உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 6 ... 5. புலவிப் பத்து! புலவி பொருளாக அமைந்த செய்யுட்கள் ஆதலால், 'புலவிப் பத்து' என்றனர். 'புலவி' - சிறு காலம். 'துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று' என்று, திருக்குறள், புலவியை வேண்டுவதும் நினைக. 'புலவி' என்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற், காலம் கருதிக் கொண்டு பயப்பதோர் உள்ள நெகிழ்ச்சி' என்பர் பேராசிரியர். தலைமகள் கூறுவதும், அவள் பொருட்டாகத் தோழி கூறுவதுமாக இவை அமைந்துள்ளன. 41. பொன்போற் செய்யுள் ஊரன்! துறை: கழறித் தெருட்டற் பாலராகிய அகம்புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலிய பக்கத்தாரையும் இகழ்ந்து தலைவி கூறியது. (து.வி: தலைவிக்கு அறிவுரை கூறித் தெளிவிக்கும் உரிமையுடையவராகிய வாயில்கள் வந்து, 'தலைவனின் செயலை மறந்து, அவன் மீண்டும் இல்லத்துக்கு வரும்போது அன்புடன் ஏற்றுக் கடமை பேணுமாறு' அவளுக்குச் சொல்லுகின்றனர். அப்போது, உள்ளத்துத் துயரவேகத்தைத் தாங்காதாளான தலைமகள், தலைவனையும், அவனது பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவியாக அமைந்த பாணன் முதலியோரையும் இகழ்ந்து சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால் தன் சொல் உணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யும் ஊர் கிழவோனே! தெளிவுரை: தானீன்று பார்ப்பினையே தின்னும் கொடுங் குணமுடைய முதலையொடு, வெண்மையான பூக்களும் நிறைந்த பொய்மையினை உடையது தலைவனின் ஊர்' என்பார்கள். அதனாலே, தன் சொல் உணர்ந்து அன்பு செய்தாரின் மேனியைத் தன் பிரிவாலே பொன்போலும் பசப்பினை அடைவிக்கும் கொடுமையினை அவனும் செய்கின்றான்! கருத்து: 'அவன் பேச்சை நம்பும் மடமையாள் அல்லேன்' என்று வாயில் மறுத்ததாம். சொற்பொருள்: அன்பில் - அன்பில்லாத, வெண்பூ - ஆம்பற்பூ. தன்சொல் உணர்ந்தோர் - அவன் சொல்லை (பிரியேன் என்ற சூளுரையை) உண்மையெனக் கொண்டு, அவனுக்குத் தம் காதலை உரிமையாக்கிய மகளிர். 'மேனி' - மேனியின் நிறத்தினை. 'பொன் போற் செய்தல்' - பிரிவுத் துயரால் மேனியிற் பொன்னிறப் பசலை பூக்கச் செய்தல். விளக்கம்: முதலை தன் பார்ப்பைத் தின்னும் கொடுமையது என்பது முன்னும் கூறப் பெற்றது (ஐங். 24). பொய்கைத்து - பொய்கையை உடையது; மருதத்திலே வற்றாத நீர்வளம் கொண்ட நீர் நிலையை இதனால் காட்டுகின்றனர். உள்ளுறை: தானீன்ற பார்ப்பைத் தின்னும் கொடுங் குணமுடைய முதலையினைக் கொண்ட பொய்கையூரன் ஆதலின், தானே விரும்பி மணந்து கொண்ட தன் அன்பு மனையாளையும் வருந்தி நலிவித்து நலன் அழியச் செய்யும் கொடியவன் ஆயினான் என்று குறித்ததாகக் கொள்க. தன் பார்ப்புத் தின்னும் முதலையும், வெண்பூவும் ஒருங்கிருக்கும் பொய்கையுடைய ஊரன் என்றது, தன்னை விரும்பி வருவாரையே பொன்னும் நலனும் உறிஞ்சிக் கெடுக்கும் பரத்தையரையும், மனைநலம் பேணும் குலமகளிரையும் ஒருங்கே ஒப்பாகக் கருதுபவனும் அவன் என்பதாம். மேற்கோள்: 'போல' என்பது உருவுவமத்திற்கு உரிய சொல்லலாம் என இளம் பூரணனாரும் (தொல். உவம - 16); தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை என்பது இன்னும் தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று; வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்பது தலைமகள் பசப்பு நிறம் பற்றி உவமையாயிற்று என்றும் கூறுவர். தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை என்பது தோழி கூற்று; என்னை! அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே, தலைமகள் பெரும் பேதையாதலின் என்றும், பேராசிரியர் விளக்குவர். இவ்வாறு தோழி கூற்றாகக் கொள்வதே நயமுடைத்து ஆகும். ''தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெஏண்பூம் பொய்கைத்து அவனூர் என்ப'' என்றாற்போலத் தலைவன் கொடுமையும் தலைவி பேதைமையும் உடனுவமம் கொள்ள நிற்கும்'' என்பர் நச்சினார்க்கினியர். அவர் கருத்தும் தோழி கூற்று என்பது இதனால் காணப்படும் (தொல். பொ. 230 உரை). தலைவியான குலமகள் இத்தகைய உயிரியல்புகள் எல்லாம் கண்டறியும் அளவுக்கு வெளிப்போந்து செல்லும் மரபினள் ஆகாள் என்னும் உயர்நிலை கருதியே, இருபெரு உரையாசிரியர்களும் இவ்வாறு தோழி கூற்றாகக் கூறினர் எனலாம். 42. சிறப்ப மயங்கினள் போலும்? துறை: தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது. (து.வி: பரத்தையுறவிலேயே களித்திருஃதானாகிய தலைவன், ஒருநாள் தலைவியின் நினைவு மேல் எழுந்ததாக, தன் வீட்டிற்கும் வருகின்றான். அவளிடம், 'தன்னைப் பரத்தையர் உறவுடையவனாக நினைப்பதே தவறு எனவும், வேறு வேறு செயல் நிமித்தமாகவே தன் வருகை இடையீடு படலாயிற்று' எனவும் பலப்பல பொய்கூறி அவளைத் தெளிவித்து, அவளுடன் மகிழ முயல்கின்றான். அப்போது அவள், அவனைக் குறித்துத் தான் கேட்டறிந்த நம்பும்படியான செய்தியொன்றைக் கூறி, அவனுக்கு இசைய மறுப்பதாக அமைந்த செய்யுள் இது.)
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ யாணர் ஊர! - நின் மாண்இழை அரிவை? காவிரி மலிர்நிறை அன்னநின் மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே! தெளிவுரை: ''புது வருவாயினை உடைய ஊரனே! நினக்கு உரியவளும், மாண்பமைந்த அணிகள் பூண்டோளுமான அரிவையானவள், காவிரிப் பேராற்றின் நீர்ப் பெருக்குப்போல விளங்கும் நின் மார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே! அவள் க்கஃளுண்டதன் களிப்பானது மென்மேலும் பெருகியதனாலே அப்படி மயக்கங் கொண்டனள் போலும்?'' கருத்து: அவள் குடிமயக்கால் நின்னை விலக்கியிருப்பாள், தெளிந்ததும் நின்னைத் தேடுவாள் என்பதாம். சொற்பொருள்: மகிழ்மிக - மது மயக்கம் மிகுதியாக. யாணர் ஊர - புதுவருவாய் உடைய ஊரனே! மலிர்நிறை - புதுவெள்ளம்; 'செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறை காவிரி' என்று பதிற்றுப்பத்தும் கூறும் (பதிற். 50). தொடங்கியோள் - தொடங்கினாள். விளக்கம்: 'யாணர் ஊர' என்றது, நின் ஊர் என்றும் புது வருவாயினைக் கொண்டதாதலேபோல, நீயும் என்றும் புதிதாகக் கொள்ளும் பரத்தமை உறவினை உடையை' என்று குறிப்பால் சொல்லிப் பழித்ததாம். 'மாண் இழை அரிவை' என்று பரத்தையைக் குறித்தது, அவை தலைவனின் கொடையால் அமைந்ததே என்று கூறற்கும், தான் அவையற்று விளங்கும் எளிமையினைக் காட்டற்கும் ஆம். 