நிகும்பலை யாகப் படலம் - Nigumbalai Yagap Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.comயுத்த காண்டம்

27. நிகும்பலை யாகப் படலம்

இராமன் வீடணனைத் தழுவி, அவனைப் புகழ்ந்து கூறுதல்

வீரனும் ஐயம் தீர்ந்தான்; வீடணன் தன்னை மெய்யோடு
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, 'ஐய!
தீர்வது பொருளோ, துன்பம்? நீ உளை; தெய்வம் உண்டு;
மாருதி உளன்; நாம் செய்த தவம் உண்டு; வலியும் உண்டால். 1

இலக்குவனுடன் சென்று இந்திரசித்தின் யாகத்தைச் சிதைக்க இராமனிடம் வீடணன் அருள் வேண்டுதல்

என்றலும், இறைஞ்சி, 'யாகம் முடியுமேல், யாரும் வெல்லார்;
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென்' என்றான்;
'நன்று அது; புரிதிர்!' என்று, நாயகன் நவில்வதானான்: 2

இலக்குவனை இராமன் தழுவி, அம்பு விடுவது குறித்து உபதேசித்தல்

தம்பியைத் தழுவி, ஐயன், 'தாமரைத் தவிசின் மேலான்
வெம் படை தொடுக்கும் ஆயின், விலக்குமது அன்றி, வீர!
அம்பு நீ துரப்பாய் அல்லை; அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி' என்றான். 3

'முக்கணான் படையும், ஆழி முதலவன் படையும், முன் நின்று
ஒக்கவே விடுமே; விட்டால், அவற்றையும், அவற்றின் ஓயத்
தக்கவாறு இயற்றி, மற்று, உன் சிலை வலித் தருக்கினாலே,
புக்கவன் ஆவி கொண்டு, போதுதி - புகழின் மிக்கோய்! 4

'வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து, மாள,
கல்லுதி, தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு;
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து,
கொல்லுதி, அமரர்தங்கள் கூற்றினை-கூற்றம் ஒப்பாய்! 5

'பதைத்து அவன், வெம்மை ஓடி, பல் பெரும் பகழி மாரி
விதைப்பன விதையா நின்று விலக்கினை, மெலிவு மிக்கால்,
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக் கருதி ஓட்டி,
வதைத் தொழில் புரிதி-சாப நூல் நெறி மறப்பிலா தாய்! 6

'தொடுப்பதன்முன்னம், வாளி தொடுத்து, அவை துறைகள் தோறும்
தடுப்பன தடுத்தி; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து, தக்க
கடுப்பினும், அளவு இலாத கதியினும், கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி, விடுதியால்-விரகின் மிக்காய்!' 7

இலக்குவனுக்குத் திருமாலின் வில்லும், கவசமும், இராமன் கொடுத்தல்

என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி, ஏற்ற
முன்பனை நோக்கி, 'ஐய! மூவகை உலகும் தான் ஆய்,
தன் பெருந் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும்
வன் பெருஞ் சிலை ஈது ஆகும்; வாங்குதி; வலமும் கொள்வாய்! 8

'இச் சிலை இயற்கை மேல்நாள், தமிழ் முனி இயம்பிற்று எல்லாம்
அச்செனக் கேட்டாய் அன்றே? ஆயிரம் மௌலி அண்ணல்
மெய்ச் சிலை; விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டுப் பெற்ற
கைச் சிலை கோடி' என்று கொடுத்தனன், கவசத்தோடும். 9

ஆணி, இவ் உலகுக்கு, ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி,
தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன்; தழுவலோடும்,
சேண் உயர் விசும்பில் தேவர், 'தீர்ந்தது எம் சிறுமை' என்றார். 10

இராமன் விடை கொடுத்தருள, இலக்குவன் அவனை வணங்கி, நிகும்பலை நோக்கிச் செல்லுதல்

மங்கலம் தேவர் கூற, வானவ மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி, பலாண்டு இசை பரவ, - பாகத்
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் - போர்மேல் போவான். 11

'மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்,
வீர! நீ சேறி' என்று விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம், அகத்தினும் புறத்தும் ஆக,
சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன். 12

பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன், பொருமி, கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று, நெஞ்சு அழிவானை, தம்பி
வலம் கொண்டு, வயிர வல் வில் இடம் கொண்டு, வஞ்சன்மேலே,
சலம் கொண்டு, கடிது சென்றான், 'தலை கொண்டு தருவென்' என்றே. 13

இலக்குவனைப் பிரிந்து நிற்கும் இராமனின் நிலை

தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்லா,
ஊன் பிரிகின்றிலாத உயிர் என, மறைதலோடும்,
வான் பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். 14

நிகும்பலையை அடைந்த வானரர் அரக்கர் சேனையைக் காணுதல்

சேனாபதியே முதல் சேவகர் தாம்
ஆனார், நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்,
கான் ஆர் நெறியும் மலையும் கழியப்
போனார்கள், நிகும்பலை புக்கனரால். 15

உண்டாயது ஓர் ஆல், உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றதுபோல் குலவி,
விண்தானும் விழுங்க விரிந்தனைக்
கண்டார்-அவ் அரக்கர் கருங் கடலை. 16

நேமிப் பெயர் யூகம் நிரைத்து, நெடுஞ்
சேமத்தது நின்றது, தீவினையோன்
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக் கடல் நின்றது ஓர் பான்மையதை. 17

கார் ஆயின-வெங் கரி, தேர், கலி மா,
தார் ஆயிர கோடி தழீஇயது தான்
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயதுபோல்,
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை, 18

பொன் - தேர், பரிமா, கரிமா, பொரு தார்
எற்றே? படை வீரரை எண்ணிலமால்!
உற்று ஏவிய யூகம் உலோகமுடைச்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை, 19

வண்ணக் கரு மேனியின்மேல் மழை வாழ்
விண்ணைத் தொடு செம் மயிர் வீசுதலால்,
அண்ணல் கரியான் அனலம்பு அட, வெம்
பண்ணைக் கடல் போல்வது ஓர் பான்மையதை. 20

அரக்கர் சேனையைக் கண்டு, வானரர் விண் கிழிய ஆர்த்தல்

வழங்கா சிலை நாண் ஒலி, வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக் குலமும்
தழங்கா, கடல் வாழ்வனபோல்; தகை சால்
முழங்கா முகில் ஒத்தன, மும் முரசே. 21

வலியான இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடுங் கடல் தான் எனலாய்
ஒலியாது உறு சேனையை உற்று, ஒரு நாள்
மெலியாதவர் ஆர்த்தனர், விண் கிழிய. 22

அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல்

ஆர்த்தார் எதிர், ஆர்த்த, அரக்கர் குலம்;
போர்த் தார் முரசங்கள் புடைத்த; புகத்
தூர்த்தார் இவர், கற் படை; சூல் முகிலின்
நீர்த் தாரையின், அம்பு அவர் நீட்டினரால். 23

மின்னும் படை வீசலின், வெம் பகைமேல்
பன்னும் கவி சேனை படிந்துளதால் -
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய். 24

வில்லும், மழுவும், எழுவும், மிடலோர்,
பல்லும், தலையும், உடலும், படியில்
செல்லும் பொறி சிந்தின, சென்றனவால்-
கல்லும் மரமும் கரமும் கதுவ. 25

