கிட்கிந்தா காண்டம்

10. கார்காலப் படலம்

சூரியன் தென் திசையில் ஒதுங்கிய காட்சி

மா இயல் வட திசை நின்று, வானவன்,
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய, முந்தி, தென் திசைக்கு
ஏவிய தூது என, இரவி ஏகினான். 1

மழை வானின் தோற்றம்

பை அணைப் பல் தலைப் பாந்தள் ஏந்திய
மொய் நிலத் தகளியில், முழங்கு நீர் நெயின்,
வெய்யவன் விளக்கமா, மேருப் பொன் திரி,
மை எடுத்து ஒத்தது - மழைத்த வானமே. 2

நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண்ணகம் இருண்டது; வெயிலின் வெங் கதிர்
தண்ணிய மெலிந்தன; தழைத்த, மேகமே. 3

நஞ்சினின், நளிர் நெடுங் கடலின், நங்கையர்
அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின்,
வஞ்சனை அரக்கர்தம் வடிவின், செய்கையின்,
நெஞ்சினின், இருண்டது - நீல வானமே. 4

மின்னலும் இடியும்

நாட்களில், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே. 5

நீல் நிறப் பெருங் கரி நிரைத்த நீர்த்து என,
சூல் நிற முகிற் குலம், துவன்றி, சூழ் திரை
மால் நிற நெடுங் கடல் வாரி, மூரி வான்
மேல் நிரைத்துளது என, முழக்கம் மிக்கதே. 6

அரிப் பெரும் பெயரவன் முதலினோர் அணி,
விரிப்பவும் ஒத்தன; வெற்பு மீது, தீ
எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன; - தெரிந்த மின் எலாம். 7

மாதிரக் கருமகன், மாரிக் கார் மழை -
யாதினும் இருண்ட விண் - இருந்தைக் குப்பையின்,
கூதிர் வெங் கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து,
ஊது வெங் கனல் உமிழ் உலையும், ஒத்ததே. 8

சூடின மணி முடித் துகள் இல் விஞ்சையர்
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்,
ஆடவர் பெயர் தொறும் ஆசை யானையின்
ஓடைகள் ஒளி பிறழ்வனவும், ஒத்ததே. 9

பிரிந்து உறை மகளிரும், பிலத்த பாந்தளும்,
எரிந்து உயிர் நடுங்கிட, இரவியின் கதிர்
அரிந்தன ஆம் என, அசனி நா என,
விரிந்தன திசைதொறும் - மிசையின் மின் எலாம். 10

ஊதைக் காற்று வீசுதல்

தலைமையும் - கீழ்மையும் தவிர்தல் இன்றியே,
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்,
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர்
உலைவுறும் மனம் என, உலாய ஊதையே. 11

அழுங்குறு மகளிர், தம் அன்பர்த் தீர்ந்தவர்,
புழுங்குறு புணர் முலை கொதிப்பப் புக்கு உலாய்,
கொழுங் குறைத் தசை என ஈர்ந்து கொண்டு, அது
விழுங்குறு பேய் என, வாடை வீங்கிற்றே. 12

பருவ மழை பொழிதல்

ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும், மின்
கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்,
தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு காரினும்,
போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது - உம்பரே. 13

இன் நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல்,
மன்மதன் மலர்க் கணை வழங்கினான் என,
பொன் நெடுங் குன்றின்மேல் பொழிந்த, தாரைகள் -
மின்னொடும் துவன்றின மேக ராசியே. 14

கல்லிடைப் படும் துளித் திவலை, கார் இடு
வில்லிடைச் சரம் என, விசையின் வீழ்ந்தன;
செல்லிடைப் பிறந்த செங் கனல்கள் சிந்தின,
அல்லிடை, மணி சிறந்து, அழல் இயற்றல்போல். 15

