![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 9 - மாலவல்லியின் காதலன் பூதுகன் தன் காதலியோடு தனித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் வேறொரு பெண் அங்கு வந்து நிற்பது பூதுகனுக்கு மிகவும் விநோதமாகப் பட்டது. அவள் துறவறம் பூண்ட பௌத்த பிக்ஷுணியாகவே இருப்பினும் காதலர்கள் தனித்திருக்கும் இடத்தில் வந்து பிரவேசிப்பது பண்புள்ள காரியமாக அவனுக்குப் படவில்லை. ஒருவேளை மாலவல்லி எங்கேனும் ஒளிந்திருந்து தானும் வைகைமாலையும் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை ஒட்டுக் கேட்டு அறிந்திருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அப்பொழுது அவள் அங்கு வந்ததையும், ஏதேனும் ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று விரும்பினான். மாலவல்லி அங்கு வந்தது, வைகைமாலைக்கும் சிறிது வியப்பை அளித்தது. ஒரு பெண் தன் காதலனோடு பேசிக் கொண்டிருக்கும் போது வேறொருவர் குறுக்கிடுவது அழகாகாது என்பதைத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்களால் உணர முடியாது போலிருக்கிறது என நினைத்தாள். இருப்பினும் தன் காதலரைக் கண்ட ஆர்வத் துடிப்பில் மாலவல்லியைத் தான் மறந்துவிட்டது தன்னுடைய பிசகும் கூட என்று உணர்ந்தாள். அவள் சிறிது வெட்கம் நிறைந்த குரலில், "பகவதி! மன்னிக்க வேண்டும். இவர் என்னோடு தனித்துப் பேச வேண்டுமென்று விரும்பியதால் உங்களை மறந்து விட்டேன்" என்றாள். "அதனால் பாதகம் இல்லை, வைகைமாலை! நான் உனக்காகச் சிறிது நேரம் வெளியே காத்திருந்தேன். நெடு நேரமாகி விட்டது. நான் போக வேண்டுமல்லவா? அதனால் உன்னிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று வந்தேன்" என்றாள் மாலவல்லி. அவள் முகத்தில் வெட்கமும் நாணமும் சிறிது தாண்டவமாடின. வைகைமாலை அவளுக்கு ஏதோ சொல்ல நினைப்பதற்கு முன், பூதுகன் மாலவல்லியிடம், "பகவதி! உங்களைப் போன்றவர்களெல்லாம் இரவு வேளைகளில் இப்படிப்பட்ட இடங்களுக்கு வர தர்மம் இடம் கொடுக்கிறதா?" என்று கேட்டான். இந்த வார்த்தையைக் கேட்டதும் பிக்ஷுணி மாலவல்லியின் முகத்திலிருந்த நாணக் குறி மறைந்து பரபரப்பு உணர்ச்சி ஏற்பட்டது. "இங்கு தர்மம் அதர்மம் என்பதெல்லாம் சில காரியங்களுக்காக எழுதி வைக்கப்பட்டவை. புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்ட தருமங்களையே எல்லாச் சமயங்களிலும் தருமங்களாகக் கொள்ள முடியாது. 'ஒருவருக்கு நன்மையென்று தோன்றியதை அஞ்சாமல் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பம் அடையுமோ, அதன் பயனை உள்ளக் களிப்போடு அனுபவிக்க வேண்டி யிருக்குமோ, அதுவே நற்செயல்!' அதோடு மட்டுமல்ல; தருமம் என்று சொல்லப்பட்ட சில விதிகளைச் சில சமயம் நல்லதற்காகத் துறக்கவும் நேரிடலாம். மனிதனை மனோதர்மமே உருவாக்குகிறது. சிந்தனைகளே அதன் அடிப்படை. சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகிறது. மனிதன் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் செயல் புரிந்தாலும் நிழல் தொடர்ந்து செல்வதுபோல் இன்பம் அவனைத் தொடர்ந்து செல்கிறது. 