![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 20 - பிரிதிவீபதியின் குழப்பம் தன் எதிரே குதிரையிலிருந்து கம்பீரமாக இறங்கிய வீர புருஷனைப் பார்த்ததும் சுகேசியின் உடம்பு புளகமுற்றுச் சிலிர்த்தது. உருக்கி வார்த்த தங்கச் சிலையைப் போலிருந்த அவள் மேனி இலேசாக நடுங்கியது. அவள் செவிகளில் வித்தியாதர உலகத்து இன்னிசை வாத்தியங்கள் அழகாக ஒலித்து இன்பத்தை நிரப்பின. அவள் மனக்கண் முன்னால் கந்தர்வ அணங்கு ஒருத்தி தோன்றி, அமரர் உலகத்தின் அற்புத இசைக்கு ஏற்ப அழகாக ஆடினாள். கின்னரர்களும், கிம்புருடர்களும் மங்கல வாத்தியங்களின் இழும் எனும் ஓசையினால், அந்தச் சுனைக்கரையை ஆனந்த உலகமாக மாற்றிவிட்டார். வானத்திலிருந்து மலர் மாரி பொழிந்தது. ‘கம்’மென்ற நறுமணம் அந்தப் பிரதேசம் முழுவதையும் ஆட் கொண்டது. “அன்பே! என்ன ஒரேயடியாகத் திகைத்து விட்டாய்?” என்று கேட்டுக் கொண்டே பிருதிவீபதி அவளை நெருங்கி வந்தான். சுகேசிக்கு இப்போது தான் காண்பது கனவோ என்று சிறிது ஐயம் தோன்றியது. கண்களை மூடி மூடித் திறந்தாள்; ஒருமுறை கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தாள். அவள் ஐயம் நீங்கி விட்டது. பிருதிவீபதி ‘அன்பே!’ என்று அவளை அழைத்த சொல் அவளை வான வீதிக்கு அழைத்துச் சென்றது. தேகம் முழுவதும் திடீரென்று பரவிய இன்ப உணர்ச்சி கொஞ்சமும் எதிர்பாராததாயும், எல்லையற்ற இன்பசாகரத்தில் அவளைத் தள்ளுவதாயும் இருந்தது. “எழிலரசி! நெடுநாட்களாக என்னைக் காணாமல் இருந்ததில் உனக்கு உண்மையில் கோபமாகத்தான் இருக்கும். மன்னித்து விடு. இத்தனை நாட்களிலும் உன்னை ஒரு நாள் கூட நான் மறக்கவில்லை...!” சுகேசியின் உள்ளத்தில் வியப்பும் ஆனந்தமும் பெருகி அவளை நிலை தடுமாறச் செய்தன. ‘என்ன ஆச்சரியம்! தன் உள்ளம் அவனுக்கு எப்படித் தெரிந்தது? தன்னைப் பற்றியே இத்தனை நாட்களும் நினைத்து அவர் உருகியிருக்கிறார். தான் மட்டும் என்ன? இரவும் பகலும் அவரைப் பற்றிய கனவிலும் நனவிலும் தானே கழித்து வந்திருக்கிறாள்! ரொம்பப் பொல்லாதவரா யிருக்கிறாரே! அன்று ஒரு நாள் கொஞ்ச நேரம் கள்ளப் பார்வை பார்த்துவிட்டு, இத்தனை தூரம் நெருங்கிப் பேச வந்து விட்டாரே. அம்மம்மா! இவருக்குத் தான் எத்தனை தைரியம்! நான் மிகவும் பாக்கியசாலி. இத்தனை சீக்கிரத்தில் என் அன்புக்குரியவரைச் சந்திப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. ஆனால் என் உள்ளம் தேடியலைந்த தெய்வம் என்னை நாடி வந்து விட்டது. ஆமாம், இவருடன் என்ன பேசுவது; ஆசிரமத்துக்கு வந்தால் ஒன்றும் பேச முடியாது என்று கருதித்தான் சுனைக்கரையைத் தேடி வந்திருக்கிறார். கெட்டிக்காரர்...!’ சுகேசி மிகவும் நாணத்துடன் தலை நிமிர்ந்து பிருதிவீபதியைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான். கண்களும் கண்களும் ஒரு கண நேரம் உறவாடிக் கொண்டன. “தேவியின் கோபம் இன்னும் தணியவில்லையா? மலரினும் மென்மையானது மங்கையர் இதயம் என்பார்களே! ஆனால் உன் மனம்...! இருக்கட்டும். உன்னைப் பிரிந்து வெகு நாட்களாகி விட்டன, இல்லையா? காவிரிப் பூம்பட்டினத்தில் சம்பாதி வனத்துக்கு அருகில் உன்னைக் கடைசியாகப் பிரிந்து சென்றேன். அதற்குள் என்னவெல்லாமோ கஷ்டங்கள் உன்னுடைய வாழ்வில் நேர்ந்து விட்டன. ஆனால் எல்லாவற்றுக்கும் நான் தான் காரணம். நான் அப்பொழுதே உன்னை என்னுடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். நான் அதில் தான் தவறு செய்து விட்டேன். மாலவல்லி! என்னுடன் பேச மாட்டாயா?” என்றான் பிருதிவீபதி. இதைக் கேட்ட சுகேசி துணுக்குற்று, சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனும் அவளைக் கவனித்துப் பார்த்தான். இருவருடைய நயனங்களும் சிறிது நேரம் அசையாமல் விழித்தது விழித்தபடியே நின்றன. முதலில் பிருதிவீபதியே பேசினான்: “நீ ஜைன முனிவர் அரிஷ்டநேமியின் ஆசிரமத்தில் இருப்பவளல்லவா?” “...ஆமாம்... அந்தத் துர்ப்பாக்கியவதி நான் தான். நான் பிறந்த சில ஆண்டுகளுக்குள் பெற்றோரைத் தவிக்கச் செய்து கள்வர் கூட்டத்தினரால் அபகரிக்கப்பட்டேன். என்னைக் கொடிய நரபலிக்காரர்களிடமிருந்து மீட்டு வந்து தாயும் தந்தையுமாயிருந்து காப்பாற்றி வரும் ஜைன முனிவருக்கும் என்னால் சதா தொந்தரவு தான்; அவருடைய தவ வாழ்வுக்கு இடையூறுதான். என்னைச் சந்தித்து, அடைக்கலப் பொருளாக ஏற்றுக் கொள்வதாக என் தந்தை அரிஷ்டநேமி முனிவரிடம் வாக்குக் கொடுத்த தங்களுக்கும் இப்பொழுது என்னால் துன்பம் நேர்ந்து விட்டது. தங்கள் அன்புக்குரிய மாலவல்லியின் சாயலை என்னிடம் காண நேர்ந்ததால், பாவம் நீங்கள் தடுமாற்றம் அடைந்து விட்டீர்கள். அறியாமையினால் நேர்ந்த இந்தக் குழப்பத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன்...” என்று கூறும் போது சுகேசியின் குரல் தழதழத்தது. பொலபொல வென்று கண்ணீர் வடிந்தது. சற்று முன் மலர்ச்சியோடு காணப்பட்ட அவளுடைய அழகான வதனம் வாடி விட்டது. பிருதிவீபதிக்குத் தலை சுழன்றது. அவன் கொஞ்சமும் எதிர்பாராதது நடந்து விட்டது. மாலவல்லிக்கும் சுகேசிக்கும் இருந்த உருவ ஒற்றுமை வித்தியாசம் கண்டு பிடிக்கக் கூடாததாக இருந்தது. மேலும் பிருதிவீபதியின் உள்ளத்தில் சுகேசி நிலைபெற்றிருக்கவில்லை. அவளிடம் தான் என்னென்னவோ பேசிவிட்டது, அவனுக்கே சிறிது வெட்கமாகப் போய்விட்டது. அவளுக்கு எவ்விதம் சமாதானம் கூறுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. சுகேசியும் ஒருவிதமான குழப்பத்தையே அடைந்திருந்தாள். முதலில் பிருதிவீபதியைக் கண்டதும், தன் மனத்துக்குகந்த காதலனைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டிருந்த வரையில் அவளது உணர்ச்சி கட்டிப் பிடிக்கக் கூடாததாக