உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 7 ... 6. தோழி கூற்றுப் பத்து தோழி செல்லும் சொற்களேயாக அமைந்த செய்யுட்கள் பத்துக் கொண்ட பகுதியாதலால், இது 'தோழி கூற்றுப் பத்து' என்றாயிற்று. தோழியாவாள் தலைவியோடு கூடவே வளர்ந்தவள்; செவிலித்தாயின் மகளுமாவாள் எனவும், அன்பும் அறிவாற்றலும் உலகியல் தெளிவும் உள்ளத் துணிவும் பெற்றவள் எனவும், எப்போதும் தலைவியின் நலமே தன் கருத்தாக, அவட்கு எவ்வாற்றானும் உதவி நிற்றலே தன் கடனாகப் பேணி வாழ்பவள் எனவும் அறிவோம். ஆகவே, தலைவியினுங் காட்டில், தோழியின் பேச்சு சற்றே அழுத்தமும், உறுதியும், தெளிவும் அமைந்து, நன்மையே உள்நோக்காக விளங்கி நயமுடன் வெளிப்படும் எனலாம். இந்தச் செறிவையும் செம்மையையும் இச் செய்யுட்களிலே நாமும் காணலாம். பேச்சிலே நயத்தை இழைத்துச் சொல்லும் பெண்மைத் திறத்தினையும் இவற்றுள்ளே காணலாம். 51. புளிங்காய் வேட்கைத்து! துறை: வாயில் பெற்றுப் புகுந்துபோய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. (து.வி: பரத்தமையாலே பிரிந்திருந்தவன், அதனைக் கைவிட்டுத் தன்வீடு மீண்டு, தலைவியின் ஊடல் தீர்த்துச் சிலகாலம் அவளோடும் கூடி மகிழ்வித்து இன்புற்றிருந்தனன். மீண்டும் அவன் அவளைப் பிரிந்து பரத்தையரை நாடிப் போகத், தலைவியின் உள்ளத்திலே மேண்டிம் துயரம் மிகுந்தது; சில நாட்கள் சென்ற பின்னே அவன் மீளவும் வீடு திரும்ப, அவள் அவனோடு புலவியுற்று ஊடி, அவனை அறவே ஒதுக்கி நின்றாள். அவன் மீண்டும் பணிமொழி பலகூறி வாயில் வேண்டத், தோழி வாயில் மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர! புளிங்காய் வேட்கைத் தன்று, நின் மலர்ந்த மார்பு - இவள் வயாஅ நோய்க்கே. தெளிவுரை: நீரிலே வாழும் நீர்க் கோழியின் நீலநிறச் சேவலை, கூரிய நகங்களையுடைய அதன் பேடையானது, தன் வேட்கைமிகுதியாலே நினைந்திருக்கும் ஊரனே! இவளது வயாஅ நோய்க்கு, நின் மலர்ந்த மார்பானது, 'புளியங்காயின் வேட்கை போல' இராநின்றது. கருத்து: இவள் நின்பால் எப்போதும் பெருங்காதலை உடையவளாவாள் என்பதாம். சொற்பொருள்: நீருறை கோழி - நீர்க்கோழி; இதனைச் சம்பங்கோழி என்றும் கூறுவர். வயாஅ - கருப்பமுற்றார் கொள்ளும் வேட்கைப் பெருக்கம்; சாம்பரைத் தின்னபதும் புளியங்காய அல்லது புளி தின்பதும் போல்வது; இதனைப் பிறர் தடுத்தாலும் அவரறியா வேளைபார்த்து மீண்டும் உண்ணற்கு விழைவதே இவர் அடங்கா வேட்கையின் இயல்பு ஆகும். உகிர் - நகம். புளிங்காய் - புளியங்காய். விளக்கம்: 'பசும்புள் வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்' எனக் குறுந்தொகை (287) மகளிர் கொள்ளும் இவ் வேட்கையையும், 'வீழ்பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயா' எனக் கலி (40) பிற உயிரினம் இவ் வேட்கைகொள்ளலையும் காட்டும். 'மலர்ந்த மார்பு' என்றது, விரிந்தகன்ற மார்பு என்றற்காம். மலர்ந்த மலர் பலருக்கும் மணத்தையளித்து இன்புறுத்துதலேபோலப் பலருக்கும் தழுவக் கொடுத்தலால் இனிமை தரும் மார்பு என்று உள்வைத்துக் கூறியதுமாம். உள்ளுறை: ''நீர்க் கோழிப் பேடையும் தான் தன் வயா நோயால் துன்புறும் ஊரன்'' என்றது, 'கருவுற்றிருக்கும் நின் மனைவியும் அவ்வாறு துயர்படுதலை உடையாள்; நீதான் அதனை அறியாத மடமையாளன் ஆயினை' என்று மனைவி கருவுற்றிருத்தலைக் கூறி, அவன் உடனிராது பரத்தமை பேணித் திரிதற்கு இடித்துரைத்ததுமாம். பிறர் தடுப்பவும் அடங்காது, வயாவுற்ற மகளிர் புளியங்காயையே தின்பதற்கு வேட்கை மிக்கவராய்த், துடிப்போடு விளங்குதல் போல, நின் போற்றா ஒழுக்கத்தால் நின்னை வெறுத்து ஒதுக்குமாறு எம்போல்வார் பலப்பல சொல்லியும், அவள்தான், என்றும் நின் மார்பையே நினைத்துச் சோரும் விருப்பினளாயினாள் என்று, அவளின் மாறாக்காதலின் கற்புச் செவ்வியை உணர்த்தியதும் ஆம். 'புளிங்காய் வேட்கைத்து' என்றற்கு, அடையா விடத்தும், அதனைப் பற்றிய நினைவே நாவில் நூர்ஊறச் செய்து, அச்சுவை யுண்டாற்போலும் மயக்கம் விளைப்பது போல, நின் மார்பும், இவள் அடையாத இப்போதும், நினையநினைய இன்ப நினைவாலே இவளை வாட்டி மயக்குவதாயிற்று என்றதாகவும் கொள்க. மேற்கோள்: 'புளிங்காய்' என, அம்முச்சாரியை பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது'' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல், உயிர்மயங்கு, 44.) நீருறை கோழி நீலச்சேவலை, அதன் கூருகிர்ப் பேடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும். அதுபோல, நின் மார்பை நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளும் என்றவாறு. 'புளிங்காய் வேட்கைத்து' என்பது நின் மார்புதான் இவளை நயவாதாயினும், இவள் தானே நின் மார்பை நயந்து, பயன் பெற்றாற்போலச் சுவைகொண்டு, சிறுது வேட்கை தணிதற்பயத்தள் ஆகும். புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாபோல' என எடுத்துக்காட்டி, விளக்கமும் தருவர் பேராசிரியர் - (தொல், உவம. 25). 52. நின் தேர் எங்கே போகிறது? துறை: வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. (து.வி: புலவியால் ஊடியிருந்த தலைவியின் மனத்தைத் தெளிவித்து, உறுதி பல கூறி, அவளுடன் மீண்டும் சேர்ந்திருந்தான் தலைவன். அவனுக்குத் தலைவியின் தோழி, அவனுடைய பழைய போற்றா ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லி நகையாடுவாள் போல, அவன் வீடகன்று புறப்படும் போது சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் இனைய; எவ்வாய் முன்னின்று - மகிழ்ந! - நின் தேரே? தெளிவுரை: மகிழ்நனே! வயலையின் சிவந்த கொடியின் பிணையலைத் தொடுத்தலாலே, தன் சிவந்த விரல்கள் மேலும் ஞிவப்புற்றவளும், செவ்வரிகளையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், சிவந்த வாயினையும் உடையவளுமான இவ்விளமையோள், அழுதழுது வாடி வருந்துமாறு, நின் தேர்தான் எவ்விடத்து நோக்கிச் செல்லக் கருதியதோ? கருத்து: 'வெளியே புறப்பட்டாயிற்றோ' என்றதாம். சொற்பொருள்: பிணையல் தைஇ - மாலை புனைந்து; பிணைத்துப் பிணைத்துக் கட்டும் மாலையினைப் 'பிணையல்' என்றனர். செவ்விரல் சிவந்த - இயல்பாகவே சிவப்பான விரல்கள் செம்பசலைக் கொடியின் சாறுபட்டு மேலும் சிவப்படைய; 'செவ்விரல் சிவப்பூர' எனக் கலித்தொகையும் இதனைக் கூறும் - (கலி. 76). இனைய - தொடர்ந்து வருந்த; தொடர்ந்து அழுகைப் புலப்பம் இது. குறுமகள் - இளையோள்; என்றது தலைவியை. எவ்வாய் - எவ்விடம். முன்னின்று - கருதியது. 'தேர் எவ்வாய் கருதியது?' என்றது, 'நீ எவ்விடம் போகக் கருதினை?' என்றதாம். விளக்கம்: வயலைக் கொடியை மாலையாகப் பிணைத்துக் கட்டி அணியும் மகளிரது பழைய வழக்கத்தை இச்செய்யுள் ஆகட்டும். 'செவ்விரல் சிவந்த' என்றது, மென்மையான அக்கொடியைப் பிணைக்கும் அம்மெல்லினைக்கே நோவுற்றுச் சிவந்த என்பதுமாம்; இது, தலைவியின் மென்மைச் செவ்வியை வியந்ததாம்; அதற்கே, கண்கலங்கி அழுத மென்மையள் என்பதும் உணர்த்தியதாம். 'சேயரி மழைக்கண்' இயல்பான அவள் கண்களின் எழிலார் தோற்றம்; அதுதான் இதுபோது செவ்விரல் சிவப்ப இனைதலால், நீதான் மீளப் பிரிந்தனையாயின் இனியும் கெட்டழியும் என்பதாம். செவ்வாய் - சிவந்த வாய்; செவ்வையான பேச்சன்றிப் பிற பேசுதலறியாத பண்புமிக்க வாயும் ஆம்; உளம் மறைத்து இன்சொல் பேசும் பரத்தையர் செவ்வாயினர் ஆகார் என்பது குறிப்பு. முன்னின்று - கருதியது; நினைவில் முன்னாகத் தோன்றுவது என்பது பொருளாக வந்த சொல். 