'மலிர்நிறையன்ன மார்பு' என்றது, புதுவெள்ளம்போலப் பரத்தையர் பலரும் விரும்பிக் கலந்து ஆடிக் களித்து இன்புறுதற்குரியதாக நிலை பெற்ற மார்பு என்பதாம். விலக்கல் - தடுத்து ஒதுக்கல். ''நீ பிறளான பரத்தையைக் கூடியதறிந்தே நின்னை விலக்குபவள், நீ இங்கு வந்தமையும் அறிந்தால் இன்னும் சினவாளோ? ஆதலின், நீதான் அவளிடத்தேயே மீளச் செல்வாயாக'' என்று மறுத்ததாகக் கொள்க. மேற்கோள்: ஆசிரியர் நச்சினார்க்கினியார், இதனைத் தோழி சொல்வதாகக் கொண்டு உரைப்பர் (தொல். பொருள். 240). ''காவிரிப் பெருக்குப் போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறு என்னை?'' எனத் தலைவியை உயர்த்துக் கூறித், தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றாள் தோழி'' என்று அப்போது கொள்க. 43. நின்னும் பொய்யன் நின் பாணன்! துறை: பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப, மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. (து.வி: தலைவனுக்காகப் பரிந்து பன்முறை இரந்து வேண்டிய பாணனிடம், தான் இசையாமையே சொல்லிப் போக்கினாள் தலைமகள். ஒருநாள், அப் பாணனோடு தலைவனும் சேர்ந்துவந்து, பலப்பல கூறித், தலைமகளின் புலவியைத் தணிவிக்க முயல்கின்றனன். அப்போது, தலைவி, தலைவனை நோக்கிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்பணத் தன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப்பல துஞ்சும் யாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன்; பல சூளினனே! தெளிவுரை: 'மரக்காலைப் போலத் தோன்றும் தாய் ஆமையின் முதுகின் மீது, சிறு செம்பினைப் போன்றவான அதன் பார்ப்புகள் பலவும் ஏறிக்கிடந்தபடி உறங்கியிருக்கும், புது வருவாயினை உடைய ஊரனே! நின்னைக் காட்டினும், நின் ஏவலோடு வந்தானான நின் பாணன் பொய்யன்; பல பொய்ச் சூளினன்!' கருத்து: பொய் கூறலிலும், உரைத்தலிலும், நின்னினும் நின் பாணனே வல்லவன் என்பதாம். சொற்பொருள்: அம்பணம் - மரக்கால்; தரகர் அளக்கும் மரக்கால் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு 14, 209-10). செம்பு - சிறு செப்புப் பாத்திரம், ஆமைப் பார்ப்பிற்கு உவமை; செம்புசொரி பானையின் மின்னி' என்பது நற்றிணை (நற். 153) சூள் - தெய்வம் சார்த்திக் கூறும் உறுதிமொழி. விளக்கம்: 'பாணன் தலைவனின் உயர்வே கூறித் தலைவியை இரந்து நின்று சூளுரைப்பான்' என்பதால், தலைவனைக் காட்டிலும் அவன் சொற்களில் பொய்ம்மை மிகுதியாகவும், பொய்ச்சூள் பலவாகவும் விளங்கித் தோன்றிம் என்க. தலைவன் தலைவியின் இசைவு பெறுதற்குத் தாழ்ந்தும், குறையேற்றுப் பொறுத்தருளவும் வேண்டலும் கூடும். இவை பாணற்கு மரபன்று என்க. உள்ளுறை: 'ஆமைப் பார்ப்புகள் அவற்றின் தாய் முதுகின்மேற் கிடந்து உறங்கும் வளமிகுந்த ஊரன்' என்றது, அவ்வாறே அவன் புதல்வனும் தன் தாயின் மார்பிற்கிடந்து உறங்குதலை அறிந்துவைத்தும், குலநலமும், இல்லறக் கடனும், மனைவிக்கு மகிழ்வளித்தலும் மறந்து, தன் காமவின்பமே போற்றிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடப்பானாயினான் தலைவன் என்றதாம். 44. அறிந்தனையாய் நடப்பாயாக! துறை: பரத்தையரின் மனைக்கண்ணே பன்னாள் தங்கித் தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. (து.வி: பரத்தையரின் வீடே கதியாகப் பலநாள் தங்கியிருந்த தலைவன், அதுவும் வெறுத்ததாகத் தன் மனைக்கு ஆவலோடு வருகின்றான். அவன் செயலைக் குறித்துப் பழித்து, அவன் வரவை மறுக்கும் தோழி, அவனிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத் தாய்முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு அதுவே ஐய, நின் மார்பே; அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. தெளிவுரை: ஐயனே! இனிய நீரையுடைய பெரிய பொய்கையினிடத்தேயுள்ள ஆமையின் இளம் பார்ப்பானது, தன் தாயின் முகத்தை நோக்கியே வளர்வதுபோல, நின் மார்பை நோக்கியே வாழ்பவள் தலைவி. அதனை அறிந்தாயாய் நடந்து கொள்வாயாக! நினக்குரிய அறமும் அதுவேயாகும்! கருத்து: நீதான் அறத்தையும் மறந்தாய்; அன்பினையும் துறந்தாய் என்பதாம். சொற்பொருள்: தீம் பெரும் பொய்கை - இனிய நீருடைய பெரிய பொய்கை. தாய்முகம் நோக்கி - தாயின் முகத்தைப் பார்த்துப் பார்த்து. 'மார்' ; அசைநிலை. விளக்கம்: இனிதான பெருமையுடைய குடும்பத்தினளான நின் மனைவி நின் மார்பினை நோக்கி நோக்கி மகிழும் அந்த மகிழ்வாலேயே உயர்வாழ்பவள் என்கின்றனள். அதனை அவளுக்கு மறுத்த நின் செயல் மடமையானது, அறத்தொடும் பொருந்தாதது என்றும் கூறுகின்றனள். அதனால் தலைவி நலிய நின் இல்லற மாண்பும் வளங்குன்றும் என்றனளுமாம். 45. பசப்பு அணிந்த கண்! துறை: நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகள், மனைவியின் சென்றுழித், தோழி சொல்லியது. (து.வி: நெடுநாள் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்து வீட்டை மறந்திருந்த தலைவன், அவள் ஒதுக்கியதும், தன் வீட்டிற்கு வர, அவனுக்குத் தோழி சொல்லியது இதுவாகும். அவன் பொருந்தாச் செயலை எள்ளிக்கூறும் நயம் கொண்டதும் இச்செய்யுள் ஆகும்.)
கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து, வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும் யாறு அணிந்தன்று, நின் ஊரே; பசப்பு அணிந்தனவால் - மகிழ்ந! - என் கண்ணே. தெளிவுரை: தலைவனே! கூதிர்க் காலத்திலே தண்மையோடு கலங்கிய நீராய் விளங்கியும், வேனிற்காலத்திலே நீலமணியின் நிறத்தினைக் கொண்டும் விளங்கும் ஊற்றினாலே நின் ஊரானது அழகு பெற்றது. என் கண்களோ, எஞ்ஞான்றும் நீ இழைத்த கொடுமையால் பசலைநோயே பெற்றன! கருத்து: கண்ணொளி கெட்டுக் கலங்கியவ ளாயினேன் என்பதாம். சொற்பொருள்: கூதிர் - ஐப்பசி கார்த்திகை மாதங்கள். வேனில் வைகாசி ஆனி மாதங்கள். முன்னது மழைக்கலாம்; பின்னது கோடைக் காலம். மழைக்காலப் புதுவரால் நீர் கலங்கலாகத் தோன்றும்; வேனிலிற் புதுவரவற்றமையால் தெளிந்து நீலமணி போலத் தோன்றும். அந்த ஆறால் அழகு பெற்றது நின் ஊர் என்பாள், 'ஆறு அணிந்தன்று' என்றனள். விளக்கம்: கூடலும் பிரிதலும் என்று இல்லாமல், என்றும் பிரிதலே நின் செயலாதலால், இவள் கண்கள் பசலை நோய் உற்றுத் தம் அழகு கெட்டன. நின் ஊர் ஆற்றுக்குக் கலங்களும் தெளிதலும் காலத்தான். உண்டு; எனக்கு எப்போதும் கலக்கமே என்பதாம். இதனைத் தலைவி கூற்றாகவும் கொள்ளலாம். 46. எமக்கும் இனிதே! துறை: மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி, தலைமகளைப் புலந்து சொல்லியது. (து.வி: மனைநோக்கி வர நினைந்தாலும், பரத்தை அதனைத் தடுத்துக் கூறுதலாலே வராது நின்றான் தலைவன். அவன், பின்பொருநாள், உலகியல் பற்றி அவன் (பரத்தை) நினைவோடும் வீடு வந்தனன்; அப்போது அவனைச் சினந்து தோழி சொல்லியதாக அமைந்தது இது.)
