மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் அத்தியாயம் - 10. கைக்கு எட்டியது வீரராசேந்திரரின் தலைமையில் கூடல் சங்கமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழநாட்டின் பெரும்படை, இரண்டு நாள் பயணத்துக்குப் பின் ஒரு மாலையில் வழியில் இருந்த ஆறு ஒன்றன் கரையில் இரவுத் தங்கலுக்காகத் தண்டிறங்கியது. அப்போது ஆதவன் மேல் திசையில் ஆழவில்லை. கூடாரங்கள் அடிக்கப்பட்டு, மன்னர் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்குவதற்கு இட வசதி செய்த பிறகு, படையின் உணவுத் தயாரிப்புப் பிரிவு ஆற்றின் மணற்பரப்பில் பெரிய பெரிய பாண்டங்களில் படையினருக்கான இரவு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரன் ஒருவன் திடீரென்று ஆற்றின் மேற்க்குத் திசையை நோக்கிக் கையை நீட்டி, “அதோ பாருங்கள்! அதோ பாருங்கள்!” என்று கூக்குரலிட்டான். வேலையில் ஈடுபட்டிருந்தோர் அனைவரும் திடுக்கிட்டு, அவன் கையைக் காட்டிய இடத்தை நோக்கினர். அங்கே இவர்கள் இறங்கியிருந்த கரையோரமாக மரங்களுக்கு உயரே புழுதிப்படலம் ஒன்று தெரிந்தது. படையின் உணவுப் பிரிவுத் தலைவர், அன்று கங்கை கொண்ட சோழபுரத்தில், இப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த போரைப்பற்றி விவாதம் நிகழ்ந்தபோது உடன் இருந்தவர். ஆகவமல்லன் ஒருகால் சூழ்ச்சியில் இறங்கியிருக்கலாமோவென அன்று அவையில் சிலர் ஐயமுற்றது இப்போது அவருக்கு நினைவுக்கு வந்தது. பெரும் புழுதிப்படலம் கிளம்பியிருப்பதால் ஏதோ ஒரு படைதான் வந்துகொண்டிருக்க வேண்டுமென்று ஊகித்துவிட்ட அவர், அப்படை ஒருகால் ஆகவமல்லனோ, அவனது மைந்தர்களோ திரட்டிவரும் படையாக இருக்கலாம்; ஒருபுறம் நம்மைக் கூடல் சங்கமத்தை நோக்கிச் செல்ல விடுத்து, மறுபுறம் தலைநகரை முற்றுகையிட அவன் சூழ்ச்சி செய்து, அதற்காக வந்து கொன்டிருக்கலாம் என்று கருதினார், எனவே அவர் உடனே ஆற்றின் கரையில் அமைக்கப்படிருந்த மாமன்னரின் பாசறையை நோக்கி விரைந்து, அவரிடம் இச்செய்தியை அறிவித்தார், சோழதேவர் அவருடைய ஐயப்பட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. “வருவது பகைவரின் படையாக இருந்தால், சோழநாட்டில் இவ்வளவு தூரம் உள்ளேறி வரும் வரையில் நமது ஒற்றர்கள் வாளா இருந்திருக்க மாட்டார்கள். ஆதலால், அது நமது குறுநில மன்னர்கள் யாராவது, கூடல் சங்கமத்துப் போரில் நமக்கு உதவுவதற்காக இட்டு வந்துகொண்டிருக்கும் படையாகவே இருக்கும்,” என்று அவர் கூறினார். ஆனால் இவர்கள் இருவரின் ஊகத்தையும் பொய்ப்பித்துவிட்டது வந்த படை. அது இவர்கள் நினைத்தவாறு பெரும்படையல்ல; சுமார் நூறு வீரர்கள் அடங்கிய மிகச் சிறிய படை. அதோடு அதை நடத்தி வந்தவர் சோழநாட்டின் கீழ் ஒரு குறுநில மன்னரைப்போல் ஆட்சி செய்து திறை செலுத்தி வந்த கடாரத்து மன்னர். இவ்விவரங்களை அறிந்த வீரராசேந்திரர் தமது பாசறையிலேயே ஓர் அரசவை கூட்டி, கடார மீட்சி பற்றிய தமது கருத்தை வெளியிட்டார். தமது முன்னோர்கள் போர் செய்து சோழ நாட்டுடன் சேர்த்த நாடுகளில் ஒன்றைக்கூடத் தமது ஆட்சிக் காலத்தில் இழக்க மாமன்னர் விரும்பவில்லை. ஆதலால் இப்போது மேற்கொண்டிருக்கும் வேங்கி மீட்புப் படையெழுச்சி எத்தனை முக்கியத்துவமும், உடனடியாகக் கவனிக்க வேண்டியதும் ஆனதோ, அவ்வாறே கடார மீட்சியும் அவசரமும், அவசியமும் வாய்ந்ததென அவர் கருதினார். ஆனால் குந்தளத்தாரின் சூளுரையை ஏற்றுக்கொண்டு போர் செய்யச் செல்லும் தாம், கடாரப் படையெழுச்சியில் கலந்து கொள்ள இயலாதிருந்ததால் வேறு யாரை இம்மகத்தான பொறுப்பை ஏற்கச் செய்யலாமென்பதை ஆலோசிக்கவே அவர் அப்போது அவை கூட்டினார். இங்கேதான் ஊழ்வினை தன் விளையாட்டைப் புரிந்தது. கூடியிருந்தோர் அனைவரும் ஒருமனதாகக் குலோத்துங்கன்தான் இதற்கு ஏற்றவன் என்று தெரிவித்தனர். சோழதேவருக்கும் அன்று அரசவையில் குலோத்துங்கனுக்குத் தாம் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. “சோழநாடு அடுத்து ஈடுபடும் போரை நீயே முன்னின்று நடத்த வாய்ப்பளிக்கிறேன்,” என்று அவர் கூறியிருக்கவில்லையா? ஆதலால் அவர் வேறு சில படைத் தலைவர்களையும், ஒரு படைப்பகுதியையும் அழைத்துக் கொண்டு கடாரத்தை மீட்டுக் கொடுத்துவிட்டு, அப்படியே ஒரு திக்குவிஜயமும் செய்து வருமாறு குலோத்துங்கனை அனுப்பிவிட்டார். இதனால் என்ன நேர்ந்தது என்பதைப் பின்னால் காண்போம். இப்போது நாம் கூடல் சங்கமத்துப் போரைத் தொடர்வோம். வீரராசேந்திரரும் அவரது மாபெரும் சோழப்படையும் ஆகவமல்லன் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பே கூடல் சங்கமத்தை வந்தடைந்து அதற்கு அணித்தாக இருந்த கரந்தை என்னும் இடத்தில் அவன் வருகையை எதிர்பார்த்திருந்தனர். போர்த் திருமுகத்தில் குறிக்கப்பெற்றிருந்த நாள் வந்தது. ஆனால் குந்தளப் படையைக் காணவில்லை. மறுநாள், அதற்கு மறுநாள் என்று ஒரு திங்கள் வரையில் கரந்தையிலேயே காத்திருந்தனர். அப்போதும் ஆகவமல்லனையோ, அவன் மைந்தர்களையோ, அல்லது அவர்களது படையையோ காணவில்லை. சோழதேவர் இதனால் பெருஞ்சினம் அடைந்தார். அப்போது அவர்கள் தங்கியிருந்த கரந்தை இடம் இரட்டப்பாடி நாட்டில் சளுக்கியர்களுக்கு உட்பட்ட பகுதிக்கு அண்மையில் இருந்தது. அப்பகுதியில் தேவநாதன், சித்தி, கேசி என்ற மூன்று குந்தளத் தலைவர்கள் இருந்தனர். வீரராசேந்திரர் அவர்களைப் போருக்கு அழைத்து, தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தார். அப்பகுதியில் பல இடங்களில் எரியூட்டிச் சாம்பலாக்கினர். ஆகவமல்லனைப் போல் ஓர் உருவம் அமைத்து, அதன் கழுத்தில் கண்டிகை பூட்டி, அவனும் அவன் மக்களும் ஐந்துமுறை