![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 12 - திருபுவனி எங்கே? குடந்தை மக்கள் பழையாறையை நோக்கிப் பெரும் படையைப் போல் திரண்டு வருவதற்குக் காரணம் இருந்தது. மத விஷயத்திலே ஒருவருக்கொருவர் போட்டியும் பூசலும் வளர்ந்தன. நகரத்திலே பஞ்சம் தலைவிரித்தாடியது. பகைவரின் ஆதிக்கத்திலிருந்த புத்த விஹாரத்தையும் ஆராமத்தையும் குடந்தைக் கூத்தனாரின் கோயிலோடு சேர்த்தாகி விட்டது. எல்லா மதவாதிகளுக்கும் இது ஒரு புரட்சிகரமான மாறுதலாகத்தான் தோன்றியது. குடந்தையிலிருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினரெல்லாம் இது பிறைசூடிய பெருமானின் திருவிளையாடல் தான் என்று சொல்லி மகிழ்ந்தனர். குடந்தையில் சைவ சமயம் மிகவும் பலம் பொருந்தியதாகி விட்டாலும் புத்த சமயம் அடியோடு அழிந்து விடவில்லை. பகவரிடமிருந்து பிரிந்த சில பிக்ஷுக்கள் குடந்தைக் காரோணத்தில் ஒரு சிறு புத்த விஹாரத்தை அமைத்து, பகவ முனிவர் செய்த காரியத்தைப் பெரிய துரோகமென்று எடுத்துக் காட்டி மதப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். பகவ முனி மீது பலவித அவதூறுகளையும் பழியையும் சுமத்திப் பிரசாரம் செய்த புத்த பிக்ஷுக்கள் தஞ்சை மன்னரின் சேனாதிபதியாக இருந்து புத்த பிக்ஷுவாகி விட்ட கலங்கமாலரையரின் ஆதரவை எதிர்பார்த்திருந்தனர். அப்பொழுது குடந்தைக் காரோணத்தில் வைஷ்ணவ பக்தர்களின் பக்திப் பிரசாரங்கள் அதிகமாயிருந்தன. பல வருடங்களுக்கு முன் அந்நகரிலிருந்து பல இனிய செந்தமிழ்ப் பாசுரங்கள் பாடி, பக்தி மார்க்கத்தில் மக்களை ஈடுபடும்படி செய்து அந்நகரிலேயே காவிரிக் கரையில் சமாதி அடைந்த திருமழிசைப் பிரானின் வழி வந்த சீடர்களும், ஆழ்வாராதிகளுள் சிறந்தவராக விளங்கிய திருமங்கை மன்னரிடம் பக்தி கொண்ட வைஷ்ணவர்களும் இனிய செந்தமிழ்ப் பாசுரங்களைப் பாடி மக்களைப் பக்திப் பரவசத்துள் ஆழ்த்தி வந்தனர். அவர்களுக்குத் திருவாலி, திருநகரி போன்ற சிற்றூர்களை ஆண்டு வந்த பரம வைஷ்ணவர்களும் திருமங்கை மன்னரின் குலத்தவருமான சிற்றரசர்களின் பேராதரவும் கிடைத்து வந்தது. குடந்தைக் காரோணத்தில் சில புத்த பிக்ஷுக்கள் வந்து விஹாரத்தை அமைத்துக் கொண்டு மதப் பிரசாரம் செய்வது பற்றி வைஷ்ணவர்கள் கவலை கொள்ளவே இல்லை. அவர்கள் அன்பு வழியிலேயே புத்தமதத் துறவிகளை ஒடுக்கிவிட நினைத்தனர். பரந்தாமனின் பல அவதாரங்களில் புத்த அவதாரமும் ஒன்று என்று சொல்லிப் புத்தர் பிரானைக் கொண்டாடுவதற்குத் தலைப்பட்டனர் வைஷ்ணவர்கள். வைஷ்ணவர்களின் இத்தகைய பிரசாரம் புத்த பிக்ஷுக்களைத் திணற வைத்தது. புத்தரே நாராயணின் திருவுருவம் என்றால் அதற்குத் தனியாக மதம் ஒன்று எதற்கு? பௌத்த விஹாரங்கள் எதற்கு? புத்த பிக்ஷுக்களின் தனிக் கொள்கைகளும் லட்சியங்களுக்கும் மதிப்பில்லாமல் போய் விட்டன. அதோடு மட்டுமல்ல; குடந்தைக் காரோணத்திலிருந்த சில