![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 17. ஒதுக்கலிடம் எரிந்தது நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளவேண்டிய வேலை எனக்கும் என் சகஊழியர்களுக்கும் இல்லாதுபோயிற்று என்றாலும் கறுப்புப் பிளேக்கினால் ஏற்பட்ட பல காரியங்களை நாங்கள் இன்னும் கவனிக்க வேண்டியிருந்தது. இந்தியர் குடியிருப்பு ஒதுக்கல் பகுதி சம்பந்தமாக நகரசபை சிரத்தையின்றி இருந்துவிட்டதைக் குறித்து முன்னால் கூறியிருக்கிறேன். ஆனால், வெள்ளைக்காரரின் சுகாதாரத்தைப் பற்றிய வரை அச்சபை அதிக விழிப்புடனேயே இருந்தது. வெள்ளைக்காரரின் தேகநிலை கெடாமலே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவதற்காக நகரசபை ஏராளமான தொகையைச் செலவிட்டு வந்தது. இப்பொழுது பிளேக் நோயை ஒழிப்பதற்குப் பணத்தைத் தண்ணீர் போல வாரி இறைத்தது. இந்தியர் விஷயத்தில் அச்சபை செய்தது, செய்யாமலிருந்து விட்டது ஆகியவைகளை குறித்து அநேக குற்றச்சாட்டுகளை நான் அதன் மீது சுமத்தியிருந்த போதிலும், நகரிலிருந்த வெள்ளைக்கார மக்களின் நலன் விஷயத்தில் அது காட்டிய அக்கறையை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அதனுடைய சிறந்த முயற்சிக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்தேன். நகரசபைக்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்காதிருந்திருப் பேனாயின், அதனுடைய வேலைகள் அதிகக் கஷ்டமானதாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது ஆயுதந்தாங்கிய படை பலத்தை உபயோகிக்கவும், இன்னும் மோசமான முறைகளைக் கையாளவும் அச்சபை தயங்கியிராது. ஆனால், அப்படி எதுவும் நடவாதபடி செய்துவிட்டோம். இந்தியர் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து நகரசபையினர் சந்தோஷம் அடைந்தார்கள். பிளேக் சம்பந்தமான எதிர்கால வேலைகள் பலவும் சுலபமாக்கப்பட்டன. நகரசபை விரும்புபவைகளுக்கெல்லாம் இந்தியர் உடன்பட்டு நடந்துகொள்ளும்படி செய்வதில் இந்திய சமூகத்தினரிடம் எனக்கு இருந்த முழுச் செல்வாக்கையும் உபயோகித்துக்கொண்டேன். எல்லாவற்றிற்குமே உடன்பட்டுச் செய்துகொண்டு போவது என்பது இந்தியருக்குக் கஷ்டமாகவே இருந்தது. ஆனால் என் ஆலோசனையை எந்த இந்தியரும் மறுதலித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அந்த ஒதுக்கல் குடியிருப்புப் பகுதிக்குப் பலமான காவல் போட்டுவிட்டார்கள். அனுமதியில்லாமல் உள்ளே போவதோ, உள்ளே இருந்து வெளியே வருவதோ இயலாது. நானும் என் சக ஊழியர்களும் மாத்திரம் நினைத்தபோது உள்ளே போய்வருவதற்கு அனுமதிச் சீட்டுகள் கொடுத்திருந்தார்கள். அப் பகுதியில் குடியிருந்தவர்களை யெல்லாம் காலி செய்து விடச் செய்வது, அவ்விதம் காலி செய்து விட்டவர்களெல்லாம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து பதின்மூன்று மைல் தூரத்திலுள்ள ஒரு திறந்த மைதானத்தில் கூடாரங்களில் வசிக்கும்படி செய்வது, பிறகு இந்த ஒதுக்கல் பகுதிக்கே தீ வைத்துவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. உணவுப் பொருள்கள் போன்ற அவசியமான பொருள்களுடன் இவர்களைக் கூடாரங்களில் போய் வசிக்கும்படி செய்யக் கொஞ்சகாலம் ஆகும். ஆகவே, இதற்கு நடுவில் காவல் போட வேண்டியது அவசியமாயிற்று. மக்களோ, மிகவும் பயந்து போயிருந்தனர். ஆனால், நான் அடிக்கடி போய்க் கொண்டிருந்தது அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏழைகள் பலர், தங்களிடமிருந்த சிறு பொருள்களையெல்லாம் புதைத்து வைத்துவிடுவது வழக்கம். அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் “பாங்கு”கள் இல்லை. “பாங்க்” என்பது இன்னது என்றே அவர்களுக்குத் தெரியாது. நானே அவர்களுடைய ‘பாங்க்’கரானேன். ஏராளமான பணம் வந்து என் அலுவலகத்தில் குவிந்தது. இத்தகையதோர் நெருக்கடியில் என் உழைப்புக்காக எந்தக் கட்டணமும் விதிப்பதற்கில்லை. எப்படியோ இந்த வேலைகளையும் சமாளித்துக் கொண்டேன். நான் கணக்கு வைத்திருந்த பாங்கின் நிர்வாகியை நான் நன்றாக அறிவேன். இப்பணத்தையெல்லாம் அவர் பாங்கில் நான் போட்டுவைக்க வேண்டியிருக்கிறது என்று அவரிடம் கூறினேன். செப்புக் காசுகளையும் வெள்ளிப் பணத்தையும் ஏராளமாக வாங்கிக் கொள்ளுவது சிரமமானதால் வாங்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. பிளேக் நோய் பரவியிருக்கும் பகுதியிலிருந்து வருகிற பணம் என்பதனால், அதைத் தொடுவதற்கும் பாங்குக் குமாஸ்தாக்கள் மறுத்து விடக்கூடும் என்ற பயமும் இருந்தது. ஆனால், பாங்கு நிர்வாகி எல்லா வகையிலும் எனக்குச் சௌகரியம் செய்து கொடுத்தார். அப்பணத்தையெல்லாம் பாங்குக்கு அனுப்புவதற்கு முன்னால் அவற்றில் விஷக்கிருமிகள் இல்லாதபடி மருந்து கொண்டு சுத்தம் செய்து அனுப்புவது என்று தீர்மானித்தோம். சுமார் அறுபதாயிரம் பவுன் வரையில் பாங்கில் கட்டினோம் என்பது எனக்கு ஞாபகம். பணம் அதிகமாக வைத்திருந்தவர்களை-குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே வாங்குவது என்ற முறைப்படி - டிபாசிட்டில் போடும்படி சொன்னேன். அவர்களும் என் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். இதன் பலனாக, பணத்தைப் பாங்கில் போட்டுவைக்கும் வழக்கத்தைச் சிலர் கைக்கொண்டார்கள். ஒதுக்கல் பகுதியில் இருந்தவர்களைத் தனி ரெயிலில் ஜோகன்னஸ்பர்க்குக்கு அருகில் கிளிப்ஸ் புரூயிட் பண்ணைக்குக் கொண்டு போயினர். அங்கே அவர்களுக்கு நகரசபை தனது சொந்தச் செலவில் உணவுப் பொருள்களை அளிக்க ஏற்பாடு செய்தது. கூடாரங்களினாலாகிய இந்த நகரம், ஒரு ராணுவ முகாம்போலத் தோன்றியது. மக்கள், கூடாரங்களில் வாழ்ந்து பழக்கமில்லாததனால் எப்படி இருக்குமோ என்று கஷ்டத்துடன் இருந்தார்கள். ஆனால், அங்கே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் கண்டு திகைத்துப் போயினர். குறிப்பிடத்தக்க அசௌகரியம் எதுவும் அவர்களுக்கு இல்லை. தினமும் சைக்கிளில் அந்த இடத்திற்கு நான் போய் வருவேன். அங்கே குடியேறிய இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் மக்கள் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து குதூகலமாக வாழ ஆரம்பித்துவிட்டனர். நான் அங்கே போன சமயங்களிலெல்லாம் அவர்கள் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பதையே கண்டேன். திறந்த வெளியில் மூன்று வாரங்கள் வசித்ததால் அவர்களுடைய தேக நிலையும் விருத்தியடைந்தது. இவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்ட மறுநாளே அந்த ஒதுக்கல் பகுதி தீயிடப்பட்டுவிட்டது என்றுதான் எனக்கு ஞாபகம். தீயினுக்கு இரையாகாமல் எதையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் நகரசபைக்கு சிறிதேனும் இல்லை. அதே சமயத்தில்தான் - இதே காரணத்திற்காகவே - மார்க்கெட்டிலிருந்த நகரசபையின் மரஉத்திரங்கள் எல்லாவற்றையும் கொளுத்தி விட்டார்கள். இதனால் நகரசபைக்கு பத்தாயிரம் பவுன் போல் நஷ்டம். மார்க்கெட்டில் எலிகள் செத்துக் கிடக்கக் கண்டதே இத் தீவிரமான நடவடிக்கைக்குக் காரணம். நகரசபைக்குச் செலவு ஏராளமாக ஆயிற்று. என்றாலும், மேற்கொண்டும் பிளேக் பரவாதபடி வெற்றிகரமாகத் தடுத்து விட்டார்கள். நகர மக்களும் பயம் தீர்ந்து பெருமூச்சு விட்டனர். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |