சுந்தர காண்டம்

3. காட்சிப் படலம்

அசோகவனத்துள் அனுமன் புகுதல்

மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,
'தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.' 1

என்று, சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார்;
அன்று, அ(வ்)வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த-
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம். 2

சீதையின் துயர நிலை

வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென் மருங்குல்போல், வேறு உள அங்கமும் மெலிந்தாள். 3

துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;
வெயிலிடைத் தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்;
மயில் இயல், குயில் மழலையாள், மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள். 4

விழுதல், விம்முதல், மெய்உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழத்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். 5

தழைத்த பொன் முலைத் தடம் கடந்து, அருவி போய்த் தாழப்
புழைத்த போல, நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும், நுண்ணிய மருங்குலாள், இணை நெடுங் கண்கள்,
'மழைக்கண்' என்பது காரணக் குறி என வகுத்தாள். 6

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும், கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டாலன்ன பிணியாள். 7

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினாள் தனை நினைதொறும், நெடுங் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அருந் துயர் உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து, ஒரு நிலை உறாத மென் துகிலாள். 8

'அரிது-போகவோ, விதி வலி கடத்தல்!' என்று அஞ்சி,
'பரிதிவானவன் குலத்தையும், பழியையும், பாரா,
சுருதி நாயகன், வரும் வரும்' என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள். 9

கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக் கவ்வி,
சுமமயுடைக் கற்றை, நிலத்திடைக் கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து, உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்,
குமையுறத் திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள். 10

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;
தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள். 11

கொல்லாது கொல்லும் நினைவுகள்

'கண்டிலன் கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர்? உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம்?' எனக் குழையா,
புண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள். 12

'மாண்டு போயினன் எருவைகட்கு அரசன்; மற்று உளரோ,
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள்? இப் பிறப்பில்
காண்டலோ அரிது' என்று, என்று, விம்முறும்; கலங்கும்;
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தாலென, மெலிவாள். 13

'என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு, "அறிவு இலள்" எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?' என்று, என்று, முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆர் உயிர் பதைப்பாள். 14

'அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்?' என்று அழுங்கும்;
'விருந்து கண்டபோது என் உறுமோ?' என்று விம்மும்;
'மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு?' என்று மயங்கும்-
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள். 15

'"வன்கண் வஞ்சனை அரக்கர், இத்துணைப் பகல் வையார்;
தின்பர்; என் இனிச் செயத்தக்கது?" என்று, தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன் பொறை எனத் தணிந்தானோ?
என்கொல் எண்ணுவேன்?' என்னும்-அங்கு, இராப் பகல் இல்லாள். 16

'பெற்ற தாயரும், தம்பியும், பெயர்த்தும் வந்து எய்தி,
கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்களோ? குறித்துச்
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி, அந் நகர் துன்னான்,
உற்றது உண்டு' எனா, படர் உழந்து, உறாதன உறுவாள். 17

'முரன் எனத் தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும், வரம்பு இல வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்?' எனப் பொருமா,
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் எனக் கவல்வாள். 18

இராமனைப் பற்றிய பழைய நினைவுகள்

'தெவ் மடங்கிய சேண் நிலம்'-கேகயர்-
தம் மடந்தை-'உன் தம்பியது ஆம்' என,
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி, வெதும்புவாள். 19

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்,
'இந் திருத் துறந்து ஏகு' என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 20

தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார் சிலை,
ஏங்கு மாத்திரத்து, இற்று இரண்டாய் விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள். 21

இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பல் நலம் பதினாயிரம் படை,
கன்னல் மூன்றில், களப் பட, கால் வளை
வில் நலம் புகழ்ந்து, ஏங்கி வெதும்புவாள். 22

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, 'எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள். 23

மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை, கைகளின் நீக்கி, வேறு
உய்த்த போது, தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகைச் செய்தி மனக்கொள்வாள். 24

உரம் கொள் தே மலர்ச் சென்னி, உரிமை சால்
வரம் கொள் பொன் முடி, தம்பி வனைந்திலன்,
திரங்கு செஞ் சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி, இரங்குவாள். 25

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்,
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து, அவன்
கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு, இறை
சிரித்த செய்கை நினைந்து, அழு செய்கையாள். 26

மழுவின் வானினன், மன்னரை மூ-எழு
பொழுதில் நூறி, புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில்
தழுவும் மேன்மை நினைந்து, உயிர் சாம்புவாள். 27

ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி, அது கண் பொடித்த நாள்,
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியைத் தன் தலைமேல் கொள்வாள். 28

வெவ் விராதனை மேவு அருந் தீவினை
வவ்வி, மாற்ற அருஞ் சாபமும் மாற்றிய
அவ் இராமனை உன்னி, தன் ஆர் உயிர்
செவ்விராது, உணர்வு ஓய்ந்து, உடல் தேம்புவாள்,- 29

திரிசடை தவிர பிற காவல் அரக்கியர் துயில் கொள்ளுதல்

இருந்தனள்; திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல் அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும், துயில் நறைக் களி பொருந்தினார். 30

சீதை நல் நிமித்தம் பற்றி திரிசடையிடம் கூறல்

ஆயிடை, திரிசடை என்னும், அன்பினால்
தாயினும் இனியவள்தன்னை நோக்கினாள்,
'தூய நீ கேட்டி, என் துணைவி ஆம்' எனா,
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்; 31

'நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்
சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-
பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்
வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன். 32

'முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,
துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,
இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்
நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய். 33

'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்
துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே. 34

'நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்
எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;
"அஞ்சல்" என்று இரங்குவாய்! அடுப்பது யாது?' என்றாள். 35

திரிசடை நற்குறிப் பயன் உரைத்தல்

என்றலும், திரிசடை, 'இயைந்த சோபனம்!
நன்று இது! நன்று!' எனா, நயந்த சிந்தையாள்,
'உன் துணைக் கணவனை உறுதல் உண்மையால்;
அன்றியும், கேட்டி' என்று, அறைதல் மேயினாள்: 36

'உன் நிறம் பசப்பு அற, உயிர் உயிர்ப்புற,
இன் நிறத் தேன் இசை, இனிய நண்பினால்,-
மின் நிற மருங்குலாய்! - செவியில், மெல்லென,
பொன் நிறத் தும்பி வந்து, ஊதிப் போயதால். 37

'ஆயது தேரின், உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம்; என்
வாயது கேள்' என, மறித்தும் கூறுவாள்: 38

'துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;
அயில்விழி! அனைய கண் அமைந்து நோக்கினேன்;
பயில்வன பழுது இல; பழுதின் நாடு என;
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்; 39

'எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத்
திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்,
அண்ணல் அவ் இராவணன், அரத்த ஆடையன்,
நண்ணினன், தென்புலம்-நவை இல் கற்பினாய்!' 40

'மக்களும், சுற்றமும், மற்றுளோர்களும்,
புக்கனர் அப் புலம்; போந்தது இல்லையால்;
சிக்கு அற நோக்கினென்; தீய, இன்னமும்
மிக்கன, கேட்க' என, விளம்பல் மேயினாள்: 41

'ஆண் தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில; பிறந்தவால், இனம் கொள் செஞ் சிதல்;
தூண்ட அரு மணி விளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால், வான ஏறு எறிய, கீழை நாள். 42

'பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்,
இடி என முழங்குமால், இரட்டல் இன்றியே;
தடியுடை முகிற்குலம் இன்றி, தா இல் வான்
வெடிபட அதிருமால்; உதிரும், மீன் எலாம். 43

'வில்-பகல் இன்றியே, இரவு விண்டு அற,
எல் பகல் எறித்துளது என்னத் தோன்றுமால்:
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால். 44

'திரியுமால், இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால், இருள். 45

தோரணம் முறியுமால், துளங்கி; சூழி மால்
வாரணம் முறியுமால், வலத்த வாள் மருப்பு;
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால். 46

'விண் தொடர் மதியினைப் பிளந்து, மீன் எழும்;
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை;
தண்டொடு, திகிரி, வாள், தனு, என்று இன்னன,
மண்டு அமர் புரியுமால், ஆழி மாறு உற. 47

'மங்கையர் மங்கலத் தாலி, மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே,
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்,
இங்கு, இதின் அற்புதம், இன்னும் கேட்டியால்: 48

'மன்னவன் தேவி, அம் மயன் மடந்தைதன்
பின் அவிழ் ஓதியும், பிறங்கி வீழ்ந்தன;
துன் அருஞ் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறிற்றால்;
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே. 49

என்றனள் இயம்பி, 'வேறு இன்னும் கேட்டியால்,
இன்று, இவண், இப்பொழுது, இயைந்தது ஓர் கனா:
வன் துணைக் கோள்அரி இரண்டு மாறு இலாக்
குன்றிடை உழுவைஅம் குழுக் கொண்டு ஈண்டியே. 50

'வரம்பு இலா மத கரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன; நெருக்கி நேர்ந்தன;
வரம்பு அறு பிணம்படக் கொன்ற; மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும், போயதால். 51

'ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி, செய்யவள்,
நாயகன் திருமனைநின்று, நண்ணுதல்
மேயினள், வீடணன் கோயில்;-மென் சொலாய்! 52

'பொன் மனை புக்க அப் பொரு இல் போதினில்,
என்னை நீ உணர்த்தினை; முடிந்தது இல்' என,
'அன்னையே! அதன் குறை காண்' என்று, ஆயிழை,
'இன்னமும் துயில்க' என, இரு கை கூப்பினாள். 53

சீதையின் இருக்கையை அனுமன் காணுதல்

இவ் இடை, அண்ணல் அவ் இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்,
அவ் இடை எய்தினன், அரிதின் நோக்குவான்,
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான். 54

அரக்கியர் துயிலுணர்ந்து சீதையைச் சுற்றி நிற்றல்

அவ் வயின் அரக்கியர் அறிவுற்று, 'அம்மவோ!
செவ்வை இல் துயில் நமைச் செகுத்தது ஈது!' எனா,
எவ் வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்-
வெவ் அயில், மழு, எழு, சூல வெங் கையார். 55

எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்,
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்,
பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர்,
துண்ணெனத் துயில் உணர்ந்து, எழுந்து சுற்றினார். 56

சீதை தேம்புதலும், மரத்தின்மேலிருந்து அனுமன் காணுதலும்

ஆயிடை, உரை அவிந்து, அழகன் தேவியும்,
நீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள்;
நாயகன் தூதனும், விரைவில் நண்ணினான்,
ஓய்விலன், உயர் மரப் பனையின் உம்பரான். 57

'அரக்கியர்; அயில் முதல் ஏந்தும் அங்கையர்;
நெருக்கிய குழுவினர்; துயிலும் நீங்கினர்;
இருக்குநர் பலர்; இதற்கு ஏது என்?' எனா,
பொருக்கென அவரிடைப் பொருந்த நோக்கினான். 58

விரி மழைக் குலம் கிழித்து ஒளிரும் மின் என,
கரு நிறத்து அரக்கியர் குழுவில், கண்டனன்-
குரு நிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை. 59

'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள்,
மடக் கொடிச் சீதையாம் மாதரேகொலாம்?
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர்ப் பெருந்
தடத்திடை இருந்தது ஓர் அன்னத் தன்மையாள். 60

அரக்கியர் நடுவில் இருப்பவள் சீதைதான் என அனுமன் அறிதல்

'எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில,
கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா! 61

மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்;
ஆவதே; ஐயம் இல்; அரவின் நீங்கிய
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே. 62

அனுமனின் குதூகலம்

'வீடினதுஅன்று அறன்; யானும் வீகலேன்;
தேடினென் கண்டனென்; தேவியே!' எனா,-
ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து,
ஓடினன்; உலாவினன்;-உவகைத் தேன் உண்டான். 63

சீதையின் தூய்மை கண்டு அனுமன் வியத்தல்

'மாசுண்ட மணி அனாள், வயங்கு வெங் கதிர்த்
தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்;
காசுண்ட கூந்தலாள் கற்பும், காதலும்
ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ ? 64

'புனை கழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம் குலத்தையோ? யாதைச் சாற்றுகேன்? 65

'தேவரும் பிழைத்திலர்; தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர்; அறமும் ஈறு இன்றால்;
யாவது இங்கு இனிச் செயல் அரியது, எம்பிராற்கு?
ஆவ! என் அடிமையும் பிழைப்பு இன்றாம்அரோ. 66

'"கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்,
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள,
ஊழியின் இறுதி வந்துறும்" என்று உன்னினேன்;
வாழிய உலகு, இனி வரம்பு இல் நாள் எலாம்! 67

'வெங் கனல் முழுகியும், புனலுள் வீக்கியும்,
நுங்குவ, அருந்துவ, நீக்கி, நோற்பவர்
எங்கு உளர்?-குலத்தில் வந்து, இல்லின் மாண்புடை
நங்கையர் மனத் தவம் நவிலற்பாலதோ? 68

'பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில, அவன் கமலக் கண்களே! 69

'முனிபவர் அரக்கியர், முறையின் நீங்கினார்;
இனியவள்தான் அலாது, யாரும் இல்லையால்;
தனிமையும், பெண்மையும், தவமும், இன்னதே!-
வனிதையர்க்கு ஆக, நல் அறத்தின் மாண்பு எலாம்! 70

'தருமமே காத்ததோ? சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ? 71

'செல்வமோ அது? அவர் தீமையோ இது?
அல்லினும் பகலினும் அமரர் ஆட் செய்வார்,
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை, அறத்தை மெய்ம்மையால்?' 72

இராவணன் அங்கே தோன்றுதல்

என்று, இவை இனையன எண்ணி, வண்ண வான்
பொன் திணி நெடு மரப் பொதும்பர் புக்கு, அவண்
நின்றனன்; அவ் வழி நிகழ்ந்தது என் எனின்,
துன்று பூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான். 73

இராவணனின் பெருமிதத் தோற்றம்

சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழித் திரண்டன சிவண,
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க,
சகர நீர் வேலை தழுவிய கதிரின், தலைதொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப, கங்குலும் பகல்பட, வந்தான். 74

உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர, மேனகை வெள்ளடை உதவ,
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர் குழாம் புடை சுற்ற,
கருப்புரச் சாந்தும், கலவையும், மலரும், கலந்து உமிழ் பரிமளகந்தம்,
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப; 75

நான நெய் விளக்கு நால்-இரு கோடி, நங்கையர் அங்கையில் ஏந்த,
மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க,
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப, கிண்கிணி கலையொடும் கலிப்ப,
பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தென்னப் பற்பல மங்கையர் படர; 76

'அந்தரம் புகுந்தது உண்டு என,முனிவுற்று,அருந் துயில் நீங்கினான்;ஆண்டைச்
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறுஞ் சோலையின் தனையோ?
வந்தது இங்கு யாதோ? யாரொடும் போமோ?' என்று, தம் மனம் மறுகுதலால்,
இந்திரன் முதலோர், இமைப்பிலா நாட்டத்து யாவரும், உயிர்ப்பு அவிந்திருப்ப; 77

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்புற, பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ,
சூல் நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என,மார்பில் நூல்துளங்க;78

தோள்தொறும் தொடர்ந்த, மகரிகை வயிரக் கிம்புரி வலய மாச் சுடர்கள்
நாள்தொறும் சுடரும் கலி கெழு விசும்பில், நாளொடு கோளினை நக்க,
நாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொற்கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ,
கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முகமலர் இரவினும் கிளர; 79

தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ;
மின் நிறக் கதிரின் சுற்றிய பசும் பொன் விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின; 80

சன்னவீரத்த கோவை வெண் தரளம், ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடுவரையில் தொத்திய கோளும், நாளும் ஒத்து, இடை இடை பொலிய;
மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின் மீப்படர் வெங் கதிர்ச் செல்வர்
பன்னிருவரினும், இருவரைத் தவிர்வுற்று, உதித்தது ஓர் படி, ஒளி பரப்ப; 81

பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடிய, படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக் காவல் மால் யானை,
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடந் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின், நின்று அஞ்ச;82

அம் கயல் கருங் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர், விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த நாரியர், அரக்கியர், முதலாம்,
குங்குமக் கொம்மைக் குவி முலை, கனிவாய், கோகிலம் துயர்ந்த மென் குதலை,
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க; 83

தொளை உறு புழை வேய்த் தூங்கு இசைக் கானம் துயலுறாது ஒரு நிலை தொடர,
இளையவர் மிடறும் இந் நிலை இசைப்ப, கின்னரர் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில்லரிப் பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி,
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும், அளப்ப; 84

அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த,
உன்னரும் பொன்னின், மணியினின் புனைந்த இழைக் குலம், மழைக் கருங் கடைக் கண்,
மின் இடை, செவ் வாய், குவி முலை, பணைத் தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப; 85

தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்,
முந்துறு குணிலோடு இயைவுறு குறட்டில், சில்லரிப் பாண்டிலில், முறையின்,
மந்தர கீதத்து இசைப் பதம் தொடர, வகை உறு கட்டளை வழாமல்,
அந்தர வானத்து அரம்பையர், கரும்பின் பாடலார், அருகு வந்து ஆட; 86

அந்தியில், அநங்கன், அழல்படத் துரந்த அயின்முகப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்தென்ன, வெண் மதிப் பசுங் கதிர் விரவ,
மந்த மாருதம் போய் மலர்தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வருதேன்
சிந்து நுண் துளியின் சீகரத் திவலை, உருக்கிய செம்பு எனத் தெறிப்ப; 87

இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும், இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும், குறு நகைக் குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண் கண் செங் கடை ஈட்டம், மார்பினும் தோளினும், மலைய; 88

மாலையும், சாந்தும், கலவையும், பூணும், வயங்கு நுண் தூசொடு, காசும்,
சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும், கொண்டு பின் தொடர,
பாலின் வெண் பரவைத் திரை கருங் கிரிமேல் பரந்தெனச் சாமரை பதைப்ப,
வேலைநின்று உயரும் முயல் இல்வெண் மதியின்,வெண்குடை மீதுறவிளங்க;89

ஆர்கலி அகழி, அரு வரை, இலங்கை, அடி பெயர்த்து இடுதொறும் அழுந்த,
நேர்தரும் பரவைப் பிறழ் திரை, தவழ்ந்து நெடுந் தடந் திசைதொறும் நிமிர,
சார்தரும் கடுவின் எயிறுடைப் பகு வாய் அனந்தனும் தலை தடுமாற,
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை, முதுகு உளுக்குற்றனள் முரல; 90

கேடகத்தோடு, மழு, எழு, சூலம், அங்குசம், கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர் வாள், அயில், சிலை, குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர், தட வரை பொறுக்கும்
குடகத் தடக் கை, சுடு சினத்து, அடு போர், அரக்கியர் தலைதொறும், சுமப்ப; 91

விரிதளிர், முகை, பூ, கொம்பு, அடை, முதல், வேர் இவை எலாம், மணி, பொனால், விரிந்த
தரு உயர் சோலை திசைதொறும் கரியத் தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ,
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும், திகைப்புறு சிந்தையான், கெடுத்தது
ஒரு மணி நேடும் பல் தலை அரவின், உழைதொறும், உழைதொறும், உலாவி; 92

இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை,
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன், அமைவுற நோக்கி,
'வினையமும் செயலும், மேல் விளை பொருளும், இவ் வழி விளங்கும்' என்று எண்ணி,
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன், வந்து அயல் மறைந்தே. 93

ஆயிடை, அரக்கன் அரம்பையர் குழுவும், அல்லவும், வேறு அயல் அகல,
மேயினன், பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி; ஆண்டு, அவள், வெருவி,
போயின உயிரளாம் என நடுங்கி, பொறி வரி, எறுழ் வலி, புகைக் கண்,
காய் சின, உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என, கரைந்தாள். 94

மூவர் மனநிலை

கூசி ஆவி குலைவுறுவாளையும்,
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்,
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்-
ஊசல் ஆடி உளையும் உளத்தினான். 95

அனுமன் சானகியைத் தன் மனத்துள் வாழ்த்துதல்

'வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல் அறம்!' என்று உற வாழ்த்தினான்-
ஊழிதோறும் புதிது உறும் கீர்த்தியான். 96

இராவணன் சீதையை இரத்தல்

அவ் இடத்து அருகு எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்து எனக்கு இன் அருள் ஈவது?
நொவ் இடைக் குயிலே! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான். 97

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று, இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்,
ஆசைப்பாடும் அந் நானும் அடர்த்திட,
கூசிக் கூசி, இனையன கூறினான்: 98

'இன்று இறந்தன; நாளை இறந்தன;
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று, இறந்தபின் கூடுதியோ?-குழை
சென்று, இறங்கி, மறம் தரு செங் கணாய்! 99

'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில்,
திலகமே! உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது, எளிமையும் காண்டியோ? 100

'பூந் தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை; இன் உயிர்க்
காந்தன் மாண்டிலன், காடு கடந்து போய்,
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ? 101

'நோற்கின்றார்களும், நுண் பொருள் நுண்ணிதின்
பார்க்கின்றாரும், பெறும் பயன் பார்த்தியேல்,
வார்க் குன்றா முலை! என் சொல், மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால். 102

'பொருளும், யாழும், விளரியும், பூவையும்,
மருள, நாளும், மழலை வழங்குவாய்!
தெருளும் நான்முகன் செய்தது, உன் சிந்தையின்
அருளும், மின் மருங்கும், அரிது ஆக்கியோ? 103

'ஈண்டு நாளும், இளமையும், மீண்டில;
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய;
வேண்டு நாள் வெறிதே விளிந்தால், இனி,
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ? 104

'இழவு, எனக்கு, உயிர்க்கு எய்தினும் எய்துக,
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்;
பழக நிற்புறும் பண்பு இவை, காமத்தோடு,
அழகினுக்கு, இனி யார் உளர் ஆவரே? 105

'பெண்மையும், அழகும், பிறழா மனத்
திண்மையும், முதல் யாவையும், செய்ய ஆய்,
கண்மையும் பொருந்தி, கருணைப் படா
வண்மை என்கொல், சனகரின் மடந்தையே! 106

'வீட்டும் காலத்து அலறிய மெய்க் குரல்
கேட்டும், காண்டற்கு இருத்திகொல்?- கிள்ளை! நீ-
நாட்டுங்கால், நெடு நல் அறத்தின் பயன்
ஊட்டும் காலத்து, இகழ்வது உறும்கொலோ? 107

'தக்கது என் உயிர் வீடு எனின், தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; "ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது" எனும் புகழ் போக்கி, வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ? 108

'தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தா இல் மூஉலகின் தனி நாயகம்
மேவுகின்றது, நுன்கண்; விலக்கினை;
ஏவர் ஏழையர் நின்னின், இலங்கிழாய்? 109

'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால்' எனா,
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்,
படியின் மேல் விழுந்தான், பழி பார்க்கலான். 110

சீதை சொன்ன வெய்ய மாற்றங்கள்

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவாமுன்னம்,
தீய்ந்தன செவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரி
பாய்ந்தன, கண்கள்; ஒன்றும் பரிந்திலள், உயிர்க்கும்; பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல, வெய்ய, மாற்றங்கள் இனைய சொன்னாள்: 111

மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்,
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம், கற்பின்மேல் கண்டது உண்டோ ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி, துரும்பு!' எனக் கனன்று, சொன்னாள். 112

'மேருவை உருவல் வேண்டின், விண் பிளந்து ஏகல் வேண்டின்,
ஈர்-எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது; அறிந்து இருந்து, -அறிவு இலாதாய்!-
சீரியஅல்ல சொல்லி, தலை பத்தும் சிந்துவாயோ? 113

'அஞ்சினை ஆதலான், அன்று, ஆரியன் அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி, மாயையால் மறைந்து வந்தாய்;
உஞ்சனை போதி ஆயின், விடுதி; உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்தபோது, நோக்குமே நினது நாட்டம்? 114

'பத்து உள தலையும், தோளும், பல பல பகழி தூவி,
வித்தக வில்லினாற்கு, திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்; அல்லது, செருவில் ஏற்கும்
சத்தியை போலும்?'-மேல் நாள், சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்! 115

'தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளு நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய்; அன்றுஎனின், இறத்தி அன்றே?
நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்த எல்லாம்,
கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ ? 116

'பெற்றுடை வாளும் நாளும், பிறந்துடை உரனும், பின்னும்
மற்றுடை எவையும், தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று இடைந்து இறுதல் மெய்யே; -விளக்கின் முன் இருள் உண்டாமோ? 117

'குன்று நீ எடுத்த நாள், தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத் தனிச் சரம் துரந்த மேரு,
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது, இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா! 118

'"மலை எடுத்து, எண் திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன்" எனும் மாற்றம் நேரும் நீ,
சிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலை;
தலை எடுத்து, இன்னமும், மகளிர்த் தாழ்தியோ? 119

'ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என,
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள்,
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ? 120

சீதை நயமொழிகளாலும் அறநெறி காட்டுதல்

'வெஞ் சின அரக்கரை வீய்த்து வீயுமோ?
வஞ்சனை நீ செய, வள்ளல் சீற்றத்தால்,
எஞ்சல் இல் உலகு எலாம் எஞ்சும், எஞ்சும்! என்று
அஞ்சுகின்றேன்; இதற்கு அறனும் சான்றுஅரோ! 121

'அங்கண் மா ஞாலமும், விசும்பும், அஞ்ச வாழ்
வெங்கணாய்!-புன் தொழில் விலக்கி மேற்கொளாய்;
செங் கண் மால், நான்முகன், சிவன், என்றே கொலாம்,
எங்கள் நாயகனையும் நினைந்தது?-ஏழை, நீ! 122

'"மானுயர் இவர்" என மனக் கொண்டாய்எனின்,
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் -
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின்,
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால். 123

'இருவர் என்று இகழ்ந்தனை என்னின், யாண்டு எல்லை,
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்;
செரு வரும்காலை, என் மெய்ம்மை தேர்தியால்-
பொரு அருந் திரு இழந்து, அநாயம் பொன்றுவாய். 124

'பொற்கணான், தம்பி, என்று இனைய போர்த் தொழில்
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர், வேறு உளார்,
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும்,
இற்கணார் இறந்திலர்; இறந்து நீங்கினார். 125

'பூவிலோன் ஆதியாக, புலன்கள் போம் நெறியில் போகாத்
தேவரோ, அவுணர்தாமோ, நிலை நின்று வினையின் தீர்ந்தார்?
ஏவல் எவ் உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்!
பாவமோ? முன் நீ செய்த தருமமோ? தெரியப் பாராய்! 126

'இப் பெருஞ் செல்வம் நின்கண் ஈந்த பேர் ஈசன், யாண்டும்
அப் பெருஞ் செல்வம் துய்ப்பான், நின்று மா தவத்தின் அன்றே?
ஒப்பு அருந் திருவும் நீங்கி, உறவொடும் உலக்க உன்னி,
தப்புதி அறத்தை; ஏழாய்! தருமத்தைக் காமியாயோ? 127

'மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும், மாண்டார்,
அறம் திறம்பினரும், மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே?
பிறந்து இறந்து உழலும் பாசப் பிணக்குடைப் பிணியின் தீர்ந்தார்,
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர், பிறர் யார்? சொல்லாய்! 128

'தென் தமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர் முனிவர் யாரும்,
"புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்; நோற்கிலெம்; புகுந்த போதே,
கொன்று அருள்; நின்னால் அன்னார் குறைவது சரதம்; கோவே!"
என்றனர்; யானே கேட்டேன்; நீ அதற்கு இயைவ செய்தாய். 129

'உன்னையும் கேட்டு, மற்று உன் ஊற்றமும், உடைய நாளும்,
பின்னை இவ் அரக்கர் சேனைப் பெருமையும், முனிவர் பேணிச்
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் தோளும் தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ? 130

'ஆயிரம் தடக்கையால் நின் ஐந் நான்கு கரமும் பற்றி,
வாய் வழி குருதி சோரக் குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ?-நீதி நிலை அறிந்திலாத நீசா! 131

'கடிக்கும் வல் அரவும் கேட்கும், மந்திரம்; களிக்கின்றோயை,
"அடுக்கும், ஈது அடாது" என்று, ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி,
இடிக்குநர் இல்லை; உள்ளார், எண்ணியது எண்ணி, உன்னை
முடிக்குநர்; என்றபோது, முடிவு அன்றி முடிவது உண்டோ ?' 132

இராவணனின் சீற்றம்

என்று அறத் துறை கேட்டலும், இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன; வெயில் விடு பகு வாய்
குன்று இறத் தெழித்து உரப்பின; குறிப்பது என்? காமத்
தின் திறத்தையும் கடந்தது, சீற்றத்தின் தகைமை. 133

வளர்ந்த தாளினன்; மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன்; அனல் சொரி கண்ணினன்; 'இவளைப்
பிளந்து தின்பென்' என்று உடன்றனன்; பெயர்ந்தனன்; பெயரான்;
கிளர்ந்த சீற்றமும், காதலும், எதிர் எதிர் கிடைப்ப. 134

இராவணனது நிலை கண்ட அனுமன் உளத்து எழுந்த சிந்தனை

அன்ன காலையில், அனுமனும், 'அருந்ததிக் கற்பின்,
என்னை ஆளுடை நாயகன், தேவியை, என் முன்,
சொன்ன நீசன், கை தொடுவதன்முன், துகைத்து உழக்கி,
பின்னை, நின்றது செய்குவென்' என்பது பிடித்தான். 135

'தனியன் நின்றனன்; தலை பத்தும் கடிது உகத் தாக்கி,
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி,
புனித மா தவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்,
இனிதின்' என்பது நினைந்து, தன் கரம் பிசைந்திருந்தான். 136

சீற்றம் தணிந்த இராவணன் சீதையை நோக்கி மீண்டும் பேசுதல்

ஆண்டு, அ(வ்) வாள் அரக்கன் அகத்து, அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெந் தீ என முற்றிய சீற்றம்,
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற, நிலையின்
மீண்டு நின்று, ஒரு தன்மையால் இனையன விளம்பும்: 137

'கொல்வென் என்று உடன்றேன்; உன்னைக் கொல்கிலென்; குறித்துச் சொன்ன
சொல் உள; அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின்,
"ஒல்வது ஈது; ஒல்லாது ஈது" என்று, எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ ?
வெல்வதும் தோற்றல்தானும் விளையாட்டின் விளைந்த, மேல்நாள். 138

'ஒன்று கேள், உரைக்க: "நிற்கு ஓர் உயிர் என உரியோன்தன்னைக்
கொன்று கோள் இழைத்தால், நீ நின் உயிர் விடின், கூற்றம் கூடும்;
என்தன் ஆர் உயிரும் நீங்கும்" என்பதை இயைய எண்ணி,
அன்று நான் லஞ்சம் செய்தது; ஆர், எனக்கு அமரில் நேர்வார்? 139

'மான் என்பது அறிந்து போன மானிடர்ஆவார், மீண்டு,
யான் என்பது அறிந்தால் வாரார்; ஏழைமை, எண்ணி நோக்கல்;
தேன் என்பது அறிந்த சொல்லாய்! தேவர்தாம் யாவரே, எம்
கோன் என்பது அறிந்த பின்னை, திறம்புவார், குறையின் அல்லால்? 140

'வென்றோரும் இருக்க; யார்க்கும் மேலவர், விளிவு இலாதோர்,
என்றோரும் இருக்க; அன்றே, இந்திரன் ஏவல் செய்ய,
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன், யானே!
மென் தோளாய்! இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ ? 141

'மூவரும் தேவர்தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை! நின் பொருட்டினால் ஓர் பழி பெற, பயன் தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர்தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டுக்
கூவி நின்று, ஏவல் கொள்வேன்; காணுதி-குதலைச் சொல்லாய்! 142

'சிற்றியல், சிறுமை ஆற்றல், சிறு தொழில், மனிதரோடே
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும்,
இற்றை, இப் பகலில், நொய்தின், இருவரை ஒரு கையாலே
பற்றினென்கொணரும் தன்மை காணுதி;-பழிப்பு இலாதாய்! 143

இராவணன் சீதையை அச்சுறுத்திச் செல்லுதல்

'பதவிய மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கின், உயிர்க் கொலைக்கு உரியர் அல்லர்;
சிதைவுறல் அவர்க்கு வேண்டின், செய் திறன் நேர்ந்தது எண்ணின்,
இதன் நினக்கு ஈதே ஆகின், இயற்றுவல்; காண்டி! இன்னும், 144

'பள்ள நீர் அயோத்தி நண்ணி, பரதனே முதலினோர், ஆண்டு
உள்ளவர்தம்மை எல்லாம் உயிர் குடித்து, ஊழித் தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேர்அறுத்து, எளிதின் எய்திக்
கொள்வென், நின் உயிரும்; என்னை அறிந்திலை-குறைந்தநாளோய்!' 145

ஈது உரைத்து, அழன்று பொங்கி, எரி கதிர் வாளை நோக்கி,
'தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது;
ஆதலின், பின்னை, நீயே அறிந்தவாறு அறிதி' என்னா,
போது அரிக் கண்ணினாளை அகத்து வைத்து, உரப்பிப் போனான். 146

தீய அரக்கிமார்கள் சீதையை அதட்டுதல்

போயினன் அரக்கன்; பின்னை, பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றி,
தீய வல் அரக்கிமார்கள், தெழித்து, இழித்து, உரப்பி, சிந்தை
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான், உடன்று மிக்கார். 147

முன் முன் நின்றார், கண் கனல் சிந்த முடுகுற்றார்;
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி,
'கொல்மின்! கொல்மின்! கொன்று குறைத்து, குடர் ஆரத்
தின்மின்! தின்மின்!' என்று தெழித்தார், சிலர் எல்லாம். 148

'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம் ஆயிரம் வல்லோன், அறிவாளன்,
மெய் அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்?' என்றார், சிலர் எல்லாம். 149

'மண்ணில் தீய மானுயர் தத்தம் வழியோடும்,
பெண்ணில் தீயோய்! நின் முதல் மாயும் பிணி செய்தாய்,
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி; பொது நோக்காது
எண்ணிக் காணாய், மெய்ம்மையும்' என்றார், சிலர் எல்லாம். 150

'புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகை வெந் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ? உணர்வு இல்லாய்!
இக் கணம் இற்றாய்; உன் இனம் எல்லாம் இனி வாழா;
சிக்க உரைத்தேம்' என்று தெழித்தார், சிலர் எல்லாம். 151

திரிசடை சொல்லால் சீதை தேறுதல்

இன்னோரன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
'முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு, அம்மா!
பின்னே, வாளா பேதுறுவீரேல், பிழை' என்றாள்,
'அன்னே, நன்று!' என்றாள்; அவர் எல்லாம் அமைவுற்றார். 152

அறிந்தார், அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல;
பிறிந்தார் சீற்றம்; மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்;
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார்;
நெறிந்து ஆர் ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள். 153

மிகைப் பாடல்கள்

எயிலின் உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி,
மயல் அறத் தனி தேடிய மாருதி, வனசக்
குயில் இருந்த அச் சோலை கண்டு, இதயத்தில் குறித்தான். 1-1

அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத் தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து,
இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட, ஓர்
தஞ்சம் மற்று இலை; தான் ஒரு தனி இருந்து அயர்வாள். 2-1

கண்ணின் நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம் கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணை நோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து உயிர்க்கும்;
எண்ணும்; மாறு இலாப் பிணியினால் இவை இவை இயம்பும்; 10-1

'மாய மானின்பின் தொடர்ந்த நாள், "மாண்டனன்" என்று
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன்
போய், அவன் செயல் கண்டு, உடல் பொன்றினன் ஆகும்;
ஆயது இன்னது என்று அறிந்திலேன்' என்று என்றும் அயர்வாள். 16-1

இன்ன எண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர்
துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கை துணை இன்றி, வேறு இலாள். 29-1

தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள். 29-2

அன்னள் ஆய அருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில் மாருதியும் வர,
தன் இடம் துடித்து எய்துற, சானகி
என்னும் மங்கை, இனிது இருந்தாள்அரோ. 29-3

'தாட்சி இன்று' என், திரிசடையும், 'சாலவும்
மாட்சியின் அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய்! இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய். 32-1

மீட்டும், அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
'தோள் தடம் பொரு குழைத் தொண்டைத் தூய்மொழி!
கேட்டி; வெங் கடு எனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை; யாவரும் நடுக்கம் காண்டுமால். 53-1

வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள் வெம் பிலன் என, தொட்ட வாயினர். 55-1

ஒருபது கையினர், ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர், இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர்; விகட வேடத்தர்;
பருவரை என, முலை பலவும் நாற்றினர். 55-2

சிரம் ஒரு மூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒரு மூன்றினார்; காலும் மூன்றினார்;
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார். 55-3

சூலம், வாள், சக்கரம், தோட்டி, தோமரம்,
கால வேல், கப்பணம், கற்ற கையினர்;
ஆலமே உருவு கொண்டனைய மேனியர்;
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார். 55-4

கரி, பரி, வேங்கை, மாக் கரடி, யாளி, பேய்,
அரி, நரி, நாய், என அணி முகத்தினர்;
வெரிந் உறு முகத்தினர்; விழிகள் மூன்றினர்;
புரிதரு கொடுமையர்; புகையும் வாயினர். 55-5

என்ன வாழ்த்திய மாருதி, 'ஈது நாம்
இன்னும் காண்டும்' என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும் அவ் இடத்து ஆயினான். 96-1

'இன்று நாளை அருளும் திருவருள்
என்று கொண்டு, இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனை கூடுதியோ? குழை
தின்று உறங்கி மறம் தவாச் செல்வியே! 99-1

என்றனன், எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி,
நி.....லத் தாவி நிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின் சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ, மெல்லச்
சென்று, அவன் தன்னைச் சார்ந்தாள், மயன் அருள் திலகம் அன்னாள். 145-1

பொருக்கென அவனி....க....கொடி முறுவல் பூப்ப,
அரக்கர் கோமகனை நோக்கி, 'ஆண்மை அன்று; அழகும் அன்றால்-
செருக்கு உறு தவத்தை, கற்பின் தெய்வத்தை, திருவை, இன்னே
வெருக் கொளச் செய்வது! ஐயா!' என, இவை விளம்பலுற்றாள்: 145-2

'செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார்,
வெம்மை உற்று உன்மேல் வீழ்வார், வெள்கியே நகை செய்து ஓத,
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்தன்னை
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே. 145-3

'புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ? என்றும் கொள்ளாய்!
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு' என, மதிப்பி ..........
......................................................................................... 145-4

'வாச மென் குழலினாரால், மண்ணினில், வானில், யார்க்கும்
நாசம் வந்து ஏன்று....... மறைகளே நலிலும் மாற்றம்,
பூசல் வண்டு உறையும் தாராய்! அறிந்தும் நீ, புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும்?............................ 145-5

'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின் செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்; அன்றேல்,
நஞ்சு உமக்கு ஆவென்' என்னா, நகை இலா முகத்து, பேழ் வாய்,
வெஞ் சினத்து அரக்கிமார்க்கு, வேறுவேறு உணர்த்திப் போனான். 146-1

என்றார்; இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாறக்
கன்றாநின்றார், காலும் எயிற்றார், கனல் கண்ணார்;
ஒன்றோ? மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா!
பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார்; 151-1

கொல்வான் உற்றோர் பெற்றியும், 'யாதும் குறையாதான்
வெல்வான், நம்கோன்; தின்னுமின்; வம்!' என்பவர் மெய்யும்,
வல் வாய் வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள்,
நல்லாள்; நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள். 151-2

தீயோர் செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும், மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றே அன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச் சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான். 153-1
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247