சமண சமயவாதிகளும் புத்த சமயத்தினருக்கு நேர் வைரிகளாக விளங்கி வந்தனர். புத்த சமயத்தினருக்குக் கலங்கமாலரையரின் ஆதரவு இருந்தது என்றால் சமண சமயத்தினருக்குப் பல்லவ மன்னனின் சகோதரன் சிம்மவர்மனின் ஆதரவும், தஞ்சை மன்னரின் ஆதரவும் இருந்தன. பொதுவாகச் சொல்லப் போனால் நாளுக்கு நாள் புத்த சமயத்தினரும் ஜைன சமயத்தினரும் பகைமையை வளர்த்துக் கொண்டனரே தவிர அவர்களுக்குச் சைவ வைஷ்ணவர்களின் முன்னேற்றம் பற்றிக் கவலையே இல்லை. இந்நிலையில் சைவ சமயத்தினரும் ஒற்றுமையாக இருந்து தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்டனர். இத்தகைய சூழ்நிலையில் தான் நாட்டில் பஞ்சமும் வறுமையும் தாண்டவமாடி மக்களை வாட்டியதோடு, நாட்டுப் பற்றுக் கொண்ட பூதுகனும் சோதிடர் சந்தகரும் காஞ்சியில் அடைந்த கதி மக்களை ஆவேசம் கொள்ள வைத்திருந்தது. தத்துவப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த மதவாதிகளும் மக்களின் கொதிப்பான நிலையை உணர்ந்து கொண்டு, அனுதாபம் செலுத்தலாயினர். நகர மக்கள் ஆங்காங்கு கூடிப் பேசிக் குமைந்தனரே தவிர, அவர்களுக்கு எவ்வித வழியும் தோன்றவில்லை. எப்படியும் இந்த நிலையில் பல்லவ சாம்ராஜ்யத்தின் கீழும், பதவி ஆசையே பிரதானமாகக் கருதும் சிற்றரசர்களின் ஒழுங்கற்ற அதிகாரத்தின் கீழும் நலமிழந்து அவர்கள் வாழ விரும்பவில்லை. மறுபடியும் சோழ நாட்டை ஒரு குடையின் கீழ் ஆளும் அரசன் ஏற்பட்டால் தான் நல்ல வாழ்க்கை நிலையை அடையலாம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். குழப்பமான நிலையிலுள்ள மக்களிடையே தக்க யோசனைகள் கூறி வழி நடத்தும் ஒரு சிலரும் அப்பொழுது தோன்றினர். அச்சமயத்தில் பழையாறை நகரை ஆளும் சோழ வம்ச இளவல் விஜயாலயனை அண்டிக் குறைகளைச் சொன்னால் தான் ஏதேனும் வழி பிறக்கும் என்று அவர்களுக்குப் பட்டது. குடந்தை மக்கள் ஒன்று கூடிப் படையெடுத்துச் செல்பவர்கள் போலப் பழையாறை நகரை நோக்கிச் சென்றனர். அப்பொழுதுதான் கொடும்பை மாநகரிலிருந்து வந்த விஜயனும் அவன் சகோதரி அருந்திகையும் குடந்தை மாநகரிலிருந்து படையெடுத்தாற் போல் வந்திருக்கும் மக்களின் பெருங்கூட்டத்தைக் கண்டு வியப்படைந்தனர். சில நாட்களாகச் சோழ மண்டலத்தையே பிடித்து வாட்டும் பஞ்சத்தின் காரணமாகத்தான் தங்களிடம் அவர்கள் குறைகளைச் சொல்ல வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினர். விஜயன் அந்தக் கூட்டத்தில் முன்னணியில் நிற்கும் ஒரு சிலரைத் தனியே அழைத்து, “அவர்கள் பெருங் கூட்டமாக வந்திருக்கும் காரணம் யாது?” என்று அனுதாபத்தோடு விசாரித்தான். அவர்களில் ஒருவன் ஆத்திரத்தோடும் துடிப்போடும், “இந்நாட்டை மிகவும் உன்னத நிலையில் ஆண்ட சோழப் பரம்பரையில் உதித்தவர்கள் தாங்கள். இந்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆளத் தகுதியுடையவர்கள் தாங்கள்தான். காஞ்சியிலிருந்து