![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) இரண்டாம் பாகம் 5. ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு அந்த அதிகாரியிடம் நான் போனதே தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் காட்டிய பொறுமையின்மையும் அளவு கடந்த கோபமும், என் தப்புக்கு மிகவும் அதிகப் படியானவையே. வெளியில் பிடித்துத் தள்ள வேண்டியதற்கான தப்பை நான் செய்துவிடவில்லை. அவருடைய நேரத்தில், நான் சொன்னதைக் கேட்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிராது. ஆனால், நான் பேசியதே அவருக்குப் பொறுக்கவில்லை. போய்விடும்படி அவர் மரியாதையாக எனக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவருக்கு அளவுக்கு மீறி அதிகார போதை இருந்தது. பொறுமை என்ற குணத்திற்கும் இந்த அதிகாரிக்கும் வெகு தூரம் என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது. தம்மைப் பார்க்க வருகிறவர்களை அவமதிப்பதே அவருக்குப் பழக்கமாம். அவருடைய விருப்பத்திற்கு மாறாக ஏதேனும் அற்பக் காரியம் நடந்துவிட்டாலும் அவருக்குக் கோபாவேசம் வந்துவிடுமாம். இப்பொழுதே என் வேலைகளில் பெரும்பாலும் அவருடைய நீதிமன்றத்தில் நடந்தாக வேண்டியவை. அவரைச் சமாதானப் படுத்துவது என்பதும் என்னால் ஆகாதது. எப்படியாவது அவருடைய தயவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. உண்மையில் அவர் மீது வழக்குத் தொடருவதாக நான் ஒரு முறை அவரைப் பயமுறுத்திவிட்ட பிறகு சும்மா இருந்துவிட நான் விரும்பவில்லை. இதற்கு மத்தியில் நாட்டின் சில்லரை ராஜிய விஷயங்களைக் குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். கத்தியவார் அநேக சிறு சிறு சமஸ்தானங்களைக் கொண்ட பகுதியாகையால், ராஜியவாதிகள் ஏராளமாக முளைத்துக் கொண்டிருந்தனர். சமஸ்தானங்கள் ஒன்றுக்கொன்று சூழ்ச்சிகளில் ஈடுபடுவதும் அதிகாரத்திற்கு அதிகாரிகள் சூழ்ச்சிகளில் இறங்குவதும் அங்கே சர்வ சாதாரணம். சமஸ்தானாதிபதிகளோ, எப்பொழுதுமே பிறரை நம்பியிருக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே, இச்சகம் பேசுகிறவர்கள் சொல்லுவனவற்றிற்கெல்லாம் சமஸ்தானாதிபதிகள் செவி சாய்த்து வந்தனர். துரையின் சேவகனைக் கூடச் சரிகட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. துரையின் சிரஸ்தாரே துரைக்குக் கண்களாகவும், காதுகளாகவும், மொழிபெயர்த்துச் சொல்லுபவராகவும் இருந்ததால், அவர், தம் எஜமானனைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார். சிரஸ்தார் வைத்தது தான் சட்டம். அவருடைய வருமானம் துரையின் வருமானத்திற்கும் அதிகம் என்பது பிரபலமான விஷயம். இது ஒரு வேளை மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். என்றாலும் அவர், தமது சம்பளத்திற்கு மிஞ்சிய ஆடம்பர வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலை, விஷமமானது என்று எனக்குத் தோன்றிற்று. இதனால் பாதிக்கப்படாமல் அங்கே எப்படி இருப்பது என்பதே எனக்குத் தீராப் பிரச்சினையாயிற்று. நான் முற்றும் மனச் சோர்வை அடைந்துவிட்டேன். இதை என் சகோதரர் தெளிவாக அறிந்து கொண்டார். எனக்கு ஏதாவது ஓர் உத்தியோகம் கிடைத்துவிட்டால், இந்தச் சூழ்ச்சிச் சூழ்நிலையிலிருந்து நான் விடுதலை பெற்றுவிடுவேன் என்பதை நாங்கள் இருவருமே உணர்ந்தோம். ஆனால், சூழ்ச்சியையும் தந்திரத்தையும் கையாளாமல் ஒரு மந்திரி வேலையோ, நீதிபதி உத்தியோகமோ கிடைப்பது முடியாத காரியம். துரையுடன் ஏற்பட்ட சச்சரவு, எனது தொழிலை நடத்திக் கொண்டு போவதற்கே இடையூறாக நின்றது. அச்சமயம் போர்பந்தர், பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த அதிகாரி ஒருவரின் நிர்வாகத்தில் இருந்தது. மன்னருக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும்படி செய்வது சம்பந்தமாக அங்கே எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது. விவசாயிகளிடமிருந்து நிலத் தீர்வை அதிகப்படியாக வசூலிக்கப்பட்டு வந்தது சம்பந்தமாகவும் நான் அந்த நிர்வாக அதிகாரியைப் பார்க்க வேண்டியிருந்தது. அந்த அதிகாரி ஓர் இந்தியராக இருந்த போதிலும் அகம்பாவத்தில் துரையையும் மிஞ்சியவராக இருக்கக் கண்டேன். அவர் திறமைசாலியே. ஆனால் அவருடைய திறமையினால் விவசாயிகள் எந்த நன்மையையும் அடைந்து விட்டதாகத் தெரியவில்லை. ராணா மேற்கொண்டு சில அதிகாரங்களைப் பெறும்படி செய்வதில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் விவசாயிகளுக்கோ எவ்விதமான கஷ்ட நிவாரணமும் ஏற்படவில்லை. அவர்கள் விஷயம் இன்னது என்பதைக்கூட அந்த அதிகாரி சரிவரக் கவனிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது. இதற்கு மத்தியில் போர்பந்தரைச் சேர்ந்த ஒரு மேமன் வியாபாரக் கம்பெனியார், என் சகோதரருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள் அதில் அவர்கள் அறிவித்திருந்ததாவது: “தென்னாப்பிரிக்காவில் எங்களுக்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுடையது பெரிய வியாபாரக் கம்பெனி. எங்களுடைய பெரிய வழக்கு ஒன்று, அங்கே கோர்ட்டில் நடக்கிறது. 40,000 பவுன் வர வேண்டும் என்பது எங்கள் தாவா. இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து கொண்டு வருகிறது. பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தியிருக்கிறோம். உங்கள் சகோதரரை அங்கே அனுப்புவீர்களானால் எங்களுக்கும் உதவியாக இருக்கும், அவருக்கும் உதவியாக இருக்கும். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக்கூற, எங்களை விட அவரால் நன்கு முடியும். அதோடு, உலகத்தில் புதியதொரு பகுதியைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுவதோடு புதிதாக பலருடன் பழகும் சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்கும்.” இந்த யோசனையைக் குறித்து, என் சகோதரர் என்னுடன் விவாதித்தார். வக்கீல்களுக்கு நான் விஷயங்களை எடுத்துச் சொல்ல மாத்திரம் வேண்டியிருக்குமா, கோர்ட்டிலும் ஆஜராக வேண்டியிருக்குமா என்பது எனக்குத் தெளிவாகவில்லை. மேலே சொன்ன தாதா அப்துல்லா கம்பெனியின் ஒரு கூட்டாளியான காலஞ்சென்ற சேத் அப்துல் கரீம் ஜவேரியை, என் சகோதரர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இந்த வேலை கஷ்டமானதாக இராது என்று சேத் எனக்கு உறுதி கூறினார். பெரிய வெள்ளைக்காரர்களெல்லாம் எங்கள் நண்பர்கள். அவர்களுடன் நீங்கள் பழக்கம் செய்து கொள்ளலாம். எங்கள் கடைக்கும் நீங்கள் பயன்படுவீர்கள். எங்கள் கடிதப் போக்குவரத்தெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். அதிலும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யலாம். நீங்கள் எங்கள் விருந்தினரே. ஆகையால், உங்களுக்கு எந்தவிதமான செலவும் இராது” என்றார். “என் சேவை உங்களுக்கு எவ்வளவு காலத்திற்குத் தேவை? நீங்கள் அதற்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டேன். “ஓர் ஆண்டுக்கு மேல் தேவைப்படாது. உங்களுக்குப் போகவர முதல் வகுப்புக் கப்பல் கட்டணமும், மற்ற எல்லாச் செலவும் போக 105 பவுனும் தருகிறோம்” என்றார். நான் அங்கே போவது, பாரிஸ்டர் என்ற முறையிலேயே அன்று அந்தக் கம்பெனியின் ஊழியன் என்ற வகையிலேயே போகிறேன். ஆனால், எப்படியாவது இந்தியாவிலிருந்து போய் விட வேண்டும் என்று விரும்பினேன். அதோடு புதிய நாட்டைப் பார்க்கலாம். புதிய அனுபவங்களைப் பெறலாம் என்ற ஆசையும் இருந்தது. மேலும் 105 பவுனையும் என் சகோதரருக்கு அனுப்பி, குடும்பச் செலவுக்கு உதவி செய்யலாம். எந்தவிதமான பேரமும் பேசாமல் ஒப்புக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்குத் தயாரானேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |