சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 5 ...

4. தோழிக்கு உரைத்த பத்து

     இப் பத்துச் செய்யுட்களும், கேட்போளாகிய தோழி பொருளாகத் தொகை பெற்றுள்ளன. 'அம்ம வழி தோழி' என்றே ஒவ்வொரு செய்யுளும் விளியோடு தொடங்குகின்றது. இங்குப் பேசுவோர் பலராயினும் கேட்பவள் தோழியே. தோழியருள்ளும் பலரிடம் கூறியிருத்தல் என்றல் பொருந்துமேனும், ஒருமையிற் கூறுதல் இலக்கிய மரபு நோக்கி என்க.

31. கடனன்று என்பானோ?

     துறை: முன் ஒருநாள், தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம்விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன், பின்பும் பரந்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: முன்னோரு தடவை தலைவியோடு சென்று புதுப்புனல் ஆடினான் தலைமகன். அப்போது, அவளும் அவள் தோழியரும் கூடியிருக்கும் இடத்தே, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' எனச் சூளுரையும் விரும்பிச் செய்தான் அவன். பின்னாளில், பரந்தையரோடு புனலாட்டயர்கின்றான் என்பது கேட்டாள் தலைமகள். அவள் நெஞ்சம் பெரிதும் வேதனைப்படுகின்றது. தோழியிடம் சொல்வாள் போலத் தலைவனின் நெருக்கமான ஏவலர் பிறரும் கேட்கச் சொல்வதாக அமைந்தது இச் செய்யுள்.)

     அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
     கடனன் றென்னும் கொல்லோ - நம்மூர்
     முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
     உடனாடு ஆயமோடு உற்ற சூளே!

     தெளிவுரை: ''தோழி, ஒன்று சொல்வேன் கேட்பாயாக: நம் ஊரிடத்தே வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்துள்ள பெருந்துறைக்கண்ணே, நம்மோடும் புனலாட்டு அயர்ந்தவரான ஆயத்தாரும் அறியும்படி, நம் தலைவன் செய்த சூளுரையினைப் போற்றிக் காத்தல், தனக்குரிய கடனன்று என்று அவன் இப்போது சொல்வானோ?''

     கருத்து: 'அச் சூளுரை பொய்த்து, அவன் பரத்தையரோடும் கூடிப் புதுப்புனலாட்டு அயர்தல் உடையன் என்று' நாம் கேட்கின்றோமே என்பதாம்.

     சொற்பொருள்: 'அம்ம' என்பது கேட்பிக்கும் பொருட்கண் வந்த இடைச்சொல்; சங்க நூற்களுள் பலவிடங்களிற் காணப்படும்; 'அம்ம கேட்பிக்கும்' (தொல். சொல். 276). மகிழ்நன் - தலைவன்; மருதநிலத் தலைவனின் பெயர்; பெயரே மகிழ்வே குறியாகத் திரியும் இயல்பை உணர்த்துவது காணலாம்; முடம் - வளைவு; பெருந்துறை போல்வது. உழையர் - பக்கம் இருப்பார். கடன் - கடப்பாடு; போற்றியே ஆக வேண்டியதான உறுதிப்பாடு. உடனாடு ஆயம் - தோழியரும், தன்னுடன் நீராட்டயர்தற்கு உரிமையுள்ளவருமான ஆய மகளிர்.

     விளக்கம்: உழையர் கேட்பக் கூறியது, அவர்தாம் அவனுக்கு உணர்த்தித் தெளிவித்தலும் கூடும் என்னும் கருத்தால், 'சூள்' தெய்வத்தை முன்னிறுத்திக் கூறும் உறுதி மொழியாதலின், அங்ஙனம் கூறினான். பொய்ப்பின் தெய்வம் அவனைப் பற்றி வருத்துதல் தவறாதாதலின், தன்னை மறப்பினும், அதனையேனும் நினைந்து போற்றானோ எனக் கவலையுற்றுச் சொல்லுகின்றாள் எனவும் கொள்ளலாம்.