மள்ளர்கள் மறு படை, மான யானைமேல்
வெள்ளி வேல் எறிவன போன்ற; மேகங்கள்;
தள்ள அரும் துளி பட, தகர்ந்து சாய் கிரி,
புள்ளி வெங் கட கரி புரள்வ போன்றவே. 16

வான் இடு தனு, நெடுங் கருப்பு வில்; மழை,
மீன் நெடுங் கொடியவன்; பகழி, வீழ் துளி;
தான் நெடுஞ் சார் துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே. 17

'தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை
பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர்
ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்
தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே. 18

வண்ண வில் கரதலத்து அரக்கன், வாளினன்,
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்,
பெண்ணினுக்கு அருங் கலம் அனைய பெய்வளை
கண் என, பொழிந்தது-கால மாரியே. 19

பரஞ்சுடர்ப் பண்ணவன், பண்டு, விண் தொடர்
புரம் சுட விடு சரம் புரையும் மின் இனம்,
அரம் சுடப் பொறி நிமிர் அயிலின், ஆடவர்
உரம் சுட உளைந்தனர், பிரிந்துளோர் எலாம். 20

பொருள் தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு,
உருள்தரு தேர்மிசை உயிர்கொண்டு உய்த்தலான்,
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட,
கருடனைப் பொருவின்-கால மாரியே. 21

முழங்கின முறை முறை மூரி மேகம், நீர்
வழங்கின, மிடைவன, - மான யானைகள்,
தழங்கின, பொழி மதத் திவலை தாழ்தரப்
புழுங்கின, எதிர் எதிர் பொருவ போன்றவே. 22

விசைகொடு மாருதம் மறித்து வீசலால்,
அசைவுறு சிறு துளி அப்பு மாரியின்,
இசைவுற எய்வன இயைவவாய், இருந்
திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே. 23

மரம் செடி கொடிகள் பொலிவுடன் பூத்தல்

விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற, உயிர் உற உயிர்க்கும் மாதரின்,
மழை உற, மா முகம் மலர்ந்து தோன்றின,
குழை உறப் பொலிந்தன-உலவைக் கொம்பு எலாம். 24

பாடலம் வறுமை கூர, பகலவன் பசுமை கூர,
கோடல்கள் பெருமை கூர, குவலயம் சிறுமை கூர,
ஆடின மயில்கள்; பேசாது அடங்கின குயில்கள் - அன்பர்
கேடுறத் தளர்ந்தார் போன்றும், திரு உறக் கிளர்ந்தார் போன்றும். 25

நால் நிறச் சுரும்பும், வண்டும், நவ மணி அணியின் சார,
தேன் உக மலர்ந்து சாய்ந்த சேயிதழ்க் காந்தட் செம் பூ,
'வேனிலை வென்றது அம்மா, கார்!' என வியந்து நோக்கி,
மா நிலக் கிழத்தி கைகள் மறித்தன போன்ற மன்னோ. 26

வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த
தாளுடைக் கோடல் தம்மைத் தழீஇயின, காதல் தங்க
மீளல; அவையும் அன்ன விழைவன, உணர்வு வீந்த
கோள் அரவு என்னப் பின்னி, அவற்றொடும் குழைந்து சாய்ந்த. 27

இந்திர கோபங்கள் எங்கும் இயங்குதல்

எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர் தம்மைப் பிரிந்து, அவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம் கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை சிதர்ந்தென, விரிந்த மாதோ. 28

மலை அருவியில் மலர்கள் அடித்து வருதல்

தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்ரின், செம் பொன்
வாங்கின கொண்டு, பாரில் மண்டும் மால் யாறு மான,
வேங்கையின் மலரும், கொன்றை விரிந்தன வீயும், ஈர்த்து,
தாங்கின கலுழி, சென்று தலை மயக்குறுவ தம்மில். 29

செங்காந்தள் மலரில் கொன்றைப் பூவும் இந்திரகோபமும்

நல் நெடுங் காந்தள் போதில், நறை விரி கடுக்கை மென் பூ,
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் - தும்பி
இன் இசை முரல்வ நோக்கி, இரு நில மகள் கை ஏந்தி,
பொன்னொடும் காசை நீட்டிக் கொடுப்பதே போன்றது அன்றே! 30

நாடக அரங்கு

கிளைத் துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த; மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த் தூரியம் துவைப்ப போன்ற;
வளைக் கையர் போன்ற, மஞ்ஞை; தோன்றிகள், அரங்கின்மாடே
விளக்குஇனம் ஒத்த; காண்போர் விழி ஒத்த, விளையின் மென் பூ. 31

பேடையும் ஞிமிறும் பாயப் பெயர்வுழிப் பிறக்கும் ஓசை
ஊடுறத் தாக்கும்தோறும் ஒல் ஒலி பிறப்ப, நல்லார்
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும்; ஆரிய அமிழ்தப் பாடல்
கோடியர் தாளம் கொட்டல், மலர்ந்த கூதாளம் ஒத்த. 32

காட்டாற்றின் ஒழுக்கும், கொன்றையின் பொற்பூவும்

வழை துறு கான யாறு, மா நிலக் கிழத்தி, மக்கட்கு
உழை துறு மலை மாக் கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த;
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி,
குழைதொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த, கொன்றை. 33

மான்கள்

பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப,
தீவிய களிய ஆகிச் செருக்கின; காமச் செவ்வி,
ஓவிய மரன்கள்தோறும் உரைத்து, அற உரிஞ்சி, ஒண் கேழ்
நாவிய செவ்வி நாற, கலையொடும் புலந்த நவ்வி. 34

குவளை குவிதலும், முல்லை அரும்புதலும்

தேரில் நல் நெடுந் திசை செலச் செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் அயில் தரும் கண் எனக் குவிந்தன குவளை;
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர்
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின, முல்லை. 35

அருவியிலிருந்து வரும் இசையும், தாமரை மலர்தலும்

களிக்கும் மஞ்ஞையை, கண்ணுளர் இனம் எனக் கண்ணுற்று,
அளிக்கும் மன்னரின், பொன் மழை வழங்கின அருவி;
வெளிக்கண் வந்த கார் விருந்து என, விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் என, பொலிந்தன, கமலம். 36

தேனீ

சரத நாள் மலர் யாவையும் குடைந்தன, தடவிச்
சுரத நூல் தெரி விடர் என, தேன் கொண்டு தொகுப்ப,
பரத நூல் முறை நாடகம் பயன் உறப் பகுப்பான்,
இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின - தேனீ. 37

களித்த மான்கள்

'"நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல்
தாக்கு அணங்கு அருஞ் சீதைக்கு, தாங்க அருந் துன்பம்
ஆக்கினான் நமது உருவின்" என்று, அரும் பெறல் உவகை
வாக்கினால் உரையாம்' என, களித்தன - மான்கள். 38

அன்னம், கொக்கு, முதலிய பறவை இனங்கள்

நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உறப் பிரிந்து
வாடுகின்றன, மருளுறு காதலின் மயங்கி,
கூடு நல் நதித் தடம்தொறும் குடைந்தன, படிவுற்று
ஆடுகின்றன - கொழுநரைப் பொருவின - அன்னம். 39

கார் எனும் பெயர்க் கரியவன் மார்பினின் கதிர் முத்து-
ஆரம் என்னவும் பொலிந்தன-அளப்ப அரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து,
கூரும் வெண் நிறத் திரை எனப் பறப்பன குரண்டம். 40

மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய, வானில்
பருவ மேகத்தின் அருகு உறக் குருகு இனம் பறப்ப,
'திருவின் நாயகன் இவன்' எனத் தே மறை தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த. 41

