கைகேயி சூழ்ச்சிப் படலம் - Kaikaeyee Soolchip Padalam - அயோத்தியா காண்டம் - Ayothya Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



அயோத்தியா காண்டம்

3. கைகேயி சூழ்ச்சிப் படலம்

கூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல்

கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்;
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,
தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள். 1

விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள். 2

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
'கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்' என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4

கைகேயின் மாளிகைக்கு தயரதன் வருதல்

நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,
'வாழிய' என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -
ஆழி நெடுங் கை மடங்கல் ஆளி அன்னான். 5

தயரதன் கைகேயியை நெருங்குதல்

வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு,
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி,
பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்,
ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். 6

தயரதன் கைகேயியை எடுத்தலும் அவள் மன்னன் கையை தள்ளி மண்ணில் வீழ்தலும்

அடைந்து, அவண் நோக்கி, 'அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்து?' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும் ஆனையே போல்,
தடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். 7

நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,
மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;
ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்-
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள். 8

கைகேயின் நிலைகண்ட தயரதன் நிகழ்ந்தது கூற வேண்டுதல்

அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி,
"என்னை நிகழ்ந்தது? இஞ்ஞாலம் ஏழில் வாழ்வார்,
உன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்றது எல்லாம்
சொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு" என்றான். 9

கைகேயி தயரதனிடம் தன் வரத்தை வேண்டுதல்

வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,
'உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்தி' என்றாள். 10

தயரதன் வரத்தை தர வாக்குறுதி அளித்தல்

கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;
'உள்ளம் உவந்தது செய்வன்; ஒன்றும் உலோபேன்;
வள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை' என்றான். 11

கைகேயி முன்னர் கொடுத்த வரங்களை தருமாறு வேண்டல்

ஆன்றவன் அவ்வுரை கூற, அன்னம் அன்னாள்,
'தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர் குலம் ஆக, மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி' என்றாள். 12

விரும்பியதை கேட்க தயரதன் கூறுதல்

'வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்
பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு' என்றான் -
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான். 13

கைகேயின் இருவரங்கள்

'ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது' எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள். 14

தயரதனின் துயரம்

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15

பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். 16

உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது; 'தக்கது என்கொல்?' என்று என்று
அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். 17

மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். 18

பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும்; வன் கைவேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான். 19

தேவரின் நடுக்கமும், கைகேயின் கலங்கா உள்ளமும்

கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று,
உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். 20

அஞ்சலள்; ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; 'நாண் இலள்' என்ன, நாணம் ஆமால்;
'வஞ்சனை பண்டு மடந்தை வேடம்' என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். 21

கைகேயின் மனமாற்றத்திற்கான காரணத்தை தயரதன் வினவுதல்

இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,
நெய்ந் நிலை வேலவன், 'நீ திசைத்தது உண்டோ ?
பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ ?
உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!' என்றான். 22

கைகேயின் தீஞ்சொற்கள்

'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,
வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23

கைகேயின் கடுமொழி கேட்ட தயரதனின் பெருந்துயரம்

இந்த நெடுஞ்சொல் அவ் ஏழை கூறு முன்னே,
வெந்த கொடும்புணில் வேல் நுழைந்தது ஒப்பச்
சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். 24

'ஆ கொடியாய்!' எனும்; ஆவி காலும்; 'அந்தோ!
ஓ கொடிதே அறம்!' என்னும்; 'உண்மை ஒன்றும்
சாக!' எனா எழும்; மெய் தளாடி வீழும்-
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். 25

'"நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்" என்னக்
கூரிய வாள்கொடு கொன்று, நீக்கி, யானும்
பூரியர் எண்ணிடை வீழ்வன்; என்று, பொங்கும்
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 26

கையொடு கைகள் புடைக்கும்; வாய் கடிக்கும்;
'மெய்யுரை குற்றம்' எனப் புழுங்கி விம்மும்;
நெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்;
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். 27

இரந்தாவது கைகேயின் மனத்தை மாற்ற தயரதன் எண்ணி எழுதல்

'ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம்' என்று, வாய்மை மன்னன்,
'பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது' என்று எழுந்தான். 28

தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்

'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,
கால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29

'கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்
நள்ளாது இந்த நானிலம்; ஞாலம் தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன்?' என்றான். 30

'வானோர் கொள்ளார்; மன்னவ உய்யார்; இனி, மற்று என்
ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய்?
யானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை' என்றான். 31

'"கண்ணே வேண்டும்" என்னினும், ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!- பெறுவாயேல்,
மண்ணே! கொள் நீ; மற்றையது ஒன்றும் மற' என்றான். 32

'வாய் தந்தேன் என்றேன்; இனி, யானோ அது மாற்றேன்;
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?' 33

தயரதனின் வேண்டுகோளை கைகேயி மறுத்தல்

இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்;
தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,
முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முனிவாயேல்,
என்னே? மன்னா! யாருளர் வாய்மைக்கு இனி? என்றாள். 34

கைகேயின் உரைகேட்ட தயரதன் மூர்ச்சித்து பின் தெளிந்து பேசுதல்

அச் சொல் கேளா, ஆவி புழுங்கா, அயர்கின்றான்,
பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன், பொறை கூர,
'நச்சுத் தீயே பெண் உரு அன்றோ?' என, நாணா,
மூச்சு அற்றார்போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்; 35

'நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்
நன் மகன், இந்த நாடு இறவாமை நய' என்றான். 36

'மெய்யே என் தன் வேர் அற நூறும் வினை நோக்கி
நையா நின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல்
கையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல்,
உய்யேன்; நங்காய்! உன் அபயம் என் உயிர்' என்றான். 37

தந்த வரத்தை தவிர்க்க கூறுதல் அறமா என கைகேயி கூறுதல்

இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள், முனிவு எஞ்சாள்,
மரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள், வகை பாராள்,
'சரம் தாழ் வில்லாய்! தந்த வரத்தைத் "தவிர்க" என்றல்
உரந்தான் அல்லால், நல்லறம் ஆமோ? உரை' என்றாள். 38

சோகத்தால் தயரதன் மண்ணில் விழுந்து புலம்புதல்

கொடியாள் இன்ன கூறினள்; கூறக் குலவேந்தன்,
'முடிசூடாமல் காத்தலும், மொய்கான் இடை, மெய்யே
நெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி' என்னா,
இடியேறு உண்ட மால் வரை போல், மண்ணிடை வீழ்ந்தான். 39

வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்;
சூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். 40

தயரதன் கைகேயியை பழித்துக் கூறுதல்

"'ஒன்றா நின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர்" என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைக்
கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? - கொடியோளே! 41

'ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்; அறம் எண்னாய்;
"ஆ" என் பாயோ அல்லை; மனத்தால் அருள் கொன்றாய்;
நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்; இனி, ஞாலம்
பாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்! 42

'ஏண்பால் ஓவா நாண், மடம், அச்சம் இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்; புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர் தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா? 43

'மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து
எண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும்,
விண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும்
பெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ?' 44

என்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; 'உயிர் உண்டோ ?
இன்று! இன்று!' என்னும் வண்ணம் மயங்கும்; இடையும்-பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். 45

கைகேயி தயரதனிடம் 'உரை மறுத்தால் உயிர் விடுவேன்' எனக் கூறுதல்

ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,
"ஊழின் பெற்றாய்" என்று உரை; இன்றேல், உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!' என்றாள், பசை அற்றாள். 46

'அரிந்தான், முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி,
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை வளர்ப்பான்! வரம் நல்கி,
பரிந்தால், என் ஆம்?' என்றனள் - பாயும் கனலேபோல்,
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள். 47

தயரதன் கைகேயிக்கு வரம் அளித்தல்

'வீய்ந்தாளே இவ் வெய்யவள்' என்னா, மிடல் வேந்தன்
'ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்; என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீந்தாய், நின் மகனோடும் நெடிது!' என்றான். 48

வரம்தந்த தயரதன் துயருற, கைகேயி உறங்குதல்

கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்கத்
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி
ஊறா நின்ற சிந்தையினாளும் துயில்வுற்றாள். 49

கொடிய இரவு கழிதல்

சேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து, பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த, ஒன்றும் இரங்கிலா
வாள் நிலாநகை மாதராள் செயல் கண்டு, மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே. 50

கோழி கூவுதல்

எண் தரும் கடை சென்ற யாமம் இயம்பு கின்றன ஏழையால் வண்டு தங்கிய தொங்கள் மார்பன் மயங்கி விம்மிய வாறெல்லாம்
கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன காமர் துணைக்கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே. 51

பல் வகைப் பறவைகளின் ஒலிகள்

தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ-
கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஒர் கேடு சூழ்
மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. 52

யானைகள் துயில் நீங்கி எழுதல்

சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின்,
'வாமம் மேகலை மங்கையோடு வனத்துள், யாரும் மறக்கிலா
நாமம் நம்பி, நடக்கும்' என்று நடுங்குகின்ற மனத்தவாய்
'யாமும் இம்மண் இறத்தும்' என்பன போல் எழுந்தன - யானையே. 53

வானத்து நட்சத்திரங்கள் மறைதல்

சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை, திருமாலை, அக்
கரிக் கரம் பொரு கைத் தலத்து, உயர் காப்பு நாண் அணிதற்கு முன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி, இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என, மீன் ஒளித்தது - வானமே. 54

காலையில் மணமுரசு ஒலிக்க மகளிர் எழுதல்

'நாமம் வில் கை இராமனைத் தொழு நாள் அடைந்த உமக்கெலாம்
காமன் விற்குடை கங்குல் மாலை கழிந்தது' என்பது கற்பியா,
தாம் ஒலித்தன பேரி; அவ்வொலி சாரல் மாரி தழங்கலால்,
மாமயிற்குலம் என்ன, முன்னம் மலர்ந்தெழுந்தனர், மாதரே. 55

மந்தமாருதம் வீசுதல்

இன மலர்க்குலம் வாய் விரித்து, இள வாச மாருதம் வீச, முன்
புனை துகிற்கலை சோர, நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப் புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார் சில கன்னிமார். 56

குமுதமலர்கள் குவிதல்

சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடும் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு, சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே. 57

பண்கனிந்து எழும் பாடல்

மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும், வான் நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி,
பை அரா நுழைகின்ற போன்றன - பண் கனிந்து எழு பாடலே. 58

ஆடவர் பள்ளி எழுதல்

'ஆழி யான்முடி சூடு நாளிடை ஆன பாவி இது ஓர் இரா
'ஊழி யாயின ஆறு' எனா உயர் போதின் மேல் உறை பேதையும்,
ஏழு லோகமும், எண் தவம் செய்த கண்ணும், எங்கள் மனங்களும்,
வாழு நாள் இது' என எழுந்தனர் - மஞ்சு தோய்புய மஞ்சரே. 59

மகளிர் பள்ளி எழுதல்

ஐயுறுஞ் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்,
கொய்யு றும் குல மா மலர்க் குவை நின்று எழுந்தனர் - கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து, நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு பொம்மென விம்மவே. 60

ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்

ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி, அனந்தரால்
ஏடுஅ கம்பொதி தார் பொருந்திட, யாமம் பேரி இசைத்தலால்,
சேட கம்புனை கோதை மங்கையர் சிந்தையிற் செறி திண்மையால்,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே. 61

பல் வகை ஒலிகள்

தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன; தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன; முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன; யாழ் ஒலித்தன; - எங்கணும் -
மழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. 62

தீபங்கள் ஒலி மழுங்குதல்

வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அம்
மெய்யன் வீரருள் வீரன், மாமகன் மேல் விளைந்தது ஓர்காதலால்
நைய நைய, நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின - தீபமே. 63

பல் வகை பாடற் கருவிகளின் இசையொலி

வங்கியம் பல தேன் விளம்பின; வாணி முந்தின பாணியின்;
பங்கி அம்பரம் எங்கும் விம்மின; பம்பை பம்பின; பல்வகைப்
பொங்கு இயம்பலவும் கறங்கின; நூபுரங்கள் புலம்ப, வெண்
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின, சாம கீதம் நிரந்தவே. 64

சூரியோதயம்

தூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே. 65

தாமரை மலர்கள் மலர்தல்

மூவர் ஆய், முதல் ஆகி, மூலம் அது ஆகி, ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடித்த சேவகர், சேண்நிலம்
காவல் மாமுடி சூடு பேர் எழில் காண லாமெனும் ஆசைகூர்
பாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே. 66

முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் அயோத்தி நகர மக்களின் நிலை

இன்ன வேலையின், ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து,
அன்ன மா நகர், 'மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம்' எனா,
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்றபெற்றி உணர்த்துவாம். 67

முடிசூட்டு விழாவிற்கு மங்கையர் அலங்கரித்துக் கொள்ளல்

குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்,
பஞ்சினை அணிவார்; பால் வளை தெரிவார்;
அஞ்சனம் என, வாள் அம்புகள் இடையே,
நஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார். 68

நகரத்து குமாரர்களின் மகிழ்ச்சி

பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர, கமலம் பூத்த
சங்கை இல் முகத்தார், - நம்பி தம்பியர் அனையர் ஆனார் -
செங் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவக்கும் கண்ணார்
குங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம். 69

நகரத்தவர் அனைவரின் மன நிலை

மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். 70

முடிசூட்டு விழாவிற்கு அரசர்கள் வருதல்

இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர,
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட, வந்தது அன்றே-
குமிழ் முலைச் சீதை கொண்கண் கோமுடி புனைதல் காண்பான்,
அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின், அரச வெள்ளம். 71

வீதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருத்தல்

பாகு இயல் பவளச் செவ் வாய், பணை முலை, பரவை அல்குல்,
தோகையர் குழாமும், மைந்தர் சும்மையும் துவன்றி, எங்கும்,
'ஏகுமின், ஏகும்' என்று என்று, இடை இடை நிற்றல் அல்லால்,
போகில; மீளகில்லா - பொன் நகர் வீதி எல்லாம். 72

பெருந்திரளான மக்கள்

'வேந்தரே பெரிது' என்பாரும், 'வேதியர் பெரிது' என்பாரும்,
'மாந்தரே பெரிது' என்பாரும், 'மகளிரே பெரிது' என்பாரும்,
'போந்ததே பெரிது' என்பாரும், 'புகுவதே பெரிது' என்பாரும்,
தேர்ந்ததே தேரின் அல்லால், யாவரே தெரியக் கண்டார்? 73

மகளிர் கூட்டம்

குவளையின் எழிலும், வேலின் கொடுமையும், குழைத்துக் கூட்டி,
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி,
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடங் கண் நல்லார்,
துவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். 74

முடி சூட்டு விழாவிற்கு வராதவர்

நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் -
இலங்கையின் நிருதரே; இவ் ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். 75

மன்னர்கள் திருமுடி சூட்டும் மண்டபம் புகுதல்

சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க,
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தெனக் கவரி துன்ன,
இந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம்
வந்தனர்; மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார். 76

அந்தணர்கள் வருகை

முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை முறையினோடும்
இற் பயன் சிறப்பிப்பாரின், ஈண்டிய உவகை தூண்ட,
அற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார் -
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். 77

பல் வகை நிகழ்ச்சிகள்

விண்ணவர் விசும்பு தூர்த்தார்; விரிதிரை உடுத்த கோல
மண்ணவர் திசைகள் தூர்த்தார்; மங்கலம் இசைக்கும் சங்கம்
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த;
எண் அருங் கனக மாரி எழுதிரைக் கடலுந் தூர்த்த. 78

ஒளிவெள்ளம்

விளக்கு ஒளி மறைத்த, மன்னர் மின் ஒளி; மகுட கோடி
துளக்கு ஒளி, விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த; சூழ்ந்த
அளக்கர் வாய் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி,
'வளைக்கலாம்' என்று, அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே. 79

வசிட்ட முனிவன் வேதியரோடு வருதல்

ஆயது ஓர் அமைதியின்கண், ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும்மங் கலங்களான யாவையும் இயையக் கொண்டு,
தூயநான் மறைகள் வேத பாரகர் சொல்லத் தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க, மாதவக் கிழவன் வந்தான். 80

வசிட்ட முனிவனின் செயல்

கங்கையே முதலவாகக் கன்னி ஈறான தீர்த்தம்
மங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும், பூரித்து
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து, வீரச்
சிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான். 81

வசிட்டனின் கட்டளைப்படி தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்

கணித நூல் உணர்ந்த மாந்தர், 'காலம் வந்து அடுத்தது' என்ன,
பிணி அற நோற்று நின்ற பெரியவன், 'விரைவின் ஏகி
மணி முடி வேந்தன் தன்னை வல்லையின் கொணர்தி' என்ன,
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான். 82

கைகேயி சுமந்திரனிடம் இராமனை அழைத்து வருமாறு கூறுதல்

விண் தொட நிவந்த கோயில், வேந்தர் தம் வேந்தன் தன்னைக்
கண்டிலன்; வினவக் கேட்டான்; கைகயள் கோயில் நண்ணி,
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல, மற்று அவரும் சொல்ல,
பெண்டிரில் கூற்றம் அன்னாள், 'பிள்ளையைக் கொணர்க' என்றாள். 83

கைகேயி கட்டளைப்படி சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்

'என்றனள்' என்னக் கேட்டான்; எழுந்தபேர் உவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்,
தன் திரு உள்ளத் துள்ளே தன்னையே நினையும் மற்று அக்
குன்று இவர் தோளினானைத் தொழுது, வாய் புதைத்து, கூறும்: 84

சுமந்திரன் இராமனை திருமுடி சூட்ட விரைவில் வருமாறு அழைத்தல்

'கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்;
சிற்றவை தானும், "ஆங்கே கொணர்க!" எனச் செப்பினாள் அப்
பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்' என்றான். 85

இராமன் தேரேறி செல்லுதல்

ஐயனும், அச்சொல் கேளா, ஆயிரம் மௌலி யானைக்
கைதொழுது, அரச வெள்ளம் கடலெனத் தொடர்ந்து சுற்றத்
தெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத்
தையலார் இரைத்து நோக்கத் தாரணி தேரில் சென்றான். 86

தேரில் செல்லும் இராமனைக் கண்ட மகளிர் செயல்கள்

திரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று,
ஒருவரின் ஒருவர் முந்த, காதலோடு உவகை உந்த,
இரு கையும் இரைத்து மொய்த்தார்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்
பொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். 87

துண்ணெனும், சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து, தூய
மண்ணெனும் திருவை நீங்கி, வழிக்கொளா முன்னம், வள்ளல்
பண்ணெனும் சொல்லினார் தம் தோளெனும் பணைத்த வேயும்,
கண்ணெனும் கால வேலும் மிடைநெடுங் கானம் புக்கான். 88

சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து,
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்;
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்; 89

'"அங்கணன் அவனி காத்தற்கு ஆம் இவன்" என்னல் ஆமோ?
நம் கண் அன்பு இலன்' என்று, உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்,
'செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி,
எங்கணும் தோன்றுகின்றான்; எனைவரோ இராமன்?' என்பார். 90

இராமனைக் கண்ட முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்

இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்;
முனைவரும், நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும்,
அனையவன் மேனி கண்டார், அன்பினுக்கு எல்லை காணார்,
நினைவன மனத்தால், வாயால் நிகழ்ந்தது, நிகழ்த்தலுற்றாம்: 91

'உய்த்தது இவ்வுலகம்' என்பார்; 'ஊழி காண் கிற்பாய்' என்பார்;
'மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்' என்பார்;
'ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக' என்பார்;
'பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க' என்பார். 92

'உயர் அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும்
புயல்மொழி மேகம், என்ன புண்ணியம் செய்த!' என்பார்;
'செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது?' என்பார். 93

'வாரணம் அரற்ற வந்து, கராவுயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை' என்பார்;
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கிக்
காரணம் இன்றியேயும், கண்கள் நீர் கலுழ நிற்பார். 94

'நீலமா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவு நிற்க,
சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்! தேவரின் அடங்கு வானோ?
காலமா கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய், முடிவிலாத மூர்த்தி இம் முன்பன்' என்பார். 95

'ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்
போர்கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர்,
பேர்கெழு சிறப்பின் வந்த பெரும்புகழ் நிற்பது, ஐயன்
தார்கெழு திரள்தோள் தந்த புகழினைத் தழுவி' என்பார். 96

மக்களின் ஈகைச் செயல்கள்

'சந்தம் இவை; தா இல் மணி ஆரம் இவை; யாவும்
சிந்துரமும் இங்கு இவை; செறிந்த மத வேழப்
பந்திகள், வயப் பரி, பசும் பொனின் வெறுக்கை,
மைந்த! வறியோர் கொள வழங்கு' என நிரைப்பார். 97

மின்பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில்,
தன்பொருவில் கன்றுதனி தாவிவரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆஉருகு மாபோல்,
என்பு உருக, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்? 98

'சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற, அருளோடு அவனி ஆள்வார்,
புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது' என, நல்லோர்,
சித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். 99

'கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்,
தேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ?
கூர் கனக ராசியோடு கோடிமணி யாலும்
தூர்மின், நெடு வீதியினை' என்றுசொரி வாரும். 100

'தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?' என்பார். 101

'பாவமும் அருந் துயரும் வேர் பறியும்' என்பார்;
'பூ வலயம் இன்றுதனி அன்று; பொது' என்பார்;
'தேவர்பகை உள்ளன இவ் வள்ளல்தெறும்' என்பார்;
'ஏவல்செயும் மன்னர்தவம் யாவதுகொல்?' என்பார். 102

இராமன் தயரதன் அரண்மனை அடைதலும், அங்கு அவனைக் காணாமையும்

ஆண்டு, இனையர் ஆயினைய, கூற அடல் வீரன்,
தூண்டு புரவிப் பொருவில் சுந்தர மணித்தேர்,
நீண்ட கொடி மாடநிரை வீதிநிறையப்போய்ப்,
பூண்டபுகழ் மன்னன் உறை கோயில்புகலோடும் 103

ஆங்குவந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீசப்
பூங்குழல் மகளிர் உள்ளம் புதுக்களி ஆட, நோக்கி
வீங்கிருங் காதல் காட்டி, விரிமுகம் கமல பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி, உவகைவீற்றிருப்பக் காணான். 104

இராமன் கைகேயின் அரண்மனை புகுதல்

வேத்தவை, முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும்; செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான், சிற்றவை கோயில் புக்கான். 105

இராமன் கைகேயின் அரண்மனை சென்றதை புரவலர் போன்றோர் பாராட்டுதல்

புக்கவன் தன்னை நோக்கி, புரவலர், முனிவர், யாரும்,
'தக்கதே நினைந்தான்; தாதை தாமரைச் சரணம் சூடி,
திக்கினை நிமிர்த்த கோலச் செங்கதிர்ச் செல்வன் ஏய்ந்த
மிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது' என்றார். 106

இராமன் கைகேயியை சந்தித்தால்

ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,
'நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்' என்னா,
தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 107

கைகேயியை வணங்கி இராமன் பணிவுடன் நிற்றல்

வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் -
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான். 108

கைகேயின் வஞ்சக உரை

நின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,
'இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பதோர் உரையுண்டு' என்றாள். 109

மன்னவன் ஆணையை கூற இராமன் பணிந்துரைத்தல்

'எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனன் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி!
வந்ததென் தவத்தின் ஆய வருபயன்; மற்றொன்று உண்டோ ?
தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்' என்றான். 110

கைகேயி தெரிவித்த மன்னனின் ஆணை

'"ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111

கைகேயின் உரை கேட்ட இராமனது தோற்றப் பொலிவு

இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! 112

தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி,
இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்,
உருளுடைச் சகடம் பூண், உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான். 113

காட்டிற்கு செல்ல இராமன் கைகேயியினிடம் விடை கொள்ளுதல்

'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 114

கோசலையின் மாளிகைக்குள் இராமன் புகுதல்

என்று கொண்டு இனைய கூறி, அடி இணை இறைஞ்சி, மீட்டும்,
தன் துணைத் தாதை பாதம் அத் திசை நோக்கித் தாழ்ந்து,
பொன் திணி போதினாளும், பூமியும், புலம்பி நைய,
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். 115

மிகைப் பாடல்கள்

வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி,
சுந்தரத் தடந்தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது,
அந்தரத்து அமரர், சித்தர், அரம்பையர், ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார். 75-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247