     மேற்கோள்: 'அம்ம' என்னும் சொல் கேட்பித்தற் பொருளில் வரும் என்பதற்கு மேற்கோள் காட்டுவர் (தொல். இடை - 29) உரையாசிரியர்கள்.

32. எழுநாள் அழுப என்ப!

     துறை: வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி: தலைமகள், தன் புறத்தொழுக்கத்தாலே தன்னோடும் ஊடிச் சினந்திருப்பதனை எண்ணி, அவளைத் தெளிவித்துத் தன்னுடன் உறவாடச் செய்யும் பொருட்டுத், தலைவன், தன் பாணர் பாங்கர் முதலியோரை ஏவுகின்றான். அவர்கள் கேட்டுத் திரும்புமாறு, தலைவி, தோழிக்குச் சொன்னாற்போல அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
     ஒருநாள் நம்மில் வந்ததற்கு, எழுநாள்
     அழுப என்ப, அவன் பெண்டிர்
     தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே!

     தெளிவுரை: 'தோழி, நீ வாழ்வாயாக. மகிழ்நன் ஒருநாள் நம் இல்லத்திற்கு வந்தானாக, அதற்கே, அவன் பெண்டிர், தீயிற்பட்ட மெழுகினைப் போல விரைய உள்ளம் உருகினராய் ஏழு நாளளவும் அழுதிருந்தனர் என்று சொன்னார்களே!'

     கருத்து: 'யாம் அவன் பிரிவை ஆற்றும் திறலுடையேம்; ஆற்றாது உருகும் அவரிடத்தேயே சென்று அவன் தலையளி செய்வானாக' என்பதாம்.

     சொற்பொருள்: 'நம்' - தனித்தன்மைப் பன்மை. என்ப - என்பார்; அசையும் ஆம். ஒன்றுக்கு ஏழென்று மிகுத்துக் கூறுதல் இலக்கிய மரபு (குறள் 1269). 'அவன் பெண்டிர்' என்றது பரத்தையர் என்பார்களே! ஆதலின், அவரிடத்தேயே சென்று, தலைவன் அவருக்கே மகிழ்வு தருவானாகுக' என்றது மனவெறுப்பாலே, கூறியதாம். தன்போல் உரிமையற்றாரும், அவன் தரும் பொருளே கருதி அவனுக்கு இன்பம் அளிப்பாரும் ஆயினவரான பரத்தையர், அவ்வாறு நெஞ்சழிதல் இலர் என்பதே இதன் உட்கருத்தாம். பிறரிடத்தே தோன்றிய சிறுமை பொருளாகப் பிறந்த மருட்கை இது என்க.

33. தலைத்தலைக்கொள ஆடுவான்!

     துறை: இதுவும் மேற்பாட்டின் துறையே யாகும்.

     அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
     மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
     பெண்டிரொ டாடும் என்ப; தன்
     தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே!

     தெளிவுரை: ''தோழி! வாழ்வாயாக! மருத மரங்கள் மிகுந்தும் ஓங்கியும் வளர்ந்திருப்பதான, இதழ்விரிந்த பூக்களையும் மிகுதியாகவுடைய, பெரிய நீர்த்துறையிடத்தே, நம் தலைவன், குளிர்ந்த தாரணிந்த தன் மார்பினைப் பரத்தையர் தலைக்குத் தலை ஒவ்வொருவரும் புணையாகப் பற்றிக் கொண்டு நீராடி இன்புற்று மகிழுமாறு தந்து, அவருடன் கூடிக் களிப்புடன் நீராட்டயவர்வான் என்பார்களே!''

     கருத்து: 'அவ்வாறு பலராலும் விரும்பித் தழுவப்படும் நம் தலைவனுக்கு, நம்முடையதான உறவுதான் இப்போதிலே தேவையற்றதல்லவோ' என்று கூறி, வாயில் மறுத்ததாம்.

