உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 9 ... 8. புனலாட்டுப் பத்து இப்பகுதியில் அமைந்துள்ள பத்துச் செய்யுட்களும், மருத நிலத்தாரின் புனலாட்டும், அதன் கண்ணே நிகழும் செய்திகளும் கொண்டிருப்பன. தலைமகன் பரத்தையரோடு கூடிப் புனலாடினான் எனக் கேட்டுத் தலைமகள் புலந்து கூறுவதும், அவள் பொருட்டுத் தோழி கூறுவதும் மிகவும் நுட்பமான பொருட்செறிவு கொண்டனவாகும். அதனால், இதனைப் புனலாட்டுப் பத்து என்றனர். 71. ஞாயிற்றொளியை மறைக்க முடியுமோ? துறை: 'பரத்தையரோடு புனலாடினான்' எனக் கேட்டுப் புலந்த தலைமகள், தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது. (து.வி: 'பரத்தையரோடு நேற்று நின் தலைவன் புதுப்புனலாடி இன்புற்றான்' என்று, தலைவியிடம் கண்டார் பலரும் வந்து கூறிப் போகின்றனர். அதனால், அவள் உள்ளம் நொந்து மிகவும் வாடியிருந்தாள். அப்போது, அவள்பால் வந்த தலைவனிடம் அதுபற்றிக் கேட்க, அவன் இல்லவே இல்லை என மறைத்துப் பேசுகின்றான். அப்போது, தலைவி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
சூதார் குறுந்தொடிச் சூர் அமை நுடக்கத்து நின்வெங் காதலி தழீஇ, நெருநை ஆடினை என்ப, புனலே; அலரே மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்ற தொளியே! தெளிவுரை: மகிழ்நனே! உள்ளே துளைபொருந்திய குறியவான தொடிகளையும், அச்சம் பொருந்திய அசை வினையுமுடைய, நின் விருப்பத்திற்குரிய காதலியைத் 'தழுவினவனாக, நீயும் நேற்றைப் போதிலே புதுப்புனலாடினை என்பார்கள். ஞாயிற்றினது விரிந்து பரவும் ஒளியினை எவராலும் யாதாலும் மறைத்தல் முடியுமோ? அதுபோலவே, நீ புனலாடியதாலே எழுந்த பெரும் பழியினையும், நின் மாயப் பேச்சுக்களாலே நின்னால் மறைத்தற்கு இயலுமோ?' கருத்து: 'நின் பொய்யுரை வேண்டா! யாம் உண்மை அறிவேம்' என்றதாம். சொற்பொருள்: சூதார் குறுந்தொடி - உள்ளே துறையுடையதாகச் செய்யப் பெற்ற குறுந்தொடி; சூதான சிந்தையோடு ஒலிக்கும் குறுந்தொடிகளும் ஆம். சூர் - அச்சம், சூர் அமை நுடக்கம் - துவண்டு நடக்கும் நடையழகால் ஆடவரைத் தம் வலைப்படுத்து அழித்தலால், இவ்வாறு அச்சம் அமைந்த அசைவு என்றனர். புதைத்தல் - மூடி மறைத்தல். விளக்கம்: ஞாயிற்றின் ஒளியை எவராலுமே மறைக்க வியலாதே போல, அதுதான் எங்கும் பரவி நிறைவதேபோல, நீ பரத்தையருடனே புனலாடினதால் எழுந்த பழிப்பேச்சும் எவராலும் மறைத்தற்கியலாததாய் எங்கும் பரவிப் பெரும்பழி ஆயிற்று; அதனை நின் மாயப் பேச்சால் மறைத்து மாற்ற வியலாத் என்கிறாள் தலைவி. 'ஞாயிற்று ஒளியை மறைத்தல் ஒல்லுமோ?' என்றது, நீ கலந்து புனலாடினையாதலின், நின்னை ஊரவர் யாவரும் அறிவாராதலின், அதனை நின்னால் மூடி மறைக்க இயலாது என்றதும் ஆம். அலர் அஞ்சியேனும் அவன் அவ்வாறு நடந்திருக்க வேண்டாம் என்பது அவள் சொல்வது; இது, அவன் புறத்தொழுக்கத்தோடு, ஊரறிந்த பழிப்பேச்சும் உள்ளத்தை வருத்தக் கூறியதாம். 72. எமக்குப் புணர்துணை ஆயினள்! துறை: தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப்புனல் ஆட வேண்டிய தலைமகன், களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. (து.வி: தலைவன் பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டு, அவனுடன் ஊடியிருந்தாள் தலைவி. தலைவன் அஃதறிந்து வந்து, அவளைத் தன்னோடு புனலாட, வருமாறு அழைக்க, அவள் மறுக்கின்றாள். அப்போது அவன், தோழிக்குச் சொல்வதுபோல, தலைவியும் கேட்டு மனங் கொள்ளுமாறு, முன்னர்க் களவுக்காலத்தே, தான் அவளோடு புதுப்புனல் ஆடியது பற்றிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
வயன்மலர் ஆம்பல் கயிலமை நுடங்குதழைத் திதலை அல்குல், துயல்வரும் கூந்தல், குவளை உண்கண், ஏஎர் மெல்லியல் மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துணை யாயினள், எமக்கே. தெளிவுரை: வயலிடத்தே மலர்ந்த ஆம்பலாலே தொடுக்கப் பெற்றதும், மூட்டுவாய் கொண்டதுமான, அசைகின்ற தழையுடையினையும், திதலை படர்ந்த அல்குலையும், அசைந்தாடும் கூந்தலையும், குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட, அழகிய மெல்லியலாளான இவள், மலர் மிகுந்த புதுவெள்ளம் ஆற்றிலே பெருகி வந்ததாக, அதன் கண்ணே புனலாட்டயர்தற்கு, என்னோடும் இணைந்திருக்கும் துணையாகப் பண்டு விளங்கினவளே காண்! கருத்து: அவள், 'இப்போதும் மறுக்கமாட்டாள்' என்றதாம். சொற்பொருள்: வயன் மலர் ஆம்பல் - வயலிடத்தே செழித்து மலர்ந்திருந்த ஆம்பல்; கயில் - மூட்டுவாய்; தழையுடையை இடுப்பில் இணைத்துக் கட்டுதற்கு உதவும் பகுதி. நுடங்கல் - அசைதல். ஏஎர் - அழகு. மெல்லியல் - மென்மைத் தன்மை கொண்டவள்; என்றது தலைவியை. மலரார் - மலர்கள் மிகுதியான. மலர்நிறை - புதுவெள்ளம். புணர்துணை - உடன் துணை. விளக்கம்: பலரறி மணம் பெறுமுன்பே அவ்வாறு என் மேலுள்ள காதலன்பாற் புனலாட வந்தவள், அலரினைப் பற்றியும் நினையாதவள், இப்போது என் உரிமை மனையாளான பின் வராதிருப்பாளோ என்றதாம். அவள் அழகுநலம் எல்லாம் கூறினான், இன்றும், தான் அவற்றையே அவளிடம் காண்பதாகக் கூறி, தான் பிறரைச் சற்றும் நினையாதவன் எனத் தெளிவித்தற்காம். மேற்கோள்: 'இது தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாட வேண்டிய தலைவன், முன்பு புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது' என, இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். பொ, 191). 73. குவளை நாறிய புனல்! துறை: மேற்பாட்டின் துறையாகவே கொள்க.
வண்ண ஒண்தழை நுடங்க, வாலிழை ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக், கண்ணறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே - பெருந்துறைப் புனலே! தெளிவுரை: அழகிய ஒளிகொண்ட தழையுடையானது அசைந்தாட, தூய அணிகளையும் ஒள்ளிய நுதலையும் கொண்ட அரிவையானவள், புனல் விளையாட்டிடத்தே பெருந்துறைப் புனலிலே பாய்ந்தாளாக, அந்நீரும் இவள் கண்ணென்னும் நறிய குவளை மலரின் மணத்தை உடையதாகித், தண்ணிதாகியும் குளிர்ந்து விட்டதே! கருத்து: 'அவள் இப்போதும் என்னுடன் வர மறுப்பதிலள்' என்றதாம். சொற்பொருள்: வண்ணம் - அழகு; பல வண்ணமும் ஆம். ஒண்தழை - ஒளி செய்யும் தழையுடை; ஒளி செய்தல், பெரும்பாலும் தளிராலே தொடுக்கப்படலால்; வெண்தழை என்றும் பாடம். வாலிமை - தூய்மை. பண்ணை - விளையாட்டு. விளக்கம்: இவள் புனலாட நீரிற் குதித்தபோது, நீரும் இவள் குவளைக் கண்ணின் சேர்க்கையால் குவளைநாறி, இவள் மேனியின் தொடர்பால் தண்ணென்றாயிற்று எனப் போற்றிப் புகழ்ந்து உரைக்கின்றனன். இதனால் மனம் பழைய நினைவிலே தாவிச் சென்று மகிழத், தலைவியும் தன் புலவி நீங்கித் தலைவனோடு புனலாடச் செல்வாள் என்பதாம். மேற்கோள்: இஃது உருவுவமப் போலி; நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்ற தெனக் கூறியவழி, அத்தடம்போல, இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாள் என்பது கருதி உணரப்பட்டது. அவளோடு புனல்பாய்ந் தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாள் என்பது கருத்து என்பர் பேராசிரியர். (தொல். உவம, 25) 74. விசும்பிழி தோகை! துறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.
விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக் கரைசேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே! தெளிவுரை: பசும் பொன்னாலான ஒளியணிகள் விட்டு விட்டு ஒளிசெய்ய, கரையைச் சேர்ந்திருந்த மருத மரத்திலே ஏறி, நீர் விளையாட்டயரும் இடத்தே மேலிருந்தே பாய்பவளின் - அஃதாவது இத்தலைவியின் - குளிர்ந்த நறிய கூந்தலானது, விசும்பிலிருந்து இழியும் தோகை மயிலது சீரைப் போன்று இருந்ததே! கருத்து: 'அத்துணை அழகியாளை மறப்பேனோ' என்றதாம். சொற்பொருள்: விசும்பு - வானம். இழிதல் - மேலிருந்து கீழாக இறங்கல். 'தோகை' என்றது, தோகையுடைய ஆண் மயிலை. சீர் - சிறந்த அழகு. 'பசும்பொன்' - மாற்றுயர்ந்த பொன். அவிரிழை - ஒளிசிதறும் அணிவகைகள். பைய - மெல்ல. நிழற்ற - ஒளி செய்ய. கரைசேர் மருதம் - கரையிடத்தே வளர்ந்துள்ள மருத மரம். பண்ணை - மகளிர் நீர் விளையாட்டு நிகழ்த்தும் இடம். பாய்தல் - மேலிருந்து குதித்தல். கதப்பு - கூந்தல். விளக்கம்: களவுக் காலத்தே அவளுடன் மகிழ்ந்தாடிய நீர் விளையாடலை நினைப்பித்து, அவள் மணத்தைத் தன்னிடத்தே அன்பு கனிந்து நெகிழுமாறு திருப்ப முயல்கின்றான் தலைவன். இளம் பெண்கள் இவ்வாறு மரமேறிக் குதித்து நீர் விளையாட்டயர்தலை, இக்காலத்தும் ஆற்றங்கரைப் பக்கத்து ஊர்களிற் காணலாம். சுனைகளிலும் கிணறு குளங்களிலும் கூட இவ்வாறு குதித்து நீராடுவர். பெண்கள் கூந்தலை மயிலின் தோகைக்கு ஒப்பிடல் மரபு என்பதனை, 'கலிமயிற் கலாவத்தன்ன இவள் ஒலிமென் கூந்தல்' என்னும் குறுந்தொகையிலும் காணலாம். (குறுந். 225) கூந்தலை வியந்தது அதுவே பாயலாகக் கூடியின் புற்றதும், அதனைத் தடவியும் கோதியும் மகிழ்ந்ததுமாகிய பண்டை நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி, தன் பெருங் காதலை அவளுக்கு உணர்த்தியதுமாம். மேற்கோள்: தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை, அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். கற்பு, 50). 75. இவண் பலர் ஒவ்வாய்! துறை: பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன், அதனை மறைத்து கூறிய வழித் தோழி கூறியது. (து.வி: பரத்தையோடு புனலாடினான் தலைவன் என்பது கேட்டுத் தலைமகள் புலந்திருக்கின்றாள். அதனை உணர்ந்த தலைவன், அவ்வாறு அவர்கள் நினைப்பது பொய்யானது என்று கூறுகின்றான். அப்போது தோழி, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பலரிவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால், அலர் தொடங்கின்றால் ஊரே; மலர தொன்னிலை மருதத்துப் பெருந்துறை, நின்னோடு டாடினள், தண்புனல லதுவே. தெளிவுரை: மகிழ்நனே! மலர்களைக் கொண்டவும், பழமையான நிலைமைத்தாகியவுமான மருத மரங்கள் நிறைந்த பெருத்துறையினிடத்தே, ஒருத்தி நின்னோடும் கூடிக் குளிர்ந்த புதுப்புனலிலே புனலாட்டயர்ந்தனள். அதனாலே அவளையும் நின்னையும் சேர்த்து ஊரிடத்தே அலர் எழுதலும் தொடங்கி விட்டது. ஆகவே, இவ்வூர் ஆடவர் பலருடமும், நீதான் நின் புறத்தொழுக்கத்தாலே தாழ்வுற்று, அவர்க்கு ஒவ்வாதாய் ஆயினை - அஃதாவது பழியுடையாய் ஆயினை! கருத்து: 'ஆதலின் நின்னுடன் புனலாடத் தலைவி வருதல் இலள்' என்றதாம். சொற்பொருள்: பலர் - பலரான ஆடவர். ஒவ்வாய் - ஒப்பாகாய்; அவரெல்லாம் தத்தம் மனைவியரையன்றி, நின்போற் காமத்தால் அறியாமைப் பட்டுப் பரத்தையருடன் ஆடி மகிழும் பண்பற்றவர் அல்லராதலின், பின் மறுத்துப் பொய்யுரை பகர்வோரும் அல்லர். ஆகவே, நீ அவர்க்கு ஒப்பாகாய் என்றனள். தொன்னிலை மருதம் - நெடுங் காலமாகவே ஆற்றங்கரையில் நின்று நிழல் செய்யும் மருத மரங்கள். விளக்கம்: 'பரத்தையோடு புனலாடினை' எனத் தோழி சொல்ல, அது உண்மையேயாயினும், அதனை மறுத்துப் பேசிச் சாதிக்க முயல்கின்றான் தலைவன். அவன் பொய்ம்மையை மறுத்துத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். கண்டாரும் பலர்; ஊரிடத்தே அலரும் எழுந்து பரவுகின்றது; இனியும் மறைப்பது பயனில்லை என்றது இது. ''தொன்னிலை மருதத்து பெருந்துறை'' என்றது, வையையின் திருமருத முன்துறையைச் சுட்டுவதுமாகலாம். செயலும் பழிபட்டது. அதனை ஏற்று வருந்தித் திருந்தும் தெளிவின்றிப் பொய்யும் உரைப்பாய்; நீ நாணிலி; எம்மால் ஏற்கப்படாய் என்பது கருத்து. 76. அந்தர மகளிரின் தெய்வம்! துறை: மேற்செய்யுளின் துறையே.
பைச்ஞாய்க் கூந்தல், பசுமலர்ச் சுணங்கின் தண்புன லாடித், தன் னலமேம் பட்டனள் ஒண்தொடி மடவரல், நின்னோடு, அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. தெளிவுரை: பஞ்சாயக் கோரை போன்ற கூந்தலோடும் பசுமலர் போலும் சுணங்கினையும் கொண்டவள் ஒருத்தி. ஒள்ளிய தொடியணிந்த மடவரலான அவள், நின்னோடும் குளிர் புனலிலே நீராட்டயர்ந்து, அந்தர மகளிர்க்குத் தெய்வமே போன்ற கவினையும் செற்றுத், தன் நலத்திலேயும் மேம்பட்டவளாயினளே! கருத்து: 'ஊரறிந்த இதனையுமோ மறைக்க முயல்கின்றனை' என்றதாம். சொற்பொருள்: பஞ்சாய்க் கோரை ஒருவகை நெடுங்கோரை; பசுமையான தண்டுள்ளது. பசுமலர்ச் சுணங்கு - புதுமலர் போலும் தேமற்புள்ளிகள்; பசு - பசும்பொன்னைக் குறித்துச் சுணங்கின் பொன்னிறத்தைச் சுடக்கும். அந்தர மகளிர் - வானமகளிர். என்றது தேவலோகத்து மகளிரை. தெய்வம் - அவர் போற்றும் தெய்வம். விளக்கம்: தலைமகனோடு புனலடிய களிப்பால் பேரழகு பெற்றுச் சிறந்தாளின் வனப்பைக் கண்டு, அந்தர மகளிரும் மயங்கி, அவளை நீருறை தெய்வமோ எனக் கொண்டு போற்று வாராயினர் என்பது, பரத்தையைப் புகழ்வதே போல இகழ்ந்து கூறியதாம். பரத்தை தலைவனோடு புனலாடி நலத்தால் மேம்பட்டுத் தெய்வமாயினாள் என்றது. அவன் காதற் பரத்தையாகியதால், பிறரால் மதித்துப் போற்றப் பெறும் நிலைக்கு உயர்ந்தாள் என்றதுமாம். ஆகவே, அவளுள்ள போதிலே, நீதான் இங்கு வந்து வேண்டுதல் எதற்கோ என்று மறுப்புக் கூறியதுமாம். 77. செல்லல் நின் மனையே! துறை: முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினாள் எனக் கேட்டு, 'இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, புதுப்புனல் ஆடப்போது என்ற தலைமகற்குச் சொல்லியது. (து.வி: ஊடுதலும் ஒதுக்குதலும் பரத்தையர்க்கும் உள்ளனவே. 'தலைமகன் தன் மனைவியோடு கூடிப் புனலாடினான்' என்று கேட்டு, அதனால் மனமாறுபட்டிருந்த அவன் பரத்தை, 'அவன் நீராடிவரப் புறப்படுவாய்' என்று அவளை அழைக்கவும், மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்; பேரூர் அலரெழ நீரலைக் கலங்கி, நின்னொடு தண்புனல் ஆடுதும்; எம்மொடு சென்மோ; செல்லல்நின் மனையே! தெளிவுரை: மகிழ்நனே! நீதான் வாழ்வாயாக. நினக்கு யாம் சொல்லும் இதனையும் கேட்பாயாக. இப் பேரூர் முற்றவும் அலருரை எழுமாறு, நீர் அலைத்தலாலே சுலங்கி, நின்னோடு கூடியவராக யாமும் குளிர் புனல் ஆடுவோம்; நின் மனைக்கு மட்டும் இனிச் செல்லாதே; எம்மோடு எம்மனைக்கே வருவாயாக! கருத்து: 'எம்மை விரும்பின், நின் மனைக்குப் போதலைக் கைவிட வேண்டும்' என்றதாம். சொற்பொருள்: மொழிவல் - சொல்வேன். நீரலைக் கலங்கி - நீரலைத்தலாற் கலங்கி, சென்மோ - செல்வாயாக; மோ : முன்னிலை அசை. விளக்கம்: இது பரத்தைக்குத் தலைவன் மீதுள்ள பற்றுக் கோட்டு மிகுதியைக் காட்டுவதாகும். 'செல்லல் நின் மனை' என்று சொல்லுமளவு அவள் பிடிப்பு வலுத்து விட்டது. 'நீரலைப்பக் கலங்கி வருந்துவோமாயினும், நீ எம்மோடு துணையாகவரின், நின்னோடு தண்புனல் ஆடுதும்' என்கின்றாள். 'நினக்காக ஆடுதும்' என்பது கருத்து. 'செல்லல் நின் மனையே' எனப் பரத்தை சொல்லக் கேட்கும் தலைவன், அதுதான் தன் பெருந்தகுதிக்கு ஏலாமையின், அப்பரத்தையின் உறவை மறந்து, அவளைக் கைவிட்டு அகலுவான் என்பதும், இதனால் சிலசமயம் நிகழக் கூடியதாகும். 78. எம்மொடு கொண்மோ! துறை: இச் செய்யுளும் மேற்செய்யுளின் துறையையே கொண்டதாகும்.
கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த, சிறையழி புதுப்புனல் ஆடுகம்; எம்மொடு கொண்மோ, எம் தோள்புரை புணையே. தெளிவுரை: ஒளிவீசும் இலையையுடைய நெடுவேலையும், கடிதாகச் செல்லும் குதிரையையும் கொண்டவன் கிள்ளி. அவனது பகைவரின் ஊர்மதிலை மோதியழிக்கும் போர்க்களிறே போலத், தான் விரையச் செல்லும் வழியிடையே குறக்கிடும் தடையை மோதி அழித்துச் செல்லும் வேகமுடைய புதுப் புனலிலே, எம் தோள்களை நிகர்க்கும் புணையைப் பற்றி, எம்மோடு புதுப்புனலாடுலையும் நீ மேற்கொள்வாயாக! கருத்து: 'எம்முடன் புனலாட வருக' என்றதாம். சொற்பொருள்: இலை - இலைவடிவான வேல் முனை; கதிரிலை - ஒளிவீசும் வேல்முனை. கடுமான் - கடிதாகச் செல்லும் விரிவுடைய குதிரை; 'கடுமான் கிள்ளி' - ஒருவனது பெயரும் ஆம். கதழ்பு - விரைவு. இறை - தடை; அணை போல்வது. கொண்மோ - எம்மோடு புணை கொள்வாயாக. விளக்கம்: 'கடுமான் கிள்ளி', சோழர்குல வேந்தன் ஒருவனின் இயற்பெயர் எனவும், அவன் வேற்போரிலே ஆற்றல் மிக்கானாதலின், 'கதிரிலை நெடுவேற் கிள்ளி' என்று போற்றப் பெற்றான் எனவும் கருதலாம். இவன் பகைவர் கோட்டைகள் பலவற்றைக் கைப்பற்றியவன்; அதற்கு உதவியது இவனுடைய வலிமுகுந்த யானைப்படை; அது சீற்றத்தோடு செல்லும் வேகத்திற்குச் சிறையழி புதுப்புனலை இங்கே உவமித்துள்ளனள். 'சிறை' - அணை; நிரைத் தடுத்து நெறிப்படுத்தும் அமைப்பு; இதை உடைத்துச் செல்லும் வேகமிக்கது புதுப்புனல் என்பது கருத்து. உள்ளுறை: மதிலழிக்கும் களிறு போன்ற சினத்தோடு, குறுக்கிடும் சிறையழித்துச் செல்லும் புதுப்புனல் என்றது, சூளுரைத்துத் தன்னைக் கூடிய தலைவன், அதனையழித்துப் புதுக் காமத்தோடு தலைவியை நாடிச் சென்ற தன்மையை உள்ளுறத்துக் கூறியதாகும். கட்டுமீறித் தன்போக்கிற் செல்லும் இயல்பினன் அவன் என்று பழித்துக் கூறியதாம். அதனை விலக்க நினைப்பவள், 'புதுப்புனலாடலை எம்மோடுங் கூடிக் கொள்க' என்கின்றனள். மேற்கோள்: 'காமக் கிழத்தி, நின் மனைவியோடன்றி எம்மொடு புணைகொள்ளின் யாம் ஆடுதும் என்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது' என்று காட்டுவர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். (தொல். கற்பு, 50). 79. யார் மகள் ஆயினும் அறியாய்! துறை: தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றிய வழி, அவள் தோழி சொல்லியது. (து.வி: தலைவன் தனியாகப் புனலாடியனான்; அதுகண்டு ஊடிய பரத்தை, தானும் தனியாகவே ஒருபுறமாகப் புனலாடினாள். அதனைப் பார்த்தவன். அவள் ஊடலைத் தீர்த்தற் பொருட்டு, தான் ஏதும் அற்யான்போல அவள் கைப்பற்றிப் புனலாடுதற்கு வருமாறு அழைக்கின்றான். அப்போது அவள் தோழி சொல்லியதாக அமைந்தது இது.)
'புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள், யார் மகள் இவள்?' எனப் பற்றிய மகிழ்ந! யார் மகள் ஆயினும் அறியாய்; நீ யார் மகனை, எம் பற்றி யோயே? தெளிவுரை: 'புதுப்புனலிலே ஆடிச் சிவந்த கண்களை உடையவளான இவள் யார் மகள்?' என்று சொல்லியபடியே கைப்பற்றிய தலைவனே! இவள் யார்மகள் ஆயினும், நீதான் அறியமாட்டாய்; ஆயின், எம்மை வந்து பற்றியவனே, நீதான் யாவர் மகனோ?' என்பதாம். கருத்து: 'நீ எமக்கு அயலானே போல்வாய்' என்று கூறி ஒதுக்க முயன்றதாம். சொற்பொருள்: அமர்ந்த கண் - சிவந்த கண். அறியாய் - அறிய மாட்டாய். 'எம்' என்றது பரத்தையை உளப்படுத்திக் கூறியது. விளக்கம்: 'யார் மகள் இவள்?' எனக் கேட்டவாறு கைப்பற்றியவன் ஆதலின், முன்பே தொடர்புடையவன் என்பதும், 'யார் மகள்?' என்றது அறியான் போல வினாவியது என்பதும், அது அவளிடம் பழைய உறவை நினைவுறுத்தித் தெளிவித்தற் பொருட்டு என்பதும் உணரப்படும். 'நீ யார் மகன்?' என்று தோழி வினாயது, அறிந்தும் அறியான் போல வினாவுகிற நீதான், நின்னை மறைத்துப் பேசுதலின், 'யாவர் மகனோ?' எனக் கேட்டதாம். 'பண்பாட்டி பெற்ற மனகல்லை' என்றதாகக் கருதுக. 'புதுப்புனலாடி அர்த்த கண்ணள்' என்றது, 'முன் கலவிக்களியாலே சிவந்த கண்ணளாகியவள்' என்று, பழைய களவுக் காலத்து உறவை நினைப்பித்ததுமாம். 80. நின் கண் சிவந்தன! துறை: ஒழியப் புதுப்புனலாடித் தாழ்ந்துவந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது. (து.வி: தன்னை உடனழைத்துப் போய்த் தன்னுடன் புனலாடி மகிழாமல், தான் மட்டுமே தனியனாகச் சென்று, அங்கு நீராடிய பரத்தையருடன் நெடுநேரம் கூடிப் புனலாடி வீடு திரும்புகின்றான் தலைவன். அவனின் சிவந்த கண்களையும், அவன் நீராடிவந்துள்ள நிலையையும் கண்டு, புலவி கொண்ட தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
புலக்குவேம் அல்லேம்; பொய்யாது உரைமோ; நலத்தகை மகளிர்க்குத் தோள்துணை யாகித், தலைப்பெயற் செழும்புனல் ஆடித் தவநனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே. தெளிவுரை: மகிழ்நனே! யாம் நின்பாற் புலவி கொள்ளவே மாட்டேம். அதனால், பொய்யாக மறைக்காது உண்மையையே உரைப்பாயாக. அழகு நலத்திலே சிறந்தாரான மகளிர்க்கு, அவரைத் தாங்கும் தோள்தரும் துணையாக அமைந்து, முதற்பெயலாலே பெருகி வந்த புதுப்புனலிலே நீராடினதால், நின் கண்கள் இப்போதில் மிகமிகச் சிவந்துள்ளனவே! கருத்து: 'நீதான் பரத்தையரோடு கூடிப் புதுப்புனலாடிக் களித்தனையாய் வருகின்றனை' என்றதாம். சொற்பொருள்: புலக்குவேம் - புலவி கொள்வேம். நலத்தகை - அழகு நலங்களின் சிறப்பு; இயல்பான எழிலும், புனைவாலே பெற்ற எழிலும் சிறப்பாக அமைந்த தகுதிப்பாடு; யாம் மகப் பயந்தேமாக, அஃதற்றேம் என்று, தன் குடிமைப் பெருமிதம் உள்ளுறுத்திக் கூறியதுமாம். தோள் துணையாகி - தோள்கள் தெப்பமாக அவரைத் தாங்கும் துணையாக விளங்க. தலைப்பெயல் - முதல் மழை. தவநனி - மிக மிக. விளக்கம்: நீரிடத்தே நெடுநேரம் ஆடிக் களிப்பின் கண்கள் சிவப்படையும் என்பதை, அகம் 278, 312, குறுந்தொகை 354 செய்யுட்களுள்ளும் கூறப்படுவதாலும், அநுபவத்தாலும் அறியலாம். இயல்பாகவே நெடுநேரம் புதுப்புனலாடிக் கண் சிவக்க வீடு வந்திருந்த தலைவனிடம், தலைவி, இவ்வாறு பதைத்துக் கூறிப் புலவி கொண்டனள் என்பதும் பொருந்தும். 'தலைப் பெயல்' என்பது 'கன்னி மழை' என்னும் காலத்தின் முதல் மழையைக் கூறிக்கும். 'செழும்புனல்' என்பதற்குச் 'செம்புனல்' என்றும் பாடபேதம் கொள்வர்; அது சிவந்த புனல் என்றும், பெரும்புனல் என்றும் பொருள் தரும். இனிக் கூடலிலே பரத்தையோடு இன்புற்று, அப்புணர்குறிகளோடு வீடு வந்தானிடம் ஊடிய தலைவி, அவன் புனலாடிக் கண்சிவந்தேன் எனப் பொய்ம்மைகூற, அவள் தான்றிந்தமை கூறிப் பொய்த்தல் வேண்டாவெனக் கூறியதாகவும் கொள்ளலாம். அவனை வெறுத்தற்கு இயலா மனத்தள் தலைவியாதலின். இப் புதுப்புனலாடல், பழைய நாளிலே ஒரு விழாவாகவே கொள்ளப் பெற்றது. கணவனும் மனைவியும் கைகோர்த்தே புனலாடல் இன்றும் மரபாகத் தென்னாட்டில் விளங்கி வருகின்றது. ஆகவே, மனைவியோடு சேர்ந்து புனலாடற்குரியவன், பரத்தையோடு கூடிக் களித்தாடின், அது பழியாகக் கொள்ளப்பட்டது என்க. |