கலித்தொகை - Kalithogai - எட்டுத்தொகை - Ettu Thogai - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய

கலித்தொகை

... தொடர்ச்சி - 11 ...

அருஞ்சோழன் நல்லுருத்திரனார் அருளிய
முல்லைக்கலி

101

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்; 5
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு;
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப 10
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ
மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் 15
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்; 20
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு, 25
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்;
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன் 30
தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்;
      என ஆங்கு
அணி மாலைக் கேள்வன் தரூஉமார், ஆயர்
மணி மாலை ஊதும் குழல் 35
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
ஈன்றன, ஆய மகள் தோள்;
பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
சுவன்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது; 40
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம், யாம்;
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு 45
வேளாண்மை செய்தன கண்;
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்
முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,
எல்லாம் புணர் குறிக் கொண்டு. 50

102

கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற
தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும்,
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்,
அன்னவை பிறவும், பன் மலர் துதைய,
தழையும் கோதையும் இழையும் என்று இவை 5
தைஇயினர், மகிழ்ந்து, திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு
என் உயிர் புக்கவள், இன்று;
ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
திரு மா மெய் தீண்டலர்' என்று, கருமமா, 10
எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்;
'சொல்லுக!' 'பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார், பாரித்தார்,
மாணிழை ஆறாகச் சாறு;
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய்! எல்லாம் 15
மிடை பெறின், நேராத் தகைத்து;
தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்;
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்; 20
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்
அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலிர் மணி புரை நிமிர் தோள் பிணைஇ 25
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான் மன்ற, அவ் ஏறு;
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறு உடை நல்லார் பகை;
மடவரே, நல் ஆயர் மக்கள் நெருநல், 30
அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும்,
உடல் ஏறு கோள் சாற்றுவார்!
      ஆங்கு, இனி
தண்ணுமைப் பாணி தளராது எழூஉக
பண் அமை இன் சீர்க் குரவையுள், தெண் கண்ணி, 35
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,
அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டி, சிறுகுடி
மன்றம் பரந்தது, உரை!

103

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
பல் ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார் 5
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார், மிடை;
அவர் மிடை கொள; 10
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும்,
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் 15
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,
பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ,
படு மழை ஆடும் வரையகம் போலும் 20
கொடி நறை சூழ்ந்த தொழூஉ;
தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு;
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் 25
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன;
கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண்
செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை 30
முந் நூலாக் கொள்வானும் போன்ம்;
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு,
தார் போல் தழீஇயவன்; 35
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்;
கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்
மழை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றுமவன்;
தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை 40
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமோடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல்
கூற்று என உட்கிற்று, என் நெஞ்சு; 45
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்
புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்;
ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற 50
சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு; 55
ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்
மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ
பயில் இதழ் மலர் உண்கண் 60
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ;
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, 65
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்;
வளியர் அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆய மகள் தோள்; 70
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்
கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போல, புகின்;
      ஆங்கு,
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, 75
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!

104

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 5
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும், 10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும் 15
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்;
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின் 20
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான் வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு 25
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி;
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த 30
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு;
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தாளை 35
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்;
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன் 40
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்;
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று, 45
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகல் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும்
மீளி மறவனும் போன்ம் 50
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர், 55
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ;
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், 60
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ;
பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு;
நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில், 65
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்;
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல், 70
'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்;
நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த 75
ஊராரை உச்சி மிதித்து;
      ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே. 80

105

அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி, 5
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும், 10
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் 15
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும், 20
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
      அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க, 25
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து;
மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும், 30
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி, 35
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா 40
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வௌ஢ ஏறு கண்டைகா
வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப் 45
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ;
வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில் 50
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்;
நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர,
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட 55
கொல் ஏறு போலும் கதம்;
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்;
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பாட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
தம் கண் பொடிவது எவன்; 60
ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
அலர் செய்து விட்டது இவ் ஊர்; 65
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு;
      என, 70
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே. 75

106

கழுவொடு சுடு படை சுருக்கிய தோற்கண்,
இமிழ் இசை மண்டை உறியொடு, தூக்கி,
ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்,
வழூஉச் சொற் கோவலர், தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் 5
      அவ்வழி,
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன; 10
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும்,
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்,
மெய் வார் குருதிய, ஏறு எல்லாம் பெய் காலைக்
கொண்டல் நிரை ஒத்தன;
      அவ் ஏற்றை, 15
பிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி,
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்,
விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு ஒத்தனர்;
அவரை, கழல உழக்கி, எதிர் சென்று சாடி, 20
அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு;
தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரி,
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு 25
ஏறு தம், கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல், தூங்கும் சினை;
      ஆங்கு, 30
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர், தழூஉ;
முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்;
முலை வேதின் ஒற்றி, முயங்கிப் பொதிவேம் 35
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே!
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ? எம் கேளே!
ஆங்கு, போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர் 40
காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே!
'கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன்' என்று, ஊரார்
சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே; 45
      ஆங்க,
அருந் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி,
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;
ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு,
மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே! 50

107

எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்
கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ;
      தொழுவத்து, 5
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்;
அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது 10
கெட்டனள், என்பவோ, யாய்;
இஃதொன்று கூறு;
கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!
அவன் கண்ணி அன்றோ, அது;
'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் 15
கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,
செய்வது இலாகுமோ மற்று;
எல்லாத் தவறும் அறும்;
ஓஒ! அஃது அறுமாறு;
'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், 20
நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'
      அன்னையோ,
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ 25
நீ உற்ற நோய்க்கு மருந்து;
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்;
      வருந்தாதி;
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் 30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,
தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.

108

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால், 5
'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்;
அஃது அவலம் அன்று மன;
ஆயர் எமர் ஆனால், ஆய்த்தியேம் யாம், மிக;
காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை, 10
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரருள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்;
அதனால் வாய்வாளேன்;
'முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன 15
பல்லும் பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும்,
நல்லேன், யான்' என்று, நலத்தகை நம்பிய
சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்!
      சொல்லாதி;
'நின்னைத் தகைத்தனென்,' 'அல்லல் காண்மன்; 20
மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே,
கண்ட பொழுதே கடவரைப் போல, நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நிற்
கொண்டது எவன் எல்லா! யான்,'
      கொண்டது, 25
அளை மாறிப் பெயர்தருவாய்! அறிதியோ அஞ் ஞான்று,
தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,
இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ;
நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்; 30
புனத்துளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ;
இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ;
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ;
      அனைத்து ஆக,
வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி, 35
அண்ணணித்து ஊர் ஆயின், நண்பகல் போழ்து ஆயின்,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு, எவன், விரைந்து சேறி உதுக்காண்;
பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின் 40
தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடி,
பனிப் பூந் தளவொடு முல்லை பறித்து,
தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி,
பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு;
இனிச் செல்வேம், யாம்; 45
மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர்
நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை, அவை
ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக்
காமுற்றுச் செல்வாய்; ஓர் கட்குத்திக் கள்வனை;
நீ எவன் செய்தி, பிறர்க்கு; 50
யாம் எவன் செய்தும், நினக்கு;
கொலை உண்கண், கூர் எயிற்று, கொய் தளிர் மேனி,
இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் 55
தலையினால் தொட்டு உற்றேன், சூள்;
ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமல்,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத் 60
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக்
காஞ்சிக் கீழ்ச் செய்தேம் குறி.

109

கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல் குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள் 5
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய
கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் 10
புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? ஆயர் மகள்
இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி,
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது 15
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ?
படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும்
பாலொடு கோட்டம் புகின்; 20
இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர்,
'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக' என்று தத்தம்
கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும், 25
வாயில் அடைப்ப, வரும்.

110

'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா!
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை தொடுதரத்
துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத்
திளைத்தகு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள் 5
வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக;
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து,
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்!
மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம் 10
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;
விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது,
கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும்,
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு 15
எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி,
கை தோயன் மாத்திரை அல்லது, செய்தி
அறியாது அளித்து என் உயிர்;'
அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை 20
இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்;
நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும்
கன்றொடு சேறும், புலத்து.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247