முதற் போர் புரி படலம் - Muthar Por Puri Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



யுத்த காண்டம்

15. முதற் போர் புரி படலம்

வானர சேனைக்கு இராமன் ஆணையிடல்

'"பூசலே; பிறிது இல்லை" என, புறத்து
ஆசைதோறும் முரசம் அறைந்து, என
பாசறைப் படையின்னிடம் பற்றிய
வாசல்தோறும் முறையின் வகுத்திரால். 1

'மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி,-வீரர்!-பரவையின் மும் முறை
கற்ற கைகளினால், கடி மா நகர்
சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால். 2

'இடுமின் பல் மரம்; எங்கும் இயக்கு அறத்
தடுமின்; "போர்க்கு வருக!" எனச் சாற்றுமின்;
கடுமின், இப்பொழுதே கதிர் மீச்செலாக்
கொடி மதில் குடுமித் தலைக்கொள்க!' என்றான். 3

வானரப்படை அகழியைத் தூர்த்தல்

தடங் கொள் குன்றும், மரங்களும் தாங்கியே,
மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை,
இடங்கர் மா இரிய, புனல் ஏறிட,
தொடங்கி, வேலை அகழியைத் தூர்த்ததால். 4

ஏய வெள்ளம் எழுபதும், எண் கடல்
ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும்,
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயிலூடு புக்கு, ஊரை வளைந்ததே. 5

விளையும் வென்றி இராவணன் மெய்ப் புகழ்
முளையினோடும் களைந்து முடிப்பபோல்,
தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை
வளையம், வன் கையில், வாங்கின-வானரம். 6

இகழும் தன்மையன் ஆய இராவணன்
புகழும் மேன்மையும் போயினவாம் என,
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்,
அகழிதானும் அழுவது போன்றதே. 7

தண்டு இருந்த பைந் தாமரை தாள் அற,
பண் திரிந்து சிதைய, படர் சிறை
வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக்
கொண்டு இரிந்தன, அன்னக் குழாம் எலாம். 8

ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய;
தாள தாமரை அன்னங்கள் தாவிட,
வாளை தாவின, வானரம் தாவவே. 9

தூறு மா மரமும், மலையும் தொடர்
நீறு, நீர்மிசைச் சென்று நெருக்கலான்,
ஏறு பேர் அகழ்நின்றும் எனைப் பல
ஆறு சென்றன, ஆர்கலிமீது அரோ. 10

இழுகு மாக் கல் இடும்தொறு இடும்தொறும்,
சுழிகள்தோறும் சுரித்து இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன, ஓங்கு நீர்
முழுகி மீது எழு மாதர் முகத்தையே. 11

தன்மைக்குத் தலையாய தசமுகன்
தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்;
இன்மைக்கும், ஒன்று உடைமைக்கும், யாவர்க்கும்
வன்மைக்கும், ஒர் வரம்பும் உண்டாம்கொலோ? 12

தூர்த்த வானரம், சுள்ளி பறித்து இடை,
சீர்த்த பேர் அணைதன்னையும் சிந்தின;
வார்த்தது அன்ன மதிலின் வரம்புகொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே. 13

வட்டமேரு இது என, வான் முகடு
எட்ட நீண்ட மதில்மிசை ஏறி, விண்
தொட்ட வானரம் தோன்றின-மீத் தொக
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே. 14

இறுக்க வேண்டுவது இல்லை; எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழுக் கலால்
நிறுக்க, நேர்வரும் வீரர் நெருக்கலால்,
பொறுக்கலாது, மதிள் தரை புக்கதால். 15

அரக்கர் சேனையின் எழுச்சி

அறைந்த மா முரசு; ஆனைப் பதாகையால்
மறைந்தவால், நெடு வானகம்; மாதிரம்
குறைந்த, தூளி குழுமி; விண்ணூடு புக்கு
உறைந்தது, ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே. 16

கோடு அலம்பின; கோதை அலம்பின;
ஆடல் அம் பரித் தாரும் அலம்பின;
மாடு அலம்பின, மா மணித் தேர்; மணி
பாடு அலம்பின, பாய் மத யானையே. 17

இரு சேனையும் பொருதல்

அரக்கர் தொல் குலம் வேர் அற, அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வுற, வந்தது ஓர்
கருக் கொள் காலம் விதிகொடு காட்டிட,
தருக்கி உற்று, எதிர் தாக்கின-தானையே. 18

பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும்,
கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல்,
வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள
எல் கொடும், படையும் கொண்டது-இக் கடல். 19

அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம்
கொம்புடைப் பணை கூறு உற நூறின;
வம்புடைத் தட மா மரம் மாண்டன,
செம் புகர்ச் சுடர் வேல்-கணம் செல்லவே. 20

மாக் கை வானர வீரர் மலைந்த கல்
தாக்கி, வஞ்சர் தலைகள் தகர்த்தலால்,
நாக்கினூடும், செவியினும், நாகம் வாழ்
மூக்கினூடும், சொரிந்தன, மூளையே. 21

அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம்
விற்கள் ஓடு சரம் பட, வெம் புணீர்
பற்களோடும் சொரிதர, பற்றிய
கற்களோடும் உருண்ட, கவிகளே. 22

நின்று மேரு நெடு மதில் நெற்றியின்
வென்றி வானர வீரர் விசைத்த கல்
சென்று, தீயவர் ஆர் உயிர் சிந்தின,
குன்றின் வீழும் உருமின் குழுவினே. 23

எதிர்த்த வானரம் மாக் கையொடு இற்றன;
மதில் புறங் கண்டு, மண்ணில் மறைந்தன;-
கதிர்க் கொடுங் கண் அர்க்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே. 24

கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப்
பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின,
இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை
முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின. 25

எறிந்தும், எய்தும், எழு முளைத் தண்டு கொண்டு
அறைந்தும், வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்,
நிறைந்த வெங் கண் அரக்கர் நெருக்கலால்,
குறைந்த-வானர வீரர் குழுக்களே. 26

செப்பின் செம் புனல் தோய்ந்த செம் பொன் மதில்,
துப்பின் செய்தது, போன்றது, சூழ் வரை;
குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு
உப்பின் சென்றது, உதிரத்து ஒழுக்கமே. 27

வந்து இரைத்த பறவை மயங்கின,
அந்தரத்தில் நெருங்கலின், அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது-பற்றுதல்
இந்திரற்கும் அரிய இலங்கையே. 28

தங்கு வெங் கனல் ஒத்துத் தயங்கிய
பொங்கு வெங் குருதிப் புனற் செக்கர் முன்,
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து,
அங்கும் இங்கும் நின்று, ஆடினவாம் அரோ. 29

கொன் நிறக் குருதிக் குடை புட்களின்
தொல் நிறச் சிறையில் துளி தூவலால்,
பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம்
செந் நிறத்தனவாய், நிறம் தீர்ந்தவே. 30

வானரங்கள் மதிலிலிருந்து இறங்குதல்

பொழிந்து சோரிப் புதுப் புனல் பொங்கி மீ
வழிந்த மா மதில் கைவிட்டு, வானரம்,
ஒழிந்த, மேருவின் உம்பர் விட்டு இம்பரின்
இழிந்த மாக் கடல் என்ன, இழிந்ததே. 31

பதனமும், மதிலும், படை நாஞ்சிலும்,
கதன வாயிலும், கட்டும் அட்டாலையும்,
முதல யாவையும் புக்குற்று முற்றின-
விதன வெங் கண் இராக்கதர் வெள்ளமே. 32

பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல
நீந்தி ஏகும் நெருக்கிடைச் செல்வன;
சாய்ந்து சாய்ந்து, சரம் படத் தள்ளலுற்று
ஓய்ந்து வீழ்ந்த; சில சில ஓடின. 33

அரக்கர் சேனையின் ஆரவாரம்

தழிய வானர மாக் கடல் சாய்தலும்,
பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்-
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே. 34

முரசும், மா முருடும், முரல் சங்கமும்,
உரை செய் காளமும், ஆகுளி ஓசையும்,
விரைசும் பல் இயம், வில் அரவத்தொடும்,
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே. 35

இராவணனது படை வெளி வருதல்

ஆய காலை, அனைத்து உலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்தென,
மேய சேனை விரி கடல், விண் குலாம்
வாயிலூடு புறப்பட்டு வந்ததே. 36

நெடிய காவதம் எட்டும் நிரம்பிய,
படிய வாயில் பருப்பதம் பாய்ந்தென,
கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின, மும் மத ஓங்கலே. 37

சூழி யானை மதம் படு தொய்யலின்,
ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ,
பாழி ஆள் வயிரப் படி பல் முறை
பூழி ஆக்கின, பொன் நெடுந் தேர்களே. 38

பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள்,
மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம்
குடித்துக் கால்வன போன்ற, குதிரையே. 39

கேள் இல் ஞாலம், கிளத்திய தொல் முறை
நாளும் நாளும் நடந்தன நள் இரா,
நீளம் எய்தி, ஒரு சிறை நின்றன,
மீளும் மாலையும் போன்றனர்-வீரரே. 40

பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட,
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற,
பித்தி பிற்பட, வன் திசை பேர்வுற,
தொத்தி, மீண்டிலவால்-நெடுந் தூளியே. 41

வானரச் சேனை நிலைகுலைய, சுக்கிரீவன் சினத்துடன் போரிடல்

நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்,
குரக்கு இனப் பெருந் தானை குலைந்து போய்,
அருக்கன் மா மகன், ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன், நின்றுழிச் சென்றவால். 42

சாய்ந்த தானைத் தளர்வும், சலத்து எதிர்
பாய்ந்த தானைப் பெருமையும், பார்த்து, உறக்
காய்ந்த நெஞ்சன், கனல் சொரி கண்ணினன்,
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான். 43

வாரணத்து எதிர், வாசியின் நேர், வயத்
தேர் முகத்தினில், சேவகர்மேல், செறுத்து,
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று, உயர்
தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். 44

களிறும், மாவும், நிருதரும், கால் அற,
ஒளிறு மா மணித் தேரும் உருட்டி, வெங்
குளிறு சோரி ஒழுக, கொதித்து, இடை
வெளிறு இலா மரமே கொண்டு, வீசினான். 45

அன்ன காலை, அரிக் குல வீரரும்
மன்னன் முன் புக, வன் கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெருஞ் செருத்
தன்னில் வந்து, தலைமயக்குற்றனர். 46

கல் துரந்த களம் பட, வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்;
வில் துரந்தன வெங் கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே. 47

கற்கள் தந்து, நிமிர்ந்து, கடுஞ் செரு
மற்கடங்கள் வலிந்து மலைந்திட,
தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர்
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால். 48

பாடுகின்றன, பேய்க் கணம்; பல் விதத்து
ஆடுகின்ற, அறு குறை; ஆழ் கடற்கு
ஓடுகின்ற, உதிரம்; புகுந்து, உடல்
நாடுகின்றனர், கற்புடை நங்கைமார். 49

யானை பட்ட அழி புனல் யாறு எலாம்
பானல் பட்ட; பல கணை மாரியின்
சோனை பட்டது; சொல்ல அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது, செம் புண்ணீர். 50

அரக்கர் சேனையின் அழிவு கண்ட வச்சிரமுட்டி வந்து போரிடல்

காய்ந்த வானர வீரர் கரத்தினால்
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர்
பாய்ந்த தானைப் படு களம் பாழ்படச்
சாய்ந்ததால், நிருதக் கடல்-தானையே. 51

தங்கள் மாப் படை சாய்தலும், தீ எழ
வெங் கண் வாள் அரக்கன், விரை தேரினை,
கங்க சாலம் தொடரக் கடற் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து, எதிர் தாக்கினான். 52

வந்து தாக்கி, வடிக் கணை மா மழை
சிந்தி, வானரச் சேனை சிதைத்தலும்,
இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்;
நொந்து, சூரியன் கான்முனை நோக்கினான். 53

சுக்கிரீவன் வச்சிரமுட்டியை அழித்தல்

நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு, எழுந்து ஏகினான். 54

மலை குலைந்தென, வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின், நின்றுளார்
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்;
அலை கிளர்ந்தென, வானரம் ஆர்த்தவே. 55

கீழை வாசலில் நிகழ்ந்த போர்

வீழி வெங் கண் இராக்கதர் வெம் படை,
ஊழி ஆழி கிளர்ந்தென ஓங்கின,
கீழை வாயிலில் கிட்டலும், முட்டினர்,
சூழும் வானர வீரர் துவன்றியே. 56

சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம்,
வாலம், வாளி, மழையின் வழங்கியே,
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்,
காலும் வாலும் துமிந்த, கவிக் குலம். 57

வென்றி வானர வீரர் விசைத்து எறி
குன்றும் மா மரமும், கொடுங் காலனின்
சென்று வீழ, நிருதர்கள் சிந்தினார்;
பொன்றி வீழ்ந்த, புரவியும் பூட்கையும். 58

தண்டு, வாள், அயில், சக்கரம் சாயகம்,
கொண்டு, சீறி, நிருதர் கொதித்து எழ,
புண் திறந்து குருதி பொழிந்து உக,
மண்டி ஓடினர், வானர வீரரே. 59

நீலன் நிகழ்த்திய போர்

எரியின் மைந்தன், இரு நிலம் கீழுற,
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி, நிருதர் வெஞ் சேனை போய்
நெரிய, ஊழி நெருப்பு என வீசினான். 60

தேரும், பாகரும், வாசியும், செம் முகக்
காரும், யாளியும், சீயமும், காண் தகு
பாரின் வீழப் புடைப்ப, பசும் புணின்
நீரும் வாரி அதனை நிறைத்ததே. 61

அரக்கர் சேனை அடு களம் பாழ்பட
வெருக்கொண்டு ஓடிட, வெம் படக் காவலர்
நெருக்க, நேர்ந்து, கும்பானு நெடுஞ் சரம்
துரக்க, வானரச் சேனை துணிந்தவே. 62

கண்டு நின்ற கரடியின் காவலன்,
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன், ஓர்
சண்டமாருதம் என்ன, தட வரை
கொண்டு சீறி, அவன் எதிர் குப்புறா, 63

தடுத்த வாளிகள் வீழும் முன், சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்,
ஒடித்த வில்லும் இரதமும், ஒல்லெனப்
படுத்த, வாசியும் பதாகையும் பாழ்பட. 64

தேர் அழிந்து, சிலையும் அழிந்து உக,
கார் இழிந்த உரும் எனக் காய்ந்து, எதிர்
பார் கிழிந்து உகப் பாய்ந்தனன்-வானவர்
போர் கிழிந்து புறம் தர, போர் செய்தான். 65

தத்தி, மார்பின் வயிரத் தடக் கையால்
குத்தி நின்ற கும்பானுவை, தான் எதிர்
மொத்தி நின்று, முடித் தலை கீழ் உற,
பத்தி வன் தடந் தோள் உறப் பற்றுவான். 66

கடித்தலத்து இரு கால் உற, கைகளால்
பிடித்துத் தோளை, பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள்
வெடித்து வீழ்தர, வீழ்த்தினனாம் அரோ. 67

பிரகத்தன் போர்

தன் படைத்தலைவன் படத் தன் எதிர்,
துன்பு அடைத்த மனத்தன், சுமாலி சேய்,
முன் படைத்த முகில் அன்ன காட்சியன்,
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான். 68

வாங்கி வார் சிலை, வானர மாப் படை
ஏங்க நாண் எறிந்திட்டு, இடையீடு இன்றி,
தூங்கு மாரி என, சுடர் வாளிகள்,
வீங்கு தோளினன், விட்டனனாம் அரோ. 69

நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
வேறு வேறு படுதலின், வெம்பியே,
ஈறு இல் வானர மாப் படை எங்கணும்
பாற, நீலன் வெகுண்டு, எதிர் பார்ப்புறா, 70

குன்றம் நின்றது எடுத்து, எதிர் கூற்று எனச்
சென்று எறிந்து, அவன் சேனை சிதைத்தலும்,
வென்றி வில்லின் விடு கணை மாரியால்,
ஒன்று நூறு உதிர்வுற்றது, அக் குன்றமே. 71

மீட்டும், அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி, வானத்து இடி என எற்றலும்,
கோட்டும் வில்லும், கொடியும், வயப் பரி
பூட்டும் தேரும், பொடித் துகள் ஆயவே. 72

தேர் இழந்து, சிலையும் இழந்திட,
கார் இழிந்த உரும் எனக் காந்துவான்,
பார் இழிந்து, பரு வலித் தண்டொடும்,
ஊர் இழந்த கதிர் என, ஓடினான். 73

வாய் மடித்து அழல் கண்தொறும் வந்து உக,
போய் அடித்தலும், நீலன் புகைந்து, எதிர்
தாய் அடுத்து, அவன் தன் கையின் தண்டொடும்
மீ எடுத்து விசும்பு உற வீசினான். 74

அம்பரத்து எறிந்து, ஆர்ப்ப, அரக்கனும்,
இம்பர் உற்று, எரியின் திரு மைந்தன்மேல்,
செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்,
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே. 75

அடித்தலோடும், அதற்கு இளையாதவன்,
எடுத்த தண்டைப் பறித்து எறியா, 'இகல்
முடித்தும்' என்று, ஒரு கைக்கொடு மோதினான்,
குடித்து உமிழ்ந்தெனக் கக்கக் குருதியே. 76

குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன்,
நிருதன், நீலன் நெடு வரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும், கைத்து, அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே. 77

மற்று, நீலன், அரக்கனை மாடு உறச்
சுற்றி வால்கொடு, தோளினும், மார்பினும்,
நெற்றி மேலும், நெடுங் கரத்து எற்றலும்,
இற்று, மால் வரை என்ன, விழுந்தனன். 78

'இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன்' என்று
அறிந்து, வானவர் ஆவலம் கொட்டினார்;
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து, தம்தம் முது நகர் நோக்கினார். 79

தெற்கு வாயிலில் அங்கதன் நிகழ்த்திய போர்

தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர்
மல் குலாவு வயப் புயத்து அங்கதன்
நிற்கவே, எதிர் நின்றிலர் ஓடினார்,
பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே. 80

மேலை வாயிலில் அனுமன் நிகழ்த்திய போர்

நூற்று-இரண்டு எனும் வெள்ளமும், நோன் கழல்
ஆற்றல் சால் துன்முகனும், அங்கு ஆர்த்து எழ,
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்,-
காற்றின் மா மகன் கை எனும் காலனால். 81

நால்திசைப் போர் பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல்

அன்ன காலை, அயிந்திர வாய் முதல்
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்,
'மன்ன! கேள்' என, வந்து வணங்கினார்;
சென்னி தாழ்க்க, செவியிடைச் செப்பினார்; 82

'வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்,
குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்,
அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும்,
படச் சிதைந்தது, நம் படை' என்றனர். 83

'வென்றி வேற் கை நிருதர் வெகுண்டு எழ,
தென் திசைப் பெரு வாயிலில் சேர்ந்துழி,
பொன்றினான், அச் சுபாரிசன்; போயினார்
இன்று போன இடம் அறியோம்' என்றார். 84

'கீழை வாயில், கிளர் நிருதப் படை,
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான்; உயிர் புக்கது விண்' என்றார். 85

இராவணன் பெருஞ்சினம் கொள்ளல்

என்ற வார்த்தை, எரி புகு நெய் எனச்
சென்று, சிந்தை புகுதலும், சீற்றத் தீ
கன்று கண்ணின்வழிச் சுடர் கான்றிட,
நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ. 86

மறித்தும், 'ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்?
இறுத்துக் கூறும்' என்றான்; 'இசை எங்கணும்
நிறுத்தும் நீலன், நெடும் பெருஞ் சேனையை
ஒறுத்து, மற்று அவனோடும் வந்து உற்றனன்; 87

'உற்ற போதின் இருவரும், ஒன்று அல,
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்,
நெற்றிமேல், மற்று அந் நீலன் நெடுங் கையால்
எற்ற, வீந்தனன்' என்ன இயம்பினார். 88

'அன்னவன்னொடும் போன அரக்கரில்
நல் நகர்க்கு வந்தோம், ஐய! நாங்களே'
என்ன என்ன, எயிற்று, இகல் வாய்களைத்
தின்னத் தின்ன, எரிந்தன திக்கு எலாம். 89

இராவணன் போருக்குப் புறப்படுதல்

மாடு நின்ற நிருதரை, வன்கணான்
ஓட நோக்கி, 'உயர் படையான் மற்று அக்
கோடு கொண்டு பொருத குரங்கினால்
வீடினான்!' என்று, மீட்டும் விளம்பினான்: 90

'"கட்டது, இந்திரன் வாழ்வை; கடைமுறை
பட்டது, இங்கு ஒர் குரங்கு படுக்க" என்று
இட்ட வெஞ் சொல் எரியினில், என் செவி
சுட்டது; என்னுடை நெஞ்சையும் சுட்டதால்; 91

'கருப்பைபோல் குரங்கு எற்ற, கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்;
அருப்பம் என்று பகையையும், ஆர் அழல்
நெருப்பையும், இகழ்ந்தால், அது நீதியோ?' 92

நிற்க அன்னது, நீர் நிறை கண்ணினான்,
'வற்கம் ஆயின மாப் படையோடும் சென்று,
ஒற்கம் வந்து உதவாமல் உறுக!' என,
விற் கொள் வெம் படை வீரரை ஏவியே, 93

மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
கண்டு நின்று, கயிலை இடந்தவன்,
புண் திறந்தன கண்ணினன், பொங்கினான்,
திண் திறல் நெடுந் தேர் தெரிந்து ஏறினான்- 94

ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல்
மா இருங் கடல் போன்றது; வானவர்
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது. 95

ஏற்றி, எண்ணி இறைஞ்சி, இடக் கையால்
ஆற்றினான், தன் அடு சிலை; அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்,
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே. 96

மற்றும், வான் படை, வானவர் மார்பிடை
இற்றிலாதன, எண்ணும் இலாதன,
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச்
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். 97

பேரும் கற்றைக் கவரிப் பெருங் கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன்,
ஊரும் வெண்மை உவா மதிக் கீழ் உயர்
காரும் ஒத்தனன், முத்தின் கவிகையான். 98

போர்த்த சங்கப் படகம் புடைத்திட,
சீர்த்த சங்கக் கடல் உக, தேவர்கள்
வேர்த்து அசங்கிட, அண்டம் வெடித்திட,
ஆர்த்த சங்கம், அறைந்த, முரசமே. 99

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட,
மூரி வல் நெடுந் தானையில் முற்றினான்;
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்,
மேரு மால் வரை என்ன, விளங்கினான், 100

ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்,
சூழ் இருந் திசைகளைத் தொடரும் தொல் கொடி,
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின், ஓங்கவே; 101

'வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர்
தோணி பெற்றனர்' எனக் கடக்கும் தொல் செருக்
காணிய வந்தவர், கலக்கம் கைம்மிக,
சேண் உயர் விசும்பிடை அமரர், சிந்தவே; 102

கண் உறு கடும் புகை கதுவ, கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்தம் அரத்தப் பங்கிகள்
வெண் நிறம் கோடலின், உருவின் வேற்றுமை,
நண்ணினர் நோக்கவும், அயிர்ப்பு நல்கவே; 103

கால் நெடுந் தேர் உயர் கதலியும், கரத்து
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்,
ஆனையின் கொடிகளும், அளவித் தோய்தலால்,
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே; 104

ஆயிரம் கோடி பேய், அங்கை ஆயுதம்
தூயன சுமந்து, பின் தொடர, சுற்று ஒளிர்
சேயிரு மணி நெடுஞ் சேமத் தேர் தெரிந்து,
ஏயின ஆயிரத்து இரட்டி எய்தவே; 105

ஊன்றிய பெரும் படை உலைய, உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ,
தோன்றினன்-உலகு எனத் தொடர்ந்து நின்றன
மூன்றையும் கடந்து, ஒரு வெற்றி முற்றினான். 106

இராவணன் வருகையை ஒற்றர் இராமனுக்கு அறிவித்தல்

'ஓதுறு கருங் கடற்கு ஒத்த தானையான்,
தீது உறு சிறு தொழில் அரக்கன், சீற்றத்தால்,
போது உறு பெருங் களம் புகுந்துளான்' எனத்
தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார். 107

இராமன் மகிழ்ந்து போர்க்கோலம் பூணுதல்

ஆங்கு, அவன் அமர்த் தொழிற்கு அணுகினான் என,
'வாங்கினென், சீதையை' என்னும் வன்மையால்,
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின, இராகவன் வீரத் தோள்களே. 108

தொடையுறு வற்கலை ஆடை சுற்றி, மேல்
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்-
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்,
கடை உறு நோக்கினின், காணும் காட்சியான். 109

ஒத்து இரு சிறு குறட் பாதம் உய்த்த நாள்,
வித்தக அரு மறை உலகை மிக்கு, மேல்
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என,
சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான். 110

பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர்
மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்-
தேவியைத் திரு மறு மார்பின் தீர்ந்தனன்;
'நோ இலள்' என்பது நோக்கினான்கொலோ? 111

நல் புறக் கோதை, தன் நளினச் செங்கையின்
நிற்புறச் சுற்றிய காட்சி, நேமியான்-
கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம்
பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால். 112

புதை இருட் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அரு நாள் வரச் சிவந்த தாமரை
இதழ்தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என,
ததைவுறு நிரை விரற் புட்டில் தாங்கினான். 113

பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து,
எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய,
நல் இயல், நவை அறு, கவிஞர் நா வரும்
சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான். 114

கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
அளவு அறு செஞ் சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இள வரிக் கவட்டிலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். 115

ஓங்கிய உலகமும், உயிரும், உட்புறம்
தாங்கிய பொருள்களும், தானும், தான் என
நீங்கியது யாவது? நினைக்கிலோம்; அவன்
வாங்கிய வரி சிலை மற்றொன்றேகொலாம்? 116

நாற் கடல் உலகமும், விசும்பும், நாள்மலர்
தூர்க்க, வெஞ் சேனையும் தானும் தோன்றினான்-
மால் கடல் வண்ணன், தான் வளரும் மால் இரும்
பாற்கடலோடும் வந்து, எதிரும் பான்மைபோல். 117

இராமன் இலக்குவனைச் சார்தல்

ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு, தான்,
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என,
வாழிய வரி சிலைத் தம்பி, மாப் படைக்
கூழையின் நெற்றி நின்றானை, கூடினான். 118

அரக்கரும் வானரரும் கைகலத்தல்

என்புழி, நிருதராம் எழு வேலையும்,
மின் பொழி எயிறுடைக் கவியின் வெள்ளமும்,
தென் புலக் கிழவனும் செய்கை கீழ்ப்பட,
புன் புலக் களத்திடைப் பொருத போலுமால். 119

துமிந்தன தலை; குடர் சொரிந்த; தேர்க் குலம்
அவிந்தன; புரவியும் ஆளும் அற்றன;
குவிந்தன, பிணக் குவை; சுமந்து கோள் நிலம்
நிமிர்ந்தது; பரந்தது, குருதி நீத்தமே. 120

கடுங் குரங்கு இரு கையால் எற்ற, கால் வயக்
கொடுங் குரம் துணிந்தன, புரவி; குத்தினால்
ஒடுங்கு உரம் துணிந்தனர், நிருதர்; ஓடின,
நெடுங் குரம்பு என நிறை குருதி நீத்தமே. 121

'தெற்கு இது; வடக்கு இது' என்னத் தேர்கிலார்,
பற் குவை பரந்தன; குரக்குப் பல் பிணம்
பொற் குவை நிகர்த்தன; நிருதர் போர்ச் சவம்
கற் குவை நிகர்த்தன; மழையும் காட்டின. 122

இராவணன் வில் நாண் ஒலியால் வானரம் இரிதல்

அவ்வழி, இராவணன் அமரர் அஞ்ச, தன்
வெவ் விழி நெருப்பு உக, வில்லின் நாணினைச்
செவ் வழிக் கோதையின் தெறிக்க, சிந்தின,
எவ்வழி மருங்கினும் இரிந்த, வானரம். 123

உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியலுற்றன, சில; இறந்தவால், சில;
வெருவலுற்றன, சில; விம்மலுற்றன;
பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில. 124

பொர, கரு நிற நெடு விசும்பு போழ்பட,
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்,
குரக்கினம் உற்றது என், கூறின்? தன் குலத்து
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார். 125

வீடணன் ஒருவனும், இளைய வீரனும்,
கோடு அணை குரங்கினுக்கு அரசும், கொள்கையால்
நாடினர் நின்றனர்; நாலு திக்கினும்
ஓடினர், அல்லவர்; ஒளித்தது, உம்பரே. 126

