சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 21 ... 10. வளைப் பத்து 'வளை' சிறப்பாகச் சங்குக்கே வழங்கப் பெறும் பெயராகும். சங்கறுத்து வளைகள் செய்வது அந்நாளிலும் மிகப் பெரிய கைவினைத் தொழிலாகவே விளங்கியிருக்கின்றது. 'சங்கறுப்போர்' என்றே சிலர் தம் குலத்தைக் குறிப்பதனையும் இலக்கியங்களிற் காண்கின்றோம். நெய்தல் மகளிரே அல்லாமல், பிற நானில மகளிரும் சங்கு வளையல்களை விரும்பி வாங்கி அணிந்திருக்கின்றனர். 'வளை' என்னும் சங்கின் பெயரே, பிற எவ்வாற்றானும் செய்தணியும் கையணிகளையும் குறிப்பதால், இதுவே முற்காலத்தில் பெருவழக்கிலிருந்த அணியென்பதனைக் காட்டும். 'வலம்புரி வான்கோடு நரலும்' என வரும் நற்றிணைத் தொடரால், வலம்புரி இடம்புரி எனச் சங்குகள் சுழித்திருத்தலாற் பெயரிடும் பழைய மரபையும் அறியலாம். எல்லா வகையான விழாக்காலத் தொடக்கத்தும், மற்றும் சிறப்பான சமயங்களிலும், சங்கை உரத்து முழக்குதல் மங்கல வழக்காக அன்றும் விளங்கிற்று; இன்றும் பல பகுதிகளில் விளங்குகின்றது. ஒவ்வொருவரும் முழங்கும் சங்கோசையின் தனித் தன்மை பற்றிய செய்திகளும் வரலாற்றுள் காணப்படுகின்றன. அம்முழக்கே அவர் வரவை முன்னதாக உணர்த்தும் அறிகுறியாகவும் கொள்ளப்பெற்றது. போர் முகத்தில் எழும் இச்சங்கோசைகள் பற்றிய சிறப்பினை மகாபாரதக் கதையுள்ளே காணலாம். தெய்வங்களுக்கு வழிபாடற்றும்போது முழக்கவும், நீர் முகந்து நீராட்டவும் சங்குகளே சிறப்பாகப் பயன்படுத்தப் பெற்று வருகின்றன. மாசுபடராமை பற்றிய சிறப்பும் தூய வெண்மையாம் தகைமையும் சங்கினைத் தேர்ந்து வழி பாட்டுக்கு உதவியாகக் கொண்டதற்குக் காரணமாகலாம். பெண்கள் வளையணிதல் இயல்பாதலோடு, அது கழன்று வீழாமற் படிக்குச் செறிவாகவும் பார்த்து அணிவார்கள். இதனால், தலைவியர் பிரிவுத் துயரால் வருந்தி மெலியும்போது வளை நெகிழ்தலும் கழல்தலும் நிகழ்பவாயின. இதுபிறரும் அவர் உளத்துயரை அறியுமாறும் செய்தன. ஆகவே, காதல் வாழ்வில் உடனுறை காலத்தே செறிதலும் பிரிந்துறை காலத்தே நெகிழ்தலும் இயல்பாக, இலக்கியங்களினும் இவற்றைக் குறித்து நயம்படப் புலவர்கள் பலவும் காட்டி உரைப்பாராயினர். இவ்வாறு, செய்யுள் தோறும் வளையாகிய காதற் கருப்பொருள் சிறந்துவர அமைந்த பத்துச் செய்யுட்களைக் கொண்ட பகுதியாதலால், இதனை 'வளைப்பத்து' என்றனர். வளையொலியே அடையாளம் காட்டி அகத்தே அவளை நிரப்பித்தலும் காதற்றலைவனிடத்தே உளதாம் அக நெகிழ்ச்சியாகும். 191. நெஞ்சம் கொண்டு ஒளிந்தோள்! துறை: 'நின்னாற் காணப்பட்டவள் எவ்விடத்து, எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. (து.வி.: தலைவனின் காதலை முதன்முதலில் ஏற்காது தடுத்துப் பலவுரைத்தும், அவன் அதனையே பிடிவாதமாகப் போற்றி நிற்கப், பாங்கன், அவன் உளங்கொண்டாளைப் பற்றிய விவரங்களை வினாவுகின்றான். அவனுக்குத் தலைவன் அவளைப் பற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
கடற்கோடு செறிந்த வளையார் முன்கைக் கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல் கானல் ஞாழற் கவின்பெறு தழையள் வரையர மகளிரின் அரியள் என் நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே! தெளிவுரை: கடற்சங்காலாயின செறிந்த வளைகள் விளங்கும் முன்னங் கைகளையும், கழிப்பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலை விளங்கும் கரிய பலவான கூந்தலையும், கானலிடத்து ஞாழலின் அழகிய தழையாலாயின தழையுடையினையும் கொண்டவளாகவும், வரையிடத்துச் சூரர மகளிரினுங் காட்டில் அரிய வனப்புடையவளாகவும் விளங்குபவளே, நிறையுடைமையால் கட்டுக்கு உட்படுத்த இயலாதே சிதைந்து தளர்வுற்ற என் நெஞ்சத்தினைக் கைப்பற்றிக் கொண்டு, மறைந்து போயினவள் ஆவாள்! கருத்து: 'அவளை அடைந்தாலன்றி யான் இனிக் கணமும் உயிர் வாழேன்' என்றதாம். சொற்பொருள்: கோடு செறிந்த வளை - சங்கை யறுத்துச் செய்யப் பெற்ற செறிவான வளைகள். கழிப்பூ - கழியிலுள்ள பூ; நீலமும் நெய்தலும். கவின் - அழகு. வரையர மகளிர் - மலையிடத்தே வாழும் தேவமகளிர். நிறையரு நெஞ்சம் - ஒன்றைச் சார்ந்து நிறுத்தல், அரிய உள்ளம்; பலவாகச் சிதறிப் போகும் மனம். விளக்கம்: முன்கை, கூந்தல், தழையுடை ஆகியவற்றை வியந்து கூறியதனால், தான் அவளோடும் இயற்கைப் புணர்ச்சி பெற்று மகிழ்ந்ததையும் குறிப்பாற் கூறினான்; மீண்டும் அவளை அடையாது வறிதே அலைந்தேங்கி வருந்துவான், 'அது வரையர மகளிரின் மாயமா?' என்றும் கூறினான், அவளை அவரினும் சிறந்தாள் என்றும் மயங்கினான். 'சூரர மகளிரின் பெறற்கரியோள்' என்று அகத்தும் வரும் - (அகம், 162). 'நிறையரு நெஞ்சம் கொண்டு ஒளித்தாள்' என்றது, அவள்பால் சென்ற தன் நெஞ்சம் தன்பால் மீளாவகை தகைத்துத் தன்பாலேயே நிறுத்திக் கொண்டாள் எனப் புலம்பியதாம். இயற்கைப் புணர்ச்சி பெற்றுக் களித்தவன், பின் பிரிந்து ஆயத்தோடு செல்வாளின் பின்னே தன் உளத்தைப் போகவிட்டு? அவளை நினைந்தானாய்ப் புலம்பியது இதுவென்க. இது கேட்கும் பாங்கன், அவளைத் தான் சென்று கண்டு, தலைவனோடு மீளவும் கூட்டுவிக்க முயல்வான் என்பதாம். 192. வீங்கின விளையே! துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குச் சொல்லியது. (து.வி.: வரைவை இடைவைத்துப் பிரிந்து போயிருந்த தலைவன் வரைவொடும் வந்தானாகத், தோழி மகிழ்வோடு தலைவியைப் பாராட்டும் பொருட்டுச் செல்கின்றான். அப்போது தலைவி, தான் பிரிவுக் காலத்தே கொண்ட மெலிவையும், அது தான் இப்போதும் நீங்கியதையும், தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப் பாடிமிழ் பனித்துறை ஓடுகலம் உகைக்கும் துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன வீங்கின மாதோ - தோழி, என் வளையே! தெளிவுரை: தோழி, சங்கினம் கரையிடத்தே போந்து உலவவும், கடலிடத்தே அலைகள் எழுந்து முழங்கவும், ஒலித்தலையுடைய குளிர்ந்த துறைக்கண்ணே ஓடுதற்குரிய கலங்களை நீரிடத்தே செலுத்தும் துறைவன் பிரிந்தான் என்பதாலே, நெகிழ்ந்து போயின என் கைவளைகள், இது போது அவனும் வந்தானாக, கையிற் கிணந்து வீங்கினவே! இதனைக் காண்பாயாக! கருத்து: 'இனி என் நலிவும் தீர்ந்தது' என்றதாம். சொற்பொருள்: கோடு - சங்கு. புலம் - கடற்கரைப் பகுதி நிலம். கொட்ப - சுழல. உகைக்கும் - செலுத்தும். விளக்கம்: தலைவன் பிரிந்தான் என நீங்கிய வளைகள், அவன் வந்தானென அறியவே செறிவுற்று வீங்கின என்பாள், தன் மகிழ்ச்சியை வளைமேலேற்றிக் கூறினளாம். உள்ளுறை: கோடு நொதுமலராகவும், கடல் சுற்றத் தாராகவும், துறை அயலாராகவும், கலம் தலைவன் தேராகவும் உள்ளுறுத்து உரைத்ததாகவும் கொள்க. தலைவனின் தேர் வரவால், அயற்பெண்டிரான அவர்தம் ஆரவாரப் போக்கெல்லாம் அடங்கித், தான் மன நிம்மதியுற்றமை நினைந்து இவ்வாறு தலைவி உரைத்தனள் என்க. 193. தந்த வளை நல்லவோ? துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன், தலை மகட்கு வளை கொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளைகளைப் போலாவாய் மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது. (து.வி.: தலைவி வரைந்து மணந்து வாழ்தலையே உளத்தில் மிகவும் விரும்பினாலும், களவுறவின் களிப்பிலேயே தலைவனின் மனஞ்செல்ல, அவன் களவையே நாடி வரகின்றான். அப்படி வருபவன், ஒரு சமயம், சில வளைகளையும் தலைவிக்குத் தன் பரிசாகத் தருகின்றான். அவன் தன்னூர் மீளும்போது இடைமறித்த தோழி, அவனை விரைவில் வரைந்துவரத் தூண்டுவாளாகச் சொல்லியது இது.)