நினக்கே அன்றுஃது எமக்குமார் இனிதே - நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டு நீ யருளாது ஆண்டுறை தல்லே. தெளிவுரை: நின் மார்பினைத் தழுவியின் புறுதலை விரும்பியவளான, நல்ல நெற்றியையுடையவளுமான அரிவையானவள் விரும்பிய குறிப்பின்படியே நீயும் நடப்பவனாகி, இவ்விடத்திற்கு எம்மிடத்தேயும் வந்தருளுதலைக் கைவிட்டு, அவள் வீடான அங்கேயே நீ நிலையாகத் தங்கிவுடுதல் நினக்கு மட்டும் இனிதாவதன்று; அதுவே எமக்கும் இனிதாவதாகும் என்பதாம். கருத்து: பரத்தை குறிப்பிற்கேற்ப நடந்து கொண்டு, அவள் நினைவாகவே மயங்கியிருக்கும் நீ, இங்கு இடையிடையே வராதிருத்தலே எமக்கு இனிது என்பதாம். சொற்பொருள்: நயந்த - விரும்பிய. அரிவை - பரத்தையைக் குறிக்கும். நன்னுதல் என்றது, அவள் இளமையெழில் சுட்டுதற்கு; எள்ளற் சுட்டாகவே கொள்க. 'ஆண்டு' என்றது அவள் வீடாகிய அவ்விடத்தேயே என்றற்கு. விளக்கம்: தொல்காப்பிய உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுமாறு போலத் தலைவி சொன்னதாகவே பொருள் கொள்ளலும் பொருந்தும். 'எமக்குமார் இனிது' என்றது? எமக்குப் பிரவுத் துயரம் பகழிப் போனது; அதனால், யார் வருந்துதல் இலம்; ஆனால், இங்கு நீதான் வந்து போவதற்கு, அவள் வருந்தி நின்னை விலக்கின், நீதான் அதனைப் பொறுக்க மாட்டாய்; அதனுடன் அவள் நுதலழகும் கெடும் என்பதாம். மேற்கோள்: ''பிறள் மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து, 'எங்கையர்க்கு உரை' என வேண்டிக் கோடற் கண்ணும் தலைவிக்கும் கூற்று நிகழும்'' என, இளம் பூரணனார் காட்டுவர் (தொல். கற்பு. 6). ''பரத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த தலைவன், தலைவி அடிமேல் வீழ்ந்து வணங்குழி, 'எங்கையர் காணின் இது நன்றெனக் கொள்ளார்' எனக் குறிப்பால் இகழ்ந்து கூறிக் காதலமைந்து மாறிய மாறுபட்டின்கண், தலைவிக்குக் கூற்று நிகழும் என்று நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 6)'' 47. நின் பொய் ஆயம் அறியும்! துறை: பாணற்கு வாயில் மறுத்த தலைமகள், பின், அப்பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது. (து.வி: பரத்தைமை விருப்பினாலே தலைவியைப் பிரிந்திருந்தான் தலைவன். அவன், மீண்டும் தலைவி பாற் செல்வதற்கு விரும்புகின்றான். செய்த குற்றம் தலைவி மறுப்பாளென்ற அச்சத்தையும் கூடவே எழுப்புகின்றது. ஆகவே, தலைவியைத் தன் சினம் விட்டுத் தன்னை ஏற்குமாறு செய்துவரத் தன் பாணனை அவளிடம் தூது அனுப்புகின்றான். அவனை மறுத்துப் போக்கிய தலைமகள், பின்னர் அப்பாணனோடு தலைவனும் வந்து நின்று, தலைவிபால் தன் அன்புடைமை பற்றிப் பலபடியாகக் கூறத், தன் மனம் வெதும்பிச் சொல்லியதாக அமைந்தது இது.)
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய, மனையோள் அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர! மாணிழை யாயம் அறியும் - நின் பாணன் போலப் பலபொய்த் தல்லே! தெளிவுரை: முள்ளின் முனைபோலும் கூர்மையான பற்களையுடையவள் பாண்மகள். அவள் இனிய கெடிற்று மீனைக் கொணர்ந்து சொரிந்த அகன்ற பெரிய வட்டி நிறையுமாறு, மனையோளானவள், அரிகாலிடத்தே விதைத்துப் பெற்ற பெரும் பயற்றை இட்டுக் கொடுத்து அனுப்புவாள். அப்படித் தந்து அனுப்புகின்ற தன்மையுடைய மகளிரையுடைய