அங்கதன் தூதுப் படலம் - Angathan Thoothu Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



யுத்த காண்டம்

14. அங்கதன் தூதுப் படலம்

இராவணனது வருகையைக் காணாது, இராமன் தூது போக்குதல் குறித்து, வீடணனுக்கு உரைத்தல்

வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி,
வெள்ளம் ஓர் ஏழு - பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,
கள்ளனை வரவு நோக்கி, நின்றனன், காண்கிலாதான்,
'ஒள்ளியது உணர்ந்தேன்' என்ன, வீடணற்கு உரைப்பதானான்: 1

'தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் தூண்டி
"மாதினை விடுதியோ?" என்று உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும் அஃதே;
நீதியும் அஃதே' என்றான் - கருணையின் நிலயம் அன்னான். 2

வீடணன் முதலியோர் இராமன் கருத்தை வரவேற்க, இலக்குவன் மறுத்தல்

அரக்கர் கோன் அதனைக் கேட்டான், 'அழகிற்றே ஆகும்' என்றான்;
குரக்கினத்து இறைவன் நின்றான், 'கொற்றவர்க்கு உற்றது' என்றான்;
'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்; 'இனி, நாம் அம்பு
துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ ?' என்னச் சொன்னான். 3

'தேசருக்கு இடுக்கண் செய்தான்; தேவியைச் சிறையில் வைத்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்; வழி அலா வழிமேல் செல்வான். 4

'வாழியாய்! நின்னை அன்று வரம்பு அறு துயரின் வைக,
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து, உன் துணைவியைப் பிரிவு செய்தான்;
ஏழையாள் இடுக்கண் நோக்கி, ஒரு தனி இகல்மேல் சென்ற,
ஊழி காண்கிற்கும் வாழ்நாள், உந்தையை உயிர் பண்டு உண்டான். 5

'அன்னவன் தனக்கு, மாதை விடில், உயிர் அருளுவாயேல்,
"என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர்
மன்னவன் நீயே" என்று, வந்து அடைந்தவற்கு வாயால்
சொன்ன சொல் என் ஆம்? முன்னம் சூளுறவு என் ஆம்? - தோன்றால்! 6

'அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால், அவற்றை முற்றும்
மறந்தனை எனினும், மற்று இவ் இலங்கையின் வளமை நோக்கி,
"இறந்து இது போதல் தீது" என்று இரங்கினை எனினும், எண்ணின்,
சிறந்தது போரே? என்றான்; சேவகன் முறுவல் செய்தான். 7

தூது அனுப்புவது நீதி நூல் முறை என இராமன் உரைத்தல்

'அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத் துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத் துறை; அறனும் அஃதே' என்று இவை சமையச் சொன்னான். 8

அங்கதனைத் தூது செல்ல இராமன் பணித்தல்

மாருதி இன்னம் சொல்லின், மற்று இவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே;
ஆர், இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும்; ஒன்னார்
வீரமே விளைப்பரேனும், தீது இன்றி மீள வல்லான்.' 9

'நன்று' என, அவனைக் கூவி, 'நம்பி! நீ நண்ணலார்பால்
சென்று, உளது உணர ஒன்று செப்பினை திரிதி' என்றான்;
அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமோ? 10

'என் அவற்கு உரைப்பது?' என்ன, '"ஏந்திழையாளை விட்டுத்
தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்று எனின், தலைகள் பத்தும்
சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல் நன்றோ?
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!" எனச் சொல்லிடு' என்றான். 11

'அறத் துறை அன்று, வீரர்க்கு அழகும் அன்று, ஆண்மை அன்று,
மறத் துறை அன்று, சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;
நிறத்து உற வாளி கோத்து, நேர் வந்து நிற்கும் ஆகின்,
புறத்து உற எதிரே வந்து போர் தரப் புகல்தி' என்றான். 12

அங்கதன் விண்வழிச் சென்று, இராவணன் இருக்கை புகுதல்

பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வது என்ன,
வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, விசையின் போனான்,
'"மாருதி அல்லன் ஆகின், நீ" எனும் மாற்றம் பெற்றேன்;
யார் இனி என்னோடு ஒப்பார்?' என்பதோர் இன்பம் உற்றான். 13

அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரைக் கடக்க, ஆழித்
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன்,
வெயில் கடந்திலாத காவல், மேருவின் மேலும் நீண்ட,
எயில் கடந்து, இலங்கை எய்தி, அரக்கனது இருக்கை புக்கான். 14

இராவணன் ஆற்றலை அங்கதன் வியத்தல்

அழுகின்ற கண்ணர் ஆகி, 'அனுமன் கொல்?' என்ன அஞ்சித்
தொழுகின்ற சுற்றம் சுற்ற, சொல்லிய துறைகள் தோறும்
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்தொறும் செவியின் மூழ்க,
எழுகின்ற சேனை நோக்கி, இயைந்து இருந்தானைக் கண்டான். 15

'கல் உண்டு; மரம் உண்டு; ஏழைக்கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே; இவனை வெல்லத் தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ?
எல்லுண்ட படை கைக் கொண்டால் எதிர் உண்டே? இராமன் கையில்
வில் உண்டேல், உண்டு' என்று எண்ணி, ஆற்றலை வியந்து நின்றான். 16

'இன்று இவன் தன்மை எய்த நோக்கினால், எதிர்ந்த போரில்
வென்ற என் தாதை மார்பில் வில்லின்மேல் கணை ஒன்று ஏவிக்
கொன்றவன் தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால்,
ஒன்று இவன் தன்னைச் செய்ய வல்லரோ, உயிர்க்கு நல்லார்? 17

'அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்மேல் வைத்த காதல்
பிணி பறித்து, இவனை யாவர் முடிப்பவர், படிக்கண்? பேழ் வாய்ப்
பணி பறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் பற்றி,
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன்' என்றான். 18

அங்கதன் இராவணனை அடுத்து நிற்றல்

நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி,
கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி,
விடும் சுடர் மகுடம் மின்ன, விரி கடல் இருந்தது அன்ன
கொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று, குறுகி நின்றான். 19

இராவணன்-அங்கதன் உரையாடல்

நின்றவன் தன்னை, அன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து, 'இங்கு,
இன்று, இவண் வந்த நீ யார்? எய்திய கருமம் என்னை?
கொன்று இவர் தின்னாமுன்னம் கூறுதி, தெரிய' என்றான்;
வன் திறல் வாலி சேயும், வாள் எயிறு இலங்க நக்கான். 20

அங்கதன் தன்னை யாரென அறிவித்தல்

'பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், இப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்' என்றான். 21

இராவணன் இகழ்ந்துரைத்தல்

'அரன்கொலாம்? அரிகொலாம்? மற்று அயன்கொலாம்? என்பார் அன்றி,
குரங்கு எலாம் கூட்டி, வேலைக் குட்டத்தைச் சேது கட்டி,
"இரங்குவான் ஆகில், இன்னம் அறிதி" என்று உன்னை ஏவும்
நரன்கொலாம், உலக நாதன்' என்று கொண்டு, அரக்கன் நக்கான். 22

'கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து நேமி
சங்கமும் தரித்த மால், மற்று இந் நகர் தன்னைச் சாரார்;
அங்கு அவர் நிலைமை நிற்க, மனிசனுக்காக, அஞ்சாது,
இங்கு வந்து இதனைச் சொன்ன தூதன் நீ யாவன்?' என்றான். 23

அங்கதனின் பதில் உரை

'இந்திரன் செம்மல், பண்டு, ஓர் இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண
மந்தரப் பொருப்பால் வேலை கலக்கினான், மைந்தன்' என்றான். 24

'உந்தை என் துணைவன் அன்றே? ஓங்கு அறச் சான்றும் உண்டால்;
நிந்தனை இதன்மேல் உண்டோ , நீ அவன் தூதன் ஆதல்?
தந்தனென் நினக்கு யானே வானரத் தலைமை; தாழா
வந்தனை; நன்று செய்தாய், என்னுடை மைந்த!' என்றான். 25

'"தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி,
பேதையன் என்ன வாழ்ந்தாய்" என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்;
சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்;
ஏது எனக்கு அரியது?' என்றான் - இறுதியின் எல்லை கண்டான். 26

'அந் நரர் இன்று, நாளை, அழிவதற்கு ஐயம் இல்லை;
உன் அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி, ஊழிக் காலம்;
பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய,
மன்னவன் ஆக, யானே சூட்டுவென், மகுடம்' என்றான். 27

அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கி,
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க, நக்கான்;
'"இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே" என்பது உன்னி,
உங்கள்பால் நின்றும் எம்பால் போந்தனன், உம்பி' என்றான். 28

'வாய் தரத்தக்க சொல்லி, என்னை உன் வசஞ்செய்வாயேல்,
ஆய்தரத் தக்கது அன்றோ, தூது வந்து அரசது ஆள்கை?
நீ தரக் கொள்வென் யானே? இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்,
நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசு!' என்று நக்கான். 29

'அடுவெனே' என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், 'அந்தோ!
தொடுவெனே, குரங்கைச் சீறிச் சுடர்ப் படை?' என்று, தோன்றா
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்குத் தூத!
படுவதே துணிந்தாய் ஆகில், வந்தது பகர்தி' என்றான். 30

'கூவி இன்று என்னை, நீ போய், "தன் குலம் முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்குப் பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து எதிர்ந்து, தன்கண்
ஆவியை விடுக!" என்றான், அருள் இனம் விடுகிலா தான். 31

'"பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள், படைஞரோடும்
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள், வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி
அரிந்த நாள், வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ? 32

'"கிளையொடும் படைஞரோடும், கேடு இலா உயிர்கட்கு எல்லாம்
களை என, தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும்,
இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை வெளவும்
வளை எயிற்று அரக்கன், வெம் போர்க்கு, இனி எதிர் வருவது உண்டோ? 33

'"ஏந்திழை தன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர் தம்மை எற்றி,
சாந்து எனப் புதல்வன் தன்னைத் தரையிடைத் தேய்த்து, தன் ஊர்
காந்து எரி மடுத்து, தானும் காணவே, கடலைத் தாவிப்
போந்த பின், வந்திலாதான் இனிப் பொரும் போரும் உண்டோ? 34

'"உடைக் குலத்து ஒற்றர்தம்பால் உயிர் கொடுத்து உள்ளக் கள்ளம்
துடைத்துழி, வருணன் வந்து தொழுதுழி, தொழாத கொற்றக்
குடைத் தொழில் உம்பி கொள்ளக் கொடுத்துழி, வேலை கோலி அடைத்துழி, வந்திலாதான் இனிச் செயும் ஆண்மை உண்டோ? 35

'"மறிப்புண்ட தேவர் காண, மணி வரைத் தோளின் வைகும்
நெறிப் புண்டரீகம் அன்ன முகத்தியர்முன்னே, நென்னல்,
பொறிப் புண்டரீகம் போலும் ஒருவனால், புனைந்த மௌலி
பறிப்புண்டும், வந்திலாதான் இனிப் பொரும் பான்மை உண்டோ?" 36

'"என்று இவை இயம்பி வா" என்று ஏவினன் என்னை; எண்ணி
ஒன்று உனக்கு உறுவது உன்னித் துணிந்து உரை; உறுதி பார்க்கின்,
துன்று இருங் குழலை விட்டு, தொழுது வாழ்; சுற்றத்தொடும்
பொன்றுதி ஆயின், என் பின், வாயிலில் புறப்படு' என்றான். 37