தழைத்த பசும் புல்லும், மயிலின் அகவலும்

உற வெதுப்புறும் கொடுந் தொழில் வேனிலான் ஒழிய,
திறம் நினைப்ப அருங் கார் எனும் செவ்வியோன் சேர,
நிற மனத்து உறு குளிர்ப்பினின், நெடு நில மடந்தை,
புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன - பசும் புல். 42

தேன் அவாம் மலர்த் திசைமுகன் முதலினர் தெளிந்தோர்,
ஞான நாயகன் நவை உற, நோக்கினர் நல்க,
கானம் யாவையும் பரப்பிய கண் என, சனகன்
மானை நாடி நின்று அழைப்பன போன்றன - மஞ்ஞை. 43

செந்தாமரை மலர்களும், கொடிகளும்

செஞ் செ(வ்) வேலவர், செறி சிலைக் குரிசிலர், இருண்ட
குஞ்சி சேயொளி கதுவுறப் புது நிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி எனப் பொலிந்தன, பதுமம்;
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின, வல்லி. 44

குயில்கள் வாயடங்கின

'நீயின், அன்னவள் குதலையிர் ஆதலின், நேடி,
போய தையலைத் தருதிர்' என்று, இராகவன் புகல,
தேயம் எங்கணும் திரிந்தன போந்து, இடைத் தேடிக்
கூய ஆய், குரல் குறைந்தபோல் குறைந்தன - குயில்கள். 45

பசுக்கள் புல் மேய்தலும், காளான் தோன்றுதலும்

பொழிந்த மா நிலம் புல் தர, குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின, செறி தயிர்
மொழிந்த தேனுடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில்
பிழிந்த பால் வழி நுரையினைப் பொருவின- பிடவம். 46

வேங்கை நாறின, கொடிச்சியர் வடிக் குழல்; விரை வண்டு
ஏங்க, நாகமும் நாறின, நுளைச்சியர் ஐம்பால்;
ஓங்கு நாள் முல்லை நாறின, ஆய்ச்சியர் ஓதி; -
ஞாங்கர், உற்பலம் உழத்தியர் பித்திகை நாற. 47

கார் காலத்தைக் கண்ட இராமனின் மன நிலை

தேரைக் கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான்;
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல் ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு ஒரு கரை காணான். 48

அளவு இல் கார் எனும் அப் பெரும் பருவம் வந்து அணைந்தால்,
தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன், வருந்தும் என்றால், அது வருத்தோ? 49

காவியும், கருங் குவளையும், நெய்தலும், காயாம்-
பூவையும் பொருவான் அவன், புலம்பினன் தளர்வான்,
'ஆவியும் சிறிது உண்டு கொலாம்' என, அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்து, இவை இவை சொல்லும். 50

சீதையின் பிரிவால் வருந்திய இராமன், மேகத்தை நோக்கி இரங்கிக் கூறுதல்

'வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய், அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ? 51

'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு,
எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ? 52

'அயில் ஏய் விழியார், விளை ஆர் அமுதின்
குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்!
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்;
மயிலே! எனை நீ வலி ஆடுதியோ? 53

'மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே! -
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ? 54

'விழையேன் விழைவானவை; மெய்ம்மையின் நின்று
இழையேன், உணர்வு என்வயின் இன்மையினால்;
பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்;
உழையே! அவர் எவ் உழையார்? உரையாய்! 55

'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ?
அயிராது உடனே அகல்வாய் அலையோ?
உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையோ? 56

'ஒன்றைப் பகராய், குழலுக்கு உடைவாய்;
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ! -
கொன்றைக் கொடியாய்! - கொணர்கின்றிலையோ!
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே? 57

'குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெங் குருளை நாகம்
விராவு வெங் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை, வெய்தின்
உராவ அருந் துயரம் மூட்டி, ஓய்வு அற மலைவது ஒன்றோ?
இராவண கோபம் நிற்க, இந்திரகோபம் என்னோ? 58

'ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி,
நாடி, மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார்;
வாடை ஆய், கூற்றினாரும், உருவினை மாற்றி வந்தார்;
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உருக் கொளக் கிடைத்த அன்றே? 59