     சொற்பொருள்: 'தலைத்தலைக் கொள்' என்றது, தலைக்குத் தலை வந்து பற்றிக் கொள்ள. அவன் அதனால் களிப்பும், எவர்க்குத் துணையாவது என்றில்லாது பற்றினார்க்கெல்லாம் துணையாகும் இன்ப மயக்கமும் கொள்வான் என்றற்காம். 'விரிபூம் பெருந்துறை' என்றது, கரைக்கண் மரங்கள் உதிர்த்த பூக்களும், நீராடுவார் கழித்த பூக்களுமாகப் பெருகிப் பரந்து, நீரையே மேற்புறத்தே மூடிக் கொண்டிருக்கும் தன்னையுடைய பெரிய நீராடுதுறை என்றற்காம். இதனால், இவன் ஆடிய ஆட்டத்தை ஊராட் பலரும் காண்பர் என்பதும், அவன் அதனையும் நினையாத நாணிலியாயினான் என்று நொந்தததும் கொள்க. 'வவ்வு வல்லார் புணையாகிய மார்பினை' என்று அவருள், பிறரை ஒதுக்கிப் பற்றிக் கொள்ளும் வல்லமையுள்ளவளுக்குப் புணையாக மகிழும் மார்பினை உடையனாயினை என்று, பரிபாடல் இவ்வாறு ஒரு காட்சியை மேலும் நயப்படுத்தும் (பரி. 6).

34. ஆம்பல் வண்ணம் கொண்டன!

     துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே!

     அம்ம வாழி, தோழி, நம் ஊர்ப்
     பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்
     தாதோர் வண்ணம் கொண்டன
     ஏதிலா ளர்க்குப் பசந்த, என் கண்ணே!

     தெளிவுரை: தோழி, கேட்பாயாக; நம்மிடத்தே அன்பற்றவனாகவே ஒழுகிவரும் தலைவனின் பொருட்டாகப் பசப்புற்று என் கண்கள், பொய்கையிடத்தே பூத்த, புழை பொருந்திய தண்டினையுடைய ஆம்பற் பூவின் தாதுபோலும் நிறத்தையும் கொண்டனவே! அதுதான் ஏனோ?''

     கருத்து: நம்மை மறந்தானை மறக்கமாட்டாதே நாம் ஏங்கிச் சோரும் நிலையான இதுதான் என்னையோ? என்பதாம்.

     சொற்பொருள்: பொய்கை - நீர்நிலை. 'மானிடரால் ஆக்கப்படாது தானாகவே அமைந்த நீர்நிலை' என்பர் நச்சினார்க்கினியர். புழை - துளை. கால் - தண்டு; ஆம்பலின் தண்டு உள்ளே துளையுடையது என்பதனை, 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்' என்று (நற். 6) பிறரும் காட்டுவர். ஏர்; உவம உருபு. வண்ணம் - நிறம்; அது பொன்னிறம்.

     விளக்கம்: 'பிழைக்கால் ஆம்பல்' என்று சொன்னது, அவ்வாறே உள்ளத்தே உள்ளீடான வலுவற்ற தன்மையன் தலைவன் என்று நினைந்து கூறியதும் ஆம். ஊர்ப் பொய்கை ஆம்பலின் தாது நாடி வரும் வண்டினத்துக் கெல்லாம் இனிமை தருவது போல, தலைவனும் தன்னை நாடிய பரத்தையர்க் கெல்லாம் இன்பம் அளிப்பானாயினான் என்பதுமாம்.

35. மாமைக் கவினும் பசந்ததே!

     துறை: வாயிலாய்ப் புகுந்தார், தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது இது.

     (து.வி: ஊடியிருப்பாளிடம், தலைவனுக்குப் பரிந்து பேசச் சென்றவர்கள், தலைவனின் சிறப்பினைப் பலவாகக் கூறி நிற்க, அதுகேட்டுப் பொறாதாளான தலைவி, 'இப் பொய்யுரை கேட்டேபோலும் என் மேனி பசந்தது' எனத் தன் தோழியிடம் கூறுவாள் போல, அவர்கள் பேச்சையும் மறுக்கின்றனள்.)

     அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
     பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
     நிறத்தினும் நிழற்றுதன் மன்னே!
     இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே!

     தெளிவுரை: 'தோழி, வாழ்வாயாக! நம் ஊர்ப் பொய்கையிடத்தே யுள்ள ஆம்பலின், நார் உரிக்கப் பெற்ற மெல்லிய தண்டினுங் காட்டில் ஒளியுடையதாக முன்னர் இருந்தது என் மேனியுன் மாமைக் கவின். அதுதான், இப்போது, இவர் கூறும் பொய்யுரை பலவும் கேட்கவுந்தான் கெட்டழிய, அழகழிந்து பசந்ததே!'

     கருத்து: 'அவன் பொய்ப் பேச்சினை எல்லாம் வாய்ம்பையே எனக் கொண்டு மயங்குதல் இனியும் இலேம்' என்பதாம்.

     சொற்பொருள்: 'ஆம்பல் நார் உரி மென்கால் நிறம் மாமைக் கவினின் நிறத்துக்கு உவமையாகலின், இதனைச் செவ்வாம்பல் தண்டு என்று கொள்க. 'மன்' : கழிவிரக்கப் பொருளது. நற்றிணையிலும், 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால், நார் உரித்தன்ன மாமைக் கவின்' (நற்-6) என வருவது காண்க. கவின் - பேரெழில். பசந்தன்று - பசந்தது.'

     விளக்கம்: நாருரிக்கப் பெற்ற சிவப்பு ஆம்பலின் தண்டு, பேரெழிலும் ஒளியும் உடையதேனும், அதனைக் கவிந்து பேணிக் காக்கும் நாரினை இழந்தமையாலே விரைவில் அழகழிந்து வாடிப்போவது போல, அவன் செய்யும் கொடுமையால், என் மாமைக் கவினும் காப்பாரின்றிக் கெட்டது என்பதாம். மாமைக் கவின் - மாந்தளிரின் எழில் கொண்ட மேனியின் வனப்பு.

36. நாம் மறந்திருத்தலும் கூடும்!

     துறை: 'தான் வாயில் நேரும் குறிப்பினளாயினமை அறியாது தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால், அவட்குத் தலைமகள் சொல்லியது.'

     (து.வி: தலைவன் பரத்தைமை ஒழுக்கத்துப் புறம்போனானாயினும், தலைவியால் அவனை மறக்க முடியவில்லை. தோழி வாயிலோர்க்கு இசைவு தருவதற்கு மறுத்தவிடத்து, அவள் தான் அவனை ஏற்கும் குறிப்பினளாதலைத் தெரிவிக்குமாறு சொல்லி, அத் தொழியிடம் தன்னடைய மனநிலையும் இவ்வாறு புலப்படுத்துகின்றனள்.)

     அம்ம வாழி, தோழி! ஊரன்
     நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
     உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே.
     கயல்எனக் கருதிய உண்கண்
     பயலைக்கு ஒல்கா வாகுதல் பெறினே.

     தெளிவுரை: ''தோழி வாழ்வாயாக! தலைவன் நம்மை மறந்து இருப்பவனாயின், கயல் போலும் மையுண்ட நம் கண்கள், அது குறித்துப் பசலை அடையாதிருப்பதற்கு வேண்டிய உறுதிப்பாட்டினைப் பெற்றனவானால், அவனை நினையாதேமாய் மறந்து இருத்தல் நமக்கும் இயல்வதாகுமே!''

     கருத்து: எம் கண்கள் பிரிவுத் துயரால் பசலையடையாதிருக்கப் பெற்றோமில்லையே; ஆகவே, அவனை ஏற்பதே செய்யத்தக்கது என்பதாம்.

     சொற்பொருள்: 'அமைகுவானாயின்' எற்து, பரத்தையிடத்தேயே தங்கியிருக்கும் ஒழுக்கத்தனாயின் என்பதாம். ஒல்காவாகுதல் - தளராதிருத்தலைப் பெறுதல்.

