கும்பகருணன் வதைப் படலம் - Kumbakarunan Vathaip Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



யுத்த காண்டம்

16. கும்பகருணன் வதைப் படலம்

இராவணன் இலங்கை மீளுதல்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான். 1

கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்,
தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும்,
நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான். 2

மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான். 3

நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;-
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை. 4

மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,
தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர்
சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான். 5

தூதரை அழைத்து வர கஞ்சுகியை இராவணன் ஏவுதல்

ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து இருந்து, தன் வருத்தம் ஆறி,
நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல் நின்றானை,
'ஈண்டு, நம் தூதர் தம்மை இவ்வழித் தருதி' என்றான்,
பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக் கொண்டு புக்கான். 6

எண்திசைச் சேனைகளையும் கொணர தூதர்களை இராவணன் பணித்தல்

மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று இவ்
வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர் விரவினாரை,
'நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை எட்டும் நீந்தி,
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின்' என்றான். 7

'ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும், எண் இல்
பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த பாதாளத்துள்ளும்,
ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை எல்லாம்,
தாழ்வு இலிர் கொணர்திர்' என்றான்; அவர் அது தலைமேல் கொண்டார். 8

இராவணன் வருந்தி இருத்தல்

மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்,
பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம,
தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் கை யானை
சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி சேர்ந்தான். 9

பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்,
கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை சுற்ற,
உள் நிறை மானம் தன்னை உமிழ்ந்து, எரி உயிர்ப்பதானான். 10

வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;-நெடு வயிரத் தோளான்-
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்;
வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், மிதிலை வந்த,
சானகி நகுவள்-என்றே நாணத்தால் சாம்புகின்றான். 11

இராவணனிடம் மாலியவான் வினவுதல்

ஆங்கு, அவன்தன் மூதாதை ஆகிய, மூப்பின் யாக்கை
வாங்கிய வரி வில் அன்ன, மாலியவான் என்று ஓதும்
பூங் கழல் அரக்கன் வந்து, பொலங் கழல் இலங்கை வேந்தைத்
தாங்கிய அமளிமாட்டு, ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான். 12

இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி,
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா,
'வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;-நாளும் வாடாப்
பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி?' என்றான். 13

இராவணன் நிகழ்ந்தவை கூறல்

கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற கண்ணன், பத்துச்
சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன்,
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன சொல்லலுற்றான்: 14

'சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார் அன்றே;
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது' அன்றே? 15

'முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக,
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும்,
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்,
இளையவன் தனக்கும் ஆற்றாது, என் பெருஞ் சேனை-நம்ப! 16

'எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை. 17

'மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு எனினும், நேரே
குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை ஆளைத்
தலை உறப் பட்டது அல்லால், உடல்களில் தங்கிற்று உண்டோ ? 18

'போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்,
ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித்
தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ. 19

'மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால்,
பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால்,
ஆருமே அவற்றின் ஆற்றல்; ஆற்றுமேல், அனந்தகோடி,
மேருவும், விண்ணும், மண்ணும், கடல்களும் வேண்டும் அன்றே? 20

'வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
தெரிகிலர், அமரரேயும்; ஆர் அவன் செய்கை தேர்வார்?
"பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக" என்று
கருதவே, உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே. 21

'நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட தொடை என, தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. 22

'இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்? 23

'பேய் இருங் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும், இந்திரன் இரண்டு தோளும்,
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும், அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா. 24

'சீர்த்த வீரியராய் உள்ளார், செங் கண் மால் எனினும், யான் அக்
கார்த்தவீரியனை நேர்வார் உளர் எனக் கருதல் ஆற்றேன்;
பார்த்த போது, அவனும், மற்று அத் தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார்? 25

'முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26

'உற்பத்தி அயனே ஒக்கும்; ஓடும்போது அரியே ஒக்கும்;
கற்பத்தின் அரனே ஒக்கும், பகைஞரைக் கலந்த காலை;
சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ? என்னைத் தீராத்
தற்பத்தைத் துடைத்த என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 27

'குடக்கதோ? குணக்கதேயோ? கோணத்தின் பாலதேயோ?
தடத்த பேர் உலகத்தேயோ? விசும்பதோ? எங்கும்தானோ?
வடக்கதோ? தெற்கதோ? என்று உணர்ந்திலன்;-மனிதன் வல்வில்-
இடத்ததோ? வலத்ததோ? என்று உணர்ந்திலேன், யானும் இன்னும். 28

'ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே?
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே, அமரின் ஆற்றல்!-
காற்றையே மேற்கொண்டானோ? கனலையே கடாவினானோ?
கூற்றையே ஊர்கின்றானோ?-குரங்கின்மேல் கொண்டு நின்றான். 29

'போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்,
நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம். 30

'வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்ற போதும், நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;-
பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது' என்றான். 31

மாலியவான் உரை

'முன் உரைத்தேனை வாளா முனிந்தனை; முனியா உம்பி
இன் உரைப் பொருளும் கேளாய்; ஏது உண்டு எனினும், ஓராய்;
நின் உரைக்கு உரை வேறு உண்டோ ?-நெருப்பு உரைத்தாலும், நீண்ட
மின் உரைத்தாலும், ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்! 32

'உளைவன எனினும், மெய்ம்மை உற்றவர், முற்றும் ஓர்ந்தார்,
விளைவன சொன்னபோதும், கொள்கிலை; விடுதி கண்டாய்;
கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை, நம் கல்வி, செல்வம்,
களைவு அருந் தானையோடும் கழிவது காண்டி' என்றான். 33

மகோதரன் உரை

ஆயவன் உரைத்தலோடும், அப் புறத்து இருந்தான், ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல, மகோதரன் கடிதின் வந்து,
தீ எழ நோக்கி, 'என் இச் சிறுமை நீ செப்பிற்று?' என்னா,
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்: 34

'"நன்றி ஈது" என்று கொண்டால், நயத்தினை நய்ந்து, வேறு
வென்றியே ஆக, மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக,
ஒன்றிலே நிற்றல் போலாம், உத்தமர்க்கு உரியது; ஒல்கிப்
பின்றுமேல், அவனுக்கு அன்றோ, பழியொடு நரகம் பின்னை? 35

'திரிபுரம் எரிய, ஆங்கு ஓர் தனிச் சரம் துரந்த செல்வன்,
ஒருவன் இப் புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
பொருது, உனக்கு உடைந்து போனார்; மானிடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும்; மன்ன! கயிலையை வெருவல் கண்டாய்! 36

'"வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே"
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37

'தேவியை விடுதிஆயின், திறல் அது தீரும் அன்றே;
ஆவியை விடுதல் அன்றி, அல்லது ஒன்று ஆவது உண்டோ?
தா அரும் பெருமை அம்மா நீ இனித் தாழ்த்தது என்னே? காவல! விடுதி, இன்று இக் கையறு கவலை; நொய்தின். 38

'இனி இறை தாழ்த்தி ஆயின், இலங்கையும் யாமும் எல்லாம்
கனியுடை மரங்கள் ஆக, கவிக் குலம் கடக்கும் காண்டி;
பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத்
துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம்' என்றான். 39

'முன், உனக்கு, இறைவர் ஆன மூவரும் தோற்றார்; தேவர்
பின், உனக்கு ஏவல் செய்ய, உலகு ஒரு மூன்றும் பெற்றாய்;
புல் நுனைப் பனி நீர் அன்ன மனிசரைப் பொருள் என்று உன்னி,
என், உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது?-எந்தாய்! 40

'ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதிஎன்னின், ஐய!
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே;
தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் உயிரைத் தானே
வாங்கும்' என்று இனைய சொன்னான்; அவன் அது மனத்துக் கொண்டான். 41

இராவணன் மகோதரனைப் புகழ்தல்

'பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று
அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?
உறுதியே சொன்னாய்' என்னா, உள்ளமும் வேறுபட்டான்;-
இறுதியே இயைவது ஆனால், இடை, ஒன்றால் தடை உண்டாமோ? 42

வீரர்கள் கும்பகருணனைத் துயில் எழுப்புதல்

'நன்று இது கருமம்' என்னா, 'நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர்' என்றான்; என்றலும், நால்வர் சென்றார்;
தென் திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன,
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார். 43

கிங்கரர் நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து, 'மன்ன! நீ உணர்தி' என்ன,
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க, பின்னும்
வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்: 44

கிங்கரர் கூற்றும் இராவணன் செயலும்

'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'! 45

கும்பகருணனை துயிலெழுப்பல்

என்று சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய்,
'மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்'
அன்று, 'கொள்கை கேண்மின்' என்று மாவொடு ஆளி ஏவினான்,
'ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர்.' 46

'அனைய தானை அன்று செல்ல, ஆண்டு நின்று பேர்ந்திலன்;
இனைய சேனை மீண்டது' என்று இராவணற்கு இயம்பலும்
'வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்மின்' என்று,
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான். 47

சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி
'மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற
இன்றுஇவன் முடிக்கும்' என்னா, எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்று என உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். 48

திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம்
மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக,
கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49

ஓதநீர் விரிந்ததென்ன உறங்குவான் நாசிக் காற்றால்
கோது இலா மலைகள் கூடி, வருவது போவதாக,
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர், துணுக்கமுற்றார்;
போதுவான் அருகு செல்லப் பயந்தனர், பொறி கொள் கண்ணார். 50

'இங்கு இவன் தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது?' என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு, மெய் துணுக்கமுற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி, ஆழ் செவிஅதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம், சமைவுறச் சாற்றலுற்றார். 51

கோடு, இகல் தண்டு, கூடம், குந்தம், வல்லோர்கள் கூடி,
தாடைகள், சந்து, மார்பு, தலை எனும் இவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு உரைப்ப, 'பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும், விரைவின்' என்றான். 52

கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான். 53

கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, 'ஐய!
உய்யலாம் வகைகள் என்று, அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்;
கய் எலாம் வலியும் ஓய்ந்த; கவன மா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ ? செப்புதி, தெரிய' என்றார். 54