இருந்தது. அவன் மாலவல்லியென்று நினைத்துக் கொண்டு தன்னுடன் பேசினான் என்ற உண்மை தெரிய வந்ததும், அவளுக்கு ஏற்பட்ட மன வேதனையைச் சொல்லி முடியாது. அவள் உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து விட்டது. ஒரு பெரிய மலையின் மேலிருந்து கடகட வென்று தன்னை யாரோ உருட்டி விட்டது போல் தோன்றியது அவளுக்கு. தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஆடவன் ஒருவனுடன் தான் தனித்து நிற்பதாகவே அவளுக்குத் தோன்றியது. மாலவல்லி தன் தந்தையின் பாதுகாப்பில் இருப்பதை அவனிடம் சொல்லி விடலாமா என்று நினைத்தாள், சுகேசி. ஆனால், மறுகணம் அவள் நா எழும்பவில்லை. அதனால் மாலவல்லிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்...! “பெண்ணே! வருந்தாதே. உன் தகப்பனார் அரிஷ்டநேமி முனிவரிடம் கூறிய வாக்குறுதியை நான் மீறவில்லை. முன்பு என்னுடன் வந்த நண்பரும் நானும் மேற்கொண்ட காரியம் இன்னும் பூர்த்தியாகவில்லை. அது பூர்த்தியானதும் அவசியம் வந்து நான் உன்னை அழைத்துக் கொண்டு போவேன். நான் இன்னும் சில நாட்களில் மீண்டும் வருவேன். மாலவல்லிக்கு ஏதோ துன்பம் நேர்ந்து விட்டது. அவள் நந்திபுரத்திலிருந்து வெளியேறி விட்டாள். அவளைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டியது என் முக்கியமான கடமைகளில் ஒன்று... நான் மீண்டும் உன்னைச் சந்திக்கிறேன். எதிர்பாராதவிதமாக நேர்ந்து விட்ட இந்த மன வருத்தத்துக்கு என்னை மன்னித்து விடு!” என்று கூறிவிட்டு, சட்டென்று தாவிக் குதிரையின் மேல் பாய்ந்து ஏறினான். மறுபடியும் மாலவல்லியைப் பற்றிக் கூறி விடலாமா என்ற எண்ணம் சுகேசியின் தொண்டை வரையில் வந்தது. ஆனால் அவளால் அதைச் சொல்ல முடியவில்லை. மேலும், பிரதிவீபதி ஏறியிருந்த குதிரை மறுகணம் தாவிப் பாய்ந்தது. குதிரை சென்ற பாதையில் வானளாவப் புழுதி கிளம்பி மறைத்தது. சுகேசிக்குத் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு முயன்றாலும் அவளால் பிருதிவீபதியை மறக்க முடியவில்லை. அவன் மாலவல்லியைத் தான் நேசிக்கிறான் என்பதை யறிந்து கொண்ட பின்பும் அவள் மனம் ஏனோ அவன் நினைப்பில் அலைந்து தவித்தது. ஆனால் ஒரு பக்கம் அவள் மனத்துக்கு ஆறுதலும் ஏற்பட்டது. அநாதையான மாலவல்லியை அவன் காதலிப்பது அவள் உள்ளத்துக்கு இதமாயிருந்தது. சுனைக்கரையிலிருந்து ஆசிரமத்துக்கு வந்த பின்பும், சுகேசி எப்போதும் போல் உற்சாகமாயில்லை. மாலவல்லியிடம் சுனைக்கரையில் நிகழ்ந்தது எதையும் சொல்லவில்லை. மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டு மறுகினாள். சுகேசியின் திடீர் மாறுதலைப் புரிந்து கொள்ள முடியாமல் மாலவல்லி தவியாய்த் தவித்தாள். ஆகாரம், நித்திரை எதிலும் கவனமின்றி, சுகேசி மனத்தை எங்கேயோ அலைய விட்டு அவதிப்படுவது மாலவல்லிக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் போக வேண்டாமென்று தடுத்தும் கேளாமல் மாலவல்லி இடுப்பில் நீர்க் குடத்துடன், சுனைக்கரையை நோக்கிப் புறப்பட்டாள். சுகேசிக்கு மாலவல்லியைச் சுனைக்கரைக்கு அனுப்புவதில் விருப்பம் இல்லை யென்றாலும், ஒரு வேளை அவள் காதலன் அவளை அங்கு சந்திக்க வசதி நேரலாம் என்ற எண்ணமும் அவள் உள்ளத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு உறுத்தியது. ஆகவே, மாலவல்லி சுனைக் கரைக்குத் தண்ணீர் கொண்டு வரப் போவதை அவள் பாதி மனத்துடன் ஆதரித்தாள். சுகேசியின் மனப் புழுக்கத்துக்குக் காரணம் அறிந்து கொள்ள முடியாமல் மாலவல்லி வேதனைக்கு ஆளானாள். அந்தி வேளையின் அழகு அந்த மலைப் பிரதேசம் முழுவதும் நிரம்பி வழிந்தது. மனித சஞ்சாரமற்ற அந்த வனப் பிரதேசத்தில், மாலவல்லி ஒரு வனதேவதையைப் போல் சென்று கொண்டிருந்தாள். அவள் கவனம் முழுவதும் சுகேசியைப் பற்றிய நினைவுகளிலேயே தங்கியிருந்தது. ‘மனித உள்ளத்தை மாற்றியமைக்கும் சக்தி காதல் ஒன்றினால் தான் சாத்தியமாகும். தெள்ளிய நீர் நிலையில் ஒரு கல் விழுந்து சலனம் ஏற்படுத்துவது போல் சுகேசியின் உள்ளத்தை கலக்கமுறச் செய்வதற்கு வேறு என்ன இந்த வனப் பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும்?... ஆமாம்! ஒருவேளை அவளுடைய காதலன் அவளைச் சந்தித்திருக்கக் கூடுமோ...!’ இந்த எண்ணங்களின் ஓட்டத்தில் தன்னை மறந்த வண்ணம் சென்று கொண்டிருந்த மாலவல்லியின் நடையை ‘டக்டக்! டக்டக்!’ என்ற குதிரைக் குளம்பொலி சற்று நிறுத்தியது. அவள் நாலாபுறமும் பார்த்தாள். அந்தச் சமயம், குன்றுகளின் சூழலிலிருந்து ஒரு குதிரை வீரன் அவளெதிரே வந்து ‘டக்’ என்று குதிரையை நிறுத்திக் கீழே இறங்கினான். அவனைக் கண்டதும் மாலவல்லி ஒரே வியப்பில் ஆழ்ந்தாள். “...சுகேசி! அன்றைக்கு உன் மனம் மிகவும் குழம்பிப் போயிருக்கும். உன்னைச் சஞ்சலத்திலாழ்த்திய நான் உன் உறைவிடம் வரையில் வந்து உன்னைத் தந்தையாரிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவசர அலுவலை மேற்கொண்டிருந்தபடியினால் அவ்வாறு செய்ய இயலவில்லை. நீ வெளியே தனியாக வருவது மிகவும் ஆபத்து. உன்னை அபகரித்துச் செல்ல, நந்திபுர நகரத்து வீரர்களும், பழையாறை வீரர்களும் சதா கண்ணுங் கருத்துமா யிருக்கிறார்கள் என்னும் உண்மை என் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது... சுகேசி!” என்று கூறிப் பிருதிவீபதி குனிந்திருந்த மாலவல்லியின் முகத்தை நெருங்கிப் பார்த்தான். மாலவல்லியும் அவனை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தாள். “ஆ...! மாலவல்லியா? நீ எப்படி இங்கே வந்தாய்?...” என்று கேட்டுத் திகைத்தான் பிருதிவீபதி. எதிர்பாராமல் சந்தித்தனாலும், வெகு நாட்களுக்குப் பிறகு நேர்ந்த சந்திப்பாதலாலும் பிருதிவீபதியின் திகைப்பு நீங்கவே இல்லை. “தங்களிடம் இத்தகைய மாறுதலையே நான் எதிர்பார்த்தேன்... சுகேசி... சூதுவாது தெரியாத இளம் பெண். அவள் தங்களையே பரிபூரணமாக நம்பியிருக்கிறாள். அவளுக்கு வாழ்வளிக்க வேண்டியது உங்கள் கடமையாகும். புத்தர்பிரான் அருள் தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்து, சுகேசியினிடம் நட்புப் பூணவும், அவளுடைய இதயத்தை அறியவும் நல்ல வாய்ப்பை அளித்தது. தாங்கள் ஏற்கனவே ஜைன முனிவர் அரிஷ்டநேமியின் ஆசிரமத்தில் சந்தித்து அவளை அடக்கலப் பொருளாக ஏற்றுக் கொள்வதாக அவள் தந்தையிடம் சம்மதம் தெரிவித்ததை அவளே சொன்னாள். அவள் குறிப்பிட்ட இளங்குதிரை வீரர் யாராயிருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இப்பொழுதுதான் என் உள்ளம் அமைதி பெற்றது. யாருமற்ற அனாதையாகிய அவளது சோக வரலாற்றைக் கேட்டதிலிருந்து அவள் வாழ்வை வளமுள்ளதாக்க வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் திடமாக இடம் பெற்று விட்டது...!” மாலவல்லியின் பேச்சை நிறுத்திப் பிருதிவீபதியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். “ஏன் நீங்கள் மௌனமாயிருக்கிறீர்கள்? வாய் திறந்து ஒரு வார்த்தை பேசமாட்டீர்களா?” என்று கேட்டாள். “மாலவல்லி! நீதான் பேசுவதற்கு ஒன்றும் வைக்கவில்லையே! இவ்வளவு அறபோதனை செய்ய, உங்கள் பௌத்த சங்கத்தினிடமிருந்து நீ எப்பொழுது கற்றுக் கொண்டாய்? அது இருக்கட்டும். வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் உன் அன்புக்கு உரியவனை இப்படித்தான் வரவேற்பதா? நீ எங்கே போயிருந்தாய்? விவரமாகச் சொல்!” என்று கூறிக் கொண்டே பிருதிவீபதி அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் மேல் அமர்ந்தான். “நம்மைக் காலந்தான் பிரித்து வைத்திருந்ததே தவிர, நம் உள்ளம் என்றோ ஒன்றுபட்டு விட்டது. அதில் என்றும் மாறுதல் இல்லை. ஆனால், நாம் இருவரும், திசை மாறி, வெவ்வேறு பாதைகளில் போகிறோம். என் உள்ளம் உலக வாழ்வைப் பொறுத்தவரையில் விரக்தியடைந்து விட்டது. இனி, அதில் காதலுக்கும், உடல் இன்பத்துக்கும் சிறிதும் இடமில்லை...!” “மாலவல்லி! நீ இப்பொழுது இருக்கும் மன நிலையில் அப்படித்தான் பேசுவாய், பாவம்! உன்னை விதி மிகவும் சோதித்து விட்டது. ஆனால் என் உள்ளத்தை நீ அறியவில்லை. என் தகப்பனார் இறந்து விட்டார். மக்கள் மன்றத்தில் உன்னை மணந்து கொள்ள பூரண அநுமதி பெற்று விட்டேன். இனி உன் அநுமதிதான் தேவை. வீணாகத் தாமதம் செய்யாதே. யார் எந்தச் சாம்ராஜ்யத்தை நிறுவினால் என்ன? எந்த ராஜா எந்தப் பட்டணத்தை ஆண்டால் என்ன? இதிலெல்லாம் எனக்குத் துளிக்கூடச் சிரத்தை கிடையாது. மாலவல்லி! நான் உண்மையில் கூறுகிறேன், என் உடல், பொருள், ஆவி யாவும் நீ தான். அரச போகமும், அரச வாழ்வும், அரசுரிமையும் எல்லாம் உனக்குப் பிறகு தான். நீ அடைந்த துன்பங்களெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நீ ஒரு தவறு செய்து விட்டாய். அந்த புத்த பிக்ஷு ரவிதாஸன் சம்பாதிவனத்து புத்தவிஹாரத்தில் கொலை செய்யப்பட்ட சமயத்தில் நீ தப்பி ஓடி விட்டாய். காகம் உட்காருவதற்கும் பனம்பழம் விழுவதற்கும் சரியாய்ப் போனது போல், அந்தக் கொலைக்கும் உன் மறைவுக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு நீ குற்றவாளியாகக் கருதப்பட்டிருக்கிறாய். அந்தக் கொலையைச் செய்தவர் யார் என்று விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். நீ குற்றமற்றவள் என்று நிரூபிக்கப்படுவதற்காக நான் எத்தகைய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா? நீ துக்க மிகுதியினால் மனம் குழம்பியிருக்கிறாய்...” என்று பிருதிவீபதி மிகவும் உணர்ச்சியோடு கூறினான். “...இல்லை, இல்லை. நீங்கள் என் மனநிலையை அறிய மாட்டீர்கள். எந்தக் குற்றம் என் மீது சுமத்தப்பட்டாலும் சரி, அல்லது நான் குற்றவாளியல்ல என்று நிரூபிக்கப்பட்டாலும் சரி, இனி மேல் என் மனம் உலக வாழ்வின் இன்பத்தை நாடாது. அரச வாழ்வுக்கு ஏற்றவளல்ல நான். போதி சத்துவரின் அருள் வேறு விதமாயிருக்கிறது. என் உள்ளம் அறிய நான் குற்றவாளியல்ல; புத்த பகவான் பாதசாட்சியாக நான் குற்றவாளியல்ல. இனி உலகோர் அறிய, நான் குற்றவாளியல்ல என்று யாருக்கும் நிரூபணம் செய்ய வேண்டியது அவசியம் இல்லை. என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது. சோழப் பேரரசு உருவாக வேண்டும். அதை நான் கண்ணாரக் கண்ட பின்பு இந்த உடலை விட்டு உயிர் போய்விட்டாலும் பாதகம் இல்லை.” “மாலவல்லி! சோழ அரசு உருவாகும் வரையில் நாம் மணம் செய்து கொள்ள வேண்டாம். நானும் சோழ அரசு உருவாவதற்கு வேண்டிய முயற்சியில் என்னை அர்ப்பணித்துக் கொள்ளுகிறேன். பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மனின் நட்பும் உறவும் எனக்கு இருக்கின்றன என்று நினைத்து நீ என்னை அலட்சியம் செய்யாதே. உனக்காக, உன் அன்புக்காக யாருடைய பகையையும் நான் அறைகூவி ஏற்கச் சித்தமா யிருக்கிறேன். மாலவல்லி, என் இதயம் உனக்காகத் துடிக்கிறது... நீ உன் இதய ஒலியைக் கவனித்துக் கேள். அதுவும் எனக்குச் சாதகமாகத்தான் ஒலிக்கும்.” உடனே மாலவல்லி பிருதிவீபதியின் காலடியில் விழுந்து வணங்கி அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். “நீங்கள் தயவு செய்து... என்னை மறந்து விடுங்கள்... உங்கள் அன்புக்காக அந்தப் பேதைப் பெண் சுகேசி காத்திருக்கிறாள். அவளுக்கு ஏமாற்றத்தை அளித்து விடாதீர்கள்.” மாலவல்லி கூறியதைக் கேட்டுப் பிருதிவீபதி திடுக்கிட்டான். “நேரமாகிறது. நான் ஆசிரமத்துக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு மாலவல்லி இடுப்பில் குடத்துடன் ஒற்றையடிப் பாதையின் வழியே நடக்கலானாள். |