யுத்த காண்டம் 18. அதிகாயன் வதைப் படலம் இராவணன் அமைச்சரைக் கடிதல் கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற, எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும் தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா, மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே: 1 'ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச் சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர் வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால். 2 '"எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும் படுத்து, இவண் மீடும்" என்று உரைத்த பண்பினீர்! தடுத்தலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்; கொடுத்தலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர். 3 'உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என் வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால் இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச் செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால். 4 '"ஆற்றலம்" என்றிரேல் என்மின்; யான், அவர் தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங் கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என் வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால். 5 'அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: "ஆர் அமர் வெல்லுதும்" என்றிரேல், மேல் செல்வீர்; இனி, வல்லது மடிதலே என்னின், மாறுதிர், சொல்லும், நும் கருத்து' என முனிந்து சொல்லினான். 6 அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல் நதி காய் நெடு மானமும் நாணும் உறா, மதி காய் குடை மன்னனை வைது உரையா, விதி காயினும் வீரம் வெலற்கு அரியான் அதிகாயன் எனும் பெயரான் அறைவான்: 7 'வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா- லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக, "மேல் நான் அஞ்சினேன்" என்று, உனை நாணுக; போர் யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ? 8 வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்- தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ? உம்மைக் குலையப் பொரும் உம்பரையும் கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ? 9 'காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத் தேய்ப்புண்டவனும், சில சில் கணையால் ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால் ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ? 10 அதிகாயன் வஞ்சினம் கூறி போருக்குப் போதல் 'உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக் கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல், நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்? 11 'கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம் மட்டித்து, உயர் வானரர் வன் தலையை வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக் கட்டித் தருவென்; இது காணுதியால். 12 '"சேனைக் கடலோடு இடை செல்க" எனினும், யான் இப்பொழுதே, "தனி ஏகு" எனினும் தான் ஒத்தது சொல்லுதி; தா விடை' என்- றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான். 13 'சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான், பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்- தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால். 14 'போவாய் இது போது-பொலங் கழலோய்!- மூவாயிர கோடியரோடு, முரண் கா ஆர் கரி, தேர், பரி காவலின்' என்று, ஏவாதன யாவையும் ஏவினனால். 15 கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,-உன் செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால் உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர். 16
வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன் போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண் தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்! 17 'ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர் சேமத்தன பின் புடை செல்ல, அடும் கோ மத்த நெடுங் கரி கொடியாடும், போம், அத்தனை வெம் புரவிக் கடலே.' 18 என்றே விடை நல்க, இறைஞ்சி எழா வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள் பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின் நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால். 19 பல்வேறு படைக்கலம், வெம் பகலோன் எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால், சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா- வில் வேறு தெரிப்புறும் மேனியினான். 20 அதிகாயனோடு சென்ற படைகள் இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி முழை அஞ்ச முழங்கின; மும் முறை நீர் குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள் மழை அஞ்ச முழங்கின, மா முரசே. 21 ஆர்த்தார், நெடு வானம் நடுங்க; அடிப் பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என; தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்; வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர். 22 அடியோடு மதக் களி யானைகளின் பிடியோடு நிகர்த்தன, பின் புறம், முன்- தடியோடு துடங்கிய தாரைய, வெண் கொடியோடு துடங்கிய, கொண்மு எலாம். 23 தாறு ஆடின மால் கரியின்புடை தாழ் மாறாடின மா மதம் மண்டுதலால், ஆறு ஆடின, பாய் பரி, யானைகளும்; சேறு ஆடின, சேண் நெறி சென்ற எலாம், 24 தேர் சென்றன, செங் கதிரோனொடு சேர் ஊர் சென்றனபோல்; ஒளி ஓடைகளின் கார் சென்றன, கார் நிரை சென்றனபோல்; பார் சென்றில, சென்றன பாய் பரியே. 25 கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் கொதித்தல் மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து, நெடும் பாரில் செலுமாறு படப் படரும் தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண் போர் முற்று களத்திடைப் புக்கனனால். 26 கண்டான், அவ் இராமன் எனும் களி மா உண்டாடிய வெங் களன் ஊடுருவ; புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத் திண்டாடினன், வந்த சினத் திறலோன். 27 மலை கண்டனபோல் வரு தோளோடு தாள் கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம், நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந் தலை கண்டிலன், நின்று சலித்தனனால். 28 'மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான் திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண் கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான் உடல்' என்று, உயிரோடும் உருத்தனனால். 29 'எல்லே! இவை காணிய எய்தினனோ! வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில் செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?' 30 அதிகாயன், இலக்குவன் பால் தூது அனுப்புதல் என்னா, முனியா, 'இது இழைத்துளவன் பின்னானையும் இப்படிச் செய்து பெயர்த்து, அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்' என்று உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்: 31 'வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில் போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்; நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்; மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய். 32 '"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும் தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான், உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்; 33 'கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான், நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன் தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான், குளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்; 34 'தீது என்று அது சிந்தனை செய்திலெனால்; ஈது என்று அறம் மன் நெறி ஆம்' என, 'நீ தூது என்று இகழாது, உன சொல் வலியால், "போது" என்று, உடனே கொடு, போதுதியால். 35 'செரு ஆசையினார், புகழ் தேடுறுவார், இருவோரையும், நீ வலி உற்று, "எதிரே பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்; வருவோரை எலாம் வருக!" என்னுதியால். 36 'சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான், "வந்தான்" என என் எதிரே, மதியோய்! தந்தாய் எனின், யான் அலது, யார் தருவார், உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்? 37 'வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு ஏறே வருமேல், இமையோர் எதிரே, கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும் மாறே, ஒரு மன் என வைக்குவெனால். 38 'விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார் பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும் உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால். 39 'உறைதந்தன செங் கதிரோன் உருவின் பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர் திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன் முறை தந்தன, தந்து முடிக்குவெனால், 40 'மாறா மத வாரிய, வண்டினொடும் பாறு ஆடு முகத்தன, பல் பகலும் தேறாதன, செங் கண வெங் களி மா நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால், 41 'செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர் உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப் பம்பும் மணி தார் அணி பாய் பரிமா, இம்பர் நடவாதன, ஈகுவெனால். 42 'நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும், பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும், மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும், அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால். 43 'மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து, உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால்; பொன் திண் கழலாய்! நனி போ' எனலோடு, எற்றும் திரள் தோளவன் ஏகினனால். 44 மயிடனை வானரர் பற்றுதல் ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும் காகுத்தனை எய்திய காலையின்வாய், வேகத்தொடு வீரர் விசைத்து எழலும், 'ஓகைப் பொருள் உண்டு' என, ஓதினனால். 45 இராமன் மயிடனை வினவல் போதம் முதல், 'வாய்மொழியே புகல்வான்; ஏதும் அறியான்; வறிது ஏகினனால்; தூதன்; இவனைச் சுளியன்மின்' எனா, வேதம் முதல் நாதன் விலக்கினனால். 46 'என், வந்த குறிப்பு? அது இயம்பு' எனலும், மின் வந்த எயிற்றவன், 'வில் வல! உன் பின் வந்தவனே அறி பெற்றியதால், மன் வந்த கருத்து' என, 'மன்னர்பிரான்!' 47 இலக்குவன் வினவ, தூதன் செய்தி உரைத்தல் 'சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு' எனா, வில்லாளன் இளங்கிளையோன் வினவ, 'பல் ஆயிர கோடி படைக் கடல் முன் நில்லாய்' என, நின்று நிகழ்த்தினனால்: 48 'உன்மேல் அதிகாயன் உருத்துளனாய் நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்- தன் மேல் எதிரும் வலி தக்குளையேல், பொன் மேனிய! என்னொடு போதுதியால். 49 'சையப் படிவத்து ஒரு தந்தையை முன் மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து, ஐயப்படல், அப்படி இப் படியில் செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால். 50 '"கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா நின்றானொடு நின்றது என், நேடி?" எனின், தன் தாதை படும் துயர், தந்தையை முன் வென்றானை இயற்றுறும் வேட்கையினால். 51 வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று ஏனோர்களும், இவ் உரை கேண்மின்; இவன்- தானே பொருவான்; அயலே தமர் வந்து ஆனோரும் உடன் பொருவான், அமைவான். 52 இராமன் இலக்குவனை அனுப்பல் 'எழுவாய், இனி என்னுடன்' என்று, எரியும் மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும், தழுவா, 'உடன் ஏகுதி; தாழல்!' எனத் தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும், 53 வீடணன் அதிகாயனது திறம் குறித்தல் 'எல்லாம் உடன் எய்திய பின், இவனே வில்லானொடு போர் செய வேண்டும்' எனா, நல்லாறுடை வீடணன், நாரணன் முன் சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்; 54 'வார் ஏறு கழற் சின வாள் அரி எம் போர் ஏறொடு போர் புரிவான் அமையா, தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண் கார் ஏறு என வந்த கதத் தொழிலோன். 55 தேவாசுரர் ஆதியர் செய் செருவில், சாவான் இறையும், சலியா வலியான், மூவா முதல் நான்முகனார் மொழியால்; 56 'கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை, திடமே உலகில் பல தேவரொடும், வட மேரு எடுக்க, வளர்த்தனனால்; 57 'மாலாரொடு மந்தரம் மாசுணமும் மேலாகிய தேவரும் வேண்டும் எனா, ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய, காலால் நெடு வேலை கலக்கிடுமால்; 58 'ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப் பாழித் திசை நின்று சுமந்த, பணைச் சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ? ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்; 59 'காலங்கள் கணக்கு இற, கண் இமையா ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய் வேல் அங்கு எறிய, கொடு, 'விட்டது நீள் சூலம் கொல்?' எனப் பகர் சொல் உடையான்; 60 பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் புகை ஆடிய நாள், புனை வாகையினான், "மிகை ஆர் உயிர் உண்" என வீசிய வெந் தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்; 61 'உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம், செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள், அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம் வயிரப் படை தள்ளிய வாளியினான்; 62 'கற்றான், மறை நூலொடு கண்ணுதல்பால்; முற்றாதன தேவர் முரண் படைதாம், மற்று ஆரும் வழங்க வலார் இலவும், பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்; 63 'அறன் அல்லது நல்லது மாறு அறியான்; மறன் அல்லது பல் பணி மாறுஅணியான்; திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்; "உறல் நல்லது, பேர் இசை" என்று உணர்வான்; 64 காயத்து உயிரே விடு காலையினும் மாயத்தவர் கூடி மலைந்திடினும் தேயத்தவர் செய்குதல் செய்திடினும், மாயத் தொழில் செய்ய மதித்திலனால். 65 அதிகாயன் வரலாறு 'மது கைடவர் என்பவர், வானவர்தம் பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள் அதி கைதவர், ஆழி அனந்தனையும், விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார். 66 'நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை, "தாராய் அமர்" என்றனர், தாம் ஒரு நாள்; ஆர் அழிய அண்ணலும், அஃது இசையா, "வாரா, அமர் செய்க!" என வந்தனனால், 67 'வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும், நல்லார் முறை வீசி, நகும் திறலார் மல்லால் இளகாது, மலைந்தனன் மால்; அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால். 68 'தன் போல்பவர் தானும் இலாத தனிப் பொன்போல் ஒளிர் மேனியனை, "புகழோய்! என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார் உன் போல்பவர் யார் உளர்?" என்று உரையா, 69 '"ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்; இருவோமொடு நீ தனி இத்தனை நாள் பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்! தருவோம் நின் மனத்தது தந்தனமால்; 70 '"ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச் சொல்லும்படி" என்று, அவர் சொல்லுதலும், "வெல்லும்படி நும்மை விளம்பும்" எனக் கொல்லும்படியால் அரி கூறுதலும். 71 '"இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின் தொடையில் படுகிற்றும்" எனத் துணியா, "அடையச் செயகிற்றி; அது ஆணை" எனா, நடையில் படு நீதியா நல்குதலும், 72 'விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ், எட்டா ஒருவன் தன் இடத் தொடையை; ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால் பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள். 73 'தனி நாயகன், வன் கதை தன் கை கொளா, நனி சாட, விழுந்தனர், நாள் உலவா; பனியா மது மேதை படப் படர் மே- தினி ஆனது, பூவுலகு எங்கணுமே. 74 'விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால் மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்; கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல் அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.' 75 இராமன் இலக்குவன் வலிமை கூறல் என்றான், அவ் இராவணனுக்கு இளையான்; 'நன்று ஆகுக!' என்று, ஒரு நாயகனும், மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா- நின்றான், இது கூறி நிகழ்த்தினனால்: 76 'எண்ணாயிர கோடி இராவணரும் விண் நாடரும், வேறு உலகத்து எவரும் நண்ணா ஒரு மூவரும், நண்ணிடினும், கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்: 77 'வான் என்பது என்? வையகம் என்பது என்? மால்- தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர், யான் என்பது என்? ஈசன் என் இமையோர் கோன் என்பது என்?-எம்பி கொதித்திடுமேல்! 78 'தெய்வப் படையும், சினமும், திறலும் மய் அற்று ஒழி மா தவம், மற்றும் எலாம், எய்தற்கு உளவோ-இவன் இச் சிலையில் கய் வைப்பு அளவே? இறல் காணுதியால். 79 'என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான்; இவன், "அன்னவள் சொல் குன்றேன்" என ஏகிய கொள்கையினால் நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்! 80 உடன் சென்று போரைக் காணுமாறு வீடணனை இராமன் ஏவல் 'ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம் மாகாயன் நெடுந் தலை வாளியொடும் ஆகாயம் அளந்து விழுந்தனைக் காகாதிகள் நுங்குதல் காணுதியால். 81 'நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே? தீரக் கொடியாரொடு தேவர் பொரும் போரைக் கொடு வந்து புகுந்தது நாம் ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ? 82 'சிவன்; அல்லன் எனில், திருவின் பெருமான்; அவன் அல்லன் எனில், புவி தந்தருளும் தவன்; அல்லன் எனில், தனியே வலியோன் இவன்; அல்லன் எனில், பிறர் யார் உளரோ? 83 'ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம் வன் தானையர் வந்து வளைந்த எலாம் கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ? 84 'கொல்வானும் இவன்; கொடியோரை எலாம் வெல்வானும் இவன்; அடல் விண்டு என ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ செல்வாய்' என ஏவுதல் செய்தனனால். 