'பொய்யில் மெய்யைக் கற்பனை செய்து கொண்டு, மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையோர் மெய்ப் பொருளை ஒருநாளும் அடைய முடியாது. அவர்கள் வெறும் மோகத்தால் பீடிக்கப்பட்டு அலைந்து அல்லல் படுவார்கள்' என்பது ததாகதரின் மெய்மொழி" என்றாள் மாலவல்லி. "பகவதி! உங்களுடைய வார்த்தைகள் எல்லாம் மிகவும் இனிமையாகத் தான் இருக்கின்றன. ததாகதர் சொல்லிய ஒவ்வொன்றையும் உணர்ந்து அதன்படி நடப்பதென்று உறுதி கொண்டிருந்தால் இப்படிப் பௌத்த விஹாரங்கள் எல்லாம் சாம்ராஜ்யச் சூழ்ச்சிக்காரர்களே நிறைந்திருக்கக் கூடிய இடமாகி இருக்காது. பகவதி! உங்களுடைய கொள்கைகள் மிகவும் பிடித்திருக்கின்றன. ஆனால் மற்றவர்கள் பௌத்த பிக்ஷுக்களுடைய தர்மங்களை மாத்திரம் விவரிக்கும் நூல்களைப் படித்துவிட்டுச் சிந்திக்கும் திறன் இல்லாமல் ஊழல்களை வளர்த்துக் கொண்டு போகிறார்கள். பகவதி! தாங்கள் காஞ்சியிலிருந்து பூம்புகார் புத்த விஹாரத்துக்கு வந்த காரணம் என்னவோ?" என்றான் பூதுகன் மெதுவாக. "காஞ்சியை விடப் பூம்புகார் மன நிம்மதியை அளிக்கும் இடமாகப் பட்டது. தவிர, சில தகாதவர்களிடையே என்னைப் போன்ற பிக்ஷுணி வசிப்பது கடினமாக இருக்கிறது. அதனால்தான் இங்கு வந்தேன். நாழிகையாகி விட்டது. நான் போகிறேன். இன்று உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் மறுபடியும் இந்நாட்டில் உன்னதமான சோழ சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்று பாடுபடும் உங்களுக்குப் புத்தர் பெருமானின் அருள் கிடைக்கட்டும். நான் சென்று வருகிறேன்" என்றாள். பிறகு வைகைமாலையைப் பார்த்து, 'சென்று வருகிறேன்' என்பது போல் தலையை ஆட்டிவிட்டு மெதுவாக நடந்தாள் மாலவல்லி. அவள் சென்ற பின் சில நிமிட நேரம் அங்கே இருள் சூழ்ந்திருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவன் போல் இருந்த பூதுகன், "வைகைமாலை! நாட்டில் இன்று நிலவும் பிரபல மதங்களின் மூல புருஷர்களின் உன்னத நோக்கங்களுக்கும் இன்று நடக்கும் இந்த மதவாதிகளின் போராட்டத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது, பார்த்தாயா? களங்கமற்ற அழகு நிறைந்த புத்தரின் திருவுருவத்தையும், கம்பீரமும் சாந்தமும் நிறைந்த வர்த்தமான மகாவீரரின் திருவுருவத்தையும் நாம் மனக் கண்ணால் நினைத்துப் பார்க்கும் போது ஏற்படும் சாந்தி சில போலி மதவாதிகளின் கூச்சல்களையும், துவேஷ உணர்ச்சி நிறைந்த நடத்தைகளையும் நினைத்துப் பார்க்கும் போது எப்படிச் சின்னாபின்னமாகச் சிதைந்து விடுகிறது? போகட்டும், ஒரு விஷயம் இன்று மாலவல்லியால் எனக்கு விளங்கியது. வைகைமாலா! எளியமுறையில் பிக்ஷுணிவேடம் தாங்கி இருக்கும் இந்த மாலவல்லியின் வாழ்க்கையின் பின்னணியில் ஒரு ரசமான பெரிய கதை இருக்கிறது என்பது எனக்கு விளங்கிவிட்டது. இவளைத் தொடர்ந்து வந்த பௌத்தத் துறவியை எங்கேயோ நான் பார்த்த ஞாபகமாக இருக்கிறது. இப்பொழுது