'முன்னியது' என்பது மனுவுறுதியும் செய்கைத் துணிவும் காட்டவது. அவன் தேரேறி வெளியே செல்வதைக் காண்பவள், அவன் பழைய ஒழுக்கத்தை நினைத்தாளாக, மீண்டும் அவன் மனம் அதிற் செல்லாவாறு தடுப்பாள், இவ்வாறு சொல்லுகின்றனள் என்றும் கொள்க. 53. துறை எவன் அணங்கும்? துறை: தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இது பரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துளைக் கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்வேறுபாடு?' என்று வினையினாற்கு, அவள் சொல்லியது. (து.வி: தலைவனோடு சென்று புனலாடியபோது, அத்துறை, முன்பு பரத்தையோடு கூடிக்களித்தானாக அவன் ஆடியதென்ற நினைவு மேலெழத், தலைவி அந் நினைவாலே வாடி மெலிந்தாள். 'தெய்வங்கள் வாழும் துறை என்பதால் நீ அஞ்சினாயோ?' எனத் தலைவன், அவளிடம் அதுகுறித்துக் கேட்கிறான், அவள் நினைவை மாற்றுதல் கருதி. அப்போது தலைவி, அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
துறை எவன் அணங்கும், யாமுற்ற நோயே? சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர! - நீயுற்ற சூளே! தெளிவுரை: அணைய அழித்துக் கொண்டு வேகமாக வருகின்ற புதுப்புனலாது, கழனியிடத்தே வந்தும் பாய்ந்த தென்று கலங்கித், தாமரைப் பூக்கள் மலர்கின்ற, பழனங்களையுடைய ஊரனே! நீ என்பால் உரைத்தது போன்ற சூளுரையினையே நின் பரத்தைக்கும் உரைத்திருப்பாய் என்று நினைத்து, அது பொய்த்த நின்னைத் தெய்வம் வருத்துமோ எனக் கலங்கி, யான் கொண்டதே இந்த மனநோய். துறையிடத்துத் தெய்வம் என்னை எதன் பொருட்டு வருத்தி நோய் செய்யுமோ? கருத்து: 'சூள்பொய்க்கும் நின்னைத் தெய்வம் வருத்தாதிருக்க வேண்டும்' என்றதாம். சொற்பொருள்: துறை - துறைத் தெய்வம்; நீர்த்துறைக் கண் தெய்வங்கள் உறையும் என்பது மக்களின் நம்பிக்கை. எவன் அணங்கும் - எவ்வாறு வருத்தும். சிறை - அணை. சூள் - சூள் உரையாகிய உறுதிச் சொற்கள். பழனம் - ஊர்ப் பொது நிலம். விளக்கம்: 'நீயுற்ற சூள்' என்றது, அவன் புதியளான பரத்தை ஒருத்தியை விரும்பித், தலைவிக்குச் சொல்லிய உறுதி மொழிகளை மறந்து, மாறாக நடக்க நினைப்பதைக் குறித்ததும் ஆகலாம். இதனால், 'முன்னிறுத்திச் சூளுரைத்த தெய்வம் நின்னை அணங்கும்' எனவும், அதுதான் 'நின் நலமே நினையும் எம்போல்வர்க்குக் கவலைதரும்' எனவும் குறிப்பாக உரைப்பாள், 'யார் உற்ற நோய்' என்கின்றாளும் ஆம். உள்ளுறை: சிறையழி புதுப்புனல் கழனித் தாமரைகளைக் கலக்கி மலர்வித்தலே போல, இல்லறக் கடமையாகிய ஒழுக்கத்தையும், நின் உறுதிமொழிகளையும், பெருகிய காமத்தாலே மீறிச் செல்லும் நின் பொருந்தாச் செலவால், பரத்தையர் பலரும் மகிழ்வார்கள்; யாம் துன்புறுவோம் என்று கூறியதாகவும் கொள்க. துறைத் தெய்வம் அவனை அணங்கல் குறித்துக் கவலையுற்று நோய்ப்படுவதும் கொள்ளப்படும்; அதுவே சான்றாக அமைந்திருந்த வதனால். 54. அஞ்சுவல் அம்ம! துறை: வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. (து.வி: பரத்தையிற் பிரிந்த தலைவன் தன் வீட்டிற்கு மீண்டும் வருகின்றான். தன் குற்றவுணர்வின் அழுத்தத்தால், தலைமகளின் முன் செல்லற்கே அஞ்சியவனாகத், தோழியைத் தனக்கு உதவ வேண்டுகின்றான். அவள் அவனுக்கு உதவ மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
திண்தேர்த் தென்னவன் நன்னாட் டுள்ளதை வேனி லாயினும் தண்புனல் ஒழுகும் தேனூர் அன்னவிவள் தெரிவளை நெகிழ, ஊரின் ஊரனை நீதர, வந்த பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம! அம்முறை வரினே! தெளிவுரை: திண்மையான தேர்களை உடையவன் தென்னவனாகிய பாண்டியன், அவன் நல்ல நாட்டின் கண்ணே உள்ளது தேனூர். அது, வேனிற்காலமே யானாலும் குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுவளமுடையது. அத் தேனூரினைப் போன்ற, ஆய்ந்தமைத்த வளைகள் நெகிழ்ந்தோடுமாறு. செழுமையான இவள் தோள்கள் மெலிய, நீதான் பிரிந்தனை, பரத்தையர் வீதியிலே நீ செல்லுங்கால், நின்பால் அப்போது சூழ்ந்து வந்த பஞ்சாய்க் கோதை மகரிக்க்கும், அம்முறை - அதாவது வளைதநெகிழும் நிலை - வருவதனை நினைந்து, யானும் அஞ்சுவனே! கருத்து: 'நீதான் நிலைத்த காதலன் பினை இல்லாதவன்' என்றதாம். சொற்பொருள்: திண்தேர் - திண்மையான தேர்; தேரின் திண்மை உரைத்தது, தேருக்கு உடையானின் ஆட்சித் திறத்தின் திண்மை காட்டற்காம். நன்னாடு - நலம் செறிந்த நாடு. வேனில் - வேனிலாகிய வறட்சிக் காலம். தேனூர் - பாண்டி நாட்டுள். வையைப் பாய்ச்சலில், மதுரைக்கு அருகிலே உள்ள ஓர் ஊர்; 'தேர்வண் கோமான் தேனூர்' என்றும் கூறுவர்; தேனாறு எனவும் பாடம். பஞ்சாய்க் கோதை மகளிர் - பஞ்சாய்க் கோரை போலும் தலைமயிர் நீண்டிருக்கும் மகளிர் முறை - பிரிவால் பரத்தையரும் வளைநெகிழ மெலியும் அவல நிலை; முறை என்றது, 'அவரும் நின்னைப் பிரிந்து வாடுகின்ற வாடற்காலம்' என்பதனையாம். விளக்கம்: 'வேனிலாயினும் தண்புனல் ஒழுங்கும் தேனூர் அன்ன இவள்' என்றது, அவ்வாறே பிரிவாற்றாமையாலே தோள் மெலிந்து வாடுதல் பெறினும், நின்பால் தான் கொண்டிருக்கும் அன்பு மாறாதவளான தலைமகள் என்றற்காம். தெரிவளை - தோளிற்கு அமையும் அளவு தெரிந்தெடுத்து அணியும் வளை; உடல் மெலியமெலிய மெலிவு புறந்தோன்றாதவாறு மறைக்கும் பொருட்டுப் பின்னும் பின்னும் சிறியவாகத் தேர்ந்து எடுத்து அணியும் வளை; நெகிழ - அதுவும் நெகிழ்தல்; அதனினும் சிறிது தேடிப்பெற இயலாவாறு தோள் மிகமெலிவுற்றதால் என்பதாம். 'பஞ்சாய்க் கோதை மகளிர்' என்றது. நெடுங் கூந்தலுடைய இளம்பரத்தையரை; நீ தரவந்த மகளிர்' என்று, அவரைக் கொணர்ந்த தலைவனின் செயலைத் தான் அறிந்தமை கூறினாள், அவனை அடித்துக்கூறித் திருந்துமாறு முயல்தற்கு. 'தேனூர்' அன்ன இவளை, வாடிமெலியும் வகை வெறுத்து, பஞ்சாய்க் கோதை மகளிர் பின்னால் மயங்கிச் செல்லும் போக்கினன் நீ என்றும், அவரும் நின்னால் கைவிடப்பட நேர்ந்து நீ புதியரை நாடிப் போகும் கொடுமனம் உடையை எனவும் கூறுகின்றாளும் ஆம். 'முறைவரின்' என்றது 'அம்முறை வந்தாற்போலும் நீ இவண் வந்தது' எனக் கூறி, அவனை ஒதுக்கிப் போக்கியதுமாம். 55. துரத்தலின் நுதல் பசந்தது! துறை: வரைவு அணிமைக் கண்ணே, புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. (து.வி: வரைவு விரைய வாய்க்கும் பொழுதிலே, புறத்தொழுக்கம் ஒழுகியவனாகி, மீண்டும் வாயில் வேண்டி வந்து நிற்கின்றான் தலைவன். அவன் தன் மெலிவுகூறித் தனக்கு உதவ வேண்டும்போது, தோஇ, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கரும்பின் எந்திரம் களிற்றுறெதிர் பிளிற்றும் தேர்வண் கோமான் தேனூர் அன்ன விவள் நல்லணி நயந்து நீ துறத்தலின், பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே! தெளிவுரை: கரும்பினைப் பிழியும் எந்திரமானது, களிற்றின் பிளிற்றுக் குரலுக்கு எதிராக ஒலித்தபடியிருப்பது தேரினையும் வண்மையினையுமுடைய மதுரையார் கோமானின் தேனூர் அதனைப் போன்றதான இவள் நல்லழகினை விரும்பி, இவளை வரைந்து கொண்டு, அடுத்து நீதான் துறத்தலையும் மேற்கொள்ளுதலாலே, இவளது நுதலானது, பலரும் நின் கொடுமை அறியுமாறு பசலை நோய் கொண்டதே! கருத்து: நீதான், இதுபோது நின் மெலிவுகூறி நயத்தல், எம்மால் வெறுக்கவே தக்கது என்றதாம். சொற்பொருள்: கரும்பின் எந்திரம் - கரும்பை நசுக்கிச் சாறுபிழியும் எந்திரம்; கரும்பின் எந்திரத்தைப் புறமும் காட்டும் (புறம் 320). நல்லணி - நல்ல அழகு. 