உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 15 - சிம்மவர்மனின் சதி அவன் தன்னுடைய பெயர் பூதுகன் என்று கூறியதைக் கேட்டதும் தேனார்மொழியாள் அப்படித் திகைத்து நின்று விட்டதில் எவ்வித ஆச்சர்யமும் அடைந்துவிடவில்லை. அவள் அவனைப் பற்றியும் ஓரளவு அறிந்து கொண்டிருக்கிறாள் என்பதைத்தான் அப்போது அவள் இருந்த நிலை விளக்கிக் காட்டியது. அவனை நேரில் அனேகர் பார்த்திராவிட்டாலும் தமிழகத்திலே தீவிர நாஸ்திகவாதியாகிய பூதுகனைப் பற்றி எவரும் கேள்விப்பட்டிருக்காமல் இருக்க முடியாது. அதுவும் சோழநாட்டில் பிறந்தவர்கள் யாரும் அவனைத் தெரிந்து கொள்ளாமலிருக்க முடியாது. இந்த நிலையில் தேனார்மொழியாள் அவனைப் பற்றி அறிந்து கொண்டிருந்ததில் வியப்பில்லை யல்லவா? பூதுகன் என்ற பெயரைக் கேட்டதும் தேனார்மொழியாள் திகைப்படைந்து போனதற்கு முக்கிய காரணம் அவனுடைய உருவம் தான். தீவிர நாஸ்திகவாதியாகிய பூதுகனைப் பற்றி அவள் நினைக்கும் போதெல்லாம் அவள் மனக்கண் முன் ஏதோ குரூரமான உருவம் தான் நிற்கும். ஆனால் இன்று அவனையே நேரில் பார்த்து விட்டதும் முக வசீகரம் நிறைந்த தெய்வீக புருஷன் போல் தான் அவன் காணப்பட்டான். அவன் தான் பூதுகன் என்று அறிந்ததும் அவளுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை விட அத்தகைய நாஸ்திகவாதி தன்னை நாடி எதற்காக வந்திருக்க வேண்டும் என்ற ஆச்சரியம்தான் மேலும் அவள் மனத்தைக் குழப்பியது. "தாங்கள்தானா அவர்? தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..." என்கிற வார்த்தைகள் அவளை அறியாமலேயே அவள் உள்ளத்திலிருந்து வெளி வந்தன. அதைத் தொடர்ந்து, "தாங்கள் என்னை எதற்காக நாடி வந்தீர்கள்?" என்று கேட்டாள். "பயப்படாதீர்கள். உங்களோடு நாஸ்திகவாதம் பேச நான் வரவில்லை. முக்கியமாக இது ஒரு பெண்ணைப் பற்றிய விஷயம்" என்றான் பூதுகன். "பெண்ணைப் பற்றிய விஷயமா? யார் அந்தப் பெண்? என்ன விஷயம்?" என்று கேட்டாள் அவள் பதற்றத்தோடு. "அலையூர் கக்கையின் பேத்தி மாலவல்லியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவளைப் பற்றிப் பேசத் தான் உங்களை நாடி வந்தேன்" என்று சொன்னான் பூதுகன். "அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அக்கறை உங்களுக்கு ஏற்பட்டதன் காரணம் என்ன?" என்று வியப்புடன் வினவினாள் அவள். "காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள வைகைமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்..." "தெரியாமலென்ன? எனக்கு நன்றாகத் தெரியும். அவளுடைய சகோதரி சுதமதியும் நானும் தான் சதுர்வேதிமங்கலத்தில் இசைக்கலை பயின்றோம். அப்பொழுது நான் வைகைமாலையோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவள் பரத சாஸ்திரம் கற்றுக் கொண்டிருந்தாள். குழந்தைப் பருவத்திலிருந்தே மிக நன்றாக நாட்டியம் ஆடுவாள். நாட்டியத்துக்கு வேண்டிய இலட்சணம் பொருந்திய உடல் அமைப்பு. அதோடு நல்ல அழகி. கலையிலும் தேர்ச்சி பெற்றவள். அதிருக்கட்டும், அவளைப் பற்றி இங்கு பேச வேண்டிய காரணம் என்ன?" என்று கேட்டாள். "அந்த வைகைமாலையின் நாயகன் நான் - மாலவல்லி வைகைமாலைக்கு அந்தரங்கமான தோழி என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்றான் பூதுகன். "அது தெரியாது. இருக்கலாம். அவர்கள் இருவரும் நெருங்கிய தோழியாக இருப்பது வரவேற்கத் தக்கதுதான். சிறந்த நாட்டியக்காரி வைகைமாலை. அதைப் போலவே சிற்ந்த பாடகி மாலவல்லி. உயர்தரமான இசையும் சிறந்த நாட்டியமும் சேர்ந்தால் இந்த உலகத்தில் தெய்வத்தையே எதிரே கொண்டு வந்து நிறுத்தி விடலாம்" என்றாள் தேனார்மொழியாள். "நாட்டியத்தின் மூலமாகவும், சங்கீதத்தின் மூலமாகவும் எங்கோ இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தெய்வங்களையெல்லாம் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துவதில் எனக்குச் சந்தோஷம் தான். ஆனால் தெய்வங்களை இழுத்துக் காட்டுவதை விட அழிந்து போன சிறந்த சாம்ராஜ்யத்தை மறுபடியும் ஸ்தாபிக்க வைப்பது மிகவும் நல்லது என்பதுதான் எனது அபிப்பிராயம் - அதிருக்கட்டும், உங்களுக்கு மாலவல்லியைப் பற்றி ஏதேனும் தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள்" என்றான். "மாலவல்லியைப் பற்றி எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? அதுதான் தெரியவில்லை. அவளைப் பற்றி நான் பச்சாத்தாபப் படுவதெல்லாம் இந்த இளம் வயதில் அவள் அறியாமையால் பௌத்த பிக்ஷுணிக் கோலம் பூண்டதுதான். முதலில் பௌத்த மதத்தில் பற்றுக் கொண்டு அதில் சேர்ந்த அவள். திடீரென்று பிக்ஷுணியாகி இவ்வூரில் தங்காமல் காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போய் விடுவாள் என்று நான் நினைக்கவில்லை. இனிய குரலும் இசை ஞானமும் பெற்றிருந்த அவளுக்கு அரச சபையில் நல்ல மதிப்பு இருந்தது. போகட்டும், அவள் காவிரிப்பூம்பட்டினம் வந்ததும், அங்கு வைகைமாலைக்குத் தோழியானதும் மிகுந்த திருப்தியையே அளிக்கின்றன..." என்றாள் தேனார்மொழியாள். "அப்படி நீங்கள் திருப்தி அடைவதற்கு இல்லாமலேயே போய்விட்டது. அவள் சம்பாதிவன புத்த தேசியத்தில் இருக்கும் போது இரவு வேளைகளில் ரகசியமாக வைகைமாலையின் வீட்டுக்கு வந்து அவளுடைய நாட்டியத்துக்கேற்பச் சில பண்கள் பாடிவிட்டுப் போவாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவள் அந்த விஹாரத்திலிருந்து எங்கேயோ மறைந்து விட்டாள்..." என்றான் பூதுகன் அமைதியாக. பூதுகனின் வார்த்தையைக் கேட்டுச் சிறிது ஆச்சரியம் அடைந்த தேனார்மொழியாள், "அவள் பௌத்த விஹாரத்திலிருந்து மறைந்து விட்டாளா? ஏன்? என்ன காரணம்? அவள் எங்கே போயிருப்பாள்?" என்று படபடப்போடு கேட்டாள். "அவள் எங்கே போயிருப்பாளோ! ஆனால் அவள் கண் மறைவாகப் போன அன்றைய தினம் புத்த விஹாரத்தில் படு கோரமான கொலையொன்று நடந்திருக்கிறது. எல்லோரும் அந்தக் கொலைக்கு மாலவல்லிதான் காரணமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்..." என்றான். "நீங்கள் சொல்வதைக் கேட்டாள் பெருத்த விபரீதமாக இருக்கிறதே? நாளுக்கு நாள் இந்தப் புத்த விஹாரங்களில் நடக்கும் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றனவே! கள்வர்கள், சூழ்ச்சிக்காரர்கள் எல்லோரும் புத்த சங்கத்தைச் சரணென்று அடைந்ததால் அல்லவா இவைகள் எல்லாம் ஏற்படுகின்றன? புத்த பெருமானின் வைராக்கிய சீலம் எங்கே? அன்பு நெறி, அறவழிகள் எங்கே? இந்தப் போதி சங்கங்களில் சேர்ந்த சிலரின் கொடிய நடத்தைகள் எங்கே?... அந்தப் புனிதமான சங்கங்களில் மிக வஞ்சகர்களும் கொலை பாதகர்களும் உன்னத சாம்ராஜ்யங்களையே கவிழ்க்கும் சூழ்ச்சி நிறைந்தவர்களுமான ரவிதாசன் போன்றவர்களுக்கு இடம் இருக்குமானால் அதைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?" என்றாள் தேனார்மொழியாள் மிகவும் மனக்கிலேசம் அடைந்து விட்டவள் போல. 'ரவிதாசன்' என்ற பெயரை அவள் வாய்மூலமாகவே கேட்டதும் பூதுகன் சிறிது வியப்படைந்தான். இப்பொழுது தான் வந்த காரியத்துக்கு ஏதோ பலன் ஏற்பட்டது போல் அவனுக்குத் தோன்றியது. "ரவிதாசனை உங்களுக்குத் தெரியுமா! உங்களுக்குத் தெரியாமல் எப்படி இருக்க முடியும்? அவன் இக் காஞ்சிமா நகரிலிருந்து தானே புத்தபிக்ஷு கோலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வந்தவன்? ரவிதாசனைப் பற்றித் தெரிந்த உங்களுக்கு இன்னொரு உண்மையைச் சொல்லப் போகிறேன். பூம்புகாரில் உள்ள புத்த சேதியத்தில் நீங்கள் சொல்லும் அந்த வஞ்சகனாகிய ரவிதாசன் தான் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான்..." என்று கூறினான் பூதுகன். இதைக் கேட்டதும் அவள் திகைப்புற்றுப் பரபரப்போடு, "ஒழிந்தானா பாவி. அவனைப் போல் அவனைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவராக ஒழிந்து தொலைந்தால் இந்த உலகம் பிழைக்கும்..." என்றாள் அவள் ஏதோ சிறிது மன ஆறுதல் அடைந்தவள் போல. "அவன் ஒழிந்த வரையில் சரிதான். ஆனால் அவன் ஒழிந்ததோடு ஆபத்து விடவில்லையே! அவனைக் கொலை செய்த பழி மாலவல்லியைப் போன்றவர்களின் தலையில் அல்லவா சுமரும் போலிருக்கிறது...?" என்றான் பூதுகன். தேனார்மொழியாள் இதைக் கேட்டதும் ஆத்திரமும் கோபமும் அடைந்தவளாக, "மாலவல்லியின் மீது எனக்குக் கோபம் உண்டு - ஏன், சிறிது பொறாமையும் கூட உண்டு. ஆனால் அவள் இத்தகைய கொடூரமான செயலைச் செய்திருக்க மாட்டாள் என்று தான் நான் சொல்லுவேன். யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். இதன் காரணமாக அவளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதாக இருந்தாலும் அதிலிருந்து அவளை மீட்க நான் தயாராயிருக்கிறேன். இந்தச் சாம்ராஜ்யமே அவளுக்கு எதிராக நின்றாலும் அவளை மீட்டு விட எனக்குத் தைரியம் உண்டு, சாமர்த்தியமும் உண்டு. ஆனால் இந்த மாலவல்லியின் வாழ்க்கையில் ஏதோ சில ரகசியங்கள் இருக்கின்றன என்று தான் நினைக்கிறேன்" என்றாள். அவள் மேலும் தொடர்ந்து, "நீங்கள் நினைப்பது போல் மாலவல்லியின் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உண்டு. ஆனால் அவை ஒன்றும் பிரமாதமானவையல்ல. இயற்கையாக இளம் உள்ளங்களில் ஏற்படும் செய்கைகள் தான் அவை. அவள் தகாத இடத்தில் மனத்தை வைத்துவிட்டாள். அதன் காரணமாகவே தான் அவள் பௌத்த பிக்ஷுணிக் கோலம் கொள்ள நேர்ந்தது என்பது என் அபிப்பிராயம்" என்றாள். "ஆசையும் மோகமும் யாரை விட்டன? ஆனால் இது ஒரு சாதாரணக் காதல் விவகாரமாய் இல்லாமல் பெரிய சாம்ராஜ்ய விவகாரமாக இருக்கும் போலிருக்கிறதே...?" என்றான் பூதுகன். மெதுவாக அவள் மனத்தைக் கிளறி உண்மையை அறிந்து கொள்ள. "பெரிய சாம்ராஜ்யத்தின் காவலர்களாக இருப்பவர்களின் காதல் விவகாரங்கள் எல்லாம் அப்படித்தானே இருக்கும்? எங்களைப் போன்ற பெண்கள் அழகில் ஊர்வசி, ரம்பையைத் தோற்கடித்தாலும் ராஜசபைக் கணிகையர்கள் தானே. என்போன்றவர்கள் கலைத் தேர்ச்சியாலும், அழகாலும் அரசரின் அன்பு பீடத்தில் அமர்ந்தாலும் அரசிக்குரிய பீடத்தில் அமர முடியாதல்லவா? ஆனால் ஒரு பெண்ணின் காதலுக்காக ஒரு சாம்ராஜ்யமே போரில் ஈடுபட்டு அழிந்து விடலாம். ஒரு பெண்ணின் காதல் காரணமாக ஒரு பெரிய சாம்ராஜ்யமே போரின் அபாயத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம்" என்றாள். தேனார்மொழியாளின் வார்த்தையைக் கேட்டதும் பூதுகனின் மனத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. "நான் கூட அப்படித்தான் நினைத்தேன். பூம்புகாரில் அவளைச் சந்திக்க வந்த ஒரு அழகான வாலிபனை நான் விசாரித்த போது, அவன் கங்கபாடியைச் சேர்ந்தவனென்றும் ஒரு சாதாரணப் போர்வீரன் என்றும் சொல்லிக் கொண்டான். ஆனால் அவன் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அவன் பார்வையில் ஒரு அரசகுமாரனாகவோ அல்லது ஒரு பிரபுவாகவோ இருக்கவேண்டும் என்று தான் நான் நினைத்தேன். அவனுடைய கம்பீரமான உருவத்தையும் அவன் சவாரி செய்யும் குதிரையையும் பார்த்தவர்கள் அவனை ஒரு சாதாரணப் போர் வீரன் என்று மதிக்க மாட்டார்கள்" என்றான் பூதுகன். தேனார்மொழியாள் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே, "பல்லவ சாம்ராஜ்யத்தில் பாடகியாக விளங்கிய மாலவல்லி பிக்ஷுணிக் கோலம் பூண்டதும் கங்க நாட்டு இளவரசரும் சாதாரணப் போர்க்கோலம் பூண்டு விட்டார் போலிருக்கிறது. காஞ்சியில் இந்தக் காதல் தளையால் ஏற்பட்ட அபாயத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று தான் பௌத்த பிக்ஷுணியாகிப் பூம்புகாரை அடைந்திருக்க வேண்டும் மாலவல்லி. அவள் பெரும் புத்தியுடன் தன்னால் இரு அரசாங்கங்களுக்குள்ளும் நட்புரிமை பாராட்டிக் கொண்டிருப்பவர்களுக்குள் மோதல் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தன் காதலைத் துறந்து துறவுக் கோலம் பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்திருக்க வேண்டும். அத்தகைய கோலம் பூண்டு அங்கு சென்றும் - வேறு தலைமறைவான இடத்துக்குச் சென்றும் அந்த வினை அவளை விடாமல் பின் தொடர்ந்தால் என்ன செய்வது?" என்றாள். "மாலவல்லி மிகுந்த தியாக சிந்தை உள்ளவளாகத்தான் இருந்தால் என்பதை நானும் அறிந்து கொண்டேன். ஆனால் பெருத்த அபாயங்கள் ஏதேனும் தனக்கு ஏற்படலாம்; அல்லது வேறு சிலருக்கு ஏற்படலாம் என்று அறிந்திருந்தும் அவளால் தன் மனக் காதலைத் துறக்க முடியவில்லை என்று தான் தெரிகிறது. புத்த பெருமானின் வைராக்கிய சீலம் எல்லோருக்குமே ஏற்பட்டு விடுமா? வைராக்கியமாக இருந்து விடலாம் என்று மனம் எண்ணலாம். உலக பந்தங்களை உதறி விட்டுவிடுவது போல் சீவர ஆடையுடுத்தி எங்கேனும் கிளம்பி விடலாம். ஆனால் தானாக வந்து ஒட்டும் உறவுகளை வைராக்கிய சித்தத்தோடு உதறி எறிவதுதான் மிகக் கடுமையான விரதம். பாவம், அவள் ஒரு பெண். அவள் மனம் இவ்வளவு பக்குவம் அடைந்திருக்க முடியுமா? எனக்கு இன்னொரு சந்தேகம். சமண மதத்தினனாக இருந்த ரவிதாசன் திடீரென்று பௌத்த துறவியாகி மாலவல்லி இருக்கும் புத்த விஹாரத்துக்கு வந்ததுதான் சிறிது ஆச்சர்யம் அளிக்கிறது. அவன் மாலவல்லியிடம் மிகுந்த கண்காணிப்பாக இருந்தான் எனத் தெரிகிறது. அவளுக்கும் அவனுக்கும் எதன் காரணமாகவோ தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கிறேன்...?" என்றான். "உங்கள் சந்தேகம் சரிதான். ரவிதாசன் மாலவல்லியைக் கவனிப்பதற்காகவே தான் புத்த பிக்ஷுக் கோலம் தாங்கிப் பூம்புகாருக்கு வந்திருக்கிறான். ரவிதாசன் சிம்மவர்மனின் தோழன். சிம்மவர்மனைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்..." என்றாள். "சிம்மவர்மனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் பல்லவ மன்னனுக்கு ஒரு வகையில் சகோதரன் ஆக வேண்டும் இல்லையா...?" என்றான். "ஆம். உங்களுக்குப் பல்லவ சாம்ராஜ்யத்தின் பாரம்பரியம் தெரியும் என்று நினைக்கிறேன். இந்த வம்சத்தில் இரண்டு கிளைகள் உண்டு. இதிலொன்று இப்பொழுது அரச வம்சத்தில் அமர்ந்திருக்கும் பீமவர்மனின் கிளை, மற்றது சிம்ம விஷ்ணுவின் கிளை. முதல் கிளையாகிய சிம்ம விஷ்ணுவின் வம்சத்தினர் தான் வரிசைக் கிரமமாய் அரசர்களாயிருந்தனர். அந்த வம்சத்தில் பரமேசுவர போத்தரையனுக்குப் பின் அந் நாட்டை யாளுவதற்கு யாரும் இல்லாது போய் விட்டதால் இரண்டாவது கிளையாராகிய பீமவர்மனின் வசமத்தில் உதித்தவர்களில் ஒருவரும் இப்பொழுது பேரரசராக விளங்குபவரின் பாட்டனாருமாகிய நந்திவர்ம போத்தரையர் அரசாட்சியைக் கைக்கொள்ள நேர்ந்தது. அதிலிருந்து இந்த இரு கிளையினருக்குள்ளும் உள்ளுறப் புகைச்சலும் பகையும் இருந்து கொண்டு தான் இருந்தன. அந்தச் சிம்ம விஷ்ணுவின் வம்சத்தில் வந்தவனான சிம்மவர்மன் இப்பொழுது பகை உணர்ச்சியில் மிதமிஞ்சியவனாக இருக்கிறான். இந்த அரசாங்கத்துக்கு ஏதேனும் கெடுதல் விளைவிக்க வேண்டும் என்ற சித்தம் தான் அவனுக்கு எப்பொழுதும். அரசர் சைவராய் இருக்கிறார் என்று இவன் சமணனாகி இருக்கிறான். மதப் புகைச்சலும், இனப் புகைச்சலும் இல்லாது இருக்கும் இந்த நாட்டில் அதைக் கிளறி விட வேண்டும் என்பதற்காகவே அவன் சமணனாகி இருக்கிறான். இன்னொரு ரகசியமும் உண்டு. ராஷ்டிரகூட மன்னனான அமோகவர்ஷனின் மகள் கங்காவைத்தான் நமது மன்னர் மணந்திருக்கிறார். அமோகவர்ஷன் தன் மற்றொரு மகளான சந்திரப்பிரபாவைக் கங்க நாட்டு ராஜமல்லருடைய மகனாகிய பரமானந்தனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கிறார். கங்க நாட்டு அரசரும், ராஷ்டிரகூட அரசரும் இந்த விவாகத்தின் காரணமாகப் பல்லவ மன்னரோடு உறவு முறையும் நட்புரிமையும் கொண்டவர்களாகி விட்டனர். நாம் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கங்க குல மன்னனான ராஜமல்லனும் ராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷனும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ மன்னரோ சைவ சமயத்தில் தீவிரப் பற்றுதல் உள்ளவர். இதை உணர்ந்த சிம்மவர்மன் தானும் ஒரு ஜைன சமயத்தவனாகிப் பல்லவ அரசர் ஜைன சமயத்துக்கு ஏதோ தீங்கு நினைப்பதாகக் காட்டி இம்மூன்று மன்னர்களுக்குள் சமய சம்பந்தமான குழப்பத்தை ஏற்படுத்திப் பெரும் பகையை வளர்க்கப் பார்க்கிறான். இவையெல்லாம் மன்னருக்குத் தெரியுமோ தெரியாதோ? தெரிந்திருந்தாலும் பெருந்தன்மையோடும், பொறுமையோடும் தான் சிம்மவர்மனின் சூழ்ச்சிகளுக்கு இடங் கொடுத்து வருகிறார் என்று தான் நினைக்கிறேன்" என்று சொல்லி நிறுத்தினாள். பூதுகனுக்குத் தேனார்மொழியாள் சொல்லிய வார்த்தைகளிலிருந்து பல விஷயங்களி விளங்கின. அவன் ஏதோ ஆழ்ந்து சிந்திப்பவன் போல, "நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு விளங்குகிறது. ஆனால் மாலவல்லியின் காதல் விஷயம் தான் புரியவில்லை. கங்ககுல இளவரசன் பரமானந்தன் ராஷ்டிரகூட இளவரசி சந்திரப்பிரபாவை மணந்து கொண்டான் என்கிறீர்கள். அப்படி இருக்கும் போது மாலவல்லியிடம் அவனுக்குக் காதல் ஏற்பட்டது எப்படி...?" என்றான். "மாலவல்லியைக் காதலித்தவன் பரமானந்தன் இல்லை. அவனுடைய தம்பி பிரதிவீபதி..." என்றாள். "பிரதிவீபதியா? சரிதான்! பாவம். அவன் தான் தன்னை வீரவிடங்கன் என்று சொல்லிக் கொள்ளுகிறான் போலிருக்கிறது. இத்தகைய ராஜகுமாரர்களெல்லாம் காதலுக்காக எவ்வளவு பெயர் மாற்றம் உருவ மாற்றமெல்லாம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது? போகட்டும், ஒரு அழகிய இராஜகுமாரன் ஒரு அழகிய இசைக் கணிகையைக் காதலிப்பது என்பது சகஜம். வேண்டுமானால் தாராளமாக அவளைக் கங்கபாடிக்கே அழைத்துச் செல்லலாமே? இதெல்லாம் ராஜ வம்சத்தினருக்குச் சகஜம் தானே? இவ்வளவு கஷ்டம் எல்லாம் எதற்கு...?" தேனார்மொழியாள் சிரித்தாள். "அதில் தான் இடையூறு இருக்கிறது. சிம்மவர்மன் தன்னுடைய தங்கையாகிய அமுதவல்லியை இந்தப் பிரதிவீபதிக்கு விவாகம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பிரயத்தனப்படுகிறான். அந்த சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்பதற்காக அரசர் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டு வருகிறான். அதோடு அந்தக் காமுகனுக்கு மாலவல்லியிடமும் கொஞ்சம் மோகம் இருக்கிறது. பிரதிவீபதிக்குச் சிம்மவர்மனின் தங்கை அமுதவல்லியிடம் மோகம் இல்லை. பிரதிவீபதிக்கு மாலவல்லியின் மீது காதல். இக்காதலுக்கு இடையூறாக முளைத்திருக்கிறான் சிம்மவர்மன். அவனுடைய அதிகாரங்களுக்கெல்லாம் மன்னர் இடங் கொடுத்திருக்கிறார். உத்தம குணசீலரான மன்னர் மாலவல்லிக்கும் பிரதிவீபதிக்கும் உள்ள உள் அந்தரங்கமான காதலை அறிந்தால் அதற்கு இடையூறாக எந்தப் பெண்ணையும் பிரதிவீபதிக்கு மணம் முடித்து வைக்கப் பிரியப்பட மாட்டார் என்பதை அறிந்து, அவருக்குத் தெரிவதற்கு முன்னால் மாலவல்லிக்கும் பிரதிவீபதிக்கும் ஏற்பட்டிருக்கும் காதலுக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யச் சித்தமாயிருக்கிறான் சிம்மவர்மன். பிரதிவீபதியும் தன்னுடைய காதலைப் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அவனுடைய தகப்பனார் ஜைன சமயத்தில் தீவிரப் பற்றுக் கொண்டவர். தம்முடைய குமாரன் ஒரு பெண் மீது மோகம் கொண்டு, கேவலம் ஒரு கணிகையை மணந்து கொள்வதை அவர் விரும்ப மாட்டார். இப்பொழுதே வயதான நிலையிலிருக்கும் அவர் ஆயுட்காலம் அதிக நாள் நீடிக்காது. அதற்கு மேல் மாலவல்லியை மணந்து கொள்ளலாம் என்று பிரதிவீபதி நினைக்கிறான்" என்றாள் தேனார்மொழியாள். பூதுகன் ஒரு பெருமூச்சு விட்டான். அவனுக்கு எல்லா விஷயங்களும் விளங்கிவிட்டன. ஆனால் அந்நிலையில் ரவிதாசனைக் கொன்றவர்கள் யாராயிருக்க முடியும் என்று தான் அவனுக்கு விளங்கவில்லை. வீரவிடங்கன் என்ற பெயரில் உலவும் பிரதிவீபதியே ரவிதாசனைக் கொல்வதற்கு ரகசியமான ஏற்பாடு ஏதாவது செய்திருக்கலாமோ என்று நினைத்தான். எப்படியோ அவன் இங்கு வந்ததில் அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டான். இதன் மூலமாக இன்னும் சிறிது பிரயாசைப்பட்டால் அதையும் தெரிந்து கொண்டு விடுவது கடினமில்லை, என்று அவனுக்குப் பட்டது. அவன் ஒரு அலட்சியச் சிரிப்போடு, "எப்படியோ பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் செய்யும் இச்சூழ்ச்சிகளையெல்லாம் மறுபடியும் இந்த நாட்டில் சோழ சாம்ராஜ்யம் தலையெடுப்பதற்குரிய வண்ணம் உபயோகித்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் எனக்கு. நீங்கள் சோழவள நாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் குடந்தைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகாரிலுள்ள வைகைமாலைக்கும், அவள் சகோதரிக்கு சுதமதிக்கும் உள்ள உணர்ச்சியும் ஆர்வமும் உங்களுக்கு இல்லாமல் போய்விடுமா?" என்றான். பூதுகனின் வார்த்தையைக் கேட்டுத் தேனார்மொழியாள் பரபரப்போடும் ஆச்சர்யத்தோடும் விழித்தாள். அழகு நிறைந்த அவள் முகத்தில் சட்டென்று ஏற்பட்ட பிரகாசமும் மலர்ச்சியும் மேலும் ஒரு பேரழகைத்தான் எடுத்துக் காட்டின. இந்தச் சமயத்தில் வாயிற் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்கவே, தேனார்மொழியாள் பரபரப்பு அடைந்த வண்ணம், "நீங்கள் தயவுசெய்து அதோ அந்த அறையில் போய் இருங்கள். யாரோ வந்து கதவைத் தட்டுகிறார்கள். நான் போய்க் கதவைத் திறக்கிறேன்" என்றாள், சிறிது பயமும் கொண்டவளாய். |