'அரு வினை அரக்கர் என்ன, அந்தரம் அதனில் யாரும்
வெருவர, முழங்குகின்ற மேகமே! மின்னுகின்றாய்;
"தருவல்" என்று இரங்கினாயோ? தாமரை மறந்த தையல்
உருவினைக் காட்டிக் காட்டி, ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்! 60

'உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட, உலைவேன் உள்ளம்
புண் உற, வாளி தூர்த்தல் பழுது, இனி; போதி; - மார! -
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன், இன்னே, உன்னைக்
கண்ணுறும் ஆயின், பின்னை, யார், அவன் சீற்றம் காப்பார்? 61

'வில்லும், வெங் கணையும், வீரர், வெஞ் சமத்து அஞ்சினார்மேல்
புல்லுவ அல்ல, ஆற்றல்; - போற்றலர்க் குறித்தல் போலாம்;-
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க! - நீ அருளின் தீர்ந்தாய்;
"செல்லும்" என்று, எளிவந்தோர்மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ?' 62

இராமனை இலக்குவன் தேற்றுதல்

என்ன இத் தகைய பன்னி, ஈடு அழிந்து, இரங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கி, தகை அழிந்து அயர்ந்த தம்பி,
'நின்னை எத் தகையை ஆக நினைந்தனை?-நெடியோய்!' என்ன,
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான், செப்பலுற்றான்: 63

'"காலம் நீளிது, காரும் மாரியும் வந்தது" என்ற கவற்சியோ?
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ?
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ?
சாலும் நூல் உணர் கேள்வி வீர! - தளர்ந்தது என்னை? - தவத்தினோய்! 64

'மறை துளங்கினும், மதி துளங்கினும், வானும் ஆழ் கடல் வையமும்,
நிறை துளங்கினும், நிலை துளங்குறு நிலைமை நின்வயின் நிற்குமோ?
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை, நின்
இறை துளங்குறு புருவ வெஞ் சிலை இடை துளங்குற, இசையுமோ? 65

'அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்; அறிஞ! அங்கதன் ஆதியோர்
எனையர் என்பது ஒர் இறுதிகண்டிலம்; எழுபது என்று எனும் இயல்பினார்
வினையின் வெந் துயர் விரவு திங்களும், விரைவு சென்றன, எளிதின்; நின்
தனு எனும் திரு நுதலி வந்தனள்; சரதம்; வன் துயர் தவிர்தியே! 66

'மறை அறிந்தவர் வரவு கண்டு, "உமை வலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று, இடர் களைவென்" என்றனை; குறை முடிந்தது விதியினால்;
இறைவ! அங்கு அவர் இறுதிகண்டு,இனிது இசை புனைந்து,இமையவர்கள்தாம்,
உறையும் உம்பரும் உதவி நின்றருள்; உணர்வு அழிந்திடல் உறுதியோ! 67

'காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று; மேதமை ஆம் அரோ;
போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள் அன்று; நின்று புணர்த்தியேல்,
யாது உனக்கு இயலாதது? எந்தை! வருந்தல்' என்ன இயம்பினான். 68

தம்பி சொல்லால் இராமன் துயர் நீங்குதலும், மழை பொழிதலும்

சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்;
இற்ற இன்னல் இயக்கம் எய்திட, வைகல் பற்பல ஏக, மேல்
உற்று நின்ற வினைக் கொடும் பிணி, ஒன்றின்மேல் உடன் ஒன்று உராய்,
மற்றும் வெம் பிணி பற்றினாலென, வந்து எதிர்ந்தது மாரியே. 69

நிறைந்தன நெடுங் குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங் குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன தடந் திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன, மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி. 70

பாசிழை அரம்பையர், பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு, தொடர் ஊசல், நனி வெம்மை தொடர்வுற்றே
வீசியது, வாடை - எரி வெந்த விரி புண் வீழ்
ஆசு இல் அயில் வாளி என, ஆசைபுரிவார் மேல். 71

வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல், கன்னல் அளவு அல்லால்,
மாலை பகல் உற்றது என, ஓர்வு அரிது மாதோ! 72

நெல் கிழிய நெற் பொதி நிரம்பின, நிரம்பாச்
சொற்கு இழிய நல் கிளிகள்; தோகையவர், தூ மென்
பற்கு இழி மணிப் படர் திரைப் பரதர் முன்றில்,
பொற் கிழி விரித்தன, சினைப் பொதுளு புன்னை. 73

நிறம் கருகு கங்குல், பகல், நின்ற நிலை நீவா -
அறம் கருது சிந்தை முனி அந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளி படப் பெயர்வு இல் குன்றில்,
உறங்கல, பிறங்கல் அயல் நின்ற, உயர் வேழம். 74

சந்தின் அடையின் படலை வேதிகை தடம்தோறு,
அந்தி இடு அகில் புகை நுழைந்த, குளிர் அன்னம்;
மந்தி துயில் உற்ற, முழை; வன் கடுவன், அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த. 75

ஆசு இல் சுனை வால் அருவி, ஆய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இல ஆன; மணி வன் கால்
ஊசல் வறிது ஆன; இதண் ஒண் மணிகள் விண்மேல்
வீசல் இல வான;- நெடு மாரி துளி வீச. 76

கருந் தகைய, தண் சினைய, கைதை மடல், காதல்
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க,
பெருந் தகைய பொற் சிறை ஒடுக்கி, உடல் பேராது,
இருந்த, குருகின் பெடை- பிரிந்தவர்கள் என்ன. 77

பதங்கள் முகில் ஒத்த, இசை பல் ஞிமிறு பன்ன,
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
மதங்கியரை ஒத்த, மயில்; வைகு மர மூலத்து
ஒதுங்கின, உழைக் குலம்; - மழைக் குலம் முழக்க. 78

விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி, மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும், மைந்தர்களும், ஏற;
தளத் தகு மலர்த் தவிசு இகந்து, நகு சந்தின்
துளைத் துயில் உவந்து, துயில்வுற்ற, குளிர் தும்பி. 79

தாமரை மலர்த் தவிசு இகந்து, தகை அன்னம்,
மாமரம் நிரைத் தொகு பொதும்பருழை வைக;
தே மரம் அடுக்கு இதனிடைச் செறி குரம்பை,
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார். 80

வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்தோறு,
எள்ள அரு மறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்;
கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி,
முள் எயிறு தின்று, பசி மூழ்கிட இருந்த. 81

சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார,
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா,
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பன; -முழைஞ்சிடை நுழைந்த. 82

இராமனின் விரகதாபம்

இத் தகைய மாரியிடை, துன்னி இருள் எய்த,
மைத் தகு மணிக் குறு நகைச் சனகன் மான்மேல்
உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான்,
வித்தகன், இலக்குவனை முன்னினன், விளம்பும்: 83

'மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப, அருங்கொங்கையும் எதிர்வுற்று, இன்னலின்
உழைத்தனள், உலைந்து உயிர் உலக்கும்; ஒன்றினும்
பிழைப்ப அரிது, எனக்கும்; இது என்ன பெற்றியோ? 84

'தூ நிறச் சுடு சரம், தூணி தூங்கிட,
வான் உறப் பிறங்கிய வைரத் தோளொடும்,
யான் உறக் கடவதே இதுவும்? இந் நிலை
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும், வீகிலேன். 85

'தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும்,
அரிய வன் துயரொடும், யானும் வைகுவேன்;
எரியும் மின்மினி மணி விளக்கின், இன் துணைக்
குரி இனம், பெடையோடும் துயில்வ, கூட்டினுள். 86

'வானகம் மின்னினும், மழை முழங்கினும்,
யான் அகம் மெலிகுவென், எயிற்று அரா என;
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்,
மேல் நகும், கீழ் நகும்; இனி என் வேண்டுமோ? 87

'மறந்திருந்து உய்கிலேன்; மாரி ஈதுஎனின்,
இறந்து விண் சேர்வது சரதம்; இப் பழி,
பிறந்து பின் தீர்வலோ? பின்னர், அன்னது
துறந்து சென்று உறுவலோ? துயரின் வைகுவேன்! 88

'ஈண்டு நின்று, அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்
காண்டலின், பற்பல காலம் காண்டுமால்;
வேண்டுவது அன்று இது; வீர! "நோய் தெற
மாண்டனன் என்றது" மாட்சிப்பாலது ஆம். 89

'செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம்
வெப்புறப் புரம் சுட, வெந்து வீவதோ-
அப்பு உருக் கொண்ட வாள் நெடுங் கண் ஆயிழை
துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்? 90

'நெய் அடை, தீ எதிர் நிறுவி, "நிற்கு இவள்
கையடை" என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்று அரோ. 91

'தேற்றுவாய், நீ உளையாக, தேறி நின்று
ஆற்றுவேன், நான் உளனாக, ஆய்வளை
தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி
மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ? 92

'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது, இமையவர் முதல் தொல்லையோர்
பட்டபோது, உலகமும் உயிரும் பற்று அறக்
கட்டபோது, அல்லது, மயிலைக் காண்டுமோ? 93

'தருமம் என்ற ஒரு பொருள்தன்னை அஞ்சி, யான்
தெருமருகின்றது; செறுநர் தேவரோடு
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்; -
உரும் என ஒலிபடும் உர விலோய்!' என்றான். 94

இலக்குவன் இராமனைத் தேற்றுதல்

இளவலும் உரைசெய்வான், 'எண்ணும் நாள் இனும்
உள அல; கூதிரும், இறுதி உற்றதால்;
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது; அயர்வது என்? - ஆணை ஆழியாய்! 95

'திரைசெய் அத் திண் கடல், அமிழ்தம் செங் கணான்
உரைசெயத் தரினும், அத் தொழில் உவந்திலன்;
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி, தன்
குரை மலர்த் தடக் கையால் கடைந்து கொண்டனன். 96

'மனத்தினின் உலகு எலாம் வகுத்து, வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும், நேமியோன் நெடும்
எனைப் பல படைக்கலம் ஏந்தி, யாரையும்,
வினைப் பெருஞ் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால். 97

'கண்ணுடை நுதலினன், கணிச்சி வானவன்,
விண்ணிடைப் புரம் சுட, வெகுண்ட மேலைநாள்,
எண்ணிய சூழ்ச்சியும், ஈட்டிக் கொண்டவும், -
அண்ணலே! - ஒருவரால் அறியற்பாலதோ? 98

'ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி, பின்
ஏகுறு நாளிடை எய்தி, எண்ணுவ
சேகு அறப் பல் முறை தெருட்டி, செய்த பின்,
வாகை என்று ஒரு பொருள் வழுவற்பாலதோ? 99

'அறத் துறை திறம்பினர், அரக்கர்; "ஆற்றலர்
மறத் துறை நமக்கு" என வலிக்கும் வன்மையோர் -
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டுஎனின்,
புறத்து, இனி யார் திறம் புகழும் வாகையும்? 100

'பைந்தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்துளது; இனி, வருத்தம் நீங்குவாய்;
அந்தணர்க்கு ஆகும் நாம்; அரக்கர்க்கு ஆகுமோ? -
சுந்தரத் தனு வலாய்! - சொல்லு, நீ' என்றான். 101

மழைக் காலம் மாறுதல்

உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்,
'இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு?' என்பது ஓர்
தெறு துயர் உழந்தனன் தேய, தேய்வு சென்று
அறுதியை அடைந்தது, அப் பருவம், ஆண்டு போய். 102

மழையின் பின் தோன்றிய கூதிர் காலத்து நிகழ்ச்சிகள்

மள்கல் இல் பெருங் கொடை மருவி, மண் உளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி, அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்,
வெள்கிய மாந்தரின், வெளுத்த - மேகமே. 103

தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது - மாரிப் பேர் இருள். 104

மூள் அமர் தொலைவுற, முரசு அவிந்தபோல்,
கோள் அமை கண முகில் குமுறல் ஓவின;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்றென மறைந்த, மின் எலாம். 105

தடுத்த தாள் நெடுந் தடங் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன; அருவி தூங்கின;
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று,
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே. 106

மேகம் மா மலைகளின் புறத்து வீதலால்,
மாக யாறு யாவையும் வாரி அற்றன;
ஆகையால், தகவு இழந்து, அழிவு இல் நன் பொருள்
போக, ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே. 107

கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில்
இடம் துறந்து ஏகலின், பொலிந்தது இந்துவும் -
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம்,
படம் திறந்து உருவலின், பொலியும் பான்மைபோல். 108

பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
பூசிய சந்தனம், புழுகு, குங்குமம்,
மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற
வீசின, நறும் பொடி விண்டு, வாடையே. 109

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்,
அந் நெறிப் பருவம் வந்து நணுகிற்று ஆதலால்,
"பொன்னினை நாடிய போதும்" என்பபோல்,
அன்னமும், திசை திசை அகன்ற, விண்ணின்வாய். 110

தம் சிறை ஒடுக்கின, தழுவும் இன்னல,
நெஞ்சு உறு மம்மரும், நினைப்பும் நீண்டன, -
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால், மயில் -
அஞ்சின, மிதிலை நாட்டு அன்னம் என்னவே. 111

வஞ்சனை, தீவினை, மறந்த மா தவர்
நெஞ்சு எனத் தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ;
'பஞ்சு' என, சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த, ஆடல் மீன். 112

ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன,
தாள்தொறு மலர்ந்தன, முதிர்ந்த தாமரை;
கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன,
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை. 113

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல் விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின், அவிந்த, நா எலாம். 114

செறி புனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து,
உறு துணைக் கால் மடுத்து ஓடி, ஓத நீர்
எறுழ் வலிக் கணவனை எய்தி, யாறு எலாம்,
முறுவலிக்கின்றன போன்ற, முத்து எலாம். 115

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்,
இல், நிறப் பசலை உற்று இருந்த மாதரின்,
தன் நிறம் பயப் பய நீங்கி, தள்ள அரும்
பொன் நிறம் பொருந்தின, பூகத் தாறு எலாம். 116

பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து, அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின,
வயின் தொறும், வயின் தொறும், மடித்த வாயின,
துயின்றன, இடங்கர் மா, தடங்கள்தோறுமே. 117

கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின,
அஞ்சிறை அறுபத அளக ஓதிய,
எஞ்சல் இல் குழையன, இடை நுடங்குவ -
வஞ்சிகள் பொலிந்தன, மகளிர் மானவே. 118

அளித்தன முத்துஇனம் தோற்ப, மான் அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி, மேன்மையால்
ஒளித்தன ஆம் என, ஒடுங்கு கண்ணன,
குளித்தன, மண்ணிடை - கூனல் தந்து எலாம். 119

மழை படப் பொதுளிய மருதத் தாமரை
தழை படப் பேர் இலைப் புரையில் தங்குவ,
விழைபடு பெடையொடும், மெள்ள, நள்ளிகள்,
புழை அடைத்து ஒடுங்கின, வச்சை, மாக்கள்போல். 120

மிகைப் பாடல்கள்

எண் வகை நாகங்கள், திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக;
கண்ணுதல் மிடறு எனக் கருகி, கார் விசும்பு
உள் நிறை உயிர்ப்பு என, ஊதை ஓடின. 9-1
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247