தமக்கஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடியதை ஒரு பலகையில் எழுதச் செய்து அதனை அவ்வுருவத்தின் மார்பில் தொங்கவிட்டு, இன்னும் பற்பல அவமானங்களும் செய்வித்தார். கடைசியில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவிவிட்டு, “நீ கைப்பற்றியிருக்கும் வேங்கியை மீட்காமல் நாடு திரும்பேன்; வல்லவனாகில் வந்து காத்துக்கொள்!” என்று செய்தி சொல்லி அனுப்பிவிட்டு வேங்கியை நோக்கிச் சென்றார்.* (*S.I.I., Vol.III, No.30.) இப்படி வேங்கியை நோக்கி வீறுகொண்டு சென்ற வீரராசேந்திரரைக் கிருஷ்ணை ஆற்றின் கரையில் குந்தளத் தண்ட நாயகர்களான சனநாதன், இராசமய்யன், திப்பரசன் என்போர் வந்து மேலே செல்லாமல் தடை செய்தனர். இருதரப்பாருக்கும் இப்போது விஜயவாடா என விளங்கும் நகருக்கு அருகில் பெரும்போர் நிகழ்ந்தது. ஒரே நாள் போரில் அவர்களை ஓடி ஒளியச் செய்தார் வீரராசேந்திரர். பின்னர் அவர் கோதாவரி ஆற்றைக் கடந்து, கலிங்கம், சக்கரக்கோட்டம் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று வேங்கியை அணுகினார். வேங்கியிலும் ஒரு குறுகிய காலப்போரே நிகழ்ந்தது. அதிலும் ஆகவமல்லனோ அவன் மைந்தர்களோ கலந்துகொள்ளவில்லை. மிக எளிதாகத் தாம் பாசறையைவிட்டு அகலாமலே வேங்கியை மீட்டுவிட்டார் சோழ தேவர். பிறகு...? (*இதுபற்றிச் சரித்திர நூல்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தருகின்றன. நான் விக்கிரமாங்க தேவசரிதத்தில் கூறப்பட்டுள்ள செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளேன். (அதிகாரம் 4-வரிகள் 44-68.)) இதையும் ஊழ்வினைப் பயன் என்றுதான் சொல்ல வேண்டும். பல ஆண்டுகளாகப் பல போர்கள் செய்தும் மீட்க முடியாத வேங்கியை, திக்குவிசயம் செய்யச் சென்ற ஆகவமல்லனின் இரண்டாம் மைந்தன் விக்கிரமாதித்தன் ஒரு கணத்தில் தன்னடிமைப்படுத்தி அங்கே தங்கள் பிரதிநிதி ஒருவரை அமர்த்திவிட்டு, தன் நாட்டை மேலும் வலுப்படுத்துவதற்காகச் சக்கரக்கோட்டத்தை நோக்கிச் சென்றான். அவன் இந்தத் திக்குவிசயத்தை மேற்கொண்டதன் காரணமே விரைவில் குந்தள நாட்டைச் சோழநாட்டுடன் போர் தொடுக்கும் அளவுக்கு வலுப்படுத்தி, வீரராசேந்திரரைத் தோற்கடித்து, தன் காதலி வானவியைக் காலடியில் கொண்டுக் கிடத்திக் கெஞ்சச் செய்ய வேண்டும் என்பதுதான். இதனால்தான் அவன் பலகாலத்துக்குப் பின் தங்களுக்குக் கிட்டிய வேங்கியில்கூட அமர்ந்திராமல், சக்கரக் கோட்டத்தை நோக்கிச் சென்றான். வேங்கி தங்கள் வசமாகிவிட்டது என்றறிந்ததும், ஆகவமல்லனும் பெரும் களிப்படைந்தான். சோழரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவல் மைந்தனைவிட அவனுக்கு அதிகமாக இருந்தது. ஆதலால் அவன் அவர்களுக்குச் சூளுரைத் திருமுகம் ஒன்றை உடனே அனுப்பிவிட்டு, சோழப்படையைச் சந்தித்து வெற்றி