அவள் சொல்லியதிலிருந்து தான் அவனும் காஞ்சியைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து கொண்டேன். நான் எப்பொழுதோ அவனைக் காஞ்சியில் பார்த்தேன் என்ற நினைவு எனக்கு ஏற்பட்டு விட்டது. அவன் புத்தத் துறவியாவதற்கு முன்னால் தீவிர சமணவாதியாக இருந்தான். அவன் ஜினகிரிப் பள்ளியிலுள்ள வர்த்தமான பேரடிகளின் சிஷ்யன் - அவன் பெயர் ரவிதாசன். அவனைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். ஆனால் என்னைப் பற்றி அவனுக்குத் தெரிய நியாயமில்லை. இன்று உன்னத நிலையில் இருக்கும் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கி இருக்கும் சிற்றரசர்களில் எவர்களைக் கவிழ்க்கலாம், எவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்கிற சூழ்ச்சியிலேயே எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவன். சூழ்ச்சி வலை பின்னுவதிலே அவனுக்கு நிகர் அவனேதான்! மாலவல்லிக்கும் இந்த ரவிதாசனுக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும். மாலவல்லிக்காகவேதான் அவன் மதம் விட்டு மதம் மாறிக் காஞ்சியிலிருந்து பூம்புகார் வந்திருக்க வேண்டும்" என்றான். "இப்பொழுதுதான் எனக்கும் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகின்றன. மாலவல்லி இத்தகைய காரியங்களில் ஈடுபட்டவளாய் இருப்பினும் அவளுடைய உயிருக்கோ அல்லது கண்யத்துக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இதில் சாம்ராஜ்ய ஆசை மாத்திரம் இருக்குமென்று நான் நம்பவிலை. இத்தகைய அழகு நிறைந்த யௌவன மங்கைக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள தூர்த்தரும் இந்த உலகத்தில் இருப்பார்கள் அல்லவா?" என்றாள் வைகைமாலை. "அப்படியும் நினைப்பதற்குக் காரணம் உண்டு. ஆனால் ரவிதாசனுக்கு அத்தகைய நோக்கம் இருக்குமென்று நான் கருதவில்லை. அவள் மீது அவனுக்கு இச்சை இருந்தால் வேறு வழியில் முயற்சிப்பானே தவிர அவள் மீது குற்றம் கண்டு, அந்தக் குற்றத்துக்காக அவளைப் பௌத்த சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதில் சிரத்தை உள்ளவனாக இருக்கமாட்டான். மாலவல்லி இரவு வேளைகளில் உன் வீட்டுக்கு வருவதை ஒளிந்திருந்து பார்த்து அவள் மீது இந்தக் குற்றத்தைச் சொல்லி அவளைப் புத்தசங்கத்தில் வைத்து விசாரணை செய்து அங்கிருந்து வெளியேற்றி விட பார்க்கிறான். இன்று மாலை புத்த விஹாரத்தில் பூசை நடக்கும் வேளையில் இவள் புத்த பெருமானின் பொன்னடிகளில் மலர்களைச் சமர்ப்பிக்க அருகதையற்றவள் என்று கூச்சலிட்டு அந்தச் சபையில் அவளை விசாரணைக்கு உட்படுத்தி அவமானப்படுத்த நினைத்தான். ஆனால் மகா உத்தமராக விளங்கும் அக்கமகாதேரர் அதைத் தடுத்து, 'நாளை மறுதினம் பௌர்ணமியன்று நடக்கப் போகும் பாடிமோஹ்ஹத்தில் விசாரிப்போம்' என்று சமாதானப்படுத்தி அடக்கி விட்டார். நிச்சயம் நாளை மறுபடியும் மாலவல்லி குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுவாள். அதன் முடிவு என்னவாகுமோ, தெரியாது. அதற்குள் எத்தகைய மாறுதல்கள் எல்லாம் ஏற்படுமோ? எனக்கு இப்பொழுது கூடப் பெருஞ் சந்தேகம், மாலவல்லியைப் பின் தொடர்ந்து வந்த பிக்ஷு இவள் திரும்புகையில் எங்கேனும் மறைந்திருந்து இவளை வழிமறித்து இவளை ஏதோ கையும் களவுமாய்ப் பிடித்தவனைப் போலக் கலவரம் செய்து அவமானப்படுத்தி விடுவானோ என்று. அதோடு இவள் புத்த விஹாரத்திலிருந்து வெளி வந்ததையும், இவளைப் பின் தொடர்ந்து ரவிதாசன் வந்ததையும் பிக்ஷு வேடத்தில் இருக்கும் வேறொரு வஞ்சகனும் பார்த்திருக்கிறான். அவன் சாதாரண மனிதன் இல்லை. எங்கேனும் கண்காணாத இடத்தில் சோழ வம்சத்தின் சிறு பூண்டு எழுந்தாலும் கிள்ளி எறிந்து விட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். நீ திகைப்படையாமல் இருந்தால் அவன் பெயரையும் உனக்குச் சொல்லுகிறேன்" என்றான் பூதுகன். "அவன் யார்?" என்று கேட்டாள் வைகைமாலை துடிப்போடு. 'அவன் யார்...' என்று துடிப்போடு கேட்ட வைகைமாலையின் உணர்ச்சியைப் பூதுகன் உணர்ந்து கொண்டானாயினும் கொஞ்சம் அமைதியாகவே, "அவன் வேறு யாரும் இல்லை. தஞ்சை மன்னன் மாற முத்தரையரின் சேனாநாயகன். அவன் பெயர் கலங்கமாலரையன். போர் முகத்தில் நின்று வெற்றி பெற வேண்டியவன், இன்று புத்த பிக்ஷு வேடம் தாங்கி முத்தரையரின் அரசைக் காப்பாற்ற நினைக்கிறான். கொடும்பாளூர் வீரர்களின் வாள் வலிமைக்குப் பயந்து அவன் பூம்புகார் புத்த விஹாரத்தைப் புகலிடமாகக் கொண்டிருக்கிறான்" என்று கூறினான். இதைக் கேட்டதும் வைகைமாலை மிக்க கலக்கம் அடைந்தவளாய், "அப்படியா? மாலவல்லி இங்கு வந்து போகிறாள் என்பதை அறிந்தாலே இவளுக்கு இன்னல் விளைவிக்க அவன் முயற்சிப்பான். நாங்கள் சோழ வம்சத்தினரிடம் எத்தகைய பற்றுள்ளவர்கள் என்பதைக் கொடும்பாளூர் அரசர்கள் எங்களுக்குச் செய்யும் மரியாதையிலிருந்து இவன் நன்கு உணர்ந்து கொண்டிருப்பான். மாலவல்லி இந்த வீட்டுக்கு வருவதை அவன் அறிந்தால் அவள் மீது சந்தேகம் கொண்டு அவளுக்குத் தீங்கு செய்ய நினைத்தாலும் நினைப்பான். மாலவல்லி எவ்வித இடையூறுமில்லாமல் புத்தவிஹாரத்துக்குச் சென்றிருப்பாளா என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. நீங்கள் இனியும் இங்கு தாமதிக்க வேண்டாம். நாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீங்கள் இப்பொழுதே புறப்பட்டு வேகமாகப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்" என்றாள். அவளுடைய பதற்றத்தையும் திகிலையும் பார்த்த பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டான். "எது நடந்தாலும் விடிந்தால் தெரிந்து விடும். உன் மாலவல்லிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டு விடும் என்று நான் நினைக்கவில்லை. உன்னைப் போல் அல்ல அவள். எத்தகைய ஆபத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் சாமர்த்தியம் அவளிடம் இருக்கிறது என்று தான் நான் கருதுகிறேன், வைகைமாலா! நெடு நாட்களுக்குப் பின் இங்கு வந்த என்னை இப்படி நீ விரட்டி அடிக்காதே. இந்த வைகாசி மாதத்துப் பூர்வபக்ஷத்துச் சந்திரன் நமக்கு இன்பம் அளிப்பதற்காக வானில் வந்து காத்து நிற்கிறான். இந்த உன்னத மாளிகையின் மேன் மாடத்தில் உல்லாசக் கூடம் நம்முடைய வரவை எதிர்நோக்கி அந்த நிலவொளியில் அமிழ்ந்து கிடக்கிறது. நமக்காக மலர் மணத்தை வாரி வரும் தென்றல் காற்று அடிக்கடி மேன் மாடத்தில் வந்து பார்த்து நாம் இல்லாதிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து விடுகிறது. உன் மனோதர்மத்தை அறியாத உன் இளமை எழில் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் வாட்டம் அடைந்து கொண்டே வருகிறது. அடங்காத ஆசை அலைமோதும் என் உள்ளம் அவ்வாசையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே போகிறது. இரவும், நிலவும், இளங்காற்றும், எழில் மணமும் இளமையின் துடிப்பும் எல்லாம் வீணாகும்படி வாழ்வதுதானா வாழ்க்கை? இத்தனை இன்பங்களும் காத்திருக்க இன்று கிடைத்த பொழுதை விணாக்கினால் நாளை எப்படியோ? வைகைமாலா! வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்க வேண்டிய காலங்களைத் தவற விடுவது போன்ற பெருநஷ்டம் வேறு எதிலும் இல்லை. இந்த இளமைப் பருவத்தில் எழும் உணர்ச்சி முதுமைப் பருவத்தில் திரும்பி வருவதில்லை. இப்பொழுது நாம் அனுபவிக்கும் இன்பமோ, அனுபவிக்க வேண்டிய இன்பமோ முதுமைப் பருவத்தில் நமக்குக் கிட்டுவதில்லை. இன்று அனுபவிக்க வேண்டியதை எதற்காகவோ நாளைக்கு ஆகட்டும் என்று விட்டுவிட்டால் அதை வாழ்வின் நஷ்டக்கணக்கிலே தான் எழுத வேண்டும்" என்றான். வைகைமாலை சிறிது கோபமும் பரிவும் நிறைந்த குரலில் பேசினாள்: "வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் லாப நஷ்டக் கணக்கில் வைத்துப் பேசும் ஒரு கொள்கைதான் எனக்கு விநோதமாய் இருக்கிறது. வாழ்வில் லாபம் மாயை. நஷ்டம் என்று கருதுவதும் அப்படியே. உங்களைப் போன்ற இன்ப வேட்கையில் ஈடுபட்டவர்களுக்குச் சிற்றின்பத்தை அனுபவிப்பது ஒரு லாபம். அதைப் போல் துறவு வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்குப் பேரின்பத்தை அனுபவிப்பது ஒரு லாபம். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும். நீங்கள் இன்ப சுக போகங்களை விட்டுத் துறவு பூணுவதில் வாழ்க்கையில் நஷ்டம் என்கிறீர்கள். துறவு வேட்கையில் நாட்டங் கொண்டவர்கள் இன்ப வேட்கையில் நாட்டம் செலுத்திய ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் நஷ்டம் என்று கருதுகிறார்கள். நான் சொல்லுகிறேன் - வாழ்க்கையின் அனுபவங்களை லாப நஷ்டங்களாகக் கருதினாலும் இன்று நஷ்டமாகக் கருதுபவற்றை நாளை அனுபவிக்கப் போகும் பெரும் லாபத்தை உத்தேசித்துத்தான் நஷ்டமடைந்தோம் என்று கருத வேண்டும். இப்படி உங்களோடு பேசிக் கொண்டே போனால் பேச்சு வளரும். நீங்கள் என் வார்த்தையைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு அடிமைப்பட்டவன் நான். நம்முடைய சுகத்தையே நாம் பெரிதாகக் கருதக்கூடாது. மாலவல்லியின் நிலை எப்படியோ? அதை நான் அறிந்து கொள்ளும் வரையில் என் மனம் நிம்மதி அடையாது. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடனே போங்கள். நான், இந்த இரவு - அதைச் சோபிக்க வைக்கும் நிலவு - இந்த நிலவொளியில் தவழ்ந்து வரும் காற்று - இவைகளில் அமிழ்ந்திருக்கும் உல்லாசக்கூடம் - மனத்துடிப்பு எல்லாம் அப்படியே இருக்கும். இன்று இல்லாவிட்டால் நாளை திரும்பி வரும். ஆனால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளில் சிறிது தவறி விட்டோமேயானால் இதனால் ஏற்படப் போகும் இடையூறுகளுக்காக நாம் பின்னால் வருந்தும்படி நேரிடலாம். நீங்கள் இப்பொழுதே போங்கள். மாலவல்லியின் கதி என்ன ஆகுமோ?" என்று துடித்தாள். பூதுகன் அதற்கு மேலும் அவ்விடம் நின்றால் வைகைமாலையின் கோபமும், வருத்தமும் அதிகமாகும் என்பதை உணர்ந்து அவள் வார்த்தைக்கு இணங்கிப் புறப்படத் தீர்மானித்தான். "சரி, நான் போகிறேன். இரவு எந்நேரத்தில் வேண்டுமானாலும் வந்து கதவைத் தட்டுவேன். திறக்கத் தயாராயிரு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அவன் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் இவைகளைத் தாண்டி, மிகவும் வேகமாக நடந்து சம்பாதிவன விஹாரத்தை நோக்கிச் சென்ற போது கடற்கரையில் கலங்கரை விளக்கத்துக்குச் சமீபமாக இரண்டு உருவங்கள் ஒன்றையொன்று ஒட்டினாற் போல் நடந்து செல்வதைக் கண்டான். சட்டென்று அவனுடைய வேகத்தில் தளர்ச்சி ஏற்பட்டது. அவன் இருந்த இடத்துக்கும் அந்த உருவங்கள் இருந்த இடத்துக்கும் சுமார் நூறு கஜ தூரமாவது இருக்கும். அந்த உருவங்கள் அவன் கண்களுக்குச் சரியாகத் தெரியவில்லையாயினும் அவை ஒரு ஆணும் பெண்ணும்தான் என்பதை அவனால் எளிதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் யாரோ இளங் காதலர்களாக இருக்கக் கூடும் என்று எண்ணி அலட்சியமாக விட்டு விட்டுச் செல்ல அவனுக்கு மனம் இல்லை. அவன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தாடின. ஒரு வேளை அவள் மாலவல்லியாக இருக்குமோ என்ற சந்தேகம்தான் அவனுடைய குழப்பத்திடையே முன்னணியில் வந்து நின்றது. இந்தச் சந்தேகம் அவன் மனத்தில் வலுக்கவே அதைக் கண்டறிந்து விட நினைத்தான். சம்பாதிவனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த அவனுடைய கால்கள் சட்டென்று கலங்கரை விளக்கத்தை நோக்கி அதிவேகமாக நடக்கத் தொடங்கின. இளம் காதலர்கள் தன்னுடைய வரவைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அவன் மனத்தில் அப்பொழுது ஏற்படவில்லை. அவர்களைப் போலத் தானும் கடற்கரைக்கு உலாவ வந்தது போல அப்படியே அந்த வழியாகச் சென்று அவர்கள் யாரென்று பார்ப்பதில் பிசகில்லையல்லவா? அவன் கலங்கரை விளக்கத்தை நெருங்கிய போது அவர்கள் அந்த ஸ்தூபிக்குச் சிறிது தூரத்துக்கு அப்பால் அமர்ந்து ஏதோ உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்ததும் அவனுடைய சந்தேகம் தெளிவாகியது. அவன் நினைத்தபடியே அவள் மாலவல்லிதான். ஆனால் அவன்?... அவனைப் பூதுகன் இதுவரை பார்த்ததில்லை. அதோடு மட்டுமல்ல. இவ்வளவு அழகான வாலிபனை அவன் இதுவரை எங்கும் பார்த்ததேயில்லை. |