85 இலக்குவன் வீடணன் தொடரப் போர்க்களம் புகுதல் அக் காலை இலக்குவன் ஆரியனை முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின் மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப் புக்கான், அவன் வந்து புகுந்த களம். 86 சேனைகள் நெருங்கிப் பொருதல் சேனைக் கடல் சென்றது, தென் கடல்மேல் ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா; ஆனைக் கடல், தேர், பரி, ஆள், மிடையும் தானைக் கடலோடு தலைப்படலும். 87 பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு, அசும்பு உற உருகிய, உலகம் ஆர்த்து எழ, குசும்பையின் நறு மலர்ச் சுண்ணக் குப்பையின் விசும்பையும் கடந்தது, விரிந்த தூளியே. 88 தாம் இடித்து எழும் பணை முழக்கும், சங்கு இனம் ஆம் இடிக் குமுறலும், ஆர்ப்பின் ஓதையும், ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும், அஞ்சி, தம் வாய் மடித்து ஒடுங்கின-மகர வேலையே. 89 உலைதொறும் குருதி நீர் அருவி ஒத்து உக, இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக, மலைதொறும் பாய்ந்தென, மான யானையின் தலைதொறும் பாய்ந்தன, குரங்கு தாவியே. 90 கிட்டின கிளை நெடுங் கோட்ட, கீழ் உகு மட்டின அருவியின் மதத்த, வானரம் விட்டன நெடு வரை, வேழம் வேழத்தை முட்டின ஒத்தன, முகத்தின் வீழ்வன. 91 இடித்தன; உறுக்கின; இறுக்கி ஏய்ந்தன; தடித்தன; எயிற்றினால் தலைகள் சந்து அறக் கடித்தன;-கவிக் குலம், கால்கள் மேற்படத் துடித்தன குருதியில், துரக ராசியே. 92 அடைந்தன கவிக் குலம் எற்ற, அற்றன, குடைந்து எறி கால் பொர, பூட்கைக் குப்பைகள்; இடைந்தன முகிற் குலம் இரிந்து சாய்ந்தென உடைந்தன; குல மருப்பு உகுத்த, முத்தமே. 93 தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர் கால் பட, கை பட, கால பாசம் போல் வால் பட, புரண்டனர் நிருதர்; மற்று அவர் வேல் படப் புரண்டனர், கவியின் வீரரே. 94 அரவமும், கரிகளும், பரியும், அல்லவும், விரவின கவிக் குலம் வீச, விம்மலால், உர வரும் கான் எனப் பொலிந்தது, உம்பரே. 95 தட வரை, கவிக் குலத் தலைவர், தாங்கின, அடல் வலி நிருதர்தம் அனிக ராசிமேல் விடவிட, விசும்பிடை மிடைந்து விழ்வன படர் கடல் இன மழை படிவ போன்றவே. 96 இழுக்கினர் அடிகளின், இங்கும் அங்குமா, மழுக்களும், அயில்களும், வாளும், தோள்களும் முழுக்கினர், உழக்கினர் மூரி யாக்கையை ஒழுக்கினர் நிருதரை, உதிர ஆற்றினே. 97 மிடலுடைக் கவிக் குலம், குருதி வெள்ள நீர் இடை இடை நீந்தின, இயைந்த யானையின் திடரிடைச் சென்று, அவை ஒழுக்கச் சேர்ந்தன, கடலிடைப் புக்கன, கரையும் காண்கில. 98 கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண, கண் சேல் பிடித்து எழு திரை ஆற்றில், திண் நெடுங் கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்போல், வால் பிடித்து ஒழுகின-கவியின் மாலையே. 99 பாய்ந்தது நிருதர் தம் பரவை; பல் முறை காய்ந்தது, கடும் படை கலக்கி; கைதொறும் தேய்ந்தது, சிதைந்தது, சிந்திச் சேண் உறச் சாய்ந்தது-தகைப் பெருங் கவியின் தானையே. 100 இலக்குவன் வானரரைத் தேற்றிப் போரிடல் அத் துணை, இலக்குவன், 'அஞ்சல் அஞ்சல்!' என்று, எத் துணை மொழிகளும் இயம்பி, ஏற்றினன், கைத்துணை வில்லினை, காலன் வாழ்வினை, மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான். 101 நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள் மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும், கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல் நான் மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி. 102 துரந்தன சுடு சரம்; துரந்த, தோன்றல கரந்தன, நிருதர் தம் கரை இல் யாக்கையின்; நிரந்தன நெடும் பிணம், விசும்பின் நெஞ்சு உற; பரந்தன குருதி, அப் பள்ள வெள்ளத்தின். 103 யானையின் கரம் துரந்த, இரத வீரர்தம் வான் உயர் முடித் தலை தடிந்து வாசியின் கால் நிரை அறுத்து, வெங் கறைக்கண் மொய்ம்பரை ஊனுடை உடல் பிளந்து, ஓடும்-அம்புகள்; 104 வில் இடை அறுத்து, வேல் துணித்து, வீரர்தம் எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து, எறி கல் இடை அறுத்து, மாக் கடிந்து, தேர் அழீஇ, கொல் இயல் யானையைக் கொல்லும், கூற்றினே. 105 இலக்குவன் அம்பினால் அழிந்துபட்ட படுகளத்தின் நிலை வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண் மருப்பு, அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின, முற்று அரு முப் பகல் திங்கள் வெண் முளை உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன. 106 கண்டகர் நெடுந் தலை, கனலும் கண்ணன,- துண்ட வெண் பிறைத் துணை கவ்வி, தூக்கிய குண்டல மீன் குலம் தழுவி, கோள் மதி மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே. 107 கூர் மருப்பு இணையன, குறைந்த கையன, கார் மதக் கன வரை கவிழ்ந்து வீழ்வன- போர்முகக் குருதியின் புணரி புக்கன, பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன. 108 புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற, கண் அகன் தேர்க் குலம், மறிந்த காட்சிய- எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட மண் உற, விண்ணின் வீழ் மானம் போன்றன. 109 அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன- விடற்கு அரும் வினை அறச் சிந்தி, மெய் உயிர் கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என, உடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன. 110 'ஆடுவ கவந்தம் ஒன்று, ஆறு எண்ணாயிரம் வீடிய பொழுது' எனும் பனுவல் மெய்யதேல், கோடியின் மேல் உள, குனித்த; கொற்றவன் பாடு இனி ஒருவரால் பகரற்பாலதோ? 111 ஆனையின் குருதியும், அரக்கர் சோரியும், ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும், கானினும் மலையினும் பரந்த கால் புனல் வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே. 112 தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய ஆக்கைய, புரசையோடு அணைந்த தாளன, மேக்கு உயர் அங்குசக் கைய, வெங் கரி, நூக்குவ, கணிப்பு இல-அரக்கர் நோன் பிணம். 113 கோளுடைக் கணை பட, புரவி கூத்தன, தோளுடை நெடுந் தலை துமிந்தனும், தீர்கில ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ- வாளுடைத் தடக் கைய, வாசி மேலன. 114 வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள் கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம், கய் வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா எய்வன எனைப் பல, இரத மேலன. 115 தாதையை, தம்முனை, தம்பியை, தனிக் காதலை, பேரனை, மருகனை, களத்து ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்- சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார். 116 தூண்டு அருங் கணை படத் துமிந்து, துள்ளிய தீண்ட அரு நெடுந் தலை தழுவிச் சேர்ந்தன, பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன ஆண்டலை நிகர்த்தன, எருவை ஆடுவ. 117 ஆயிர ஆயிர கோடியாய் வரும் தீ உமிழ் நெடுங் கணை மனத்தின் செல்வன, பாய்வன, புகுவன; நிருதர் பல் உயிர் ஓய்வன, நமன் தமர் கால்கள் ஓயவே. 118 விளக்கு வான் கணைகளால் விளிந்து, மேருவைத் துளக்குவார் உடற் பொறை துணிந்து, துள்ளுவார்; இளக்குவார், அமரர் தம் சிரத்தை; ஏன்? முதுகு உளுக்குவாள் நிலமகள், பிணத்தின் ஓங்கலால். 119 தாருகன் இலக்குவனுடன் பொருது இறத்தல் தாருகன் என்று உளன் ஒருவன்-தான் நெடு மேருவின் பெருமையான், எரியின் வெம்மையான், போர் உவந்து உழக்குவான், புகுந்து தாங்கினான்- தேரினன், சிலையினன், உமிழும் தீயினன். 120 துரந்தனன் நெடுஞ் சரம், நெருப்பின் தோற்றத்த; பரந்தன, விசும்பிடை ஒடுங்க; பண்டுடை வரம்தனின் வளர்வன அவற்றை, வள்ளலும், கரந்தனன் கணைகளால், முனிவு காந்துவான். 121 அண்ணல் தன் வடிக் கணை துணிப்ப, அற்று அவன் கண் அகல் நெடுந் தலை, விசையின் கார் என, விண்ணிடை ஆர்த்தது, விரைவில் மெய் உயிர் உண்ணிய வந்த வெங் கூற்றும் உட்கவே. 122 இலக்குவன் காலன் முதலிய ஐவரைக் கொல்லுதல் காலனும், குலிசனும், காலசங்கனும், மாலியும், மருத்தனும் மருவும் ஐவரும் சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார்; பாலமும், பாசமும், அயிலும் பற்றுவார். 123 அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் துன்ன அரும் படைக்கலம் துணித்து, தூவினன், நல் நெடுந் தலைகளைத் துணித்து; நால் வகைப் பல் நெடுந் தானையைப் பாற நூறினான். 124 இலக்குவன்-அதிகாயன் படை போர் ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர் ஈண்டின மதகிரி ஏழ்-எண்ணாயிரம் தூண்டினர், மருங்கு உறச் சுற்றினார், தொகை வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார். 125 போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார், தாக்கினார் திசைதொறும், தடக் கை மால் வரை; நூக்கினார் படைகளால் நுறுக்கினார்; குழம்பு ஆக்கினார், கவிகள் தம் குழுவை; ஆர்ப்பினார். 126 எறிந்தன, எய்தன, எய்தி, ஒன்றொடு ஒன்று அறைந்தன, அசனியின் விசையின் ஆசைகள் நிறைந்தன, மழை என நெருக்கி நிற்றலால், மறைந்தன, உலகொடு திசையும் வானமும். 127 அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து, அவர் துப்புடைத் தடக் கைகள் துணித்து, சுற்றிய முப் புடை மதமலைக் குலத்தை முட்டினான்- எப் புடை மருங்கினும் எரியும் வாளியான். 128 குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற, வன் தலை துமிதர, மஞ்சு என மறிவன ஒன்று அல; ஒருபதும் ஒன்பதும்,-ஒரு கணை சென்று அரிதர,-மழை சிந்துவ மதமலை. 129 ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட, இரு தொடை புரசையொடு இறுபவர், எறி படை விருதுடை நிருதர்கள், மலை என விழுவர்கள்; பொருது உடைவன, மத மழையன புகர் மலை. 130 பருமமும், முதுகு இடு படிகையும், வலி படர் மருமமும், அழிபட, நுழைவன வடி கணை, உருமினும் வலியன, உருள்வன திசை திசை, கரு மலை நிகர்வன;-கதமலை கனல்வன. 131 இறுவன கொடியவை, எரிவன இடை இடை துறுவன சுடு கணை, துணிவன மதகரி; அறுவன, அவை அவை கடவினர் தடி தலை; வெறுமைகள் கெடுவன, விழி குழி கழுதுகள். 132 மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள படலொடும், உரும் எறி பரு வரை நிலையன, உடலொடும் உருள் கரி உதிரமது, உரு கெழு கடலொடு பொருதது, கரியொடு கரி என. 133 மேலவர் படுதலின், விடும் முறை இல, மிடல் ஆலமும் அசனியும் அனையன, அடு கரி மால் உறு களியன, மறுகின, மதம் மழை போல்வன, தம தம எதிர் எதிர் பொருவன. 134 கால் சில துணிவன; கரம் அறுவன; கதழ் வால் சில துணிவன; வயிறுகள் வெளி பட, நால் சில குடர் அன; நகழ்வன சில-வரு தோல் சில, கணை பல சொரிவன மழை என. 135 எட்டினும் எட்ட அரு நிலையன எவை? அவன் விட்டன விட்டன விடு கணை படுதொறும் பட்டன பட்டன, படர் பணை குவிவன. 136 அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் இறுதிய மத கரி இறுதலும், எரி உமிழ் தறுகணர், தகை அறு நிலையினர், சலம் உறு கறுவினர், அவன் எதிர் கடவினர், கடல் என. 137 எல்லை இல் மத கரி, இரவினது இனம் நிகர் செல்வன, முடிவு இல, தெறு தொழில் மறவனை, வில்லியை, இனிது உற விடு கணை மழையினர், 'கொல்லுதி' என, எதிர் கடவினர்-கொடியவர். 138 வந்தன மத கரி வளைதலின், மழை பொதி செந் தனி ஒரு சுடர் என மறை திறலவன், இந்திரதனு என, எழு சிலை குனிவுழி, தந்தியின் நெடு மழை சிதறின, தரையின. 139 மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன, மலையின் மெய் பெற்றன, கடல் ஒப்பன, வெயில் உக்கன விழியின்,- மொய் பெற்று உயர் முதுகு இற்றன, முகம் உக்கன, முரண் வெங் கை அற்றன; மதம் முற்றிய கணிதத்து இயல்,-கத மா. 140 உள் நின்று அலை கடல் நீர் உக, இறுதிக் கடை உறு கால் எண்ணிந்தலை நிமிர்கின்றன, இகல் வெங் கணை, இரணம் பண்ணின் படர் தலையில் பட, மடிகின்றன பல ஆம், மண்ணின் தலை உருள்கின்றன-மழை ஒத்தன மதமா. 141 பிறை பற்றிய எனும் நெற்றிய, பிழை அற்றன பிறழ, பறை அற்றம் இல் விசை பெற்றன, பரியக் கிரி, அமரர்க்கு, இறை, அற்றைய முனிவில் படை எறியப் புடை எழு பொன் சிறை அற்றன என, இற்றன-சினம் முற்றிய மதமா. 142 கதிர் ஒப்பன கணை பட்டுள, கதம் அற்றில, கதழ் கார் அதிரத் தனி அதிர்கைக் கரி அளவு அற்றன உளவா, எதிர்பட்டு அனல் பொழிய, கிரி இடறி, திசை எழு கார் உதிரத்தொடும் ஒழுகி, கடல் நடு உற்றவும் உளவால். 143 கண்ணின் தலை அயில் வெங் கணை பட நின்றன, காணா, எண்ணின் தலை நிமிர் வெங் கதம் முதிர்கின்றன, இனமா மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன, மலைபோல் உள் நின்று அலை நிருதக் கடல் உலறிட்டன உளவால். 144 ஓர் ஆயிரம் அயில் வெங் கணை, ஒரு கால் விடு தொடையின், கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன, கதுவுற்று, ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன; இனி மேல் ஆராய்வது என்? அவன் வில் தொழில் அமரேசரும் அறியார்! 145 தேரும், தெறு கரியும், பொரு சின மள்ளரும், வய வெம் போரின் தலை உகள்கின்றன புரவிக் குலம் எவையும், பேரும் திசை பெறுகின்றில-பணையின் பிணை மத வெங் காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா. 146 இராவணன் அனுப்பிய யானைப் படையை இலக்குவன் அழித்தல் நூறாயிரம் மத வெங் கரி, ஒரு நாழிகை நுவல, கூறு ஆயின; பயமுற்று ஒரு குலைவு ஆயின; உலகம் தேறாதன, மலை நின்றன, தெரியாதன, சின மா வேறு ஆயின, அவை யாவையும் உடனே வர விட்டான். 147 ஒரு கோடிய மத மால் கரி, உள வந்தன உடன் முன் பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய, பொழி மத யாறு அருகு ஓடுவ, வர உந்தினர்-அசனிப் படி கணை கால் இரு கோடுடை மத வெஞ் சிலை இள வாள் அரி எதிரே. 148 உலகத்து உள மலை எத்தனை, அவை அத்தனை உடனே கொல நிற்பன, பொருகிற்பன, புடை சுற்றின, குழுவாய் அலகு அற்றன, சினம் முற்றிய, அனல் ஒப்பன, அவையும் தலை அற்றன, கரம் அற்றன, தனி வில் தொழில் அதனால். 149 நாலாயின, நவ யோசனை நனி வன் திசை எவையும், மால் ஆயின மத வெங் கரி திரிகின்றன வரலும், 'தோல் ஆயின, உலகு எங்கணும்' என அஞ்சினர்; துகளே- போல் ஆயின, வய வானமும்; ஆறானது, புவியே. 150 கடை கண்டில, தலை கண்டில, கழுதின் திரள், பிணமா இடை கண்டன, மலை கொண்டென எழுகின்றன; திரையால் புடை கொண்டு எறி குருதிக் கடல் புணர்கின்றன, பொறி வெம் படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால். 151 ஒற்றைச் சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக, ஒளிர் வாய் வெற்றிக் கணை, உரும் ஒப்பன, வெயில் ஒப்பன, அயில்போல் வற்றக் கடல் சுடுகிற்பன, மழை ஒப்பன பொழியும் கொற்றக் கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான். 152 மலை அஞ்சின; மழை அஞ்சின; வனம் அஞ்சின; பிறவும் நிலை அஞ்சின, திசை வெங் கரி; நிமிர்கின்றன கடலில் அலை அஞ்சின; பிறிது என், சில? தனி ஐங் கர கரியும், கொலை அஞ்சுதல் புரிகின்றது-கரியின் படி கொளலால். 153 கால் ஏறின சிலை நாண் ஒலி, கடல் ஏறுகள் பட, வான்- மேல் ஏறின, மிசையாளர்கள் தலை மெய்தொறும் உருவ, கோல் ஏறின-உரும் ஏறுகள் குடியேறின எனலாய், மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய. 154 அனுமன் யானைப் படையை அழித்தல் இவ் வேலையின், அனுமான்,-முதல் எழு வேலையும் அனையார், வெவ் வேலவர், செல ஏவிய கொலை யானையின் மிகையைச் செவ்வே உற நினையா, 'ஒரு செயல் செய்குவென்' என்பான், தவ்வேலென வந்தான்,-அவன் தனி வேல் எனத் தகையான். 155 ஆர்த்து அங்கு அனல் விழியா, முதிர் மத யானையை அனையான், தீர்த்தன் கழல் பரவா, முதல் அரிபோல் வரு திறலான், வார்த் தங்கிய கழலான்,-ஒரு மரன், நின்றது, நமனார் போர்த் தண்டினும் வலிது ஆயது, கொண்டான் -புகழ் கொண்டான். 156 கருங் கார் புரை நெடுங் கையன களி யானைகள் அவை சென்று ஒருங்கு ஆயின, உயிர் மாய்ந்தன; பிறிது என், பல உரையால்?- வரும் காலனும், பெரும் பூதமும், மழை மேகமும், உடனாப் பொரும் காலையில் மலைமேல் விழும் உரும் ஏறு எனப் புடைத்தான். 157 மிதியால் பல, விசையால் பல, மிடலால் பல, இடறும் கதியால் பல, தெழியால் பல, காலால் பல, வாலின் நுதியால் பல, நுதலால் பல, நொடியால் பல, பயிலும் குதியால் பல, குமையால் பல, கொன்றான்-அறம் நின்றான். 158 பறித்தான் சில, பகிர்ந்தான் சில, வகிர்ந்தான் சில, பணை போன்று இறுத்தான் சில, இடந்தான் சில, பிளந்தான் சில, எயிற்றால் கறித்தான் சில, கவர்ந்தான் சில, கரத்தால் சில பிடித்தான், முறித்தான் சில, திறத்து ஆனையின் நெடுங் கோடுகள்-முனிந்தான். 159 வாரிக் குரை கடலில் புக விலகும்; நெடு மரத்தால் சாரித்து அலைத்து உருட்டும்; நெடுந் தலத்தில் படுத்து அரைக்கும்; பாரில் பிடித்து அடிக்கும்; குடர் பறிக்கும்; படர் விசும்பின் ஊரில் செல, எறியும்; மிதித்து உழக்கும்; முகத்து உதைக்கும்; 160 வாலால் வர வளைக்கும், நெடு மலைப் பாம்பு என வளையா, மேல் ஆளொடு பிசையும்; முழு மலைமேல் செல, விலக்கும்; ஆலாலம் உண்டவனே என, அகல் வாயின் இட்டு அதுக்கும்; தோல் ஆயிரம் இமைப்போதினின் அரிஏறு எனத் தொலைக்கும்; 161 சய்யத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா, நொய்தின் கடிது எதிர் உற்றன, நூறாயிரம், மாறா மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய, தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய் உகத் துகைப்பான். 162 வேறாயின மத வெங் கரி ஒரு கோடியின், விறலோன், நூறாயிரம் படுத்தான்; இது நுவல்காலையின், இளையோன்; கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்; தேறாதது ஓர் பயத்தால் நெடுந் திசை காவலர் இரிந்தார். 163 இரிந்தார், திசை திசை எங்கணும் யானைப் பிணம் எற்ற, நெரிந்தார்களும்; நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் எரிந்தார்; நெடுந் தடந் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல, திரிந்தான் ஒரு தனியே, நெடுந் தேவாந்தகன், சினத்தான். 164 உதிரக் கடல், பிண மால் வரை, ஒன்று அல்லன பலவாய் எதிர, கடு நெடும் போர்க் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான், கதிர் ஒப்பன சில வெங் கணை அனுமான் உடல் கரந்தான், அதிரக் கடல்-நெடுந் தேரினன்-மழைஏறு என ஆர்த்தான். 165 தேவராந்தகனை அழித்தல் அப்போதினின், அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான், 'இப்போது இவன் உயிர் போம்' என, உரும் ஏறு என எறிந்தான்; வெப்போ என வெயில் கால்வன அயில் வெங் கணை , விசையால் 'துப்போ?' என, துணிஆம் வகை, தேவாந்தகன் துரந்தான். 166 மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன், வய வானரக் குலத்தோர்க்கு ஏறு, ஆங்கு அதும் எறியாதமுன், முறியாய் உக எய்தான்; கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான், பாறு ஆங்கு எனப் புகப் பாய்ந்து, அவன் நெடு வில்லினைப் பறித்தான். 167 பறித்தான் நெடும் படை, வானவர் பலர் ஆர்த்திட, பலவா முறித்தான்; அவன் வலி கண்டு, உயர் தேவாந்தகன் முனிந்தான், மறித்து ஆங்கு ஓர் சுடர்த் தோமரம் வாங்கா, மிசை ஓங்கா; செறித்தான், அவன் இடத் தோள் மிசை; இமையோர்களும் திகைத்தார். 