எங்களையாளும் பல்லவ சக்கரவர்த்தியின் கீழும், தங்கள் சுகமே பெரிதென்று கருதும் சிற்றரசர்களின் கீழும் இச் சோழவளநாடு சிதறுண்டு பஞ்சத்திலும் பட்டினியிலும் பரிதவிக்கும் நிலையைத் தாங்கள் அறியவில்லையா? உங்களுக்குள்ள வீரத்தைக் கேட்டு நாங்கள் பெருமையடைந்துள்ளோம். இத்தகைய நிலையில் நீங்கள் எங்களுக்கு வழி காட்டுவதை விட வேறு கதியில்லை. இனி எங்களால் சகிக்க முடியாது” என்றான். விஜயன் சிறிது யோசனையில் ஆழ்ந்தவன் போல் இருந்துவிட்டு அலட்சியமாகச் சிரித்தான். “நான் ஒன்றையும் அறியாமலில்லை. என் கை வாள் சிறிது பொறுமையை வேண்டுகிறது. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறது. எதிராளிகளின் பலமும் நாம் அறிந்ததே. சோழ நாட்டின் சிதறுண்ட நிலையையும் மக்களின் அவல நிலையையும் போக்காத வரையில் இந்த விஜயனுக்கும் அவன் கைவாளுக்கும் தூக்கம் வராது. இருக்கட்டும், இத்தனை நாட்களாகப் பல துயரங்களை அனுபவித்தும் வாளாவிருந்த நீங்கள் இன்று ஏன் திடீரென்று இவ்வளவு ஆவேசம் கொண்டவர்களாகக் கூடி வரவேண்டும்?” என்று கேட்டான் மிகவும் ஆச்சர்யத்தோடு. மற்றொருவன் ஆவேசத்தோடு பேச ஆரம்பித்தான்: “சோழ நாட்டிலுள்ளவர்கள் பஞ்சம் பட்டினி என்று காதால் கூடக் கேட்டு அறிந்தவர்கள் இல்லை. மன்னர்கள் நீதி முறை தவறினால் தான் பஞ்சமும், வறுமையும் ஏற்படும். பஞ்சமும் நோயும் ஒரு புறமாயிருக்க நாட்டுப் பற்றுள்ள உன்னதமான மனிதர்களையும் பகைவர்களின் சூழ்ச்சிக்குப் பலி கொடுப்பதென்றால் யாரால் தான் சகித்திருக்க முடியும்? நாஸ்திகராயினும் நேர்மையும், மக்களிடம் அனுதாபமும் கொண்ட பூதுகரைக் காஞ்சிமா நகரில் சில வஞ்சகர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்ல; கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகரையும் அவர்கள் சிறைப் பிடித்திருக்கிறார்களாம். இதை நாங்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?” விஜயன் சிறிது அலட்சியமாகச் சிரித்தான். “எல்லாம் எனக்குத் தெரியும். கவலைப் படாதீர்கள். எதிராளிகளின் கையில் சிக்கி உயிரைப் பலி கொடுக்கப் பூதுகர் அவ்வளவு அசடரல்ல. ஏமாந்தவருமல்ல. பூதுகரை யாரும் எதுவும் செய்து விட முடியாது. அவர் உயிரோடுதான் இருக்கிறார். சந்தகரும் சிறைப்படவில்லை. எனக்கும் பூதுகரைப் பற்றிக் கவலையுண்டு. என்னை விடக் கொடும்பாளூர் மன்னருக்கு அவரைப் பற்றி அதிகக் கவலையுண்டு. இதெல்லாம் எதிரிகள் கிளப்பி விடும் பொய் வதந்திகளாகத் தானிருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் பரபரப்போடு வந்து தணிவான குரலில் விஜயனிடம் ஏதோ சொன்னார். விஜயனும் அவனுக்குச் சமீபமாக நின்று கொண்டிருந்த அவன் சகோதரி அருந்திகையும் அந்த மனிதர் கூறிய வார்த்தைகளைக் கேட்டுச் சிறிது திகைப்படைந்து நின்றனர். விஜயனும் அருந்திகையும் திகைப்புறும் வண்ணம் வந்த மனிதர் கூறிய செய்திதான் என்ன? ‘நந்திபுர நகரத்தில் இருக்கும் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைக் காலையிலிருந்து எங்கோ காணவில்லை’ என்ற செய்திதான் அது. உண்மையில் இச்செய்தி அவ்விருவரையும் சிறிது திகைப்புற வைத்தாலும் சிறிது நேரத்தில் அவர்கள் தெளிவடைந்து விட்டனர். ”எனக்குத் தெரியும், ஒரு நாள் அவள் எங்கேயாவது போய் விடுவாள் என்று. துறவறத்தில் நாட்டம் கொண்ட ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்திக் குடும்ப வாழ்க்கைக்குத் திருப்புவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? என்றாள் அருந்திகைப் பிராட்டி. குடந்தையிலிருந்து வந்திருப்பவர்களின் எதிரே இவ்விஷயத்தைப் பற்றி அருந்திகையோடு பேச விரும்பவில்லை விஜயன். அவன் அவர்களுக்குத் தக்கபடி சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, அருந்திகையிடம் “இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திடீரென்று எங்கேயோ மறைந்து விட்டாள் என்பது வியப்படையக் கூடிய விஷயமாக எனக்குப் படவில்லை. முரடனும் அசடனுமான கோளாந்தகனுக்கு எந்தப் பெண் தான் மனைவியாக விரும்புவாள்? அவனைக் கல்யாணம் செய்து கொள்வதை விட எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தான் எந்தப் பெண்ணுக்கும் தோன்றும். அதுவும் துறவறத்தில் பற்றுக் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றிக் கேட்க வேண்டுமா?” என்றான். “அதோடு மட்டுமல்ல; அவள் உண்மையாகவே இடங்காக்கப் பிறந்தாரின் மகளாக இருந்தாலல்லவா அவருடைய வீட்டில் இருக்க மனம் இடங் கொடுக்கும்? வேடிக்கைதான்; இசைக்கணிகை மாலவல்லியைக் கொண்டு வந்து தங்கள் மாளிகையில் அடைத்து வைத்துவிட்டு, ‘தங்கள் பெண் திருபுவனி அவள் தான்’ என்று சொல்லி அவளுக்கு ஒரு முரடனையும் மணம் செய்து வைக்க முயற்சி செய்தால்...? இதை அவள் சகிப்பாளா? அவளுக்குத் தன் வாழ்க்கை நிலை தெரியாதா? ஏதோ ஒரு காரணத்துக்காக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு துறவறத்தில் பற்றுக் கொண்ட அவளை எப்படித் திருப்ப முடியும்?” என்றாள் அருந்திகைப் பிராட்டி. “சில காலம் வரையில் அவள் மாலவல்லி என்ற ரகசியம் நமக்கு மாத்திரம் தெரிந்ததாக இருக்கட்டும். அந்த ரகசியத்தை இப்பொழுது நாம் வெளியிடுவது அவ்வளவு நலமல்ல. பெண்கள் வாய் எந்தச் சமாசாரத்தையும் காப்பாற்றுவது கடினமாயிற்றே? அதனால் சொன்னேன்” என்றான் விஜயன் குறும்பாகச் சிரித்துக் கொண்டே. விஜயனின் வார்த்தையைக் கேட்டதும் அருந்திகைக்குச் சிறிது கோபம் ஏற்பட்டது. “மற்றப் பெண்களைப் போல என்னையும் நினைத்து விட்டாயா? எனக்கு எல்லாம் தெரியும். உன்னை விட இந்தக் காரியத்தில் நான் மிகவும் சாமர்த்தியமாகத்தான் நடந்து கொள்வேன். ஆனால் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளியார் கொடும்பாளூருக்கு வந்த போது அவருக்குத் திருபுவனியைப் பற்றிய எல்லா ரகசியங்களும் தெரிந்து விட்டன என்பதை நீ மறந்து விடாதே. அப்படியிருக்கும் போது நாம் இந்த ரகசியத்தை மறைக்க முயற்சி செய்வதில் என்ன பயன்?” “இல்லை, புலிப்பள்ளியாருக்கு இந்த உண்மை விளங்கி விட்டாலும் அதை எளிதில் நம்ப மாட்டார்கள். தவிர, பிடிவாதக்காரர்கள் தீமையான காரியம் என்று தங்கள் மனத்தில் பட்டாலும் அதைப் பிடிவாதத்தோடு செய்து அதனால் ஏற்படும் தீமையையும் அனுபவிப்பார்கள். புலிப்பள்ளியாருக்குத் திருபுவனியைப் பற்றிய உண்மை தெரிந்து விட்டதானாலும் அவர் பிடிவாதத்தோடு அவளைத் தம் மகனுக்கு மணம் முடித்து வைக்கத்தான் பிரியப்படுவார். அதோடு மட்டுமல்ல; இந்தச் சூழ்ச்சிகளெல்லாம் ஏதோ காரணத்துக்காகக் கலங்கமாலரையரினால் செய்யப் படுகிறது என்பதை மறந்து விடாதே. அவருக்கு மாலவல்லியின் வாழ்க்கைச் சரித்திரம் தெரியாமலிருக்காது. வேண்டுமென்றேதான் மாலவல்லியை ஒருவருக்குக் கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார். சாம்ராஜ்யப் பித்துக் கொண்டவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்திருப்பார்கள். பௌத்தத் துறவி போல் இருந்து கொண்டு அவர் செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் நாம் அறிந்தவை தானே? அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாலவல்லியைக் கோளாந்தகனுக்கு மணம் முடித்து வைக்கத் தான் முயற்சி செய்வார். நாம் இதைப் பொறுத்திருந்து பார்ப்பதுதான் நலம்” என்றான் விஜயன். “நீ சொல்வதும் சரிதான்! இந்த உண்மை வெளியாகாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் மாலவல்லியைப் பார்க்க என்னோடு பழையாறை வருவதாகச் சொன்ன வைகைமாலையையும் சுதமதியையும் வரவேண்டாம் என்று சொல்லிப் பூம்புகாருக்கு அனுப்பி விட்டேன். அதோடு மாலவல்லியும் தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது. அப்படியிருந்தால் அவள் இடங்காக்கப் பிறந்தாரிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க மாட்டாளா...? அவள் தான் எங்கோ மறைந்து விட்டாளே... அவளை எப்படிக் கோளாந்தகனுக்கு மணம் முடிப்பது...?” என்றாள் அருந்திகை. “அவள் எங்கே போனால் என்ன? அவளை எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்து வந்து தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிவிட மாட்டார்களா? கலங்கமாலரையரும் புலிப்பள்ளியாரும் சாதாரண மனிதர்களா?” “அப்படிப் பலவந்தமாக அவர்கள் ஒரு காரியத்தைச் செய்யத் துணிவார்களானால் அதை நாம் எப்படியாவது தடுத்துத்தானாக வேண்டும்!” “அதற்கில்லாமல் நாம் வேறு எதற்காக இருக்கிறோம்? அவர்கள் அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வரட்டும், பார்ப்போம்” என்றான் விஜயன். “எல்லாவற்றுக்கும் நான் இப்பொழுதே நந்திபுர நகரம் சென்று இடங்காக்கப் பிறந்தாரைச் சந்தித்துச் சில விவரங்களைத் தெரிந்து கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்” என்றாள் அருந்திகை. “சரியான யோசனைதான். போய்வா. எச்சரிக்கை. தப்பித் தவறிக்கூட இடங்காக்கப் பிறந்தாரிடம் இரகசியங்களைச் சொல்லி விடாதே.” “மறுபடியும் எச்சரிக்கை செய்கிறாயே? பயப்படாதே. எதையும் சொல்லிவிட மாட்டேன்” என்றாள் அருந்திகை. அருந்திகைப் பிராட்டி நந்திபுர நகருக்குச் செல்லப் பல்லக்குப் பரிவாரங்களை ஏற்பாடு செய்யச் சொல்லி உத்தரவிட்டான் விஜயன். சில கணங்களில் பல்லக்குப் பரிவாரங்கள் சித்தமாயின. அவளும் புறப்பட்டாள். அருந்திகைப் பிராட்டி நந்திபுர நகரத்து மாளிகையை அடைந்த பொழுது, மாளிகை வாசலில் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் அவர் மகன் பொற்கோமன் ஏதோ கோபமும் துடிப்பும் கொண்டவன் போல நின்று கொண்டிருந்தான். அவருக்கு அந்தரங்க யோசனை கூறும் சிலர் மிகவும் மனக்கலக்கம் அடைந்தவர்கள் போலச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். அருந்திகைப் பிராட்டியின் பல்லக்கைக் கண்டதும் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் எழுந்து நின்றார். மற்றவர்களும் மிகவும் வணக்கத்தோடு எழுந்து நின்றனர். அருந்திகை பல்லக்கிலிருந்து இறங்கி வந்து மிகவும் அனுதாபம் கொண்டவள் போல், “காலையில் தான் செய்தி அறிந்தோம். நெடுநாட்களுக்குப் பிறகு காணாமல் போன உங்கள் அருமை மகளைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு வந்தீர்கள். ஆனால் துர்ப்பாக்கியம். அவள் இப்படிப் போய்விடுவாள் என்று நான் நினைக்கவில்லை. என்றோ ஒரு நாள் திருந்தி மற்றக் குடும்பப் பெண்கள் போலாகி விடுவாள் என்றுதான் நினைத்தேன். காந்தம் போன்ற சக்தியுள்ள புத்தர் பிரானின் திருவருள் தான் அவளைப் பிடித்து இழுத்திருக்க வேண்டும். மேலே என்ன செய்வதாக யோசனை செய்திருக்கிறீர்கள்?” என்றாள். பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் வியாகூலத்தோடு, “என்ன செய்வது? அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதற்குப் பல திசைகளிலும் பல வீரர்களை அனுப்பி இருக்கிறேன்” என்றார். “ஆம், என்ன செய்வது? நம்முடைய வயிற்றில் பிறந்த பெண்ணை விட்டு விட முடியுமா? அவளுக்கு எப்படியாவது சிறப்பான முறையில் மணம் முடித்து வைப்பீர்கள் என்று தான் நினைத்தேன். தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளியாரும் தங்கள் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்று துடியாக இருந்தார். துரதிருஷ்டம்! இப்படி நேர்ந்து விட்டது. மறுபடியும் அவள் அகப்பட்டாளானால் தாமதம் செய்யாமல் அவளைக் கோளாந்தகருக்கே மணம் முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள். “திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் சித்தமாயிருக்கின்றன. அவள் கிடைத்து விட்டால் உடனே கல்யாணம் தான். நேற்று கூடப் புலிப்பள்ளியார் இங்கு வந்து ‘திருமணத்தை விரைவில் முடிக்க வேண்டும்’ என்றார்” என்று பொற்கோமன் சொன்னான். “நேற்று புலிப்பள்ளியார் இங்கு வந்தாரா? நேற்று அவர் இங்கே வந்த போது திருபுவனி இருந்தாளல்லவா?” என்றாள் அருந்திகை பிராட்டி. “இருந்தாள். இன்று காலையில் தான் அவளைக் காணவில்லை. நேற்று கூடப் புலிப்பள்ளியார் அவளிடம் தனித்துச் சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் போகும் பொழுது, ‘உங்கள் மகளுக்கு என் குமாரனைக் கல்யாணம் செய்து கொள்ளப் பூரண விருப்பம் இருக்கிறது. இனிமேல் அவள் துறவற மார்க்கத்தில் பற்றுக் கொள்ளாத வண்ணம் நான் செய்து விட்டேன். கவலைப் படாதீர்கள்’ என்றார். புலிப்பள்ளியார் சென்ற பின் அவளும் நேற்று நடந்து கொண்ட விதத்திலிருந்து அவள் முற்றிலும் மனம் மாறிவிட்டாள் என்று தான் நம்பினேன். என் மனம் என்றுமில்லாத வண்ணம் நேற்று மிகவும் ஆறுதல் அடைந்திருந்தது. அவள் எங்கேனும் போய் விடுவாளோ என்று பயந்து வைத்திருந்த கட்டுக் காவலை யெல்லாம் கூட நீக்கிவிட்டேன். நேற்று நான் கொண்டிருந்த மன ஆறுதலையும் சந்தோஷத்தையும் இன்று ஏற்பட்ட நிகழ்ச்சி குலைத்து நொறுக்கி விட்டது” என்றார் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் மிகவும் குழப்பமும் துயரமும் அடைந்தவராக. சிறிது நேரம் அங்கே துயரம் சூழ்ந்த அமைதி நிலவி இருந்தது. அருந்திகை பிராட்டி ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பவள் போல் இருந்தாள். அவள் மனதில் பலவிதமான சந்தேகங்களெல்லாம் எழுந்தன. “சரி தான். புலிப்பள்ளியார் திருபுவனியைப் பார்த்துப் பேசிவிட்டு வந்த பின் உங்களிடம் ஏதாவது சொன்னாரா...?” என்று கேட்டாள் அருந்திகை. “சிறிது நேரம் வேறு ஏதேதோ அரசாங்க விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் கொடும்பாளூர் சென்று வந்ததைப் பற்றிச் சொன்னார். கொடும்பாளூர் மன்னர் தங்கள் சகோதரியைத் தஞ்சை இளவரசருக்கு மணம் செய்து கொடுக்கச் சம்மதிக்காதது பற்றியும், அதோடு அவர்கள் தஞ்சை மன்னரையும், பல்லவ சக்கரவர்த்தியையும் மிகவும் இழிவாகப் பேசியது பற்றியும் சொல்லி மனம் நொந்து கொண்டார். அதோடு காஞ்சி மாநகரில் பூதுகன் என்னும் நாஸ்திகவாதி கலங்கமாலரையரால் கொல்லப்பட்டதையும், அதனால் குடந்தைமா நகரத்து மக்கள் மிகவும் கொதிப்படைந்திருப்பதையும் பற்றிச் சொன்னார். இதைத் தவிர அவர் வேறு எதுவுமே சொல்லவில்லை” என்றார் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் மிகவும் ஆயாசத்துடன். “உங்களிடம் எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லி விட்டார் போலிருக்கிறது. ஆனால் நீங்கள் அவரைத் திருபுவனியோடு தனித்துப் பேச அனுமதித்திருக்கக் கூடாது. அவர் திருபுவனியிடம் என்ன சொன்னாரோ?” என்று கூறினாள் அருந்திகைப் பிராட்டி. |