - ஓதலும் ஓதுவித்தலுமே கடனாகக் கொண்டு அறம்பேணி வருவார்; அவர், அவர் தம் கடனே தவறாது செய்வாராகுக. பழனும் - ஊர்ப் பொதுநிலம்; யாருக்கும் பயன்படுதற்கு உரிமையாகியும், எவருக்கும் தனியுரிமையற்றும் இருக்கும் நிலம். விளக்கம்: நாடு பகையற்றிருப்பதனையும், மாந்தர் அவரவர் கொண்ட கடன்களைச் சரிவரச் செய்து வருதலையும் வேண்டினாள், அவ்வாறே தன் இல்லறக் கடன்களையும் தான் செவ்விதே செய்தற்கு விரும்பும் விருப்பினாள் என்பதனால், 'பழன மாகற்க நின் மார்பு' என்று தோழியர் வேண்டியது, அத்தகு கற்பினாளுக்கே உரிமையுடைய இன்பத்தை, உரிமையில்லார் பலரும் விரும்பியவாறு அடைந்து களிக்கும் நிலை தொடராதிருக்க வேண்டியதாம். 'பார்ப்பார் ஓதுக' என்றது, அதனால் நாட்டிலே நன்மை நிலைக்கும் என்னும் அவரது நம்பிக்கையினை மேற்கொண்டு கூறியதாம். உள்ளுறை: பூத்துப் பயன்படாது ஒழியும் கரும்பையும் காத்துப் பயன்தரும் நெல்லையும் ஒருசேரச் சுட்டிக் கூறியது, அவ்வாறே பயனுடைய அறத்தினைத் தெரிந்து பேணா தானாகிக் குடிநலன் காக்கும் தலைவியையும், பொருளே கருதும் பரத்தையரையும் ஒப்பக் கருதி இன்பம்காணும் போக்கினன் தலைவன் என்று கூட்டி, அவன் பிழை காட்டுதற்காம். பரத்தையர் தம் குடிமரபு தழைக்கப் புதல்வர்ப் பெற்று உதவுகின்ற தகுதியற்ற நிலையை, 'அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றிசான்ற கற்பொடு எம்பாடாதல் அதனினும் அரிதே' எனும் நற்றிணையால் உணர்க (நற். 330). 5. பிணி சேன் நீங்குக! துறை: இதுவும் மேற்குறித்த துறை சார்ந்ததே.
'வாழி ஆதன்; வாழி அவினி! பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக! என வேட்டோளே யாயே; யாமே 'முதலைப் போத்து முழுமீன் ஆரும் தண்துறை யூரன் தேர் எம் முன்கடை நிற்க' என வேட்டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நாட் பசியில்லாதாகுக; பிணிகள் நெருக்காதே நெடுந்தொலைவு நீங்கிப் போவனவாகுக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ, 'முதலையின் இளம்போத்தும் முதிர்ந்த மீனைப் பற்றி உண்கின்ற, குளிர்ந்த நீர்த்துறை அமைந்த ஊருக்கு உரியவனான தலைவனின் தேரானது, எம் வீட்டின் தலைவாயிலிலேயே எப்போதும் நீங்காதே நிற்பதாகுக' என வேண்டினோம். கருத்து: தலைமகள் நாடெல்லாம் நன்கு செழித்து வாழ்தலையே வேண்டினாள்; யாமோ, அவள் தலைவனோடு என்றும் கூடியின்புற்றுக் களிப்புடன் வாழ்தலையே விரும்பி வேண்டினேம். சொற்பொருள்: சேண் - நெடுந்தொலைவு. போத்து - இளம் பருவத்துள்ளது. முழுமீன் - முற்ற வளர்ந்த மீன். ஆர்தல் - நிறையத்தின்றல். முன்கடை - தலைவாயில்; 'முன்', 'கடை' என இரண்டையும் இணைத்துச் சொன்னது, வீட்டின் பின்பகுதியிலேயே கடைவாயிலாகத் தோன்றும் என்பது பற்றி என்க; இது பெண்டிர் தம் பேச்சு மரபு. விளக்கம்: 'உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியல்வதே (குறள் 734)' சிறந்த நாடாதலின், அத்தகைய நாட்டிடத்தேயே இல்லற நல்வாழ்வும் நிலையாகச் சிறக்குமாதலின், அறக்கடைமையே நினைவாளாயினாள், அதனையே வேண்டினள் என்க. தோழியரோ, அவனும் அவளுடனிருந்து அவளை இன்புறுத்தித் துணை நிற்றலையே நினைவாராக, 'அவன் தேர் எப்போதும் தம் வீட்டுத் தலைவாயிலிலேயே நிற்பதாகுக' என வேண்டுவாராயினர். தலைவன் தேர் முன்கடை நீங்காதே நிற்பதாயின், அவனும் இல்லிலேயே தலைவியுடன் பிரியாதிருப்பவன் ஆவான் என்பதாம். உள்ளுறை: முதலைப் போத்தானது, தன் பசி தீர்த்தலொன்றே கருத்தாக முழு மீன்களையும் பற்றியுண்டு திரிதலே போலத், தலைமகனும் தன்னிச்சை நிறைவேறலே பெரிதாகப் பரத்தையரைத் துயுத்துத் திரிவானாயினன் என்பதாம், இதனால் துயருறும் தலைமகள், மற்றும் இல்லத்துப் பெரியோர் பற்றிய நினைவையே அவன் இழந்து விட்டனன் என்பதும் ஆகும். குறிப்பு: ஒன்று முதலாக ஐந்து முடியவுள்ள இச் செய்யுட்கள் எல்லாம் கற்பின்கண் நிகழ்ந்தவை காட்டுவன; 'தன்கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம்' என்னும் மெய்ப்பாட்டினைப் புலப்படுத்துவன; பிரிவுத் துயரினை ஆற்றியிருந்த தலைவியின் பெருந்தகுதிப் பாட்டை, குலமகளிரின் நிறைவான மாண்பினைக் கூறுதலான பயனைக் காட்டுவன எனலாம். 'இல்லவள் மாண்பானால்' என வள்ளுவர் கூறும் பெருமாண்பும் இதுவேயாம். 6. வேந்து பகை தணிக! துறை: களவிற் பலநாள் ஒழுகி வந்து, வரைந்து கொண்ட தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள், 'நீயிர் இங்கு இழைத்திருந்த திறம்யாது?' என்றாற்கு, அவள் சொல்லியது. [து-வி: விரைவிடை வைத்துப் பிரிந்து சென்றவன், திரும்பி வந்து முறையாகத் தலைவியை வரைந்து, அவளோடே மணமும் கொண்டு, அத் தலைமகளோடே இல்லறமும் பேணி இன்புற்றிருக்கின்றனன். அதுகாலை, அவன் தோழியிடம், தான் வரையாது காலம் நீட்டித்த அந்தப் பிரிவுக் காலத்தே, அவர்கள் எவ்வாறு நினைந்திருந்தனர் என்பது பற்றிக் கேட்க, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தே கொள்ளும் தலைவியின் பிரிவுத் துயரம் குறிஞ்சித் திணையின்பாற் படுவது; எனினும், இது இல்லறமாற்றும் காலத்தே உசாவிக் கேட்கச் சொன்னதான கற்பறக் காலத்ததாதலின் மருதத் திணையிற் கொளற்கும் உரித்தாயிற்று என்க; மருதக் கருப்பொருள் பயின்று வருதலையும் நினைக்க.]
'வாழி ஆதன்; வாழி அவினி! வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக! என வேட்டோளே, யாயே; யாமே, 'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை யூரன் வரைக எந்தையும் கொடுக்க' என வேட்டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வேந்தன் பகை தணிவானாக; இன்னும் பல ஆண்டுகள் நலனோடு வாழ்வானாக!' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ 'அகன்ற பொய்கையிடத்தே, தாமரையின் முகைகளும் தோன்றும் குளிர்ந்த நீர்த்துறையுடைய ஊருக்குரியவனாகிய தலைமகன் வரைந்து வருவானாக; எம் தந்தையும் இவளை அவனுக்குத் தருவானாக' என வேண்டியிருந்தோம். கருத்து: நின்னை எதிர்பட்ட போதே, 'நீ வரைந்தாய், எனத் தலைவி உளங்கொண்டனள்; ஆதலின், இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி வேண்டியிருந்தனள். யாமோ, 'தலைமகன் விரைவில் வரைந்து வருவானாக; என் தந்தையும் கொடுக்கத் தலைவியை மணந்து, என்றும் பிரியாது இன்புறுத்தி வாழ்வானாக' என நின்வரவையே வேண்டியிருந்தோம். சொற்பொருள்: நந்துக - பெருகுக. முகைதல் - அரும்புதல். எந்தை - எம் தந்தை; தலைமகளின் தந்தையே, உரிமை பற்றி இவ்வாறு தோழியும் தந்தையெனவே குறித்தனள். விளக்கம்: 'நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவுமாகும்' (தொலை பொருள் 43) என்னும் மரபின்படி இவை நினைக்கப்படுகின்றன. 'வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக' என்றலின், இப் பிரிவினை வாளாண் பிரிவாகக் கொள்ளுதலும் பொருந்தலாம். உள்ளுறை: மலராது முகையளவாகவே தோன்றினும், தோன்றிய தாமரை முகை பலராலும் அறியப்படுதலே போல, அவள் களவைப் புலப்படுத்தாது உளத்தகத்தே மறைந்தே ஒழுகினும், அஃது பலராலும் அறியப்பட்டு அலராதலும் கூடும் எனவும்; ஆகவே விரைந்து மணங்கோடல் வாய்க்க வேண்டும் எனவும் வேண்டினேம் எனக் கூறியதாகக் கொள்க. மேற்கோள்: 'அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்' (தொல். கற்பு 9, இளம்). என்பதன் உரையில், களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் எல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின், அப்பரவுக் கடன் கொடுத்தல் வேண்டும் எனத் தலைவற்குக் கூறுமிடத்துத், தோழிக்கு இவ்வாறு கூற்று நிகழும் என்றும் உரைப்பர். ஆகவே, வேண்டிய தெய்வம் வேண்டியது அருளினமையால், அதற்குப் பரவுக் கடன் தரவேண்டும் என்று தோழி கூறியதாகவும் கொள்ளலாம். பிற பாடம்: துறைக் குறிப்பில், 'நீயிர் இழைத்திருந்த திறம்' என்னுமிடத்து, 'நீயிர் நினைத்திருந்த திறம்' எனவும் பாட பேதம் கொள்வர். குறிப்பு: 'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன்' என்றதும், மலர்ந்து மணம் பரப்பும் மலர்களையுடைய தாமரைப் பொய்கையிடத்துத் தானே முகைகளும் முகிழ்த்துத் தோன்றுமாறு போல, கற்பறம் பேணி வாழும் மகளிரிடையே, தலைவியும் மணம் பெறாத முகை போல மணமற்றுத் தோன்றுகின்றனள் என்று உள்ளுறை பொருள் கூறலும் கூடும். முகை விரிந்து மணம் பரப்பலே போலத் தலைவியும் மணம் பெற்றுக் கற்பறத்தால் சிறப்பெய்த வேண்டும் என்பதாம். 7. அறம் நனி சிறக்க! துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே யாம்.
'வாழி ஆதன்; வாழி அவினி! அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!' என வேட் டோளே, யாயே; யாமே, 'உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும் தன்துறை யூரன் தன்னூர்க் கொண்டனன் செல்க' என வேட்டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க' அறவினைகள் மிகுதியாக ஓங்குக; அறம் அல்லனவாகிய தீச்செயல்கள் இல்லாதேயாகி முற்றவும் கெடுவதாக' எனத் தலைமகள் விரும்பி வேண்டி இருந்தனள். யாமோ, 'உளை பொருந்திய பூக்களைக் கொண்ட மருத மரத்தினிடத்தே, குருகுகள் தன் இனத்தோடே அமர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்த் துறையுள்ள ஊருக்குரியவனான தலைவன், இவளைத் தன்னூர்க்குத் தன் மனையாளாக்கிக் கொண்டு செல்வானாகுக' என விரும்பி வேண்டியிருந்தோம். கருத்து: தலைமகளோ, நாடெல்லாம் நன்மையாற் செறிவுற்று வாழ்தலையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவள் நின்னை மணந்து மனையறம் பேணிக் கொள்ளலையே விரும்பி வேண்டியிருந்தோம். சொற்பொருள்: அல்லது - அறம் அல்லாதது; தீவினை. உளைப்பூ - உளை கொண்டதனா பூ; உளை - உட்டுளை. குருகு - நீர் வாழ் பறவை; நெய்தற்குரிய இதனை மருதத்துக் கூறினர். 'எந்நில மருங்கின் பூவும் புள்ளும்' என்னும் விதியால் (தொலை. பொ. 19) என்க. விளக்கம்: 'அறம் நனி சிறக்கவே அல்லது கெடும்' எனினும், அதனைத் தனித்து 'அல்லது கெடுக' என்றது, தீவினை முற்றவுமே இல்லாதாதலை நினைவிற் கொண்டு கூறியதாம். உள்ளுறை: 'கிளைக்குருகு உளைப்பூ மருதத்து இருக்குமாறு போலத் தலைமகளும் நின் மனையாட்டியாக நின் இல்லத்தே இருந்து, தன் மனைக்கடன் ஆற்றுவாள் ஆகுக' என வேண்டினேம் என்பதாம். 8. அரசு முறை செய்க! துறை: இதுவும் மேற் செய்யுளின் துறையே கொண்டது.
'வாழி ஆதன்; வாழி அவினி! அரசு முறை செய்க; களவு இல்லாகுக!' எனவேட் டோளே, யாயே; யாமே, 'அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும் பூக்கஞல் ஊரன் சூள், இவண் வாய்ப்பதாக என வேட்டேமே! தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! அரசு முறை செய்வதாகுக; களவு எங்கணும் இல்லாது ஒழிக' என வேண்டினள் தலைமகள். யாமோ, 'அசையும் கிளைகளோடு கூடிய மாமரத்திலே அழகான மயில் இருப்பதாகின்ற, பூக்கள் நிறைந்த ஊருக்குரிய தலைவன், முன்னர்ச் செய்த சூளுறவானது இப்போது மெய்யாகி விளைவதாக' என வேண்டியிருந்தோம். கருத்து: அவளோ, நாட்டின் பொதுநலனையே வேண்டியிருந்தாள்; யாமோ அவள் திருமணம் விரைவில் வாய்ப்பதனையே வேண்டியிருந்தோம். சொற்பொருள்: முறை செய்க - நீதி வழங்குக; 'ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யாவர் மாட்டும், தேர்ந்து செய்வஃதே முறை' (குறள். 541) என்பதனை நினைவிற் கொள்க. களவு - வஞ்சித்தால் பிறர் பொருளைக் கொள்ளக் கருதுதல். அலங்கு சினை - அசையும் கிளை. மா - மாமரம். சூள் - தெய்வத்தை முன்னிறுத்தி ஆணையாகக் கூறல்; 'கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வம் நோக்கி அருஞ்சூள் தருகுவன' (அகம். 110) என வரும், 'நின்னைத் துறந்து வாழேன்' என்றாற் போல்வதான உறுதிமொழி இது. விளக்கம்: மன்னன் முறை செய்யானெனின் நாடு கெடும்; களவு பிற தீவினைகளும் மலியும், ஆதலின், தலைமகள் அரசு முறை செய்தலையும், களவு இலையா தலையும் வேண்டினள். 'சூள் வாய்ப்பின் அவள் இன்புறுவள்' ஆதலின், யாம் அதனை வேட்டனம் என்கின்றாள். உள்ளுறை: 'அலங்கு சினை மாஅத்து அணிமயில் இருக்குமாறு போல, நின் வளமனையிலே தலைவியாகத் தலைமகள் அமைந்து, நின்குடிக்கு அழகு செய்வாளாக என்பதாம். குறிப்பு: சூள் பொய்த்தானைத் தெய்வம் வருத்தும்; சூள் பொய்ப்படின் தலைவியும் உயிர் கெடுவள்; ஆதலின், அவன் பொய்யாதானாகியும், அவள் மணம் பெற்று ஒன்று கூடியும் இன்புறுக என்று வேண்டியதுமாம். 9. நன்று பெரிது சிறக்க! துறை: இதுவும் முற்செய்யுளின் துறையே அமைந்தது.
'வாழி ஆதன்; வாழி அவினி! நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!' என வேட் டோளே, யாயே; யாமே, 'கயலார் நாரை போர்விற் சேக்கும் தண்துறை யூரன் கேண்மை அம்பல் ஆகற்க' என வேட் டேமே. தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நன்மைகள் பெரிதாகப் பெருகுவதாகுக; தீவினைகள் யாதும் இல்லாமற் போக' என விரும்பி வேண்டினாள், தலைமகள். 'கயல் மீன்களை உண்ட நாரையானது, நெற்போரிலே சென்று தங்கும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊருக்குரிய வனின் உறவானது, பிறர் பழிக்கும் 'அம்பல்' ஆகாதிருப்பதாக' என யாம் வேண்டினேம். கருத்து: 'தலைவன் வரைந்து வந்த மணந்து கொள்ளும் வரையும், இவள் உறவு அம்பலாகாது இருப்பதாக' என்பதாம்; ஆகவே, அவன் விரைவில் வரைந்து வந்து மணங்கொள்க என்பதுமாம். சொற்பொருள்: நன்று - நன்மைச் செயல்கள். கயல் - கயல் மீன். போர்வு - நெற்போர்; வைக்கோற்போர் என்பர் சிலர்; பெரும்பாலும் வயலிடங்களில் நெற்போரே நிலவும் என்று அறிக. கேக்கும் - தங்கும். அம்பல் - சொல் நிகழாதே முணுமுணுத்து நிகழும் பழிப்பேச்சு (நக்கீரர் - இறையனார் களவியுலுரை). விளக்கம்: நன்மை மிகுதியாக நாட்டிலே பெருகுதலையும், தீமை அறவே இல்லாது ஒழிதலையும் வேண்டுகின்றாள் தலைமகள், அந்நிலையே அவள் அறவாழ்வுக்கு ஆக்கமாதலின். உள்ளுறை: தலைவியின் நலனுண்டவனாகிய தலைமகன், அவளை முறையே மணந்து வாழ்தலைப் பற்றி எண்ணாதே, தன் மனையகத்தே வாளாவிருந்தனன் என்பதனை, 'கயலார் நாரை போர்விற் சேக்கும்' என்றதால் உணரவைத்தனள். நெற்போரிடைத் தங்கினும், கயலார் நாரை புலால் நாற்றத்தை வெளிப்படுத்துமாறு போல, அவன் தன் வீட்டிலேயே தன் களவுறவை மறைத்து ஒழுகினும், அது புறத்தார்க்குப் புலப்பட்டு அம்பலாதலை அவனாலும் மறைக்க வியலாது; ஆதலின், விரைவில் வந்து மணங்கொள்வானாக என வேண்டினேம் என்பதும் ஆம். 10. மாரி வாய்க்க! துறை: இதுவும் முற்செய்யுளின் துறையே.
'வாழி ஆதன்; வாழி அவினி! மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!' என வேட் டோளே, யாயே; யாமே, 'பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன் தண்துறை யூரன் தன்னொடு கொண்டனன் செல்க' என வேட்டேமே. தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! மாரி இடையறவின்றிக் காலத்தே தப்பாமல் வாய்ப்பதாக; அதனால் வளமையும் மிகுதியாகப் பெருகுவதாக!' என வேண்டினள் தலைமகள். யாமோ, பூத்த மாமரத்தினையும், புலால் நாறும் 'சிறுமீன்களையும் கொண்ட தண்ணிய நீர்த்துறைக்கு உரியவனான தலைமகன், தலைவியை மணந்து, தன்னோடும் தன்னூர்க்கு அழைத்துச் சென்று, மனையறம் பேணுவானாக' என வேண்டினேம். கருத்து: 'தலைவியோ நாட்டு வளமையினையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவளது மனையற வாழ்வு விரைவிற் கைகூடுவதனையே விரும்பினோம்.' சொற்பொருள்: மாரி - மழை; பருவமழையும் ஆம். புலால் அம் சிறுமீன் - புலான் நாற்றத்தையுடைய சிறு மீன். வளம் - நாட்டின் வளம். விளக்கம்: 'பூத்த மாமரங்களையும் புலால்நாறும் மீன்களையும் உடைய ஊரன்' என்றனள். 'அவ்வாறே தலைவியை உடன் அழைத்துப் போதலால் அவர் எழுமேனும், அவர்கள் உடனுறை மணவாழ்வால் கற்பறம் நிலைபெறும்' என்று சுட்டிக் கூறியதாம் என்றும் கொள்ளலாம். அப்போது உடன் போக்கினை நிகழ்விக்கத் தோழி தலைவனிடம் வற்புறுத்தியதும் ஆகும். குறிப்பு: 'ஆதன்' என்பதற்கு அனைத்தும் ஆதலை நிகழ்வித்த பேரருளாளன் எனப் பொருள் கொண்டு. 'வாழி ஆதன்' என்பதனை இறைவாழ்த்தாகவும், 'வாழி அவினி' என்பதனை அரச வாழ்த்தாகவும் கொள்ளலும் பொருந்தும். தன்னலம் மறந்து கற்புக் கடனே நினையும் பழந்தமிழ்நாட்டுத் தலைவியின் சால்பையும், அவள் நலனையே விரும்பி வேட்கும் தோழியரின் அன்புள்ளத்தையும் இதனாற் காணலாம். மேலும், தலைமகன் நாடுகாவற் பொறுப்புடையவன் என்பதும், அவனைக் காதலித்த தலைவியும் அதற்கேற்ப அவன் தலைவியாகும் நிலையிலே நாட்டின் நலனையே வேட்பாளாயினள் என்பதும் பொருளாகப் பொருந்துவதாம். கடமை மறந்து காமத்தால் அறிவிழக்கும் தளர்ச்சி ஆடர்தம் இழுக்குடைமையாக மட்டுமே விளங்கிற்று; பெண்டிரோ, தன்னை மணந்தானையன்றிப் பிறரைக் கனவினும் நினையாகக் கற்பினரகாவும், அவன் கொடுமையைப் பொறுத்து மீளவரும்போது ஏற்றுப்பேணும் கடமையுணர்வினராகவும் அன்றும் விளங்கினர் என்பதையும் இங்கே நினைக்க வேண்டும். |