     விளக்கம்: அவன் பரத்தை வீட்டிலேயே தங்கிவிட்டாலும், தலைவியின் நெஞ்சம் அவனையே, அவனுறவையே தேடிப்போதல், அவள் கற்பறத்தின் செம்மையால் என்று கொள்க.

37. பொய்த்தல் வல்லன்!

     துறை: 'தலைமகளைச் சூளினால் தெளிந்தான்' என்பது கேட்ட காதற் பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: 'தலைமகளைச் சூளுரை கூறித் தெளிவித்து, அவளுடன் கலந்து உறவாடி இன்புற்றான் தலைவன்' என்பதனைக் கேட்டாள் அவன் காதற்பரத்தை. அவள் உள்ளம் அதனாலே துடிக்கின்றது. தலைமகளின் தோழியர் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வதுபோல, இவ்வாறு வெதும்பிக் கூறுகின்றாள். அவள், தலைவனிடத்தே கொண்டிருந்த நம்பிக்கையும் இதனால் நன்கு விளங்கும்.)

     அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
     நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
     வல்லன் வல்லன் பொய்த்தல்
     தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லே!

     தெளிவுரை: ''தோழி! வாழ்வாயாக! மகிழ்நன், தான் செய்த சூள் பொய்யாத வகையில் நடந்து கொள்ளுதலையே என்றும் அறியமாட்டான். தன்னை விரும்பிய மகளிரின் மையுண்ட கண்கள் பசலை படர்ந்தவாய், நீர்த்துளிகளை மிகுதியாகச் சொரியும் வண்ணம், தான் அவர்க்குச் செய்த சூளுறவினைப் பொய்த்து, அவரை வருந்தச் செய்வதற்கே அவன் வல்லவன்!''

     கருத்து: தலைவன், செய்த சூளினைப் பேணாது ஒழுகும் வாய்மையற்ற தன்மையன் என்பதாம்.

     சொற்பொருள்: நயந்தோர் - விரும்பியோர்; காதலித்த மகளிர். பயந்து பசலைபூத்து; பசந்து என்பதும் பாடம். பனிமல்க - நீர் நிறைய. தேற்றான் - அறியான்; தன்வினைப் பொருளது. சூள்வாய்த்தல் - உரைத்த சூளுரை பொய்யாகாதபடி பேணி அவ்வண்ணமே நடத்தல்.

     விளக்கம்: 'காதற் பரத்தை' சேரிப் பரத்தையின் மகளாயினும், ஒருவனையே மனம் விரும்பி அவனோடு மட்டுமே உறவு கொண்டு, அவன் உரிமயாளாக மட்டுமே வாழ்பவள். 'வல்லவன் வல்லவன்' என்று அடுக்கி வந்தது. அவன் சூள் பொய்த்தலே இயல்பாகக் கொண்டவன் என்றற்காம்; 'இனியும் இச்சூளும் பொய்ப்பன்; மீண்டும் தலைவியைப் பிரிந்து எம்மை நாடியும் வருவான்' என்று சொன்னதுமாம்.

38. தன் சொல் உணர்ந்தோர் அறியலன்!

     துறை: 'தலைமகன் மனைவயிற் போகக் கருதினான்' என்பது சொல்லிய தன் தோழிக்குப், பரத்தை சொல்லியது.

     (து.வி: 'தலைமகன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதை நினைக்கின்றான்' என்று தோழி வந்து, அவன் பரத்தையிடம் சொல்லுகின்றாள். அவளுக்கு, அப் பரத்தை தான் கருதுவதைக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
     தன்சொல் உணர்ந்தோர் அறியலன்; என்றும்
     தண்தளிர் வௌவும் மேனி,
     ஒண்தொடி முன்கை, யாம்அழப் பிரிந்தே.

     தெளிவுரை: தோழி, வாய்வாயாக! குளிர்ச்சியான மாந்தளிரைப் போன்ற மேனியினையும், ஒள்ளிய வளைகள் அணிந்த முன்னங் கையினையும் உடையரான யாம், அவன் பிரிவினுக்கு ஆற்றாதே அழுகின்ற வண்ணமாக, அவன் எம்மைப் பிரியக் கருதினான் என்பாய். தலைவன் தான் தெளிவிக்கக் கூறிய சொற்களை வாய்ம்மையாக ஏற்றுக் கொண்டு தன்பால் அன்பு செலுத்திய மகளிரின் உளப்பாங்கினை அறிகின்ற அறிவானது என்றைக்கும் இல்லாதவனே யாவான்!

     கருத்து: ஆகவே, அவன் அப்படிப் பிரிந்து போதலும் அவனது இயல்பேயாகும் என்று ஆற்றியிருப்பேம் என்பதாம்.

     சொற்பொருள்: தன்சொல் - தெளிவித்து முதற்கண் கூடியபோது, தான் சொல்லிய உறுதிமொழிகள். உணர்ந்தோர் - வாய்மையாகக் கொண்டோர்.

     விளக்கம்: தன்மாட்டு அன்புடையாரைப் பிரிதலால், அவர் அடையும் மனத்துயரங்களைப் பற்றி எல்லாம் அறியும் அறிவற்றவன் தலைவன். ஆதலால், அவன் செயலைக் குறித்து யாம் ஏதும் நோதற்கில்லை; நம் பேதைமைக்கே வருந்துதல் வேண்டும் என்பதாம். தளிர் மேனி வண்ணம் கெடும்; ஒண்தொடி முன்கை மெலியத் தொடிகள் சுழன்றோடும்; என்பதனைக் குறிப்பால் உணர்த்தவே, அவை சுட்டிக் கூறினாள். இவளைக் காதற் பரத்தையாகவோ, உரிமைப் பரத்தையாகவோ கொள்வதும் பொருந்தும்.

39. பிரிந்தாலும் பிரியலன்!

     துறை: ஒருஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான் என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தன் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி: தலைவன் வீடு திரும்பியதால், தலைவி அவன் உறவைப் பெற்று ஆறுதலும் பெற்றாள்; 'பெண்மை நலமெல்லாம் விரும்பியவாறு அவன் துய்த்து விட்டான்; இனி அறக்கடன் மேல் தன் மனஞ்செல்லாலே நம்பால் வந்தான்; இனி நம்மைப் பிரியான்' என்று அவள் தோழியரிடம் கூறினாள். இதனைக் கேள்விப்பட்ட பரத்தை, தன் தோழியிடம் சொல்வது போலத், தலைவிக்கு நெருங்கியோர் கேட்டுக் கலங்குமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி! ஊரன்
     வெம்முலை அடைய முயங்கி, நம்வயின்
     திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்
     பிரிந்தன னாயினும், பிரியலன் மன்னே!

     தெளிவுரை: தோழி வாழ்வாயாக! ஊரனானவன், விருப்பந்தரும் நம்முடைய மார்பகங்கள் அழுந்துமாறு முற்றத் தழுவி இன்புற்றனன். அவன் நம்மிடத்திலிருந்தும், திருத்தமான அணிகளணிந்த நம் பெருத்த தோள்கள் நெகிழும்படியாகப் பிரிந்தனன் என்றாலும், விரைவில் நம்பால் மீள்வானாதலின், முற்றவும் நம்மைப் பிரிந்தவன் அல்லன்காண்!

     கருத்து: அவன் மீண்டும் நம்பால் விரைய வருவான் என்பதாம்.

     சொற்பொருள்: வெம்முலை - விருப்பத்தை விளைக்கும் கவின்பெற்ற மார்பகம். அடைய - முற்றவும் அழுந்தும்படி. பிரியலன் - புறத்தே பிரிந்தாலும், எம் நெஞ்சைவிட்டு என்றும் பிரிந்திலன்; இப்போது சில நாட்கள் பிரிந்தாலும், மீளவும் வரும் இயல்பினனாதலின் முற்றப் பிரிந்திலன் என்பதும் ஆம். நெகிழ்தல் - நழுவுதல்.