'நீரிலே பட்ட, சூழ்ந்த நெருப்பிலே பட்ட, நீண்ட
பாரிலே பட்ட, வானப் பரப்பிலே பட்ட, எல்லாம்
போரிலே பட்டு வீழப் பொருத நீ, "ஒளித்துப் புக்கு, உன்
ஊரிலே பட்டாய்" என்றால், பழி' என, உளையச் சொன்னான். 38

இராவணன் சினந்து, அங்கதனைப் பிடித்து எற்றுதற்கு நால்வரை ஏவுதல்

சொற்ற வார்த்தையைக் கேட்டலும், தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவினான்,
'பற்றுமின், கடிதின்; நெடும் பாரிடை
எற்றுமின்' என, நால்வரை ஏவினான். 39

நால்வர் தலையையும் துணித்து அங்கதன் விடுத்த எச்சரிக்கை

ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்
தாவினான், அவர்தம் தலைபோய் அறக்
கூவினான், அவன், கோபுர வாயிலில்
தூவினான், துகைத்தான், இவை சொல்லினான்: 40

'ஏமம் சார, எளியவர் யாவரும்,
தூமம் கால்வன, வீரன் சுடு சரம்,
வேம் மின் போல்வன, வீழ்வதன் முன்னமே,
போமின் போமின், புறத்து' என்று போயினான். 41

இராமன் அடி பணிந்து, அங்கதன் இராவணனின் உள்ளக் கருத்தை உரைத்தல்

அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான், அவர்
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான்,
இந்து விண் நின்று இழிந்துளதாம் என,
வந்து, வீரன் அடியில் வணங்கினான். 42

உற்ற போது, 'அவன் உள்ளக் கருத்து எலாம்,'
கொற்ற வீரன், 'உணர்த்து' என்று கூறலும்,
'முற்ற ஓதி என்? மூர்க்கன், முடித் தலை
அற்றபோது அன்றி, ஆசை அறான்' என்றான். 43

மிகைப் பாடல்கள்

'சூளுறும் வஞ்சனாகத் தோன்றிய இலங்கை வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி, குரை கழல் வணங்கும் ஆகில்,
வீழுறும் இலங்கைச் செல்வம் வீடணற்கு அளித்தே, கானில்
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென்' என்றான். 7-1

'தப்பு இல வீடணற்கு இலங்கை, தானமாச்
செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ?
இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்,
அப்பொழுது, அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே'. 7-2

அரி முதல் தேவர் ஆதி அமரிடைக் கலந்த போதும்,
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால்,
புரம் ஒரு மூன்றும் தீயப் பொடி செய்தோன் தன்னொடு, அந் நாள்,
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ ? 17-1

வந்தது என், குரங்கு? ஒன்று இல்லை, அடைத்தது என், கடல் வாய்? மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ? தெரியாது ஆகில்,
இந்த எம் பதியைக் காக்கும் இறைவனோ? அறிதும்; எங்கள்
விந்தை எம் பெருமான்! வாழி! வீடணன் என்னும் வேந்தன். 19-1

'முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால் வீக்கும்
அந்த ஆயிரத் தோளானை அரக்கிய மழுவலாளன்
வந்து எதிர் கொள்ள, வீரச் சிலையும் வெவ் வலியும் வாங்கும்
சுந்தரத் தோளன் விட்ட தூதன் நான்' என்னச் சொன்னான். 20-1

'பசை அறு சிந்தையானைத் தமரொடும் படுத்த போதும்,
இசை எனக்கு இல்லை அன்றே' என்பது ஓர் இகழ்வு கொண்டான்;
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான்,
திசையினை வென்ற வென்றி வரவரச் சீர்த்தது!' என்றான். 36-1

ஆதி அம் பரன், அங்கதன் ஓதல் கேட்டு,
'ஈது அவன் கருத்து என்றிடின் நன்று' எனா,
சோதியான் மகன் ஆதித் துணைவருக்கு
ஓதினான், அங்கு அமரர்கள் உய்யவே. 43-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247