கொள்ளத் தன் படையைத் திரட்டலானான். இந்நிலையில் ஊழ்வினை வலியால் அவனுக்குத் திடீரெனச் சுரநோய் ஒன்று உண்டாயிற்று. எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் அந்நோய் தணியவில்லை. நோயின் துன்பமும், குறித்த நாளில் சோழரைக் கூடல் சங்கமத்தில் சந்திக்க முடியாமற் போய்விட்டதே என்ற ஏக்கமும் வாட்டியதால், அவன் குருவர்த்தி என்ற இடத்துக்குப் போய், துங்கபத்திரை ஆற்றில் * தன்னை மூழ்கடித்துக் கொண்டான். (* Ep. Ind.Vol.VIII.SK.136.) விக்கிரமாதித்தனுக்கோவெனில் தந்தை சோழர்களிடம் சவால் விட்ட செய்தியும், அவர் மரணமடைந்த செய்தியும் மிகத் தாமதமாகவே கிட்டின. அவன் சக்கரகோட்டத்தை வென்று அடிமைப்படுத்திவிட்டுக் கிருஷ்ணை ஆற்றின் கரைக்கு வந்தபோது தான், அச்செய்திகளும், அவற்றோடு வேங்கி பறிபோய்விட்ட செய்தியும் வந்தன. ஆதலால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டதே என்று வருந்தி அடுத்த நடவடிக்கையைப் பற்றிச் சிந்திப்பதை அன்றி, அந்நிலையில் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை. இப்போது நாம் வேங்கிக்குத் திரும்பி வந்து அங்கே நடந்ததைக் கவனிப்போம். வேங்கி மீட்கப்பட்டதும், அதனை மீண்டும் தானே அடையத் துடித்தான் கிழவன் விசயாதித்தன். ஆனால் வீரராசேந்திரரும், இதர சோழத்தலைவர்களும், அந்நாட்டை மீண்டும் அக்கோழையிடம் ஒப்படைத்துத் தொல்லை வருத்திக் கொள்ள விரும்பவில்லை. அதை, அதற்குரிய குலோத்துங்கனிடந்தான் ஒப்படைக்க வேண்டுமென்று யாவரும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் என்ன துரதிர்ஷ்ட்டம்! குலோத்துங்கன் அப்போது அங்கே இல்லையே! அவன் கடாரத்தை நோக்கியல்லவா சென்றிருந்தான்! அது மட்டுமா? கடாரத்து மீட்சிக்குப் பிறகு திக்விஜயம் செய்து வருமாறும் அவனைப் பணித்திருந்தாரே சோழதேவர்? அவன் அவற்றை முடித்துக் கொண்டு திரும்ப எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரையில் வேறு யாரையாவது தங்களது பிரதிநிதியாக நியமித்துவிடலாம் என்று அரசியல் அதிகாரிகள் ஆலோசனை கூறினர். ஆனால் அதிலும் ஒரு தொல்லை இருப்பதை வீரராசேந்திரர் உணர்ந்தார். விசயாதித்தனுக்கு நாடில்லை என்று விரட்டி விட்டால், அந்த மானமற்றவன் மீண்டும் குந்தளத்தாரைச் சரணடைவான். அவர்கள் மூலம் வேங்கியைக் கைப்பற்றிக்கொள்ள முயலுவான். எதற்கு வீண் தொல்லை? இந்தக் கிழமே குலோத்துங்கன் திரும்பி வரும் வரையில் நாட்டை ஆண்டுவிட்டுப் போகட்டும் என்று இறுதியாக முடிவுறுத்திய சோழதேவர், அவ்வாறே அவனை வேங்கி அரியணையில் மீண்டும் அமர்த்திவிட்டுச் சோழநாடு திரும்பினார். பாவம், மதுராந்தகிக்கும், இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது என்பதை அவளையன்றி வேறு யார் அறிவர்? மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|