'எடுக்கின், நானிலத்தை ஏந்தும் இராவணன், எறிந்த நாணால்
நடுக்கினான், உலகை' என்பார்; 'நல்கினான்' என்னற்பாற்றோ?
மிடுக்கினால் மிக்க வானோர், மேக்கு உயர் வெள்ளம், மேல்நாள்,
கெடுக்கும் நாள், உருமின் ஆர்ப்புக் கேட்டனர் என்னக் கேட்டார். 127

சுக்கிரீவன் இராவணன் போர்

ஏந்திய சிகரம் ஒன்று, அங்கு இந்திரன் குலிசம் என்ன,
காந்திய உருமின் விட்டான், கவிக் குலத்து அரசன், அக் கல்
நீந்த அரு நெருப்புச் சிந்தி நிமிர்தலும், நிருதர்க்கும் எல்லாம்
வேந்தனும், பகழி ஒன்றால், வெறுந் துகள் ஆக்கி, வீழ்த்தான். 128

அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து, சிந்தி,
திண் நெடுஞ் சிகரம், நீறாய்த் திசை திசை சிந்தலோடும்,
கண் நெடுங் கடுந் தீக் கால, கவிக் குலத்து அரசன், கையால்,
மண்மகள் வயிறு கீற, மரம் ஒன்று வாங்கிக் கொண்டான். 129

கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால், காட்டத் தக்க
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என, கண்டம் கண்டான்;
விண்ட வாள் அரக்கன் மீது, விசும்பு எரி பறக்க, விட்டான்,
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி, பரிதி மைந்தன். 130

அக் கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி,
திக்கு இரிதரப் போர் வென்ற சிலையினை வளைய வாங்கி,
சுக்கிரீவன் தன் மார்பில் புங்கமும் தோன்றாவண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க, எய்தான். 131

சுக்கிரீவன் தளர்ந்த நிலையில் அனுமன் வருதல்

சுடு கணை படுதலோடும் துளங்கினான்; துளங்காமுன்னம்,
குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை
உடன் உறைந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்காமுன்னர்,
வட திசை வாயில் வந்து, மன்னவன் முன்னர் ஆனான். 132

பரிதி சேய் தேறாமுன்னம், 'பரு வலி அரக்க! பல் போர்
புரிதியோ என்னோடு?' என்னா, புகை எழ விழித்துப் பொங்கி,
'வருதியேல், வா வா!' என்பான்மேல் மலை ஒன்று வாங்கி,
சுருதியே அனைய தோளால் வீசினான், காலின் தோன்றல். 133

மீ எழு மேகம் எல்லாம் வெந்து, வெங் கரியின் சிந்தித்
தீ எழ, விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி,
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புறத் தொடுத்துக் கண்டித்து,
ஆயிரம் கூறு செய்தான், அமரரை அலக்கண் செய்தான். 134

மீட்டு ஒரு சிகரம் வாங்கி, வீங்கு தோள் விசையின் வீசி,
ஓட்டினான்; ஓட்ட, வானத்து உருமினும் கடுக ஓடி,
கோட்டு வெஞ் சிலையின் வாளி முன் சென்று, கொற்றப் பொன் தோள்
பூட்டிய வலயத்தோடும், பூழியாய்ப் போயிற்று அன்றே. 135

மெய் எரிந்து அழன்று பொங்கி, வெங் கணான் விம்மி, மீட்டு ஓர்
மை வரை வாங்குவானை, வரி சிலை வளைய வாங்கி,
கையினும் தோளின்மேலும் மார்பினும் கரக்க, வாளி
ஐ-இரண்டு அழுந்த எய்தான்; அவன் அவை ஆற்றி நின்றான். 136

'யார் இது செய்யகிற்பார்?' என்று கொண்டு இமையோர் ஏத்த,
மாருதி, பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி,
வேரொடும் சுழற்றி விட்டான்; விடுதலும், இலங்கை வேந்தன்
சாரதி தலையைத் தள்ளிச் சென்றது, நிருதர் சாய. 137

மாறி ஓர் பாகன் ஏற, மறி திரைப் பரவை பின்னும்
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன், தெய்வ
நூறுகோல் நொய்தின் எய்தான்; அவை உடல் நுழைதலோடும்,
ஆறு போல் சோரி சோர, அனுமனும் அலக்கணுற்றான். 138

இராவணன் வீரவுரை

'கல் கொண்டும், மரங்கள் கொண்டும், கைக் கொண்டும், களித்து, நும் வாய்ச்
சொல் கொண்டும், மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி, வெள்ளிப்
பல் கொண்டும், மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது; யான் ஓர்
வில் கொண்டு நின்ற போது, விறல் கொண்டு மீள்திர் போலாம்'. 139

என்று உரைத்து, எயிற்றுப் பேழ் வாய் எரி உக நகை செய்து, யாணர்ப்
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமுப் போல,
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக, ஆயிர கோடி உய்த்தான்;
சென்றது குரக்குச் சேனை, கால் எறி கடலின் சிந்தி. 140

இலக்குவன், இராவணனுடன் போரிட வந்து நாண் ஒலி செய்தல்

கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும், கவிகள் உற்ற
அலக்கணும், தலைவர் செய்த தன்மையும், அமையக் கண்டான்,
இலக்குவன், 'என் கை வாளிக்கு இலக்கு இவன்; இவனை இன்று
விலக்குவென்' என்ன வந்தான், வில்லுடை மேரு என்ன. 141

தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான்; தீய
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை? 'முடிவின் மாரி
ஆயத்தின் இடி இது' என்றே அஞ்சின, உலகம்; யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர், செறுநர் எல்லாம். 142

ஆற்றல் சால் அரக்கந்தானும், அயல் நின்ற வயவர் நெஞ்சம்
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும், வீரன் தம்பி
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடுங் குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம், 'என்னே! இவன் ஒரு மனிசன்' என்னா. 143

இலக்குவன்-இராவணன் போர்

கட்டு அமை தேரின்மேலும், களி நெடுங் களிற்றின்மேலும்,
விட்டு எழு புரவிமேலும், வெள் எயிற்று அரக்கர் மேலும்,
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமாபோல்
பட்டன பகழி; எங்கும் பரந்தது, குருதிப் பவ்வம். 144

நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி, மொய்ம்பர்
அகங்களைக் கழன்று, தேரின் அச்சினை உருவி, அப்பால்
உகங்களின் கடை சென்றாலும், ஓய்வு இல ஓடலுற்ற. 145

நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,-
ஆக்கிய அரக்கர் தானை, ஐ-இரு கோடி, கையொத்து
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய-உலகம் செய்த
பாக்கியம் அனைய வீரன் தம்பியைச் சுற்றும் பற்றி. 146

'உறு பகை மனிதன், இன்று, எம் இறைவனை உறுகிற்பானேல்,
வெறுவிது, நம்தம் வீரம்' என்று ஒரு மேன்மை தோன்ற,
எறி படை அரக்கர் ஏற்றார்-'ஏற்ற கைம் மாற்றான்' என்னா,
வறியவர், ஒருவன், வண்மை பூண்டவன்மேல் சென்றென்ன. 147

அறுத்தனன், அரக்கர் எய்த எறிந்தன; அறுத்து, அறாத
பொறுத்தனன்; பகழி மாரி பொழிந்தனன்; உயிரின் போகம்
வெறுத்தனன், நமனும்; வேலை உதிரத்தின் வெள்ளம் மீள
மறித்தன; மறிந்த எங்கும், பிணங்கள் மா மலைகள் மான. 148

தலை எலாம் அற்ற; முற்றும் தாள் எலாம் அற்ற; தோளாம்
மலை எலாம் அற்ற; பொன்-தார் மார்பு எலாம் அற்ற; சூலத்து
இலை எலாம் அற்ற; வீரர் எயிறு எலாம் அற்ற; கொற்றச்
சிலை எலாம் அற்ற; கற்ற செரு எலாம் அற்ற, சிந்தி. 149

தேர் எலாம் துமிந்த; மாவின் திறம் எலாம் துமிந்த; செங் கண்
கார் எலாம் துமிந்த; வீரர் கழல் எலாம் துமிந்த; கண்டத்
தார் எலாம் துமிந்த; நின்ற தனு எலாம் துமிந்த; தம்தம்
போர் எலாம் துமிந்த; கொண்ட புகழ் எலாம் துமிந்து போய. 150

அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ, ஆள்மேல் வீழ்ந்த
புரவிமேல் பூட்கை வீழ்ந்த; பூட்கைமேல் பொலன் தேர் வீழ்ந்த,
நிரவிய தேரின் மேன்மேல் நெடுந் தலை கிடந்த; நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது, வீழ. 151

கடுப்பின்கண், அமரரேயும், 'கார்முகத்து அம்பு கையால்
தொடுக்கின்றான், துரக்கின்றான்' என்று உணர்ந்திலர்; துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார்; காண்பது, எய்த கோல் நொய்தின் எய்திப்
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே; பல் கால். 152

கொற்ற வாள், கொலை வேல், சூலம், கொடுஞ் சிலை முதல ஆய
வெற்றி வெம் படைகள் யாவும் வெந் தொழில் அரக்கர் மேற்கொண்டு,
உற்றன, கூற்றும் அஞ்ச ஒளிர்வன, ஒன்று நூறு ஆய்
அற்றன அன்றி, ஒன்றும் அறாதன இல்லை அன்றே. 153

குன்று அன யானை, மானக் குரகதம், கொடித்தேர், கோப
வன் திறல் ஆளி, சீயம் மற்றைய பிறவும், முற்றும்
சென்றன எல்லை இல்லை; திரிந்தில; சிறிது போதும்
நின்றன இல்லை; எல்லாம் கிடந்தன, நெளிந்து, பார்மேல். 154

சாய்ந்தது நிருதர் தானை; தமர் தலை இடறித் தள்ளுற்று
ஓய்ந்தது; ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக, அன்றே
வேய்ந்தது வாகை, வீரற்கு இளையவன் வரி வில்; வெம்பிக்
காய்ந்தது, அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந் தீ. 155

காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி, கண்ணுற்று
ஏற்றனன், இலங்கை வேந்தன்; எரி விழித்து, இராமன் தம்பி,
கூற்று மால் கொண்டது என்னக் கொல்கின்றான், குறுகச் சென்றான்;
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சிறிதும் பாதம். 156

'காக்கின்ற என் நெடுங் காவலின் வலி நீக்கிய கள்வா!
போக்கு இன்று உனக்கு அரிதுஆல்' எனப் புகன்றான்; புகை உயிர்ப்பான்,
கோக்கின்றன, தொடுக்கின்றன, கொலை அம்புகள், தலையோடு
ஈர்க்கின்றன, கனல் ஒப்பன, எய்தான்; இகல் செய்தான். 157

'எய்தான் சரம் எய்தாவகை இற்றீக' என, இடையே,
வைதாலென ஐதாயின வடி வாளியின் அறுத்தான்;
'ஐது ஆதலின் அறுத்தாய்; இனி, அறுப்பாய்!' என, அழி கார்
பெய்தாலெனச் சர மாரிகள் சொரிந்தான், துயில் பிரிந்தான். 158

ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா,
தூங்குஞ் சர நெடும் புட்டிலின், சுடர் வேலவற்கு இளையான்,
வாங்குஞ் சரம் வாங்காவகை அறுத்தான், அறம் மறுத்தான். 159

அயர்வு நீங்கிய அனுமனின் வீரவுரை

அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான், அழல் விழியா,
'பொய்ப் போர் சில புரியேல், இனி' என வந்து, இடை புகுந்தான்,
கைப் போதகம் என, முந்து, அவன் கடுந் தேர் எதிர் நடந்தான்,
'இப் போர் ஒழி; பின் போர் உள; இவை கேள்' என இசைத்தான்: 160

'வென்றாய் உலகு ஒரு மூன்றையும், மெலியா நெடு வலியால்;
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை; திசை திரித்தாய்;
என்றாலும், இன்று அழிவு உன்வயின் எய்தும்' என இசையா,
நின்றான் அவன் எதிரே, உலகு அளந்தான் என நிமிர்ந்தான். 161

எடுத்தான் வலத் தடக் கையினை; இது போய், உலகு எல்லாம்
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான்,
மடுத்து ஆங்கு உற வளர்ந்தாலென வளர்க்கின்றவன் உருவம்
கடுத்தான் என, கொடியாற்கு எதிர், 'காண்பாய்' எனக் காட்டா. 162

'வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு
எல்லாம் இடை பயின்றாய்; புயம் நால்-ஐந்தினொடு இயைந்தாய்;
வல்லாய்; செரு வலியாய்; திறல் மறவோய்! இதன் எதிரே
நில்லாய்' என நிகழ்த்தா, நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான். 163

'நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய்; இஃது ஒன்றோ?
வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு உடனே உடை வலியும்,
தாளாண்மையும், நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும், இனி நின்
தோளாண்மையும், இசையோடு உடன் துடைப்பேன், ஒரு புடைப்பால்; 164

'பரக்கப் பல உரைத்து என்? படர் கயிலைப் பெரு வரைக்கும்,
அரக்குற்று எரி பொறிக் கண் திசைக் கரிக்கும், சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர் தோள் பல உடையாய்! உரன் உடையாய்!
குரக்குத் தனிக் கரத்தின் புடைப் பொறை ஆற்றுவை கொல்லாம்? 165

'என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும், இறவா-
நின்றாய் எனின், நீ பின் எனை, நின் கைத் தல நிரையால்,-
குன்றே புரை தோளாய்!-மிடல்கொடு குத்துதி; குத்தப்
பொன்றேன் எனின், நின்னோடு எதிர் பொருகின்றிலென்' என்றான். 166

இராவணன் விடை மொழிதல்

காரின் கரியவன், மாருதி கழற, கடிது உகவா,
'வீரற்கு உரியது சொற்றனை;-விறலோய்!-ஒரு தனியேன்
நேர் நிற்பவர் உளரோ, பிறர் நீ அல்லவர்? இனி நின்
பேருக்கு உலகு அளவே; இனி உளவோ பிற?' என்றான். 167

'ஒன்று ஆயுதம் உடையாய் அலை; ஒரு நீ எனது உறவும்
கொன்றாய்; உயர் தேர்மேல் நிமிர் கொடு வெஞ் சிலை கோலி,
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து, நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ? உரை, நெடியோய்! 168

'முத் தேவர்கள் முதலாயினர்; முழு மூன்று உலகிடையே
எத் தேவர்கள், எத் தானவர், எதிர்வார் இகல், என் நேர்,
பித்து ஏறினர் அல்லால்? இடை பேராது, எதிர், "மார்பில்
குத்தே" என நின்றாய்; இது கூறும் தரம் அன்றால். 169

'பொரு கைத்தலம் இருபத்துள; புகழும் பெரிது உளதால்;
வரு கைத்தல மத வெங் கரி வலி கெட்டென வருவாய்!
இரு கைத்தலம் உடையாய்; எதிர் இவை சொற்றனை; இனிமேல்,
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என்? அமர் தக்கதும் அன்றால். 170

'திசை அத்தனையையும் வென்றது சிதைய, புகழ் தெறும் அவ்
வசை மற்று இனி உளதே? எனது உயிர்போல் வரும் மகனை
அசையத் தரை அரைவித்தனை; அழி செம் புனல் அதுவோ
பசையற்றிலது; ஒரு நீ, எனது எதிர் நின்று, இவை பகர்வாய். 171

'பூணித்து இவை உரைசெய்தனை; அதனால், உரை பொதுவே;
பாணித்தது; பிறிது என் சில பகர்கின்றது? பழியால்
நாணித் தலை இடுகின்றிலென்; நனி வந்து, உலகு எவையும்
காண, கடிது எதிர் குத்துதி' என்றான், வினை கடியான். 172

அனுமன் இராவணனைக் குத்துதலும் அதன் விளைவும்

'வீரத் திறம் இது நன்று!' என வியவா, மிக விளியா,
தேரின் கடிது இவரா, முழு விழியின், பொறி சிதறா,
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக, அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன், வயிரக் கரம் அதனால். 173

அயிர் உக்கன, நெடு மால் வரை; அனல் உக்கன, விழிகள்;
தயிர் உக்கன, முழு மூளைகள்; தலை உக்கன; தரியா
உயிர் உக்கன, நிருதக் குலம்; உயர் வானரம் எவையும்,
மயிர் உக்கன, எயிறு உக்கன; மழை உக்கன, வானம். 174

வில் சிந்தின நெடு நாண்; நிமிர் கரை சிந்தின, விரி நீர்;
கல் சிந்தின, குல மால் வரை; கதிர் சிந்தின, சுடரும்;
பல் சிந்தின, மத யானைகள்; படை சிந்தினர், எவரும்;
எல் சிந்திய எரி சிந்தின, இகலோன் மணி அகலம். 175

கைக் குத்து அது படலும், கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தடமார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
புக்கு இற்றன, போகாதன, புறம் உக்கன, புகழின். 176

அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன, திசை போய்
விள்ளா நெடு முழு மீன் என; விழி வெம் பொறி எழ நின்று,
உள் ஆடிய நெடுங் கால் பொர ஒடுங்கா, உலகு உலைய,
தள்ளாடிய வட மேருவின் சலித்தான், அறம் வலித்தான். 177

ஆர்த்தார், விசும்பு உறைவோர்; நெடிது அனுமான்மிசை அதிகம்
தூர்த்தார், நறு முழு மென் மலர்; இசை ஆசிகள் சொன்னார்;
வேர்த்தார் நிருதர்கள்; வானரர் வியந்தார், 'இவன் விசயம்
தீர்த்தான்' என உவந்து ஆடினர், முழு மெய்ம்மயிர் சிலிர்த்தார். 178

இராவணன்-அனுமன் உரையாடல்

கற்று, அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர், கதியால்
மற்று அங்கு ஒரு வடிவு உற்று, அது மாறாடுறு காலை,
பற்று அங்கு அருமையின், அன்னது பயில்கின்றது ஒர் செயலால்,
உற்று அங்கு அது புறம் போய், உடல் புகுந்தால் என உணர்ந்தான். 179

உணரா, நெடிது உயிரா, உரை உதவா, எரி உமிழா,
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா, 'வலி செய்தாய்!
அணையாய்; இனி, எனது ஊழ்' என அடரா, எதிர் படரா,
பணை ஆர் புயம் உடையானிடை, சில இம் மொழி பகர்வான்: 180

'வலி என்பதும் உளதே? அது நின் பாலது; மறவோய்!
அலி என்பவர், புறம் நின்றவர்; உலகு ஏழினும் அடைத்தாய்;
'சலி' என்று எதிர் மலரோன் உரைதந்தால், இறை சலியேன்;
மெலிவு என்பதும் உணர்ந்தேன்; எனை வென்றாய், இனி, விறலோய்! 181

'ஒன்று உண்டு இனி உரை நேர்குவது; உன் மார்பின், என் ஒரு கை,
குன்றின்மிசை கடை நாள் விழும் உரும் ஏறு எனக் குத்த,
நின்று, உன் நிலை தருவாய் எனின், நின் நேர் பிறர் உளரோ?
இன்றும் உளை; என்றும் உளை; இலை, ஓர் பகை' என்றான். 182

இராவணனைப் புகழ்ந்து அனுமன் தன் மார்பு காட்டுதல்

என்றான் எதிர் சென்றான், இகல் அடு மாருதி; 'எனை நீ
வென்றாய் அலையோ? உன் உயிர் வீடாது, உரை செய்தாய்;
நன்றாக நின் நிலை நன்று' என நல்கா, எதிர் நடவா,
குன்று ஆகிய திரள் தோளவன், 'கடன் கொள்க' எனக் கொடுத்தான். 183

இராவணன் குத்த அனுமன் சலித்தல்

உறுக்கி, தனி எதிர் நின்றவன் உரத்தில், தனது ஒளிர் பல்
இறுக்கி, பல நெடு வாய் மடித்து, எரி கண்தொறும் இழிய
முறுக்கிப் பொதி நிமிர் பல் விரல் நெரிய, திசை முரியக்
குறுக்கிக் கரம், நெடுந் தோள் புறம் நிமிரக் கொடு குத்த, 184

பள்ளக் கடல் கொள்ளப் படர் படி பேரினும் பதையா
வள்ளல், பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்,
கள்ளக் கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால்
தள்ள, தளர் வெள்ளிப் பெருங் கிரி ஆம் எனச் சலித்தான். 185

சலித்த காலையின், இமையவர் உலகு எலாம்சலித்த;
சலித்ததால் அறம்; சலித்தது, மெய்ம் மொழி; தகவும்
சலித்தது; அன்றியும், புகழொடு சுருதியும் சலித்த;
சலித்த நீதியும்; சலித்தன கருணையும் தவமும். 186

வானரத் தலைவர் இராவணனுடன் மோதல்

அனைய காலையின், அரிக் குலத் தலைவர், அவ் வழியோர்
எனையர் அன்னவர் யாவரும், ஒரு குவடு ஏந்தி,
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க,
'வினை இது' என்று அறிந்து, இராவணன்மேல் செல விட்டார். 187

ஒத்த கையினர், ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய,
பத்து நூறு கோடிக்கு மேல் பனி படு சிகரம்,
எத்த, மேல் செல எறிந்தனர்; பிறிந்தனர், இமையோர். 188

தருக்கி வீசிட, விசும்பு இடம் இன்மையின், தம்மின்
நெருக்குகின்றன, நின்றன, சென்றில, நிறைந்த;
அருக்கனும் மறைந்தான்; இருள் விழுங்கியது, அண்டம்;
'சுருக்கம் உற்றனர், அரக்கர்' என்று, இமையவர் சூழ்ந்தார். 189

ஒன்றின் ஒன்று பட்டு உடைவன, இடித்து உரும் அதிரச்
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட, தெய்வ
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட, மேன்மேல்
கன்றி ஓடிட, கல்-மழை நிகர்த்தன-கற்கள். 190

இரிந்து நீங்கியது இராக்கதப் பெரும் படை; எங்கும்
விரிந்து சிந்தின, வானத்து மீனொடு விமானம்;
சொரிந்த வெம் பொறி பட, கடல் சுவறின; தோற்றம்
கரிந்த கண்டகர் கண்-மணி; என் பல கழறி? 191

இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த,
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்;
ஒறுத்து, வானவர் புகழுண்ட பார வில், உளைய
அறுத்து நீக்கினன், ஆயிர கோடி மேல் அம்பால். 192

காம்பு எலாம் கடுந் துகள் பட, களிறு எலாம் துணிய,
பாம்பு எலாம் பட, யாளியும் உழுவையும் பாற,
கூம்பல் மா மரம் எரிந்து உக, குறுந் துகள் நுறுங்க,
சாம்பர் ஆயின, தட வரை-சுடு கணை தடிய. 193

'உற்றவாறு!' என்றும், 'ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவாறு!' என்றும், 'இடிப்புண்டு பொடிப் பொடி ஆகி
அற்றவாறு!' என்றும், அரக்கனை, 'அடு சிலை கொடியோன்
கற்றவாறு!' என்றும்-வானவர் கைத்தலம் குலைந்தார். 194

'அடல் துடைத்தும்' என்று அரிக் குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன, தசமுகன் சரம்; அவை திசை சூழ்
கடல் துடைத்தன; களத்தின் நின்று உயர்தரும் பூழி
உடல் துடைத்தன; உதிரமும் துடைத்தது, ஒண் புடவி. 195

வானரர் நிலைகுலைதல்

'கொல்வென், இக் கணமே மற்று இவ் வானரக் குழுவை;
வெல்வென், மானிடர் இருவரை' எனச் சினம் வீங்க,
வல் வன் வார் சிலை பத்து உடன் இடக் கையின் வாங்கி,
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான். 196

அய்-இரண்டு கார்முகத்தினும், ஆயிரம் பகழி,
கய்கள் ஈர்-ஐந்தினாலும், வெங் கடுப்பினில் தொடுத்துற்று
எய்ய, எஞ்சின, வானமும் இரு நில வரைப்பும்;
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த. 197

அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர்க் களம்; உதிரம்
சிந்தி, வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலைமேல். 198

நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன், அனிலன்;
காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன், சாம்பன். 199

வானரர் நிலைகண்டு இலக்குவன் வெகுண்டு போர் புரிதல்

மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,
கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;
சுற்றும் வானரப் பெருங் கடல் தொலைந்தது; தொலையாது
உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான். 200

நூறு கோடிய, நூறு நூறாயிர கோடி,
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி,
ஏறு சேவகன் தம்பி, அவ் இராவணன் எடுத்த
ஆறு நாலு வெஞ் சிலையையும் கணைகளால் அறுத்தான். 201

ஆர்த்து, வானவர் ஆவலம் கொட்டினர்; அரக்கர்
வேர்த்து, நெஞ்சமும் வெதும்பினார்; வினை அறு முனிவர்
தூர்த்து, நாள்மலர் சொரிந்தனர்; இராவணன், தோளைப்
பார்த்து உவந்தனன்; குனித்தது, வானரம் படியில். 202

இலக்குவனைப் புகழ்ந்து இராவணன் வேல் எறிதல்

'நன்று, போர் வலி; நன்று போர் ஆள் வலி; வீரம்
நன்று; நோக்கமும் நன்று; கைக் கடுமையும் நன்று;
நன்று, கல்வியும்; நன்று, நின் திண்மையும் நலனும்'
என்று கைம் மறித்து, இராவணன், 'ஒருவன் நீ' என்றான். 203

'கானின் அன்று இகல் கரன் படை படுத்த அக் கரியோன்-
தானும், இந்திரன் தன்னை ஓர் தனு வலம் தன்னால்
வானில் வென்ற என் மதலையும், வரி சிலை பிடித்த
யானும், அல்லவர் யார் உனக்கு எதிர்?' என்றும் இசைத்தான். 204

'வில்லினால் இவன் வெலப்படான்' எனச் சினம் வீங்க,
'கொல்லும் நாளும் இன்று இது' எனச் சிந்தையில் கொண்டான்,
பல்லினால் இதழ் அதுக்கினன்; பரு வலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான். 205

இலக்குவன் அயர, இராவணன் அவனை எடுக்க முயலுதல்

எறிந்த கால வேல், எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி,
செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது; சிந்தை
அறிந்த மைந்தனும், அமர் நெடுங் களத்திடை அயர்ந்தான். 206

இரியலுற்றது வானரப் பெரும் படை; இமையோர்
பரியலுற்றனர், உலைந்தனர்; முனிவரும் பதைத்தார்;
விரி திரைக் கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர், விரவார்;
திரிகை ஒத்தது மண்தலம்; கதிர் ஒளி தீர்ந்த. 207

'அஞ்சினான் அலன்; அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன்; துளங்கினான்' என்பது துணியா,
'எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென்' என்று எண்ணி,
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார்மிசை நடந்தான். 208

உள்ளி, வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி,
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி, பண்டு அரன் மா
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன,
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என், எடுத்தான். 209

இலக்குவனை இராவணன் எடுக்க இயலாதவனாய் நிற்றல்

அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம் பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின்; ஒருங்கே
தொடுத்த எண் வகை மூர்த்தியைத் துளக்கி, வெண் பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன்-இராமனுக்கு இளையான். 210

தலைகள் பத்தொடும் தழுவிய தசமுகத் தலைவன்
நிலை கொள் மாக் கடல் ஒத்தனன்; கரம் புடை நிமிரும்
அலைகள் ஒத்தன; அதில் எழும் இரவியை ஒத்தான்,
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான். 211

இலக்குவனை அனுமன் எடுத்துச் செல்லுதல்

எடுக்கல் உற்று, அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின், இராவணன் வெய்துயிர்ப்பு உற்றான்;
இடுக்கில் நின்ற அம் மாருதி புகுந்து எடுத்து ஏந்தி,
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து, அயல் சார்ந்தான். 212

தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்,
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித் துணை அதனால்,
அகவு காதலால், ஆண் தகை ஆயினும், அனுமன்
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான். 213

மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற;
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
பொய் இலாதவன் நின்ற இடத்து, அனுமனும் போனான். 214

இராமன் போர்க்கு புகல்

போன காலையில், புக்கனன் புங்கவன், போர் வேட்டு
யானைமேல் செலும் கோள் அரிஏறு இவன் என்ன;
வானுளோர் கணம் ஆர்த்தனர்; தூர்த்தனர் மலர், மேல்;
தூ நவின்ற வேல் அரக்கனும், தேரினைத் துரந்தான். 215

இராமன் அனுமன் தோள் மேல் ஏறிச் செல்லுதல்

தேரில் போர் அரக்கன் செல, சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன், பரிந்தான்,
'சீரில் செல்கின்றது இல்லை இச் செரு' எனும் திறத்தால்,
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான். 216

'நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்,
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல்' என்றான். 217

'நன்று, நன்று!' எனா, நாயகன் ஏறினன், நாமக்
குன்றின்மேல் இவர் கோள் அரிஏறு என; கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான். 218

மாணியாய் உலகு அளந்த நாள், அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும், தலை நடுக்குற்றான். 219

ஓதம் ஒத்தனன் மாருதி; அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ, துயில்கிலன் நம்பன்;
வேதம் ஒத்தனன் மாருதி; வேதத்தின் சிரத்தின்
போதம் ஒத்தனன் இராமன்; வேறு இதின் இலை பொருவே. 220

தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின், எவ் வண்ணம் விளம்பும் தன்மை?
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுறப் புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான்; வீரன், மேலைத் தன் பதமே ஒத்தான். 221

மேருவின் சிகரம் போன்றது என்னினும், வெளிறு உண்டாமால்-
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட
ஆரியற்கு, அனேக மார்க்கத்தால், இடம் வலமது ஆகச்
சாரிகை திரியல் ஆன மாருதி தாமப் பொன்-தோள். 222

ஆசி சொல்லினர் அருந்தவர்; அறம் எனும் தெய்வம்
காசு இல் நல் நெடுங் கரம் எடுத்து ஆடிட, கயிலை
ஈசன், நான்முகன் என்று இவர் முதலிய இமையோர்
பூசல் காணிய வந்தனர், அந்தரம் புகுந்தார். 223

இராம இராவணப் போர்

அண்ணல், அஞ்சன வண்ணனும், அமர் குறித்து அமைந்தான்;
எண்ண அரும் பெருந் தனி வலிச் சிலையை நாண் எறிந்தான்;
மண்ணும் வானமும், மற்றைய பிறவும், தன் வாய்ப் பெய்து,
உண்ணும் காலத்து, அவ் உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை. 224

ஆவி சென்றிலர்; நின்றிலர், அரக்கரோடு இயக்கர்;
நா உலர்ந்தனர்; கலங்கினர், விலங்கினர்; நடுங்கி;
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன; குலையாத்
தேவதேவனும், விரிஞ்சனும், சிரதலம் குலைந்தார். 225

ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ,
ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப,
வீழின் மீச்செலின், மண்ணையும் விண்ணையும் தொளைப்ப,
ஏழு வெஞ் சரம், உடன் தொடுத்து, இராவணன் எய்தான். 226

எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு
செய்து, வெஞ் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி,
வெய்து கால வெங் கனல்களும் வெள்குற, பொறிகள்
பெய்து போம் வகை, இராகவன் சிலை நின்று பெயர்ந்தான். 227

வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி,
ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும், ஐ-இரண்டு அம்பு
தோளில் நாண் உற வாங்கினன், துரந்தனன்; சுருதி
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான். 228

அறுத்து, மற்று அவன் அயல் நின்ற அளப்ப அரும் அரக்கர்
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி,
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி,
ஒறுத்து, மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான். 229

மீனுடைக் கருங் கடல் புரை இராக்கதர் விட்ட
ஊனுடைப் படை, இராவணன் அம்பொடும் ஓடி,
வானரக் கடல் படா வகை, வாளியால் மாற்றி,
தானுடைச் சரத்தால் அவர் தலைமலை தடிந்தான். 230

இம்பரான் எனில், விசும்பினன் ஆகும், ஓர் இமைப்பில்;
தும்பை சூடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்;
வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்;-மேல் நின்றான்
அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும், அனுமன். 231

போர்க்களக் காட்சிகள்

ஆடுகின்றன, கவந்தமும்; அவற்றொடும் ஆடிப்
பாடுகின்றன, அலகையும்; நீங்கிய பனைக் கைக்
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு
ஓடுகின்றன, உலப்பு இல, உதிர ஆறு உவரி. 232

அற்ற ஆழிய, அறுப்புண்ட அச்சின, அம்போடு
இற்ற கொய் உளைப் புரவிய, தேர்க் குலம் எல்லாம்;
ஒற்றை வாளியோடு உருண்டன, கருங் களிற்று ஓங்கல்;
சுற்றும் வாசியும் துமிந்தன, அமர்க்களம் தொடர்ந்த. 233

தேர் இழந்து, வெஞ் சிலைகளும் இழந்து, செந் தறுகண்
கார் இழந்து, வெங் கலின மாக் கால்களும் இழந்து,
சூர் இழந்து, வன் கவசமும் இழந்து, துப்பு இழந்து,
தார் இழந்து, பின் இழந்தனர் நிருதர், தம் தலைகள். 234

அரவ நுண் இடை அரக்கியர்; கணவர்தம் அற்ற,
சிரமும் அன்னவை ஆதலின், வேற்றுமை தெரியா,
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி,
கரவு இல் இன் உயிர் துறந்தனர், கவவுறத் தழுவி. 235

ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்; அழற் கொழுந்து ஒழுகும்
பார்ப்பு அடங்கின, கண் எலாம்; பல வகைப் படைகள்
தூர்ப்பு அடங்கின, கை எலாம்; தூளியின் படலைப்
போர்ப்பு அடங்கின உலகு எலாம்; முரசு எலாம் போன. 236

இராவணன் தனித்து நின்று போரிடல்

ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந் தலை உருட்டி,
சென்று தீர்வு இல, எனைப் பல கோடியும் சிந்தி,
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க,
கொன்று வீழ்த்தினது-இராகவன் சரம் எனும் கூற்றம். 237

தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி,
பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும் பிறங்கி,
காரும் வானமும் தொடுவன பிணக் குவை கண்டான்,-
மூரி வெஞ் சிலை இராவணன்-அரா என முனிந்தான். 238

முரண் தொகுஞ் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி,
புரண்டு தோள் உறப் பொலன் கொள் நாண் வலம்படப் போக்கி,
திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட, எய்தான். 239

முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன்,
மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து, உற வாங்கி,
இறுதி எய்தும் நாள், கால் பொர, மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என, இராவணன் சிலையினை அறுத்தான். 240

மாற்று வெஞ் சிலை வாங்கினன், வடிம்புடை நெடு நாண்
ஏற்றுறா முனம், இடை அறக் கணைகளால் எய்தான்;
காற்றினும் கடிது ஆவன, கதிர் மணி நெடுந் தேர்
ஆற்று, கொய் உளைப் புரவியின் சிரங்களும் அறுத்தான். 241

மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறாமுன்னம்,
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான்;
கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபடக் குறைந்தான்;
கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான். 242

மாற்றுத் தேர் அவண் வந்தன வந்தன வாரா,
வீற்று வீற்று உக, வெயில் உமிழ் கடுங் கணை விட்டான்;
சேற்றுச் செம் புனல் படு களப் பரப்பிடைச் செங் கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட, இராவணன் கொதித்தான். 243

மின்னிம் பல் மணி மவுலிமேல் ஒரு கணை விட்டான்;
அன்ன காய் கதிர் இரவிமேல் பாய்ந்த போர் அனுமன்
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று, அவன் தலையில்
பொன்னின் மா மணி மகுடத்தைப் புணரியில் வீழ்த்த, 244

செறிந்த பல் மணிப் பெருவனம் திசை பரந்து எரிய,
பொறிந்தவாய், வயக் கடுஞ் சுடர்க் கணை படும் பொழுதின்,
எறிந்த கால் பொர, மேருவின் கொடு முடி இடிந்து,
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது, அவ் அரக்கன் தன் மகுடம். 245

அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு
கொண்டு போகப் போய்க் குரை கடல் குளித்த அக் கொள்கை,
மண்டலம் தொடர் வயங்கு வெங் கதிரவன், தன்னை
உண்ட கோளொடும், ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும். 246

இராவணன் மகுடம் இழந்து நாணி நிற்றல்

சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான்;
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த
அல்லும் ஒத்தனன்; பகலும் ஒத்தனன்; அமர் பொருமேல்,
வெல்லும் அத்தனை அல்லது, தோற்றிலா விறலோன். 247

மாற்ற அருந் தட மணி முடி இழந்த வாள் அரக்கன்,-
ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்,
ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப,
போற்ற அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும்-போன்றான். 248

'அறம் கடந்தவர் செயல் இது' என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்-
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன். 249

இராமன் அறிவுரை கூறி, 'இன்று போய், நாளை வா' எனல்

நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்
கொன்றல் உன்னிலன், 'வெறுங் கை நின்றான்' எனக் கொள்ளா;
'இன்று அவிந்தது போலும், உன் தீமை' என்று, இசையோடு
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான்: 250

'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி. 251

'உடைப் பெருங் குலத்தினரொடும், உறவொடும், உதவும்
படைக்கலங்களும், மற்றும் நீ தேடிய பலவும்,
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின்,
கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறு தொழில் கீழோய்! 252

'சிறையில் வைத்தவள் தன்னை விட்டு, உலகினில் தேவர்
முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து இருத்தியேல், இன்னும்,
தறையில் வைக்கிலென், நின் தலை வாளியின் தடிந்து. 253

'அல்லையாம் எனின், ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின், உனக்கு உள வலி எலாம் கொண்டு,
"நில், ஐயா!" என நேர் நின்று பொன்றுதி எனினும்,
நல்லை ஆகுதி; "பிழைப்பு இனி உண்டு" என நயவேல். 254

'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன் -நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 255

மிகைப் பாடல்கள்

ஆதி நாயகன் அங்கு அது கூறு முன்;
பாத மீது பணிந்து, அருள் பற்றியே,
காது வெம் படைக் காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார். 3-1

அந்த வேலை, அரக்கர் அழன்று கண்,
சிந்து தீயில் திசை எரி சேர்த்தவன்
முந்து உரைத்த முறைமையின் முந்துற
வந்து எதிர்த்தனர், வாயில்கள் தோறுமே. 15-1

அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா,
கன்னி மா மதிலின் புறம் காத்து, உடன்
முன்னி வெஞ் சமர் மூண்டு எழுந்துற்றதே. 15-2

ஆனை பட்ட; அடு பரி பட்டன;
தானை பட்ட, தார் இரதம்; கணை
சோனைபட்டது; துன் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செங்களம். 50-1

ஆர்த்த போதில், அருந் திறல் சிங்கனும்,
சூர்த்த நோக்குடைச் சூரனும், துற்கனும்,
கூர்த்த வெங் கதிர்க் கோபனொடு ஆதியாய்,
வேர்த்து, அரக்கர் வியன் படை வீசினார். 55-1

போர் செய் காலை, இடும்பனும் பொங்கி, அக்
கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
மேரு மீது இடி வீழ்ந்தெனத் தாக்கலும்;
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான். 65-1

வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன்; பின்னரும்
வரி நெடுஞ் சிலை வேறு ஒன்று வாங்கியே,
சொரியும் மா மழைபோல், சரம் தூவினான். 72-1

வால் அறுந்து, வயிறு துணிந்து, இரு
கால் அறுந்து, கழுத்து அறுந்து, அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன-வெஞ் சமர்
ஆலும் வானரச் சேனை அனேகமே. 72-2

நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடுஞ் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்,
சால நொந்தனன்; நொந்து, தருக்கு அறா,
கால வெங் கனல்போல் கனன்றான் அரோ. 72-3

கனலும் வெங் கண் அரக்கன், கடுஞ் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற,
நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடுந்
தனி மராமரம் தான் கொண்டு, தாக்கினான். 72-4

நிருதர் தானை உடைந்தது; நேர்கிலாத்
தரும கோபன், சதமகன், சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின், வெற்றி திகழ, வந்து எய்தினார். 79-1

ஏவி, மற்று அயல் நின்ற அரக்கரை,
'தா இல் என் ஒரு தேரினைத் தம்' எனக்
கூவ, மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்,
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென. 93-1

ஆய்வு அருஞ் சத கோடி அடல் பரி
மாய்வு அருந் திரைபோல் வரப் பூண்டது;
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது. 93-2

ஏறினான் இடத் தோள் துடித்தே; அறக்
கூறினான், 'குரங்கொடு மனிதரை
நீறது ஆக்குவென்' என்று, நெருப்பு எழச்
சீறினான், சிவன் போல அத் தேரின் மேல். 94-1

'அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும்' என்று உயர் விண்ணவர்
கொண்ட ஆகுலத்தால், மனம் கூசியே,
புண்டரீகன் பதியிடைப் போயினார். 99-1

வெள்ளம் ஆங்கு அளப்பில; வெள்ளம், வாம் பரி;
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்?
உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே. 105-1

நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர், அயில் முதல் படைகள் போக்கியே;
மரமொடு மலைகளைப் பிடுங்கி, வானரர்
செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார். 119-1

அண்ட கோளகை வெடித்து, அவனி கீண்டுற,
எண் திசாமுகங்களும் இடிய, ஈசனைக்
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதுஎனில், விளம்ப வேண்டுமோ? 123-1

வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்,
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்,
உச்சிகள் பொதிர் எறிந்து, உரம் மடங்கினார். 123-2

இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட, அரக்கர் கோமான்
கைப் படு சிலையை வாங்கி, கால மா மழையும் எஞ்ச,
முப் புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன, மூளும்
அப்பு மா மாரி சிந்தி, அண்டமும் பிளக்க ஆர்த்தான். 127-1

ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து, அரிச் சேனை எல்லாம்
தீர்த்து, ஒரு கணத்தில் போக்க, செங் கதிர்ச் சிறுவன் தானும்
பார்த்து, உளம் அழன்று பொங்கி, பரு வலி அரக்கனோடும்
போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்திப் புக்கான். 127-2

அலக்கணுற்று அனுமன் சோர, அங்கதன் முதலாம் வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு, அரக்கன், வாளி
சிலைக்கிடை தொடுத்து, அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு, அன்னோர்
கலக்கமுற்று இரிய, ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான். 138-1

நகைத்து, 'இது புரிந்தான்கொல்லோ?' என்பதன் முன்பு, நாண்வாய்த்
துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம், சோனை அம் புயலும் எஞ்ச,
மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும்
பகைப் புலத்து அரக்கன் சேனைப் பரவை மேல் பொழிவதானான். 143-1

எரி முகப் பகழி மாரி இலக்குவன் சிலையின் கோலிச்
சொரிதர, களிறு, பொன் தேர், துரங்கமோடு இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படைத் தலைவர், வல்லே
பொரு களமீதில் சிந்திப் பொன்றினர் என்ப மன்னோ. 153-1

எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி,
'மதியிலி! மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம்!
இது பொழுது என் கை வாளிக்கு இரை' என நகைத்தான்; வீரன்
முதிர்தரு கோபம் மூள, மொழிந்து அமர் முடுக்கலுற்றான். 156-1

அரக்கன் மனம் கொதித்து, ஆண்தகை அமலன் தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன்; அது கண்டு,
அருக்கன் குல மருமான், அழி காலத்திடை எழு கார்
நெருக்கும்படி, சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான். 158-1

'மாயத்து உரு எடுத்து, என் எதிர் மதியாது, இது பெரிது என்றே
இத் தரை நின்றாய்; எனது அடல் வாரி சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன்;
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ. 171-1

கல் தங்கிய முழுமார்பிடைக் கவியின் கரம் அதனால்
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான்,
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான், ஒரு படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென உய்ந்தான். 179-1

கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடுங் கரம் ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர, மேல்
புதைத்து ஆங்குறும் இடிஏறு எனப் பொறி சிந்திய புவனம்;
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி விட்டான். 184-1

உருத்து, வெஞ் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப,
வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து, ஆங்கு
இரைத்த திண் பரித் தேர்நின்றும் இரு நிலத்து இழியச்
சரித்து, வானரம் மடிந்திட, சர மழை பொழிந்தான். 186-1

உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றிக்
கரத்தின் வெஞ் சிலை வளைக்குமுன், கடுஞ் சினத்து அரக்கன்
சிரித்து, வெம் பொறி கதுவிட, திசைமுகம் அடையப்
பொருத்தி, வெஞ் சரம் பொழிந்து, 'இவை விலக்கு' எனப் புகன்றான். 200-1

பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை ஏற்றுக்
கொண்ட தூயவன், கொடுந் தொழில் நிருதர்கள் குழுமி
மண்டு வாள் அமர்க் களத்தில், அம் மலர்க் கழல் சேறல்
கண்டு, கூசலன் நிற்கும் என்றால், அது கடனே? 216-1

அனைய கண்டு, இகல் அரக்கருக்கு, இறைவன், அப் பொழுதில்,
மனம் நெருப்பு எழக் கொதித்து, 'ஒரு மனிதன் என் வலியை
நினையகிற்றிலன்; நெடுஞ் சமர் என்னொடும் துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென்' என விழி சிவந்தான். 225-1

அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிர,
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற, கூற்றும்
நடுக்கம் உற்றிட, நல் அறம் ஏங்கிட, கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான். 225-2

எறிந்து அடல் சிலை வளைத்து, ஒரு கணத்திடை, எரியின்
நிறம் தகும் பல நெடுஞ் சுடர்ப் பகழிகள், நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
செறிந்திட, திசை வானகம் வெளி இன்றிச் செறித்தான். 225-3

ஐயன் நோக்கினன், 'நன்று!' என நகைத்து, அவன் சிலைவாய்
எய்த வெஞ் சரம் பொடிபட, யாவையும் முருக்கி,
வெய்தின் அங்கு அவன்மேற் செல, எழு கணை விடுத்தான்;
கைதவன், கணை ஏழு கொண்டு, அக் கணை கடிந்தான். 225-4

எய்து வெள்ளம் நூற்று-இரண்டு எனத் திரண்ட கால் வயவர்,
மொய் கொள் சேனை அம் தலைவர்கள், முரண் கரி, பரி, தேர்,
வெய்ய வீரர்கள், அளப்பிலர் கோடியர், விறல் சேர்
ஐயன் வெஞ் சரம் அறுத்திட, அனைவரும் அவிந்தார். 236-1

அறுத்த வில் இழந்து அழியுமுன், ஐ-இரு கரத்தும்
பொறுத்து வெஞ் சிலை, நாண் ஒலி புடைத்து, அடற் பகழி
நிறுத்தி வீசினன்-நெடுந் திசை விசும்பொடு நிமிரக்
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின். 240-1

நிரைக்கும் ஐ-இரு சிலையிடைச் சர மழை நிருதன்
துரக்க, மாருதி, உடல் உறு குருதிகள் சொரிந்த;
குரக்கு வான் படை குறைந்தன; கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார்; இருண்டது எவ் உலகும். 240-2

எறுழ் வலிப் புயத்து இராகவன் இள நகை எழும்ப,
முறுவலித்து, அவன் பகழிகள் யாவையும் முருக்கி,
பிறை முகச் சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து, ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான். 240-3

'வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது; இங்கு
இளைத்து நின்றனை; இன்று போய் நாளை வா,
விளைக்கும் வெஞ் சமர் செய் விருப்பு உள்ளதேல்'. 255-1

என்று இராமன் இயம்ப, இராவணன்
ஒன்றும் ஓதலன்; 'உள்ளத்தின், என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன், மானிடன்;
நன்று சொன்னது!' என நகைத்து ஏகினான். 255-2




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247