     விளக்கம்: இதனைத் தன் பாங்காயினார் சொல்லக் கேட்கும் தலைவி, தன் நம்பிக்கை நிலையாதோவென்னும் ஏக்கத்தினளாவாள் என்பதாம். இதுவே பரத்தையின் விருப்பமும் ஆம்.

40. ஊரிறை கொண்டனன் என்ப!

     துறை: ''உலகியல் பற்றித் தலைவன், தன் மனைக்கண் ஒருஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று அயற்பரத்தையர் பலரும் கூறினார்'' என்பது கேட்ட காதற் பரத்தை, அவர் பாங்காயினார் கேட்பத் தான் தன் தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: உலகியலிலே செயற்குரியதான ஒரு செயலை முடிக்கக் கருதித், தலைவன், ஒரு சமயம் தன் மனைக்குப் போகின்றான். அதனை, அவன் தன் காதற் பரத்தையை முற்றவும் பிரிந்து தன் வீட்டிற்கே திரும்பினன். அங்கேயே மனைவியைப் பிரியாது இன்புற்றும் வாழ்கின்றனன்' என்று அயற்பரத்தையர் பலரும் தம்முள் பேசிக் கொள்கின்றனர். இதனைக் கேள்வியுற்ற அவன் காதற்பரத்தை, அந்த அயற் பரத்தையரின் பாங்காயினார் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது.)

     அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
     ஒண்டிதொடி முன்கை யாம்அழப் பிரிந்து, தன்
     பெண்டிர் ஊர்இறை கொண்டனன்' என்ப.
     கெண்டை பாய்தர அவிழ்ந்த
     வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.

     தெளிவுரை: 'தோழி, வாழ்வாயாக! கெண்டை மீன் பாய்ந்தலினாலே கட்டவிழ்நுது மலர்ந்த, வண்டு விரும்பும் ஆம்பல் பூக்களையுடைய நாட்டினன் தலைவன். அவன், ஒள்ளிய தொடியணிந்த முன்கையினையுடைய யாம் அழும்படியாக, எம்மைப் பிரிந்து சென்று, தன் பெண்டாகிய மனையாளின் வீட்டிலேயே, அவளைப் பிரியாதேயே தங்கி இன்புற்றிருக்கின்றனன் என்பார்களே! அதுதான் என்னையோ!'

     கருத்து: அவர் அவ்வாறு சொல்வது நடவாது; அவன் என்பால் மீண்டும் விரைவில் வருவான் என்பதாம்.

     சொற்பொருள்: பெண்டிர் - மனைவியைக் குறித்தது; இற்பெண்டிர் என்பது வழக்கு. இறைகொள்ளல் - நிலையாகத் தங்கியிருத்தல். பாய்தர - பாய.

     விளக்கம்: 'உலகியல்பற்றி' என்றது, தேவவழிபாடு, சமுதாய விழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை. இவற்றுள், தலைவன் கலவாதவழி ஊரும் உறவும் பழிக்கும் ஆதலின், அவன் தன் மனைவியோடு தன் வீட்டில் சென்று தங்கியிருப்பானாயினன் என்பதாம். இது இன்றைக்கும் சமுதாயத்தில் நிகழ்ந்துவரும் ஒரு மரபாகவே இருப்பதைக் காணலாம். அவ்வாறு தன் வீடு சென்றவன், தன் மனைவியின் பெருமையையும், தன் சிறுமையையும், அவளின்றித் தன் குடிப்பெருமை சிறவாமையையும் நினைந்தானாகி, அங்கேயே தங்கி, அவளைத் தெளிவித்து இன்புற்றிருந்தனன் என்பதும் பொருந்தும்.

     உள்ளுறை: கெண்டை பாய்தற்கு ஆம்பல் மலரினும், அதுதான் வண்டினைப் பிணைந்து நிற்பதேயன்றிக் கெண்டையை அல்லவாதல் போல, உலகியல் பற்றி அவன் தன் மனை சென்றானாயினும், அவன் அன்பு எம்மிடத்தேயே என்றும் மாறாதபடி நிலவுவதாகும் என்பதாம்.