கடல் தாவு படலம் - Kadal Thaavu Padalam - சுந்தர காண்டம் - Sundara Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



சுந்தர காண்டம்

கடவுள் வாழ்த்து

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!'

1. கடல் தாவு படலம்

துறக்க நாட்டை இலங்கை என்று அனுமன் ஐயுற்றுத் தெளிதல்

ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
'ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;
'காண் தகு கொள்கை உம்பர் இல்' என, கருத்துள் கொண்டான். 1

இலங்கையைக் கண்ட அனுமன் ஆர்த்தல்

கண்டனன், இலங்கை மூதூர்க் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியின் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும் எல்லாம்;
அண்டமும் திசைகள் எட்டும் அதிர, தோள் கொட்டி ஆர்த்தான். 2

அப்போது மயேந்திர மலையில் நிகழ்ந்த குழப்பம்

வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள்தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான. 3

புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சீயம் பொங்கி,
உகல் அருங் குருதி கக்கி, உள்ளுற நெரிந்த; ஊழின்,
அகல் இரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகி,
பகல் ஒளி கரப்ப, வானை மறைத்தன, பறவை எல்லாம். 4

மொய் உறு செவிகள் தாவி முதுகு உற, முறை கால் தள்ள,
மை அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய, மெல்லென் பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் பற்றி, பிளிறின-களி நல் யானை. 5

பொன் பிறழ் சிமயக் கோடு பொடியுற, பொறியும் சிந்த,
மின் பிறழ் குடுமிக் குன்றம் வெரிந் உற விரியும் வேலை,
புன் புற மயிரும் பூவா, கண்புலம் புறத்து நாறா,
வன் பறழ் வாயில் கவ்வி, வல்லியம் இரிந்த மாதோ. 6

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்ந் நெரிந்து சிந்த,
தூக்குறு தோலர், வாளர், துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்குறு செருவில், நேர்ந்தார் தாள் அற வீச, தாவி,
மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர்-விஞ்சை வேந்தர். 7

தாரகை, சுடர்கள், மேகம், என்று இவை தவிரத் தாழ்ந்து,
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு என, குமிழி, பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே! 8

தாது உகு நறு மென் சாந்தம், குங்குமம், குலிகம், தண் தேன்,
போது உகு பொலன் தாது, என்று இத் தொடக்கத்த யாவும் பூசி,
மீது உறு சுனை நீர் ஆடி, அருவி போய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த. 9

'கடல் உறு மத்து இது' என்ன, கார் வரை திரியும்காலை,
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த் தவர் விசும்பின் உற்றார்;
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி, முற்றா
உடல் உறு பாசம் வீசாது, உம்பர் செல்வாரை ஒத்தார். 10

வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார். 11

ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண,
சீறிய மனத்தர், தெயவ மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர், அஞ்சுகின்றார், அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர், இட்டு நீத்த பைங் கிளிக்கு இரங்குகின்றார். 12

தேவர் முதலோர் விடைதர அனுமன் கடலைக் கடக்க விரைதல்

இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி,
'வித்தக! சேறி' என்றார்; வீரனும், விரைவது ஆனான். 13

'குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது; விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர!
"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; நீ சேறி' என்னா,
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான், பொருப்பை ஒப்பான். 14

காலை ஊன்றி எழுந்த போது மலையிலும் கடலிலும் நிகழ்ந்த மாறுதல்கள்

'இலங்கையின் அளவிற்று அன்றால், இவ் உரு எடுத்த தோற்றம்;
விலங்கவும் உளது அன்று' என்று, விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து, அடித் துணை அழுத்தலோடும்,
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ! 15

வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை
தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன். 16

ஆயவன் எழுதலோடும், அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி வேழமும், பிறவும், எல்லாம்,
'நாயகன் பணி இது' என்னா, நளிர் கடல் இலங்கை, தாமும்
பாய்வன என்ன, வானம் படர்ந்தன, பழுவம் மான. 17

இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்,
பசையுடை மரனும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக, தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த. 18

மாவொடு மரனும், மண்ணும், வல்லியும், மற்றும் எல்லாம்,
போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ! 19

கீண்டது வேலை நல் நீர்; கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட, மணிகள் மின்ன,
ஆண்தகை அதனை நோக்கி, 'அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தென் ஆனேன் யான்!' எனக் கருத்துள் கொண்டான். 20

வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்,
'உய்தும் நாம் என்பது என்னே? உறு வலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம்' என்று அஞ்சி, மறுக்கம் உற்று, இரியல்போனார். 21

துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற, சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய, ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று, இலங்கைமேல் தவழ்ந்த மாதோ. 22

வானில் செல்லும் அனுமனின் தோற்றம்

இடுக்கு உறு பொருள்கள் என் ஆம்? எண் திசை சுமந்த யானை,
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன், நாகம்
ஒடுக்குறு காலை, வன் காற்று அடியொடும் ஒடித்த அந் நாள்,
முடுக்குறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான். 23

கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்
உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்ச, செல்லும் மாருதி, மறம் உள் கூர,
'அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னம்' என்னா,
கண்ணுதல் ஒழியச் செல்லும் கைலைஅம் கிரியும் ஒத்தான். 25

மாணி ஆம் வேடம் தாங்கி, மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம், அறம் பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன்தன்னைக்
காணிய, விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான். 26

மழை கிழித்து உதிர, மீன்கள் மறி கடல் பாய, வானம்
குழைவுற, திசைகள் கீற, மேருவும் குலுங்க, கோட்டின்
முழையுடைக் கிரிகள் முற்ற, முடிக்குவான், முடிவுக் காலத்து
அழிவுறக் கடுக்கும் வேகத் தாதையும் அனையன் ஆனான். 27

தடக் கை நால்-ஐந்து பத்துத் தலைகளும் உடையான்தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவப் பயன் அறுதலோடும்,
கெடக் குறி ஆக, மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான். 28

புறத்து உறல் அஞ்சி, வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி,
மறத் தொழில் அரக்கன் வாழும் மா நகர், மனுவின் வந்த
திறத் தகை இராமன் என்னும் சேவகற் பற்றி, செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான். 29

கேழ் உலாம் முழு நிலாவின் கிளர் ஒளி இருளைக் கீற,
பாழி மா மேரு நாண, விசும்பு உறப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம் அருங் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள், வட பால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான். 30

அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட,
குடல் எலாம் அவுணர் சிந்த, குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்ல, சேண் விசும்பு ஒதுங்க, தெய்வக்
கடல் எலாம் கலங்க, தாவும் கலுழனும் அனையன் ஆனான். 31

வாலை உயர்த்தி அனுமன் வானில் சென்ற காட்சி

நாலினோடு உலகம் மூன்றும் நடுக்குற, அடுக்கு நாகர்
மேலின் மேல் நின்றகாறும் சென்ற கூலத்தன், 'விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்' என்று வானவர் மருள, சென்றான். 32

வெளித்துப் பின் வேலை தாவும் வீரன் வால், வேதம் ஏய்க்கும்
அளி, துப்பின் அனுமன் என்று ஓர் அருந் துணை பெற்றதாயும்,
களித்துப்புன் தொழில்மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று,
ஒளித்து, பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே. 33

மேருவை முழுதும் சூழ்ந்து, மீதுற்ற வேக நாகம்,
கார் நிறத்து அண்ணல் ஏவ, கலுழன் வந்துற்ற காலை
சோர்வுறு மனத்தது ஆகி, சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது, அப் பிறங்கு பேழ் வால். 34

அனுமனின் வேகமும், கைகளின் தோற்றமும்

குன்றோடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சீயம்,
சென்றுறு வேகத் திண் கால் எறிதர, தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையின் தம்மின்
ஒன்றோடு ஒன்று உடையத் தாக்கி, மாக் கடல் உற்ற மாதோ. 35

வலங் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது, 'ஏகுவான்தன் கருத்து என்கொல்?' என்னும் கற்பால்;
'விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று' என்னா, இம்பர் நாடு இரிந்தது அன்றே. 36

'ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய' என்னத்
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும்,
ஆசையை உற்ற வேலை கலங்க, அன்று, அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன, மீன்கள் எல்லாம். 37

பொரு அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது, வேகம்
தருவன தடக் கை, தள்ளா நிமிர்ச்சிய, தம்முள் ஒப்ப,
ஒருவு அருங் குணத்து வள்ளல் ஓர் உயிர்த் தம்பி என்னும்
இருவரும் முன்னர்ச் சென்றால் ஒத்த, அவ் இரண்டு பாலும். 38

கடலில் இருந்து எழுந்த மைந்நாகத்தை உந்திவிட்டு, அனுமன் செல்லுதல்

இந் நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை,
திந் நாக மாவில், செறி கீழ்த் திசைக் காவல் செய்யும்
கைந் நாகம், அந் நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற,
மைந் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே. 39

மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப,
ஓயா அருவித் திரள் உத்தரியத்தை ஒப்ப,
தீயோர் உளர் ஆகியகால், அவர் தீமை தீர்ப்பான்,
மாயோன் மகரக் கடல் நின்று எழு மாண்பது ஆகி, 40

எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்
கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், 'இது என்கொல்?' எனா அயிர்த்தான். 41

'நீர் மேல் படரா, நெடுங் குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர் மேல் படராது' என, சிந்தை உணர்ந்து, செல்வான்,
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி, விண்ணோர்
ஊர் மேல் படர, கடிது, உம்பரின்மீது உயர்ந்தான். 42

மைந்நாகம் மானிட வடிவில் வந்து உரைத்தல்

உந்தா முன் உலைந்து, உயர் வேலை ஒளித்த குன்றம்,
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வு இல் அன்பால்
வந்து ஓங்கி, ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி,
'எந்தாய்! இது கேள்' என, இன்ன இசைத்தது அன்றே; 43

'வேற்றுப் புலத்தோன் அலென்; ஐய! "விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை" என்று, அரி வச்சிரம் மாண ஓச்ச,
வீற்றுப் பட நூறிய வேலையின், வேலை உய்த்து,
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன், அன்பு காந்த. 44

'அன்னான் அருங் காதலன் ஆதலின், அன்பு தூண்ட,
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை,
பொன் ஆர் சிகரத்து, இறை ஆறினை போதி என்னா,
உன்னா உயர்ந்தேன் - உயர்விற்கும் உயர்ந்த தோளாய்! 45

'"கார் மேக வண்ணன் பணி பூண்டனன்; காலின் மைந்தன்,
தேர்வான் வருகின்றனன், சீதையை; தேவர் உய்யப்
பேர்வான் அயல் சேறி; இதில் பெறும் பேறு இல்" என்ன,
நீர் வேலையும் என்னை உரைத்தது - நீதி நின்றாய்! 46

விருந்து உண்டு செல்ல மைந்நாகம் வேண்டுதல்

'"நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்" என்று நாடி,
இற்றே, இறை எய்தினை, ஏய்த்தது கோடி, என்னால்;
பொன்-தார் அகல் மார்ப! தம் இல்லுழை வந்தபோதே,
உற்றார் செயல் மற்றும் உண்டோ ?' என, உற்று உரைத்தான். 47

மீண்டு வரும்போது விருந்து உண்பென் என கூறி அனுமன் அகல்தல்

உரைத்தான் உரையால், 'இவன் ஊறு இலன்' என்பது உன்னி,
விரைத் தாமரை வாள் முகம் விட்டு விளங்க, வீரன்
சிரித்தான், அளவே; சிறிது அத் திசை செல்ல நோக்கி,
வரைத் தாள் நெடும் பொன் குடுமித் தலை, மாடு கண்டான். 48

'வருந்தேன்; அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும், என் ஆசை நிரப்பி அல்லால்;
பெருந் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன்; நுகர்ந்தேன்; இதன்மேல் இனி ஈவது என்னோ? 49

'முன்பில் சிறந்தார், இடை உள்ளவர், காதல் முற்றப்
பின்பில் சிறந்தார், குணம் நன்று; இது பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே?
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்கண் உண்டே? 50

'ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றி, என் ஆற்றல் கொண்டே,
மீண்டால் நுகர்வென் நின் விருந்து' என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பின்பட, முன்பு போனான். 51

நீர் மாக் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா,
'பார் மேல் தவழ் சேவடி பாய் நடவாப் பதத்து, என்
தேர் மேல் குதிகொண்டவன், இத் திறன் சிந்தைசெய்தான்
ஆர்மேல்கொல்?' என்று எண்ணி, அருக்கனும் ஐயம் உற்றான். 52

சுரசை தோன்றுதலும், அனுமன் அவளை வென்று விரைதலும்

மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ ' என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 53

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு, பெட்பின் ஓங்கி,
'கோள் வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய்! எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்கொல்?' என்னா,
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள். 54

'தீயே எனல் ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே, விரைவுற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழி மற்று இலை, வானின்' என்றாள். 55

'பெண்பால் ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்;
உண்பாய் எனது ஆக்கையை; யான் உதவற்கு நேர்வல்-
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால்' எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள், 56

'காய்ந்து, ஏழ் உலகங்களும் காண, நின் யாக்கைதன்னை,
ஆர்ந்தே பசி தீர்வென்; இது ஆணை' என்று அன்னள் சொன்னாள்;
ஓர்ந்தானும், உவந்து, 'ஒருவேன்; நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன்; வலையாம்எனின் தின்றிடு' என்றான். 57

அக்காலை, அரக்கியும், அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து,
விக்காது விழுங்க நின்றாள்; அது நோக்கி வீரன்,
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான். 58

நீண்டான் உடனே சுருங்கா, நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்,
மீண்டான்; அது கண்டனர் விண் உறைவோர்கள்; 'எம்மை
ஆண்டான் வலன்' என்று அலர் தூஉய், நெடிது ஆசி சொன்னார். 59

விண்ணவர் ஆசியுடன் அனுமன் மேற்செல்லல்

மின்மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி,
தன் மேனியளாய், அவன், தாயினும் அன்பு தாழ,
'என் மேல் முடியாதன?' என்று, இனிது ஏத்தி நின்றாள்;
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து, போனான்- 60

கீதங்கள் இசைத்தனர் கின்னரர்; கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர்; ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன; பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்ய, 61

மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப,
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணைக் களி செஞ் செவிக் காது நுங்க. 62

வழியை அடைத்து நின்ற அங்காரதாரையை அனுமன் வினவல்

வெங் கார் நிறப் புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கு ஆர்கலிப் புனல் தரப் பொலிவதே போல்,
'இங்கு ஆர் கடத்திர் எனை?' என்னா, எழுந்தாள்,
அங்காரதாரை, பெரிது ஆலாலம் அன்னாள். 63

காதக் கடுங் குறி கணத்து இறுதி கண்ணாள்,
பாதச் சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப,
வேதக் கொழுஞ் சுடரை நாடி, நெடு மேல்நாள்,
ஓதத்தின் ஓடும் மதுகைகடவரை ஒத்தாள். 64

துண்டப் பிறைத் துணை எனச் சுடர் எயிற்றான்;
கண்டத்திடைக் கறையுடைக் கடவுள், கைம்மா
முண்டத்து உரித்த உரியால், முளரிவந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள். 65

நின்றாள் நிமிர்ந்து, அலை நெடுங் கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப, முடி வான் முகடு வவ்வ;
அன்று, ஆய்திறத்தவன், 'அறத்தை அருளோடும்
தின்றாள் ஒருத்தி இவள்' என்பது தெரிந்தான். 66

பேழ் வாயகத்து அலது, பேர் உலகம் மூடும்
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா
ஆழ்வான், அணுக்கன், அவள் ஆழ் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து, இனைய வாய்மொழி புகன்றான்: 67

'சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்,
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்;
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்;
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை?' என்றான். 68

'பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி; உற்றால்,
விண்பாலவர்க்கும், உயிர் வீடுறுதல் மெய்யே;
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்,
உண்பேன் ஒருத்தி; அது ஒழிப்பது அரிது' என்றாள். 69