வலம்புரி உழுத வார்மணல் அடைகரை இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும் துறைகெழு கொண்க! நீ தந்த அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே! தெளிவுரை: வலம்புரிச் சங்குகள் அங்குமிங்குமாக ஊர்ந்து போதலாலே உழப் பெற்ற நெடிய மணல் பரந்த அடை கரையிடத்தே, விளங்கும் கதிர்களையுடைய முத்தங்கள் இரவின் இருள் நீங்குமாறு இமைத்தபடியே விளங்கும் துறை பொருந்திய தலைவனே! நீ தந்த, முழங்கும் கடற்பிறந்த இவ்வெள்வளைகள் தாமும் நல்லவை தாமோ? கருத்து: 'பிரிவின்கண் நெகிழ்ந்தும் வரவின்கண் செறிந்தும் நிலைமாறிப் போகாதே, என்றும் ஒரேபோலச் செறிந்திருந்து அழகு செய்வனவோ?' என்றதாம். சொற்பொருள்: வலம்புரி - வலமாகச் சுழித்த சங்குகள். வார்மணல் - நெடுகப் பரந்து கிடக்கும் மணல். அடைகரை - கடலலை மோதியலைக்கழிக்கும் முன்கரை. இலங்குகதிர் முத்தம் - கதிரிடும் ஒளிவிளங்கும் நன்முத்தம். இமைக்கும் - விட்டுவிட்டு ஒளிரும். அறைபுனல் - முழங்கும் நீர்; கடல். விளக்கம்: 'வளை தாமே நல்லவோ?' என்றது, அவை என்றும் ஒரே நலமுடைத்தாய் விளங்குதற் பொருட்டு நீதான் இவளை விரைவிலேயே மணந்து கொண்டு, என்றும் பிரியாத இல்லறவாழ்வில் திளைப்பாயாக என்றதாம். உள்ளுறை: 'வலம்புரி உழுத வார்மணல் அடைகரை இருள்கெட முத்தம் இமைக்கும்' என்றது, அலர் பேசும் பெண்டிரின் வம்புப் பேச்சாலே தலைவியின் இல்லத்தார் அடைந்துள்ள மனமயக்கம் நீங்குமாறு, நின் வரைவொடு வருதல் நல்லொளி நிறைப்பதாகும் என்றதாம். இவள் மேனியும் நல்லொளி பெறும்; பெற்றோரும் பெருமகிழ்வு கொள்வர் என்க. குறிப்பு: 'முத்தம் இருள்கெட இமைக்கும்' என்றது இரவுக்குறி எனக் காட்டிற்று. 194. கடுத்தனள் அன்னை! துறை: பகற் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு, மனைக்கண் நிகழ்ந்தது கூறிச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. (து.வி.: பகற்குறியிடத்தே தலைவியைச் சந்தித்ததற்கு வந்துபோகும் தலைவனை, இடையே தடுத்து நிறுத்தித் தோழி வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் கூறி, 'இனித் தலைவி இற்செறிப்படைவாள்; அவளை விரைய வந்து மணந்து கொள்வாயாக' என்று அறிவுறுத்தியதாக அமைந்த செய்யுள் இது.)
கடற்கோ டறுத்த, அரம்போழ் அவ்வளை ஒண்டொடி மடவரற் கண்டிகும் கொண்க நன்னுதல் இன்றுமாஅல் செய்தெனக் கொன்னொன்று கடுத்தனள் அன்னை; அது நிலையே தெளிவுரை: கொண்கனே! கடற்சங்கினை அறுத்து அரத்தால் போழ்ந்து செய்யப்பெற்ற அழகான வளைகளையும், ஒளிகொண்ட தொடியினையும் உடையாளான, மடப்பம் பொருந்திய இத்தலைமகளை நன்று காண்பாயாக. இன்று, இவளின் நல்ல நெற்றியானது ஒளி மழுங்கிற்றாக, அதற்குக் காரணம் யாதேனும் ஒன்று உண்டெனக்கொண்டு அன்பையும் இவளை ஐயுற்றனள். இதுதான் எம் மனைக்கண் இப்போது உள்ள நிலைமையாகும். சொற்பொருள்: கோடு - சங்கு. அவ்வளை - அழகிய வளை. நொடி - தோள்வளை; தொட்டுக் கிடப்பது தொடியாயிற்று. மடவரல் - மடப்பம் வருதலையுடையவள்; தலைவி. மாஅல் செய்தல் - கருமை படர்தல். கடுத்தனள் - ஐயுற்றனள். அன்னை - நற்றாய்; செவிலித்தாயும் ஆம். விளக்கம்: நுதல் ஒளிகுன்றிக் கறுத்து வேறுபட்டது, தலைவன் இரவின் கண்ணே வந்துபோகும் வழியது கடுமையும் தீமையும் நினைத்து அஞ்சியும், அவன் பிரிவைப் பொறாதே வருந்தியும் உள்ளம் அலைந்து வேறுபட்டதனால் என்க. அதனைக் கண்டதும் அன்னை, இவள் களவுறவு கொண்டாள் போலும் என ஐயுற்றனள். ஆகவே, இனி இற்செறிப்புச் செய்வாள்; இவளை நீ விரைந்துவந்து மணந்து கொள்ளலே, இனி, நீ மேற்கொள்ளத் தக்கது என்கின்றனள் தோழி. 