![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு பதினைந்தாம் அத்தியாயம் - குலச்சிறையார் சென்ற அத்தியாயத்தில் கூறியபடி மாமல்ல சக்கரவர்த்தி படையுடன் புறப்பட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆயின. காஞ்சி மாநகரத்தின் வீதிகள் வழக்கமான கலகலப்பு இல்லாமல் வெறிச்சென்று கிடந்தன. பட்டணமே தூங்கி வழிந்து கொண்டிருந்தது. வழக்கத்துக்கு மாறான அந்தப் பகல் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு காஞ்சி நகர் வீதிகளில் ஒரு ரதம் கடகடவென்ற சப்தத்துடன் அதிவேகமாகப் பிரயாணம் செய்து திருநாவுக்கரசர் மடத்தின் வாசலில் வந்து நின்றது. ரதத்தை ஓட்டி வந்தவன் வேறு யாருமில்லை, நம் பழைய நண்பன் கண்ணபிரான்தான். ரதத்திலிருந்து நாம் இதுவரையில் பார்த்திராத புது மனிதர் ஒருவர் - இளம் பிராயத்தினர் - இறங்கினார். சிறந்த பண்பாடு, முதிர்ந்த அறிவு, உயர் குடிப்பிறப்பு ஆகியவற்றினால் ஏற்பட்ட களை அவர் முகத்தில் ததும்பியது. கீழே இறங்கியவரைப் பார்த்துக் கண்ணபிரான், "ஆம், ஐயா! இதுதான் திருநாவுக்கரசரின் திருமடம். அதோ இருக்கும் பல்லக்கு புவனமகாதேவிக்கு உரியது. சக்கரவர்த்தியின் அன்னையார் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருக்கிறார் போல் தோன்றுகிறது" என்றான். "யார் வந்திருந்தபோதிலும் சரி; தாமதிக்க நமக்கு நேரமில்லை" என்று சொல்லிக் கொண்டு அந்தப் புது மனிதர் மடத்துக்குள்ளே நுழைந்தார். உள்ளே உண்மையாகவே புவனமகாதேவியார் தமது வளர்ப்புப் பெண்ணாக ஏற்றுக் கொண்ட மங்கையர்க்கரசியுடன் வாகீசப் பெருந்தகையைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். சுவாமிகள் வடநாட்டில் தாம் தரிசனம் செய்து வந்த ஸ்தலங்களின் விசேஷங்களைப் பற்றிப் புவனமகாதேவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாம் சொல்லி விட்டுக் கடைசியில் தாம் மீண்டும் தென்னாட்டு யாத்திரை கிளம்பப் போவது பற்றியும் நாவுக்கரசர் தெரிவித்தார். "ஆம், தாயே! வடநாட்டில் எத்தனையோ ஸ்தலங்களைத் தரிசனம் செய்தேன். கயிலையங்கிரி வரையில் சென்றிருந்தேன். எனினும், நமது தென்னாட்டிலே உள்ள க்ஷேத்திரங்களின் மகிமை தனியானது தான். நமது ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கு இணையான ஆலயம் வேறு எங்கும் இல்லை. நமது திருத்தில்லை, திருவையாறு, திருவானைக்கா முதலிய க்ஷேத்திரங்களுக்கு இணையான க்ஷேத்திரமும் வேறு எங்கும் கிடையாது. மறுபடியும் தென்னாடு சென்று அந்த ஸ்தலங்களையெல்லாம் மீண்டும் தரிசித்து விட்டு வர எண்ணியிருக்கிறேன், நாளைக்குப் புறப்படப் போகிறேன்!" இப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, மடத்தின் வாசலில் ரதத்திலிருந்து இறங்கிய இளைஞர் உள்ளே வந்தார். பயபக்தியுடன் சுவாமிக்கும் புவனமகாதேவிக்கும் வணக்கம் செலுத்தினார். "நீ யார் அப்பனே? எங்கு வந்தாய்?" என்று நாவுக்கரசர் கேட்ட குரலில் சிறிது அதிருப்தி தொனித்தது. அந்தக் குறிப்பைத் தெரிந்து கொண்ட இளைஞர் கைகூப்பி நின்றவண்ணம், "சுவாமி! மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தியின் அன்னையார் இவ்விடம் விஜயம் செய்திருப்பது தெரிந்தும் முக்கிய காரியத்தை முன்னிட்டுப் பிரவேசித்தேன். அடியேன் வராக நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே நெடுமாற பாண்டியர் கடுமையான தாபஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியர்களின் ஔஷதங்களினால் மட்டும் அவரைக் குணப்படுத்த முடியாதென்று கருதித் தங்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொண்டு போக வந்தேன். மன்னிக்க வேண்டும்" என்று திருநாவுக்கரசரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புவனமகாதேவியின் பக்கம் திரும்பி, "தேவி! தாங்களும் க்ஷமிக்க வேண்டும்!" என்றார். அப்போது தேவி, "அப்பனே! நீ ரொம்ப விநயமுள்ளவனாயிருக்கிறாய். ஆனால், சுவாமிகள் முதலில் கேட்ட கேள்விக்கு நீ மறுமொழி சொல்லவில்லையே? நீ யார்?" என்று கேட்க, "பதற்றத்தினால் மறந்து விட்டேன், தேவி! பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவன். என் பெயர் குலச்சிறை. படையுடன் கிளம்பிய பாண்டிய குமாரருக்கு ஓலை எழுதவும், படிக்கவும் உதவியாயிருக்குமாறு என்னை நியமித்து மதுரை மன்னர் அனுப்பி வைத்தார்!" என்றான் அந்த இளைஞன். "நோய்ப்பட்ட பாண்டிய குமாரரை வராக நதிக்கரையில் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று தேவி மீண்டும் கேட்டார். "ரொம்பக் கடுமையான ஜுரம், தேவி! இந்த நிலையில் அவர் பிரயாணம் செய்யக் கூடாது என்பது வைத்தியரின் அபிப்பிராயம். கொஞ்சம் குணப்பட்டதும் இவ்விடத்துக்கு அழைத்து வந்து விடுகிறோம். அரண்மனைக்கு வந்து செய்தி சொல்லி விட்டு போக எண்ணினேன். நல்ல வேளையாக இங்கேயே தங்களைச் சந்தித்தேன்." "அப்படியில்லை, அப்பா! என்னிடம் சொன்னால் மட்டும் போதாது. அரண்மனைக்கு வந்து வானமாதேவியிடமும் நேரில் சொல்லிவிட்டுத் திரும்பிப் போ! பாவம்! அவள் மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்" என்று புவனமகாதேவி சொல்லிக் கொண்டே எழுந்து, "சுவாமி! போய் வருகிறேன் விடை கொடுங்கள்!" என்றார். புவனமகாதேவியுடன் மங்கையர்க்கரசி எழுந்து சென்றாள். குலச்சிறை உள்ளே வந்தது முதல் அவனுடைய முகத்தை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது வெளியேறு முன்னர் கடைசி முறையாக ஒரு தடவை பார்த்தாள். அப்போது குலச்சிறையும் அவளைப் பார்க்க நேர்ந்தது. இருவருடைய முகங்களிலும் கண்களிலும் ஏதோ பழைய ஞாபகத்தின் அறிகுறி தோன்றலாயிற்று. பெண்ணரசிகள் இருவரும் போன பிறகு திருநாவுக்கரசர், "அப்பனே! எல்லாம் எனை ஆளும் எம்பெருமான் செயல்! அடியேனால் நடக்கக் கூடியது என்ன இருக்கிறது? என்றாலும் சிரித்துப் புரமெரித்த இறைவன் பெயரை உச்சரித்து இந்தத் திருநீற்றைக் கொடுக்கிறேன், எடுத்துக் கொண்டு போய் இடுங்கள். அடியேனுக்கு நேர்ந்திருந்த கொடிய சூலை நோயை ஒரு கணத்தில் மாயமாய் மறையச் செய்த வைத்தியநாதப் பெருமான், இளம் பாண்டியரின் நோயையும் குணப்படுத்தட்டும்" என்றார். நாவுக்கரசர் அளித்த விபூதியைப் பயபக்தியுடன் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்ட குலச்சிறையார், மீண்டும், "சுவாமி! அடியேனுக்கு இன்னொரு வரம் அருளவேண்டும்" என்று பணிவுடன் கேட்டார். "கேள், தம்பி! உன்னுடைய பக்தி விநயம் என் மனத்தை ரொம்பவும் கவர்கிறது!" என்றார் வாகீசர். "தென் பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. ஸ்வாமிகள் தங்கள் சிஷ்ய கோடிகளுடன் பாண்டிய நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டும். விஜயம் செய்து, மக்களைச் சமணர் வலையில் விழாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்! தமிழகத்தில் புராதன பாண்டிய வம்சத்தையும் சமணப் படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும்! ஆஹா! நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி!" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தப் பெருந்தகையார் குலச்சிறையைக் கையமர்த்தி நிறுத்திக் கூறினார்: "தம்பி! சமண மதத்தின் மீது ஒரு காலத்தில் நானும் இப்படிக் கோபம் கொண்டிருந்தேன். ஆனால், இந்தக் காலத்திலே ஒருசிலர் செய்யும் காரியங்களுக்காகச் சமண சமயத்தின் மேல் துவேஷம் கொள்ளுதல் நியாயமன்று. அன்பையும் ஜீவகாருண்யத்தையும் போதிப்பதற்கு ஏற்பட்ட சமயம் சமண சமயம். நமது செந்தமிழ் நாடு ஆதி காலத்துச் சமண முனிவர்களால் எவ்வளவோ நன்மைகளை அடைந்திருக்கிறது. சமண முனிவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள். அரிய காவியங்களைத் தமிழில் புனைந்தார்கள். ஓவியக் கலையை நாடெங்கும் பரப்பினார்கள்." குலச்சிறை பொறுமை இழந்தவராய், "போதும், சுவாமி! போதும்! தங்களிடம் சமணர்களைப்பற்றிய புகழுரைகளைக் கேட்பேனென்று நான் எதிர்பார்க்கவில்லை. தொண்டை மண்டலத்தைச் சமணர்களிடமிருந்து காப்பாற்றிய தாங்கள் பாண்டிய நாட்டையும் காப்பாற்றியருள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்தேன். அவர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தாங்கள் பாண்டிய நாட்டிற்கு வந்து பாருங்கள்!" என்று பேசினார். நாவுக்கரசர் சற்று நேரம் கண்களை மூடியவண்ணம் ஆலோசனையில் இருந்தார். பிறகு கண்களைத் திறந்து குலச்சிறையைப் பார்த்துக் கூறினார்: "மந்திர தந்திரங்களில் வல்லவர்களான சமணர்களுடன் போராடுவதற்குச் சக்தியோ விருப்பமோ தற்போது என்னிடம் இல்லை. ஆனால் கேள், தம்பி! என்னுடைய அகக்காட்சியில் ஓர் அற்புதத்தை அடிக்கடி கண்டு வருகிறேன். பால் மணம் மாறாத பாலர் ஒருவர் இந்தத் திருநாட்டில் தோன்றி அமிழ்தினும் இனிய தீந்தமிழில் பண்ணமைந்த பாடல்களைப் பொழியப் போகிறார். அவர் மூலமாகப் பல அற்புதங்கள் நிகழப் போகின்றன. பட்ட மரங்கள் தளிர்க்கப் போகின்றன. செம்பு பொன்னாகப் போகின்றது, பாஷாண்டிகள் பக்தர்களாகப் போகிறார்கள். அந்த இளம்பிள்ளையின் மூலமாகவே தென்பாண்டி நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் நீங்கும்; சைவம் தழைக்கும்; சிவனடியார்கள் பல்கிப் பெருகுவார்கள்." இவ்விதம் திருநாவுக்கரசர் பெருமான் கூறி வந்தபோது குலச்சிறையார் மெய் மறந்து புளகாங்கிதம் அடைந்து நின்றார். காஞ்சி பல்லவ சக்கரவர்த்தியின் அரண்மனை மிகமிக விஸ்தாரமானது. அது மூன்று பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மூன்று பகுதிகளின் வெளிவாசலும் அரண்மனையின் முன்புறத்து நிலா முற்றத்தில் வந்து சேர்ந்தன. மூன்று பகுதிகளுக்கும் பின்னால் விசாலமான அரண்மனைப் பூங்காவனம் இருந்தது. மூன்றுக்கும் நடுநாயகமான பகுதியில் மாமல்ல சக்கரவர்த்தி தம் பட்ட மகிஷி வானமாதேவியுடன் வசித்து வந்தார். வலப்புறத்து மாளிகையில் புவனமகாதேவியும் மகேந்திர பல்லவருடைய மற்ற இரு பத்தினிகளும் வசித்தார்கள். இடப்புறத்து மாளிகை, அரண்மனைக்கு வரும் முக்கிய விருந்தாளிகளுக்காக ஏற்பட்டது. அந்த மாளிகையில் தற்சமயம் இலங்கை இளவரசர் தமது மனைவியுடன் வசித்து வந்தார். ஒவ்வொரு மாளிகையை ஒட்டியும் அரண்மனைக் காரியஸ்தர்கள், காவலர்கள் முதலியோர் வசிப்பதற்குத் தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று மாளிகைகளையும் ஒன்றோடொன்று இணைக்க மச்சுப் பாதைகளும் தரைப்பாதைகளும் சுரங்கப் பாதைகளும் இருந்தன. சோழன் செம்பியன் மகளைப் புவனமகாதேவி தம் புதல்வியாகக் கருதிப் பாதுகாத்து வருவதாக வாக்களித்திருந்தார் என்று சொன்னோமல்லவா? அந்த வாக்கை அவர் பரிபூரணமாக நிறைவேற்றி வந்தார். அரண்மனையில் இருந்தாலும், வெளியே கோயில்கள் அல்லது மடங்களுக்குச் சென்றாலும், மங்கையர்க்கரசியைச் சதா சர்வ காலமும் அவர் தம் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தார். சரித்திரப் பிரசித்தி பெற்ற மகேந்திர பல்லவரைப் போலவே அவருடைய பட்டமகிஷி புவனமகாதேவியும் சிவபக்தியிற் சிறந்தவர். சக்கரவர்த்தி சிவபதம் அடைந்த பிறகு அவர் தமது காலத்தைப் பெரும்பாலும் சிவபூஜையிலும் சிவபுராணங்களின் படனத்திலும் கழித்துவந்தார். அவருடைய அரண்மனையின் ஓர் அறையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் ஆகம விதிகளின்படி அவர் பூஜை செய்வதுண்டு. இந்தச் சிவபூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் உரிமையை மங்கையர்க்கரசி வருந்திக்கோரிப் பெற்றிருந்தாள். மேற்படி பணிவிடைகளை மிக்க பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றி வந்தாள். முன் பின் அறியாதவர்கள் அடங்கிய அந்தப் பிரம்மாண்டமான அரண்மனையில் மங்கையர்க்கரசி பொழுது போக்குவதற்கு அத்தகைய பூஜா கைங்கரியங்கள் சிறந்த சாதனமாயிருந்தன. மாமல்லர் படையுடன் கிளம்பிச் சென்று மூன்று தினங்கள் வரையில்தான் அவ்விதம் எல்லாம் ஒழுங்காக நடந்தன. நாலாவது நாள் புவனமகாதேவியும் மங்கையர்க்கரசியும் திருநாவுக்கரசரைத் தரிசித்துவிட்டு வந்தார்கள் அல்லவா? அன்று முதல் மங்கையர்க்கரசியின் கவனம் சிறிது சிதறிப் போய்விட்டது. தேவியார் சிவபூஜை செய்ய அமர்ந்த பிறகு, புஷ்பம் வேண்டிய போது தூபத்தையும், தூபம் கேட்டால் பிரசாதத்தையும் மங்கையர்க்கரசி எடுத்துக் கொடுக்கலானாள். இதையெல்லாம் கவனித்த புவனமகாதேவி பூஜை முடிந்த பிறகு, "குழந்தாய்! இன்றைக்கு என்ன ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்திருக்கிறாய்? தகப்பனாரை நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாயா? என்னைப் பார்த்துக் கொள், குழந்தாய்! என்னுடைய ஏக புதல்வனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவில்லையா?" என்று தைரியம் கூறினார். அப்போது மங்கையர்க்கரசி சிறிது நாணத்துடன், "இல்லை அம்மா! அப்படியெல்லாம் கவலை ஒன்றுமில்லை!" என்றாள். "பின் ஏன் உன் முகத்தில் சிந்தனைக்கு அறிகுறி காணப்படுகிறது? இந்த அரண்மனையில் வசிப்பதில் ஏதாவது உனக்குத் தொந்தரவு இருக்கிறதா?" என்றார் மகேந்திரரின் மகிஷி. "தொந்தரவா? இவ்வளவு சௌக்கியமாக நான் என் தந்தையின் வீட்டிலே ஒரு நாளும் இருந்ததில்லை. என் மனத்திலும் சஞ்சலம் ஒன்றுமில்லை. நாவுக்கரசர் பெருமானோடு தாங்கள் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில், வாலிபர் ஒருவர் வந்தாரல்லவா? அவரை எங்கேயோ ஒரு முறை பார்த்த ஞாபகமிருந்தது. அதையொட்டிச் சில பழைய ஞாபகங்கள் வந்தன, வேறொன்றுமில்லை அம்மா" என்று மங்கையர்க்கரசி கூறினாள். |