அவள் உதரத்துள் புகுந்து, குடர் கொண்டு வான்வழி ஏகுதல்

திறந்தாள் எயிற்றை, அவள்; அண்ணல் இடை சென்றான்;
அறம்தான் அரற்றியது, அயர்ந்து அமரர் எய்த்தார்,
இறந்தான் எனக் கொடு; ஓர் இமைப்பு அதனின் முன்னம்,
பிறந்தான் என, பெரிய கோள் அரி பெயர்ந்தான். 70

கள் வாய் அரக்கி கதற, குடர் கணத்தில்
கொள், வார், தடக் கையன் விசும்பின்மிசை கொண்டான்;
முள் வாய் பொருப்பின் முழை எய்தி, மிக நொய்தின்,
உள் வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான். 71

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்,
ஏகா, அரக்கி குடர் கொண்டு, உடன் எழுந்தான்,
மா கால் விசைக்க, வடம் மண்ணில் உற, வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான். 72

ஆர்த்தார்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தார்; விரிஞ்சனும் வியந்து, மலர் வெள்ளம்
தூர்த்தான்; அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான்; முனித் தலைவர் ஆசிகள் பகர்ந்தார். 73

மாண்டாள் அரக்கி; அவள் வாய் வயிறுகாறும்
கீண்டான்; இமைப்பினிடை மேரு கிரி கீழா
நீண்டான்; வயக் கதி நினைப்பின் நெடிது என்னப்
பூண்டான்; அருக்கன் உயர் வானின் வழி போனான். 74

இராம நாமமே இடர்கள் திர்ப்பது என்று அவன் உறுதி பூணுதல்

'சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ?
முற்றா முடிந்த நெடு வானினிடை, முந்நீ-
ரில் தாவி, எற்று எனினும், யான் இனி இலங்கை
உற்றால், விலங்கும் இடையூறு' என, உணர்ந்தான். 75

'ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? "இராம!" என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல்' என வலித்தான். 76

பவள மலையில் பாய்ந்து, அனுமன் இலங்கையை நோக்கல்

தசும்புடைக் கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா,
அசும்புடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி,
விசும்பிடைச் செல்லும் வீரன் விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசுஞ் சுடர்ச் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான். 77

மேக்குறச் செல்வோன் பாய, வேலைமேல் இலங்கை வெற்பு
நூக்குறுத்து, அங்கும் இங்கும் தள்ளுற, நுடங்கும் நோன்மை,
போக்கினுக்கு இடையூறு ஆகப் புயலொடு பொதிந்த வாடை
தாக்குற, தகர்ந்து சாயும் கலம் எனத் தக்கது அன்றே. 78

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான். 79

மிகைப் பாடல்கள்

சென்றனன், இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-திண் தோள்
வன் திறம் அனுமன் - வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி,
பொன் திணி சிகர கோடி மயேந்திரப் பொருப்பின் ஏறி,
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ?

இமையவர் ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன்
அமம திரு நகரைச் சூழ்ந்த அளக்கரைக் கடக்க, வீரன்,
சுமை பெறு சிகர கோடித் தொல் மயேந்திரத்தின், வெள்ளிச்
சிமையமேல் நின்ற தேவன் தன்மையின், சிறந்து நின்றான்.
[இவ்விரு பாடல்கள் இப் படலத்தின் முதற் செய்யுளாகிய 'ஆண்தகை ஆண்டு' எனத் துவங்கும் பாடலின் முன்னர்க் காணப்படுகின்றன. இவற்றோடு கிட்கிந்தா காண்டத்தின் மயேந்திரப் படலத்தின் இறுதியிலுள்ள நான்கு செய்யுட்களும் (26-29) வரிசை முறை மாறியும் ஒரு சுவடியில் உள்ளன.]

பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும்-
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட மிதித்தலோடும்-
அருஞ் சினம் அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி, அங்கம்
நெரிஞ்சுற, கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க, 7-1

நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன் நோக்கல் உற்றார்
போல், ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க,
கால் ஆழ்ந்து அழுந்திக் கடல் புக்குழி, கச்சம் ஆகி,
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான, 40-1

தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல,
வள்ளல் கடலைக் கெட நீக்கி, மருந்து வவ்வி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க, 40-2

ஆன்று ஆழ் நெடு நீரிடை, ஆதியொடு அந்தம் ஆகித்
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட, முந்து தோன்றி,
மூன்று ஆம் உலகத்தொடும், முற்று உயிர் ஆய மற்றும்,
ஈன்றானை ஈன்ற சுவணத் தனி அண்டம் என்ன, 40-3

'இந் நீரின், என்னைத் தரும் எந்தையை எய்தி அன்றி,
செந் நீர்மை செய்யேன்' என, சிந்தனை செய்து, நொய்தின்
அந் நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கி, தவம் முற்றி முளைத்தவாபோல், 40-4

பூவால் இடையூறு புகுந்து, பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட, வேலை குளித்த எல்லாம்
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அந் நாள்,
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன, 40-5

நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம் வாய்ந்த நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின, செம் பொன் ஏய்ந்த
பிறங்கும் சிகரம் படர் முன்றில்தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர, 40-6

கூன் சூல் முதிர் இப்பி குரைக்க, நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப, வயங்கு பளிங்கு முன்றில்,
தான் சூலி நாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன் சூழ்வரும் அம் முழு வெண் மதி வீறு, கீற, 40-7

பல் ஆயிரம் ஆயிரம் காசுஇனம் பாடு இமைக்கும்
கல் ஆர் சிமயத் தடங் கைத்தலம் நீண்டு காட்டி,
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி, வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து, எழுகின்றது என்ன, 40-8

மனையில் பொலி மாக நெடுங் கொடி மாலை ஏய்ப்ப,
வினையின் திரள் வெள் அருவித் திரள் தூங்கி வீழ,
நினைவின் கடலூடு எழலோடும், உணர்ந்து நீங்காச்
சுனையில், பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள, 40-9

கொடு நாவலொடு இரண்டு குலப் பகை, குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,
விட நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,
நெடு நாள், பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப, 40-10

செவ் வான் கதிரும், குளிர் திங்களும், தேவர் வைகும்
வெவ் வேறு விமானமும், மீனொடு மேகம், மற்றும்,
எவ் வாய் உலகத்தவும், ஈண்டி இருந்த; தம்மின்
ஒவ்வாதன ஒத்திட, ஊழி வெங் காலும் ஒத்தான். 51-1

வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப,
நீள் ஒத்து உயர் வாலின், விசும்பு நிரம்பு மெய்யன்,
கோள் ஒத்த பொன் மேனி; விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது; மேல் ஒளி கீழ் இருள் உற்ற, ஞாலம். 52-1

விண்ணோர் அது கண்டனர், உள்ளம் வியந்து மேல்மேல்
கண் ஓடிய நெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால். 52-2

பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல், பறையின்
விரவுக் குரல், சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம் உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால். 62-1

வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று, 'சயம் உண்டு' என இயம்ப,
தான் ஓர் பெருங் கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான், விரைந்து, கடிதே போகும் எல்லை, 62-2

நல் நகர் அதனை நோக்கி, நளினக் கைம் மறித்து, 'நாகர்
பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது, அம்மா!
அந் நகர் இதனின் நன்றேல், அண்டத்தை முழுதும் ஆள்வான்
இந் நகர் இருந்து வாழ்வான்? இது அதற்கு ஏது' என்றான். 79-1

'"மாண்டது ஓர் நலத்திற்று ஆம்" என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்;
வேண்டிய வேண்டின் எய்தி, வெறுப்பு இன்றி, விழைந்து துய்க்கும்
ஈண்ட அரும் போக இன்பம் ஈறு இலது யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்; அஃதே அரு மறைத் துணிவும் அம்மா! 79-2

'உட் புலம் எழு நூறு என்பர் ஓசனை; உலகம் மூன்றில்
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழைச் செறிந்த என்றால்,
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும், நோக்கும்
கண்புலம் வரம்பிற்று ஆமே? காட்சியும் கரையிற்று ஆமே? 79-3

என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந் தோள் வீரன்
நின்றனன், நெடிய வெற்பின்; நினைப்ப அரும் இலங்கை மூதூர்
ஒன்றிய வடிவம் கண்டு, ஆங்கு, உளத்திடைப் பொறுக்கல்ஆற்றான்;
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான். 79-4




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247