'வளை', 'தொடி' காண்க என்றது, அவை நெகிழ்ந்தல் நோக்கி, இவள்படும் வேதனையைக் காண்க என்பதாம். இவையன்றி, இவள் என்றும் நலனோடு திகழ, மணந்து பிரியாதே கூடி நிலையாக இன்புறுத்தலே நன்று என்பதும் ஆம். மால் செய்ததென - புதிய நறுநாற்றத்தால் மயக்கம் செய்தது என்று என்பதும் ஆம். புணர்ச்சி பெற்றார் உடலிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் கமழும் என்பது கருதிக் கூறியதும் இதுவாம். 195. பாயல் வௌவியோள்! துறை: வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது. (து.வி.: வரைவு இடைவைத்துத் தலைவியைப் பிரிந்து போய் வேற்று நாட்டைத் தனியாக வாழ்கின்றான் தலைவன். தனிமைத் துயரத்தைத் தாங்காதவனாக, அவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வளைபடு முத்தம் பரதவர் பகரும் கடல்கெழு கொண்கன் காதல் மடமகள் கெடலருந் துயரம் நல்கிப் படலின் பாயல் வௌவி யோளே. தெளிவுரை: சங்கிடத்தே பிறக்கும் முத்துக்களைப் பிற புலத்தாருக்கு விலை கூறி விற்கும் தொழிலோரான பரதவர்கள் வாழும், கடல் வளம் பொருந்திய கொண்கனின் அன்புமிக்க மடமகள், எனக்கு தீங்குதற்கரிய துயரத்தினைத் தந்து, கண்டுபடுதலாகிய இனிய பாயலின் பத்தையும் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டாளே! கருத்து: ''அவளை உரிய பொருளோடு சென்று வரைந்து விரைவில் மணந்து கொள்ளல் வேண்டும்'' என்றதாம். சொற்பொருள்: வளைபடு முத்தம் - வளையிடத்தே பிறக்கும் முத்தம். பகரும் - விலைகூறி விற்கும். கெடலரும் துயரம் - நீங்குதற்கரிதான துன்பம். படல் - கண்படல். பாயல் - தூக்கம். பாயல் வௌவுதல் - உறக்கத்தை வாராதே செய்தல். விளக்கம்: 'பகர்தல்' ஏனைய பொருள்களைப் பெறக் கருதி; ஆகவே, ஏனை நிலத்தாரிடம் சென்று விலைகூறல் என்று கொள்க. மற்றையார் மிக விரும்பும் வளைபடு முத்தினை அவர் தாம் தமக்கெனப் பேணி வைக்க நினையாதே விலைபகர்தல், அது அவர்க்கு என்றும் கிடைக்கும் மலிவான பொருளாகவும், பிறர் அவர் மூலம் பெறக்கூடிய அரும் பொருளாகவும் இருப்பதால். பொருள்மேல் மனம் செல்லப் பிரிந்து போயினபோதும், தொடர்ந்து அங்கும் சென்று வருத்தும் தன்மைத்து அவள் காதல் நினைவு என்றதாம். 'கெடலரும் துயரம்' என்று அவன் அத்துயராலே நெடிது மனம் வாடிக் கூறுகின்றான். உள்ளுறை: 'வளைபடு முத்தம் பரதவர் பகரும் கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்' என்றது, அவன் விரும்பியவரை பொருளைத் தந்தால், அவனும் அவளை எனக்கு மணஞ் செய்து தந்து விடுவான்; அஃது உடனே இயலாமையிலே யானும் இவ்வாறு பொருள்தேடித் தனித்துவந்து வாடி வருந்துகின்றேன் என்று நினைந்து, உளம் வருந்தியதாகவும் கொள்க. வளைபடு முத்தமாகிய பெறற்கரிய ஒன்றையே விலைபகரும் பரதவர் ஆதலின், அவர் மகட்கும், அவர் விரும்பும் முலைவிலையான வரைபொருளைப் பெறுவதிலேயே நாட்டம் உடையவர் என்றதுமாம். மேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்தியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 45). 196. வரைந்தனை கொண்மோ! துறை: குறை மறுக்கப்பட்ட தலைமகன், பின்னும் குறை வேண்டியவழித் தோழி சொல்லியது. (து.வி.: தன் குறை கூறித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்ட, அவள் அவன் களவுறவுக்குத் தான் உதவ இயலாதென மறுத்து விடுகின்றாள். மீண்டும் அவன் அவளிடம் வந்து குறைதீர்க்க வேண்டும்போது, 'இவளை வரைந்துவந்து மணந்து இன்புறுவாயாக' என்று, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல் ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின் தெண்கழிச் சேயிறாப் படூஉம் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ! தெளிவுரை: சங்கை அறுத்துச் செய்த ஒளியுடைய வளைவினையும், கொழுவிய பலவான கூந்தலையும், பொருத்தம் ஆய்ந்து அணிந்த தோளின் தொடியினையும் உடைய மடவரலான அவளை அடைதற்கு விரும்புகின்றனையானால், தெளிந்த நீருள்ள கழியிடத்தே சிறந்த இறா மீன்கள் அகப்படும் குளிர்ந்த கடல் நிலச் சேர்ப்பனே! இவளை வரைவொடு வந்தனையாகி மணங்கொள்ளுலை உடனே செய்வாயாக! கருத்து: 'களவிலே அவளை அடைதல் நின்னால் இயலாது' என்றதாம். சொற்பொருள்: கொழும்பல் கூந்தல் - கொழுமையான பலவாகிய கூந்தல். பல கூந்தல் - பலவாக முடிக்கப்படும் கூந்தல். 'கொழுமணிக் கூந்தல்' என்பதும் பாடம். படூஉம் - அகப்படும். சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். கோடு - சங்கு. தொடி - தோளணி. மடவரல் - மடப்பம் நிரம்பியவள். விளக்கம்: தலைவியின் களவுத் தொடர்பை அறிவாளாயினும், அதனை நீடிக்க விடுதலை விரும்பாத தோழி, உலகத்தார் வரைந்து வந்து பெண்கொள்ளுமாறு போல, நீயும் முறைப்படி வந்து பெண் கேட்டுத், தமர் உவந்துதர மணத்தாற் பெறுக என்கின்றனள். உள்ளுறை: 'தெண்கழிச் சேயிறாப் படூஉம் சேர்ப்ப' என்றது, அவ்வாறே நீயும் முயன்று வரைந்துவரின் இவளை அடைந்தனையாய்க் களிப்பாய் என்றதாம். மேற்கோள்: 'உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்' எனக் கூறுதல், எனக் காட்டுவர் இளம்பூரணர் - (களவு, 24). முன்னுறு புணர்ச்சி அறியாள்போல் கரந்த தோழி உலகத்தாரைப் போல வரைந்து கொள் எனக் கூறித் தலைவனை நீக்கியதெனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (களவு, 23). 'பாங்கி உலகியலுரைத்தல்' என்று நம்பியகப் பொருள் உரைகாரர் கொள்வர் (நம்பி. களவு, 28). 197. நலம் கேழாக நல்குவள்! துறை: தலைமகள் இடந்தலைப்பாட்டின் கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. (து.வி.: களவுக் கூட்டத்திற்குக் குறித்த இடத்திலே வந்த தலைவி, தலைமகனை அடைந்து மகிழ்தற்குத் தன் நாணமும் அச்சமும் தன்னைத் தடை செய்ய, செயலற்று நினைற நிலையைக் கண்டு வியந்த தலைவன், தனக்குள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி முகம்புதை கதுப்பினள் இறைஞ்சிநின் றோளே புலம்புகொள் மாலை மறைய நலம்கே ழாக நல்குவள் எனக்கே! தெளிவுரை: ஒளி விளக்குகின்ற வளைகள் ஒலிக்குமாறு அலவனை அலைத்து விளையாடியபடியும், முகத்தை மறைக்கும் கூந்தலுடையாளாகத் தலைகுனிந்தும் இவள் நின்றனள். தனிமை கொள்ளும் மாலைப்பொழுது மறைதலும், நன்மை பொருந்திய தன் மார்பினையும் இவள் எனக்குத் தருவாள்! கருத்து: 'இவள் இன்று எனக்கு நலன் தருவாள்' என்றதாம். சொற்பொருள்: தெளிர்ப்ப - ஒலிக்க. அலவன் = நண்டு. அலைத்து - ஆட்டி விளையாடி. முகம் புதை - முகத்தை மூடி மறைக்கும். கதுப்பு - கூந்தல். புலம்பு - தனிமைத்துயரம். நலம் கேழாகம் - நன்மை பொருந்திய மார்பகம்; தழுவுவார்க்கும் தழுவத்தருவார்க்கும் நலம் தருவது என்க. விளக்கம்: தலைவனோடு கூடிக் களவுறவிலே களித்தற்கே வந்தாளேனும், இயல்பான பெண்மைப் பண்பின் செறிவு அவளார்வத்தைத் தடை செய்வதால், காதற் குறிப்பை உணரக் காட்டியபடியும், ஏதுமறியாப் பேதைச் சிறுமி போல அலவனாட்டி விளையாடியவாறும், தலைவனை எதிர்படு காலையில் கூந்தலால் தன் முகம் மறையத் தலைகுனிந்தும் நின்றனள் என்பது, அவளின் மடம் நிரம்பிய மென்மைச் செவ்வியை உணர்த்தும் இலக்கிய நல் ஓவியமாகும். புவம்புகொள மாலையிலே, அவளும் அவனுறவை விரும்பி வேட்பினும், அயலாரும் ஆயமகளிரும் கண்டு அலரெழல் நேருமென அஞ்சினளாதலால், மாலை மறைந்து இருள் படரும் போதில், அவள் தன்னை அணைத்திட இசைவாள் என்று தலைவனு கூறுவது, அவளுள்ளம் உணர்ந்து காட்டும் நயமிக்கதாகும். 'நலங்கேழ் ஆகம்' என்றது, முன்பே தான் தழுவி நலம் பெற்ற செவ்வியும், அது பெறுதல் நினைவாகவே துடித்திருக்கும் மனத்துன்பமும் தோன்றக் கூறியதுமாகும். இவற்றால், ஆயத்தாரின் ஆடல்களோடு தானும் கூடிக் கலவாமல் தனித்தொதுங்கி நின்ற தலைவி நிலையும் விளங்கும். நெய்தற்கண் புணர்ச்சி பற்றிக் கூறியதனால், இதனைத் 'திணை மயக்கம்' என்று கொள்ளல் வேண்டும். வளை தெளிர்ப்ப அலவனாட்டியது தான் வந்தது உணர்த்தியது; முகம் புதைத்தனளாக இறைஞ்சி நின்றது நாணித்தலை கவிழ்ந்தது. மேற்கோள்: ''இடந்தலைப் பாட்டில் தலைவி நிலை கண்டு கூறியது; என்று எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகம் 12). 'தலைவன் இவ்விடத்து இவ்வியற்று என்றல்' என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (களவு - 21). பாடபேதம்: 'ஆயத்து நின்றோளே' - இது இன்னும் சிறப்புடையதாகும். ஆயமகளிர் சூழ நிற்பவள் இவ்வாறு தலைவனுக்குக் காதற்குறிப்புக் காட்டினள் என்பது இதன் பொருள் நிலையாகும். 198. நெடுந்தோள் அண்ணலைக் கண்டேன்! துறை: பரத்தையர் மனைக்கண் பன்னாள் தங்கிப், பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது. (து.வி.: பலநாட்கள் பரத்தையரின் உறவிலேயே ஈடுபட்டு, அவர் வீடுகளிலேயும் தங்கியிருந்தான் தலைவன். அவர் உறவிலே இன்புறும் போதெல்லாம், சில சமயங்களில் தலைவியின் உளங்கலந்த அன்பு நெகிழ்வின் செவ்வியும், பரத்தையரின் போலியான நடிப்புணர்வும், அவனுள்ளத்தே நிழலாடுகின்றன. அவளை நினைந்து பெருகிய ஏக்கமும் எழுகின்றது. அவளை அடையாத ஆற்றாமையும் அரும்பி மிகுகின்றது. தன் மடமைக்கு நாணியும், அவளின் மாண்பினை நம்பியும், தன் வீடு நோக்கி வருகின்றான். அவனை எதிர்பட்ட தோழி வந்து, தலைமகட்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வளையணி முன்கை வாலெயிற் றமர்நகை இளைய ராடும் தளையவிழ் கானல் குறுந்துறை வினவி நின்ற நெடுந்தோள் அண்ணற் கண்டிகும் யாமே! தெளிவுரை: வளைகள் அணி செய்திருக்கும் முன்னங் கையினையும், வெண்பற்களிடையே தோன்றும் விருப்பூட்டும் இளநகையினையும் கொண்டோரான இளமகளிர்கள், விளையாடியிருக்கும் முறுக்கவிழ்கின்ற மலர்களையுடைய கான்றஃ சோலையிடத்தே, 'குறுந்துறை எவ்விடத்ததோ?' என்று நம்மை அந்தாளிலே வினவியவாறு நின்ற, நெடுந்தோளினனான நம் தலைவனை, யாமும் இங்கே வரக் காண்போம். நீதான் நின்னை ஒப்பனை செய்து கொள்வாயாக! கருத்து: 'அவனைச் சிறிது பொழுதில் இங்குக் காண்போம்' சொற்பொருள்: 'வாலெயிறு - வெண்பற்கள். அமர்நகை - விருப்பூட்டும் இளநகை. இளையர் - இளமகளிர். தலைமுறுக்கு. கானல் - கானற்சோலை. குறுந்துறை - சிறிய துறை. அண்ணல் - தலைவன்' விளக்கம்: 'குறுந்துறை வினவிநின்ற அண்ணல்' என்றது, முன் களவுக் காலத்தே நிகழ்ந்த அந்தமுதற்சந்திப்பின் நிகழ்ச்சியினை நினூவுபடுத்திக் கூறியதாகும். அத்துணை மகளிரிடையேயும், நின் நினைவேயாக, நின்னிடமே வந்து அறியானே போல வினவி நின்ற காதன்மைமிக்கவன். இடையே மனம் தளர்ந்து புறம்போயினும், மீளவும் நின்னையே நாடி வந்தனன் என்பது குறிப்பு. ஆகவே, அவனைச் சினந்து ஒதுக்காது, மகிழ்ந்து ஏற்று மகிழ்வித்து, இனியும், புறம்போகா வண்ணம் நின்னோடேயே பிணித்துக் கொள்க என்பதாம். நம் மெலிவு கேட்டதனால் ஏற்பட்ட இரக்கத்தால் வாராதே, தன்னுள்ளத்தெழுந்த ஆற்றாமையிலேயே அவன் வருகின்றானாதலின், அவனை இப்போது ஏற்றலே, அவனை என்றும் நீங்காதே நாம் நம்பாற் பிணித்துக் கொள்ளற்கு வழியாகும் என்பதுமாம். உள்ளுறை: தளையவிழ் கானலிலே, வளையணி முன்கை வாலெயிற்றமர் நகை இளையராடும் இடத்தே சென்றும், அவருள் யாரிடத்தும் மனம்போக்கி மயங்காதே, நின்னையே நாடுவானாகிக், ''புனுந்துறை யாது?'' என்றவனாகிய நெடுந்தோள் அண்ணல் என்றது, என்றும் அவன் நின்பாலேயே மாறாப் பேரன்பினன் 'என்பதனை' உள்ளுறுத்துக் காட்டிக் கூறியதாம். மேற்கோள்: ''தலைவன் புணர்ச்சியுண்மை அறிந்து தாழ நின்ற தோழி, தானும் குறையுற்றுத் தலைவி மாட்டுச் செல்லுதற்கண் கூற்று நிகழும்'' என, இதனைக் களவுக் காலத்து நிகழ்வாகவே எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு, 24). ''பாங்கியிற் கூட்டத்துள் தலைவன் இரந்து பின் நின்றமை கண்டு, தோழி மனம் நெகிழ்ந்து, தான் குறை நேர்ந்து, தலைவியிடத்தே சென்று குறை கூறுதல்'' என்று நச்சினார்க்கினியரும் இதனைக் களவுக்காலக் கூற்றாகவே கொள்வர் - (தொல். களவு, 23). ''பாங்கி இறையோற் கண்டமை கூறல்'' என நம்பியகப் பொருள் உரையும் களவுக் கூற்றாகவே கொள்ளும். குறிப்பு: களவுக் கூற்றாகக் கொள்ளுதலே நயம் - மிக்கதும் ஆகும். தன் களவுறவை மறைத்தொழுகிய தலைவியிடம், தான் அஃதறிந்தமை புலப்படக் கூறும் தோழி கூற்றாகவும், அல்லது தலைவன் குறையிரந்து நின்றதற்கிரங்கித் தலைவிபாற் சென்று தோழி அவளை வேண்டும் கூற்றாகவும் பொருள் கொண்டு மகிழ்க. 199. மணல் ஏறிக் காண்போம்! துறை: தலைமகன் ஒருவழித் தணந்துழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இது. (து.வி.: தலைவன் சிறிது நாளாகத் தன்னைக் காணுதற்கு வராமையினாலே, அவன் நினைவே மிகுதியாகக் கூறுகின்ற தோழி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)
கானல்லம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் வானுயர் நெடுமணல் ஏறி, யானாது காண்கம் வம்மோ தோழி! செறிவளை நெகிழ்த்தோள் எறிகடல் நாடே! தெளிவுரை: தோழி! செறிவாகக் கையிடத்தே அமைந்து விளங்கிய நம் வளைகளை, நெகிழ்ந்து கழன்றோடச் செய்தானாகிய அத் தலைமகனது அலையெறியும் கடல் நாட்டினை, கான்றஃ பொருந்துறைக்கண்ணே, அலைகள் முழக்கத்தோடே எழுந்து வந்து அலைக்கின்றதும். வானுற உயர்ந்து கிடப்பதுமான நெடிய மணல்மேட்டின் மேலாக ஏறிநின்று நாமும் காணலாம் வருவாயாக! கருத்து: 'அவன் நாட்டையாவது கண்டு நின் மனம் சிறிது தேறலாம்' என்றதாம். சொற்பொருள்: கலிதிரை திளைக்கும் - ஆர்ப்பரித்து வரும் அலைகள் மோதி அலைக்கும். வானுயர் - வானமளாவ உயர்ந்த எறிகடல் - அலையெறியும் கடல்; எறிதல் கரையிலே வந்து வந்து மோதிப் போதல். விளக்கம்: 'அவன் நாடு காண்போம்' என்றது, 'அவன் இன்றேனும் வருகின்றானா என்று பார்ப்போம்' என்பதைக் கருதிக் கூறியதாம். 'எறிகடல் நாடு' என்றது, 'அவ்வாறே அவனும் நம்முளத்தே எழுந்து மோதித் துயர்விளைப்பானாயினன் என்பதை நினைத்துக் கூறியதாம். 'வானுயர் நெடுமணல் ஏறிக் காண்போம்' என்றது, நன்றாகக் காணும் பொருட்டு. 'வளை நெகிழ்த்தோன்' என்றது, 'அவன் அருளற்றவனயினான்' என நொந்ததாம். 'குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ' என வரும் நற்றிணைத் தொடரும் - (நற். 235), இவ்வாறு மகளிர் தலைவன் நாட்டைக் காண விரும்புதலைக் கூறும். 'அவன் செயலாலே துயருறும் நம்போலவே, கலிதிரை திளைத்தலாலே வருந்தும் நெடுமணலில் ஏறிக் காண்போம்' என்றது, துயர்ப்படும் அது நம்மீது இரங்கி, நமக்கு உதவி செய்யும்' என்னும் உட்குறிப்பையும் கொண்டதாகும். மேற்கோள்: 'தலைவியை ஆற்றுவித்தது' இது எனக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு, 24). 200. நலங்கவர் பசலையை நகுவேம்! துறை: உடன் போக்குத் துணிந்த வழி, அதற்கு இரவின் கண் தலைமகன் வந்ததறிந்த தோழி, தலைமகளைப் பாயலுணர்த்திச் சொல்லியது. (து.வி.: தான் பிறந்து வளர்ந்த வீட்டையகன்று, தலைவனோடு உடன் போக்கிலே செல்வதற்குத் துணிந்துவிடுகின்றாள் தலைவி. இரவின் கடையாமத்தே, தலைவனும் அவள் இல்லின் ஒருபுறமாக வந்து மறைந்திருக்கின்றான். அவன் வரவறிந்த தோழி, தலைமகளைத் துயிலெழுப்பிச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
இலங்குவீங் கெல்வளை ஆய்நுதல் கவினப் பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி நலங்கவர் பசலையை நகுகம் நாமே! தெளிவுரை: விளக்கமோடே கூடியவாய்ச் செறிவுற்றிருக்கின்ற ஒளிவளைகளை உடையவளே! நின் நுணுக்கமான நெற்றியானது அழகினை எய்தும்படியாக, பொன் தேரினையுடைய கொண்கனும், நின்னை உடன்கொண்டு போதற் பொருட்டாக, இப்போதில் நம் இல்லின் புறத்தே வந்துள்ளனன். விளங்குதலான செவ்வரி பொருந்திய நின் நீள் விழிகளை நீயும் திறப்பாயாக. நம் நலத்தைக் கவரும் பசலையை அதுதான் இனிக் கெடுதலை நோக்கி, நாமும் நகையாடி மகிழலாம்! கருத்து: 'இனி நம்மை வாட்டும் பசலை நம்மை விட்டு அகலும்' என்றதாம்; 'துணிவோடு விரைந்து புறப்பட்டு எழுவாயாக' எனத் தூண்டியதுமாம். சொற்பொருள்: வீங்கு - செறிவாகப் பொருந்தியிருக்கும். 'எல்வளை' என்றது தலைவியை விளித்ததும் ஆம். ஆய் நுதல் - நுணுக்கமான அழகெல்லாம் பொருந்திய ஒளி நுதல்; என்றது, பண்டை அழகினைச் சுட்டி நினைப்பித்தது. பொலந்தேர் - பொன்மை நிறம் விளங்கும் தேர். இனியே - இவ்வேளையிலேயே. விளங்கரி - குறுக்காகப் படர்ந்திருக்கும் செவ்வரி. ஞெகிழ்மதி - மூடியுள்ள இமைகளை நெகிழ்வித்துக் கண்களைத் திறப்பாயாக; துயிர் நீத்து எழுவாயாக. நலம் கவர் - அழகைக் கவரும். நகுகம் - நகையாடுவோம். விளக்கம்: வரைவு நீட்டித்தலாலும், இற்செறிப்பின் கடுமையாலும், தலைவனைக் காணவியலாதே நுதல் பசப்புற்று வாடி நலனிழந்திருந்தாள் தலைவியாதலின், அஃது பிரிவில்லாதது மணவுறவுக் கூட்டத்தாலன்றித் தீராதென்பதாம். அது வாய்க்க உடன் போக்கு நினைந்தாள் ஆதலின், 'ஆய்நுதல் கவின, பசலையை நகுகம்' என்றனள். 'பொலந்தேர்க் கொண்கன்' என்றது, தமர் தடுக்க வியலாதபடி விரையச் செல்லும் தேருடனே வந்துள்ளான் என்றதாம். 'அவன் வந்தான்; நீயும் காலந் தாழ்த்தாயாய் உடனே புறப்படுக' என்பாள், 'இனியே நெடுங்கண் ஞெகிழ்மதி' என்கின்றனள். அதுகாறும் உறக்கம் பற்றாதிருந்தவள், 'உடன்போக்கிற்குத் தலைவன் இசைந்தான்' என்றதும் களிப்போடு நிம்மதியாகத் துயின்றனள் என்பதும், அவளைப் பிறர் காணாவகை அனுப்ப வேண்டுமே என்னும் கவலை மிகுதியால் தோழி துயிலற்றிருந்தனள் என்பதும் விளங்கும். உடன்போக்கு பின்சாமத்து இரவுப் போதிலேயே பெரிதும் நிகழக்கூடும் என்பதும் இதனால் அறியப்படும். 'பசலையை நகுகம்' என்றது, 'பசலையால் ஐயுற்று, அலருரை சொல்லித் திரிந்தாரை எள்ளி நகுவோம்' என்றதாகும். கருதலாம். 'எல் வளை' என்றது, வளையைச் சுட்டி, அஃது ஒலியெழுப்பத் தாயார் வழித்துவிடல் நேராவாறு, விழிப்பாக எழுக' என்று குறிப்பாகச் சுட்டியதும் கொள்க. பாடபேதம்: 'விலங்கரி நெடுங்கண் நெகிழ்மதி' என்பதற்குப் பதிலாக, 'நெடுங்கண் அனந்தல் தீர்மதி' எனவும் பாடம். மேற்கோள்: 'இதில் அனந்தல் தீர' உடன் கொண்டு போதற்கு வந்தானெனப் பாயல் உணர்த்தியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 39). ஆசிரியர் அம்மூவனார் பாடியவும், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தவுமான, நெய்தல் திணையின், ஐக்குறுநூற்றுச் செய்யுட்கள் நூறும் இதனோடே முடிந்தன. இவற்றுள் 129, 130ஆம் செய்யுட்கள் கிடைத்தில. முதல் நான்கு பத்துக்களும் கேட்போர் பொருளாகவும், பிற ஆறும் கருப்பொருள் பொருளாகவும் அமைந்துள்ளன. நெய்தலின் பல்வேறான தன்மைகளையும், நெய்தல் மக்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளையும், அவர்களுட் காதல் வயப்பட்டார் பல்வேறு நிலைகளிலே கொள்ளும் நினைவுச் சிதறல்களையும், ஒரு கருத்தை நயம்படச் சொல்லும் சொல்லின் திறத்தையும் இச்செயுட்கள் நன்கு ஓவியப்படுத்திக் காட்டுகின்றன. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |