சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 8 ...

7. கிழத்தி கூற்றுப் பத்து

     இதன்கண் வரும் பத்துச் செய்யுள்களும், தலைவியின் பேச்சாகவே அமைந்தவை; ஆதலின், இப்பகுதி இப் பெயர் பெற்றது. இவற்றால், உயர்பண்பும், கற்புச்சால்பும், குடிப்பிறப்பும் உடையாளான தலைவியின், செறிவான பெருமிதம் நிரம்பிய உள்ளப்போக்கும், தகுதி மேம்பாடும் நன்கு காணலாம்.

61. நல்லோர் வதுவை விரும்புதி!

     துறை: 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையை விட்டு, சின்னாளில் மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள், அவன் மனைவியின் புக்குழிப் புலந்தாளாக, 'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' என்றாற்கு, அவள் சொல்லியது.

     (து.வி: தன்னைப் பிரிந்து போய்ப் பரத்தையொருத்தியின் மையலிலே தலைவன் சிக்கிக் கிடந்ததால், தன் மனம் தாங்கொணா வேதனையுற்றிருந்தவள் தலைவி. அவள், அவன், அந்தப் பரத்தையைக் கைவிட்டு வேறொரு பரத்தையை நாடி வதுவை செய்தான் என்றும் கேட்டாள். அப்போது, தலைவனும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியோ முகத்தைத் திருப்பிக் கொள்ளுகின்றாள். தலைவன் 'நடந்தது நடந்துவிட்டது; இனி அவ்வாறி நிகழாது; என்னை மறாதே இவ்வேளை ஏற்றுக்கொள்' என்று பணிவோடு வேண்டுகின்றான். அவனுக்குத், தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்ழம்
     நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
     கைவண் மத்தி, கழாஅர் அன்ன
     நல்லோர் நல்லோர் நாடி
     வதுவை யயர விரும்புதி நீயே!

     தெளிவுரை: மணமிகுந்த வடுக்களையுடைய மாமரத்திலே, நன்கு விளைந்து கனிந்து, கீழே விழுகின்ற இனிய பழமானது, ஆழ்ந்த நீரையுடைய பொழ்கையிடத்தே, 'துடும்' என்னும் ஓசையுடன் விழுகின்ற, கொடை வண்மையுடைய மத்தியின், 'கழா அர்' என்னும் ஊரைப் போன்ற, நல்ல பெண்களையே நாடிச் சென்று, நீயும் வதுவை செய்து கொள்ள விரும்புகின்றாய்!

     கருத்து: ஆகவே, 'என்னிடத்து நீ அன்பாற்றாய்; ஆதலின் விலகிப்போக' என்றதாம்.

     சொற்பொருள்: நறுவடி - நறுமணமுள்ள மாவடுக்கள்; வடுக்கள் - பிஞ்சுகள்; 'நறுவடிமா' என்று நற்றிணையும் கூறும் - (நற். 243). நெடுநீர்ப் பொய்கை - நிறைந்த நீர் நிலையாக இருத்தலையுடைய பொய்கை. 'மத்தி' என்பவன் கழாஅர்க் கீரன் எயிற்றியார். வதுவை - மணம். பரத்தையோடு முதல் தொடர்பு கொள்வார் அதனையே வதுவைபோலக் கொண்டாடுதல் என்பதும் மரபு. 'வதுவை அயர்ந்தனை என்ப' என, அகநானூற்றும் இவ்வாறு வரும். (அகம். 36).

     விளக்கம்: நீர் வற்றாதிருக்கும் பொய்கைக் கரையிலேயுள்ள மாமரத்தின், மரத்திலேயே முதிர்ந்து கனிந்த அதன் பழம், துடுமென்னும் ஒலியோடே நீரில் விழும் என்றது, கழா அரின் வளமை பற்றிக் கூறியதாம். நல்லோர் நல்லோர் என்று பரத்தையரைக் குறிப்பிட்டதும், அவரோடு அவன் வதுவை அயர்ந்தான் என்றதும், தன்னுள்ளத்தே தோன்றிய எள்ளல் புலப்படக் கூறியதாம்.

     உள்ளுறை: மாவின் முதிர்ந்த கனி தானாகவே குளத்து நீரில் துடுமென விழூஉம் என்றது. அவ்வாறே பரத்தையர் சேரியிலே பக்குவமான இளங்கன்னியர் தலைவனின் வலையிலே தாமாகவே வந்து ஆரவாரத்துடன் விழுவாராயினர் என்று, உள்ளுறையால், அவன் புறத்து ஒழுக்கம் சேரிப்பெண்டிரெல்லாரும் அறிந்ததாயிற்றென்று கூறினளாம். இல்லறமாற்றி இன்புற்றிருந்த தலைவன், அப்பிடிப் பினின்றும் விலகிப் பரத்தையர் வலையிலே போய் வீழ்ந்தான் என்பது, மாவின் நறுங்கனி பொய்கைக்கண் வீழ்ந்து அழிவது போலாகும் என்று உள்ளுறை கொள்வது பொருந்தும். மாங்கனி பயனின்றி நீரிலே துடுமென வீழ்தலே போலத், தலைவனும் ஆரவாரத்துடன் வதுவை மேவிப் பரத்தையருடன் திரிவான் என்பதும் ஆம்.

62. எவ்வூர் நின்றது தேர்?

     துறை: மேற் செய்யுளின் துறையே.

     இந்திர விழவிற் பூவின் அன்ன
     புன்றலைப் பேடை வரிநிழல் அகவும்
     இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி
     எவ்வூர் நின்றன்று - மகிழ்ந! - நின் தேரே?

     தெளிவுரை: மகிழ்நனே! இந்த விழவினிடத்தே கலந்து மகிழ வருவார் பலரும் சூடியிருக்கும், வேறுவேறு வகையான பூக்களைப் போன்ற அழகுடைய, இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் ஓரிடத்தே கொண்டு தொகுத்ததன் பின்னால், புல்லிய குயிற்பேடையானது வரிப்பட்ட நிழற்கண் இருந்து அகவும் இவ்வுரைவிட்டு, வேற்றூர் மகளிரையும் கொணர்தலின் பொருட்டுச் சென்று, இப்போது நின் தேர் எவ்வூரிடத்தே நிற்கின்றதோ?

     கருத்து: 'நின் பரத்தையர் உறவுதான் வரை கடந்த்தாயிற்று' என்பதாம்.

     சொற்பொருள்: இந்திர விழா - மருத நிலத்தார் இந்திரனுக்கு எடுக்கும் பெருவிழா. புன்றலை - புல்லிய தலை. பேடை - குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்பினது.

     விளக்கம்: 'நின்தேர் எவ்வூர் நின்றன்று?' என்றது, நீதான் இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் நுகர்ந்து முடிந்தபின், இப்போது எவ்வூரவளோடு போய்த் தொடர்புடைய்யோ என்றதாம்; பரத்தமை பூண்டாரின் மனவியல்பு இவ்வாறு ஒன்றுவிட்டொன்றாகப் பற்றித் திரிந்து களிக்க நினைப்பதாகும். இந்திரவிழா, அரசு ஆதரவில் நடக்கும் பெருவிழா என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும்; அவ்விழாக் காண வருவார், வேற்றூர் மகளிரும் ஆடவரும் பலராயிருப்பர் என்பதால், 'இந்திரவிழவிற் பூவின் அன்ன' என்று, அவர் சூடிய பலப்பல பூவகைகளையும் குறித்தனர். பல பூக்கள் என்றது, அவரவர் நிலத் தன்மைக்கு ஏற்பப் பூச்சூடும் மரபினையும் குறித்ததாகும். அவ்விழாவில் நடனமாடவரும் பலவூர்ப் பரத்தையரின் ஒப்பனைகளை இது சுட்டுவதும் ஆகலாம்.

     'இவ்வூர் மங்கையர்த் தொகுத்து' என்பது, இந்திர விழாவில் ஆடலும் பாடலும் நிகழ்த்தற்பொருட்டு, ஊர்த் தலைவனான அவன், அவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் தன் தேரிலே ஏற்றிக் கொண்டு ஒருங்கு சேர்த்தலைக் கண்டும் கேட்டும், தலைவி அவன்பால் ஐயமுற்று, மனவுளைச்சலுற்றனள் என்பதும் பொருந்தும்.

63. பிறர் தோய்ந்த மார்பு!

     துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது.

     (து.வி: பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திரும்புகின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருக்க, அவள் புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இதுவாகும்.)

     பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
     வாளை நாளிரை பெறூஉம் ஊர!
     எந்நலம் தொலைவது ஆயினும்,
     துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!

     தெளிவுரை: பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், புலவு நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பெருந்தவே மாட்டோம்!

     கருத்து: 'பிற மகளிராலே எச்சிற்பட்ட நின் மார்பினை யார் அணையோம்' என்றனதாம்.

     சொற்பொருள்: பள்ளி - வாழும் இடம் என்னும் பொதுப் பொருளில் வந்தது. நாளிரை - அந்நாளுக்கான இரை. துன்னல் - பொருந்தத் தழுவல். பிறர் - உரிமையற்ற வரான பரத்தையர்.

     விளக்கம்: நாய் போலத் தோன்றி நீரிடத்தே வாழும் உயிர்வகை நீர் நாய் ஆகும். அந்நாளைத் தமிழகத்தே பெருகக் காணப்பட்ட இதனை, இப்போது உயிர்க் காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது. வாளைமீன் இதற்கு விருப்புணவு என்பதனை, 'வாளை நாளிரை பெறூஉம் ஊரன்' எனக் குறுந்தொகை கூறுவதாலும் அறியலாம் - (குறுந். 364). 'எந்நலம் தொலைவது ஆயினும்' என்றது, அவன் உரிமை மனையாளாதலின், அவள் அழகெல்லாம் அழிவது பற்றி ஏதும் கவலைப்படுதலும் இல்லை என்று கூறியதாம். களவுக் காலத்தே தம் நலம் பெரிது பேணும் மகளிர், ஒருவனின் உரிமை மனைவியராயினபின் அதன்பாற் பெரிதும் கருத்துக் காட்டார்; கடமையே பெரிதாக நினைப்பர் என்பதும், இதனாற் கொள்ளப்படும்.

     உள்ளுறை: 'நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல் போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச் சென்று துய்த்து மகிழும் இயல்பினை' என்று, பழித்து உதுக்கினள் என்க.

     மேற்கோள்: ''இது பிறப்பு உவமப் போலி; நல்ல குலத்திற் பிறந்தும், இழிந்தாரைத் தேடிப்போய்த் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது; அவரையே பாதுகாவாய்; மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டல்'' என்பாள், அஃது எல்லாம் விளங்கக் கூறாது, 'பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடும், பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன்' என்றமையின், பரத்தையர் பிறப்பு இழிந்தமையும், தலைவி பிறப்பு உயர்ந்தமையும் கூறி, அவன் பிறப்பின் உயர்வும் கூறினமையின், இது பிறப்புவமப் போலியாயிற்று. இவையெல்லாம் கருதிக் கூறின், செய்யுட்குச் சிறப்பாம் எனவும், 'வாளாது நீர்நாய் வாளை பெறூஉம் ஊர' என்றதனான் ஒரு பயனின்று எனவும் கொள்க'' என்பர் பேராசிரியர் - (தொல். உவம. 25).

     இவ் விளக்கத்தால், 'புலவுநாறு' என்பதற்கு, முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே என்றும், 'நாள் இரை' என்றற்கு, அன்றைக்கு அவளைவிட்டு மற்றொருத்தியை நாடின என்றும், குறிப்புப் பொருள் கொள்ளலாம்.

64. எம்மை மறையாதே!

     துறை: தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள், அவன் மறைத்துழிச் சொல்லியது.

     (து.வி: தலைவன் பரத்தையரோடு புதுப்புனலாடி மகிழ்ந்தான் என்று கேட்டதும், தலைவியின் நெஞ்சம் கொதிப்புற்று வெதும்புகின்றது. அவன், இல்லந் திரும்பியவன், ஆர்வத்தோடு தலைவியை நெருங்க, அவள் அதனைச் சொல்லிப் புலக்கின்றாள். அவன், அச்செய்தி பொய்யென மறுக்க, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
     நலமிகு புதுப்புனல்ஆடக் கண்டோர்
     ஒருவரும் இருவரும் அல்லர்;
     பலரே தெய்ய; மறையா தீமே.

     தெளிவுரை: எப்போதும் சுற்றிச் சூழ்ந்தவராக வந்து கொண்டிருக்கும் ஆயமகளிரோடும் கூடிய, நின்னால் விரும்பப்படும் பரத்தையைத் தழுவிக் கொண்டவனாக, நீதான், நலத்தை மிகுவிக்கும் புதுப்புனலிலே நேற்று ஆடினை; அதனைக் கண்டோர் ஒருவரோ இருவரோ அல்லர்; அவர் மிகப்பலராவர்; ஆதலின், எம்பால் அதனை மறைத்து ஏதும் நீ கூறுதல் வேண்டா!

     கருத்து: 'அவர்பாலே இனியும் செல்வாயாக' என்றதாம்.

     சொற்பொருள்: அலமரல் ஆயம் - சுற்றிச் சூழ்ந்தவராக வரும் ஆயமகளிர். அமர்துணை - விரும்பிய பரத்தை. 'தெய்ய': அசைச் சொல். மறையா தீமே - மறையா திருப்பாயாக.

     விளக்கம்: தம் தலைவி செல்லுமிடமெங்கணும் பாதுகாவலாகவும், ஏவுபணி செய்யவும் சுற்றிச் சூழ்ந்து வருபவராதலின், 'அலமரல் ஆயமகளிர்' என்றனள். 'ஆயமகளிர் அலமர நீ பரத்தையுடன் கூடிப் புனலாடினை' என, அவர் அவ்வுறவின் நிலையாமை பற்றிக் கலங்கி வருந்தியதாகவும், கொள்ளலாம். நலமிகு புதுப்புனல் - உ0ல் மன நலத்தை மிகவாக்கும் புதுப்புனல்; அழகுமிகுந்த புதுப்புனலும் ஆம். 'அமர்துணை' என்றது பரத்தைமை; 'நீ அமர்துணை யாமல்லேம், அவளே' என்று கூறியதும் ஆம். கண்டார் பலர் என்றது, அதனால் ஊரில் எழுந்த பழிச்சொல்லும் மிகுதியெனக் கூறியதாம். இவ்வாறு, தலைவர்கள் பரத்தையரோடு புதுப்புனலாடலையும், அதுகேட்டு மனைவியர் சினந்து ஊடலையும், அயர்ந்தனை என்ப' என அகநானூற்றும் இயம்பக் காணலாம். (அகம். 116).

65. புதல்வனை ஈன்ற மேனி!

     துறை: ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத், தலைமகள் சொல்லியது.

     (து.வி: புதல்வனைப் பெற்ற வாலாமை நாளில், திதலை படரவும் தீம்பால் கமழவும் தலைவி விளங்குகின்றாள். அவ்வேளை அவளைத் தழுவுதற்கு முற்பட்ட தலைவனுக்குத், தலைவி கூறித் தடுப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்
     சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர!
     புதல்வனை ஈன்றவெம் மேனி
     முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.

     தெளிவுரை: கரும்பு நடுவதற்கேனச் செப்பஞ்செய்த பாத்தியிலே, தானாகவே தழைத்த நீராம்பலானது, வண்டினத்தின் பசியைப் போக்குகின்ற, பெரும்புனல் வளமுடைய ஊரனே! புதல்வனை ஈன்ற எம் மேனியைத் தழுவாதேகொள்! அதுதான் நின் மார்பின் அழகுப் புனைவுகளைச் சிதைத்துவிடும்!

     கருத்து: 'அதனால், நின் பரத்தையும் நின்னை ஒதுக்குவாள்' என்றதாம்.

     சொற்பொருள்: பாத்தி - பகுத்துப் பகுத்து பகுதி பகுதியாக அமைத்துள்ள நிலப்பகுப்பு. கலித்த - செழித்துத் தழைத்த. மார்பு சிதைப்பதுவே - மார்பின் எழிலைச் சிதைப்பதாகும்.

     உள்ளுறை: 'கரும்பை நடுவதற்கென்று ஒழுங்குசெய்த பாத்தியில், ஆம்பல் கலித்துச் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊரன்' என்றது. இல்லறம் செவ்வையுற நடத்தற்காக அமைத்த வளமனைக் கண்ணே வந்து சேர்ந்தாளான பரத்தையும், தலைவனுக்கு இன்பம் தருவாளாயினள் என்றதாம். தலைவன் தன்னைத் தழுவ முயலும்போது, அவன் மார்பின் பூச்சுப் புனைவுகளைக் கண்டு, அவன் பரத்தைபாற் செல்வதாக நினைத்து, 'எம்மைத் தழுவின் எம் மார்பின் பால்பட்டு அவ்வழகு சிதையும்; பரத்தையும் அதுகண்டு நின்னை வெறுப்பாள்' என்று தலைவி மறுத்துக் கூறினள் என்பதும் பொருந்தும்.

     விளக்கம்: 'புதல்வனை ஈன்ற எம்மேனி' என்றது, அந்த உரிமை இல்லாதவள் பரத்தை என்று தன் சிறப்புரை கூறிக் காட்டற்காம். கரும்பு நடு பாத்தியில் ஆம்பல் கலித்தாற் போலத், தானிருந்து இல்லறமாற்றற்குரிய வளமனையில், தலைவன் பரத்தையைக் கொணர்ந்து கூடியிருந்தான் என்று கேட்ட செய்தியால் மனமிடிந்து, தலைவி கூறியதாகவும் கொள்க. பெரும்பாலுன் தமிழின மரபு முதற் பிள்ளைப்பேறு தாய்மனைக்கண்டே நிகழ்வதே ஆதலின், தலைவன், இவ்வாறு பரத்தையைத் தன் வீட்டிடத்தேயே கொணர்ந்து கூடியிருத்தலும் நிகழக்கூடியதே யாகும்.

     மேற்கோள்: இது வினையுவமப் போலி; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை, சுரும்பின் பசி தீர்க்கும் ஊரன் என்றாள். இதன் கருத்து. அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்கும் என்று அமைக்கப்பட்ட கொயிலுள்யாமும் உளமாகி, இல்லறம் பூண்டு விருந்து ஓம்புகின்றனம்; அதுபோல என்பதாகலான், உவமைக்குப் பிரிதொரு பொருள் எதிர்த்து உவமம் செய்யாது, ஆண்டுப் பிறந்தனவற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ள வைத்தலின், இஃது உள்ளுறை உவமம் ஆயிற்று. அவற்றுள்ளும், இது சுரும்பு பசிகளையும் தொழிலோடு, விருந்தோம்புதல் தொழில் உவமங்கொள்ள நின்றமையின், வினையுவம்பஃ போலியாயிற்று. இங்ஙனம் கூறவே, இதனை இப்பொருண்மைத்து என்பதெல்லாம் உணருமாறு என்னை? எனின், முன்னர், 'துணிவோடு வரூஉம் துணிவினோர் கொளினே' எனல் வேண்டியது, இதன் அருமை நோக்கியன்றே என்பது. அல்லாக்கால், கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசிகளையும் பெரும்புனல் ஊர என்பது பயமில வென்பது கூறலாம் என்பது'' என, இச் செய்யுளை, நன்கு விளக்குவர் பேராசிரியர் - (தொல். உவமம். 25).

     புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழவனை, நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின் கண், தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் காட்டுவர், இளம் பூரணர் - (தொல். கற்பு. 6).

     புதல்வற் பயந்த காலத்துப் பிரிவு பற்றித் தலைவி கூறியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு - 6).

     பரத்தையினது இல்லிலிருந்து தலைவனது வரவைப் பாங்கிகூற, அதையுணர்த்த தலைவி, தலைவனோடு புலந்தது எனக் காட்டுவர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (கற்பு, 7).

66. யார் அவள் உரைமோ?

     துறை: புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது.

     (து.வி: புதல்வனைப் பிரியாதவனாக இருந்த தலைவன், ஒரு சமயம் அவனையும் பிரிந்துபோய், பரத்தையோடு உறவாடி விட்டு இரவினும் அங்கே தங்கியிருந்து காலையிலே வந்தான் என்றறிந்த தலைவி, அவனோடு மனமாறுபட்டுக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     உடலினென் அல்லேன்; பொய்யாது மோ;
     யார் அவள், மகிழ்ந! தானே - தேரொடு, நின்
     தளர்நடைப் புதல்வனை யுள்ளி, நின்
     வளமனை வருதலும் வௌவி யோளே?

     தெளிவுரை: மகிழ்நனே! உருட்டி விளையாடும் சிறுதேரின் பின்னாகத் தளர்நடை நடந்தவனாக வருகின்ற நம் புதல்வனைக் காணவிரும்பி, நின் வளமனைக்கு நீதான் வந்தடைந்தும், நின் பின்னாலேயே தொடர்ந்துவந்து, நின்னைப் பற்றிக் கொண்டு போனவள்தான், யாவள் என்று எனக்குக் கூறுவாயாக. யான் நிற்பாற் சினந்தேன் அல்லேன்; ஆதலின், உண்மைதான் ஈதென்று, நீயே சொல்வாயாக.

     கருத்து: 'நின் வேற்றுறவு வீடுவரைக்கும் வந்துவிட்டதே' என்றதாம்.

     சொற்பொருள்: உடலல் - சினத்தல். தேர் - சிறுதேர். தளர்நடை - அசைந்து நடக்கும் சிறுநடை; கால் வலுப் பெறாததால் தள்ளாடும் நடை. வளமனை - வளமான இல்லம். வௌவல் - கவர்ந்து கொண்டு போதல்.

     விளக்கம்: புதல்வன் தெருவில் சிறு தேருருட்டிச் செல்லக் கண்ட தலைவன், அவன்பாற் பேரன்பினன் ஆதலின், தான் ஏகக்கருதிப் புறப்பட்ட பரத்தையின் இல்லம் நோக்கிப் போதலையும் மறந்து, புதல்வனைப் பின்பற்றி, மீளவும் வீட்டைநோக்கி வருகின்றான். அப்போது, அவனைக் காணாதே தேடிவந்த பரத்தையானவள், அவனைப் பற்றிக் கொண்டு தன்னிலம் நோக்கி அழைத்தேகினள். இதனைக் கண்ட தலைவி, பின்னர் வந்த தலைவனிடம் கூறியது இது.

     பரத்தையே தலைவனின் புதல்வனைத் தெருவிடைக் கண்டதும், அவன்பால் ஆசைகொண்டாளாகத், தூக்கியணைத்தபடியே, தலைவனில்லத்துப் புகுந்தனள். புகுந்தவள், அங்கு எதிர்பட்ட தலைவனைத் தன்னில்லத்திற்குப் பற்றிச் சென்றனள் என்பதும் பொருந்தும். அதுகண்டு தலைவி ஊடினள் என்றும் அப்போது சொல்க.

     'உடலினேன் அல்லேன்' என்றது, அவள் தன் கற்புச் செவ்வி தோன்றக் கூறியதாம்; 'பொய்யாது உரைமோ' என்றது, பொய்த்தலே தலைவனின் இயல்பாதலைச் சொட்டிக் கூறியதாம்.

     மேற்கோள்: புதல்வனை நீங்கிய வழித் தலைவி கூறியதற்கு இதனை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6).

67. அவள் மடவள்!

     துறை: தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, புறனுரைத்தாள் எனக் கேட்ட தலைவி, தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது.

     (து.வி: பரத்தை தன்னைப் பற்றி இழிவாக ஏதோ கூறினாள் எனக் கேட்டாள் தலைவி; தலைமகன் வீடு வந்துவிடத்து, அப் பரத்தைக்கு வேண்டியவர்கள் கேட்குமாறு, அவனிடத்தே ஊடிச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     மடவள் அம்ம, நீ இனிக் கொண் டோளே -
     'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
     பெருநலம் தருக்கும்' என்ப; விரிமலர்த்
     தாதுண் வண்டினும் பலரே,
     ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே!

     தெளிவுரை: தலைவனே! நீ இப்போது தலைக்கொண்டு ஒழுகும் பரத்தையானவள், தன்னை என்னோடும் நிகரினளாகக் கருதித், தன் பெருநலத்தைத் தருக்கடன் வியந்து கூறினாள் என்பர். நின்னாலே முன்பு நலனுண்ணப்பட்டு, ஓதியடுத்த ஒளிநுதல் பசப்பிக் கொண்டோரான மகளிர்கள், இதழ்விரிந்த மலர்களிலே தாதுண்டு பின் அதனை மறந்துவிடும் வண்டினாற் கழிக்கப்பட்ட மலர்களினும் பலராவரே! இதனை அவள் அறிந்திராத மடமையாட்டியே போலும்!

     கருத்து: 'அவள் நின்னைப் பற்றிய உண்மையினை அறியாள் போலும்' என்றதாம்.

     சொற்பொருள்: மடவள் - மடமையுடையவள். இனி - இப்பொழுது. கொண்டோள் - தன்பாற் பிணித்துக் கொண்டவள். நிகரி - நிகராகக் கருதி மாறுபட்டு, தருக்கும் - செருக்குக் கொள்ளும். விரிமலர் - மொட்டவிழ்ந்த புதுமலர்.

     விளக்கம்: 'தலைவனின் காதற் பரத்தை, தலைவியோடு தன்னையும் ஒருசேரக் கருதினளாக ஒப்பிட்டுக் கொண்ட, தான் தலைவியினும் பலவாகச் சிறந்தவள் என்றும் கூறினாள்' எனக்கேட்டுப் புலந்திருந்தவள் தலைவி. தலைமகன் தன்னை நாடிவந்தபோது, அப்பரத்தையின் தொழியர் கேட்பத் தலைவனுக்குச் சொல்வது போல இப்படிக் கூறுகின்றாள். தன்னை இழிந்தாளான பரத்தை ஒருத்தி பழித்தற்குக் காரணமாஇனவன் தலைவனே என்று, அவன் செயலைப் பழித்ததும் ஆம். 'அவளையும் தலைவன் விரைவிற் கைவிட்டு வேறொருத்தியை நாடுவான்' என்று, அவன் நிலைமை கூறிப் பரத்தையின் செருக்கழிதற்கு உண்மையுணர்த்திக் காட்டியதுமாம்.

     'விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே' என்பதற்கு, 'அவளைத் தழுவி யின்புற்றுப் பிரிந்து போயின ஆடவரும் மிகப் பலராவர்' என்று பொருள் காணலும் பொருந்தும்; தன் கற்புச்சால்பும் பரத்தையின் இழிவும் கூறியதாகவும் அது அமையும்.

     உள்ளுறை: வண்டொன்று பலப்பல மலரினும் சென்று சென்று தேனுண்டு, பின் அப் பூக்களை நாடாது வாடியுதிர விட்டுக் கழித்தல்போலத், தலைவனும் புதியரான பரத்தையரை நாடிச் சென்று கூடி இன்புற்று, அவரைக் கைவிட்டு விடும் இயல்பினன், என்று உவமைப்படுத்தினள்.

     மேற்கோள்: காமக் கிழத்தியர் நலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண், தலைவி கூற்று நிகழும். இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்தாக வரைந்து கொண்ட பரத்தை, தன்னொடு இளமைச் செவ்வோ ஒவ்வா என்னையும் தன்னொடு ஒப்பித்துத், தன் பெரிய நலத்தாலே மாறுபடும் என்பவென, அவள் நலத்தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவறானும் காண்க என, இச்செய்யுளைக் கற்பியற் சூத்திர உரையிற் காட்டிப் பொருள்விளக்கம் தருவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6) இதனையும் நினைத்து பொருள் கொண்டு மகிழ்க.

68. அடக்கவும் அடங்காள்!

     துறை: பரத்தை, தான் தலைமகளைப் புறங்கூறி வைத்துத், தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி, தலைமகற்குச் சொல்லியது.

     (து.வி: தலைமகளைப் பழித்துப் பேசின பரத்தை, தலை மகள் தன்னைப் பழித்ததாகப் புறங்கூறித் திரிகின்றாள். அதனைக் கேள்வியுற்ற தலைவி, தலைவினிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     கன்னி விடியல், கணைக்கால் ஆம்பல்
     தாமரை போல மலரும் ஊர!
     பேணாளோ நின் பெண்டே
     யான்தன் அடக்கவும், தான் அடங்கலளே?

     தெளிவுரை: திரண்ட தண்டையுடைய ஆம்பலானது, கன்னி விடியற்போதிலே, தாமரையைப் போலவே இதழ் விரித்து மலர்ந்திருக்கும் ஊரனே! யான் நின் போற்றா ஒழுக்கம் தெரிந்தும், என் வேதனையை அடக்கிக் கொண்டிருப்பவும், நின் பரத்தையானவள், தான் அடக்கமிலாது நடக்கின்றனளே! நின் பெண்டானவள் எப்போதுமே அடக்கத்தைப் பேண மாட்டாளோ?

     கருத்து: 'அத்தகையாளையே நச்சிச் செல்லும் நின் தகைமைதான் யாதோ?' என்றதாம்.

     சொற்பொருள்: கன்னி விடியல் - கதிரவன் உதயத்துக்கு முற்பட்ட இளங்காலைப் பொழுது; இதற்கு முந்திய இரவுப் போதைக் 'கன்னி இருட்டு' என்பார்கள். ஆம்பல் - செவ்வாம்பல். பேணாளோ - அடக்கத்தைக் காத்துப் பேணமாட்டாளோ? 'பெண்டு' என்றது காதற் பரத்தையை. யான் தன் அடக்கவும் - யான் என் சினத்தைத் தகுதியால் அடக்கியிருக்கவும்; அவள் பழித்தலைப் பாராட்டாதிருக்கவும், அடங்கலள் - அடங்காதே, என்னையே பழித்துப் புறங்கூறித் திரிவாளாயினள்.

     விளக்கம்: தலைவியின் உயர்குடிப் பண்பும், பரத்தையின் குடிப்பண்பும் அவர்தம் அடக்கமுடைமை இன்மை பொருளாக இச் செய்யுளில் காட்டப் பெற்றன. தனக்குரியாளைக் கொண்ட பரத்தையைத் தலைவி பழித்தல் இயல்பேனும், அவள், தன் குடித்தகுதியால் அடக்கம் பேணுகின்றனள்; பரத்தையோ தன் இளமைச் செவ்வியும் தலைவியின் புதல்வற்பெற்ற தளர்ச்சி நலிவும் ஒப்பிட்டுத் தலைவியைப் பழித்தனள். இதற்குக் காரணமானவன் தலைவனே என்று தலைவி மனம் நொந்து கூறியதுமாம்.

     உள்ளுறை: சிறப்பில்லாத சேதாம்பல் தாமரை போல மலரும் ஊரன் என்றது, சிறப்பற்ற பரத்தையும் தான் தலைவனுக்கு உரிமையாட்டி போலத் தருக்கிப் பேசுவாளாவள் என்பதைச் சுட்டிக் கூறியதாம்.

69. கண்டனம் அல்லமோ!

     துறை: தலைமகன், பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், தனக்கில்லை என்று அவன் மறைத்துழிச் சொல்லியது.

     (து.வி: தலைவனின் பரத்தைமையுறவை அறிந்தாள் தலைவி. அவள் கேட்கவும், தலைவன் 'அவ்வொழுக்கம் தனக்கில்லை' என்று உறுதிபேசி மறுக்கின்றான். அப்போது தலைவி அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின்பெண்டே?
     பலராடு பெருந்துறை, மலரொடு வந்த
     தண்புனல் வண்டல் உய்த்தென
     உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!

     தெளிவுரை: மகிழ்நனே! பலரும் கூடியாடுகின்ற ஆற்றுப் பெருந்துறையினிடத்தே, மலரோடும் பெருகி வந்த தண்ணிய புனலானது தான் அமைத்த வண்டலை அடித்துக் கொண்டு போயிற்றென, தன் மையுண்ட கண்கள் சிவப்படையுமாறு அழுது நின்றாளே, அவள் நின் பெண்டே அன்றோ! அவளை யாமும் அந்நாட் கண்டேம் அல்லமோ?

     கருத்து: 'நின் பெண்டு யாரென்பதை யாம் அறிவோம்' என்றதாம்.

     சொற்பொருள்: வண்டல் - மணலாற் கட்டிய சிற்றில். உய்த்தென - கொண்டு போயிற்று என. 'மலரொடு வந்த தண்புனல்'. எனவே புதுப்புனல் என்க. பலராடு பெருந்துறை - பலரும் சேர்ந்து நீராடியபடி இருக்கும் பெரிய நீர்த்துறை.

     விளக்கம்: பலராடு பெருந்துறையிலே, வண்டல் இழைத்திருந்த பெண், அது நீரால் அடித்துப் போகப்பட, அது குறித்து உண்கண் சிவப்ப அழுதாள் என்பது, அவளது அறிய இளமைப் பருவத்தினைக் காட்டிக் கூறியதாம். மணல் வீடு அழிதற்கே அவ்வாறு தாங்காதே அழுதவள், நீ மறந்து கைவிட்டால் தாங்குவதிலள்; அதனால் நீயும் அவளிடமே செல்வாயாக என்று புலந்து ஒதுக்கியதுமாம். 'கண்டனெம்' என்றது' முன் நேரிற் கண்டதனை நினைவுபடுத்தியது.

     மேற்கோள்: காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேன் எனத் தலைமகனை நோக்கித் தலைவி கூறியது இது எனக் கற்பியலிற் காட்டுவர் நச்சினார்க்கினியர் - தொல். கற்பு, 6).

70. யாம் பேய் அனையம்!

     துறை: பரத்தையரோடு பொழுது போக்கி, நெடிது துய்த்து வந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.

     (து.வி: பரத்தையரோடு நெடுநேரம் கலந்திருந்து களித்தபின், தன் வீடு திரும்புகின்றான் தலைவன். அவனிடம், அத்தகவல் அறிந்தாளான தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

     பழனப் பன்மீன் அருந்த நாரை
     கழனி மருதின் சென்னிச் சேக்கும்
     மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
     தூயர்; நறியர் - நின் பெண்டிர்;
     பேஎய் அனையம், யாம் : சேய் பயந்தனமே!

     தெளிவுரை: பழனத்தேயுள்ள பலவான மீன்களையும் பற்றியுண்ட நாரையானது, கழனியிடத்தேயுள்ள மருத மரத்தின் உச்சியிலே சென்று தங்குகின்ற, மிக்க நீர் நிறைந்த பொய்கையினையும், புதுவருவாய்ப் பெருக்கினையும் கொண்ட ஊரனே! யாம் சேயினைப் பெற்றுள்ளேமாதலின், நின் பார்வைக்குப் பேயினைப் போன்றவரே யாவோம்; நின் பெண்டிரான பரத்தையரோ தூய்மையும் நறுமணமும் உடையவராவர்!

     கருத்து: 'அதுபற்றியே போலும் நீயும் அவரை நாடிச் சுற்றுவாய்' என்றதாம்.

     சொற்பொருள்: பழனம் - ஊர்ப் பொது நிலம்; எப்போதும் நீர்ப்பெருக்கு உடையதாகிப் பலவகை மீன்கள் செழித்திருக்கும் வளம் பெற்றது ஆகும். அருந்த - அருந்திய. சேக்கும் - சென்று தங்கியிருக்கும். கழனி - வயல். சென்னி - உச்சி. மாநீர் - மிகுநீர். கருமையான நீரும் ஆம். தூயர் - மகப் பெற்றாரிடம் எழும் பால்நாற்றம் இல்லாதவர். நறியர் - நறுமணப் பொருள்களால் தம்மைப் புனைந்துடையோர். பேஎய் - வெறுக்க வைக்கும் உருவம் உடையதாகச் சொல்லப்படுவது: மெலிந்த மேனியும், குழிந்த கண்களும், ஒப்பனையிழந்து, பால்முடை நாறும் மார்பமும் கொண்டவள் தான் என்பது தோன்றக் கூறியது.

     விளக்கம்: 'நின் கண்ணுக்கு யாம் பேய் அனையம்' எனினும், நின்குடிக்கு விளக்கம் தரும் புதல்வனைப் பெற்றுத் தந்த தகுதியும் உடையோம்' எனத் தன் தாய்மைப் பெருமிதம் தோன்றக் கூறியதாம். 'தூயர் நறியர்' என்றது, உடலால் தூயரேனும் மனத்தால் தூயரல்லர்; புனைவுகளால் நறியரேனும் பண்பால் நறியரல்லர் என்றதாம்.

     உள்ளுறை: பழனப் பன்மீனுண்ட புலவு நாற்றத்தையுடைய நாரையானது. கழனி மருதின் சென்னிடத்தே சென்று தங்குமாறு போல, பரத்தையரோடு கலந்துறவாடிக் களித்த நீதானும், இப்போது சிறிதே இளைப்பாறுதலின் பொருட்டாக, எம் இல்லத்திற்கும் வந்தனை போலும் என உள்ளுறையாற் கூறினள்.

     இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு, உயர்ந்த மருதின் சென்னி தங்குமிடம் ஆயினாற்போல, பரத்தையருறவே விரும்பிச் செல்லும் நினக்கும், மகப்பயந்து உயர்ச்சிகண்ட எம்மனைதான் தங்கிப் போகும் இடமாயிற்றோ என்பதும் ஆம்.

     காதல் மனைவியோடு கலந்தின்புற்றுக் களித்த தலைவன், அவள் மகப் பெற்றுள்ள நிலையிலே, இன்ப நாட்டம் தன்பால் மீதூறலினாலே தளர்ந்த மனத்தினனாகி, இவ்வாறு பரத்தையர்பாற் செல்வதும், பின்னர் திருந்துவம் இயல்பாகக் கொள்க.