யுத்த காண்டம்

2. இராவணன் மந்திரப் படலம்

மயன் எரியுண்ட இலங்கையைப் புதுப்பித்தல்

பூ வரும் அயனொடும் புகுந்து 'பொன் நகர்,
மூவகை உலகினும் அழகு முற்றுற,
ஏவு' என இயற்றினன், கணத்தின் என்பரால்-
தேவரும் மருள்கொள, தெய்வத் தச்சனே. 1

பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை
நல் நகர் நோக்கினன், நாகம் நோக்கினான்,
'முன்னையின் அழகு உடைத்து!' என்று, மொய் கழல்
மன்னனும், உவந்த, தன் முனிவு மாறினான். 2

முழுப் பெருந் தனி முதல் உலகின் முந்தையோன்
எழில் குறி காட்டி நின்று, இயற்றி ஈந்தனன்;-
பழிப்ப அரும் உலகங்கள் எவையும் பல் முறை
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ? 3

திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய,
பொரு கழல், இராவணன் அயற்குப் பூசனை
வரன்முறை இயற்றி, 'நீ வழிக் கொள்வாய்' என்றான் -
அரியன தச்சற்கும் உதவி, ஆணையால். 4

சுற்றத்தார் சூழ, இராவணன் ஆலோசனை மண்டபத்து வீற்றிருத்தல்

அவ் வழி, ஆயிரம் ஆயிரம் நிரைச்
செவ் வழிச் செம் மணித் தூணம் சேர்த்திய
அவ் எழில் மண்டபத்து, அரிகள் ஏந்திய
வெவ் வழி ஆசனத்து, இனிது மேவினான். 5

வரம்பு அறு சுற்றமும், மந்திரத் தொழில்
நிரம்பிய முதியரும், சேனை நீள் கடல்
தரம் பெறு தலைவரும், தழுவத் தோன்றினான் -
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான். 6

முனிவர் முதலானோரை அகற்றி, மந்திரிமாரையும், உறவினரையும், உடன் இருக்கச் செய்தல்

'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர்
எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான்,
புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான் -
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான். 7

'பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர்,
தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக்
கொண்டு உடன் இருந்தனன் - கொற்ற ஆணையால்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான். 8

ஆன்று அமை கேள்வியர் எனினும், ஆண்தொழிற்கு
ஏன்றவர் அன்பினர் எனினும், யாரையும்,
வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்
போன்றவர் அல்லரை, புறத்துப் போக்கினான். 9

திசைகளில் வீரரை நிறுவுதல்

திசைதொறும் நிறுவினன், உலகு சேரினும்
பிசை தொழில் மறவரை; பிறிது என் பேசுவ-
விசையுறு பறவையும், விலங்கும், வேற்றவும்,
அசைதொழில் அஞ்சின, சித்திரத்தினே? 10

இராவணன் தன் மாட்சி அழிந்தமை குறித்து பேசுதல்

'தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என், இனி?
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்;
ஆட்சியும், அமைவும், என் அரசும் நன்று!' எனா,
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்: 11

'சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக்
கெட்டது, கொடி நகர்; கிளையும் நண்பரும்
பட்டனர்; பரிபவம் பரந்தது, எங்கணும்;
இட்ட இவ் அரியணை இருந்தது, என் உடல். 12

'ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒண் நகர்
ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும்,
கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு
நாறுகின்றது நுகர்ந்திருந்தம், நாம் எலாம், 13

'மற்று இலது ஆயினும், "மலைந்த வானரம்
இற்று, இலதாகியது" என்னும் வார்த்தையும்
பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேர் அலால்,
முற்றுவது என்? இனி, பழியின் மூழ்கினாம்!' 14

சேனை காவலன் பிரகத்தன் பேசுதல்

என்று அவன் இயம்பலும், எழுந்து இறைஞ்சினான்,
கன்றிய, கருங் கழல், சேனை காவலன்;
'ஒன்று உளது உணர்த்துவது; ஒருங்கு கேள்!' எனா,
நின்றனன், நிகழ்த்தினன், புணர்ப்பின் நெஞ்சினான்: 15

'"வஞ்சனை மனிதரை இயற்றி, வாள் நுதல்,
பஞ்சு அன மெல் அடி, மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில்" என அறிவித்தேன்; அது
தஞ்சு என உணர்ந்திலை - உணரும் தன்மையோய்! 16

'கரன் முதல் வீரரைக் கொன்ற கள்வரை,
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை,
பரிபவம் செய்ஞ்ஞரை, படுக்கலாத நீ,
"அரசியல் அழிந்தது" என்று அயர்தி போலுமால். 17

'தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக்
கண்டவர், பொறுப்பரோ, உலகம் காவலர்?
வண்டு உறை அலங்கலாய்! வணங்கி வாழ்வதோ,
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான்? 18

'செற்றவர், எதிர் எழும் தேவர், தானவர்,
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற,
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது,
வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப வேண்டுமால். 19

'விலங்கினர் உயிர் கெட விலக்கி, மீள்கலாது,
இலங்கையின் இனிது இருந்து, இன்பம் துய்த்துமேல், -
குலம் கெழு காவல! - குரங்கின் தங்குமோ?
உலங்கும் நம் மேல் வரின், ஒழிக்கற்பாலதோ? 20

'போயின குரங்கினைத் தொடர்ந்து போய், இவண்
ஏயினர் உயிர் குடித்து, எவ்வம் தீர்கிலம்;
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்,
ஓயும், நம் வலி' என, உணரக் கூறுனான். 21

மகோதரன் பேச்சு

மற்று அவன் பின்னுற, மகோதரப் பெயர்க்
கல் தடந் தோளினான், எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான், 'முடிவும் அன்னதால்;
கொற்றவ! கேள்' என, இனைய கூறினான்: 22

'தேவரும் அடங்கினர்; இயக்கர் சிந்தினர்;
தா வரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்;
யாவரும், "இறைவர்" என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் - உனக்கு, மொய்ம்பினோய்! 23

'ஏற்றம் என் பிறிது, இனி-எவர்க்கும் இன் உயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை
கூற்றும், "நீ தன் உயிர் கொள்ளும் கூற்று" எனத்
தோற்று, நின் ஏவல் தன் தலையில் சூடுமால்? 24

'வெள்ளிஅம் கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி, விண் தொட எடுத்து, ஆர்த்த ஆற்றலாய்!
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும், நின் புயத்தை, எம்மொடும்? 25

'மண்ணினும், வானினும், மற்றும் முற்றும் நின்,
கண்ணினும் நீங்கினர் யாவர், கண்டவர்?
நண்ண அரும் வலத்தினர் யாவர், நாயக!
எண்ணிலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ? 26

'இடுக்கு இவண் இயம்புவது என்னை? ஈண்டு எனை
விடுக்குவையாம் எனின், குரங்கை வேர் அறுத்து,
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு, உன் பகை
முடிக்குவென் யான்' என முடியக் கூறினான். 27

வச்சிரதந்தனின் கூற்று

இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின்,
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான்,
'அச் சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று' என்றனன் -
பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான். 28

'"போய் இனி, மனிதரைக் குரங்கைப் பூமியில்
தேயுமின், கைகளால்; தின்மின்" என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி, என், இனி
ஆயும் இது? எம்வயின் அயிர்ப்பு உண்டாம்கொலோ? 29

'எவ் உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத்
தெவ்வினை அறுத்து, உனக்கு அடிமை செய்த யான்
தவ்வின பணி உளது ஆகத்தான் கொலோ,
இவ் வினை என்வயின் ஈகலாது?' என்றான். 30

வச்சிரதந்தன் பேச்சைத் மறுத்து துன்முகன் சொல்லியவை

'நில், நில்' என்று, அவன் தனை விலக்கி, 'நீ இவை
என் முனும் எளியர்போல் இருத்தியோ?' எனா,
மன் முகம் நோக்கினன், வணங்கி, வன்மையால்,
துன்முகன் என்பவன், இனைய சொல்லுவான்: 31

'திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்;
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,
அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே! 32

'பொலிவது, பொதுவுற எண்ணும் புன் தொழில்
மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவோர்
வலியினர்எனில், அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ -
ஒலி கழல் ஒருவ! - நம் உயிருக்கு அன்பினால்? 33

'கண்ணிய மந்திரம் கருமம் காவல! -
மண் இயல் மனிதரும், குரங்கும், மற்றவும்,
உண்ணிய அமைந்தன; உணவுக்கு உட்குமேல்,
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே? 34

'எரி உற மடுப்பதும், எதிர்ந்துளோர் படப்
பொரு தொழில் யாவையும் புரிந்து, போவதும்
வருவதும், குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து,
அரிதுகொல், இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்? 35

'வந்து, நம் இருக்கையும், அரணும், வன்மையும்,
வெந் தொழில் தானையின் விரிவும், வீரமும்,
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர்,
உய்ந்து தம் உயிர்கொடு இவ் உலகத்துள் உளார்? 36

'ஒல்வது நினையினும், உறுதி ஓரினும்,
வெல்வது விரும்பினும், வினையம் வேண்டினும்,
செல்வது ஆங்கு; அவருழைச் சென்று, தீர்ந்து அறக்
கொல்வது கருமம்' என்று உணரக் கூறினான். 37

துன்முகனை அடக்கி, மாபெரும்பக்கன் பேசுதல்

காவலன் கண் எதிர், அவனைக் கை கவித்து,
'யாவது உண்டு, இனி நமக்கு?' என்னச் சொல்லினான்;
'கோவமும் வன்மையும் குரங்குக்கே' எனா, -
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான். 38

'முந்தினர், முரண் இலர் சிலவர், மொய் அமர்
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ?
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்,
வெந்ததோ, இலங்கையோடு அரக்கர் வெம்மையும்? 39

'மானுடர் ஏவுவார்; குரங்கு வந்து, இவ் ஊர் -
தான் எரி மடுப்பது; நிருதர், தானையே,
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின்,
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ? 40

'நின்று நின்று, இவை சில விளம்ப நேர்கிலென்;
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்
கொன்று தின்றல்லது, ஓர் எண்ணம் கூடுமோ?'
என்றனன் - இகல் குறித்து எரியும் கண்ணினான். 41

பிசாசன் முதலியோர் பேச்சு

'திசாதிசை போதும் நாம், அரசன் செய் வினை
உசாவினன், உட்கினன்; ஒழிதும் வாழ்வு' என்றான் -
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல்
நிசாசரன், உருப் புணர் நெருப்பின் நீர்மையான். 42

'ஆரியன் தன்மை ஈது ஆயின், ஆய்வுறு
காரியம் ஈதுஎனின், கண்ட ஆற்றினால்,
சீரியர் மனிதரே; சிறியம் யாம்' எனா,
சூரியன்பகைஞன் என்று ஒருவன், சொல்லினான். 43

'ஆள்வினை நிலைமையும், அரக்கர் ஆற்றலும்,
தாழ் வினை இதனின்மேல் பகரத் தக்கதோ?
சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம்!' எனா,
வேள்வியின் பகைஞனும் உரைத்து, வெள்கினான். 44

'தொகை நிலைக் குரங்குடை மனிதர்ச் சொல்லி என்?
சிகை நிறச் சூலிதன் திறத்தின் செல்லினும்,
நகை உடைத்தாம்; அமர் செய்தல் நன்று' எனா,
புகை நிறக் கண்ணனும் புகன்று, பொங்கினான். 45

மற்று அவன் பின்னுற, மற்றையோர்களும், -
'இற்றிதுவே நலம்; எண்ணம் மற்று இல்' என்று,
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் -
புற்று உறை அரவு எனப் புழுங்கு நெஞ்சினார். 46

கும்பகருணன் பேச்சு

வெம்பு இகல் அரக்கரை விலக்கி, 'வினை தேரா
நம்பியர் இருக்க!' என, நாயகனை முன்னா,
'எம்பி எனகிற்கில், உரைசெய்வல் இதம்' என்னா,
கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்: 47

'நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய்;
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்;
ஏயின உறத் தகைய இத்துணையவேயோ? 48

'ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
"கோ-இயல் அழிந்தது" என; வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ ? 49

'"நல் நகர் அழிந்தது" என நாணினை; நயத்தால்
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல்
மன் நகை தரத் தர, ஒருத்தன் மனை உற்றாள்,
பொன் அடி தொழத் தொழ, மறுத்தல் புகழ் போலாம்? 50

'என்று ஒருவன் இல் உறை தவத்தியை, இரங்காய்,
வன் தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்,
அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ்; ஐயா!
புன் தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ? 51

'ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்! 52

'சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி, மன்னா!
விட்டிடுதுமேல், எளியம் ஆதும்; அவர் வெல்ல,
பட்டிடுதுமேல், அதுவும் நன்று; பழி அன்றால். 53

'மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்,
கரன் படை படுத்து, அவனை வென்று, களை கட்டான்;
நிரம்பிடுவது அன்று, அதுவும்; நின்றது, இனி நம்பால்
உரம் படுவதே; இதனின் மேல் உறுதி உண்டோ ? 54

'வென்றிடுவர் மானுடவரேனும், அவர்தம்மேல்
நின்று, இடைவிடாது நெறி சென்று, உற நெருக்கித்
தின்றிடுதல் செய்கிலம் எனின், செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்று ஆம். 55

'ஊறு படை ஊறுவதன் முன்னம், ஒரு நாளே,
ஏறு கடல் ஏறி, நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை, வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம்' என்பது நுவன்றான். 56

கும்பகருணன் கூற்றிற்கு இசைந்த இராவணன் 'போருக்கு எழுக!' எனல்

'நன்று உரைசெய்தாய் - குமர! - நான் இது நினைந்தேன்;
ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம்; நமர் கொடிப் படையை எல்லாம்,
"இன்று எழுக" என்க!' என இராவணன் இசைத்தான். 57

இந்திரசித்து தன் தந்தையின் செயலைத் தடுத்து, வென்று வருவேன் என்று கூறுதல்

என்று அவன் இயம்பிடும் எல்லையினில், 'வல்லே
சென்று படையோடு, சிறு மானுடர் சினப் போர்
வென்று பெயர்வாய், அரச! நீ கொல்? என வீரம்
நன்று பெரிது!' என்று மகன் நக்கு, இவை நவின்றான்: 58

'ஈசன் அருள் செய்தனவும், ஏடு அவிழ் மலர்ப் பேர்
ஆசனம் உவந்தவன் அளித்தனவும், ஆய
பாசம் முதல் வெம் படை சுமந்து, பலர் நின்றார்;
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ? 59

'முற்றும் முதலாய் உலகம் மூன்றும், எதிர் தோன்றிச்
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும்,
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின், என்னைப்
பெற்றும் இலை; யான் நெறி பிறந்தும் இலென்' என்றான். 60

'குரங்கு பட, மேதினி குறைந்தலை நடப் போர்
அரங்கு பட, மானுடர் அலந்தலை பட, பார்
இரங்கு படர் சீதை பட, இன்று இருவர் நின்றார்
சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி - சினத்தோய்! 61

'சொல்லிடை கிழிக்கிலை, சுருங்கிய குரங்கு என்
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி, தம்
பல்லிடை, கிழித்து இரிவ கண்டு, பயன் உய்ப்பாய். 62

'யானை இலர்; தேர் புரவி யாதும் இலர்; ஏவும்
தானை இலர்; நின்ற தவம் ஒன்றும் இலர்; தாமோ,
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்?
ஆனவரும் மானுடர்; நம் ஆண்மை அழகு அன்றோ? 63

'நீரும், நிலனும், நெடிய காலும், நிமிர் வானும்,
பேர் உலகில் யாவும், ஒரு நாள் புடைபெயர்த்தே,
யாரும் ஒழியாமை, நரர் வானரரை எல்லாம்,
வேரும் ஒழியாதவகை வென்று அலது, மீளேன்'. 64

என்று, அடி இறைஞ்சினன் எழுந்து, 'விடை ஈமோ,
வன் திறலினாய்!' எனலும், வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து, நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும்: 65

இந்திரசித்து கூறியதைக் கண்டித்து, வீடணனின் பேருரை

'நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை
போலுமால்! - உறு பொருள் புகலும் பூட்சியோய்!
காலம், மேல் விளை பொருள், உணரும் கற்பு இலாப்
பால! - நீ இனையன பகரற்பாலையோ? 66

'கருத்து இலான், கண் இலான், ஒருத்தன் கைக்கொடு
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய்;
விருத்தர், மேதகையவர், வினைஞர், மந்திரத்து
இருத்தியோ? - இளமையால் முறைமை எண்ணலாய்! 67

'தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர்
ஆயவர் நிற்க; மற்று அவுணர் ஆதியாம்,
தீயவர், அறத்தினால் தேவர் ஆயது
மாயமோ? வஞ்சமோ? வன்மையேகொலோ? 68

'அறம் துறந்து, அமரரை வென்ற ஆண்தொழில் -
திறம் தெரிந்திடின், அதுதானும் செய் தவம்
நிறம் திறம்பாவகை இயற்றும் நீதியால்,
மறம் துறந்து, அவர் தரும் வரத்தின் வன்மையால். 69

'மூவரை வென்று, மூன்று உலகும் முற்றுறக்
காவலில்நின்று, தம் களிப்புக் கைம்மிக,
வீவது முடிவு என வீந்தது அல்லது,
தேவரை வென்றவர் யாவர், தீமையோர்? 70

'வினைகளை வென்று, மேல் வீடு கண்டவர்
எனைவர் என்று இயம்புகேன், எவ்வம் தீர்க்கையான்?
முனைவரும் அமரரும், முன்னும் பின்னரும்,
அனையவர் திறத்து உளர் யாவர், ஆற்றினார்? 71

'பிள்ளைமை விளம்பினை, பேதை நீ' என
ஒள்ளிய புதல்வனை உரப்பி, 'என் உரை
எள்ளலையாம் எனின், இயம்பல் ஆற்றுவென்,
தெள்ளிய பொருள்' என அரசற் செப்பினான்: 72

'எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ
வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ;
"இந்திரப் பெரும் பதம் இழக்கின்றாய்" என
நொந்தனென் ஆதலின், நுவல்வது ஆயினேன். 73

'கற்றுறு மாட்சி என் கண் இன்றாயினும்,
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்,
சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்,
முற்றுறக் கேட்ட பின், முனிதி - மொய்ம்பினோய்! 74

'கோநகர் முழுவதும், நினது கொற்றமும்,
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால், வெந்தது அல்லது, "ஓர்
வானரம் சுட்டது" என்று உணர்தல் மாட்சியோ? 75

'எண்பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால்,
விண்பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும்,
பெண்பொருட்டு அன்றியும், பிறிது உண்டாம் எனின்,
மண்பொருட்டு அன்றியும், வரவும் வல்லவோ? 76

'"மீனுடை நெடுங் கடல் இலங்கை வேந்து என்பான்
தானுடை நெடுந் தவம் தளர்ந்து சாய்வது, ஓர்
மானுட மடந்தையால்" என்னும் வாய்மொழி -
தேனுடை அலங்கலாய்! - இன்று தீர்ந்ததோ? 77

'ஏறிய நெடுந் தவம் இழைத்த எல்லை நாள்,
ஆறிய பெருங் குணத்து அறிவன் ஆணையால்,
கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை;
வேறு இனி அவர்வயின் வென்றி யாவதோ? 78

'ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ?
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய்;
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம்; இனி, விளம்ப வேண்டுமோ? 79

'மேல் உயர் கயிலையை எடுத்த மேலைநாள்,
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்,
கூல வான் குரங்கினால் குறுகும், கோள்; அது
வாலிபால் கண்டனம் - வரம்பு இல் ஆற்றலாய்! 80

'தீயிடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?
"நோய் உனக்கு யான்" என நுவன்றுளாள் அவள்;
ஆயவள் சீதை, பண்டு அமுதின் தோன்றினாள். 81

'சம்பரப் பெயருடைத் தானவர்க்கு இறைவனைத் தனு வலத்தால்,
அம்பரத்து உம்பர் புக்கு, அமரிடைத் தலை துமித்து, அமரர் உய்ய,
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் - ஒருவன், நேமி
இம்பரில் பணி செய, தசரதப் பெயரினான், இசை வளர்த்தான்; 82

'மிடல் படைத்து, ஒருவனாய், அமரர் கோன் விடையதா வெரிநின் மேலாய்,
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய, வாள் உருவினானும்,
அடல் படைத்து, அவனியை, "பெரு வளம் தருக!" என்று அருளினானும்,
கடல் படைத்தவரொடும், கங்கை தந்தவன் வழிக் கடவுள் மன்னன். 83

'பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம் அறப் பொருது, தன் வேல்
நெய் உரைத்து, உறையில் இட்டு, அறம் வளர்த்து, ஒருவனாய் நெறியில் நின்றான்,
மை உரைத்து உலவு கண் மனைவிபால் வரம் அளித்து, அவை மறாதே,
மெய் உரைத்து, உயிர் கொடுத்து, அமரரும் பெறுகிலா வீடு பெற்றான். 84

'அனையவன் சிறுவர், எம் பெரும! உன் பகைஞரானவரை அம்மா
இனையர் என்று உணர்தியேல், இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்;
முனைவரும் அமரரும், முழுது உணர்ந்தவர்களும், முற்றும் மற்றும்,
நினைவு அருந் தகையர்; நம் வினையினால் மனிதர் ஆய், எளிது நின்றார். 85

'கோசிகப் பெயருடைக் குல முனித் தலைவன், "அக் குளிர் மலர்ப் பேர்
ஆசனத்தவனொடு எவ் உலகமும் தருவென்" என்று அமையலுற்றான்,
ஈசனின் பெறு படைக்கலம், இமைப்பு அளவில் எவ் உலகில் யாவும்
நாசம் உற்றிட நடப்பன, கொடுத்தன பிடித்துடையர் - நம்ப! 86

'எறுழ் வலிப் பொரு இல் தோள் அவுணரோடு அமரர், பண்டு, இகல் செய் காலத்து,
உறு திறல் கலுழன்மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும்,
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும்,
குறுமுனிப் பெயரினான், நிறை தவர்க்கு இறை, தரக் கொண்டு நின்றார். 87

'நாவினால் உலகை நக்கிடுவ; திக்கு அளவிடற்கு உரிய; நாளும்,
மேவு தீ விடம் உயிர்ப்பன; வெயில் பொழி எயிற்றன; அ(வ்) வீரர்
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ; - முற்று அறிவருக்கு அழிவு செய்யும்
பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது, இரை பெறா - பகழி நாகம். 88

'பேருமோ ஒருவரால், அவர்களால் அல்லது? இப் பெரியவேனும்,
நாரும், மூரியும் அறா; நம்முடைச் சிலைகள்போல் நலிவ ஆமோ?
தாருமோ, வேணுமோ, தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும்
மேருவோ, மால் வரைக் குலம் எலாம் அல்லவோ, வில்லும் மன்னோ? 89

'உரம் ஒருங்கியது, நீர் கடையும் வாலியது மார்பு; உலகை மூடும்
மரம் ஒருங்கிய; கராதியர், விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கிய; இனிச் செரு ஒருங்கியது எனின், தேவர் என்பார்
பரம் ஒருங்குவது அலால், பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ ? 90

'சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள், தம் துணை இலாதார்,
"எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும்
வெல்வர்" என்பது தெரிந்து, எண்ணினார், "நிருதர் வேர் முதலும் வீயக்
கொல்வர்" என்று உணர்தலால், அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார். 91

'துஞ்சுகின்றிலர்களால், இரவும் நன் பகலும், நிற் சொல்ல ஒல்கி,
நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்; "பேர் சனகி ஆம் நெடியது ஆய
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம்" என்று எண்ணி, நம்மை
அஞ்சுகின்றிலர்கள் - நின் அருள் அலால், சரண் இலா அமரர் அம்மா! 92

'புகல் மதித்து உணர்கிலாமையின், நமக்கு எளிமை சால் பொறைமை கூர,
நகல் மதிக்கில மறுப் பொலிய வாள் ஒளி இழந்து, உய்தல் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம், இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா? 93

'சிந்து முந்து உலகினுக்கு இறுதி புக்கு, உரு ஒளித்து, உலைதல் செய்வார், -
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும், -
அந்தகன் முதலினோர், அமரரும் முனிவரும் பிறரும், அஞ்சார்
வந்து, நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து, அகல்வர் மன்னோ. 94

'சொலத் தகாத் துன்னிமித்தங்கள் எங்கணும் வரத் தொடர்வ; தொல் நாள்,
வெலத் தகா அமரரும் அவுணரும், செருவில் விட்டன விடாத
குலத்த கால் வய நெடுங் குதிரையும், அதிர் மதக் குன்றும், இன்று
வலத்த கால் முந்துறத் தந்து, நம் மனையிடைப் புகுவ மன்னோ. 95

'வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார், நிருதர்; வைகும்
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும்; பிறிதும் எண்ணின்,
கோயிலும் நகரமும், மட நலார் குழலும், நம் குஞ்சியோடும்,
தீயின் வெந்தன; இனி, துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ ? 96

'சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன், திரிசிரத்தோன்,
முந்த மான் ஆயினான், வாலியே, முதலினோர் முடிவு கண்டால்,
அந்த மான் இடவனோடு, ஆழி மா வலவனும், பிறரும், ஐயா!
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே? 97

இன்னம் ஒன்று உரை செய்கேன்; இனிது கேள், எம்பிரான்! இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார்,
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர்; அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்று; இது நமக்கு உறுதி என்று உணர்தலும், கருமம் அன்றால். 98

இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச,
வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் மடியாது,
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; அதன் மேல்
விசையம் இல்' எனச் சொல்லினன் - அறிஞரின் மிக்கான். 99

இராவணன் சினந்து வீடணனைக் கடிந்து பேசுதல்

கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்பப்
பூட்டி, வாய்தொறும் பிறைக் குலம் வெண் நிலாப் பொழிய,
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க, நக்கு, இவை இவை சொன்னான்: 100

'"இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென்" என்றாய்;
பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக்
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை; குறித்தது,
அச்சமோ? அவர்க்கு அன்பினோ? யாவதோ? - ஐயா! 101

'"ஈங்கு மானுடப் புழுக்களுக்கு, இலை வரம்" என்றாய்;
தீங்கு சொல்லினை; திசைகளை உலகொடும் செருக்கால்
தாங்கும் யானையைத் தள்ளி, அத் தழல் நிறத்தவனை
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ ? 102

'மனக்கொடு அன்றியும், வறியன வழங்கினை; வானோர்
சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் செய்த?
எனக்கு நிற்க; மற்று, என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ? 103

'சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை; பல முறை தோற்று,
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை; விண்ணைக்
கல்லும் ஆற்றலேன்; "கிளையையும் என்னையும் களத்தில்
கொல்லும் மாற்றலர் உளர்" எனக் கோடலும் கொண்டாய். 104

'தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ் செருக்கேல்,
மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும், முழுதும்
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும், கடந்தது
ஏவரின் பெற்ற வரத்தினால்? இயம்புதி -இளையோய்! 105

'"நந்தி சாபத்தின் நமை அடும், குரங்கு" எனின், நம்பால்
வந்த சாபங்கள் எனைப் பல; அவை செய்த வலி என்?
இந்திராதியர், சித்தர்கள், இயக்கர், நம் இறுதி
சிந்தியாதவர் யார்? அவை நம்மை என் செய்த? 106

'அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன்;
இரங்கி யான் நிற்ப, என் வலி அவன்வயின் எய்த,
வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு உள்ள
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி? 107

'நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும்,
ஏலும் அன்னவருடை வலி அவன்வயின் எய்தும்;
சால அன்னது நினைந்து, அவன் எதிர் செலல் தவிர்ந்து,
வாலிதன்னை, அம் மனிதனும், மறைந்து நின்று எய்தான். 108

'ஊன வில் இறுத்து, ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி,
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து, உயர் வனம் குறுகி,
யான் இழைத்திட இல் இழந்து, உயிர் சுமந்து இருந்த
மானுடன் வலி, நீ அலாது, யார் உளர் மதித்தார்?' 109

'போருக்குப் புறப்படுவோம்' என்ற இராவணனை நெருங்கி, வீடணன் உறுதிமொழி உரைத்தல்

என்று தன் உரை இழித்து, 'நீ உணர்விலி' என்னா,
'நன்று போதி; நாம் எழுக!' எனும் அரக்கனை நணுகி,
'ஒன்று கேள், இனம் உறுதி' என்று, அன்பினன், ஒழியான்,
துன்று தாரவன், பின்னரும், இனையன சொன்னான்: 110

'தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித் தலைவன்,
அன்ன மானுடன் ஆகி வந்து, அவதரித்து அமைந்தான்,
சொன்ன நம்பொருட்டு, உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால்;
இன்னம் ஏகுதி போலும்' என்று அடி தொழுது இரந்தான். 111

இராவணன் மறுமொழி

அச் சொல் கேட்டு, 'அவன் ஆழியான் என்றனை; ஆயின்,
கொச்சைத் துன்மதி எத்தனை போரிடைக் குறைந்தான்?
இச்சைக்கு ஏற்றன, யான் செய்த இத்தனை காலம்,
முச்சு அற்றான்கொல், அம் முழுமுதலோன்?' என முனிந்தான். 112

'இந்திரன் தனை இருஞ் சிறை இட்ட நாள், இமையோர்,
தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான் முன்னம்
வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச்
சிந்த வென்ற நாள், சிறியன்கொல், நீ சொன்ன தேவன்? 113

'சிவனும், நான்முகத்துஒருவனும், திரு நெடு மாலாம்
அவனும், மற்று உள அமரரும், உடன் உறைந்து அடங்க,
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது, ஆண்ட அப் பொரு இல்
உவன் இலாமையினோ? வலி ஒதுங்கியோ? உரையாய்! 114

'ஆயிரம் பெருந் தோள்களும், அத் துணைத் தலையும்,
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்,
தீய, "சாலவும் சிறிது" என நினைந்து, நாம் தின்னும்
ஓயும் மானுட உருவு கொண்டனன்கொலாம் - உரவோன்? 115

'பித்தன் ஆகிய ஈசனும் அரியும், என் பெயர் கேட்டு,
எய்த்த சிந்தையர், ஏகுழி ஏகுழி எல்லாம்,
கைந்த ஏற்றினும் கடலிய புள்ளினும், முதுகில்
தைத்த வாளிகள் இன்று உள, குன்றின் வீழ் தடித்தின். 116

'வெஞ் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா;
இஞ்சி மா நகர் இடம் உடைத்து; ஈண்டு இனிது இருத்தி;
அஞ்சல், அஞ்சல்!' என்று, அருகு இருந்தவர் முகம் நோக்கி,
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து, உரும் என நக்கான். 117

வீடணன் பின்னும் இராவணனுக்கு இரணியனது சரிதத்தை உரைத்தல்

பின்னும் வீடணன், 'ஐய! நின் தரம் அலாப் பெரியோர்,
முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடும் முடிந்தார்;
இன்னம் உண்டு, யான் இயம்புவது; இரணியன் என்பான் -
தன்னை உள்ளவா கேட்டி' என்று உரைசெயச் சமைந்தான்: 118

மிகைப் பாடல்கள்

மின் அவிர் குழைகளும் கலனும் வில் இட,
சென்னியின் மணி முடி இருளைச் சீறிட,
அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை
முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான். 6-1

மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்,
காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள் தம்மொடும். 10-1

கும்பகம் மேவியோன், குறித்த வீடணத்
தம்பியர்தம்மொடும், தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்,
உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும், 10-2

மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர்
மேலவர் தம்மொடும், விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும், தழுவி, மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்: 10-3

பின்னும் ஒன்று உரைத்தனன்: 'பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர்; மற்று அரக்கர் என்பதற்கு
இந்நிலை பிடித்தனை; இறைவ! நீ' எனா,
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான். 21-1

'எரி விழி நுதலினன், இசையும் நின் தவத்து
அருமை கண்டு, அளித்தனன் அழிவு இலாதது ஓர்
பெரு வரம் என்றிடின், பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே?' 26-1

கறை மிடற்று இறை அன்று; கமலத் தேவு அன்று;
நிறை கடல் துயில் பரன் அன்று; நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ?' 40-1

'ஓது பல் அருந் தவம் உஞற்றல் இலதேனும்,
கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும்,
வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும்,
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ ? 52-1

'உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ,
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ,
புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள்? 52-2

'ஆசைகொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி,
காசு இல் ஒரு மங்கையவளைத் தனி கவர்ந்தும்,
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்,
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ? 52-3

'நிரம்பிடுகில் ஒன்று அதை நெடும் பகல் கழித்தும்,
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை;
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா! 52-4

'ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக
ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்;
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ? -
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா! 52-5

'"ஆலம் அயில்கின்றவன் அருஞ் சிலை முறித்து,
வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க,
கோல வரி வில் பகழி கொண்டுடையன்" என்றார்;
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ? 52-6

'ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கி,
சீதையை விடுத்து, "எளியர் செய் பிழை பொறுக்க" என்று
ஓதல் கடனாம்' என ஒருப்பட உரைத்தான்;
மூதுரை கொள்வோனும், 'அதுவே முறைமை' என்றான். 52-7

என்று அவன் உரைத்திட, இராவணனும், நெஞ்சம்
கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ;
'இன்று முடிவுற்றது உலகு' என்று எவரும் அஞ்ச,
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான். 52-8

நகைத்து, இளவலைக் கடிது நோக்கி, நவில்கின்றான்;
'பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்;
திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும்,
வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை; என்? - எம்பி! 52-9

'புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன் தன்
வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்!
தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான் என்
சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ? 52-10

'பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும்,
மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும்,
வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும் உண்டோ ? 52-11

'நிறம்தனில் மறம் தொலைய, நீ துயில் விரும்பி,
துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை சொன்னாய்;
இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில்
மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?' 52-12

எனக் கதம் எழுந்து அவன் உரைக்க, இளையோனும்,
நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல;
'சினத்தொடும் மறுத்து இகழ்வு செய்தனன்; இது ஊழின்
வினைத் திறம்; எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே!' 51-13

கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே,
'பொறுத்தருள் புகன்ற பிழை' என்று அடி வணங்கி,
உறுத்துதல் செய் கும்பகருணத் திறலினோனும்,
'மறுத்தும் ஒரு வாய்மை இது கேள்' என உரைத்தான்; 52-14

'ஏது இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி,
தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ?
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா!
போதியது நம் அரசு, பொன்ற வரு காலம், 52-15

என, அவன் அடித் துணை இறைஞ்சி, வாய் புதைத்து,
இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்; 74-1

'சானகி, உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது,
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்,
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?' 74-2

'ஈசன் தன் வயின் வரம் கொளும்முன்னம், யான் அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன்;
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்றக்
கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து அமர்ந்தேன்; 116-1

'அமர்ந்து, நீங்குதற்கு அருமை கண்டு, "அவன் பதம் அகத்தே
சுமந்து, நீ தவம் புரிக!" எனச் சுக்கிரன் உரைப்ப,
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்த்திடத் தருக்கி
நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ நிலையின். 116-2

'நின்று பல் பகல் கழிந்திட, நிமலன் நெஞ்சு உருகி,
"நன்று, நன்று!" என நயந்து, எனை வரும்படி அழைத்து,
"ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி" எனத் தந்த வரம் சிதைந்திடுமோ? 116-3

'கார்த்தவீரியன், வாலி, என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல் நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல்
கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம் கூசி. 116-4

'இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என்? இவ் வரம் எனக்குத்
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ? - மறவோய்! 116-5

'ஆயது ஆக, மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து, அற நூறி,
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென்' என்று தன் கண் சிவந்து இனையன கழறும். 116-6
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247