168 சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும், கனல் ஆம் எனச் சுளித்தான், அடல் தோமரம் பறித்தான், திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான், புடைத்தான்; அவன் தடந்தேரொடு நெடுஞ் சாரதி புரண்டான்;- மடல் தோகையர் வலி வென்றவன்-வானோர் முகம் மலர்ந்தார். 169 சூலப் படை தொடுவான் தனை இமையாத முன் தொடர்ந்தான்; ஆலத்தினும் வலியானும் வந்து, எதிரே புகுந்து அடர்த்தான்; காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் மூலத்திடைப் புடைத்தான், உயிர் முடித்தான், சிரம் மடித்தான். 170 அதிகாயன் - அனுமன் வீர உரை கண்டான் எதிர் அதிகாயனும், கனல் ஆம் எனக் கனன்றான், புண்தான் எனப் புனலோடு இழி உதிரம் விழி பொழிவான், 'உண்டேன் இவன் உயிர் இப்பொழுது; ஒழியேன்' என உரையா, 'திண் தேரினைக் கடிது ஏவு' என, சென்றான்; அவன் நின்றான். 171 அன்னான் வரும் அளவின் தலை, நிலைநின்றன அனிகம்; பின் ஆனதும் முன் ஆனது; பிறிந்தார்களும் செறிந்தார்; பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான், சொன்னான் இவை, அதிகாயனும், வடமேருவைத் துணிப்பன். 172 'தேய்த்தாய், ஒரு தனி எம்பியைத் தலத்தோடு ஒரு திறத்தால்; போய்த் தாவினை நெடு மா கடல், பிழைத்தாய்; கடல் புகுந்தாய், வாய்த்தானையும் மடித்தாய்; அது கண்டேன், எதிர் வந்தேன். ஆய்த்து ஆயது முடிவு, இன்று உனக்கு; அணித்தாக வந்து, அடுத்தாய். 173 'இன்று அல்லது, நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன்; ஒன்று அல்லது செய்தாய் எமை; இளையோனையும் உனையும் வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை மழையால் கொன்று அல்லது செல்லேன்; இது கொள்' என்றனன், கொடியோன். 174 அனுமன் திரிசிரனை அழை எனக் கூறல் 'பிழையாது; இது பிழையாது' என, பெருங் கைத்தலம் பிசையா, மழை ஆம் எனச் சிரித்தான்-வட மலை ஆம் எனும் நிலையான்- 'முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய்; அழையாய் திரிசிரத்தோனையும், நிலத்தோடும் இட்டு அரைப்பான். 175 திரிசிரனை அழித்தல் 'ஆம் ஆம்!' என, தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து, அடர்ந்தான்; கோமான் தனிப் பெருந் தூதனும், எதிரே செருக் கொடுத்தான், 'காமாண்டவர், கல்லாதவர், வல்லீர்!' எனக் கழறா, நா மாண்டு அற, அயல் நின்று உற நடுவே புக நடந்தான். 176 தேர்மேல் செலக் குதித்தான், திரிசிரத்தானை ஓர் திறத்தால், கார் மேல் துயில் மலை போலியைக் கரத்தால் பிடித்து எடுத்தான், பார்மேல் படுத்து அரைத்தான், அவன் பழி மேற்படப் படுத்தான். 'போர்மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம்' என, போனான். 177 அதிகாயன், இலக்குவனுடன் பொர வருதல் இமையிடையாகச் சென்றான்; இகல் அதிகாயன் நின்றான், அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான், அருவியோடு அழல்கால் கண்ணான், 'உமையொருபாகனேயும், இவன் முனிந்து உருத்த போது, கமையிலன் ஆற்றல்' என்னா, கதத்தொடும் குலைக்கும் கையான், 178 'பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான், புறத்து நின்று, பாணித்தல் வீரம் அன்றால்; பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் ஆணிப்பொன் ஆனான் தன்னைப் பின்னும் கண்டு அறிவென்' என்னா, தூணிப் பொன் புறத்தான், திண் தேர் இளவல்மேல் தூண்டச் சொன்னான். 179 தேர் ஒலி கடலைச் சீற, சிலை ஒலி மழையைச் சீற, போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக, தார் ஒலி கழற் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான்; வீரனும் எதிரே நின்றான், விண்ணவர் விசையம் வேண்ட. 180 அங்கதன் தோள் மேலேறி இலக்குவன் போரிடல் வல்லையின் அணுக வந்து வணங்கினன், வாலி மைந்தன்; 'சில்லி அம் தேரின் மேலான், அவன் அமர் செவ்விது அன்றால், வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்கப் புல்லியன் எனினும், என் தோள் ஏறுதி, புனித!' என்றான். 181 'ஆம்' என, அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள் மேல் தாமரைச் சரணம் வைத்தான்; கலுழனின் தாங்கி நின்ற கோமகன் ஆற்றல் நோக்கி, குளிர்கின்ற மனத்தர் ஆகி, பூ மழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர், புலவர் எல்லாம். 182 ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண் தேர் போயின திசைகள் எங்கும், கறங்கு எனச் சாரி போமால்; மீ எழின் உயரும்; தாழின் தாழும்; விண் செல்லின் செல்லும்;- தீ எழ உவரி நீரைக் கலக்கினான் சிறுவன் அம்மா! 183 அத் தொழில் நோக்கி, ஆங்கு வானரத் தலைவர் ஆர்த்தார்; 'இத் தொழில் கலுழற்கேயும் அரிது' என, இமையோர் எல்லாம் கைத்தலம் குலைத்தார் ஆக, களிற்றினும் புரவிமேலும் தைத்தன, இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி. 184 முழங்கின முரசம்; வேழம் முழங்கின; மூரித் திண் தேர் முழங்கின; முகரப் பாய்மா முழங்கின; முழு வெண் சங்கம் முழங்கின; தனுவின் ஓதை முழங்கின; கழலும் தாரும் முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின, முகிலின் மும்மை. 185 கரி பட, காலாள் வெள்ளம் களம் பட, கலினக் காலப் பரி பட, கண்ட கூற்றும் பயம் பட, பைம் பொன் திண் தேர் எரிபட, பொருத பூமி இடம் பட, எதிர்ந்த எல்லாம் முரிபட, பட்ட, வீரன் முரண் கணை மூரி மாரி. 186 இலக்குவன் - அதிகாயன் உரையாடல் மன்னவன் தம்பி, மற்று அவ் இராவணன் மகனை நோக்கி, 'என் உனக்கு இச்சை? நின்ற எறி படைச் சேனை எல்லாம் சின்னபின்னங்கள் பட்டால், பொருதியோ? திரிந்து நீயே நல் நெடுஞ் செருச் செய்வாயோ? சொல்லுதி, நயந்தது' என்றான். 187 'யாவரும் பொருவர் அல்லர், எதிர்ந்துள யானும் நீயும், தேவரும் பிறரும் காண, செருவது செய்வ எல்லாம்; காவல் வந்து உன்னைக் காப்பார் காக்கவும் அமையும்; கூவியது அதனுக்கு அன்றோ?' என்றனன்-கூற்றின் வெய்யோன். 188 'உமையனே காக்க; மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க; இமையவர் எல்லாம் காக்க; உலகம் ஓர் ஏழும் காக்க; சமையும் உன் வாழ்க்கை, இன்றோடு' என்று, தன் சங்கம் ஊதி, அமை உருக் கொண்ட கூற்றை நாண் எறிந்து, உருமின் ஆர்த்தான். 189 இலக்குவன் அதிகாயனுடன் பொருதல் அன்னது கேட்ட மைந்தன், அரும்பு இயல் முறுவல் தோன்ற, 'சொன்னவர் வாரார்; யானே தோற்கினும், தோற்கத் தக்கேன்; என்னை நீ பொருது வெல்லின், அவரையும் வென்றி' என்னா, மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெஞ் சரம் கோத்து விட்டான். 190 விட்ட வெம் பகழிதன்னை, வெற்பினை வெதுப்பும் தோளான், சுட்டது ஓர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி, எட்டினோடு எட்டு வாளி, 'இலக்குவ! விலக்காய்' என்னா, திட்டியின் விடத்து நாகம் அனையன, சிந்தி, ஆர்த்தான். 191 ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி, வேர்த்து, ஒலி வயிர வெங் கோல், மேருவைப் பிளக்கற்பால, தூர்த்தனன், இராமன் தம்பி; அவை எலாம் துணித்துச் சிந்தி, கூர்த்தன பகழி கோத்தான், குபேரனை ஆடல் கொண்டான். 192 எய்தனன் எய்த எல்லாம் எரி முகப் பகழியாலே, கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில் கோபம் செய்தனன், துரந்தான் தெய்வச் செயல் அன்ன கணையை; வெங்கோல் நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத. 193 நூறு கோல் கவசம் கீறி நுழைதலும், குழைவு தோன்றத் தேறல் ஆம் துணையும், தெய்வச் சிலை நெடுந் தேரின் ஊன்றி, ஆறினான்; அதுகாலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் கூறுகூறாக்கி அம்பால், கோடியின் மேலும் கொன்றான். 194 புடை நின்றார் புரண்டவாறும், போகின்ற புங்க வாளி கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்; இடை நின்ற மயக்கம் தீர்ந்தான்; ஏந்திய சிலையன் காந்தி, தொடை நின்ற பகழி மாரி, மாரியின் மும்மை தூர்த்தான். 195 வான் எலாம் பகழி, வானின் வரம்பு எலாம் பகழி, மண்ணும் தான் எலாம் பகழி, குன்றின் தலை எலாம் பகழி, சார்ந்தோர் ஊன் எலாம் பகழி, நின்றோர் உயிர் எலாம் பகழி, வேலை மீன் எலாம் பகழி, ஆக வித்தினன்-வெகுளி மிக்கோன். 196 மறைந்தன திசைகள் எல்லாம்; வானவர் மனமே போலக் குறைந்தன, சுடரின் மும்மைக் கொழுங் கதிர்; குவிந்து, ஒன்று ஒன்றை அறைந்தன, பகழி; வையம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே; நிறைந்தன, பொறியின் குப்பை; நிமிர்ந்தன, நெருப்பின் கற்றை. 197 'முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை? மற்று இவன் தன்னை வெல்ல வல்லனோ, வள்ளல் தம்பி? கற்றது காலனோடோ , கொலை இவன்? ஒருவன் கற்ற வில் தொழில் என்னே!' என்னா, தேவரும் வெருவலுற்றார். 198 அங்கதன் நெற்றிமேலும், தோளினும், ஆகத்துள்ளும், புங்கமும் தோன்றாவண்ணம், பொரு சரம் பலவும் போக்கி, வெங் கணை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச் சங்கமும் ஊதி, விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான். 199 வாலி சேய் மேனிமேலும், மழை பொரு குருதி வாரி, கால் உயர் வரையின் செங் கேழ் அருவிபோல் ஒழுகக் கண்டான்; கோல் ஒரு பத்து-நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து, மேலவன் சிரத்தைச் சிந்தி, வில்லையும் துணித்தான்-வீரன். 200 மாற்று ஒரு தடந் தேர் ஏறி, மாறு ஒரு சிலையும் வாங்கி, ஏற்ற வல் அரக்கன் தன்மேல், எரி முகக் கடவுள் என்பான், ஆற்றல் சால் படையை விட்டான், ஆரியன்; அரக்கன் அம்மா, வேற்றுள, 'தாங்க!' என்னா, வெய்யவன் படையை விட்டான். 