ஊரனே! நின் பாணனே போல நீயும் பலப்படப் பொய்யே கூறுதலைச், சிறந்த இழையணிந்த பேச்சை மெய்யாகக் கொள்வேன்? நின்னையும் உவந்து ஏற்பேன்? கருத்து: நின் பரத்தைமைதான் ஊரறிந்த செய்தியாயிற்றே என்பதாம். சொற்பொருள்: முள்ளெயிற்றுப் பாண்மகள் - முள்ளைப் போலக் கூர்மையான பற்களையுடையவளான பாண்மகள்; கெடிறு - ஒருவகை மீன்; 'கெளிறு' என்பார்கள் இந்நாளில், வட்டி - கடகப் பெட்டி. சொரிதல் - கொணர்ந்து கொட்டுதல். அரிகாற் பெரும்பயறு - நெல் அரிந்த தாளடியிலே வித்திப் பெற்ற பெரும்பயறு. ஆயம் - பாங்கியர். பாணன் - பாண்மகன்; தலைவனின் ஏவலை ஏற்றுச் செய்வோன்; அவன் பரத்தமைக்கு உதவியாகவும் நின்று செயற்படுவோன். விளக்கம்: 'முள்ளெயிற்றுப் பாண்மகள்' என்றது, அவள் சின்னஞ்சிறுமி என்பது தோன்றச் சொல்லியதாம். அவள், 'அகன்பெரு வட்டி நிறையக் கெளிறு கொணர்ந்து சொரிந்து, அதற்கு ஈடாகப் பெரும்பயிறு அதே வட்டி நிறையக் கொண்டு செல்வள்' என்றது, அவ்வூரவரின் பெருவளம் நிரம்பியதும், கொடைப் பண்பு சிறந்ததுமான மனைப்பாங்கை உணர்த்துவதாம். பெரும்பயிறு - பயறுவகையுள் ஒன்று; இன்றும் அரிகாலில் உளுந்து, பயறு, எள்ளு, கொள்ளு முதலியன விதைப்பது வழக்கம். அவை தாமே முளைத்துக் காய்த்துப் பயன் தந்து விடுதல் மனையாளின் பெருமித மனத்தையும் உணர்த்தும். மாணிழை - சிறந்த அணிவகைகள். உள்ளுறை: ''மீன் சொரிந்த வட்டி நிறையுமாறு பெரும்பயறு பெய்தனுப்பும் மனையோள் நிரம்பிய ஊராதலின், எமக்கு நீதான் சிறுமையே செய்தனையேனும், எம் பெருந்தகவால் நின்னை மீண்டும் ஏற்கும் நெகிழ்ந்த அன்பு மனத்தினர் யாமும் ஆவோம்'' எனக் குறிப்பால் தன் இசைவு புலப்படுத்தியதும் ஆம். 'கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பெரும் பயறு நிறைக்கும் ஊர' என்றது, நீ நின் காதல் சொல்லிப் பொருளொடு பாணனை விடுத்திட, அவரும் அதனையேற்று, அதற்கீடாகத் தம் சிறந்த காதலைச் சொல்லி வரவிடப் பெறுவாய்' என, அவன் பரத்தைமை ஒழுக்கத்தைச் சுட்டியதும் ஆம். குறிப்பு: 'மாணிழை' தலைவியைக் குறிக்கும் எனக் கொண்டனமானால், இதனைத் தோழி வாயின் மறுத்துக் கூறியதாகவே கொள்ளலாம். 48. நின் வரவினை வேண்டேம்! துறை: பரத்தையர் மாட்டு ஒழுகா நின்று, தன் மனைக்கண் சென்று தலைமகற்குத், தலைமகள் சொல்லியது. (து.வி: பரத்தையரின் உறவிலேயே சிலகாலம் மயங்கிக் கிடந்த தலைவன், ஒருநாள் தன் மனையிடத்தேயும் செல்ல, அப்போது அவனுக்குத் தலைமகள் புலந்து கூறுகின்ற பாங்கில் அமைந்த செய்யுள் இது.)
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள் யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர! வேண்டேம் பெரும! - நின் பரத்தை ஆண்டுச்செய் குறியொடு ஈண்டு நீ வரலே. தெளிவுரை: விலைவாசி மீன்பிடிக்கின்ற தொழிலிலே வல்லவனான பாண்மகனின், வெண்மையான பற்களையுடைய இளையமகள், வரால் மீனைக் கொணர்ந்து சொரிந்த வட்டியினுள்ளே, வீட்டுத் தலைவியானவள், ஆண்டு கழிந்த பழைய வெண்ணெல்லை நிறைத்து விடுக்கும் ஊருக்கு உரியோனே! நின் பரத்தையானவள் அவ்விடத்தே செய்த புணர்குறிகளோடே நீதான் இவ்விடத்துக்கு வருதலை, யாம் வேண்டுவோம் அல்லேம்! கருத்து: 'அவளிடமே நீ மீண்டும் செல்வாயாக' என்பதாம். சொற்பொருள்: வலைவல் - வலைவீசிச் செய்யும் மீன்பிடி தொழிலிலே வல்லவனான; பாண்மகன் - பாணன். இதனால் நெய்தல் நிலத்துப் பரதவரேபோல, மருதநிலத்து நீர்நிலைகளிலே மீன்பிடித்து விற்கும் தொழிலினர் பாணர் குடியினர் என்பதும் காணப்படும். யாண்டுகழி வெண்ணெல் - அறுவடை செய்து ஓராண்டு கழிந்த பழைய வெண்ணெல்; ஆண்டு கழிந்த நெல்லையே பயன்படுத்துதல் இன்றும் பெருங்குடி வேளாளர் மரபு. அதனை வாரி வழங்கினள் எனவே, அவர்தம் மனையின் பெருகிய நெல்வளம் விளங்கும். விளக்கம்: 'வரால் சொரிந்த வட்டியுள் யாண்டுகழி நெல் பெற்று வரும் பாண்மகளிர்போல, நீ தரும் பொருளுக்கு எதிராகப் பரத்தையரின் தோள்முயக்கினை நின் பாணன் நினக்குப் பெற்றுத் தருவான்' என்பதாம். 'என்ன குறை செய்யுனும், யாம் நின்னை விழைந்து நெகிழ்கின்ற நெஞ்சத்தேம்' என்பது ஒருவாற்றான் உண்மையாயினும், நீதான் நின் பரத்தை அவ்விடத்தே செய்த புணர்குறியோடு இங்கு வந்தமையால், நின்னை ஏற்க விரும்பேம் என்பதுமாம். அவர் உறவினை நீ முற்றக் கைவிட்டுப் பின்னர் மனையிலேயே தங்குவோனாக எம்பால் வருவாயாயின், யாம் நின்னை உவந்து ஏற்பேம் எனக் குறிப்பாகக் காட்டிக் கூறியதாகவும் கொள்க. 49. யார் நலன் சிதையப் பொய்க்குமோ? துறை: பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள், தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. (து.வி: 'பாணனின் வழியாகவே தலைமகன் ஒரு பரத்தையோடு உறவு பெற்று, அவளைக் கூடியிருப்பானு மாயினான்' என்று தன் தோழியர் வந்து சொல்லக் கேட்டாள் தலைமகள். தனக்கும், அவ்வாறே தன் காதல் உடைமையைச் சொல்வதற்கு, அதே பாணனைத் துணையாகக் கொண்டு வந்த தலைமகனுக்கு, உளம் நொந்து அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள் சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம் யாணர் ஊர! நின் பாண்மகன் யார்நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே? தெளிவுரை: அழகிய சிலவாகிய கூந்தலையும், தலைச் சுமையின் பாரத்தாலே அசைந்ததசைந்து நடக்கும் நடையையும் கொண்டவளான பாண்மகள், சிலவான மீன்களைச் சொரிந்து பலவான நெல்லைப் பெற்றுச் செல்லும் வளமிகுந்த புது வருவாய் நிரம்பிய ஊரனே! நின் பாண்மகன், இனி யார்யார் நலமெல்லாம் சிதைந்து போகுமாறு பொய்யுரைத்துத் திரிவானோ? கருத்து: 'அவன் இன்னும் தன் பொய்யால் யாரைக் கெடுப்பானோ?' என்பதாம். சொற்பொருள்: அஞ்சில் ஓது - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய. அசைநடை - அசைந்து அசைந்து நடக்கும் ஒருவகைத் தளர்நடை நலம் - பெண்மை நலம். விளக்கம்: 'சின்மீன் சொரிந்து பன்னெற் பெறும் பாண்மகள்' போல, நின் பாணனும் பொய்யாகச் சில சொற்களை நயமாகக் கூறி, எம் இசைவைப் பெறுதலிலே, எம் அத்தகுவண்மை, அதாவது சின்மீனுக்கு எதிராகப் பன்னெல் வழங்கும் பேருள்ளம் கருதிய நம்பிக்கையாளன் போலும்' என்று எள்ளினரும் ஆம். 'இனி யார்நலம் பொய்க்குமோ?' என்றது, இவனியல்பு ஊரே முற்றவும் அறிந்தது ஆதலின், இனி இவன் பேச்சைப் பரத்தையர் சேரியுள்ளேயும் எவரும் வாய்மையாக ஏற்று நம்பார்கள் என்பதாம். உள்ளுறை: 'சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம் பாண்மகளே போல, நின் பாணனும் தன் சிறுமைமிக்க பொய்ச் சொற்களைச் சொரிந்து, இன்னும் பல பரத்தையரின் உறவினை நினக்குத் தேடிக் கூட்டுவான்' என்று குறிப்பாகத் தலைவன் செயலைப் பழித்ததாம். சின்மீனுக்கு நிகராகப் பன்னெற் கொண்டேகும் பாண்மகளே போல, நீயும் சிலசொல் பொய்யாகக் கூறிப், பெண்டிரின் நலத்தை அதற்கீடாகப் பெறமுயல்வாய் என்றதும் ஆம். 