யுத்த காண்டம்

22. பிரமாத்திரப் படலம்

தூதரால் செய்தி அறிந்த இராவணன் இந்திரசித்தை அழைத்தல்

கரன் மகன் பட்டவாறும், குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை தவிர்ந்தான், 'வல்லைத் தருதிர், என் மகனை!' என்றான். 1

இந்திரசித்து விரைந்து வருதல்

'கூயினன், நுந்தை' என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,
'போயின நிருதர் யாரும் போந்திலர் போலும்!' என்றான்;
'ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?' என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின் வந்தான். 2

தந்தையைத் தேற்றி, இந்திரசித்து போர்க்களம் செல்லுதல்

வணங்கி, 'நீ, ஐய! "நொய்தின் மாண்டனர் மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்' என்றான். 3

வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும், குழாம் கொளக் குழீஇய அன்றே. 4

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. 5

யானைமேல் பறை, கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி,
மான மாப் புரவிப் பொன் - தார், மாக் கொடி கொண்ட பண்ணை,
சேனையோர் சுழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே. 6

சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம்
மங்குலின் அதிர்வு, - வான மழையொடு மலைந்த அன்றே. 7

வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே. 8

நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின் -
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்மேல் தொடர்ந்து வீச,
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது அன்றே. 9

ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான் - தேவரை நடுக்கம் கண்டான். 10

இந்திரசித்து சங்கநாதம் செய்து, நாண் ஒலி எழுப்பி, ஆரவாரித்தல்

சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலின், ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ்வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து நின்றான். 11

புரந்தரன் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்று, கால வலம்புரி கையில் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள் சிந்த. 12

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, யானை
சிங்கத்தின் நாதம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
'எங்கு உற்ற?' என்னாவண்ணம் இரிந்தது; ஈது அன்றி ஏழை-
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி, ஆர்த்தான். 13

இராமனது சேனையின் நிலைமை

கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள்; கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,
'மாண்டனம் அன்றோ?' என்ற - வானரம் எவையும் மாதோ. 14

செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவந்தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதலாம் வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம். 15

அரக்கர் சேனை கிளர்ந்து களம் புகுதல்

படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருஞ் சேனை, வெள்ளம்
உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர் ஆனார். 16

அனுமன் தோளிலும் அங்கதன் தோளிலும் முறையே இராமனும் இலக்குவனும் ஏறி, போர்க்களம் வருதல்

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல். 17

விடையின்மேல், கலுழன் தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் - கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார்,
தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல் தோன்றும் வீரர். 18

நீலன் முதலாக நின்ற படைத் தலைவர்களைப் பின் நிரையில் நிற்குமாறு இராமன் கூறுதல்

நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமைந்த காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான்: 19

'கடவுளர் படையை நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
தடை உள அல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படை உளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்' என்றான். 20

இராம இலக்குவரின் போர்த் திறன்

அருள்முறை அவரும் நின்றார்; ஆண் தகை வீரர், ஆழி
உருள் முறை தேரின், மாவின், ஓடை மால் வரையின், ஊழி
இருள் முறை நிருதர் தம்மேல், ஏவினர் - இமைப்பிலோரும்,
'மருள் முறை எய்திற்று' என்பர் - சிலை வழங்கு அசனி மாரி. 21

தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான் - விழுந்தன விழுந்த என்னும்
பாரின் மேல் நோக்கின் அன்றேல், பட்டனர் பட்டார் என்னும்
போரின் மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல். 22

'யானை பட்டனவோ!' என்றான்; 'இரதம் இற்றனவோ!' என்றான்;
'மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ!' என்றான்;
'ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!' என்றான் -
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம் உற்றான். 23

'செய்கின்றார் இருவர், வெம் போர்; சிதைக்கின்ற சேனை நோக்கின்,
"ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக!" என்று,
வைகின்றார்; அல்லர் ஆக, வரிசிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்?' என்றான். 24

போர் நிகழ்ச்சியை இந்திரசித்து வியந்து நோக்குதல்

அம்பின் மா மழையை நோக்கும்; உதிரத்தின் ஆற்றை நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை நோக்கும்,
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும்; கொன்ற
தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்; 25

மலைகளை நோக்கும்; மற்று அவ் வான் உறக் குவிந்த வன் கண்
தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி,
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின் ஏற்கும்; 26

ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால்
போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்;
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும்; 27

அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு, படைகள் யாவும்,
பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயது அல்லால்,
செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்; 28

வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி,
குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழையை நோக்கும்;
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய்த் தலை இலா ஆக்கை ஈட்டம்
பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்; 29

'அங்கதர் அனந்த கோடி உளர்' எனும்; 'அனுமன் என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும்' என்னும்;
'எங்கும் இம் மனிதர் என்பார் இருவரே கொல்!' என்று உன்னும்;
சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான். 30

ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; ஆங்கு அவர்கள் அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள் நோக்கும்;
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்;
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும். 31

ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, வல்ல
மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை
போயின குரக்குத் தானை புகுந்திலது அன்றே, பொன் தேர்த்
தீயவன் தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா. 32

அனுமன் தோள் கொட்டி ஆர்த்தலும், அரக்கர்கள் அஞ்சி நடுங்குதலும்

தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக,
துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை ஆர்த்தான். 33

ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர்; பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார். 34