201 பொரு படை இரண்டும் தம்மில் பொருதன; பொருதலோடும், எரி கணை, உருமின் வெய்ய, இலக்குவன் துரந்த, மார்பை உருவின, உலப்பு இலாத; உளைகிலன், ஆற்றல் ஓயான், சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன், தெழிக்கும் சொல்லான். 202 பின் நின்றார் முன் நின்றாரைக் காணலாம் பெற்றித்து ஆக, மின் நின்ற வயிர வாளி திறந்தன, மேனி முற்றும்; அந் நின்ற நிலையின், ஆற்றல் குறைந்திலன், ஆவி நீங்கான், பொன் நின்ற வடிம்பின் வாளி மழை எனப் பொழியும் வில்லான். 203 இலக்குவன் நான்முகன் படையைச் செலுத்தி அதிகாயனைக் கொல்லுதல் கோல் முகந்து, அள்ளி அள்ளி, கொடுஞ் சிலை நாணில் கோத்து, கால்முகம் குழைய வாங்கி, சொரிகின்ற காளை வீரன்- பால் முகம் தோன்ற நின்று, காற்றினுக்கு அரசன், 'பண்டை நான்முகன் படையால் அன்றிச் சாகிலன், நம்ப!' என்றான். 204 'நன்று' என உவந்த, வீரன், நான்முகன் படையை வாங்கி மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான் குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு, அவ் வாளி சென்றது, விசும்பினூடு; தேவரும் தெரியக் கண்டார். 205 பூ மழை பொழிந்து, வானோர், 'போயது, எம் பொருமல்' என்றார்; தாம் அழைத்து அலறி, எங்கும் இரிந்தனர், அரக்கர் தள்ளி; தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது, குரக்குச் சேனை; கோமகன் தோளின்நின்றும் குதித்தனன், கொற்ற வில்லான். 206 வீடணன் இந்திரசித்து இறத்தல் உறுதி எனல் வெந் திறல் சித்தி கண்ட வீடணன், வியந்த நெஞ்சன், அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான்; 'ஐயன் மந்திரசித்தி அன்ன சிலைத் தொழில் வலி இது ஆயின், இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது' என்றான். 207 நராந்தகன் அங்கதனுடன் போரிட்டு அழிதல் '"ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன்" என்று, நீ நின் சாந்து அகல் மார்பு, திண் தோள், நோக்கி, நின் தனுவை நோக்கி, போம் தகைக்கு உரியது அன்றால்; போகலை; போகல்!' என்னா, நாந்தகம் மின்ன, தேரை நராந்தகன் நடத்தி வந்தான். 208 தேரிடை நின்று, கண்கள் தீ உக, சீற்றம் பொங்க, பாரிடைக் கிழியப் பாய்ந்து, பகலிடைப் பரிதி என்பான், ஊரிடை நின்றான் என்ன, கேடகம் ஒரு கை தோன்ற, நீருடை முகிலின் மின்போல், வாளொடு நிமிர வந்தான். 209 வீசின மரமும் கல்லும் விலங்கலும், வீற்று வீற்றா, ஆசைகள் தோறும் சிந்த, வாளினால் அறுத்து மாற்றி, தூசியும், இரண்டு கையும், நெற்றியும், சுருண்டு, நீர்மேல் பாசியின் ஒதுங்க, வந்தான்; அங்கதன் அதனைப் பார்த்தான். 210 மரம் ஒன்று விரைவின் வாங்கி, வாய் மடித்து உருத்து, வள்ளல் சரம் ஒன்றின் கடிது சென்று, தாக்கினான்; தாக்கினான் தன் கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனைத் தன் கை அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான். 211 அவ் இடை வெறுங் கை நின்ற அங்கதன், 'ஆண்மை அன்றால் இவ் இடை பெயர்தல்' என்னா, இமையிடை ஒதுங்கா முன்னர், வெவ் விடம் என்னப் பொங்கி, அவனிடை எறிந்த வீச்சுத் தவ்விட, உருமின் புக்கு, வாளொடும் தழுவிக் கொண்டான். 212 அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார்; 'இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது' என்பார்; குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக் கை கொண்டான், ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான். 213 போர் மத்தன் நீலனுடன் போரிட்டு மடிதல் கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட நீர் மத்தின் நிமிர்ந்த தோளான், நிறை மத்த மதுவைத் தேக்கி ஊர் மத்தம் உண்டாலன்ன மயக்கத்தான், உருமைத் திண்பான், போர்மத்தன் என்பான், வந்தான்-புகர் மத்தப் பூட்கை மேலான். 214 காற்று அன்றேல், கடுமை என் ஆம்? கடல் அன்றேல், முழக்கம் என் ஆம்? கூற்று அன்றேல், கொலை மற்று என் ஆம்? உரும் அன்றேல், கொடுமை என் ஆம்? சீற்றம் தான் அன்றேல், சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே? மாற்று அன்றே மலை; மற்று என்னே?-மத்தன் தன் மத்த யானை. 215 வேகமாக் கவிகள் வீசும் வெற்பினம் விழுவ, மேன்மேல், பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா; மாக மா மரங்கள் எல்லாம், கடாத்திடை வண்டு சோப்பி ஆகினும் ஆம்; அது அன்றேல், கரும்பு என்றே அறையலாமால். 216 காலிடைப்பட்டும், மானக் கையிடைப்பட்டும், கால வாலிடைப் பட்டும், வெய்ய மருப்பிடைப்பட்டும், மாண்டு, நாலிடைப்பட்ட சேனை, நாயகன் தம்பி எய்த கோலிடைப் பட்டது எல்லாம் பட்டது-குரக்குச் சேனை. 217 தன் படை உற்ற தன்மை நோக்கினான், தெரிக்கிலாமை, அன்பு அடை உள்ளத்து அண்ணல் அனலின் தன் புதல்வன், ஆழி வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் - பின் படை செல்ல, நள்ளார் பெரும் படை இரிந்து பேர. 218 சேறலும் களிற்றின் மேலான், திண் திறல் அரக்கன், செவ்வே, ஆறு இரண்டு அம்பினால் அந் நெடு மரம் அறுத்து வீழ்த்தான்; வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான்; அதனை விண்ணில், நூறு வெம் பகழி தன்னால், நுறுக்கினான், களிறு நூக்கி. 219 பின், நெடுங் குன்றம் தேடிப் பெயர்குவான் பெயராவண்ணம் பொன் நெடுங் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல, அந் நெடுங் கோப யானை, அமரரும் வெயர்ப்ப, அங்கி- தன் நெடு மகனைப் பற்றிப் பிடித்தது, தடக் கை நீட்டி. 220 'ஒடுங்கினன், உரமும், ஆற்றல் ஊற்றமும், உயிரும்' என்ன, கொடும் படை வயிரக் கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை, நெடுங் கையும் தலையும், பிய்யா, நொய்தினின் நிமிர்ந்து போனான்; நடுங்கினர், அரக்கர்; விண்ணோர், 'நன்று, நன்று!' என்ன நக்கார். 221 'தறைத்தலை உற்றான் நீலன்' என்பது ஓர் காலம் தன்னில், நிறைத் தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடுங் குன்று என்னக் குறைத் தலை வேழம் வீழ, விசும்பின்மேல் கொண்டு நின்றான், பிறைத் தலை வயிர வாளி மழை எனப் பெய்யும் கையான். 222 வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி, வீங்கிய விசையின் நீலன் அரக்கன் மேல் செல்ல விட்டான்; ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து, ஓர் அம்பால், ஓங்கல்போல் புயத்தினான் தன் உரத்திடை ஒளிக்க, எய்தான். 223 எய்த அது காலமாக, விளிந்திலது யானை என்ன, கையுடை மலை ஒன்று ஏறி, காற்று எனக் கடாவி வந்தான்; வெய்யவன், அவனைத்தானும் மேற்கொளா, வில்லினோடு மொய் பெருங் களத்தின் இட்டான், மும் மதக் களிற்றின் முன்னர். 224 இட்டவன் அவனிநின்றும் எழுவதன் முன்னம், யானை கட்டு அமை வயிரக் கோட்டால் களம் பட வீழ்த்தி, காலால் எட்டி, வன் தடக் கைதன்னால் எடுத்து, எங்கும் விரைவின் வீச, பட்டிலன், தானே தன் போர்க் கரியினைப் படுத்து வீழ்த்தான். 225 தன் கரி தானே கொன்று, தடக் கையால் படுத்து வீழ்த்தும் மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி, பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக, நீலன் புக்கான், வன் கரம் முறுக்கி, மார்பில் குத்தினன்; மத்தன் மாண்டான். 226 வயமத்தன் - இடபன் போர் மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற வன்மத்தைக் கண்டும், மாண்ட மத மத்தமலையைப் பார்த்தும், சன்மத்தின் தன்மையானும், தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக்கூட்டானும், வயமத்தன் கடிதின் வந்தான். 227 பொய்யினும் பெரிய மெய்யான்; பொருப்பினைப் பழித்த தோளான்; 'வெய்யன்' என்று உரைக்கச் சாலத் திண்ணியான்; வில்லின் செல்வன் பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ, பிறங்கு பல் பேய் ஐ-இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான்; 228 ஆர்க்கின்றான், உலகை எல்லாம் அதிர்க்கின்றான், உருமும் அஞ்சப் பார்க்கின்றான், பொன்றினாரைப் பழிக்கின்றான், பகழி மாரி தூர்க்கின்றான், குரங்குச் சேனை துரக்கின்றான், துணிபை நோக்கி, 'ஏற்கின்றார் இல்லை' என்னா, இடபன் வந்து, அவனோடு ஏற்றான். 229 சென்றவன் தன்னை நோக்கி, சிரித்து, 'நீ சிறியை; உன்னை வென்று அவம்; உம்மை எல்லாம் விளிப்பெனோ? விரிஞ்சன் தானே என்றவன் எதிர்ந்த போதும், இராவணன் மகனை இன்று கொன்றவன் தன்னைக் கொன்றே குரங்கின்மேல் கொதிப்பென்' என்றான். 230 'வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு, பலி உண் வாழ்க்கைப் பேய் கொண்டு, வெல்ல வந்த பித்தனே! மிடுக்கைப் பேணி நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ! நின் நோன்மை எல்லாம் ஓய்கின்றாய் காண்டி!' என்னா, உரைத்தனன், இடபன் ஒல்கான். 231 '"ஓடுதி" என்ன, ஓடாது உரைத்தியேல், உன்னோடு இன்னே ஆடுவென் விளையாட்டு' என்னா, அயில் எயிற்று அரக்கன், அம் பொன் கோடு உறு வயிரப் போர் வில் காலொடு புருவம் கோட்டி, ஈடு உற, இடபன் மார்பத்து ஈர்-ஐந்து பகழி எய்தான். 232 அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான், வேகத்தால் அத் தசும்புடைக் கொடுந் தேர்தன்னைத் தடக் கையால் எடுத்து வீச, பசுங் கழல் கண்ண பேயும் பறந்தன, பரவை நோக்கி; விசும்பிடைச் செல்லும் காரின் தாரைபோல் நான்ற மெய்யான். 233 தேரொடும் கடலின் வீழ்ந்து, சிலையும் தன் தலையும் எல்லாம் நீரிடை அழுந்தி, பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் பாரிடைக் குதியாமுன்னம், இடபனும், 'பதக! நீ போய் ஆரிடைப் புகுதி!' என்னா, அந்தரத்து ஆர்த்துச் சென்றான். 234 அல்லினைத் தழுவி நின்ற பகல் என, அரக்கன் தன்னை, கல்லினும் வலிய தோளால், கட்டியிட்டு இறுக்கும் காலை, பல்லுடைப் பில வாயூடு பசும் பெருங் குருதி பாய, வில்லுடை மேகம் என்ன, விழுந்தனன், உயிர் விண் செல்ல. 235 சுக்கிரீவன் - கும்பன் போர் குரங்கினுக்கு அரசும், வென்றிக் கும்பனும், குறித்த வெம் போர் அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார், மரம் கொடும், தண்டு கொண்டும், மலை என மலையாநின்றார்; சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர். 236 கிடைத்தார், உடலில் கிழி சோரியை வாரித் துடைத்தார், விழியில் தழல் மாரி சொரிந்தார், உடைத் தாரொடு பைங் கழல் ஆர்ப்ப உலாவிப் புடைத்தார், பொருகின்றனர்-கோள் அரி போல்வார். 237 தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன், அண்டங்கள் வெடிப்பன என்ன, அடித்தான்; கண்டு, அங்கு, அது மா மரமே கொடு காத்தான்; விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான். 238 'பொன்றப் பொருவேன், இனி' என்று, பொறாதான், ஒன்றப் புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான், நின்று அப் பெரியோன் நினையாதமுன், நீலன் குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான். 239 அத் தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான், ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான், பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்; சித்தங்கள் நடுங்கி, அரக்கர் திகைத்தார். 240 அடியுண்ட அரக்கன், அருங் கனல் மின்னா இடியுண்டது ஓர் மால் வரை என்ன, விழுந்தான்; 'முடியும் இவன்' என்பது ஓர் முன்னம், வெகுண்டான், 'ஒடியும் உன தோள்' என, மோதி உடன்றான். 241 தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன், தாளில் தடுமாறல் தவிர்ந்து, தகைந்தான், வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டு, ஆளித் தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான். 242 அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்; 'முடிவு ஆனவன் யார்?' என, வானவர் மொய்த்தார்; இடியோடு இடி கிட்டியது என்ன, இரண்டும் பொடியாயின தண்டு; பொருந்தினர் புக்கார். 243 மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்; பத்துத் திசையும் செவிடு எய்தின; பல் கால் தத்தித் தழுவி, திரள் தோள்கொடு தள்ளி, குத்தி, 'தனிக் குத்து' என, மார்பு கொடுத்தார். 244 நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க, கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க, மலையின் பிளவுற்றது, தீயவன் மார்பம். 245 'செய்வாய் இகல்?' என்று அவன் நின்று சிரித்தான்; ஐ வாய் அரவம் முழை புக்கென, ஐயன் கை வாய் வழி சென்று, அவன் ஆர் உயிர் கக்க, பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான். 246 கும்பன் இறக்க, நிகும்பனை அங்கதன் எதிர்த்தல் அக்காலை, நிகும்பன், அனல் சொரி கண்ணன், புக்கான், 'இனி, எங்கு அட போகுவது?' என்னா, மிக்கான் எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார். 247 சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான், ஆலத்தினும் வெய்யவன் அங்கதன், அங்கு ஓர் தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான், நீலக் கிரிமேல் நிமிர் பொற்கிரி நேர்வான். 248 நிகும்பன் சூலத்தை தடுத்து அனுமன் அவனை அழித்தல் எறிவான் உயர் சூலம் எடுத்தலும், 'இன்னே முறிவான் இகல் அங்கதன்' என்பதன் முன்னே, அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான், பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான். 249 தடை ஏதும் இல் குலம் முனிந்து, சலத்தால், விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை, இடையே தடைகொண்டு, தன் ஏடு அவிழ் அம் கைப் புடையே கொடு கொன்று, அடல் மாருதி போனான். 250 தலைவர்களை இழந்த அரக்கர் சேனையின் நிலை நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார், பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்; வன் தாள் மரம் வீசிய வானர வீரர் கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார். 251 ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார், கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால் பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார், பாடித்தலை உற்றவர், எண் இலர் பட்டார், 252 'தண்ணீர் தருக' என்றனர் தாவுற ஓடி, உண் நீர் அற, ஆவி உலந்தனர், உக்கார்; கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர்; காலால் மண் ஈரம் உற, கடிது ஊர் புக வந்தார். 253 விண்மேல் நெடிது ஓடினர், ஆர் உயிர் விட்டார் மண்மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்; எண் மேலும் நிமிர்ந்துளர், ஈருள் தயங்கப் புண் மேலுடை மேனியினார், திசை போனார். 254 அறியும்மவர்தங்களை, 'ஐய! இவ் அம்பைப் பறியும்' என வந்து, பறித்தலும் ஆவி பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார், குறியும் அறிகின்றிலர், சிந்தை குறைந்தார். 255 பரி பட்டு விழ, சிலர் நின்று பதைத்தார்; கரி பட்டு உருள, சிலர் கால்கொடு சென்றார்; நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார், எரி பட்ட மலைக்கண் இருந்தவர் என்ன, 256 மண்ணின் தலை வானர மேனியர் வந்தார், புண் நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார், 'கண் நின்ற குரங்கு கலந்தன' என்னா, உள் நின்ற அரக்கர் மலைக்க, உலந்தார். 257 இரு கணும் திறந்து நோக்கி, அயல் இருந்து இரங்குகின்ற உருகு தம் காதலோரை, 'உண்ணும் நீர் உதவும்' என்றார், வருவதன் முன்னம் மாண்டார் சிலர்; சிலர் வந்த தண்ணீர் பருகுவார் இடையே பட்டார்; சிலர் சிலர் பருகிப்பட்டார். 258 மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி உக்கனர் என்ன வீசி, தம்மைக் கொண்டு ஓடிப் போனார்; கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதற, காலால் திக்கொடு நெறியும் காணார், திரிந்து சென்று, உயிரும் தீர்ந்தார். 259 அதிகாயன் முதலானோர் இறந்ததை இராவனனுக்குக் கூறல் இன்னது ஓர் தன்மை எய்தி, இராக்கதர் இரிந்து சிந்தி, பொன் நகர் புக்கார்; இப்பால், பூசல் கண்டு ஓடிப் போன, துன்ன அருந் தூதர் சென்றார், தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் மன்னவன் அடியில் வீழ்ந்தார், மழையின் நீர் வழங்கு கண்ணார். 260 நோக்கிய இலங்கை வேந்தன், 'உற்றது நுவல்மின்' என்றான்; 'போக்கிய சேனைதன்னில் புகுந்துள இறையும் போதா; ஆக்கிய போரின், ஐய! அதிகாயன் முதல்வர் ஆய கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர், ஆவி' என்றார். 261 இராவணன் நிலையும் செயலும் ஏங்கிய விம்மல் மானம், இரங்கிய இரக்கம் வீரம், ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி, வாங்கிய கடல்போல் நின்றான்-அருவி நீர் வழங்கு கண்ணான். 262 திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப் பிசையுறும் கையை; மீசை சுறுக்கொள உயிர்க்கும்; பேதை நசையிடைக் கண்டான் என்ன, நகும், அழும், முனியும், நாணும். 263 மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்; எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்; 'பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென்' என்று எண்ணும்; எண்ணி, புண்ணிடை எரி புக்கென்ன, மானத்தால் புழுங்கி நையும். 264 இராவணன் அடி வீழ்ந்து தானியமாலி அரற்றல் ஒருவரும் உரையார் வாயால், உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார், வெருவரும் தகையர் ஆகி, விம்மினர் இருந்த வேலை, தரு வனம் அனைய தோளான் தன் எதிர் தானிமாலி இரியலிட்டு அலறி, ஓயாப் பூசலிட்டு, ஏங்கி வந்தாள்; 265 மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன, வளைகளோடு ஆரம் ஏங்க, முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன வாயாள்; தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி, உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்; 266 வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல், மென்மைத் தோள் நிலத்தை மேவ; போழ்ந்தனள், பெரும்பாம்பு என்னப் புரண்டனள்; பொருமிப் பொங்கி, 'சூழ்ந்தனை, கொடியாய்!' என்னா, துடித்து, அருந் துயர வெள்ளத்து ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும் அறிந்திலாதாள்; 267 'மாட்டாயோ, இக் காலம் வல்லோர் வலி தீர்க்க? மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோள் ஆற்றல்? கேட்டாய் உணர்ந்திலையோ? என் உரையும் கேளாயோ? காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ? 268 '"இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள்" என்று, அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன் தன் உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே! 269 'அக்கன் உலந்தான்; அதிகாயன் தான் பட்டான்; மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்; மக்கள் இனி நின்று உளான், மண்டோ தரி மகனே; திக்குவிசயம், இனி ஒருகால் செய்யாயோ? 270 'ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய்' எண் இறந்த கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ? பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ? சீதையால் இன்னம் வருவ சிலவேயோ? 271 'உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்; நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்; கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனை அம்புக்கு இரை ஆக்கி, ஆண்டாய் அரசு ஐய!' 272 தானியமாலி அரண்மனை சேறல் என்று, பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து, கன்று படப் பதைத்த தாய்போல் கவல்வாளை, நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து, குன்று புரையும் நெடுங் கோயில் கொண்டு அணைந்தார். 273 இலங்கை மக்களின் வருத்தம் தானை நகரத்துத் தளரத் தலைமயங்கி, போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்;- ஏனை மகளிர் நிலை என் ஆகும்?-போய் இரங்கி, வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார். 274 தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி பேர உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை; ஊர் அகலம் எல்லாம், அரந்தை, உவா உற்ற ஆர்கலியே ஒத்தது, அழுத குரல் ஓசை. 275 மிகைப் பாடல்கள் முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில் சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங் கதிரோன் இகல் கண்டிட ஏகினனால். 20-1 தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித் தார் வெள்ளம் அளப்பு இல; தந்தி இனக் கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம் பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால். 20-2 மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து எல் ஏறிய வாள், எழு, வல் முசலம், வில்லோடு அயில், வெங் கதை, வேல் முதலாம் பல் ஆயுத பத்தி பரித்து உடையார். 25-1 என, வந்த நிசாசரன், இவ் உரையைத் தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும், சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம் அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான். 50-1 என்றே உலகு ஏழினொடு ஏழினையும் தன் தாமரைபோல் இரு தாள் அளவா- நின்றான் உரை செய்ய, நிசாசரனும் பின்றா உரை ஒன்று பிதற்றினனால். 52-1 வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம் துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்; வெங் கணை இலக்குவன் வெகுண்டு, உகாந்தத்தில் பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான். 103-1 முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின் விடு கணை மழை நெடுந் தாரை, வெம் மதக் கட களிறு அடங்கலும் கழிய, கால், கரம், குடல், தலை, குறைந்தமை கூறல் ஆவதோ? 103-2 அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம்; அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு; அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி; அறுந்தன, கட களிறு ஆய நாமமே. 103-3 அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள் செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய் ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத் தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ? 103-4 மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற, முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில், கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு, தாள் அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார். 103-5 அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை; தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல் விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும் தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால். 103-6 பெருங் கடை யுக மழை பிறழ, தன் ஒரு கரம் படு சிலையினின் கான்ற மாரியின், சரம் படச் சரம் பட, தாக்கு இராக்கதக் கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ? 103-7 இலக்குவக் கடவுள் தன் ஏவின் மாரியால், விலக்க அருங் கரி, பரி இரதம், வீரர் என்று உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே. 119-1 காந்திய அரக்கனும் கணையின் மாரிகள் பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்; மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே. 121-1 கார்முக விசை உறும் கணையின் மாரியால் பார வெஞ் சிலை அறுத்து, அவன் தன் பாய் பரித் தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி, மற்று ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான். 121-2 போர் அழிந்தவன் உயிர் பொன்றினான்' என, கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே, வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார். 122-1 மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற, முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய, உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள். 140-1 துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக் கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே, உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன், உளத்தே கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக் கொண்டான். 169-1 ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி, தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான். 186-1 ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும் தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து சிந்தப் பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி பின்னும் கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து வெய்யோன். 186-2 உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம் தரைத் தலம் அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார். 186-3 கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம் தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா, கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள், கனலின் பொங்கி, வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார். 186-4 வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன் மைந்தன், போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால் ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க, தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின் வீழ்ந்தார். 186-5 திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள் தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி, விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை வெள்ளம் பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி. 186-6 'வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர் ஆர் இனித் தடுக்க வல்லார்?' எனப் பதைத்து, அமரர் எல்லாம், சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்; சுடரும் வை வேல் போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி. 186-7 அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக் கண்டே, செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா, வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி, துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி. 186-8 உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து, ஏழு கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து, காலாள் இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி, பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின் ஏன்றான். 186-9 புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம் திரிதர, அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி, எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார். 195-1 வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான், கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி நின்றான். 203-1 விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர் குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்; எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து, செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும் சொல்லார். 207-1 வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும் பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப் பொங்கி, மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார். 209-1 மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும், கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே முற்றும்படி மோதினர்; மோத முடிந்தே அற்று, அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார். 250-1 அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி, ஆள் என்னும் வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய, தாமும் களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா, துளக்கம் இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன, சோர்ந்தான். 261-1 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |