எழுச்சிப் படலம் - Ezhuchip Padalam - பால காண்டம் - Bala Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



பால காண்டம்

14. எழுச்சிப் படலம்

சனகன் தூதர் தயரதனை அடுத்து, செய்தி தெரிவித்தல்

கடுகிய தூதரும், காலில் காலின் சென்று,
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்;
அடி இணை தொழ இடம் இன்றி, மன்னவர்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார். 1

முகந்தனர் திருவருள், முறையின் எய்தினார்;
திகழந்து ஒளிர் கழல் இணை தொழுது, செல்வனைப்
புகழ்ந்தனர்; 'அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது' என, நெடிது கூறினார். 2

தயரதன் உவகையுற்று மொழிதல்

கூறிய தூதரும், கொணர்ந்த ஓலையை,
'ஈறு இல் வண் புகழினாய்! இது அது' என்றனர்;
வேறு ஒரு புலமகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான், 'வாசி' என்றனன். 3

இலை முகப் படத்து அவன் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்,
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட,
மலை என வளர்ந்தன, வயிரத் தோள்களே. 4

வெற்றிவேல் மன்னவன், 'தக்கன் வேள்வியில்,
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்,
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது, ஈங்கு?' என்றான். 5

தூதுவர்க்கு பரிசு வழங்குதல்

என்று உரைத்து எதிர் எதிர், இடைவிடாது, 'நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க!' எனா,
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் -
குன்று என உயரிய குவவுத் தோளினான். 6

'சேனையும் அரசரும் மிதிலைக்கு முந்துக!' என தயரதன் ஆணைப்படி, வள்ளுவன் மணமுரசு அறைதல்

'வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அம் மிதிலை நோக்கி, நம்
சேனையும் அரசரும் செல்க, முந்து!' எனா,
'ஆனைமேல் மணமுரசு அறைக!' என்று ஏவினான். 7

வாம் பரி விரி திரைக் கடலை, வள்ளுவன்,-
தேம் பொழி துழாய் முடிச் செங் கண் மாலவன்,
ஆம் பரிசு, உலகு எலாம் அளந்துகொண்ட நாள்,
சாம்புவன் திரிந்தென,-திரிந்து சாற்றினான். 8

நால்வகை சேனையின் எழுச்சி

விடை பொரு நடையினான் சேனை வெள்ளம், 'ஓர்
இடை இலை, உலகினில்' என்ன, ஈண்டிய;
கடையுக முடிவினில், எவையும் கால் பட,
புடை பெயர் கடல் என, எழுந்து போயதே. 9

சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள்தாம்
புல்லிடு சுடர் எனப் பொலிந்த, வேந்தரால்;
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்,
வில் இடும் முகில் எனப் பொலிந்த, வேழமே. 10

கால் விரிந்து எழு குடை, கணக்கு இல் ஓதிமம்,
பால் விரிந்து, இடை இடை பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு கொடிப் படலை, விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்! 11

நுடங்கிய துகிற் கொடி நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையை, 'கடல் இது ஆம்' என,
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில்,
தடம் புனல் பருகிடத் தாழ்வ போன்றவே. 12
இழையிடை இள வெயில் எறிக்கும்; அவ் வெயில்,
தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை,
மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை,
குழைவுற முழங்கிடும், குழாம் கொள் பேரியே. 13

மன் மணிப் புரவிகள் மகளிர் ஊர்வன,
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன;
பொன் அணி புணர் முலைப் புரி மென் கூந்தலார்
மின் என, மடப் பிடி மேகம் போன்றவே. 14

சேனைகள் சென்ற பெரு வழி

இணை எடுத்து இடை இடை நெருக்க, ஏழையர்
துணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்
மணி வரைப் புயந்து மென்சாந்தும், மாழ்கி, மெல்
அணை எனப் பொலிந்தது - அக் கடல் செல் ஆறுஅரோ. 15

மகளிர் ஆடவர் திரள்

முத்தினால், முழு நிலா எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால், இள வெயில் பரப்பும்;-பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே. 16

வில்லினர்; வாளினர்; வெறித்த குஞ்சியர்;
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்;
வல்லியின் மருங்கினர் மருங்கு, மாப் பிடி
புல்லிய களிறு என, மைந்தர் போயினார். 17

மன்றல் அம் புது மலர் மழையில் சூழ்ந்தெனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றலால்,
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம்போல்,
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே. 18

யானைகளும் குதிரைகளும் சென்ற காட்சி

மொய் திரைக் கடல் என முழங்கு மூக்குடைக்
கைகளின், திசை நிலைக் களிற்றை ஆய்வன, -
மையல் உற்று, இழி மத மழை அறாமையால்,
தொய்யலைக் கடந்தில, சூழி யானையே. 19

சூருடை நிலை என, தோய்ந்தும் தோய்கிலா
வாருடை வனமுலை மகளிர் சிந்தைபோல்,
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்,
பாரிடை மிதிக்கில - பரியின் பந்தியே. 20

மகளிரின் ஊடல்

ஊடிய மனத்தினர், உறாத நோக்கினர்,
நீடிய உயிர்ப்பினர், நெரிந்த நெற்றியர்;
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்;
ஆடவர் உயிர் என அருகு போயினார். 21

தறுகண் யானையின் செலவு

மாறு எனத் தடங்களைப் பொருது, மா மரம்
ஊறு பட்டு இடையிடை ஒடித்து, சாய்த்து, உராய்,
ஆறு எனச் சென்றன-அருவி பாய் கவுள்,
தாறு எனக் கனல் உமிழ் தறுகண் யானையே. 22

தயரதனது படைப் பெருக்கம்

உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே! 23

மூடு வண்டியில் இருந்த மகளிரின் முகமும் நோக்கமும்

கண்டவர் மனங்கள் கைகோப்பக் காதலின்,
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால்,
பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன,
புண்டரிகத் தடம் போவ போன்றவே. 24

பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான், இடைக்
காண்டலும், நோக்கிய கடைக்கண் அஞ்சனம்,
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே! 25

மனைவியைப் பிரிந்து சேனையோடு செல்லும் ஓர் ஆடவனின் நிலை

பிள்ளை மான் நோக்கியைப் பிரிந்து போகின்றான்,
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில், அன்னம் ஆம்
புள்ளும் மென் தாமரைப் பூவும் நோக்கினான்,
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான். 26

தானை சென்ற காட்சி

அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து, அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால்,
கங்கை யாறு கடுத்தது - கார் எனச்
சங்கு, பேரி, முழங்கிய தானையே. 27

அமரர் அம் சொல் அணங்கு அனையார் உயிர்
கவரும் கூர் நுதிக் கண் எனும் காலவேல்,
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்,
சமர பூமியும் ஒத்தது - தானையே. 28

தோள் மிடைந்தன, தூணம் மிடைந்தென;
வாள் மிடைந்தன, வான்மின் மிடைந்தென;
தாள் மிடைந்தன, தம்மி மிடைந்தென;
ஆள் மிடைந்தன, ஆளி மிடைந்தென. 29

இளைஞர்களின் காதல் நாடகம்

வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான், நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை முட்டினான். 30

சுழி கொள் வாம் பரி துள்ள, ஒர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை, ஒர் வள்ளல் தான்,
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்;
தழுவி நின்று ஒழியான்; தரை மேல் வையான். 31

துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர்
கணைக் கருங் கணினாளை ஓர் காளைதான்,
'பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல்' என்றான். 32

சுழியும் குஞ்சிமிசைச் சுரும்பு ஆர்த்திட,
பொழியும் மா மத யானையின் போகின்றான்,
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி, தன் வேலையும் நோக்கினான். 33

தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை, ஒர் காளைதான்,
'நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?' என்றான். 34

கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி,
மாற்றம் பேசுகிலாளை, ஒர் மைந்தன் தான்,
'ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?' என்றான். 35

ஒட்டகங்கள் சென்ற வகை

தள்ள அரும் பரம் தாங்கிய ஒட்டகம்,
தெள்ளு தேம் குழை யாவையும் தின்கில;
உள்ளம் என்னத் தம் வாயும் உலர்ந்தன,
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே. 36

பப்பரர் பாரம் சுமந்து செல்லுதல்

அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர்,
பரிந்த காவினர், பப்பரர் ஏகினார்-
திருந்து கூடத்தைத் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே. 37