வாலும் தலையும், வயிறும் உடலும்,
காலும் கரமும், தரை கண்டனவால்-
கோலும், மழுவும், எழுவும், கொழுவும்,
வேலும், கணையும், வளையும், விசிற. 26

வேள்வியைச் சிதைக்க வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்

வென்றிச் சிலை வீரனை, வீடணன், 'நீ
நின்று இக் கடை தாழுதல் நீதியதோ?
சென்று, இக் கடி வேள்வி சிதைத்திலையேல்,
என்று, இக் கடல் வெல்குதும் யாம்?' எனலும், 27

இலக்குவன் அரக்கர் சேனையை அழித்தல்

தேவா சுரரும், திசை நான்முகனும்,
மூவா முதல் ஈசனும், மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும், முதலோர்
மேவாதவர் இல்லை, விசும்பு உறைவோர். 28

பல்லார் படை நின்றது; பல் அணியால்,
பல் ஆர் படை நின்றது; பல் பிறை வெண்
பல்லார் படை நின்றது; பல்லியம் உம்-
பல் ஆர் படை நின்றது-பல் படையே. 29

அக் காலை, இலக்குவன், அப் படையுள்
புக்கான், அயில் அம்பு பொழிந்தனனால்;
உக்கார் அவ் அரக்கரும் ஊர் ஒழிய,
புக்கார், நமனார் உறை தென் புலமே. 30

தேறா மத மால் கரி, தேர், பரிமா,
நூறாயிர கோடியின் நூழில்பட,
சேறு ஆர் குருதிக் கடலில், திடராய்க்
கூறு ஆய் உக, ஆவி குறைத்தனனால். 31

படுகளக் காட்சிகள்

வாமக் கரி தான் அழி வார் குழி, வன்
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின்
தாமத் தலை உக்க, தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்த்த; உலப்பு இலவால். 32

சிலையின் கணையூடு திறந்தன, திண்
கொலை வெங் களி மால் கரி செம் புனல் கொண்டு,
உலைவு இன்று கிடந்தன, ஒத்துளவால்,
மலையும் சுனையும், வயிறும் உடலும். 33

வில் தொத்திய வெங் கணை, எண்கின் வியன்
பல் தொத்தியபோல் படியப் பலவும்,
முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த - முடித் தலை பூழியன. 34

படு மாரி நெடுங் கணை பாய்தலினால்,
விடும் ஆறு உதிரப் புனல் வீழ்வன வன்
தடுமாறு நெடுங் கொடி, தாழ் கடல்வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால். 35

மின் ஆர் கணை தாள் அற வீச, விழுந்து,
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்,
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்,
செந் நாகம் விழுங்கிய திங்களினை. 36

கொடு நீள் கரி, கையொடு தாள் குறைய,
படு நீள் குருதிப் படர்கின்றனவால்,
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்,
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால். 37

கரி உண்ட களத்திடை உற்றன, கார்
நரி உண்டி உகப்பன நண்ணினவால்;
இரியுண்டவர் இன் இயம் இட்டிடலால்,
மரியுண்ட உடற் பொறை மானினவால். 38

வாயில் கனல் வெங் கடு வாளி இனம்
பாய, பருமக் குலம் வேவனவால்,
வேய் உற்ற நெடுங் கிரி மீ வெயில் ஆம்
தீ உற்றன ஒத்த - சினக் கரியே. 39

அலை வேலை அரக்கரை, எண்கின் உகிர்,
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்,
மலைமேல் உயர் புற்றினை, வள் உகிரால்,
நிலை பேர, மறிப்ப நிகர்த்தனவால். 40

மா வாளிகள் மா மழைபோல் வரலால்,
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்,
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம்
மா ஆளிகளோடு மறிந்தனரால். 41

அங்கம் கிழியத் துணி பட்டதனால்,
அங்கு அங்கு, இழிகுற்ற அமர்த் தலைவர்,
அம் கங்கு இழி செம்புனல் பம்ப, அலைந்து
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால். 42

வன் தானையை, வார் கணை மாரியினால்,
முன், தாதை ஓர் தேர்கொடு, மொய் பல தேர்ப்
பின்றா எதிர் தானவர் பேர் அணியைக்
கொன்றான் என, எய்து குறைத்தனனால். 43

இலக்குவன் போரினால் இந்திரசித்தின் யாகம் கெடுதல்

மலைகளும், மழைகளும், வான மீன்களும்,
அலைய வெங் கால் பொர, அழிந்த ஆம் என,
உலைய, வெங் கனல் பொதி ஓமம் உற்றவால்,
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ. 44

வாரணம் அனையவன் துணிப்ப, வான் படர்
தார் அணி முடிப் பெருந் தலைகள் தாக்கலால்,
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணிக் குடம் உடைந்து போயதால். 45

தாறு கொள் மதகரி சுமந்து, தாமரை
சீறிய முகத் தலை உருட்டி, செந் நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழுங் கனல் அவியச் சென்றவால். 46

தெரி கணை விசும்பிடைத் துணிப்ப, செம் மயிர்
வரி கழல் அரக்கர்தம் தடக் கை வாளொடும்
உரும் என வீழ்தலும், அனலுக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால். 47

அம் கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம் கடம் கிழிந்திலர், அழிந்த ஆடவர்,
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின்
அங்கு அடங்கினர், தொடர் பகழி அஞ்சினார். 48

கால் தலத்தொடு துணிந்து அழிய, காய் கதிர்க்
கோல் தலைத்தலை உற, மறுக்கம் கூடினார்,
வேல் தலத்து ஊன்றினர், துளங்கும் மெய்யினர்,
நாறு அலைக் குடலினர், பலரும் நண்ணினார். 49

பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார்,
தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற,-
அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்-
தம் குடர் முதுகிடைச் சொரியத் தள்ளுவார். 50

மூடிய நெய்யொடு நறவம் முற்றிய
சாடிகள், பொரியொடு தகர்ந்து தள்ளுற,
கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய்
ஆடின, அறு குறை அரக்கர் ஆக்கையே. 51

தன் சேனை நிலைகுலைதலை இந்திரசித்து காணுதல்

கால் என, கடு என, கலிங்கக் கம்மியர்
நூல் என, உடற் பொறை தொடர்ந்த நோய் என,
பால் உறு பிரை என, கலந்து, பல் முறை
வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான். 52

கண்டனன் - திசைதொறும் நோக்கி, கண் அகல்
மண் தலம், மறி கடல் அன்ன மாப் படை,
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும்
தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையை. 53

மிடலின் வெங் கட கரிப் பிணத்தின் விண் தொடும்
திடலும், வெம் புரவியும், தேரும், சிந்திய
உடலும், வன் தலைகளும், உதிரத்து ஓங்கு அலைக்
கடலும், அல்லாது, இடை ஒன்றும் கண்டிலன். 54

நூறு நூறாயிர கோடி நோன் கழல்
மாறு இல் போர் அரக்கரை, ஒருவன் வாட் கணை
கூறு கூறு ஆக்கிய குவையும், சோரியின்
ஆறுமே, அன்றி, ஓர் ஆக்கை கண்டிலன். 55

நஞ்சினும் வெய்யவர் நடுங்கி, நா உலர்ந்து,
அஞ்சினர், சிலர் சிலர் அடைகின்றார்; சிலர்
வெஞ் சின வீரர்கள், மீண்டிலாதவர்,
துஞ்சினர், துணை இலர் எனத் துளங்கினார். 56

வேள்விக் கனல் முதலியன சிதைந்தமை கண்டு, இந்திரசித்து மனம் வெதும்புதல்

ஓம வெங் கனல் அவிந்து, உழைக் கலப்பையும்
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற,
வாம மந்திரத் தொழில் மறந்து, மற்று அவன்,
தூம வெங் கனல் எனப் பொலிந்து தோன்றினான். 57

அக் கணத்து, அடு களத்து, அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர, உயிர் உளோர் எலாம்
தொக்கனர், அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற,
புக்கது, கவிப் பெருஞ் சேனைப் போர்க் கடல். 58

ஆயிரம் மலருடை ஆழி மாப் படை
'ஏ' எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்,
தூயவன் சிலை வலித் தொழிலும், துன்பமும்
மேயின வெகுளியும், கிளர வெம்பினான். 59

மெய் குலைந்து, இரு நில மடந்தை விம்முற,
செய் கொலைத் தொழிலையும், சென்ற தீயவர்
மொய் குலத்து இறுதியும், முனிவர் கண்டவர்
கை குலைக்கின்றதும், கண்ணின் நோக்கினான். 60

இந்திரசித்து நியமம் குலைந்து, வருந்திப் புலம்புதல்

மானமும் பாழ்பட, வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட, முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட, சிறந்த மந்திரத்து
ஏனையும் பாழ்பட, இனைய செப்பினான்: 61

'வெள்ளம் ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர்-ஐந்தொடு ஓயுமால்;
எள்ள அரு வேள்வி நின்று, இனிது இயற்றுதல்
பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால். 62

'தொடங்கிய வேள்வியின் தூம வெங் கனல்
அடங்கியது அவிந்துளது, அமையுமாம் அன்றே?
இடம் கொடு வெஞ் செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால். 63

'அங்கு அது கிடக்க; நான் மனிதர்க்கு ஆற்றலென்
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற,
இங்கு நின்று, இவை இவை நினைவது என்? இனி,
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ? 64

'"மந்திர வேள்வி போய் மடிந்ததாம்" எனச்
சிந்தையின் நினைந்து, நான் வருந்தும் சிற்றியல்,
அந்தரத்து அமரரும், "மனிதர்க்கு ஆற்றலன்;
இந்திரர்க்கே இவன் வலி!" என்று ஏசவோ?' 65

என்று அவன் பகர்கின்ற எல்லை, வல் விசை,
குன்றொடு மரங்களும், பிணத்தின் கூட்டமும்,
பொன்றின கரிகளும், கவிகள் போக்கின;
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின. 66

ஒதுங்கினர், ஒருவர் கீழ் ஒருவர் புக்குறப்
பதுங்கினர், நடுங்கினர்; பகழி பாய்தலின்,
பிதுங்கினர்; குடர் உடல் பிளவு பட்டனர்;
மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினர். 67

வீரன் வெங் கணையொடும் கவிகள் வீசிய
கார் வரை அரக்கர்தம் கடலின் வீழ்ந்தன,
போர் நெடுங் கால் பொர, பொழியும் மா மழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய. 68

அனுமன் இந்திரசித்து சினம் கொள்ளும் வகையில் எள்ளி நகையாடுதல்

திரைக் கடற் பெரும் படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி,
அரக்கனுக்கு அணித்து என அணுகி, அன்னவன்
வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான்: 69

'தடந் திரைப் பரவை அன்ன சக்கர யூகம் புக்குக்
கிடந்தது கண்டது உண்டோ ? நாண் ஒலி கேட்டிலோமே?
தொடர்ந்து போய் அயோத்திதன்னைக் கிளையொடும் துணிய நூறி,
நடந்தது எப்பொழுது? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே! 70

'ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து, இயற்கை தாங்கும்
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை, பழியின் தீர்ந்த
வேந்தனை, கண்டு, நீ நின் வில் வலம் காட்டி, மீண்டு
போந்ததோ, உயிரும் கொண்டே ஆயினும், புதுமை அன்றே! 71

'அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி,
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த
நம்பியை, முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன
தம்பியை, கண்டு, நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ? 72

'தீ ஒத்த வயிர வாளி உடல் உற, சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும், வாயினும், கண்களூடும்,
பாய, போய், இலங்கை புக்கு, வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப் போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே! 73

பாசமோ, மலரின் மேலான் பெரும் படைக்கலமோ, பண்டை
ஈசனார் படையோ, மாயோன் நேமியோ, யாதோ, இன்னம்
வீச, நீர் விரும்புகின்றீர்? அதற்கு நாம் வெருவி, சாலக்
கூசினோம்; போதும், போதும்; கூற்றினார் குறுக வந்தார். 74

'வரங்கள் நீர் உடையவாறும், மாயங்கள் வல்லவாறும்,
பரம் கொள் வானவரின் தெய்வப் படைக்கலம் படைத்தவாறும்,
உரங்களும், நின்றது அன்றே? உம்மை நாம், "உயிரினோடும்
சிரங்களைத் துணித்தும்" என்னக் கண்டது திறம்பினோமோ? 75

'விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும், விரிஞ்சன் தானும்,
படம் துடிக்கின்ற நாகப் பாற்கடல் பள்ளியானும்,
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும், சாதல் திண்ணம்;
இடம் துடிக்கின்றது உண்டே? இருந்திரோ? இயம்புவீரே! 76

'"கொல்வென்" என்று, உன்னைத்தானே குறித்து, ஒரு சூளும் கொண்ட
வில்லி வந்து அருகு சார்ந்து, உன் சேனையை முழுதும் வீட்டி,
"வல்லை நீ பொருவாய்" என்று, விளிக்கின்றான்; வரி வில் நாணின்
ஒல்லொலி, ஐய! செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ? 77

'மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்,
தேவர்கள், முனிவர், மற்றும் திறத் திறத்து உலகம் சேர்ந்தார்,
யாவரும், காண நின்றார்; இனி, இறை தாழ்ப்பது என்னோ?
சாவது சரதம் அன்றோ?' என்றனன், தருமம் காப்பான். 78

அனுமன் முதலியோரை இந்திரசித்து இகழ்ந்து கூறுதல்

அன்ன வாசகங்கள் கேளா, அனல் உயிர்த்து, அலங்கல் பொன் - தோள்
மின் நகு பகு வாயூடு வெயில் உக, நகை போய் வீங்க,
'முன்னரே வந்து, இம் மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே?
என்னதோ, நீயிர் என்னை இகழ்ந்தது?' என்று இனைய சொன்னான். 79

'மூண்ட போர்தோறும் பட்டு முடிந்த நீர், முறையின் தீர்ந்து
மீண்ட போது, அதனை எல்லாம் மறத்திரோ? விளிதல் வேண்டி,
"ஈண்ட ஒட்டு!" என்னா நின்றாய்; இத்தனை பேரும் இன்னம்
மாண்ட போது, உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான? 80

'இலக்குவன் ஆக, மற்றை இராமனே ஆக, ஈண்டு,
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக; குரங்கு வெள்ளம்
குலக் குலம் ஆக மாளும் கொற்றமும், மனிதர் கொள்ளும்
அலக்கணும், முனிவர்தாமும் அமரரும் காண்பர் அன்றே. 81

'யானுடை வில்லும், என் பொன் - தோள்களும், இருக்க, இன்னும்,
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ, ஒளிப்பு இலாமல்?
கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று, சென்று, அவ்
வானினும் தொடர்ந்து கொல்வென்; மருந்தினும் உய்யமாட்டீர். 82

'வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது; "வென்றோம்" என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர்! கிளத்தல் வேண்டா;
தாழ்க்கின்றது இல்லை; உம்மைத் தனித் தனித் தலைகள் பாறச்
சூழ்க்கின்ற வீரம் என் கைச் சரங்களாய்த் தோன்றும் அன்றே. 83

'மற்று எலாம் நும்மைப் போல வாயினால் சொல்ல மாட்டேன்;
வெற்றிதான் இரண்டும் தந்தீர்; விரைவது வெல்லற்கு ஒல்லா;
உற்று நான் உருத்த காலத்து, ஒரு முறை எதிரே நிற்க-
கற்றிரோ? இன்னம் மாண்டு கிடத்திரோ? நடத்திரோதான்? 84

இந்திரசித்து பொருதற்கு தேர் ஏறி, சங்கு முழக்கி வருதல்

'நின்மின்கள்; நின்மின்!' என்னா, நெருப்பு எழ விழித்து, நீண்ட
மின்மின்கொள் கவசம் இட்டான்; வீக்கினான், தூணி; வீரப்
பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான்; பொறுத்தான், போர் வில்;
எல் மின்கொள் வயிரத் திண் தேர் ஏறினான்; எறிந்தான், நாணி; 85

ஊதினான், சங்கம்; வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண்
மோதினார்; 'கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்றக்
காதினான்' என்ன, வானோர் கலங்கினார்; கயிலையானும்,
போதினான் தானும், 'இன்று புகுந்தது, பெரும் போர்' என்றார். 86

'இழைத்த பேர் யாகம் தானே, யாம் செய்த தவத்தினாலே,
பிழைத்தது; பிழைத்ததேனும், வானரம் பிழைக்கல் ஆற்றா;
அழைத்தது, விதியேகொல்?' என்று அஞ்சினார்; 'அம்பினோடும்
உழைத்தது காண்கின்றேம்' என்று, உணங்கினார், உம்பர் உள்ளார். 87

குரங்குகள் நாண் ஒலி கேட்டு இரிதலும், அனுமன் மலை ஏந்தி எதிர்த்து நிற்றலும்

நாண்தொழில் ஓசை வீசிச் செவிதொறும் நடத்தலோடும்,
ஆண்தொழில் மறந்து, கையின் அடுக்கிய மரனும் கல்லும்
மீண்டன மறிந்து சோர விழுந்தன; விழுந்த, 'மெய்யே
மாண்டனம்' என்றே உன்னி, இரிந்தன குரங்கின் மாலை. 88

படைப் பெருந் தலைவர் நின்றார்; அல்லவர், இறுதி பற்றும்
அடைப்ப அருங் காலக் காற்றால் ஆற்றலது ஆகிக் கீறிப்
புடைத்து இரிந்து ஓடும் வேலைப் புனல் என, இரியலுற்றார்;
கிடைத்த பேர் அனுமன், ஆண்டு, ஓர் நெடுங் கிரி கிழித்துக் கொண்டான். 89

இந்திரசித்து அனுமனுடன் பொருதல்

'நில், அடா! நில்லு நில்லு! நீ, அடா! வாசி பேசிக்
கல் எடாநின்றது என்னே? போர்க்களத்து, அமரர் காண,
கொல்லலாம் என்றோ? நன்று; குரங்கு என்றால் கூடும் அன்றே?
நல்லை; போர், வா வா!' என்றான் - நமனுக்கும் நமனாய் நின்றான். 90

வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே,
கல் எடுத்து, எறிய வந்த அனுமனைக் கண்ணின் நோக்கி,
'மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்கொலோ வருவது?' என்னா,
சொல் எடுத்து, அமரர் சொன்னார்; தாதையும் துணுக்கமுற்றான். 91

வீசினன் வயிரக் குன்றம், வெம் பொறிக் குலங்கள் விண்ணின்
ஆசையின் நிமிர்ந்து செல்ல; 'ஆயிரம் உரு ஒன்றாகப்
பூசின பிழம்பு இது' என்ன வரும் அதன் புரிவை நோக்கி,
கூசின உலகம் எல்லாம்; குலைந்தது, அவ் அரக்கர் கூட்டம். 92

குண்டலம் நெடு வில் வீச, மேருவின் குவிந்த தோளான்,
அண்டமும் குலுங்க ஆர்த்து, மாருதி, அசனி அஞ்ச,
விண் தலத்து எறிந்த குன்றம் வெறுந் துகள் ஆகி வீழக்
கண்டனன்; எய்த தன்மை கண்டிலர், இமைப்பு இல் கண்ணார். 93

அம்பினால் அடிபட்டு, அனுமன் அயர்தல்

மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில், தோளில்,
கால் தரு காலில், கையில், கழுத்தினில், நுதலில், கண்ணில்,
ஏறின என்ப மன்னோ-எரி முகக் கடவுள் வெம்மை
சீறிய பகழி மாரி, தீக் கடு விடத்தின் தோய்ந்த. 94

வெதிர் ஒத்த சிகரக் குன்றின் மருங்கு உற விளங்கலாலும்,
எதிர் ஒத்த இருளைச் சீறி எழுகின்ற இயற்கையாலும்,
கதிர் ஒத்த பகழிக் கற்றை கதிர் ஒளி காட்டலாலும்,
உதிரத்தின் செம்மையாலும், உதிக்கின்ற கதிரோன் ஒத்தான். 95

இந்திரசித்து, 'இலக்குவன் எங்குள்ளான்?' எனல்

ஆயவன் அயர்தலோடும், அங்கதன் முதல்வர் ஆனோர்,
காய் சினம் திருகி, வந்து கலந்துளார் தம்மைக் காணா,
'நீயிர்கள் நின்மின், நின்மின்; இரு முறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான்?' என்றனன், பொருள் செயாதான். 96

வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும், வெகுண்டு, 'சீயம்
தும்பியைத் தொடர்வது அல்லால், குரங்கினைச் சுளிவது உண்டோ?
அம்பினை மாட்டி, என்னே சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியைக் காட்டித் தாரீர்; சாதிரோ, சலத்தின்?' என்றான். 97

'அனுமனைக் கண்டிலீரோ? அவனிலும் வலியரோ? என்
தனு உளதன்றோ? தோளின் அவ் வலி தவிர்ந்தது உண்டோ?
இனும், முனை நீர் அலீரோ, எவ் வலி ஈட்டி வந்தீர்?
மனிதரைக் காட்டி, நும் தம் மலைதொறும் வழிக்கொளீரே.' 98

என்று உரைத்து, இளவல் தன்மேல் எழுகின்ற இயற்கை நோக்கி,
குன்றமும் மரமும் வீசிக் குறுகினார்; குழாங்கள் தோறும்
சென்றன பகழி மாரி, மேருவை உருவித் தீர்வ,
ஒன்று அல கோடி கோடி நுழைந்தன; வலியும் ஓய்ந்தார். 99

வீடனன் உற்றது சொல்ல, இலக்குவன் அனுமனின் தோள்மேல் ஏறி, போருக்கு முந்துதல்

'படுகின்றது அன்றோ, மற்று உன் பெரும் படை? பகழி மாரி
விடுகின்றது அன்றோ, வென்றி அரக்கனாம் காள மேகம்?
இடுகின்ற வேள்வி மாண்டது; இனி, அவன் பிழைப்புறாமே
முடுகு' என்றான் அரக்கன் தம்பி; நம்பியும் சென்று மூண்டான். 100

வந்தான் நெடுந் தகை மாருதி, மயங்கா முகம் மலர்ந்தான்,
'எந்தாய்! கடிது ஏறாய், எனது இரு தோள்மிசை' என்றான்;
'அந்தாக' என்று உவந்து, ஐயனும் அமைவு ஆயினன்; இமையோர்
சிந்தாகுலம் துறந்தார்; அவன் நெடுஞ் சாரிகை திரிந்தான். 101

இந்திரசித்து - இலக்குவன் பெரும் போர்

'கார் ஆயிரம் உடன் ஆகியது' எனல் ஆகிய கரியோன்,
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்மிசை உயர்ந்தான்;
நேர் ஆயினர் இருவோர்களும்; நெடு மாருதி, நிமிரும்
பேர் ஆயிரம் உடையான் என, திசை எங்கணும் பெயர்ந்தான். 102

தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன, திரியும்
பேய் ஒப்பன, பசி ஒப்பன, பிணி ஒப்பன, பிழையா
மாயக் கொடு வினை ஒப்பன, மனம் ஒப்பன, கழுகின்
தாய் ஒப்பன, சில வாளிகள் துரந்தான் - துயில் துறந்தான். 103

அவ் அம்பினை அவ் அம்பினின் அறுத்தான், இகல் அரக்கன்;
எவ் அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் -
எவ் அம்பரம், எவ் எண் திசை, எவ் வேலைகள், பிறவும்,
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான. 104

ஆயோன், நெடுங் குருவிக் குலம் என்னும் சில அம்பால்
போய் ஓடிடத் துரந்தான்; அவை, 'பொறியோ' என, மறிய,
தூயோனும், அத்துணை வாளிகள் தொடுத்தான், அவை தடுத்தான்;
தீயோனும், அக் கணத்து, ஆயிரம் நெடுஞ் சாரிகை திரிந்தான். 105

கல்லும், நெடு மலையும், பல மரமும், கடை காணும்
புல்லும், சிறு கொடியும், இடை தெரியாவகை, புரியச்
செல்லும் நெறிதொறும், சென்றன - தெறு கால் புரை மறவோன்
சில்லின் முதிர் தேரும், சின வய மாருதி தாளும். 106

இரு வீரரும், 'இவன் இன்னவன், இவன் இன்னவன்' என்னச்
செரு வீரரும் அறியாவகை திரிந்தார், கணை சொரிந்தார்;
'ஒரு வீரரும் இவர் ஒக்கிலர்' என, வானவர் உவந்தார்;
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதாலெனப் பொருதார். 107

'விண் செல்கில, செல்கின்றன, விசிகம்' என, இமையோர்
கண் செல்கில; மனம் செல்கில; கணிதம் உறும் எனின், ஓர்
எண் செல்கில; நெடுங் காலவன் இடை செல்கிலன்; உடல்மேல்
புண் செல்வன அல்லால், ஒரு பொருள் செல்வன தெரியா. 108

எரிந்து ஏறின, திசை யாவையும்; இடி ஆம் எனப் பொடியாய்
நெரிந்து ஏறின, நெடு நாண் ஒலி; படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின, சுடு வெங் கணை; தொடுந் தாரகை முழுதும்
கரிந்து ஏறின, உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ. 109

வெடிக்கின்றன திசை யாவையும், விழுகின்றன இடி வந்து
இடிக்கின்றன சிலை நாண் ஒலி; இரு வாய்களும் எதிராக்
கடிக்கின்றன, கனல் வெங் கணை; கலி வான் உற விசைமேல்
பொடிக்கின்றன, பொறி வெங் கனல்; இவை கண்டனர், புலவோர். 110

கடல் வற்றின; மலை உக்கன; பருதிக் கனல் கதுவுற்று
உடல் பற்றின; மரம், உற்றன கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது; துணிபட்டு உதிர் கணையின்,
திடர் பட்டது, பரவைக் குழி; திரிவுற்றது புவனம். 111

எரிகின்றன அயில் வெங் கணை-இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல்போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றன, கொலையால். 112

புரிந்து ஓடின; பொரிந்து ஓடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின;-கருங் கோள் அரிக்கு இளையான் விடு சரமே. 113

நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன;-செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம். 114

எரிகின்றன அயில் வெங் கணை-இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல்போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றன, கொலையால். 112

புரிந்து ஓடின; பொரிந்து ஓடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின;-கருங் கோள் அரிக்கு இளையான் விடு சரமே. 113

நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன;-செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம். 114

ஏமத் தடங் கவசத்து இகல் அகலத்தன; இருவோர்
வாமப் பெருந் தோள் மேலன; வதனத்தன; வயிரத்
தாமத்தன; மார்பத்தன; சரணத்தன,-தம் தம்
காமக் குல மட மங்கையர் கடைக்கண் எனக் கணைகள். 115

'எந் நாளினின், எத் தேவர்கள், எத் தானவர், எவரே,
அன்னார் செரு விளைத்தார்?' என, இமையோர் எடுத்து அழைத்தார்;
பொன் ஆர் சிலை இரு கால்களும், ஒருகால் பொறை உயிரா,
முன் நாளினில் இரண்டாம் பிறை முளைத்தாலென வளைத்தார். 116

வேகின்றன உலகு, இங்கு இவர் விடுகின்றன விசிகம்;
போகின்றன சுடர் வெந்தன; இமையோர்களும் புலர்ந்தார்;
'ஆகின்றது ஒர் அழிகாலம் இது ஆம், அன்று' என அயிர்த்தார்;
நோகின்றன திசை யானைகள், செவி நாண் ஒலி நுழைய. 117

மீன் உக்கது, நெடு வானகம்; வெயில் உக்கது, சுடரும்;
மான் உக்கது, முழு வெண் மதி; மழை உக்கது, வானம்;
தான் உக்கது, குல மால் வரை; தலை உக்கது, தகை சால்
ஊன் உக்கன, உயிர் உக்கன, உலகத்தினுள் எவையும். 118

அக் காலையின், அயில் வெங் கணை ஐ-ஐந்து புக்கு அழுந்த,
திக்கு ஆசு அற வென்றான் மகன், இளங்கோ உடல் செறிந்தான்;
கைக் கார்முகம் வளையச் சில கனல் வெங் கணை, கவசம்
புக்கு, ஆகமும் கழன்று ஓடிட, இளங் கோளரி பொழிந்தான். 119

தெரிந்தான் சில சுடர் வெங் கணை, தேவேந்திரன் சின மா
இரிந்து ஓடிடத் துரந்து ஓடின, இமையோரையும் முன் நாள்
அரிந்து ஓடின, எரிந்து ஓடின, அவை கோத்து, அடல் அரக்கன்
சொரிந்தான், உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற. 120

குருதிப் புனல் சொரிய, குணம் குணிப்பு இல்லவன், குணபால்
பருதிப்படி பொலிவுற்றதை இளங் கோளரி பார்த்தான்;
ஒரு திக்கிலும் பெயராவகை, அவன் தேரினை உதிர்த்தான்;
'பொருது இக் கணம் வென்றான்' என, சர மாரிகள் பொழிந்தான். 121

அத் தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்;
முத் தேவரும் உவந்தார்; அவன் உரும் ஏறு என முனிந்தார்;
தத்தா, ஒரு தடந் தேரினைத் தொடர்ந்தான், சரம் தலைமேல்
பத்து ஏவினன், அவை பாய்தலின், இளங் கோளரி பதைத்தான். 122

பதைத்தான், உடல் நிலைத்தான், சில பகு வாய் அயில் பகழி
விதைத்தான், அவன் விலக்காதமுன், விடைமேல் வரு விமலன்,
மதத்தால் எதிர் வரு காலனை, ஒரு கால் உற மருமத்து
உதைத்தாலென, தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான். 123

கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக் கணை கழிய,
அவசத் தொழில் அடைந்தான்; அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்;
திவசத்து எழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே, அவன் மணித் தோளையும் துளைத்தான். 124

உள் ஆடிய உதிரப் புனல் கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வட மேருவின் சலித்தான்; உடல் தரித்தான்,
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை துரந்தான்; அவை துறைபோய்
விள்ளா நெடுங் கவசத்திடை நுழையாது உக, வெகுண்டான். 125

மறித்து ஆயிரம் வடி வெங் கணை, மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித் தேரவன் விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால், ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொற் கணை, சிலை நாண் அறத் தெறித்தான். 126

'வில் இங்கு இது, நெடு மால், சிவன், எனும் மேலவர் தனுவே-
கொல்?' என்று கொண்டு அயிர்த்தான்; நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கொடுங் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்;
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான், அகம் மெலிந்தான். 127

இந்திரசித்து மெலிவுற்றமை அறிந்த வீடணன் இலக்குவனுக்கு அதனைத் தெரிவித்தல்

அத் தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும், அணுகா,
முத்தன் முகம் நோக்கா, 'ஒரு மொழி கேள்' என மொழிவான்,
'எத் தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய்;
பித்தன் மனம் தளர்ந்தான்; இனிப் பிழையான்' எனப் பகர்ந்தான். 128

இந்திரசித்து விடுத்த பல் வேறு படைகளை ஏற்ற கணைகளால் இலக்குவன் மாற்றுதல்

கூற்றின்படி கொதிக்கின்ற அக் கொலை வாள் எயிற்று அரக்கன்
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த,
சீற்றம் தலைத்தலை சென்று உற, 'இது தீர்' எனத் தெரியா,
காற்றின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு காத்தான். 129

அனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு தடுத்தான்;
புனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு பொறுத்தான்;
கன வெங் கதிரவன் வெம் படை துரந்தான், மனம் கரியான்;
சின வெந் திறல் இளங் கோளரி அதுவே கொடு தீர்த்தான். 130

இந்திரசித்து விடுத்த அயன் படையை இலக்குவன் அழித்தல்

'இது காத்திகொல்?' என்னா, எடுத்து, இசிகப் படை எய்தான்;
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா, தொடுத்து அமைந்தான்;
செதுகாப் படை தொடுப்பேன் என நினைந்தான், திசைமுகத்தோன்
முது மாப் படை துரந்தான், 'இனி முடிந்தாய்' என மொழிந்தான். 131

வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும், மலரோன் -
தானும், முனிவரரும், பிற தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிற பிற தேவர்கள் குழுவும், மனம் குலைந்தார்;
'ஊனம் இனி இலது ஆகுக, இளங்கோக்கு!' என உரைத்தார். 132

ஊழிக்கடை இறும் அத்தலை, உலகு யாவையும் உண்ணும்
ஆழிப் பெருங் கனல்தன்னொடு சுடர் என்னவும் ஆகாப்
பாழிச் சிகை பரப்பித் தனை படர்கின்றது பார்த்தான்,-
ஆழித் தனி முதல் நாயகற்கு இளையான் - அது மதித்தான். 133

'"மாட்டான் இவன், மலரோன் படை முதற் போது தன்வலத்தால்,
மீட்டான் அலன்; தடுத்தான் அலன்; முடிந்தான்" என, விட்டான்;
'காட்டாது இனிக் கரந்தால், அது கருமம் அலது' என்னா,
'தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன்' எனச் சமைந்தான். 134

'நன்று ஆகுக, உலகுக்கு!' என, முதலோன் மொழி நவின்றான்;
'பின்றாதவன் உயிர்மேல் செலவு ஒழிக' என்பது பிடித்தான்;
'ஒன்றாக இம் முதலோன் படைதனை மாய்க்க' என்று உரைத்தான்,
நின்றான், அது துரந்தான்; அவன் நலம் வானவர் நினைந்தார். 135

'தான் விட்டது மலரோன் படைஎனின், மற்று இடைதருமே?
வான் விட்டதும், மண் விட்டதும், மறவோன் உடல் அறுமே?
"தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய்" எனத் தெரிந்தான்;
'ஊன் விட்டவன் மறம் விட்டிலன்' என, வானவர் உவந்தார். 136

உரும் ஏறு வந்து எதிர்த்தால், அதன் எதிரே, நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தாலென, மலரோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அரு மா கனல் என நின்றது, விசும்பு எங்கணும் ஆகி. 137

படை அங்கு அது படராவகை, பகலோன் குல மருமான்,
இடை ஒன்று அது தடுக்கும்படி செந் தீ உக எய்தான்,
தொடை ஒன்றினை; 'கணை மீமிசைத் துறுவாய், இனி' என்றான்;
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்ததுபோல் தீர்ந்தது, வேகம். 138

தேவர்களின் மகிழ்ச்சியும், சிவபெருமான் தேவர்களுக்கு உண்மையை விளக்கியதும்

விண்ணோர் அது கண்டார், 'வய வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ?' என மனம் தேறினர், உவந்தார்;
கண் ஆர் நுதல் பெருமான், 'இவர்க்கு அரிதோ?' எனக் கடை பார்த்து,
'எண்ணாது இவை பகர்ந்தீர்; பொருள் கேளீர்!' என இசைந்தான்; 139

'நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்; 140

'"அறத்தாறு அழிவு உளது ஆம்" என, அறிவும் தொடர்ந்து அணுகாப்
புறத்தார், புகுந்து அகத்தார் எனப் புகுந்து, அன்னது புரப்பார்,
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான், இவண் வந்தார்;
திறத்தால் அது தெரிந்து, யாவரும் தெரியாவகை திரிவார்; 141

'"உயிர்தோறும் உற்றுளன், தோத்திரத்து ஒருவன்" என உரைக்கும்
அயிரா நிலை உடையான் இவன்; அவன், இவ் உலகு அனைத்தும்
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து, ஏறிய தலைவன்;
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர்; இது பரமால். 142

'நெடும் பாற்கடல் கிடந்தாரும், பண்டு, இவர் நீர் குறை நேர,
விடும் பாக்கியம் உடையார்களைக் குலத்தோடு அற வீட்டி,
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார்' என, இது எலாம்,
அடும்பு ஆக்கியத் தொடைச் செஞ்சடை முதலோன் பணித்து அமைந்தான். 143

உண்மை உணர்த்திய சிவபெருமானைத் தேவர்கள் புகழ்ந்து தொழுதல்

'அறிந்தே இருந்து, அறியேம், அவன் நெடு மாயையின் அயர்ப்போம்;
பிறிந்தோம் இனி முழுது ஐயமும்; பெருமான் உரை பிடித்தோம்;
எறிந்தோம் பகை முழுதும்; இனித் தீர்ந்தோம் இடர், கடந்தோம்;
செறிந்தோர் வினைப் பகைவா!' எனத் தொழுதார், நெடுந் தேவர். 144

மாயோன் படையை இந்திரசித்து ஏவுதலும், இலக்குவன் தன்னை அரியாகத் தியானிக்க, அது விலகிப் போதலும்

மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்,
'நீயே இது தடுப்பாய் எனின், நினக்கு ஆர் எதிர் நிற்பார்?
போயே விசும்பு அடைவாய்; இது பிழையாது' எனப் புகலா,
தூயோன்மிசை, உலகு யாவையும் தடுமாறிட, துரந்தான். 145

சேமித்தனர் இமையோர் தமை, சிரத்து ஏந்திய கரத்தால்;
ஆம் இத் தொழில், பிறர் யாவரும் அடைந்தார்; பழுது அடையாக்
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான்;
'நேமித் தனி அரி, தான்' என நினைந்தான், எதிர் நடந்தான். 146

தீக்கின்றது இவ் உலகு ஏழையும் எனச் செல்வதும் தெரிந்தான்;
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான்;
மீச் சென்றிலது, அயல் சென்று, அது விலங்கா, வலம்கொடு மேல்
போய்த்து; அங்கு அது கனல் மாண்டது, புகை வீய்ந்தது, பொதுவே. 147

ஏத்து ஆடினர், இமையோர்களும்; கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடினர்; அர மங்கையர் குனித்து ஆடினர்; தவத்தோர்,
'காத்தாய் உலகு அனைத்தும்' எனக் களித்து ஆடினர்; கமலம்
பூத்தானும், அம் மழுவாளியும், முழு வாய்கொடு புகழ்ந்தார். 148

சிவன் படையை இந்திரசித்து விடுத்தல்

அவன் அன்னது கண்டான்; 'இவன் ஆரோ?' என அயிர்த்தான்;
'இவன் அன்னது முதலே உடை இறையோன்' என வியவா,
'எவன் என்னினும் நன்று ஆகுக! இனி எண்ணலன்' என்னா,
'சிவன் நன் படை தொடுத்து, ஆர் உயிர் முடிப்பேன்' எனத் தெரிந்தான்; 149

'பார்ப்பான் தரும் உலகு யாவையும், ஒரு கால், ஒரு பகலே,
தீர்ப்பான் படை தொடுப்பேன்' எனத் தெரிந்தான்; அது தெரியா,
மீப் பாவிய இமையோர் குலம் வெருவுற்றது; 'இப்பொழுதே
மாய்ப்பான்' என, உலகு யாவையும் மறுகுற்றன, மயங்கா. 150

'தானே சிவன் தரப் பெற்றது, தவம் நாள் பல உழந்தே;
தானே, "பிறர் அறியாதது தந்தேன்" எனச் சமைந்தான்;
ஆனால், இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை' என்னா,
ஏல் நாளும் இது ஆனால், எதிர் தடை இல்லதை எடுத்தான். 151

மனத்தால், மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்;
நினைத்தான்; 'இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய்' என நிமிர்ந்தான்;
சினத்தால் நெடுஞ் சிலை நாண் தடந் தோள்மேல் உறச் செலுத்தா,
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான். 152

சிவன் படையால் நேர்ந்த விளைவுகள்

சூலங்கள், மழுவும், சுடு சுணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும், அசனிக் குலம் எவையும்,
காலன் தனது உருவங்களும், கரும் பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும், நிமிர்கின்றன, உலகு எங்கணும் தான் ஆய். 153

ஊழிக் கனல் ஒரு பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும்;
சூழிக் கொடுங் கடுங் காற்று அதன் உடனே வர, தூர்க்கும் -
ஏழிற்கும் அப் புறத்தாய் உள பெரும் போர்க் கடல் இழிந்தாங்கு
ஆழித்தலைக் கிடந்தாலென நெடுந் தூங்கு இருள் அடைய. 154

இரிந்தார் குல நெடுந் தேவர்கள்; இருடிக் குலத்து எவரும்
பரிந்தார், 'இது பழுது ஆகிலது; இறுவான்' எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது; பகரும் துணை நெடிதே?
திரிந்தார், இரு சுடரோடு உலகு ஒரு மூன்று உடன் திரிய. 155

வீடணன், 'இதனை விலக்க இயலுமோ?' என, இலக்குவன் சிரித்தல்

பார்த்தான் நெடுந் தகை வீடணன், உயிர் காலுற, பயத்தால்
வேர்த்தான், 'இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா!
தீர்த்தா!' என அழைத்தான்; அதற்கு இளங் கோளரி சிரித்தான்;
போர்த்தார் அடர் கவி வீரரும், அவன் தாள் நிழல் புகுந்தார். 156

இலக்குவனும் சிவன் படையை விட, அது இந்திரசித்து விடுத்த படையை விழுங்குதல்

'அவயம்! உனக்கு அவயம்!' எனும் அனைவோரையும், 'அஞ்சல்!
அவயம் உமக்கு அளித்தோம்' என, தன் கைத் தலத்து அமைத்தான்;
'உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன், இனி ஒழியேன்;
சிவன், ஐம் முகம், உடையான், படை தொடுப்பேன்' எனத் தெளிந்தான். 157

அப் பொன் படை மனத்தால் நினைந்து, அர்ச்சித்து, 'அதை அழிப்பாய்;
இப் பொன் படைதனை மற்றொரு தொழில் செய்கிலை' என்னா,
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான்; இடை தொடரா,
எப் பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது, ஒர் இமைப்பின். 158

விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது; மேலோர் மணி முரசின்
கண் ஆர்த்தது; கடல் ஆர்த்தது; மழை ஆர்த்தது; கலையோர்
எண் ஆர்த்தது; மறை ஆர்த்தது; 'விசயம்' என இயம்பும்
பெண் ஆர்த்தனள்; அறம் ஆர்த்தது; புறம் ஆர்த்தது, பெரிதால். 159

இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை,
மறுகாவகை வலித்தான், அது வாங்கும்படி வல்லான்;
தெறு காலனின் கொடியோனும், மற்று அது கண்டு, அகம் திகைத்தான்;
அறு கால் வயக் கவி வீரரும் அரி என்பதை அறிந்தார். 160

'தெய்வப் படை பழுது உற்றது எனக் கூசுதல் சிதைவால்;
எய் வித்தகம் உளது; அன்னது பிழையாது' என இசையா,
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன்; அவையும்
மொய் வித்தகன் தடந் தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க, 161

வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர், மிகு திறலோர்,
கை ஓய்வு இலர், மலை மாரியின் நிருதக் கடல் கடப்பார்,
'உய்யார்' என, வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான்;
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறு தாதையைச் செறுத்தான். 162

வீடணனை இந்திரசித்து சினத்தால் இகழ்ந்து பேசுதல்

'முரண் தடந் தண்டும் ஏந்தி, மனிதரை முறையைக் குன்றிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை அடியரின் தொழுது, பின் சென்று,
இரட்டுறும் முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின்றாயைப்
புரட்டுவென் தலையை, இன்று; பழியொடும் ஒழிவென் போலாம். 163

'விழி பட, முதல்வர் எல்லாம் வெதும்பினர், ஒதுங்கி வீழ்ந்து
வழி பட, உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்,
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் வெஃகாப்
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கற்பாலார்? 164

'நீர் உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீரர், இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை, உறைய; நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா! 165

'முந்தை நாள், உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாயத் தள்ளி,
கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒரு கைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது, இப் பெரும் பலம் கொண்டேயோ? 166

'பனி மலர்த் தவிசின் மேலோன் பார்ப்பனக் குலத்துக்கு எல்லாம்
தனி முதல் தலைவன் ஆனாய்; உன்னை வந்து அமரர் தாழ்வார்;
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே. 167

'சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிந்தோராலே,
எல் வித்தும் படைக் கை உங்கள் தமையனை எங்களோடும்
கொல்வித்தும், தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ? 168

'எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன், இராமன் அம்பால்,
புழுதியே பாயல் ஆகப் புரண்ட நாள், புரண்டு மேல் வீழ்ந்து,
அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை?-விசயத் தோளாய்! 169

'ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர் வந்து எய்தும்
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான் -
தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியே? சரத்தினோடும்
வானிடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கில்!' என்றான். 170

வீடணன் மறுமொழி

அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி,
'வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய!
இவ் உரை கேட்டி!' என்னா, இனையன் விளம்பலுற்றான்; 171

'அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை, பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்;
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன், பிழைத்த போதே. 172

'"உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே? 173

'"மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி கற்பினில் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது" என்று உரைப்ப, நுன் தாதை சீறி,
"போ!" என உரைக்க, போந்தேன்; நரகதில் பொருந்துவேனோ? 174

'வெம்மையின், தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண; துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி, மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண; நரகமும் எமக்கே ஆக. 175

'"அறத்தினைப் பாவம் வெல்லாது" என்னும் அது அறிந்து, "ஞானத்
திறத்தினும் உறும்" என்று எண்ணி, தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக; பழியோடும் புணர்க; போகச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க' என்றனன், சீற்றம் இல்லான். 176

வீடணன் மேல் இந்திரசித்து விடுத்த கணை, வேல், முதலியவற்றை இலக்குவன் தடுத்தல்

'பெறும் சிறப்பு எல்லாம் என் கைப் பிறை முகப் பகழி பெற்றால்,
இறும் சிறப்பு அல்லால், அப் பால் எங்கு இனிப் போவது?' என்னா,
தெறுஞ் சிறைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து, செம் பொன்
உறும் சுடர்க் கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் வெய்யோன். 177

அக் கணை அசனி என்ன, அனல் என்ன, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி,
'இக் கணத்து இற்றான், இற்றான்' என்கின்ற இமையோர் காண,
கைக் கணை ஒன்றால், வள்ளல், அக் கணை கண்டம் கண்டான். 178

கோல் ஒன்று துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன,
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரி விலானும், அதனையும் நுறுக்கி வீழ்த்தான். 179

வீடணன் வெகுண்டு, இந்திரசித்தினது தேரின் பாகனையும் குதிரைகளையும் அழித்தல்

'வேல்கொடு நம்மேல் எய்தான்' என்று, ஒரு வெகுளி பொங்க,
கால்கொடு காலின் கூடிக் கை தொடர் கனகத் தண்டால்,
கோல் கொளும் ஒருவனோடும், கொடித் தடந் தேரில் பூண்ட
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான், படியின் மேலே. 180

இந்திரசித்து ஆயிர கோடி அம்பு விடுத்து, ஆரவாரித்தல்

அழிந்த தேர்மீது நின்றான், ஆயிர கோடி அம்பு
பொழிந்தது, அவன் தோளின்மேலும், இலக்குவன் புயத்தின் மேலும்
ஒழிந்தவர் உரத்தின்மேலும், உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட, நோக்கி, அண்டமும் இரிய ஆர்த்தான். 181

இந்திரசித்து அழிவு இல்லாத் தேர் பெற எண்ணி, இராவணனிடத்திற்குப் போதல்

ஆர்த்தவன், அனைய போழ்தின், 'அழிவு இலாத் தேர் கொண்டு அன்றிப்
போர்த் தொழில் புரியலாகாது' என்பது ஓர் பொருளை உன்னி,
பார்த்தவர் இமையாமுன்னம், 'விசும்பிடைப் படர்ந்தான்' என்னும்
வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு சென்றான். 182

மிகைப் பாடல்கள்

நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை - இலக்குவன் (வில்)
தூறா நெடு வாளி துரந்திடவே. 42-1

சிர நிரை அறுத்து, அவர் உடலைச் சிந்தி, மற்று
உர நிரை அறுத்து, அவர் ஒளிரும் வெம் படைக்
கர நிரை அறுத்து, வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது, அங்கு இலக்குவன் சரம். 51-1

ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன்; ஓம ஆகுதித்
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன், 'என்!' எனத் திகைத்து நோக்கினான். 52-1

'ஆங்கு அது கிடக்க, நான் மனிதர்க்கு ஆற்றலேன்,
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற,
ஈங்கு நின்று யாவரும் இயம்ப, என் குலத்து
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும்; ஒல்குமால். 64-1

'நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகிதன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கி மீது
போனதோ? - கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்! 69-1

சூர் எலாம் திரண்ட பொன்-தோள் தாபதர்க்கு இளைய தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும்; யான் செரு ஏற்று நின்று,
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம்
போர் எலாம் மடிந்து நூறி, இறத்தலும் இருகால் பெற்றீர். 84-1

'விடு வாளிகள் கடிது ஓடுவ; வீற்று ஆகுவ; வீயா
நெடு நாணிடை சிதையாதவர், நேர் ஏவிய விசிகம்,
தொடு கார் விசை நுழையா, எதிர் மீளாது, இடை சோரா,
எடு பாணமும் அழியா, முதுகு இடு தூணியை அறுத்தான். 126-1

அரு ஆகியும், உரு ஆகியும், அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும், எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும், இருள் ஆகியும், ஒளி ஆகியும், பொலியும்
திருமார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார்? 142-1

ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது; இப்பாலில்
காதும் கொலை அரக்கன் அது கண்டான்; 'தகை மலர்மேல்
போதன் தரு படை போக்கினன் போலாம்' எனப் புகைந்தான்;
ஏது இங்கு இவன் வலி நன்று; மற்று இது காண்பென்' என்று இசைப்பான். 144-1

உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது; பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட, வடவைப் பொறி கொழிக்கின்றது, எவ் உலகும். 145-1
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247