இந்திரசித்து தான் ஒருவனாய் நின்று, இராம இலக்குவர் இருவரையும் எதிர்தல்

'அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர்
வெஞ் சமம் விளைப்பது என்னோ? நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றோ?' என்று அவர்ச் சுளித்து நோக்கி,-
மஞ்சினும் கரிய மெய்யான் - இருவர்மேல் ஒருவன் வந்தான். 35

அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
புக்கன - நேமிப் பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன,
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய, பாரின்
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க. 36

இந்திரசித்தின் தலையை வீழ்த்துவதாக இலக்குவன் சபதம் செய்தல்

மாற்றம் ஒன்று, இளையவன் வளை வில் செங் கரத்து
ஏற்றினன் வணங்கி நின்று, இயம்புவான்: '"இகல்-
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப, ஆர் அமர்
தோற்றனென்" என்று கொண்டு உலகம் சொல்லுமால்; 37

'"காக்கவும் கற்றிலன், காதல் நண்பரை;
போக்கவும் கற்றிலன், ஒருவன்; போய்ப் பிணி
ஆக்கவும் கற்றிலன்; அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன்" என்று நின்றதால்; 38

'இந்திரன் பகை எனும் இவனை, என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்,
வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு
மைந்தரில் கடை எனப் படுவன், வாழியாய்! 39

'நின்னுடை முன்னர், யான், நெறி இல் நீர்மையான் -
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால், -
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!-
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ. 40

'கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
முடிய ஒன்று உணர்ந்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!' 41

இளவலை இராமன் பாராட்டுதல்

வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
'அல்லல் நீங்கினம்' என, அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன;
நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன். 42

முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்,
'அறிவென்; நீ, "அடுவல்" என்று அமைதி ஆம் எனின்,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?' என்றான். 43

இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல்

சொல் அது கேட்டு, அடி தொழுது, 'சுற்றிய
பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வென்; இங்கு அன்னது காண்டிகொல்' எனா,
ஒல்லையில் எழுந்தனன் - உவகை உள்ளத்தான். 44

அங்கதன் ஆர்ப்பும், இராமனின் சங்கநாதமும்

அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன், கடலும் தள்ளுற. 45

அரக்கர் சேனையை இலக்குவன் அழித்தல்

எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார். 46

மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென,
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன;
கான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;-
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால். 47

ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற;
தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால். 48

அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர் தம்
முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால். 49

'இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்'
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் -
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால். 50

தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை
வந்தன; தாதையர் வயிர வான் சிரம்
சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை-
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன. 51

செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன்
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என-
தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன. 52

தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற
மடிவன கொடிகளும், குடையும், மற்றவும்,
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில்
படிவன, ஒத்தன, பறவைப் பந்தரே. 53

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி. 54

சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த
வல்லி ஊடு அற, மறிந்தன; புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில, போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய. 55

அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி,
விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,-
குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம். 56

இராமன் அம்பு சொரிதலால் படைகள் யாவும் மடிய, இந்திரசித்து தனித்து நிற்றல்

ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன். 57

'எவ்வாறு பொர நினைக்கின்றீர்?' என, இராம இலக்குவரை இந்திரசித்து வினாவுதல்

பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை
வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
சொல் விலங்கலன், சொல்லினன் - இராவணன் தோன்றல். 58

'இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்ற
ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்;
தருவென், இன்று உமக்கு ஏற்றுளது யான்' எனச் சலித்தான். 59

இலக்குவன் மறுமொழி பகர்தல்

'வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்
கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து, உயிர் கொள்வான்
சூளுற்றேன்; இது சரதம்' என்று இலக்குவன் சொன்னான். 60

இந்திரசித்தின் மறுமொழி

'முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்,
என், பிறந்ததனால் பயன் இராவணற்கு?' என்றான். 61

'இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன,
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென்; "இது புகுந்து இடையே
விலக்குவென்" என விடையவன் விலக்கினும், வீரம்
கலக்குவென்; இது காணும், உன் தமையனும் கண்ணால். 62

'அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க,
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை இக் கணத்தின் ஓர் வில்லால். 63

'கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அம்பிடைக் குறைத்த
தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர்
செம் புணீர்கொடு கடன் கழிப்பேன்' என்று தெரிந்தான். 64

வீடணனே உங்கள் எல்லோருக்கும் இறுதிக் கடன் செய்வான் என, இலக்குவன் மொழிதல்

'அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த,
புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்;
சுரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்,
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்' என்றனன், இளையோன். 65

இந்திரசித்தும் இலக்குவனும் கடும் போர் புரிதல்

ஆன காலையின், அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான். 66

அங்கதன் தன்மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
வெங் கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உவப்பு இல செலுத்தி,
எங்கும் வெங் கணை ஆக்கினன் - இராவணன் சிறுவன். 67

இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
விளையும் வன் திறம் வானர வீரர்மேல், மெய் உற்று
உளையும் வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என நின்றது, அவ் வரி வில். 68

பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து அடங்கினர், அமரர். 69

மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறம் இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான். 70

பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்;
'அறன் இது அன்று' என, அரக்கன்மேல் சரம் தொடுத்து அருளான்;
இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம். 71

மாடு எரிந்து எழுந்து, இருவர் தம் கணைகளும் வழங்க,
காடு எரிந்தன; கன வரை எரிந்தன; கனக
வீடு எரிந்தன; வேலைகள் எரிந்தன; மேகம்
ஊடு எரிந்தன; ஊழியின் எரிந்தன, உலகம். 72

படம் கொள் பாம்பு-அணை துறந்தவற்கு இளையவன், பகழி,
விடம் கொள் வெள்ளத்தின்மேல் அவன் விடுவன விலக்கி,
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ-இருநூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான். 73

தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;
'பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர்' எனப் பதைத்தார்;
சூர் அழிந்திடத் துரந்தனன், சுடு சரம் சொரிந்தான். 74

அற்ற தேர்மிசை நின்று, போர் அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண் போர்,
ஒன்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய. 75

சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி,
சிங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான். 76

இலக்குவனது வெற்றி கண்டு, வானரர் ஆர்த்தல்

கண்ட கார் முகில் வண்ணனும், கமலக் கண் கலுழ,
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன் வாயினால், 'ஆர்மின்' என்று அருள,
'விண்டது அண்டது' என்று, உலைந்திட ஆர்த்தனர், வீரர். 77

இலக்குவன், அயன் படை விட முயல இராமன் அதைத் தடுத்தல்

கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி,
பண்ணவற்கு, 'இவன் பிழைக்குமேல், படுக்கும் நம் படையை;
எண்ணம் மற்று இலை; அயன் படை தொடுப்பேன்' என்று இசைத்தான். 78

ஆன்றவன் அது பகர்தலும், 'அறநிலை வழா தாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், இவ் உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது' என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் தம்பி. 79

தெய்வப் படையை விட எண்ணிய இந்திரசித்து, மறைந்து இலங்கைக்கு செல்லுதல்

மறைந்துபோய் நின்ற வஞ்சனும், அவருடைய மனத்தை
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான்,
'பிறிந்து போவதே கருமம், இப்பொழுது' எனப் பெயர்ந்தான்;
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார். 80

அஞ்சி ஓடியதாக எண்ணி, வானரர் மகிழ்ந்து ஆரவாரித்தல்

செஞ் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்மேல் செல்வான்,
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற,
'அஞ்சினான் மறைந்தான், அகன்றான்' என, ஆர்த்தார்-
வெஞ் சினம் தரு களிப்பினர், வானர வீரர். 81

உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைந்து, ஆர்த்து, எழுந்து ஆடி,
தொடர்ந்து சென்றது; கொற்றம் அன்று இளவற்குத் தோற்றான்
கடைந்த வேலைபோல் கலங்குறும் இலங்கையில் கரந்தான். 82

இந்திரசித்தின் உட்கருத்தை உணராத இராம இலக்குவர் போர்க்கோலம் களைந்து நிற்றல்

'எல் கொள் நான்முகன் படைக்கலம், இவர் என்மேல் விடா முன்,
முற்கொள்வேன்' எனும் முயற்சியன், மறை முறை மொழிந்த
சொல் கொள் வேள்வி போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அவன் தொழில் மறந்தார். 83

அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி,
தனுவும், வெங் கணைப் புட்டிலும், கவசமும், தடக் கைக்கு
இனிய கோதையும், துறந்தனர், இருவரும்; இமையோர்
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர்; வாழ்த்தினர் பல்கால். 84

சூரியன் மறைதல்

ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி;
'தீர்த்தன்மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன்; முந்திப் படுவதே நன்று' எனப் பட்டான். 85

இராமன் ஆணைப்படி சேனைகளுக்கு உணவு கொணர வீடணன் செல்லுதல்

'இரவும் நன் பகலும் பெரு நெடுஞ் செரு இயற்றி,
உரவு நம் படை மெலிந்துளது; அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது; வீடண! வல்லையின் ஏகி,
தரவு வேண்டினென்' என்றனன், தாமரைக்கண்ணன். 86

'இன்னதே கடிது இயற்றுவென்' எனத் தொழுது எழுத்து,
பொன்னின் மௌலியன் வீடணன், தமரொடும், போனான்;
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையைக் கடந்தான்;
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான். 87

சேனைகளைக் காக்குமாறு இலக்குவனுக்கு இராமன் கட்டளையிட்டு, தெய்வப் படைகளுக்குப் பூசனை இயற்றச் செல்லுதல்

'தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
ஐய! நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்,
கை கொள் சேனையைக் கா' எனப் போர்க்களம் கடந்தான். 88

நிகழ்ந்தவற்றை இந்திரசித்து இராவணனுக்குக் கூறி, தன் திட்டத்தைக் கூறல்

தந்தையைக் கண்டு, புகுந்துள தன்மையும், தன்மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்,
சிந்தையுள் புகச் செப்பினன்; அனையவன் திகைத்தான்,
'எந்தை! என், இனிச் செயத் தக்கது? இசை' என, இசைத்தான். 89

'"தன்னைக் கொல்லுகை துணிவரேல், தனக்கு அது தகுமேல்,
முன்னர்க் கொல்லுகை முயல்க!" என்று அறிஞரே மொழிந்தார்;
அந் நற் போர் அவர் அறிவுறாவகை மறைந்து, அயன் தன்
வெல் நற் போர்ப் படை விடுதலே நலம்; இது விதியால். 90

தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல், அப் படை தொடுத்தே,
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர், அத் தவத்தோர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி,
முடிப்பேன், இன்று அவர் வாழ்வை, ஓர் கணத்து' என மொழிந்தான். 91

'என்னை அன்னவர் அறிந்திலாவகை செயல் இயற்ற,
துன்னு போர்ப் படை முடிவு இலாது அவர்வயின் தூண்டின்,
பின்னை, நின்றது புரிவென்' என்று அன்னவன் பேச,
மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம் மொழி வழங்கும்: 92

இராவணன், மகோதரனுக்கு இட்ட கட்டளை

'வெள்ளம் நூறுடை வெஞ் சினச் சேனையை, வீர!
அள் இலைப் படை அகம்பனே முதலிய அரக்கர்
எள் இல் எண் இலர்தம்மொடு விரைந்தனை ஏகி,
கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, மனிதரை குறுகி. 93

'மாயை என்றன, வல்லவை யாவையும், வழங்கி,
தீ இருட் பெரும் பிழம்பினை ஒழிவு அறத் திருத்தி,
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்;
போய் உருத்து, அவர் உயிர் குடித்து உதவு' எனப் புகன்றான். 94

மகோதரன் பெருஞ் சேனையோடு போர்க்குச் சென்ற காட்சி

என்ற காலையின் , 'என்று கொல் ஏவுவது?' என்று,
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்; இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மத கரிக் குலம் அன்ன குறியார். 95

கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த
ஆடல் ஆனைகள், அணிதொறும் அணிதொறும் அமைந்த;
ஓடு தேர்க் குலம், உலப்பு இல, ஓடி வந்து உற்ற;
கேடு இல் வாம் பரி, கணக்கையும், கடந்தன, கிளர்ந்த. 96

படைக்கலங்களும், பரு மணிப் பூண்களும், பரு வாய்
இடைக் கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும், எறிப்ப,
புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள,
விடைக் குலங்கள் போல், இராக்கதப் பதாதியும் மிடைந்த. 97

கொடிக் குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள,
இடிக் குழீஇ எழு மழைப் பெருங் குலங்களை இரித்த;
அடிக் குழீஇயிடும் இடம்தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த. 98

ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
வான யாறுகள், வாசி வாய் நுறையொடு மயங்கி,
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன, கடுகிப்
போன, போக்க அரும் பெருமைய, புணரியுள் புக்க. 99

தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ-சலத்தின்
மடித்த வாயினர், வாள் எயிற்று அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து,
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ. 100

சொன்ன நூறுடை வெள்ளம், அன்று இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது, 'முறை ஈது'
என்ன, மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை. 101

சங்கு பேரியும், காளமும், தாளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும், புரவியின் அமலையும், பொலந் தேர்
வெங் கண் ஓலமும், மால் என, விழுங்கிய உலகை. 102

அரக்கர்க்கும் வானரர்க்கும் நிகழ்ந்த பெரும் போர்

புக்கதால் பெரும் போர்ப் படை, பறந்தலைப் புறத்தில்;
தொக்கதால், நெடு வானரத் தானையும் துவன்றி,
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி. 103

குன்று கோடியும் கோடிமேல் கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள், முகம்தொறும் வீச,
ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்;
பொன்றி வீழ்ந்தன, பொரு கரி, பாய் பரி, பொலந் தேர். 104

மழுவும், சூலமும், வலயமும், நாஞ்சிலும், வாளும்,
எழுவும், ஈட்டியும், தோட்டியும், எழு முனைத் தண்டும்,
தழுவும், வேலொடு கணையமும், பகழியும், தாக்க,
குழவினோடு பட்டு உருண்டன, வானரக் குலங்கள். 105

முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும்,
சக்கரங்களும், பிண்டிபாலத்தொடு தண்டும்,
கப்பணங்களும், வளையமும், கவண் உமிழ் கல்லும்,
வெற்புஇனங்களை நுறுக்கின; கவிகளை வீழ்த்த. 106

கதிர் அயில் படைக் குலம் வரன்முறை முறை கடாவ,
அதிர் பிணப் பெருங் குன்றுகள் படப் பட, அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட,
எதிர் நடக்கில, குரக்குஇனம்; அரக்கரும் இயங்கார். 107

மடிந்த வானரரும் அரக்கரும் தேவர்கள் ஆதல்

யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர், எவரும்
தேவர் ஆதலின், அவரொடும் விசும்பிடைத் திரிந்தார்;
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி,
ஆவி ஒன்றிடத் தழுவினர், பிரிவு நோய் அகன்றார். 108

சுரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே, கடனா,
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா,
அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின அமலன்
சரத்தின், வேறு இனிப் பவித்திரம் உளது எனத் தகுமோ? 109

இலக்குவன் பெரும் போர் விளைவித்தல்

அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான்.
இந்து வெள் எயிற்று அரக்கரும், யானையும், தேரும்,
வந்த வந்தன, வானகம் இடம் பெறாவண்ணம்
சிந்தினான் சரம், இலக்குவன், முகம்தொறும் திரிந்தான். 110

கும்பகருணன் களத்தில் இட்ட தண்டைக் கொண்டு அனுமன் பொருதல்

கும்பகன்னன் ஆண்டு இட்டது, வயிர வான் குன்றின்
வெம்பு வெஞ் சுடர் விரிப்பது, தேவரை மேல்நாள்
தும்பையின் தலைத் துரந்தது, சுடர் மணித் தண்டு ஒன்று,
இம்பர் ஞாலத்தை நெளிப்பது, மாருதி எடுத்தான். 111

'காற்று அன்று, இது கனல் அன்று' என இமையோரிடை காணா
ஏற்றம்கொடு, விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்,
சீற்றம் தனி உருவாய், இடை தேறாதது ஓர் மாறு ஆம்
கூற்றம் கொடு முனை வந்தெனக் கொன்றான், இகல் வென்றான். 112

வெங் கண் மதமலைமேல், விரை பரிமேல், விடு தேர்மேல்,
சங்கம் தரு படை வீரர்கள் உடல்மேல், அவர் தலைமேல்,
"எங்கும் உளன் ஒருவன்" என இரு நான் மறை தெரிக்கும்
செங் கண்ணவன் இவனே' எனத் திரிந்தான் - கலை தெரிந்தான். 113

கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல் விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான், இரு கரத்தால்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், 'உலகு ஒரு மூன்றையும் வலத்தால்
அளந்தான் முனம் இவனே?' என இமையோர்களும் அயிர்த்தார். 114

மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி மேல்
முத்தின் பொலி முழு மேனியன், முகில் விண் தொடு மெய்யால்,
ஒத்தக் கடையுகம் உற்றுழி, உறு கால் பொர, உடு மீன்
தொத்தப் பொலி கனகக் கிரி வெயில் சுற்றியது ஒத்தான். 115

இடித்தான் நிலம் விசும்போடு என, இட்டான் அடி, எழுந்தான்;
பொடித்தான், கடற் பெருஞ் சேனையை; பொலந் தண்டு தன் வலத்தால்
பிடித்தான்; மத கரி, தேர், பரி, பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான்; உயிர் குடித்தான்; எடுத்து ஆர்த்தான்; பகை தீர்த்தான். 116

நூறாயிரம் மத மால் கரி, ஒரு நாழிகை நுவல்போது,
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான்,
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி,
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான். 117

தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர், சின வெங்
கார் ஏறினர், மழை ஏறினர், கலை எறினர், பல வெம்
போர் ஏறினர், புகழ் ஏறினர், புகுந்தார் புடை வளைந்தார்;
நேர் ஏறினர், விசும்பு ஏறிட, நெரித்தான், கதை திரித்தான். 118

சுக்கீரிவன் முதலிய வானரத்தலைவர், ஒருவரை ஒருவர் காணாராய், அரக்கரின் படைக் கடலில் அமைதல்

அரி குல மன்னன், நீலன், அங்கதன், குமுதன், சாம்பன்,
பரு வலிப் பனசன், என்று இப் படைத் தலை வீரர் யாரும்,
பொரு சினம் திருகி, வென்றிப் போர்க் கள மருங்கில் புக்கார்;
ஒருவரை ஒருவர் காணார்; உயர் படைக் கடலின் உள்ளார். 119

அனுமன்-அகம்பன் போர்

தொகும் படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவி,
நகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன,
மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி, வீர வாழ்க்கை
அகம்பனைக் கண்டான், தண்டால் அரக்கரை அரைக்கும் கையான். 120

மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன், மனத்தின் செல்லும்
தலைத் தடந் தேரன், வில்லன், தாருகன் என்னும் தன்மைக்
கொலைத் தொழில் அவுணன்; பின்னை, இராக்கத வேடம் கொண்டான்,
சிலைத் தொழில் குமரன் கொல்ல, தொல்லை நாள் செருவில் தீர்ந்தான். 121

'பாகசாதனனும், மற்றைப் பகை அடும் திகிரி பற்றும்
ஏக சாதனனும், மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும்
போக; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே,
ஆக; கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும்' என்றான். 122

'யான் தடேன் என்னின், மற்று இவ் எழு திரை வளாகம் என் ஆம்?
வான் தடாது; அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும்' என்னா,
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து, உருத்துச் சென்றான்;
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும், விரைவின் வந்தான். 123

தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கித் தெற்ற,
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
வாரொடு தொடர்ந்த பைம் பொற் கழலினன் வருதலோடும்,
சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான், வயிரத் தோளான். 124

எற்றின, எறிந்த, வல்லை ஏயின, எய்த, பெய்த,
முற்றின படைகள் யாவும், முறை முறை முறிந்து சிந்த,
சுற்றின வயிரத் தண்டால் துகைத்தனன், அமரர் துள்ள;
கற்றிலன் இன்று கற்றான், கதையினால் வதையின் கல்வி. 125

அகம்பனும் காணக் காண, ஐ-இரு கோடிக் கைம்மா,
முகம் பயில் கலினப் பாய்மா, முனை எயிற்று அரக்கர், மூரி
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்;-
உகம் பெயர் ஊழிக் காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான். 126

'இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி, வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி, மற்றை மனிதரை வெறியர் ஆக்கி,
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்பால் நிறுப்பென்' என்னாச்
சென்றனன் அகம்பன்; 'நன்று, வருக!' என அனுமன் சேர்ந்தான். 127

படுகளப் பரப்பை நோக்கி, பாழி வாய் மடித்து, நூழில்
சுடு கனற் பொறிகள் வெங் கண் தோன்றிட, கொடித் தேர் தூண்டி,
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின் ஆர்ப்பான். 128

சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும்
தெரிந்தன -அசனி போலத் தெறு பொறி பிதிர்வ திக்கின்,
வரிந்தன எருவை மானச் சிறைகளால், அமரர் மார்பை
அரிந்தன, வடிம்பு பொன் கொண்டு அணிந்தன, வாங்கு கண்ண. 129

மார்பினும் தோளின்மேலும், வாளி வாய் மடுத்த வாயில்,
சோர் பெருங் குருதி சோரத் துளங்குவான், தேறாமுன்னம்,
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி, புரள, வீரத் தண்டினால் கண்டம் செய்தான். 130

அகம்பன் தண்டு கொண்டு அனுமனுடன் பொருதல்

'வில்லினால் இவனை வெல்லல் அரிது' எனா, நிருதன் - வெய்ய
மல்லினால் இயன்ற தோளான், வளியினால், வானத் தச்சன்
கொல்லினால் இயன்றது, ஆங்கு, ஓர் கொடு முனைத் தண்டு கொண்டான்,-
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான், முகிலின் ஆர்ப்பான். 131

தாக்கினார்; இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி;
ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
தூக்கினார்; சுழற்றினார், மேல்; சுற்றினார், எற்ற எற்ற;
நீக்கினார்; நெருக்கினார்; மேல் நெருக்கினார்; நீங்கினார், மேல். 132

தட்டினார்; தழுவினார்; மேல் தாவினார்; தரையினோடும்
கிட்டினார்; கிடைத்தார்; வீசிப் புடைத்தனர் கீழும் மேலும்
கட்டினார்; காத்தார்; ஒன்றும் காண்கிலார், இறவு; கண்ணுற்று,
ஒட்டினார்; மாறி வட்டம் ஓடினார்; சாரி போனார். 133

மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,
வெய்யவன், தன் கைத் தண்டால் விலக்கினான்; விலக்கலோடும்,
கையொடும் இற்று, மற்று அக் கதை களம் கண்டது அன்றே. 134

கையொடு தண்டு நீங்க, கடல் எனக் கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன், மிடலுடை இடக் கை ஓச்சி,
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன்; அடித்த ஓசை,
ஒய்யென வயிரக் குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த. 135

அடித்தவன் தன்னை நோக்கி, அசனி ஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான், 'வெறுங்கையான்; பிழையிற்று' என்னா,
மடித்து வாய், இடத்துக் கையால் மார்பிடைக் குத்த, வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்னக் கக்கினன், குருதி வெள்ளம். 136

அகம்பனை அனுமன் வீழ்த்துதல்

மீட்டும் அக் கையால் வீசி, செவித் தலத்து எற்ற, வீழ்ந்தான்;
கூட்டினான் உயிரை; விண்ணோர் குழாத்திடை; அரக்கர் கூட்டக்
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன,
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன, திசைகள் எங்கும். 137

இலக்குவன் முதலியோரைப் பற்றிய செய்தி தெரியாமையால், அனுமன் துயருடன் தேடிச் செல்லுதல்

ஆர்க்கின்ற குரலும் கேளான்; இலக்குவன் அசனி ஏற்றைப்
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான்; வீரன்
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன்; இசைப்பார் இல்லை;
போர்க் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான். 138

அங்கதன் முதலியோர் நீண்ட தூரம் இடையிட்டு நின்று பொருதல்

வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
யோசனை ஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்,
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன்; அப்பால்,
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான். 139

மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன் - இரண்டு மூன்று காவதம் ஒழிய, பின்னும்
சுற்றிய சேனை நீர்மேல் பாசிபோல் மிடைந்து சுற்ற. 140

'இளையவன் நின்ற சூழல் எய்துவென், விரைவின்' என்னா,
உளைவு வந்து உள்ளம் தூண்ட, ஊழி வெங் காலின் செல்வான்,
களைவு அருந் துன்பம் நீங்கக் கண்டனன் என்ப மன்னோ-
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய. 141

அனுமன் தூரத்தே இலக்குவன் போர் செய்யும் குறிகளைக் காணுதல்

ஆனையின் கோடும், பீலித் தழைகளும், ஆரத்தோடு
மான மா மணியும், பொன்னும், முத்தமும், கொழித்து வாரி,
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர, வீசும்
பேன வெண் குடைய ஆய, குருதிப் பேர் ஆறு கண்டான். 142

ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர் தம்மேல்
வீசின பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி,
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற, ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவபோல், விழுவ கண்டான். 143

அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாம் ஆய்,
தெருள் உறத் தொடர்ந்து வீசிச் செல்வன, தேவர் காண
இருளிடைச் சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று எனச் சுடர்வ, கண்டான். 144

நெய் உறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என, பொருப்பின் ஓங்கும்
மெய் உறக் குருதித் தாரை விசும்பு உற, விளங்கி நின்றது-
ஐயனை, கங்குல் மாலை, அரசு என அறிந்து, காலம்,
கை விளக்கு எடுத்தது என்ன-கவந்தத்தின் காடு கண்டான். 145

ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித் திரிவன, தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான். 146

மிடல் கொளும் பகழி, வானின் மாரியின் மும்மை வீசி,
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து மாண்டார்
உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற
கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும், கண்டான். 147

சுழித்து எறி ஊழிக் காலத்து உரும் எனத் தொடர்ந்து தோன்ற,
தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான்; 'தனிப் பேர் அண்டம்
கிழித்தது, கிழித்தது' என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்;
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான். 148

அனுமனைத் தழுவி, இலக்குவன் சேனையின் நிலைமையை உசாவுதல்

ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; 'எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும்' என்று, அகம் மகிழ்ந்து, வள்ளல்
பார்த்தனன்; பாராமுன்னம் பணிந்தனன், விசயப் பாவை
தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்: 149

'அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே?
விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தெரிகிலென்; உரைத்தி' என்றான், சென்னிமேல் கையன் சொல்வான். 150

அனுமனின் மறுமொழி

'போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில்
ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே தெரியுறும், விளைந்தது' என்றான் -
தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை. 151

'மந்திரம் உளதால், ஐய! உணர்த்துவென்; மறைநூல் ஆய்ந்த
சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி; தெவ்வர்
தந்திரம் அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின் அல்லால்,
எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை' என்றான். 152

அனுமன் உரைத்தவண்ணம் இலக்குவன் சிவன் படையை வீசுதல்

'அன்னது புரிவென்' என்னா, ஆயிர நாமத்து அண்ணல்-
தன்னையே தொழுது வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து வாங்கி,
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் - வில்லின் செல்வன். 153

முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்து ஒன்றும் போகாவண்ணம்
அக் கணத்து எரிந்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் இடுக்கண் தீர்ந்தார். 154

தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்;
ஏவரும் இரிந்தார் எல்லாம், இன மழை என்ன ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார். 155

யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரக்குச் சேனை கடல் எனக் கிளர்ந்து சுற்ற,
பூ வர்க்கம் இமையோர் தூவ, பொலிந்தனன்; தூதர் போனார். 156

தூதர் சென்று, இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் செய்தி கூறுதல்

இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார், 'நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லின், வேழக்
குலங்களினோடும் கொல்லக் கூடுமோ?' என்ன, 'கொன்றை
அலங்கலான் படையின்' என்றார். 'அன்னதேல், ஆகும்' என்றான். 157

'வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை மாயத்
தந்திரம் தெரிவான் போனான், உண்பன தாழ்க்க; தாழா
எந்தை! ஈது இயன்றது' என்றார், 'மகோதரன் யாண்டை?' என்ன,
'அந்தரத்திடையன்' என்றார். இராவணி, 'அழகிற்று!' என்றான். 158

இந்திரசித்து பிரமாத்திரம் விடும் பொருட்டு வேள்வி செய்தல்

'காலம் ஈது' எனக் கருதிய இராவணன் காதல்,
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார். 159

அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன்; அனலில்
தும்பை மா மலர் தூவினன்; காரி எள் சொரிந்தான்;
கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங் குருதி,
வெம்பு வெந் தசை, முறையின் இட்டு, எண்ணெயால் வேட்டான். 160

பிரமாத்திரத்துடன் வானில் சென்று, இந்திரசித்து மாயையினால் மறைந்திருத்தல்

வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையன், வரன்முறை கொண்டே,
'நிலம் சுரந்து எழும் வென்றி' என்று உம்பரில் நிமிர்ந்தான். 161

விசும்பு போயினன், மாயைபின் பெருமையான்; மேலைப்
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத்
தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார. 162

மாயையினால் மகோதரன் இந்திர வடிவுடன் வந்து பொருதலும், வானரர் திகைத்தலும்

அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து, ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான். 163

'அரக்கர், மானிடர், குரங்கு, எனும் இவை எலாம் அல்லா
உருக்களாய் உள, யாவையும், உலகத்தின் உலவாத்
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம்' எனச் சமைத்தான்;
வெருக்கொளப் பெருங் கவிப் படை குலைந்தது, விலங்கி. 164

'கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி,
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்?' என உலைந்தார். 165

முனிவரும் வானவரும் வந்து பொரும் காரணம் பற்றி அனுமனை இலக்குவன் வினாவுதல்

அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தம்பி,
'முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து' எனச் சொன்னான். 166

இந்திரசித்து பிரமாத்திரத்தை இலக்குவன் மேல் விடுதலும் அதனால் நேர்ந்த விளைவுகளும்

இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்,
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போல,
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த. 167

கோடி கோடி நூறாயிரம் கொடுங் கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான். 168

அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து' என எழுந்தான்;
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான். 169

அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் மூட,
தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க,
உருக்கு செம்பு அன கண்ணினன், நெடு நிலம் உற்றான். 170

அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த,
சிங்க ஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்,
துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க. 171

நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். 172

வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார்;
கால வெந் தொழில் கயவனும் வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான். 173

கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்;
அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்;
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்;
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப் புரண்டான். 174

விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர,
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார். 175

மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால்
முற்றும் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்
எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற,
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட. 176

தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி;
ஒளிக்க, மற்றொரு புகழிடம் உணர்கிலர்; உருமின்
வளைத்து வீக்கிய வாளியால், மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த. 177

குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித்
திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை. 178

விண் சென்ற வானரர்க்குத் தேவர்கள் விருந்து செய்து பாராட்டுதல்

விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
'மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே' எனும் மனத்தார். 179

'பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்;
நீர் படக் கடவீர் அலீர்;-வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு. 180

'நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்' என்று இமையவர் இசைத்தார். 181

இந்திரசித்து தந்தையின் இருப்பிடம் சென்று செய்தி சொல்லுதல்

'வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், இராமன் இப்போது' என இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான். 182

'இராமன் இறந்திலனோ?' என்ற இராவணன் வினாவுக்கு இந்திரசித்தின் மறுமொழி

'இறந்திலன்கொலாம் இராமன்?' என்று இராவணன் இசைத்தான்;
'துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?' என்றான், மதலை. 183

இந்திரசித்தும் மகோதரனும் தத்தம் இருப்பிடம் செல்லுதல்

'அன்னதே' என, அரக்கனும், ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான்;
மன்னன் ஆணையின் போயினன், மகோதரன் வந்தான்;
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான். 184

இராமன் தெய்வப் படைகளுக்குப் பூசனை இயற்றி, போர்க்களம் நோக்கிப் புறப்படுதல்

செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப,
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
'மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி' என முயன்றான். 185

கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
தள்ளி, தாமரைச் சேவடி நுடங்கிடத் தளர்ந்தான். 186

போர்க்களம் புகுந்த இராமன் சுக்கிரீவன் முதலிய படைத் தலைவர்களைத் தனித் தனிக் காணுதல்

நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி,
ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
காக்கும் வானரத் துணைவரைத் தனித் தனிக் கண்டான். 187

சுக்கிரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக் கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
'தக்கதோ, இது நினக்கு!' என, தனி மனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான். 188

சுக்கிரீவன், அனுமன், முதலியோரின் நிலைமை கண்டு, இராமன் நொந்து புலம்புதல்

'கடல் கடந்து புக்கு, அரக்கரைக் கருமுதல் கலக்கி,
இடர் கடந்து நான் இருப்ப, நீ நல்கியது இதுவோ?
உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி?' என்று, ஆகுலித்து அழுதான். 189

'முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன, பிறிது என்?
புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால் புகழோர்
என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்?' என்று இசைத்தான். 190

'புன் தொழில் புலை அரசினை வெஃகினேன் பூண்டேன்;
கொன்று ஒருக்கினென், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினென், இத்தனை வீரரை; இருந்தேன்!
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ? 191

'தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை இத்துணை கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென்' எனச் சொன்னான். 192

விடைக் குலங்களின் இடை ஒரு விடை கிடந்தென்ன,
கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
'படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன், பழி பார்த்து,
அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது' என்று அழுதான். 193

இலக்குவனைக் கண்டு இராமன் அடைந்த துயரம்

உடலிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச்
சுடருடைய பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த
மிடலுடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக்
கடலிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான். 194

பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான். 195

உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்த்திலன் ஒன்றும்;
வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை; விண்ணோர்,
'அயர்த்தனன் கொல்?' என்று அஞ்சினர்; அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன் - கருணையால் பிறந்தான். 196

தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை
வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்? 197

கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணாச்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகத்து ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும்,
நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார். 198

வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி. 199

முகைய நாள்மலர்க் கிழவற்கும், முக்கணான் தனக்கும்,
நகையும் நீங்கிய; திருமுகம், கருணையின் நலிந்த;
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என்? தொடர்ந்த
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால். 200

அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகக்
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
'விண்ணை உற்றனன்; மீள்கிலன்' என்று, அகம் வெதும்பி,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்: 201

இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல்

'"எந்தை இறந்தான்" என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்! 202

'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால். 203

'ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே? 204

'பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தி,
துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ? 205

அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, யாவர், உனக்கு இங்கு உறவு? அம்மா! 206

'வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, "ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும்!" என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்? 207

'மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்த என் புகழ் நன்றால்! எளியேனோ! 208

'மாண்டாய் நீயோ; யான் ஒரு போதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன் தான்!
பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்? 209

'அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்!
இறந்தாய்; உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? 210

'சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்டால்,
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா? 211

'வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா! 212

'இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனேல்,
வருந்தேன்; "நீயே வெல்லுதி" என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன்! 213

'மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
"ஏது ஆனாரோ?" என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தேன்; தளர்கின்றேன்;
போதாய், ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்! 214

'பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசம் உஞற்றிய போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன்; தனி நின்றேன்;
தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைச் சிரியாரோ? 215

'கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?' 216

புலம்பிய இராமன் அறிவு சோர்ந்து துயில்தல்

என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான். 217

தேவர்கள் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்

கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார், துன்பம்; 'என் முடிவு?' என்னாக் குலைகின்றார்;
'அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ , உன்பால் துன்பு?' என அன்போடு உரை செய்தார். 218

'உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள திறம் உள்ளோம்;
பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம், பிறழாமல்;
நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்,
என்னை, அடியோம் செயற்பால? - இன்ப-துன்பம் இல்லோனே! 219

'"அரக்கர் குலத்தை வேரறுத்து, எம் அல்லல் நீக்கியருள்வாய்" என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ? 220

'ஈன்றாய்! இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி, அரசர் இல் பிறந்தாய்!
"மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி" என்னும் ஆசை முயல்கின்றோம்;
ஏன்றும் மறந்தோம், "அவன் அல்லன்; மனிதன்" என்றே; இம் மாயம்
போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ? 221

'அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக் கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய்-பரமேட்டி! 222

'துன்ப விளையாட்டு இதுவேயும், நின்னைத் துன்பம் தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதோருக்கு இடர் உறுமால்;
அன்பின் விளைவும், அருள் விளைவும், அறிவின் விளைவும், அவை எல்லாம்,-
முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடிந்தால் அன்றி, முடியாவே. 223

'வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க, மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இடரைக் காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?' 224

'அம்பரீடற்கு அருளியதும், அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றோம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ?' 225

இராவணனிடத்திற்குத் தூதர் சென்று, 'உன் பகை முடிந்தது' என அறிவித்தல்

என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர் உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம் புக்கார். 226

'என் வந்தது, நீர்?' என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப, 'எறி செருவில்,
நின் மைந்தன் தன் நெடுஞ் சரத்தால், துணைவர் எல்லாம் நிலம்சேர,
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி, பெருந் துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய் முடிந்தது' என மொழிந்தார். 227

மிகைப் பாடல்கள்

பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. 7-1

இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ ? மேரு என்று அமைந்த வில்லான்,
உமைக்கு ஒரு பாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 21-1

தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன் கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். 25-1

ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான். 77-1

இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருகெனப் புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான். 88-1

மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின, கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த வாசி;-
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால். 137-1

அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல் கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும் இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும் நின்றான். 140-1

மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
ஆன வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 143-1

'தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின்' என்னச் சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், 'யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின், விரைவின்' என்றான். 157-1

தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்! 202-1