'இடை பேரா இளையானை, இணை ஆழி மணி நெடுந் தேர்
படை பேரா வரும்போதும், பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால், மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
தொடை பேராத் துயிலானை, துயில் எழுப்பிக் கொணர்க!' என்றான். 55

என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 56

மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை
தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க,
பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57

விண்ணினை இடறும் மோலி; விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்,
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான். 58

கும்பகருணன் உணவு அருந்தல்

உறக்கம் அவ் வழி நீங்கி, உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு, வாக்கிய
நறைக் குடங்கள் பெறான், கடை நக்குவான்,
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்; 59

ஆறு நூறு சகடத்து அடிசிலும்,
நூறு நூறு குடம் களும், நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்-
சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60

எருமை ஏற்றை ஓர் ஈர்-அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று, இறை ஆறினான்,
பெருமை ஏற்றது கோடும் என்றே-பிறங்கு
உருமைஏற்றைப் பிசைந்து, எரி ஊதுவான். 61

கும்பகருணன் தோற்றம்

இருந்த போதும், இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன், திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்,
சொரிந்த சோரி தன் வாய் வர, தூங்குவான்; 62

உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர, வாரி நுகர்வது ஒர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழற் காலினான்; 63

இரும் பசிக்கு மருந்து என, எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்;
வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அருங் களில் திரிகின்றது ஓர் ஆசையான்; 64

சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர் மத்தன்; கழல் பொரு
காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்; 65

எயில் தலைத் தகர, தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கரதலத்து, எற்றினான்;
அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான். 66

உடல் கிடந்துழி, உம்பர்க்கும் உற்று, உயிர்,
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்
வட கடுங் கனல்போல் மயிர்ப் பங்கியான்; 67

திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட,
மிக்கு அடங்கிய வெங் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என,
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்; 68

காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து, உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்; 69

இராவணன் கும்பகருணன் சந்திப்பு

'கூயினன் நும் முன்' என்று அவர் கூறலும்,
போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும்
கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான். 70

நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர்
மலை கிடந்தது போல, வணங்கினான். 71

இராவணன் கும்பகருணனைத் தழுவி, உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல்

வன் துணைப் பெருந் தம்பி வணங்கலும்,
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்-
நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான். 72

உடன் இருத்தி, உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி, தசைக் கொளீஇ
கடல் நுரைத் துகில் சுற்றி, கதிர்க் குழாம்
புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான். 73

பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்,
சோர விட்ட சுடர் மணி ஓடையை
வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 74

மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட,
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என, கடல் மேனியில்,
தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75

விடம் எழுந்ததுபோல், நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பிடைச் சுற்றினான்,
இடபம் உந்தும், எழில் இரு-நான்கு தோள்,
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான். 76

கும்பகருணன்-இராவணன் உரையாடல்

அன்ன காலையின், 'ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்?' என்று இயம்பினான்-
மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத்
துன்னு தோளும், இடம் துடியாநின்றான். 77

'வானரப் பெருந் தானையர், மானிடர்,
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி, போய்' என்றான். 78

கும்பகருணனின் அறிவுரை

'ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே? 79

'கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80

'கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81

'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். 82

'கொடுத்தனை, இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை, நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பல வகை அமரர்தங்களை
விடுத்தனை; வேரு இனி வீடும் இல்லையால். 83

'அறம் உனக்கு அஞ்சி, இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின், வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி, நீ
இற, முன் அங்கு, யார் உனை எடுத்து நாட்டுவார்? 84

'தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? 85

'காலினின் கருங் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள; சீதை போகிலன்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?' 86

என்று கொண்டு இனையன இயம்பி, 'யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்,
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்! 87

'தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்
ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம்; அன்று எனின், உளது, வேறும் ஓர்
செய் திறம்; அன்னது தெரியக் கேட்டியால்: 88

'பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம்' என்று உணரக் கூறினான். 89

இராவணன் சினந்து உரைத்தல்

'உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது;
சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை, அஞ்சினை;
வெறுவிது, உன் வீரம்' என்று இவை விளம்பினான்; 90

'மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும்
உறங்குதி, போய்' என, உளையக் கூறினான். 91

'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான். 92

'தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்;
வருக, முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக, வெம் போர்' எனப் போதல் மேயினான். 93

கும்பகருணன் போருக்கு எழுதல்

அன்னது கண்டு, அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி, 'நீ பொறுத்தியால்' என,
வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்,
'இன்னம் ஒன்று உரை உளது' என்னக் கூறினான்: 94

'வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி
நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை,
"நன்று" என, நாயக விடுதி; நன்றுஅரோ. 95

'இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து, உனக்கு உறுவது ஆற்றுவாய். 96

'என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்,
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை-
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே. 97

'இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை' என, பெயர்ந்து போயினான். 98

படைகளை கும்பகருணனுடன் செல்ல இராவணன் பணித்தல்

அவ் வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ் வழி நீரொடும் குருதி தேக்கினான்;
எவ் வழியோர்களும் இரங்கி ஏங்கினார்;
இவ் வழி அவனும் போய், வாயில் எய்தினான். 99

'இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
பெரும் படை இளவலோடு' என்ற பேச்சினால்,
வரும் படை வந்தது, வானுளோர்கள் தம்
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே. 100

படைப் பெருக்கம்

தேர்க் கொடி, யானையின் பதாகை, சேண் உறு
தார்க் கொடி என்று இவை தகைந்து வீங்குவ-
போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் பண்புற,
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ. 101

எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும், படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும், கதுவ, கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து, வீழ்ந்தவால். 102

தேர் செல, கரி செல, நெருக்கிச் செம் முகக்
கார் செல, தேர் செல, புரவிக் கால் செல,
தார் செல, கடை செல, சென்ற தானையும்,
'பார் செலற்கு அரிது' என, விசும்பில் பாய்ந்ததால். 103

கும்பகருணன் புறப்பாடு

ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,
ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம்,
மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
ஏய் இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான். 104

தோமரம், சக்கரம், சூலம், கோல், மழு,
நாம வேல், உலக்கை, வாள், நாஞ்சில், தண்டு, எழு,
வாம வில், வல்லையம், கணையம், மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து, சென்றவால். 105

நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு,
பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்,
முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார். 106

ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல்,
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே,
சென்றனன், யாவரும் திடுக்கம் எய்தவே. 107

'கணம் தரு குரங்கொடு கழிவது அன்று, இது;
நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ?
பிணம் தலைப்பட்டது; பெயர்வது, எங்கு இனி;
உணர்ந்தது கூற்றம்' என்று, உம்பர் ஓடினார். 108

கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல்

பாந்தளின் நெடுந் தலை வழுவி, பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்ததுபோல் பொலந் தேரில் பொங்கிய
ஏந்தலை, ஏந்து எழில் இராமன் நோக்கினான். 109

'வீணை என்று உணரின், அஃது அன்று; விண் தொடும்
சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்;
காணினும், காலின் மேல் அரிய காட்சியன்;
பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்? 110

'தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்? 111

'எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும்
விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; வெரீஇ,
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது;
அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம் இவன்? 112

'அரக்கன் அவ் உரு ஒழித்து, அரியின் சேனையை
வெருக் கொளத் தோன்றுவான், கொண்ட வேடமோ?
தெரிக்கிலேன் இவ் உரு; தெரியும் வண்ணம், நீ
பொருக்கென, வீடண! புகறியால்' என்றான். 113

வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, 'ஐய!
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான்' என்று, அவன் நிலை கூறலுற்றான்; 114

'தவன் நுணங்கியரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து, அலரின் மேலைத் திசைமுகன் உணரும் தேவன் -
அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவது எல்லாம்,
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர், எந்தாய்! 115

ஆழியாய்! இவன் ஆகுவான்,
ஏழை வாழ்வுடை எம்முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான், 116

'காலனார் உயிர்க் காலனால்;
காலின் மேல் நிமிர் காலினான்;
மாலினார் கெட, வாகையே,
சூலமே கொடு, சூடினான்; 117

'தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை, உம்பர்கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க, நின்று சுழற்றினான்; 118

'கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான்;
அழிந்து மீன் உக, ஆழி நீர்
இழிந்து, காலினின் எற்றுவான்; 119

'ஊன் உயர்ந்த உரத்தினான்,
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்,
வான் உயர்ந்த வரத்தினான்; 120

'திறம் கொள் சாரி திரிந்த நாள்,
கறங்கு அலாது கணக்கு இலான்;
இறங்கு தாரவன் இன்று காறு
உறங்கலால், உலகு உய்ந்ததால்; 121

'சூலம் உண்டு; அது சூர் உளோர்
காலம் உண்டது; கைக் கொள்வான்;
ஆலம் உண்டவன் ஆழிவாய்,
ஞாலம் உண்டவ! நல்கினான்; 122

'மின்னின் ஒன்றிய விண்ணுளோர்,
'முன் நில்' என்று, அமர் முற்றினார்-
என்னின், என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி, விழித்திலான்; 123

"தருமம் அன்று இதுதான்; இதால்
வரும், நமக்கு உயிர் மாய்வு" எனா,
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான். 124

'மறுத்த தம்முனை, வாய்மையால்
ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்;
வெறுத்தும், 'மாள்வது மெய்' எனா
இறுத்து, நின் எதிர் எய்தினான். 125

'"நன்று இது அன்று நமக்கு" எனா,
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்'
என்று சொல்லி, இறைஞ்சினான். 126

சுக்கிரீவன், கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்

என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், 'இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்;
"நன்று" என நினைந்தேன்' என்றான்; நாதனும், 'நயன் இது' என்றான். 127

கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்

'ஏகுதற்கு உரியார் யாரே?' என்றலும், இலங்கை வேந்தன்,
'ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம்
சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென்' என்றான்;
மேகம் ஒப்பானும், 'நன்று, போக!' என்று விடையும் ஈந்தான். 128

தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச் சார்ந்தான்;
வெந் திறலவனுக்கு, 'ஐய! வீடணன் விரைவில் உன்பால்
வந்தனன்' என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான். 129

கும்பகருணன் வீடணனிடம் 'நீ வந்தது தகுதி அன்று' எனல்

முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி,
'உய்ந்தனை, ஒருவன் போனாய்' என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள
வந்தது என், தனியே?' என்றான், மழையின் நீர் வழங்கு கண்ணான். 130

'அவயம் நீ பெற்றவாறும், அமரரும் பெறுதல் ஆற்றா,
உவய லோகத்தினுள்ள சிறப்பும், கேட்டு உவந்தேன், உள்ளம்;
கவிஞரின் அறிவு மிக்கோய்! காலன் வாய்க் களிக்கின்றேம்பால்
நவை உற வந்தது என், நீ? அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 131

'"குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று" என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை
உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ! 132

'அறப் பெருந் துணைவர், தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார், தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்;
இறப்பு எனும் பதத்தை விட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை; நினைந்து, என்கொல் பெயர்ந்த வண்ணம்? 133

'அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று, அவன் தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்? 134

'நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும்,
ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்;
வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்! 135

ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்;
மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற;
தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய். 136

'ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலைஎன்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய். 137

'வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை;
திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப்
பொருவ அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின்' என்றான்,
'கருமம் உண்டு உரைப்பது' என்றான்; 'உரை' என, கழறலுற்றான்; 138

இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்

'இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139

'எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி! 140

'போதலோ அரிது; போனால், புகலிடம் இல்லை; வல்லே,
சாதலோ சரதம்; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால், உளதாம் ஆவி அநாயமே உகுத்து என்? ஐய!
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். 141

'தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?
தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ? 142

'மக்களை, குரவர்தம்மை, மாதரை மற்றுளோரை,
ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற,
"துக்கம், இத் தொடர்ச்சி" என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! 143

'தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர்
வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ?
ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்? 144

'கண்ணுதல், தீமை செய்ய, கமலத்து முளைத்த தாதை
அண்ணல்தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே?
புண் உறு புலவு வேலோய்! பழியொடும் பொருந்தி, பின்னை,
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ? 145

'உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்;
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்
மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ! 146

'காக்கலாம் நும் முன் தன்னை எனின், அது கண்டது இல்லை;
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும், ஆவது இல்லை;
தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருவில் ஆவி
போக்கலாம்; புகலாம், பின்னை நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ ? 147

'மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை; மண்ணின் மேலா
இறங்கினை; இன்றுகாறும் இளமையும் வறிதே ஏக,
உறங்கினை என்பது அல்லால், உற்றது ஒன்று உளதோ? என், நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது?-ஐயா! 148

திரு மறு மார்பன் நல்க, அனந்தரும் தீர்ந்து, செல்வப்
பெருமையும் எய்தி, வாழ்தி; ஈறு இலா நாளும் பெற்றாய்;
ஒருமையே அரசு செய்வாய்; உரிமையே உனதே; ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை; காலமும் அடுத்தது, ஐயா! 149

'தேவர்க்கும் தேவன் நல்க, இலங்கையில் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை; யார், உனை நலியும் ஈட்டார்?-
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார், காகுத்த வேடம் காட்டி! 150

'உன் மக்கள் ஆகி உள்ளார், உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார், இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
தன் மக்கள் ஆகி உள்ளார், தலையொடும் திரிவர் அன்றே-
புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்? 151

'முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை; "ஈறு உண்டு" என்று இரங்க வேண்டா;
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;-
கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ? 152

'வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்;
காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே;
ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே' என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான். 153

கும்பகருணனின் மறுப்புரை

'தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய,
பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்; 154

'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155

'மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ
உலைவு இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்;
தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்;
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால். 156

'கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,
பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி,
ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 157

'தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்? 158

'அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக,
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெருங் கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப, கூசி,
துணை இன்றிச் சேரல் நன்றோ, தோற்றுள கூற்றின் சூழல்? 159

'செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்! 160

'அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன்
தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை,
கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி! 161

'ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட,
சூலம் கொண்டு ஓடி, வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
நீலம் கொள் கடலும் ஓட, நெருப்பொடு காலும் ஓட,
காலம் கொள் உலகும் ஓட, கறங்கு எனத் திரிவென்; காண்டி! 162

'செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின்,
கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம்,
ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில்' என்றான். 163

'தாழ்க்கிற்பாய் அல்லை; என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆகின், எய்தி, அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; "இனி, ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு" என்று,
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழ நிற்பாய்!" என்னச் சொன்னான். 164

'போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி,
மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165

'ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 166

வீடணன் விடை பெறுதல்

என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி,
'இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு' என்று விட்டான்;
வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான். 167

வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; 'உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.
குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168

வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்

'கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்;
பிள்ளைமை துறந்தான்' என்னாப் பேதுறும் நிலையன் ஆகி,
வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான். 169

வீடணன் உரையைக் கேட்ட இராமன் கூற்று

எய்திய நிருதர் கோனும், இராமனை இறைஞ்சி, 'எந்தாய்!
உய் திறம் உடையார்க்கு அன்றோ, அறன் வழி ஒழுகும் உள்ளம்?
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன், சிறிதும்' என்றான். 170

கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
நொய்தினில் துளக்கி, 'ஐய! "நுன் எதிர், நும்முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று" என்று இனைய சொன்னேன்;
செய் திறன் இனி வேறு உண்டோ ? விதியை யார் தீர்க்ககிற்பார்?" 171

அரக்கர் சேனை வானர சேனையைச் சுற்றி வளைத்தல்

என இனிது உரைக்கும் வேலை, இராக்கதர் சேனை என்னும்
கனை கடல், கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி,
முனை தொழில் முயன்றதாக, மூவகை உலகும் முற்றத்
தனி நெடுந் தூளி ஆர்த்தது; ஆர்த்தில, பரவை தள்ளி, 172

ஓடின புரவி; வேழம் ஓடின; உருளைத் திண் தேர்
ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு;
ஓடின கவந்த பந்தம்; ஆடின அலகை; மேல்மேல்
ஓடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா! 173

மூளையும், தசையும், என்பும், குருதியும், நிணமும், மூரி
வாளொடும் குழம்பு பட்டார், வாள் எயிற்று அரக்கர்; மற்றுஅவ்
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள்;-அம்பொன்
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க. 174

எய்தனர், நிருதர்; கல்லால் எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
பெய்தனர், அரக்கர்; பற்றிப் பிசைந்தனர் அரிகள்; பின்றா
வைதனர், யாதுதானர்; வலித்தனர்; வானரேசர்;
செய்தனர், பிறவும் வெம் போர்; திகைத்தனர், தேவர் எல்லாம். 175

கும்பகருணன் போர்

நீரினை ஓட்டும் காற்றும், காற்று எதிர் நிற்கும் நீரும்,
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி,
தேரினை ஓட்டி வந்தான் - திருவினைத் தேவர் தங்கள்
ஊரினை நோக்காவண்ணம், உதிர வேல் நோக்கியுள்ளான். 176

ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப,
பூழியில் பட்டு, செந்நீர்ப் புணரியில் பட்டு, பொங்கும்
சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும், துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே-அவனியில் பட்ட எல்லாம். 177

குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 178

வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்; மலைகளில் புடைக்கும், சுற்றி. 179

பறைந்தனர், அமரர் அஞ்சி; பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன, பறவை எல்லாம்; நெடுந் திசை நான்கும் நான்கும்
மறைந்தன; பெருமை தீர்ந்த, மலைக் குலம்; வற்றி வற்றிக்
குறைந்தன, குரக்கு வெள்ளம்; கொன்றனன், கூற்றும் கூச. 180

'மற்று இனி ஒருவர்மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே; இன்றொடும் பெறுவது ஆமே;
அற்றன, தீங்கும்' என்னா, அரிக் குலத் தலைவர் பற்றி,
எற்றின, எறிந்த, எல்லாம் இணை நெடுந் தோளின் ஏற்றான். 181

கல்லொடு மரனும், வேரும், கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும், எல்லாம், பொடிப் பொடி ஆகிப் போன;
'இல்லை, மற்று எறியத் தக்க, எற்றுவ, சுற்றும்' என்ன,
பல்லொடு பல்லு மென்று பட்டன, குரங்கும் உட்கி. 182

குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி,
சென்று மேல் எழுந்து பற்றி, கைத் தலம் தேயக் குத்தி,
வன் திறல் எயிற்றால் கவ்வி, வள் உகிர் மடியக் கீளா,
'ஒன்றும் ஆகின்றது இல்லை' என்று, இரிந்து ஓடிப் போன. 183

நீலன் பொருது தோற்றல்

மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல், கையினால் கடிதின் வாங்கி,
நீலன், மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்;
சூலமே கொண்டு நூறி, முறுவலும் தோன்ற நின்றான். 184

'பெயர்ந்து ஒரு சிகரம் தேடின், அச்சம் ஆம் பிறர்க்கும்' என்னா,
புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான்,
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய, யாரும்
பயம் கொள, கரங்கள் ஓச்சிக் குத்தினான், உதைத்தான், பல் கால். 185

கைத்தலம் சலித்து, காலும் குலைந்து, தன் கருத்து முற்றான்.
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை,
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான், இடது கையால்;
மெய்த்தலை, சூலம் ஓச்சான், வெறுங் கையான் என்று வெள்கி. 186

நீலன் தளர்ந்தது கண்டு, அங்கதன் வந்து பொருதல்

ஆண்டு, அது நோக்கி நின்ற அங்கதன், ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி,
'மாண்டனன் அரக்கன் தம்பி' என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன்; அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான். 187

ஏற்ற போது, அனைய குன்றம் எண்ண அருந் துகளது ஆகி,
வீற்று வீற்று ஆகி, ஓடி விழுதலும், கவியின் வெள்ளம்,
'ஊற்றம் ஏது, எமக்கு!' என்று எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சென்று பாதம். 188

இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு,
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது, தருக்கின் வாங்கி,
'மடக்குவாய் உயிரை' என்னா, வீசினன்; அதனை மைந்தன்
தடக் கையால் பிடித்துக் கொண்டான், வானவர் தன்னை வாழ்த்த. 189

பிடித்தது சுழற்றி, 'மற்று அப் பெரு வலி அரக்கன் தன்னை,
இடித்து, உரும் ஏறு, குன்றத்து எரி மடுத்து, இயங்குமா போல்,
அடித்து, உயிர் குடிப்பென்' என்னா, அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
கொடித் தடந் தேரின் முன்னர்க் குதித்து, எதிர் குறுகி, நின்றான். 190

கும்பகருணன் அங்கதன் உரையாடல்

நின்றவன் தன்னை அன்னான் நெருப்பு எழ நிமர நோக்கி,
'பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ?
அன்று, அவன் மகனோ? எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்தம்மை
வென்றவன் தானோ? யாரோ? விளம்புதி, விரைவின்' என்றான். 191

'நும்முனை வாலின் சுற்றி, நோன் திசை நான்கும் தாவி,
மும் முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம் முனை வீரன் மைந்தன்; நின்னை என் வாலின் வீக்கி,
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட, செல்வென்' என்றான். 192

'உந்தையை, மறைந்து, ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக காட்டலை என்னின், பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய்; நேரே
வந்தனை புரிவர் அன்றே, வீரராய் வசையின் தீர்ந்தார்? 193

'இத்தலை வந்தது, என்னை இராமன்பால், வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த
முத் தலை அயிலின் உச்சி முதுகு உற, மூரி வால்போல்
கைத்தலம் காலும் தூங்க, கிடத்தலைக் கருதி' என்றான். 194

அங்கதன் எறிந்த தண்டு பல துண்டமாதல்

அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து, அசனி குன்றத்து
உற்றது போலும் என்னும் ஒலிபட, உலகம் உட்க,
பொன் தடந் தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு. 195

அனுமன் போரிடுதல்

தண்டு இற, தடக் கை ஓச்சி, 'தழுவி அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவென்' என்னா, தலையுறக் குனிக்குங் காலை,
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த,
மண் திறப்பு எய்த வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான். 196

மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில், குன்றம் ஒன்று
பறித்து, அவன் நெற்றி முற்றப் பரப்பிடை, பாகம் உள்ளே
செறித்தெனச் சுரிக்க வீசி, தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 197

தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றதன்ன
மலையினைக் கையின் வாங்கி, மாருதி வயிர மார்பின்,
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப,
குலை உறு பொறிகள் சிந்த, வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 198

அவ்வழி வாலி சேயை அரிகுல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார்; மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி,
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 199

'எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி' என்றான். 200

மாற்றம் அஃது உரைப்பக் கேளா, மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து, 'நீ கொணர்ந்த குன்றை
ஏற்றனென்; ஏற்ற காலத்து, இறை அதற்கு ஒற்கம் எய்தின்,
தோற்றனென், உனக்கு; என் வன்மை சுருங்கும்' என்று அரக்கன் சொன்னான். 201

மாருதி, 'வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு' என்று, பெருங் கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிரக் குன்றைக் காத்திலன், தோள் மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க. 202

இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, 'இவனது ஆற்றல்
அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும்' என்னா, மாருதி பெயர்ந்து போனான். 203

குரக்குச் சேனையின் அழிவு

'எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய, யாரும்
முழுவதும் மாள்வர், இன்றே இவன் வலத்து அமைந்த முச் சூழ்
கழுவினில்' என்று வானோர் கலங்கினார், நடுங்கினாரால்-
'பொழுதினின் உலகம் மூன்றும் திரியும்' என்று உள்ளம் பொங்கி. 204

தாக்கினார்; தாக்கினார்தம் கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை-
ஆக்கினான்; களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான்; ஆண்மையாலே புதுக்கினான், புகழை அம்மா! 205

'சங்கத்து ஆர் குரங்கு சாய, தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான்? வேறும் ஓர் இலங்கை உண்டோ?
எங்குற்றார் எங்குற்றார்?' என்று எடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
துங்கத் தோள் கொட்டி, ஆர்த்தான்-கூற்றையும் துணுக்கம் கொண்டான். 206

பறந்தலை அதனின் வந்த பல் பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்ற இரிதலின், யாரும் இன்றி
வறந்தது; சோரி பாய வளர்ந்தது, மகர வேலை-
குறைந்துளது, உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன. 207

இலக்குவன்-கும்பகருணன் போர்

குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன; குரங்கின்
வென்றி அம் பெருஞ் சேனை ஓர் பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது' என்று உரைத்தலும், அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன், ஒரு தனிச் சுமித்திரை சிங்கம். 208

நாண் எறிந்தனன், சிலையினை; அரக்கியர் நகு பொன்
பூண் எறிந்தனர்; படியிடை இடி பொடித்தென்னச்
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன; அலகை,
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை. 209

இலக்குவன் கடிது ஏவின, இரை பெறாது இரைப்ப,
சிலைக் கடுங் கணை நெடுங் கணம் சிறையுடன் செல்வ,
உலைக் கொடுங் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி,
குலக் கயங்களில் குளித்தன; குடித்தன, குருதி. 210

அலை புடைத்த வாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ;
சில, சிரத்தினைத் துணித்து, அவை திசைகொண்டு செல்வ;
கொலை படைத்த வெங் களத்திடை விழா, கொடு போவ;
தலை படைத்தன போன்றனவால், நெடுஞ் சரங்கள். 211

உருப் பதங்கனை ஒப்பன சில கணை, ஓடைப்
பொருப்பதங்களை உருவி, மற்று அப்புறம் போவ,
செருப் பதம் பெறா அரக்கர்தம் தலை பல சிந்தி,
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன, முழை புகு பாம்பின். 212

மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடிங் கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும், கடைக் குழை முதுகின்
பின்பு நின்றவர் பிடர்க்கும், இவ் விசை ஒக்கும், பிறழா. 213

போர்த்த பேரியின் கண்ணன, காளத்தின் பொகுட்ட,
ஆர்த்த வாயன, கையன, ஆனையின் கழுத்த,
ஈர்த்த தேரன, இவுளியின் தலையன, எவர்க்கும்
பார்த்த நோக்கன, கலந்தன-இலக்குவன் பகழி. 214

மருப்பு இழந்தன;-களிறு எலாம்-வால் செவி இழந்த,
நெருப்பு உகும் கண்கள் இழந்தன; நெடுங் கரம் இழந்த;
செருப் புகும் கடுங் காத்திரம் இழந்தன; சிகரம்
பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட. 215

நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின், திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலை படப் பட, மயங்கின சாய்ந்த;
உரம் தலத்துற உழைத்தவால்; பிழைத்தது ஒன்று இல்லை-
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலாக் குதிரை. 216

பல்லவக் கணை பட, படு புரவிய, பல் கால்
வில்லுடைத் தலையாளொடு சூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றில-கொடி நெடுந் தேர்கள். 217

பேழை ஒத்து அகல் வாயன பேய்க் கணம் முகக்கும்
மூழை ஒத்தன-கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன, உதிரத்
தாழி ஒத்த வெங் குருதியில் மிதப்பன, தலைகள். 218

ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன-அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன, துடிகளின் நவை தீர்
வட்ட வான்கணில், வதிந்தன வருண சாமரைகள். 219

எரிந்த வெங் கணை நெற்றியில் படுதொறும், யானை,
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்,
திரிந்த வேகத்த, பாகர்கள் தீர்ந்தன, செருவில்
புரிந்த வானரத் தானையில் புக்கன, புயலின். 220

வேனிலான் அன்ன இலக்குவன் கடுங் கணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர் தம் படைக்கல வாரி
போன போன வன் திசைதொறும் பொறிக் குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின்நின்று உதிர்ந்தென வீழ்ந்த. 221

கரம் குடைந்தன, தொடர்ந்து போய்க் கொய் உளைக் கடு மாக்
குரம் குடைந்தன, வெரிநுறக் கொடி நெடுங் கொற்றத்
தரம் குடைந்தன, அணி நெடுந் தேர்க் குலம் குடைந்த,-
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா! 222

'துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை' எனும் இது கண்டோம்;
இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும்,
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223

மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல்
நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர,
இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத்
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224

ஒருவரைக் கரம், ஒருவரைச் சிரம், மற்று அங்கு ஒருவர்
குரை கழல் துணை, தோள் இணை, பிற மற்றும் கொளலால்,
விரவலர்ப் பெறா வெறுமைய ஆயின; வெவ்வேறு
இரவு கற்றன போன்றன-இலக்குவன் பகழி. 225

சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி,
சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால்,
நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226

அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட, அரக்கர்,
'இறத்தும், இங்கு இறை நிற்பின்' என்று இரியலின் மயங்கி,
திறத்திறம் படத் திசைதொறும் திசைதொறும் சிந்திப்
புறத்தின் ஓடினர், ஓடின குருதியே போல. 227

இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்

செருவில் மாண்டவர் பெருமையும், இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும், நோக்கிய புலத்தியன் மருமான்,
'திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின்
ஒரு விலாளர்' என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான். 228

படர் நெடுந் தடத் தட்டிடைத் திசைதொறும் பாகர்
கடவுகின்றது, காற்றினும் மனத்தினும் கடியது,
அடல் வயங் கொள் வெஞ் சீயம் நின்று ஆர்க்கின்றது, அம் பொன்
வட பெருங் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான். 229

அனுமன் தோள் மீது இலக்குவன் ஏறிச் சென்று பொருதல்

தொளை கொள் வான் நுகச் சுடர் நெடுந் தேர் மிசைத் தோன்றி,
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெஞ் செருத் தொழில் மலைய,
'கிளை கொளாது, இகல்' என்று எண்ணி, மாருதி கிடைத்தான்,
'இளைய வள்ளலே! ஏறுதி தோள்மிசை' என்றான். 230

ஏறினான், இளங் கோளரி; இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்தது, வானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது, அவ் அனுமன் தன் தடந் தோள் 231

தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள்மேல்,
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்,
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி, பிறிது எடுத்து இயம்புவது யாதோ? 232

ஆங்கு, வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்,
தாங்கு பல் கணைப் புட்டிலும் தகை பெறக் கட்டி,
வீங்கு தோள் வலிக்கு ஏயது, விசும்பில் வில் வெள்க,
வாங்கினான், நெடு வடவரை புரைவது ஓர் வரி வில். 233

கும்பகருணனின் வீரவார்த்தையும், இலக்குவனின் மறுமொழியும்

'இராமன் தம்பி நீ; இராவணன் தம்பி நான்; இருவேம்
பொரா நின்றேம்; இது காணிய வந்தனர், புலவோர்;
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து,
விராவு நல் அமர் விளைக்குதும், யாம்' என விளம்பா, 234

'பெய் தவத்தினோர் பெண்கொடி, எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள், நாசி வெஞ் சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்; காக்குதி' என்றான். 235

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர,
மல்லினால் செய்த புயத்தவன், 'மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம், யாம்' எனச் சொன்னான். 236

இருவரும் செய்த பெரும்போர்

'விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்தது' என்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழி
எண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான். 237

கொம்பு நாலுடைக் குலக் கரிக் கும்பத்தில் குளித்த,
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய, உரும் எனச் செல்வ,
வெம்பு வெஞ் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான். 238

அறுத்த காலையின், அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது, ஆயிரம் உருவது, திசைமுகன் உதவப்
பொறுத்தது, ஆங்கு ஒரு புகர் முகக் கடுங் கணைப் புத்தேள்,
'இறுத்து மாற்று, இது வல்லையேல்' என்று, கோத்து, எய்தான். 239

புரிந்து நோக்கிய திசைதொறும், பகழியின் புயலால்,
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்,
தெரிந்து, மற்ற அதுதன்னை ஓர் தெய்வ வெங் கணையால்
அரிந்து வீழ்த்தலும், ஆயிரம் உருச் சரம் அற்ற. 240

ஆறு-இரண்டு வெங் கடுங் கணை அனுமன்மேல் அழுத்தி,
ஏறு வெஞ் சரம் இரண்டு இளங் குமரன்மேல் ஏற்றி,
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து, ஒரு நொடியில்,
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன், கொடியோன். 241

மறைத்த வாளிகள் எவற்றையும், அவற்றினால் மாற்றி,
துறைத் தலம்தொறும் தலம்தொறும் நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங் கரி, பரி, யாளி, மாப் பூதம்,
திறத் திறம் படத் துணித்து, அவன் தேரையும் சிதைத்தான். 242

தேர் அழிந்தது, செங் கதிர்ச் செல்வனைச் சூழ்ந்த
ஊர் அழிந்ததுபோல்; துரந்து ஊர்பவர் உலந்தார்;
நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை நிமிர்ந்த
பார வெஞ் சிலை அழிந்தெனத் துமிந்தது, அப் பரு வில் 243

செய்த போரினை நோக்கி, இத் தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடுங் கோள் அரி முதலிய குழுவை
எய்து கொன்றனனோ? நெடு மந்திரம் இயம்பி,
வைது கொன்றனனோ? என, வானவர் மயர்ந்தார். 244

இருவரும் தரையில் நின்று பொருதல்

ஊன்று தேரொடு சிலை இலன், கடல் கிளர்ந்து ஒப்பான்,
'ஏன்று, மற்று இவன் இன் உயிர் குடிப்பென்' என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ் சுடர்ச் சூல வெங் கூற்றினைத் தொட்டான். 245

இழியப் பாய்ந்தனன், இரு நிலம் பிளந்து இரு கூறா,-
கிழியப் பாய் புனல் கிளர்ந்தெனக் கிளர் சினத்து அரக்கன்;
'பழி அப்பால்; இவன் பதாதி' என்று, அனுமன் தன் படர் தோள்
ஒழியப் பார்மிசை இழிந்து சென்று, இளவலும் உற்றான். 246

உற்ற காலையின், இராவணன், தம்பி மாடு உதவ,
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ,
முற்றி அன்னது, முழங்கு முந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது, சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து. 247

இரிந்து வானவர் இரியலின், மயங்கினர் எவரும்;
சொரிந்த வெம் படை துணிந்திட, தடுப்ப அருந் தொழிலால்
பரிந்த அண்ணலும், பரிவிலன் ஒரு புடை படர,
புரிந்த அந் நெடுஞ் சேனை அம் கருங் கடல் புக்கான். 248

முருக்கின் நாள்மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர்க் கருந் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெருங் கனலிடைப் பெய்து பெய்து, எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட. 249

கரியின் கைகளும், புரவியின் கால்களும், காலின்
திரியும் தேர்களின் சில்லியும், அரக்கர்தம் சிரமும்,
சொரியும் சோரியின் துறைதொறும் துறைதொறும் கழிப்ப,
நெரியும் பல் பிணப் பெருங் கரை கடந்தில, நீத்தம். 250

கொற்ற வாள், எழு, தண்டு, வேல், கோல், மழு, குலிசம்,
மற்றும் வேறு உள படைக்கலம், இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட, தொகையாய்
அற்ற துண்டங்கள் படப் பட, துணிந்தன அனந்தம். 251

குண்டலங்களும், மவுலியும், ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம் என்று இனையன, தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன, வானில். 252

பரந்த வெண்குடை, சாமரை, நெடுங் கொடி, பதாகை,
சரம் தரும் சிலை, கேடகம், பிச்சம், மொய் சரங்கள்
துரந்து செல்வன, குருதி நீர் ஆறுகள் தோறும்
நிரந்த பேய்க்கணம் கரைதொறும் குவித்தன, நீந்தி. 253

கும்பகருணன்-சுக்கிரீவன் போர்

ஈண்டு வெஞ் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்,
நீண்ட வெள் எயிற்று அரக்கன், மற்றொரு திசை நின்றான்,
பூண்ட வெஞ் செரு இரவி கான்முளையொடு பொருதான்;
'காண்தகும்' என, இமையவர் குழுக்கொண்டு, கண்டார். 254

பொறிந்து எழு கண்ணினன், புகையும் வாயினன்,-
செறிந்து எழு கதிரவன் சிறுவன்-சீறினான்,
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள்' என,
எறிந்தனன், விசும்பில், மா மலை ஒன்று ஏந்தியே. 255

அம் மலை நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெங் களிறும், சேனையின்
வெம் மலை வேழமும், பொருத; வேறு இனி
எம் மலை உள, அவற்கு எடுக்க ஒணாதன? 256

இவ்வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய, நிருதர்தம் களிறும் கட்டு அற;
அவ் வகை மலையினை ஏற்று, ஓர் அங்கையால்
வவ்வினன், அரக்கன், வாள் அவுணர் வாழ்த்தினார். 257

ஏற்று ஒரு கையினால், 'இதுகொல், நீ அடா!
ஆற்றிய குன்றம்?' என்று, அளவு இல் ஆற்றலான்,
நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து, 'நீங்கு' எனா,
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார். 258

சுக்கிரீவன் மேல் கும்பகருணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்தல்

'செல்வெனோ, நெடுங் கிரி இன்னும் தேர்ந்து?' எனா,
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில்,
'கொல்!' என எறிந்தனன், குறைவு இல் நோன்பினோர்
சொல் எனப் பிழைப்பு இலாச் சூலம், சோர்வு இலான். 259

'பட்டனன் பட்டனன்' என்று, பார்த்தவர்
விட்டு உலம்பிட, நெடு விசும்பில் சேறலும்,
எட்டினன் அது பிடித்து, இறுத்து நீக்கினான்;
ஒட்டுமோ, மாருதி, அறத்தை ஓம்புவான்? 260

சித்திர வன முலைச் சீதை செவ்வியால்
முத்தனார், மிதிலை ஊர், அறிவு முற்றிய
பித்தன் வெஞ் சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது, சூலம் அன்று இற்ற ஓசையே. 261

கும்பகருணன் அனுமனைப் போருக்கு அறைகூவ, அவன் மறுத்தல்

நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே,
'கருதவும் இயம்பவும் அரிது, உன் கை வலி;
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை; இதற்கு உவமை யாது?' என்றான். 262

'என்னொடு பொருதியேல், இன்னும், யான் அமர்
சொன்னன புரிவல்' என்று, அரக்கன் சொல்லலும்,
'முன் "இனி எதிர்க்கிலேன்" என்று முற்றிய
பின், இகல் பழுது' என, பெயர்ந்து போயினான். 263

மீண்டும் சுக்கிரீவன் கும்பகருணன் போர்

அற்றது காலையில், அரக்கன், ஆயுதம்
பெற்றிலன், பெயர்ந்திலன்; அனைய பெற்றியில்,
பற்றினன், பாய்ந்து எதிர், பருதி கான்முளை
எற்றினன், குத்தினன், எறுழ் வெங் கைகளால். 264

அரக்கனும்,-'நன்று, நின் ஆண்மை; ஆயினும்,
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான்' எனா,
நெருக்கினன், பற்றினன், நீங்கொணாவகை,-
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான். 265

திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
புரிந்தனர், நெடுஞ் செரு; புகையும் போர்த்து எழ
எரிந்தன, உரும் எலாம்; இருவர் வாய்களும்
சொரிந்தன, குருதி; தாம் இறையும் சோர்ந்திலார். 266

உறுக்கினர், ஒருவரை ஒருவர்; உற்று இகல்
முறுக்கினர், முறை முறை; அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான். 267

உணர்வு இழந்த சுக்கிரீவனைக் கும்பகருணன் எடுத்துச் செல்லுதல்

'மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும் படை சிந்தும்; தக்கது ஓர்
எண் தரு கருமம் மற்று இதனின் இல்' என,
கொண்டனன் போயினன், நிருதர்கோ நகர். 268

உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ,
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட,
விரல் துறு கைத்தலத்து அடித்து, வெய்துயிர்த்து,
அரற்றின, கவிக் குலம்; அரக்கர் ஆர்த்தனர், 269

நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர், வானரத் தலைவர்-உள் முகிழ்த்து,
இடுங்கின கண்ணினர், எரிந்த நெஞ்சினர்,
'மடங்கினவாம் உயிர்ப்பு' என்னும் அன்பினார். 270

புழுங்கிய வெஞ் சினத்து அரக்கன் போகுவான்,
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்;
எழும் கதிர் இரவிதன் புதல்வன், எண்ணுற
விழுங்கிய மதி என, மெலிந்து தோன்றினான். 271

திக்கு உற விளக்குவான் சிறுவன், தீயவன்
மைக் கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக, மேகத்துப்
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன். 272

அனுமன் செய்வதறியாது கும்பகருணன் பின்போதல்

'ஒருங்கு அமர் புரிகிலேன், உன்னொடு யான்' என,
நெருங்கிய உரையினை நினைந்து, நேர்கிலன்,
கருங் கடல் கடந்த அக் காலன், காலன் வாழ்
பெருங் கரம் பிசைந்து, அவன் பின்பு சென்றனன். 273

ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்,
'நாயகர் எமக்கு இனி யாவர்' நாட்டினில்?
காய் கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன்,
போயினன், அரக்கன்' என்று இசைத்த பூசலார். 274

இராமன் கும்பகருணன் செல்லும் வாயிலை அடைத்தல்

தீயினும் முதிர்வுரச் சிவந்த கண்ணினான்,
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான்,
'ஏ' எனும் அளவினில், இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான்-மழையின் மேனியான். 275

'உடைப் பெருந் துணைவனை உயிரின் கொண்டு போய்,
கிடைப்ப அருங் கொடி நகர் அடையின், கேடு' என,
'தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து, உற
அடைப்பென்' என்று, அடைத்தனன், விசும்பின் ஆறு எலாம். 276

மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின;
யாதும் விண் படர்கில; இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன-விசும்பு தூர்த்தலால். 277

கும்பகருணன் இராமனைக் காணுதல்

மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்,
இனக் கொடும் பகழியின் மதிலை எய்தினான்;
'நினைந்து அவை நீக்குதல் அருமை, இன்று' என,
சினக் கொடுந் திறலவன் திரிந்து நோக்கினான். 278

கண்டனன்-வதனம், வாய், கண், கை, கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்து, பொன் சிலை
மண்டலம் தொடர்ந்து, மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான் தனை. 279

கும்பகருணன் இராமனை இடித்துரைத்தல்

மடித்த வாய் கொழும் புகை வழங்க, மாறு இதழ்
துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட,
பொடித்த தீ, நயனங்கள்; பொறுக்கலாமையால்,
இடித்த வான் தெழிப்பினால், இடிந்த, குன்று எலாம். 280

'"மாக் கவந்தனும், வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும், போலும்" என்று, எனைத்
தாக்க வந்தனை; இவன் தன்னை இன் உயிர்
காக்க வந்தனை; இது காணத் தக்கதால். 281

'உம்பியை முனிந்திலேன், அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன், தொடர்ந்த வாலிதன்
தம்பியை முனிந்திலேன், சமரம் தன்னில் யான்-
அம்பு இயல் சிலையினாய்!-புகழ் அன்று ஆதலால். 282

'தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
ஓடியது உன் படை; உம்பி ஓய்ந்து, ஒரு
பாடு உற நடந்தனன்; அனுமன் பாறினன்;
ஈடுறும் இவனைக் கொண்டு, எளிதின் எய்தினேன். 283

'காக்கிய வந்தனை என்னின், கண்ட என்
பாக்கியம் தந்தது, நின்னை; பல் முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி, எம்முனைப்
போக்குவென், மனத்துறு காதல் புன்கண் நோய். 284

'ஏதி வெந் திறலினோய்! இமைப்பிலோர் எதிர்,
பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி,
கோதை வெஞ் சிலையினால், கோடி வீடு எனின்,
சீதையும் பெயர்ந்தனள், சிறை நின்றாம்' என்றான். 285

இராமனின் வஞ்சினம்

என்றலும், முறுவலித்து, இராமன், 'யானுடை
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்,
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்,
பின்றினென் உனக்கு; வில் பிடிக்கிலேன்' என்றான். 286

மீட்டு அவன், சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்,
வாள் தலை பிடர்த்தலை வயங்க, வாளிகள்,
சேட்டு அகல் நெற்றியின், இரண்டு சேர்த்தினான். 287

கும்பகருணன் குருதியால் சுக்கிரீவன் மயக்கம் தெளிதல்

சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ,
நெற்றியின் நெடுங் கணை ஒளிர நின்றவன்,
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து,
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன். 288

குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதி நீர் முகத்தைப் போர்த்தலும்,
இன் துயில் உணர்ந்தென, உணர்ச்சி, எய்தினான்;
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான். 289

சுக்கிரீவன், கும்பகருணன் மூக்கையும் காதையும் கடித்துச் செல்லுதல்

நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்;
சுற்றுற நோக்கினன், தொழுது வாழ்த்தினான்-
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை. 290

கண்டனன் நாயகன் தன்னை, கண்ணுறா,
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த் தமரைக் கூடினான். 291

சுக்கிரீவனைக் கண்டு யாவரும் மகிழ்தல்

வானரம் ஆர்த்தன; மறையும் ஆர்த்தன;
தான் அர மகளிரும் தமரும் ஆர்த்தனர்;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே. 292

காந்து இகல் அரக்கன் வெங் கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து, எய்த நோக்கிய
வேந்தனும், சானகி இலங்கை வெஞ் சிறைப்
போந்தனளாம் என, பொருமல் நீங்கினான். 293

மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ,
வித்தகன் சரம் தொட, மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின், செவியும் மூக்கும் கொண்டு
அத் திசைப் போயினன் அல்லது, ஒண்ணுமோ? 294

உணர்வு பெற்ற கும்பகருணன் வாட் போர் புரிதல்

அக் கணத்து அறிவு வந்து அணுக, அங்கைநின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்,
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும், உணர்ந்தனன்-உதிரப் போர்வையான். 295

தாது ராகத் தடங் குன்றம், தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய, கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்-
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான். 296

எண்ணுடைத் தன்மையன், இனைய எண் இலாப்
பெண்ணுடைத் தன்மையன் ஆய பீடையால்,
புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்,
கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன. 297

ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்; தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம் மண்ணைப் பார்க்குமால்-
'சீ சீ உற்றது!' எனத் தீயும் நெஞ்சினான். 298

'என்முகம் காண்பதன் முன்னம், யான் அவன்-
தன் முகம் காண்பது சரதம் தான்' என,
பொன் முகம் காண்பது ஓர் தோலும், போரிடை
வல் முகம் காண்பது ஓர் வாளும், வாங்கினான். 299

விதிர்த்தனன்; வீசினன், விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன்; உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன்; ஆர்த்தனன்-ஆயிரம் பெருங்
கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான். 300

வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்,
கூசின குரக்கு வெங் குழுவைக் கொண்டு எழுந்து,
ஆசைகள் தோறும் விட்டு எறிய, ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால். 301

தோல் இடைத் துரக்கவும், துகைக்கவும் சுடர்
வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும்,
காலிடைக் கடல் எனச் சிந்தி, கை கெட,
வாலுடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால். 302

ஏறுபட்டதும், இடை எதிர்ந்துளோர் எலாம்
கூறுபட்டதும், கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும், நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும், ஒரு கணத்தில் தீர்ந்தவால். 303

இராமன்-கும்பகருணன் போர்

'இடுக்கு இலை; எதிர் இனி இவனை இவ் வழித்
தடுக்கிலையாம் எனின், குரங்கின் தானையை
ஒடுக்கினை, அரக்கரை உயர்த்தினாய்' எனா
முடுக்கினன், இராமனைச் சாம்பன் முன்னியே. 304

அண்ணலும் தானையின் அழிவும், ஆங்கு அவன்
திண் நெடுங் கொற்றமும், வலியும், சிந்தியா,
நண்ணினன்-நடந்து எதிர், 'நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென்' என்னும் கற்பினான். 305

ஆறினோடு ஏழு கோல், அசனி ஏறு என,
ஈறு இலா விசையன இராமன் எய்தனன்;
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால், நுணங்கு கல்வியான். 306

ஆடவர்க்கு அரசனும், தொடர, அவ் வழி,
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங் கணை
ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக,
கேடகப் புறத்தினால் கிழிய வீசினான். 307

சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய, செங் கணான்,
மறித்து ஒரு வடிக் கணை தொடுக்க, மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின், அமரர் ஆர்க்கவே. 308

'அற்றது தடக் கை வாள் அற்றது இல்' என,
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்,
'முற்றினென் முற்றினென்' என்று, முன்பு வந்து,
உற்றனன்-ஊழித் தீ அவிய ஊதுவான். 309

அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை,
பொன் நெடுங் கேடகம் புரட்டி, போர்த்தது ஓர்
நல் நெடுங் கவசத்து, நாம வெங் கணை
மின்னொடு நிகர்ப்பன, பலவும் வீசினான். 310

இராவணன் அனுப்பிய பெரும் படை உதவிக்கு வருதல்

அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி,
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட,
சிந்துவும் தன் நிலை குலைய, சேண் உற
வந்தது, தசமுகன் விடுத்த மாப் படை. 311

வில் வினை ஒருவனும், 'இவனை வீட்டுதற்கு
ஒல் வினை இது' எனக் கருதி, ஊன்றினான்;
பல் வினை தீயன பரந்த போது ஒரு
நல்வினை ஒத்தது, நடந்த தானையே. 312

வந்த சேனையை இராமன் எதிர்த்தல்

கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர்ப் படை
காத்தது கருணனை; கண்டு, மாய மாக்
கூத்தனும், 'வருக!' எனக் கடிது கூவினான். 313

சூழி வெங் கட கரி, புரவி தூண்டு தேர்,
ஆழி வெம் பெரும் படை, மிடைந்த ஆர்கலி
ஏழ்-இரு கோடி வந்து எய்திற்று என்பரால்;
ஊழியின் ஒருவனும், எதிர் சென்று, ஊன்றினான். 314

காலமும், காலனும், கணக்கு இல் தீமையும்,
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய,
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்,
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான். 315

'அரங்கு இடந்தன, அறு குறை நடிப்பன அல்ல' என்று இமையோரும்,
'மரம் கிடந்தன, மலைக் குவை கிடந்தன வாம்' என மாறாடி,
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன, கறை படும்படி கவ்விச்
சிரம் கிடந்தன, கண்டனர்; கண்டிலர், உயிர்கொடு திரிவாரை. 316

இற்ற அல்லவும், ஈர்ப்புண்ட அல்லவும், இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும், சுடு பொறித் தொகை தூவி
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும், வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும், கண்டிலர் படைக்கலம்-அடு களம் திடர் ஆக. 317

படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
குடைந்து, வையகம் புக்குறத் தேக்கிய குருதியால் குடர் சோரத்
தொடர்ந்து, நோயொடும் துணை மருப்பு இழந்து, தம் காத்திரம் துணி ஆகிக்
கிடந்த அல்லது, நடந்தன கண்டிலர்-கிளர் மதகிரி எங்கும். 318

வீழ்ந்த வாளன, விளிவுற்ற பதாகைய, வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல் நெடும் புரவிய, முறை முறை அச்சொடும் பொறி அற்று,
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெங் குழம்பிடைத் தலைத்தலை மாறாடி,
ஆழ்ந்த அல்லது, பெயர்ந்தன கண்டிலர்-அதிர் குரல் மணித் தேர்கள். 319

ஆடல் தீர்ந்தன, வளை கழுத்து அற்றன, அதிர் பெருங் குரல் நீத்த,
தாள் துணிந்தன, தறுகண் வெங் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல்
கோடு அமைந்த வெங் குருதி நீர் ஆறுகள் சுழிதொறும் கொணர்ந்து உந்தி,
ஓடல் அன்றி, நின்று உகள்வன கண்டிலர்-உரு கெழு பரி எல்லாம். 320

வேதநாயகன் வெங் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்? உம்பரும், அரக்கர் வெங் களத்து வந்து உற்றாரைக்
காதல் விண்ணிடைக் கண்டனர்; அல்லது, கணவர்தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர்; கண்டிலர், மலையினும் பெரியாரை. 321

பனிப் பட்டாலெனக் கதிர் வரப் படுவது பட்டது, அப் படை; பற்றார்
துனிப்பட்டார் எனத் துளங்கினர் இமையவர்; 'யாவர்க்கும் தோலாதான்
இனிப் பட்டான்' என, வீங்கின அரக்கரும் ஏங்கினர்; 'இவன், அந்தோ,
தனிப் பட்டான்!' என, அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன், தனி நாதன்: 322

இராமன் கும்பகருணன் உரையாடல்

'ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை; எதிர் ஒரு தனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவென்;
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின், போர் புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து, அம்மா! 323

'இழைத்த தீவினை இற்றிலது ஆகலின், யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை, அந்தகன் ஆணையின் வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந் திரு, நாளொடு; பெருந் துயில் நெடுங் காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு உறுவது ஒன்று? உரை' என்றான். 324

'மற்று எலாம் நிற்க; வாசியும், மானமும் மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும், குலமுதல் தருமமும் என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து, தன் பெருஞ் செவி மூக்கோடும்
அற்ற எங்கைபோல், என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா! 325

'நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்; அவ் வகை நிலை நோக்கி,
"தாக்கு அணங்கு அனையவள், பிறர் மனை" எனத் தடுத்தனென்; "தக்கோர் முன்
வாக்கு இழந்தது" என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்தபின் மீளல் என்றால், அது முடியுமோ?-முடியாதாய்! 326

'உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து, உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான், வானவர் நகை செய்ய,
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி,
எங்கைபோல் எடுத்து அழைத்து, நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா? 327

'ஒருத்தன், நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ? சேவகர் கடன் ஓராய்?
செருத் திண் வாளினால் திறத் திறன் உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து
பொருத்தினால், அது பொருந்துமோ? தக்கது புகன்றிலைபோல்' என்றான். 328

கும்பகருணன்-இராமன் பெரும்போர்

என்று, தன் நெடுஞ் சூலத்தை இடக்கையின் மாற்றினன்; வலக் கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து, இரு நிலக் குடர் கவர்ந்தெனக் கொண்டான்,
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல, சேவகன் செனி நேரே,
'வென்று தீர்க!' என விட்டனன்; அது வந்து பட்டது மேல் என்ன, 329

அனைய குன்று எனும் அசனியை, யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை,
தினையும் மாத்திரை துணிபட, முறை முறை சிந்தினன், சரம் சிந்தி. 330

அண்ணல் வில் கொடுங் கால் விசைத்து உகைத்தன, அலை கடல் வறளாக
உண்ணகிற்பன, உருமையும் சுடுவன, மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இலா மெய்யன, மேல் சேர்ந்த
கண்ணுதல் பெருங் கடவுள்தன் கவசத்தைக் கடந்தில கதிர் வாளி. 331

தாக்குகின்றன நுழைகில; தலையது, தாமரைத் தடங் கண்ணான்
நோக்கி, 'இங்கு இது சங்கரன் கவசம்' என்று உணர்வுற நுனித்து உன்னி,
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன்; அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது, வரை சுழல் விரி சுடர் வீழ்ந்தென்ன. 332

காந்து வெஞ் சுடர்க் கவசம் அற்று உகுதலும், கண்தொறும் கனல் சிந்தி,
ஏந்து வல் நெடுந் தோள் புடைத்து ஆர்த்து, அங்கு ஓர் எழு முனை வயிரப் போர்
வாய்ந்த வல் நெடுந் தண்டு கைப்பற்றினன்; 'வானரப் படை முற்றும்
சாந்து செய்குவனாம்' என முறை முறை அரைத்தனன், தரையொடும். 333

பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம், பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம், சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம், வடிக் கணை என்றாலும்,
பிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன், கறங்கு எனப் பெருஞ் சாரி. 334

'தண்டு கைத்தலத்து உளது எனின், உளதன்று தானை' என்று, அது சாயக்
கொண்டல் ஒத்தவன், கொடுங் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்;
கண்டம் உற்றது மற்று அது; கருங் கழல் அரக்கனும், கனன்று, ஆங்கு ஓர்
மண்டலச் சுடராம் எனக் கேடகம் வாங்கினன், வாளோடும். 335

வாள் எடுத்தலும், வானர வீரர்கள் மறுகினர், வழிதோறும்
தாள் எடுத்தனர், சமழ்த்தனர்; வானவர் தலை எடுத்திலர், தாழ்ந்தார்;
'கோள் எடுத்தது, மீள' என்று உரைத்தலும், கொற்றவன், 'குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி' என்று, ஒரு சரம் துரந்தனன், சுரர் வாழ்த்த. 336

கும்பகருணன் கை அறுபடல்

அலக்கணுற்றது தீ வினை; நல்வினை ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
கலக்கமுற்றனர், இராக்கதர்-'கால வெங் கருங் கடல் திரை போலும்
வலக் கை அற்றது, வாளொடும்; கோளுடை வான மா மதி போலும்;
இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும்' என்று எழுந்து ஓடி. 337

மற்றும், வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ, மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது-பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால் எடுத்து, அவன் ஆர்த்து ஓடி
எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து ஓடின வானரக் குலம் எல்லாம்? 338

வள்ளல் காத்து உடன் நிற்கவும், வானரத் தானையை மறக் கூற்றம்
கொள்ளை கொண்டிட, பண்டையின் மும்மடி குமைகின்ற படி நோக்கி,
'வெள்ளம் இன்றொடும் வீந்துறும்' என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப,
உள்ள கையினும் அற்ற வெங் கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம். 339

மாறு வானரப் பெருங் கடல் ஓட, தன் தோள் நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட், மேல் அமரரும் இரிந்து ஓட,
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட,
ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன், மழைக் குலம் இரிந்து ஓட. 340

'ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி' என்று இமையவர் தொழுது ஏத்த,
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும், தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட, நெடுங் கொற்றவன் கொலை அம்பால்
வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன், வேறும் ஓர் அணை மான். 341

சந்திரப் பெருந் தூணொடுஞ் சார்த்தியது, அதில் ஒன்றும் தவறு ஆகாது,
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் கடைவுறும் அந் நாளில்,
சுந்தரத் தடந் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட,
மந்தரத்தையும் கடுத்தது,-மற்று அவன் மணி அணி வயிரத் தோள். 342

சிவண வண்ண வான் கருங் கடல் கொடு வந்த செயலினும், செறி தாரை
சுவண வண்ண வெஞ் சிறையுடைக் கடு விசை முடுகிய தொழிலானும்,
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும், அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது; மந்தரம் ஒத்தது, அவ் உயர் பொன் தோள். 343

கும்பகருணன் கால்களை இழத்தல்

பழக்க நாள் வரும் மேருவை உள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி,
முழக்கினாலென, முழங்கு பேர் ஆர்ப்பினான், வானர முந்நீரை
உழக்கினான், தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக. 344

நிலத்த கால், கனல், புனல், விசும்பு, இவை முற்றும் நிருதனது உரு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்கு அரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங் கணையினால் தடிந்தனன்-தனு வல்லான். 345

பந்தி பந்தியின் பற் குலம் மீன் குலம் பாகுபாடு உற, பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட, குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
அந்தி வந்தென, அகல் நெடு வாய் விரித்து, அடி ஒன்று கடிது ஓட்டி,
குந்தி வந்தனன், நெடு நிலம் குழி பட, குரை கடல் கோத்து ஏற. 346

மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து, மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து, மேல் தொடர்கின்ற தொழிலானை,
ஏறு சேவகன், எரி முகப் பகழியால், இரு நிலம் பொறை நீங்க,
வேறு காலையும் துணித்தனன், அறத்தொடு வேதங்கள் கூத்தாட. 347

கை இரண்டொடு கால்களும் துணிந்தன; கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் வெரிந் உறத் தொளை போய;
செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி சிறந்தன; தெழிப்போடும்,
வய்யம் வானிடை மழையினும் பெருத்தது, வளர்ந்தது, பெருஞ் சீற்றம். 348

கும்பகருணன் மலைகளைக் கவ்வி வானரங்களை அழித்தல்

பாதம் கைகளோடு இழந்தனன், படியிடை இருந்து, தன் பகு வாயால்,
காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து எடுத்து, வெங் கனல் பொங்கி,
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசைகொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம், உருமின் வீழ் உயிர் என்ன, 349

தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, பிலம் திறந்தது போலும்
வாயினால் செல, வீசினன்; வள்ளலும் மலர்க் கரம் விதிர்ப்புற்றான். 350

உள் உணர்வு தோன்றிய கும்பகருணன் உரை

'அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
கையும் கால்களும் இழந்தனென்; வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்;
மையல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று, வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது' என்று, தன் உள்ளத்தின் உணர்ந்து, ஒரு துயருற்றான். 351

சிந்துரச் செம் பசுங் குருதி திசைகள் தொறும் திரை ஆறா,
எந்திரத் தேர், கரி, பரி, ஆள், ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
சுந்தரப் பொன்-கிரி ஆண்மைக் களிறு அனையான், கண் நின்ற
சுந்தரப் பொன்-தோளானை முகம் நோக்கி, இவை சொன்னான்: 352

'புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
மைக் கடங் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்!
இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து, உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர், என் கடைக்கூட்டால். 353

'நீதியால் வந்தது ஒரு நெடுந் தரும நெறி அல்லால்,
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். 354

'வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன், வேரோடும்
கல்லுமா முயல்கின்றான், இவன்" என்னும் கறுவுடையான்;
ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! 355

'தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத் தகவு இல்லான்;
நம்பி! இவன் தனைக் காணின் கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன். 356

தலையைக் கடலில் இடுமாறு வேண்ட, இராமனும் உடன்படல்

'"மூக்கு இலா முகம்" என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் கருங் கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்' என்றான். 357

'வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று' என்று, ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் அழுத்தினான். 358

கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்

மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு திக்கூடு,
போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் முகக் குன்றம். 359

ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை
பாடினார்; மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்;
கூடினார் படைத்தலைவர், கொற்றவனை; குடர் கலங்கி
ஓடினார், அடல் அரக்கர், இராவணனுக்கு உணர்த்துவான். 360

மிகைப் பாடல்கள்

என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம் கனன்று, இனைய சொல்வான்:
'வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்,
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு எளிதோ? காலம்
ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும், ஒழிவது உண்டோ ? 31-1

'மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள் யாதும்
யான் எடுத்து ஏகல் விட்டேன்; இன்றை வெஞ் சமரம் போக,
தான் அமர் அழிந்தேன் என்னத் தக்கதோ?' என்றான், அந்த
மானம் இல் அரக்கன்; பின்னர், மாலியவானும் சொல்வான்: 31-2

'"முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்தாமும்,
தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில் ஏந்தி,
இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை எல்லாம்
துப்பு அற, முருக்க வந்தான்" என்ற சொல் பிழைப்பது உண்டோ ? 31-3

'ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி ஆன
மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச் செய்யும்
தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன் போம்' என்றான். 33-1

'என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன் உறக்கமே?'
அன்று அலைத்த செங் கையால் அலைத்து அலைத்து, உணர்த்தினார். 45-1

சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு
ஏற்றதுஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க, மல்லர்,
கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார். 51-1

அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை நோக்கி,
'மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி!' என்ன,
'இன்னதே செய்வென்' என்னா, எழுந்து அடி வணங்கிப் போவான்,
பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங் கோயில் புக்கான். 54-1

இனைய கும்பகருணன், இராக்கதர்
தனை முனிந்து இடிஏறு எனச் சாற்றினான்;
'எனை நெடுந் துயில் போக்கியது என்?' என,
மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். 69-1

வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. 76-1

என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
வென்ற வீரன் இனைய விளம்பினான். 77-1

அக் கணத்து அரக்கர் கோன், 'அளப்பு இல் யானை, தேர்
மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து' என்றான். 99-1

வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
கொள்ளை வான் படைப் பெருந் தலைவர் கோடியால். 102-1

அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். 103-1

தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். 106-1

எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப் போந்ததால், 106-2

இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க் குலப்
பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. 106-3

நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. 108-1

குரக்கினப் பெரும் படை குலை குலைந்து போய்
வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்? நினது
உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? 111-1

ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்;
சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்;
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின் வெய்யோன். 114-1

சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க் குலிசம், ஈட்டி,
பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர் செய்தார்;
மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள் கொண்டு, மாறாக்
கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த அம்மா. 172-1

பற்றினன் வசந்தன் தன்னை, பனைத் தடங் கைகளாலே;
எற்றினன், 'இவனை மீள விடவொண்ணாது' என்று சொல்லி,
'கொற்றமும் உடையன்' என்னா, குழம்பு எழப் பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். 177-1

அளப்பு இல் வெங் கரிகள், பூதம், ஆளி, வெம் பரிகள் பூண்டு, ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து இழிந்து, வெம் போர்க்
களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய, 'கையால்
குளப் படுக' என்று வெய்யோன் குறித்து, உளம் கனன்று புக்கான். 177-2

நிகர் அறு கவியின் சேனை நிலை கெட, சிலவர் தம்மைத்
துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும், காலின்;
தகர் படச் சிலவர் தம்மைத் தாக்கிடும், தடக் கைதன்னால்;
புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக, வெய்யோன். 177-3

வலிதினின், சிலவர் தம்மை வன் கையால் பற்றிப் பற்றி,
தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர் நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக் கொள்ளும். 177-4

கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்; கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து, வெய்தின்
கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து வீசும்;
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி நீக்கும். 177-5

பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக் குமைக்கும்; கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின் நெருக்கும் அன்றே. 177-6

ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி,
வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே
கூய் உளம் திகைத்து, பின்னும் கொடியவன் செவியினூடே,
போயது வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை என்றே. 179-1

அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்;
எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு குன்று ஏந்தி,
வெவ் வழி இசை அக் கும்பகருணன்மேல் செல்ல விட்டான். 180-1

விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல,
இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப் போக;
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து கொண்டான். 180-2

நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத் தள்ளி,
சூலம் அங்கு ஒரு கை சுற்றி, 'தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன் நெஞ்சில்
கோலிய துயரும் தீர்ப்பென்' எனக் கொதித்து, அமரின் ஏற்றான். 186-1

செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல் அம்மை செய்து,
வைதுறு வந்து போது, வலுமுகம் காட்டி, யாங்கள்
கைதுறு வினையை வென்று கடன் கொள்வார் மார்க்கமுள்ளார்;
எய்துறும் இதற்கு என் போல் உன் தகை சிலை உதவி என்றான். 193-1

மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று ஓர்
மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள் வாரி,
போர் எதிர் புகக் கண்டு, அன்னோர் அனைவரும் புரண்டு போரில்
சோர் தர படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன் ஆர்த்தான். 203-1

மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம், ஈட்டி,
எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல் எவையும் வாரி,
மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில் மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு கணத்தில் வந்தான். 203-2

இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே,
முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர் விளிந்தார். 226-1

வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து, ஆங்கு
உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய கன்னியர்பால்
இட, உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை அறியார். 226-2

குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின் தொகை, மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும் வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும் அழித்த. 227-1

வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய,
அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்; அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், 'தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும்' என்று ஓடினர், இப்பால். 227-2

உரைத்து, நெஞ்சு அழன்று, 'ஒரு கணத்து இவன் உயிர் குடித்து, என்
கருத்து முற்றுவென்' எனச் சினம் கதுவிட, கடுந் தேர்
பரித்த திண் திறல் பாகரை, 'பகைவனுக்கு எதிரே
பொருத்தும்' என்று அடல் கும்பகன் பொருக்கெனப் புகன்றான். 228-1

நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப் போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய,
தூண்டி, மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான்: 233-1

அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித்
துதி கொண்டார்; அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு,
'இது கண்டேன்; இனிக் கழிந்தது, உன் உயிர்' எனக் கனன்றே
கொதி கொண்டான், அடல் சிலையினைக் குழைவுற வளைத்தான். 240-1

புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத் துயர் தீர்ந்து,
அக் கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய,
மிக்க வார் சிலை வளைத்து, உரும் ஏறொடு விசும்பும்
உட்க, நாண் எறிந்து, உக முடிவு என, சரம் பொழிந்தான். 248-1

'காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
போயினன் அரக்கன்' என்று உரைத்த போழ்தின் வாய்,
நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன், இனைய செய்தனன். 272-1

ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு ஒரு
மா இருங் கேடகம் இடத்து வாங்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான். 299-1

வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. 299-2

கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
செம் பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான். 301-1

ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப்
போயின கேடகம் புரிந்து நோக்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமக்கப் பெற்றுடை
மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். 301-2

போயின கேடகம் போக நோக்கினன்,
ஆயிரம் பெயரவன், அறியும் முன்பு; அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
'ஏ' எனும் அளவினில் எய்தச் சென்றதால். 301-3

ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். 310-1

பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
விடுத்தனன், 'பகைவனை வென்று மீள்க' எனா;
தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். 315-1

சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய
கால் வெங் கனல் படை கடிதின் ஏவி, அச்
சூலம் அற்று இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். 315-2

அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும்
தொழும் தகை அமலனைப் புகழ்ந்து துள்ளியே,
'கழிந்தது, எம் மனத் துயர்' என்று கண்ணன்மேல்
பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. 315-3

வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும்
சுந்தர நெடுங் கணை மாரி தூவினான்;
சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. 315-4

இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்திப்
புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம் பொரு சிலைக் கணை மாரி;
இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின் இனம் பல படி மூடி;
திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன், கும்பகன் சினம் மூள. 321-1

என்ற போதில், அரக்கனும் நோக்கினன், 'எம்பிரான் நுவல் மாற்றம்
நன்று, நன்று!' எனா, சிரம் துளக்கினன், நகைத்து, இவை இவை நவில்கின்றான்:
'வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில்
பொன்றுமாறு இளைத்து, இன்று போய் வருவேனேல், புகழுடைத்தது போலாம்'. 324-1

இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது; 'இங்கு இவன் பெருங் கடவுள்; மற்று இவன் பத நிழல் காண
வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை' என்று, தன் மன வேகம்-
தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை நினைந்தனன், கருத்தோடும். 350-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247