பிடியின் மேல் செல்லும் மகளிர்

பித்த யானை பிணங்கி, பிடியில் கை
வைத்த; மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்,
எய்த்து இடுக்கண் உற்றார், புதைத்தார்க்க்கு இரு
கைத்தலங்களில் கண் அடங்காமையே. 38

சித்தர் தம் மடவாரோடு பிடியில் சென்றவகை

வாம மேகலையாரிடை, வாலதி
பூமி தோய் பிடி, சிந்தரும் போயினார்-
காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்,
ஆமைமேல் வரும் தேரையின் ஆங்கு அரோ. 39

ஒருத்தியை தன் முதுகில் கொண்டு ஓடும் குதிரையின் தோற்றம்

இம்பர் நாட்டின் தரம் அல்லள், ஈங்கு இவள்;
உம்பர் கோமகற்கு' என்கின்றது ஒக்குமால்-
கம்ப மா வர, கால்கள் வளைத்து, ஒரு
கொம்பு அனாளைக் கொண்டு ஓடும் குதிரையே! 40

மகளிர் மனம் களித்து ஓடுதல்

தந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்,
சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்,
'எந்தை வில் இறுத்தான்' எனும் இன் சொலை
மைந்தர் பேச, மனம் களித்து ஓடுவார். 41

அந்தணர் முற்பட்டுச் செல்லுதல்

குடையர், குண்டிகை தூக்கினர், குந்திய
நடையர், நாசி புதைத்த கை நாற்றலர்,-
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய, அந்தணர்-முந்தினார். 42

நங்கையர் திரண்டு செல்லுதல்

நாறு பூங் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட,
'மாறு கொண்டனை வந்தனை ஆகில், வந்து
ஏறு தேர்' எனக் கைகள் இழிச்சுவார். 43

குரைத்த தேரும், களிறும் குதிரையும்,
நிரைத்த வார் முரசும், நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால், இடை, யாவரும்
உரைத்த உணர்ந்திலர்; ஊமரின் ஏகினார். 44

நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்,
கள் சிலம்பு கருங் குழலார் குழ
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்,
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே. 45

மகளிர் கண்களைக் கண்ட ஆடவர்களின் மகிழ்ச்சி

தெண் திரைப் பரவைத் திரு அன்னவர்,
நுண் திரைப் புரை நோக்கிய நோக்கினை,
கண்டு இரைப்பன, ஆடவர் கண்; களி
வண்டு இரைப்பன, ஆனை மதங்களே. 46

உழை கலித்தன என்ன, உயிர்த் துணை
நுழை கலிக் கருங் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன் இயமா, எழும்
மழை கலித்தென, வாசி கலித்தவே. 47

மண் களிப்ப நடப்பவர் வாள் முக
உண் களிக் கமலங்களின் உள் உறை
திண் களிச் சிறு தும்பி என, சிலர்
கண் களித்தன, காமன் களிக்கவே. 48

சுண்ணமும் தூளியும் நிறைய, யாவரும் செல்லுதலால் புழுதி கிளம்புதல்

எண்ண மாத்திரமும் அரிதாம் இடை,
வண்ண மாத்துவர் வாய், கனி வாய்ச்சியர்,
திண்ணம் மாத்து ஒளிர் செவ் இளநீர், இழி
சுண்ணம் ஆத்தன; தூளியும் ஆத்தவே. 49

சித்திரத் தடந் தேர் மைந்தர் மங்கையர்,
உய்த்து உரைப்ப, நினைப்ப, உலப்பிலர்,
இத் திறத்தினர் எத்தனையோ பலர்,
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார். 50

குசை உறு பரியும், தேரும், வீரரும், குழுமி, எங்கும்
விசையொடு கடுகப் பொங்கி வீங்கிய தூளி விம்மி,
பசை உறு துளியின் தாரைப் பசுந் தொளை அடைத்த, மேகம்;
திசைதொறும் நின்ற யானை மதத் தொளை செம்மிற்று அன்றே. 51

மங்கையரை ஆடவர் அழைத்துச் சென்ற வகை

கேட்கத் தடக் கையாலே, கிளர் ஒளி வாளும் பற்றி,
சூடகத் தளிர்க் கை, மற்றைச் சுடர் மணித் தடக் கை பற்றி,
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் - ஆற்றில்,
பாடகக் காலினாரை, பயப் பயக் கொண்டு போனார். 52

மலர் பறித்துத் தருமாறு மகளிர் கணவரை வேண்டுதல்

செய்களின் மடுவில், நல் நீர்ச் சிறைகளில், நிறையப் பூத்த
நெய்தலும், குமுதப் பூவும், நெகிழ்ந்த செங் கமலப் போதும்,
கைகளும், முகமும், வாயும், கண்களும், காட்ட, கண்டு,
'கொய்து, அவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றாரால். 53

யானை வருதல் அறிந்து மகளிர் ஓடுதல்

பந்தி அம் புரவிநின்றும் பாரிடை இழிந்தோர், வாசக்
குந்தள பாரம் சோர, குலமணிக் கலன்கள் சிந்த,
சந்த நுண் துகிலும் வீழ, தளிர்க் கையால் அணைத்து, 'சார
வந்தது வேழம்' என்ன, மயில் என இரியல் போவார். 54

குடை, கொடியின் நெருக்கம்

குடையொடு பிச்சம், தொங்கல் குழாங்களும், கொடியின் காடும்,
இடை இடை மயங்கி, எங்கும் வெளி சுரந்து இருளைச் செய்ய,
படைகளும், முடியும், பூணும், படர் வெயில் பரப்பிச் செல்ல-
இடை ஒரு கணத்தினுள்ளே, இரவு உண்டு, பகலும் உண்டே! 55

மகளிர்க்கு செல்ல ஆடவர் வழி விட்டு விலகுதல்

முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திருக் கிளர் கமலப் போதில் தீட்டின கிடந்த கூர் வாள்,
'நெருக்கு இடை அறுக்கும்; நீவிர் நீங்குமின் நீங்கும்' என்று என்று,
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகலப் போவார். 56

நந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்குண்டு அற்று,
காந்தின மணியும் முத்தும் சிந்தின, கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம் பரிபுரம் புலம்பு பாதப்
பூந் தளிர் உறைப்ப, மாழ்கி, 'போக்கு அரிது' என்ன நிற்பார். 57

இசை கேட்டு எருதுகள் மிரண்டு ஓடுதல்

கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப, பண்டிப்
பெற்ற ஏறு, அன்னப் புள்ளின் பேதையர் வெருவி நீங்க,
முற்று உறு பரங்கள் எல்லாம், முறை முறை, பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி, யோகியின் பரிவு தீர்ந்த. 58

நீர்நிலைகளில் படிந்த யானைகள்

கால் செறி வேகப் பாகர் கார்முக உண்டை பாரா,
வார்ச் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காணப்
பால் செறி கடலில் தோன்றும் பனைக் கை மால் யானை என்ன,
நீர்ச் சிறை பற்றி, ஏறா நின்ற - குன்று அனைய வேழம். 59

பாணரும் விறலியரும் இசையுடன் பாடல்

அறல் இயல் கூந்தல், கண் வாள், அமுது உகு குமுதச் செவ் வாய்,
விறலியரோடு, நல் யாழ்ச் செயிரியர், புரவி மேலார்,
நறை செவிப் பெய்வது என்ன, நைவள அமுதப் பாடல்
முறை முறை பகர்ந்து போனார், கின்னர மிதுனம் ஒப்பார். 60

மத யானைகளின் போக்கு

அருவி பெய் வரையின் பொங்கி, அங்குசம் நிமிர, எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த, இளங் களிச் சிறு கண் யானை,
விரி சிறைத் தும்பி, வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து, மாதர்
சுரி குழல் படிய, வேற்றுப் பிடியொடும் தொடர்ந்து செல்ப. 61

தயரனது நேய மங்கையரின் எழுச்சி

நிறை மதித் தோற்றம் கண்ட நீல் நெடுங் கடலிற்று ஆகி,
அறை பறை துவைப்ப, தேரும், ஆனையும், ஆடல் மாவும்,
கறை கெழு வேல் கணாரும், மைந்தரும், கவினி, ஒல்லை
நெறியிடைப் படர, வேந்தன் நேய மங்கையர் செல்வார். 62

அரசியர் மூவரும் செல்லுதல்

பொய்கை அம் கமலக் கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன,
கைகயர் வேந்தன் பாவை, கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐ - இருநூறு சூழ, ஆய் மணிச் சிவிகைதன்மேல்,
தெய்வ மங்கையரும் நாண, தேன் இசை முரல, போனாள். 63

விரி மணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங் கண் நல்லார் ஆயிரத்து இரட்டி சூழ,
குரு மணிச் சிவிகைதன் மேல், கொண்டலின் மின் இது என்ன,
இருவரைப் பயந்த நங்கை, யாழ் இசை முரல, போனாள். 64

வெள் எயிற்று இலவச் செவ் வாய் முகத்தை வெண் மதியம் என்று,
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி,
தெள் அரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத் தேன் சிந்த,
வள்ளலைப் பயந்த நங்கை, வானவர் வணங்க, போனாள். 65

செங் கையில், மஞ்ஞை, அன்னம், சிறு கிளி, பூவை, பாவை,
சங்கு உறை கழித்த அன்ன சாமரை, முதல தாங்கி,
'இங்கு அலது, எண்ணுங்கால், இவ் எழு திரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை' என்ன, மடந்தையர், மருங்கு போனார். 66

ஏவல்மாந்தர் சுற்றிலும் காவல் புரிந்து செல்லுதல்

காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்தார், தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்,
தார் அணி புரவி மேலார், தலத்து உளார், கதித்த சொல்லார்,
ஆர் அணங்கு அனைய மாதர், அடி முறை காத்துப் போனார். 67

கூனொடு குறளும், சிந்தும், சிலதியர் குழாமும், கொண்ட
பால் நிறப் புரவி அன்னப் புள் எனப் பாரில் செல்ல,
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்லப்
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார். 68

துப்பினின், மணியின், பொன்னின், சுடர் மரகதத்தின், முத்தின்,
ஒப்பு அற அமைத்த வையம், ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று - இரட்டி கொண்ட ஆயிரம், முகிழ் மென் கொங்கைச்
செப்ப அருந் திருவின் நல்லார், தெரிவையர் சூழப் போனார். 69

வசிட்டன் சிவிகையில் செல்லுதல்

செவி வயின் அமுதக் கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஆயிரத்து இரட்டி சூழ,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன், வெள்ளைச்
சிவிகையில், அன்னம் ஊரும் திசைமுகன் என்ன, சென்றான். 70

பரத சத்துருக்கனர் வசிட்டன் பின் செல்லுதல்

பொரு களிறு, இவுளி, பொன் தேர், பொலங் கழல் குமரர், முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன, அருகு முன் பின்னும் செல்ல,
திரு வளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர், வீரர்,
இருவரும், முனி பின் போன இருவரும் என்ன, போனார். 71

தயரதன் போதல்

நித்திய நியமம் முற்றி, நேமியான் பாதம் சென்னி
வைத்த பின், மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும்,
பத்தி ஆன் நிரையும், பாரும், பரிவுடன் நல்கி, போனான் -
முத்து அணி வயிரப் பூணான், மங்கல முகிழ்ந்த நல் நாள். 72

அரசர் குழாம் தயரதனைச் சூழ்ந்து செல்லுதல்

இரு பிறப்பாளர் எண்ணாயிரர், மணிக் கலசம் ஏந்தி,
அரு மறை வருக்கம் ஓதி, அறுகு நீர் தெளித்து வாழ்த்தி;
வரன் முறை வந்தார், கோடி மங்கல மழலைச் செவ்வாய்ப்
பரு மணிக் கலாபத்தார், பல்லாண்டு இசை பரவிப் போனார். 73

'கண்டிலன் என்னை' என்பார்; 'கண்டனன் என்னை' என்பார்;
'குண்டலம் வீழ்ந்தது' என்பார்; 'குறுக அரிது, இனிச் சென்று' என்பார்;
'உண்டு கொல், எழுச்சி?' என்பார்; 'ஒலித்தது சங்கம்' என்பார்;
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர், மருங்கு மாதோ. 74

பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம்,
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல,
கொற்ற வேல் மன்னர் செங் கைப் பங்கயப் குழாங்கள் கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன, மணி நெடுந் தேரில் போனான். 75

ஆர்த்தது, விசும்பை முட்டி; மீண்டு, அகன் திசைகள் எங்கும்
போர்த்தது; அங்கு, ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமைத்
தீர்த்தது; செறிந்தது ஓடி, திரை நெடுங் கடலை எல்லாம்
தூர்த்தது, சகரரோடு பகைத்தென, - தூளி வெள்ளம். 76

சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட,
தொங்கலும் குடையும் தோகைப் பிச்சமும் சுடரை ஓட்ட,
திங்கள் வெண்குடை கண்டு ஓட, தேவரும் மருள, - சென்றான். 77

மந்திர கீத ஓதை, வலம்புரி முழங்கும் ஓதை,
அந்தணர் ஆசி ஓதை, ஆர்த்து எழு முரசின் ஓதை,
கந்து கொல் களிற்றின் ஓதை, கடிகையர் கவியின் ஓதை,-
இந்திர திருவன் செல்ல-எழுந்தன, திசைகள் எல்லாம். 78

நோக்கிய திசைகள் தோறும் தன்னையே நோக்கிச் செல்ல,
வீக்கிய கழற் கால், வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப,
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி, விண்ணும் மண்ணுலகு ஆக்க,-போனான். 79

வீரரும், களிறும், தேரும், புரவியும் மிடைந்த சேனை,
பேர்வு இடம் இல்லை; மற்று ஓர் உலகு இல்லை, பெயர்க்கலாகா;
நீருடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால்,
'பார் பொறை நீக்கினான்' என்று உரைத்தது எப் பரிசு மன்னோ? 80

சந்திரசயிலத்தின் சாரலில் தயரதன் தங்குதல்

இன்னணம் ஏகி, மன்னன் யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும், மாதர் கொங்கையும், மாரன் அம்பும்,
தென்வரைச் சாந்தும், நாறச் சேனை சென்று, இறுத்தது அன்றே. 81

மிகைப் பாடல்கள்

ஓது நீதியின் கோசிக மா முனி ஓலை
தாது சேர் தொடைத் தயரதன் காண்க! தற் பிரிந்து
போது கானிடைத் தாடகை பொருப்பு எனப் புகுந்து,
வாது செய்து நின்று, இராகவன் வாளியால் மாண்டாள். 3-1

'சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென்; அது தனைச் சிதைக்க,
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார்;
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன்; ஒருவன் போய்க் குரை கடல் குளித்தான். 3-2

'கூட மேவு போர் அரக்கரை இளையவன் கொன்று,
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி,
பாடல் மா மறைக் கோதமன் பன்னி சாபத்தை,
ஆடல் மா மலர்ச் சோலையில், இராகவன் அகற்றி, 3-3

'பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து, போர் இராமன்
மருவு வார் சிலை முறித்தலின், சனகன் தன் மகளை,
"தருவென் யான்" என இசைந்தனன்; தான் இங்கு விரைவின்
வருக' என்பதாம் வாசகம் கேட்டு, உளம் மகிழ்ந்தான். 3-4

பன்னும் நான் மறை வசிட்டனும் பராவ அரு முனிக்கும்,
அன்னைமார்க்கும், தன் அமைச்சர்க்கும், சோபனம் அறிவித்து,
இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்குச்
சொன்னம் ஆயிரம் கோடியும் தூசுடன் கொடுத்தான். 3-5

மாண்ட பின்னரும் மந்திர வேள்வியும் இயற்றித்
தூண்டு அரும் பெரும் .......... .............. ..............
............. .............. .............. .............. ...............
............. .............. சனகனும் மகட்கொடை நேர்ந்தான். 3-6

மன்னன் அங்கு அவர் பெருமகம் காணிய வருவான்
அன்ன வசிட்டன் அந்தணர் அரசர் ஆபாலர்
இன்னர் இன்றியே வருக என எழுதினன்; இச் சொல்
சொன்ன வாசகம் சொல்தொறும் அமுது எனச் சொரிந்த. 3-7

சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்,
கோல் தொடி மகளிரும், கோல மைந்தரும்,
வேல் தரு குமரரும், வென்றி வேந்தரும்,
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினர். 8-1

எதிர் கொண்டு ஏந்தி ஓர் ஏந்திழை கொங்கை பூண்
அதிர, மார்பம் அழுந்தத் தழுவினான்,
'முதிரும் தோள் மலையோ, முலைக் குன்றமோ
அதிகம் என்பது அறிக வந்தேன்' என்றான். 37-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247