50. தஞ்சம் அருளாய் நீயே! துறை: மலையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பன்னாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. (து.வி: தன் மனையாளைப் பிரிந்து, பல நாட்களாகப் பரத்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தவன், மீண்டும் தன் மனையாளை நாடியவனாகத் தன் வீட்டிற்கும் வருகின்றான். அவனுக்குத் தோழி மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் - வஞ்சி ஓங்கிய யாணர் ஊர! தஞ்சம் அருளாய் நீயே; நின் நெஞ்சம் பெற்ற இவளுமா ரமுமே! தெளிவுரை: வஞ்சி மரங்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருக்கும் புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! நின்னையே தன் நெஞ்சத்திலே கொண்டு வாழ்பவளான தலைவியும், நின் அன்பின்மைச் செயலாலே இப்போது மிகுதியாக அழுவாளாயினாள். ஆதலினாலே, அவள் படும் துயர் மிகுதி கண்டு மனமிடிந்த யாங்களும், இல்லறக் கடனாற்றுதலின் பொருட்டாக நின் துணையோராகிய நின்பால் அன்பு கொண்ட பிறரும், பயன் பெறுதலின்றி வருந்தா நிற்கின்றேமே! கருத்து: நின் அன்பை இழந்தாளான இவள் வருந்தி மெலிந்து அழுதவாறே இருப்பாளாயினள்; நின் நெருக்கம் இழந்த துணைவரும் இவளுக்கு நீ செய்த கொடுமை கண்டு வாடுவாராயினர்; நின் பெருஞ்செல்வமும் இவள் மனவூக்கமிழந்ததாலே, யார்க்கும் பயன்படுதலின்றிப் பாழே கிடக்கின்றது; நின் பெருமையிலே இவள் வாழ்வு சிறக்குமென்று கருதி, நினக்கு இவளைக் கூட்டி வைத்தலிலே ஆரம்ப முதல் உதவி செய்த யாமும் வருந்துகிறோம். ஆகவே, எமக்குத் தஞ்சம் அருள்வதற்கு இரக்கமுற்று முற்படுவாயாக என்பதாம். சொற்பொருள்: துணையோர் - ஆயத்தார்; இவர் தலைவிக்குப் பலவகையானும் ஏவற் கடமைகளைச் செய்து, அவளது மனைவாழ்வின் செம்மைக்குத் துணையாக அமைந்து விளங்குவோர். யாமும் - தோழியராகிய யாமும்; இவர் தலைவியோடு நெருங்கிப் பழகி உயிர்குகியிரான அன்பு பூண்டிருப்பவர். செல்வம் - மனையிடத்துள்ள பலவான பொன்னும் பொருளும் ஆகும் வளமை. வஞ்சி = ஒருவகை மரம்; மருதத்திற்கு உரியது. துணையோர் - தலைவனுக்குத் துணையாகி அமைந்தும், அவன் துணை பெற்றும், பொருள் செய்து கொள்ளும் செய்வினைக் கூட்டுறவுப் பான்மையோர் என்பதும் ஆம். அவன் அக்கடமையும் மறந்து பரத்தனாகவே மயங்கித் திரிதலால், அவர் ஈட்டும் செல்வநலமும் குன்றலாக, அவரும் அதனாலே நொந்து வருந்துவராயினர் என்பதாம். விளக்கம்: 'வஞ்சி ஓங்கிய யாணர் ஊர' என்றது, வஞ்சி மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் புது வருவாய் மிக்க ஊரன் என்பதுடன், 'வஞ்சி, கொடியுமாதலால்' எமன் கொடி போலும் 'வஞ்சியரின் புகழாலே சிறப்புற்றிருக்கும் இல் வளமுடைய ஊரன்' எனவும் பொருள்தந்து, தலைவனின் அறத்திற்கு மாறான புறவொழுக்கத்தைப் பழித்தலும் ஆகும். நின் நெஞ்சம் தனதாகவே முன்பெற்றிருந்த இவளும் அதனைத் தானிழந்தாளாகி மிகுதியாக அழிவாயினள்; ஆதலின் நீதான் இவட்குத் தஞ்சமாக அமைந்து அதனை மீளவும் தந்து அருள்வாயாக' என்று வேண்டியதாகவும் கொள்ளப்படும். |