'தேர்வண் கோமான்' என்றது பாண்டியனை. விளக்கம்: எதிர் பிளிற்றல் - எதிரெதிர் தொடர்ந்து ஒலி செய்தல்; இதனால் கரும்பாலை மிகுதியும் களிற்று மிகுதியும் கூறினர். 'நல்லணி' என்றது, திருமண நிகழ்வை. மணம் பெற்றுச் சிலகாலமே யானவன், தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிப் போதலாற் பல்லோரும் பழிப்பாராயினர் என்க. தலைவியைக் களவுக்காலத்தே பலப்பல கூறித் தெளிவித்துக் கூடியும், பின் விரும்பி வரைந்து மணந்தும் கொண்டவன், விரைவிலேயே அவளை விட்டுப் பிரிதலைத் தாங்காமல், தலைவியின் நெற்றியிற் பசலை படர்ந்தது; அது பல்லோரும் அவன் கொடுமையை அறியக் காட்டுவது மாயிற்று. உள்ளுறை: 'களிற்றெதிர் சிலம்பின் எந்திரம் பிளிற்றும்' என்றது, 'நின் மெலிவு பற்றிய நின் பேச்சுக்கு எதிரே இவள்தன் நெற்றிப் பசப்பு மிகுதியாகத் தோன்றி, இவள் மெலிவு பற்றி ஊருக்கெல்லாம் உரைத்துப் பழிக்குமே' என்றதாம். மேற்கோள்: தலைவி அவனூர் அனையாள் என வந்தது எனப் பேராசிரியரும் (தொல். உவம. 25); தலைவன் அறம் செய்தற்கும், பொருள் செய்தற்கும், இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும், தலைவியை மறந்து ஒழுகுதற்கும், தோழி அலர் கூறுதற்கும் இதனை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9, 21) 'பெருமை காட்டிய இரக்கம்' எனக் கூட்டுக; இதனாற் சொல்லியது, வாளாதே இரங்குதலின்றி, பண்டு இவ்வாறு செய்தனை, இப்போது இவ்வாறு செய்யா நின்றனை எனத் தலைவி உயர்ச்சியும், தலைமகனது நிலையின்மையும் தோன்ற இரங்குதலாயிற்று என்பர், இளம்பூரணர் - (தொல். பொருள். 150). 56. என் பயன் செய்யும்? துறை: புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அக்து இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத், தோழி சொல்லியது. (து.வி: தலைவன் புறத்தொழுக்கம் உடையவன் என்று அறிந்த தலைமகள், அது குறித்த கவலையாலே வாடி மெலிந்துனள். அப்போது தலைவன், 'அவள் அறிந்தவாறு தான் தவறியவன் அல்லன்' என்று உறுதிகூறித், தலைமகளைத் தேற்றுவதற்கு முயல்கின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா, வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம்பெறு சுடர்நுதல் தேம்ப, எவன்பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? தெளிவுரை: பகற்காலத்தின் ஒளியைக் கொள்ளும் விளக்குகளாலே, இரவுக் காலத்தின் உண்மையே தெரியாத படி ஒளியோடும் விளங்குவது, வெல்லுகின்ற போராற்றலிலே மிகுந்த சோழர்களுக்குரிய ஆமூர். அதனைப் போலும் ஒளியுடைய, இவளது அழகு பெற்ற ஒளிசுடரும் நெற்றியானது, இப்போதிலே பசலையால் தன் ஒளி கெட்டது. அவளைத் தேற்றும் பொருட்டாக நீ சொல்லும் வாய்மையற்ற சொற்கள், இனி என்ன பயனைத்தான் செய்யுமோ? கருத்து: 'பொய்யான இந்தத் தேறுதல் உரைகளாலே மட்டும் பயனில்லை' என்றதாம். சொற்பொருள்: பகல் கொள் விளக்கு - ஒளிமிக்கவும் பலவாகப் பெருகியவுமான விளக்குகளாலே, இரவின் இருக் முற்றமறைந்து, இரவே பகலின் ஒளியைப் பெற்றுப் பகலே போல விளங்கிற்று என்பதாம; 'இன்கள்ளின் ஆமூர்' எனச் சிறுபாணும் இதனைக் காட்டும் (சிறுபாண் 188). தேம்ப - அழகழிந்து வருந்த. பயம் - பயன். தேற்றிய மொழி - தேற்றிக் கூறிய உறுதிச் சொற்கள். விளக்கம்: தேறுதல் உரைகள் பயன் செய்யாமை, முன்னும் பலகால் உறுதிகூறித் தேற்றிப், பின்னர் சொற் பிழைத்து ஒழுகித் தலைவிக்கு வருத்தம் செய்தவன் தலைவன் என்பதனாலே. 'ஆமூர்' இரவிலும் விளக்கொளிகள் இரவையோட்டிப் பகலாகச் செய்ய, ஆரவாரத்துடன் விளங்கும் செல்வவேளமுடையது என்பதாம். அஃதாவது என்றும் குன்றா வளமை; அத்தகு எழில்குன்றாத் தலைவியின் சுடர் நுதலின் ஒளியும் நின்னாலே இப்போது ஒளியற்றுக் கெட்டது என்கின்றனள். 'எவன் பயன் செய்யும்?' என்றது, 'இனியும் நின் பேச்சை வாய்ம்மை எனக்கொள்ளும் மயக்கத்தேம் யாமல்லோம்' என்று இடித்துரைத்ததாம். உண்மையிலேயே இரவு நேரத்தில் இருள்தான் உளதான போதிலும், அதனை மக்கள் ஒளிவிளக்குகள் பலவாக அமைத்தலாலே மாற்றிக் கொள்ளலைப் போல, பரத்தைமையாகிய புறத்தொழுக்கம் கொண்ட தலைவனும், தன் ஒளியான சொற்களாலே அதனைப் பொய்யாக்கிக் காட்டுவதற்கு முயல்கின்றான் என்பதுமாம். 'ஆமூர் அன்ன நலம்பெறு சுடர்நுதல்' என்றது, என்றும் எதனாலும் ஒளிகுன்றா நுதல் என்றதாம்; அதுவும் ஒளிகெட்டது; எனவே, இனித் தேற்றித் தெளிவித்தல் அரிது என்றும் உணர்த்தினளாம். 'தேற்றிய மொழி முன்பும். நிலையான பயன் தந்ததின்று; அதனை நீ பொய்த்தே ஒழுகினாய்; இனியும் எமக்குப் பயன் தருவதனின்று; நின் இயல்பறிந்த யாம், அதனை நம்புதலிலோம் என்பதும் ஆம். மேற்கோள்: 'இதனுள், இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் எனவே, சோர்வுகண்டு அழிந்தாள் என்பது உணர்ந்தும், இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தரும்? எனத் தோழி, தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க' என இச்செய்யுளை, 'சூள் நயத்திறத்தாற் சோர்வுகண்ட டழியினும்' என்பதனுரையில் நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 9). 57. நயம் உடையாளோ அவள்? துறை: தலைமகற்குப் புறத் தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்டுத், தோழி அவனை வினாவியது. (து.வி: 'தலைவன் புறத்தொழுக்கம் உடையனாயின்' எனக் கேட்ட தோழி, அவனையே அதுபற்றிக் கேட்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பலஞ் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய, அனைநலம் உடையோளோ - மகிழ்ந! நின் பெண்டே? தெளிவுரை: ஆம்பற்பூக்கள் நிறைந்திருக்கும் வயல் களையுடையது தேனூர் ஆகும். அதனைப் போன்ற சிறப்புடையதான இவளின் (தலைவியின்) அழகெல்லாம், பகற்போதிலே தோன்றுகின்ற பலவான சுடர்களையுடைய தீயிட்டதே சிக்கினாற் போன்று முற்றவும் வெந்தழியுமாறு, நீயும் இவளைப் பிரிந்தனை. மகிழ்நனே! அப்படிப் பிரிதற்கு நின்னைத் தூண்டிச் செலுத்தும் அத்துணைப் பேரழகு உடையவளோ நின் பெண்டு?' (பரத்தை). அதையேனும் எனக்குக் கூறுவாயாக! கருத்து: 'தலைவியை விடவும் அப்பரத்தை அழகானவளோ?' என்றதாம். சொற்பொருள்: பகலில் - பகற்போதில், பல்கதிர்த் தீ - பலவான நாக்குகளோடு சுடரிட்டு எழுந்து எரியும் பெருந்தீ. தேனூர் - பாண்டியநாட்டுத் தேனூர். நலம் - அழகு; புலம்ப - வருத்தமுற்றதாற் கெட. அனைநலம் - அத்துணை நலம்; அனநலம் என்றும் பாடம். பெண்டு - நின் காதற் பரத்தை. விளக்கம்: 'பகலிலே தோன்றும் பல்கதிர்த் தீயானது அளவுகடந்த வெம்மையுடையதாயிருக்கும்; எதிரிட்டதை எல்லாம் எரித்தழிக்கும்; அதுபோலவே நின் பிரிவாகிய தீயின் வாய்ப்பட்ட இவள் மிகப் பெருநலனும் கெட்டழிந்தது' என்றதாம். பிரிவாற்றாமையின் வெம்மை மிகுதிக்கு இது நல்ல உவமையென்று கொள்க. 'பகலெரி சுடரின் மேனி சாயவும்' என நற்றிணையும் கூறும். (நற். 128). வயல்களிலும் ஆம்பல் பூத்திருக்கும் வளமான தேனூர் போன்றது தலைவியின் வளமான அழகு என்றது, அதன் குன்றலில்லாச் சிறப்பை வியந்து கூறியதாம். ஆம்பலுக்கு உவமையாகப் பகலில் தோன்றும் பல்கதிர்ப் பெருந்தீயினைக் கொண்டால், அழகான மெல்லியலாராகத் தோன்றும் பரத்தையர், அவரைச் சார்ந்தாரைப் பகலெரி தீப்போல் தவறாதே எரித்தழிக்கும் கொடிய இயல்பினர் என்று உள்ளுறை பொருள் புலப்படுத்துக் கூறியவாறாகக் கொள்க. மேற்கோள்: 'பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் கூறி இச்செய்யுளை இளம்பூரணம் கற்பியலுட் காட்டுவர் - (தொல். கற்பு. 9). 'வணங்கியன் மொழியால் வணங்கற்கண் தோழிகூற்று நிகழ்வதற்கு' நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டுவர். (தொல். கற்பு. 9). 58. பிறர்க்கும் அனையாயால்! துறை: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. (து.வி: தலைவன் பலவறாகத் தெளிவிக்கவும் தெளியாளாய், மேலும் பலவியே மேற்கொண்ட தலைவியின் செயலால், தலைவன் மனவருத்தம் கொண்டனன். அதனைத் துய்ப்பதற்குக் கருதிய தலைவியின் தோழி, அவன் போக்கைக் காட்டி அவனுணருமாறு இவ்வாறு கூறிகின்றனள். இதனால் தலைவியும் தன் புலவி தீர்வாளாவது பயனாகும்.)
விண்டு அன்ன வெண்ணெற் போர்வின் கைவண் விராஅன், இருப்பை யன்ன இவள் அணங் குற்றனை போறி: பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே! தெளிவுரை: 'மலை போலத் தோன்றும் வெண்ணெல்லின் போர்களையும், வரையாதே வழங்கி மகிழும் கைவண்மையினையும் கொண்டவன் விரா அன் என்பவன். அவனது 'இ,உம்மை' நகரைப் போன்ற பேரெழில் வளம் பெற்றாள் இவள்.' இவளாலே, நீயும் வருத்தமுற்றாய் போலத் தோன்றுதி! பிற மகளிர்பாலும் நீ இத்தன்மையனே ஆதலால், நின் வருத்தம் தீர்ந்து அமைவாயாக! கருத்து: 'நின் வருத்தமும் எம்மை மயக்கச் செய்யும் ஒரு நடிப்பே' என்றதாம். சொற்பொருள்: விண்டு - மலை; 'விண்டு அனைய விண்தோய் பிறங்கல்' என்பது புறம் - (புறம் 391); 'விண்' என்னும் சொல்லடியாகத் தோன்றிய தமிழ்ச்சொல்; வான் நோக்கி உயர்ந்தது என்பது பொருள். போர்வு - பெருங்குவியல்; நெற்போர், வைக்கோற்போர் என அதற்கும் வழங்குவர். கைவண் - கைவண்மை; இடையறாது வழங்கி மகிழும் கொடைக்குணம் உடைமை. விரா அன் - பாண்டி நாட்டுக் குறுநிலத் தலைவன்; விராலிமலைக்கு உரியவன்; இவன் தலைநகர் 'இருப்பை' என்பர்; 'தேர்வண் கோமான் விரா அன் இருப்பை' என்பது பரணர் வாக்கு (நற். 350). 'இலுப்பைக் குடி' 'இருப்பைக் குளம்' என்று இன்றும் இருப்பையின் பேரால் ஊர்கள் சில பாண்டிய நாட்டில் உள்ளன. அணங்குறல் - துன்புறல். போறி - போன்றிருந்தனை விளக்கம்: விரா அன் தற்போது விராலிமலை என வழங்கும் இடத்திருந்த ஒரு வள்ளல்; அவன் வயல் வளத்தாற் சிறந்தவன் என்பது 'விண்டு அன்ன வெண்நெற் போர்வின்' என்பதாலும், அவன் வண்மையிற் சிறந்தான் என்பது 'கைவண்' என்பதாலும் கூறினார். அவனுக்கு உரிய ஊர் 'இருப்பை' என்பது; அது பல்வகை வளத்தாலும் உயர்ந்தது. அதுபோல் அழகுடையாள் தலைவி என்பது, அவ்வூரைச் சேர்ந்தார் அதனைவிட்டு நீங்குதலை நினையாராய் ஒன்றி யிருப்பது போல, அவளைச் சேர்ந்த தலைவனும் விட்டுப் பிரியானாய் ஒன்றியிருப்பதற்குரிய பேரழகினள் என்பதற்காம். 'இவள் அணங்கு உற்றனை போறி' என்றது, இவ்வாறு எவரொருவர் அழகியராக எதிர்ப்படினும், அவரைக் காமுறும் பரத்தமை இயல்புடையாய் என்று குறித்து அவனை பழித்ததும் ஆம். 'வாழி நீயே' என்றது, தான் நம்மை நலிவித்தல் மறந்தானாய், தான் நலிவதாகப் புனைந்து கூறிய நிலையை நோக்கி, தம் பெருந்தகு கற்பினால், அவன் பிழைமறந்து, அவன் உறவை ஏற்று வாழ்த்தியதுமாம். 59. இவட்கு மருந்து ஆகிலேன்! துறை: தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப், புறத்தொழுக்கம் உளதாகிய வழி, ஆற்றாளாகிய தோழி சொல்லியது; 'தலைமகற்குத் தேற்றத் தேறாது ஆற்றாளாகிய' என்பதும் பாடம். (து.வி: தலைமகன் வீட்டிற்கு வருவது படிப்படியாகக் குறைகின்றது. தலைவி பிரிவாற்றாமையால் பெரிதும் நலிவெய்துகின்றாள். 'அவன் வராமைக்குக் காரணம் அவனுடைய பரத்தைமை ஒழுக்கமே' என்று அறிந்தாள் தோழி. அதனைப் பொறாதாளான அவள், அவனிடம் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற மையல் நெஞ்சிற் கெவ்வம் தீர நினக்கு மருந்தாகிய யான், இனி, இவட்கு மருந்தன்மை நோம், என் நெஞ்சே! தெளிவுரை: மகிழ்நனே! நீ வாழ்க! இதனையும் கேட்பாயாக. இவளைக் கண்டு மையலுற்ற நின் நெஞ்சிடத்து வருத்தமானது தீருமாறு, இவளை நினக்குக் கூட்டுவித்து உதவி, நீயுற்ற நோய்க்கு மருந்தாக முன்னர் யான் விளங்கினேன். இப்பொழுது, நின் கொடுமையால் இவள் படும் துயர நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைவதற்கு இயலாமல், நெஞ்சம் வருந்தா நின்றேன்! கருத்து: 'நீதான் அன்புடையார் பேச்சிற்கு அகம் நிலைகொள்ளும் மனநிலை இழந்தனை' என்பதாம். சொற்பொருள்: கேட்டிசின் - கேட்பாயாக; 'சின், முன்னிலை அசை. ஆற்று உற - ஆறுதல் அடைய. நேரம் - வாடுதும்.' விளக்கம்: முன்னர்த் தலைவனின் காமநோய்க்குத் தோழி மருந்தாகியது, களவுக் காலத்தே. அன்று என் பேச்சால் தலைவி நினக்கு மகிழ்ச்சி தந்தனள்; இன்று நீயோ அவளை ஒதுக்கியதுடன் என் பேச்சையும் ஏற்றுக் கேளாயாயினை என்று தோழி குறைப்படுகின்றாள். மேற்கோள்: பரத்தையர் மனைக்கண் தங்கி வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித், தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழும் என இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். கற்பு. 9) 60. வேல் அஞ்சாயோ? துறை: வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வழிந்துழித் தோழி சொல்லியது. (து.வி: சூளுரைத்தபடி தலைமகளை வரைந்து வராமல், அவள் உறவை விரும்பி மட்டும் ஒருநாள் இரவு தலைமகன் வருகின்றான். இரவுக் குறியிடத்தே அவனைச் சந்தித்த தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும் கழனியூர! நின் மொழிவல்! என்றும் துஞ்சுமனை நெடுநகர் வருதி; அஞ்சாயோ, இவள் தந்தைகை வேலே? தெளிவுரை: பழனங்களிலே வாழ்கின்ற, சதா ஒலி செய்தபடியிருக்கும் சம்பங்கோழியானது, பிரிந்து சென்றுள்ள தன் சேவலைத் தன்னருகே வருமாறு கூவிக்கூவி அழைக்கும் கனிகளையுடைய ஊரனே! உள்ளிருப்பார் அனைவரும் அயர்ந்துறங்கும் பெருமனையிடத்தே, இரவு நேரத்தே, அஞ்சாமல் துணிந்து வருகின்றனையே! இவள் தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீதான் அஞ்சமாட்டாயோ? கருத்து: 'நினக்கு ஊறு நேருமோ?' என்றே யாம் அஞ்சுவேம் என்றதாம். சொற்பொருள்: கம்புள் - சம்பங் கோழி. பயிர்ப்பெடை - துணையை வேட்டுப் புலம்பற்குரல் எழுப்பியிருக்கும் பெட்டை; பயிற்பெடை எனவும் பாடம். துஞ்சு மனை - இருப்பார் உறங்கியிருக்கும் மனை. நெடுநகர் - பெரிய மாளிகை. மருதத்தே குறிஞ்சியாகிய இரவுக்குறி மறுத்தல் வந்தது இச் செய்யுளில். விளக்கம்: இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது இது. இவள் தந்தை கைவேற்கு நீ அஞ்சாயாய் வரினும், யாம் நினக்கது ஊறுசெய்யுமோ என எண்ணித் துன்புறுவோம்; ஆதலின், இனிப் பலரறிய மணதந்து கூடிவாழ்தலே செயத்தக்கது என்று தோழி கூறுகின்றனள். தன்னருகே சேவலைக் காணாத பெடை, அதற்கு, யாது துன்பமோ என நினைந்து அதனை அழைத்தழைத்துக் கூவுதல்போல, தலைவியும் நின்னைக் காணாதே நினக்கென்னவோ ஏதோ என்று புலம்பியிருப்பாள் எனத், தலைவியது காதற்செவ்வி உரைத்ததும் ஆகும். அந்த அழைப்பைக் கேட்டுச் சேவல் அதனருகே விரைவது போல, நீயும் இவளை மணந்து கோடற்கு விரைவாயாக என்பதாம். ''துஞ்சுமனை நெடுநகர் அஞ்சாதே வருது; ஆயின் வரைவொடு வந்து தமரின் இசைவோடு மணந்து கொள்ள, விரைந்திலை; எம் தந்தை கைவேலுக்கும் அஞ்சினாய் இல்லை; என் கருதினையோ?' என்பதாம். இதனால் இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டனள் என்பதும் ஆயிற்று. மேற்கோள்: திணை மயக்குறுதலுள்; மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர், (தொல். அகத். 12). |