அம்பலவாண தேசிகர்

அருளிய

அதிசய மாலை

புலிகழல் ஆடியும் பாம்புன்னைப் போற்றியும் போதமில்லா
எலிகழல் ஆடியும் ஈயுன்னை ஏத்தியும் எண்ணுகிலாக்
கலிகழல் ஆடிய கண்டன்கண் டாய் எனைக் காகருணை
ஒலிகழல் ஆடிய கூத்தா துருத்தி உயர்ந்தவனே. 1

பொய்யேன் மலவலி பூண்டுடன் ஆடிய போதனன்பு
செய்யேனின் பாதத்துக் கன்புசெய் வார்க்கென்றன் சித்தம்பற்றி
மெய்யே விதிக்கின்ற அன்பர்க்குத் துன்பம் விளைக்குந்துட்டத்
திய்யேற்கு நீவெளிப் பட்டதென் னோசொல் சிதம்பரனே. 2

செய்யேற்கும் நின்பதச் சீரேற்கும் நின்னன்பர் சேர்ந்தவர்பால்
மெய்யேற்கும் உள்ளத் துணர்வுடை யோர்கள் விருப்பதில்லா
மையேற்கும் வஞ்சத்தில் வாழ்கின்ற வாழ்வை மதித்துடனாம்
திய்யேற்கு நீவெளிப் பட்டதென் னோசொல் சிதம்பரனே. 3

பரிசித்த காயத்தை நீங்காத நெஞ்சன் படிற்றையென்றுந்
தெரிசித்த நோக்கன்சிற் றேவலை மேற்கொண்ட சித்தனிந்நாள்
வரிசைத் தவத்தின ரோடுநின் பாதம் வணங்கநெஞ்சில்
உரிசித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 4

நெருக்கிய தீமலத்(து) ஆவிஉள் ளாகி நெடியநெஞ்சைச்
சுருக்கிய காமம் அதனொடு முக்கிய துட்டனந்தோ
தருக்கிய இன்பத் தவரொடு நின்பதஞ் சாரநெஞ்சை
உருக்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 5

தாங்கிய நின்னருள் என்பால் இருக்கத் தமோமயமாய்த்
தூங்கிய தென்னெஞ்சு நின்றாள் வெறுத்திந்தத் துஞ்சலற
வாங்கிஅத் தாளில் அடக்கி தவரொடும் வாழநெஞ்சத்(து)
ஓங்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 6

கருகிய தீமலத்(து) ஆவிஉள் ளாய் உற்ற காயமுமாய்ச்
சொருகிய காமத்துந் தானுட னாயுஞ் சுழலுமிந்நாள்
பருகிய இன்பத் தவரொடு நின்பதம் பற்றநெஞ்சம்
உருகிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 7

துன்றிய தீமலம் தன்வண்ண மாகத் துளங்க உள்ளம்
குன்றிய தாகும் விடயங்கள் தோறும் குலையமலம்
வென்றிய பாதத் தவரொடு நின்பதம் வேண்டநெஞ்சம்
ஒன்றிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே! 8

திதித்ததெவ் வாறதவ் வாறதென் னாவிஉன் தேசதின்றாய்
விதித்ததெவ் வாறதவ் வாறு விரும்பி விருந்துமையல்
மதித்ததெவ் வாறதவ் வாறது வாகும் மதியதுன்பால்
உதித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 9

அற்றதென் ஆவி தனுவாய் மனமதற்(கு) ஆயிழையாய்
நற்றவர் வாக்குப் பொருளாய் அடியிணை நண்ணுகில்லாத்
தெற்றினை மாற்றித் தவரொடுஞ் சேர்த்தென்றன் சிற்றறிவில்
உற்றதெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 10

ஆட்டிய தீமலத் தாக அத் தீமலம் ஆகமெனக்
காட்டிய தாமெனைத் தீவினை யாவையுங் காதலிக்கப்
பூட்டிய தாமதைப் போக்கி உளத்துப் பொருந்த அருள்
ஊட்டிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 11

அன்னிய வஞ்சத்தை நெஞ்சத் தடக்கி அகத்துளின்பாய்த்
துன்னிய சற்குரு லிங்கத் தவரையும் தொல்லிருளாய்ப்
பன்னிய தீமலந் தாளால் அடக்கிப் பரிந்துனைநான்
உன்னிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 12

கருப்பட்ட காலத்தில் புத்திஒத் தாயதில் காயமொத்தி
வரப்பட்ட காலத்தில் தந்தைஒத் தாயது மன்னியங்கந்
திரப்பட்ட காலத்தின் மங்கையொத் தாயதென் சித்தநின்பால்
ஒருப்பட்ட வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 13

தெள்ளிய நீகுரு யானுடல் தீமங்கை செய்தொழிலுக்(கு)
ஒள்ளிய உள்ளத்(து) உறுதீயன் மாதரை உள்குவித்து
எள்ளுங் குருவினை யானுனை நோக்கி இசைந்தடியை
உள்ளிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 14

பாக்கிய மாவது நின்றாள் இணைக்கன்பு பற்றியங்கம்
போக்கிய தாமதைப் போக்காமல் யானெனப் போற்றியன்பங்(கு)
ஆக்கிய தீயன் அகமே புகுந்தந்த அன்புனக்காய்
ஊக்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே! 15

கருப்பட்ட காலத்தில் ஆவிஒத் தேறிய காயமதாய்
உருப்பட்டு மங்கைதன் கொங்கையிற் பட்டுமிக் கோர்நெறியும்
போரப்பட்டெப் பாவத்தும் உட்பட்டு நிற்கின்ற போதநின்பால்
ஒருப்பட்ட வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 16

அழித்தது நின்பதத்(து) அன்பைப்பொற் பாதத் தடியவரைப்
பழித்தது பாவப் பயனெதும் பற்றிப் பரிந்துபொய்யில்
விழித்ததென் நெஞ்சம் அடியாரை வேண்டி விரும்பமலம்
ஒழித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 17

காட்டிய வாறதெவ் வாறதவ் வாறு கருதுமுளம்
ஆட்டிய வாறதெவ் வாறதவ் வாறினும் ஆடுமருள்
கூட்டிய வாறதெவ் வாறதவ் வாறினுங் கூடமலம்
ஓட்டிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 18

விதிக்கின்ற நான்கினை எல்லாம் விடுத்து விலக்கைநன்காய்
மதிக்கின்ற மாந்தர்க்கு நெஞ்சமுன் ஈந்த மலத்தனருள்
பதிக்கின்ற உள்ளத் தவரொடு நின்பதம் பற்றநெஞ்சில்
உதிக்கின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 19

உடுக்கின்ற தூசுக்கும் உண்கின்ற வாறுக்கும் ஒங்குமுடல்
அடுக்கின்ற மங்கைக்கு நெஞ்சமுன் ஈந்த அவலனிற்குக்
கொடுக்கின்ற ஆறினுக்(கு) ஒவ்வா எனைநின் குளிர்பதத்தில்
ஒடுக்கின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 20

விழிக்கின்ற நாட்டத்தை உன்பால் அகற்றி வெருட்டித் தன்னோ(டு)
அழிக்கின்ற மாதை உளத்தே அமைத்தென் அறிவையறப்
பழிக்கின்ற தீதைஉன் நோக்கால் எரித்துன் பதத்திலென்னை
ஒழிக்கின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 21

சிதைத்ததுன் பாதப் பணியினை வேம்பெனத் தீங்கரும்பாய்
இதத்ததென் அங்கப் பணியைஎந் நாளும் இயற்றநெஞ்சை
வதைத்ததிவ் வாணவம் யான்நீய தாக மதித்ததனை
உதைத்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 22

அரக்கினை ஒத்ததென் ஆவிநின் பாதம் அழலைஒத்து
நெருக்கிய நீநிற்க யான்மலத் தோடு நிறைந்து பொய்யிற்
செருக்கிய காமத் துடனாகச் சித்தத்தைச் சேர அத்தோ(டு)
ஒருக்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 23

புளித்தது நின்பதத் தன்புபொய் யாகத்(து) இளமை இன்பாய்க்
களித்தது மாதர் கழைத்தோ ளினைக்கல்லுக் கண்டதென
அளித்ததென் உள்ளத்(து) அவலத்தை மாற்றி அடியருடன்
ஒளித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 24

மரிப்பித் தவனலை வானாய் எனக்கு மரிப்பதனை
அரிப்பித் தவன்நீ மலமேல் குருடாய் அகமகிழத்
தெரிப்பித்த வாறுற்(று) அளிப்பைஅத் தீதைத் திருக்கரத்தால்
உரிப்பித்த் வாறென்கொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 25

துயில்கின்ற போதும் விழிக்கின்ற போதும் துளங்கிநெஞ்சைச்
செயிர்க்குள் அடக்கிய(து) இல்லமன் றோஉளஞ் சேர்ந்ததெல்லாம்
கயக்கும் படிசெய்து நின்றாள் நினைக்கும் கருணைதந்தாய்
உயிர்க்கின்பம் நீயல்ல(து) இல்லைகண் டாய்தில்லை உத்தமனே. 26

துதிப்பேன்நின் பாதத் தவர்போல் துலங்கித் துதித்தவர்போல்
மதிப்பேன் அலேனெஞ்சின் மாயங்கள் மாய மதித்த அன்பைப்
பதிப்பேன் (அ)லேன்மிக்க அன்பரைப் பற்றிப் பணிந்தடியில்
உதிப்பேன் எவ்வாறுசொல் தில்லையுள் ஆடிய உத்தமனே. 27

அணைக்கின்ற தாக மருளே புகுத்தி அகத்திருளைத்
துணிக்கின்ற தாக அவ்வாறதில் லாமல் துடர்ந்திருளால்
பிணிக்கின்ற மாதரிற் பித்துமுற் றாக்குமென் பேதைநெஞ்சை
இணைக்கின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 28

பசித்ததிவ் வங்கத்துட் பார்த்ததென் ஆவி பசியடங்கப்
பொசித்ததிவ் வங்கமிவ் வங்கத்தை யானெனப் பூண்டுபொய்யில்
வசித்ததென் புந்தி அறமாற்றி நின்னருள் மன்ன இந்நாள்
இசித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 29

பூட்டிய(து) ஆகம் பொசிப்பே பொய்ப் போகமென் போதமறக்
காட்டிய தாம்மலம் காயமும் நீயறக் காட்டுகையால்
ஆட்டிய தாகும் மலமேஎன் ஆவி அருளையிந்நாள்
ஈட்டிய வாறென்கொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 30

மூத்தவன் நீயலத் தீமலம் போலும் முளைத்துமுந்தி
ஆர்த்தது காயத்தும் போகத்து மாக அடக்குகையால்
நீத்தனன் உன்னைத் தவரொடு நின்பதம் நீக்கமற
ஈர்த்ததெவ் வாறுகொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 31

பார்த்ததெத் தன்மையத் தன்மையைப் பார்க்கப் பரிந்தருளைச்
சேர்த்ததெத் தன்மைஅத் தன்மையை நோக்கித் திரிமலத்தை
நீத்ததெத் தன்மைஎன் னோடுடல் போகமும் நின்கையுற
ஏற்றதெத் தன்மைசொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 32

கருப்பித்துக் காயம் அதனொடும் ஒடிக் கருதுமையல்
நிரப்பித்துப் பித்துநின் பாதத்தை நோக்கும் நெடியஎன்னை
மரிப்பித்துப் பித்தன்நின் பாதத் தவரொடு மன்ன அத்தீ
எரிப்பித்த வாறென்கொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 33

தலையிற்ற நான்முகன் தண்பாற் கடலில் தயங்குமிக்க
அலையுற்ற மாலும் அறியாத் திருப்பதம் ஆகமுற்றுங்
கலையுற்ற நெஞ்சனப் பாதத்து ளாடக் கருதியிந்நாள்
இலையித்த வாறென்கொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 34

பாய்ந்தது நின்றன் அடியென்றன் ஆவியுட் பற்றலின்றித்
தோய்ந்தது தீய மலத்தொடுந் தொல்லைத் துகளதற
நீந்திய உள்ளத் தவரொடு நின்கழல் நிற்கவுன்னை
ஈந்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 35

பிடித்ததெவ் வாறதவ் வாறு மலமுளம் பின்னமற
நடித்ததெவ் வாறதவ் வாறு நடுங்க நடிக்கும் அருள்
தடித்ததெவ் வாறு தடிக்கும் தவரொடுஞ் சாரமையல்
இடித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 36

சாந்திய மெய்யும்நின் பாதத்து நோக்கும் தரித்தஎன்பால்
போந்திய தாகிலப் பொய்யே திரட்டிப் பொருந்துமென்னை
மாந்திய தாகநின் பாதத் தவரொடு மன்னஎன்னை
ஏந்திய வாறென்கொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 37

எழுத்து விதிக்கை விதியே அளிக்கும் என் ஈச அம்மால்
அழித்துப் பிறப்பிப்பை மாலய னோரைஅம் மக்கணிற்க
குழுத்தவ ரோடுநின் பாதத்தை நோக்கிக் குறுகஎன்னை
இழுத்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடும் இறையவனே. 38

ஆழ்த்திய சொல்லியர் அங்கப் பயோதர ஆரிருளால்
ஊழ்த்திய நோக்காலென் நோக்கை அடைத்தனர் உற்ற அன்பாய்
வாழ்த்திய வாய்சுகப் பந்தால் அடைத்தனர் மாமருளைத்
தாழ்த்திய வாறென்கொல் தில்லையுள் ஆடியு சங்கரனே. 39

பெருக்கிய அன்பைநின் பாதத் தகற்றியென் பேரறிவைச்
சுருக்கிய மாதர் முலைமீ(து) அழுத்திய துட்டனிந்நாள்
கருக்கிய தீயினைக் காலால் அடர்த்துனைக் காதலித்துத்
தருக்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 40

சொலிற்பித்தும் மாதர் துணைத்தோள் இனையவர் துங்கபங்கம்
புலிற்பித்துப் போக்கு வரவொடும் பூட்டிப் பொருந்தத்தன்பால்
வலிப்பித்த பித்தன் எனைத்தான் பிடித்து மருவநின்பால்
சலிப்பித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 41

மங்குமிவ் வங்கம் மதிவான் உலகத்தை மன்னுமங்கை
கொங்கையில் இன்பங் குறித்தன மாகில் குறித்ததந்தோ
பொங்கிய தீய நரகே புகச்செயும் பொய்யனின்றாள்
தங்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 42

நடையட்டள் தாய்மனம் தந்தையட் டான்மங்கை நாட்டநின்பால்
தொடையட்டள் மக்கள் கரமே துடைத்தனர் சுற்றரெம்வாய்க்
கொடையட் டனரிவர் எல்லாம் குலையக் குறித்தடியேன்
தடைபட்ட வாறென்கொல் தில்லையு ளாடிய சங்கரனே. 43

விதிபட்ட துன்கை உகிரின்முன் சூலத்தின் விண்டுஅங்கம்
பதிபட்ட காமன் விழிபட்ட பாடு படுத்தலின்றோ
மதிபட்ட நீஎன் உளத்தே இருக்க மதிமலத்தின்
சதிபட்ட வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 44

கவிர்பட்ட செப்புப் பயோதரக் கண்ணென்கண் கல்மனம் போய்
அவிர்பட்ட வாய்தனில் கால்கள் அமைத்தங்(கு) அளவதில்லாக்
குவிபட்ட தீப்பவம் யான்வெறுத் துன்னைக் குறுகமங்கை
தவிர்பட்ட வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 45

ஆவிய தல்ல அஞ்ஞான மெஞ்ஞான்றும் அறிவதெனக்
கூவிய தாமறை யானற ஆனந்தங் கூட்டியநீ
மேவிஎந் நாளும் விடாதுடல் சிற்றின்பம் வெஃகியதைத்
தாவிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 46

வரிப்பித்து மக்கள் மனையொடு செல்வம் வார்தொழிலின்
நிரப்பித்துத் பித்தைஎன் நெஞ்சிலெந் நாளும் நெடிய அன்பைப்
பரப்பித்தி லேனையும் பாதத்தை நோக்கிப் பணியநின்பால்
தரிப்ப்பித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 47

நாவித்துப் பாவம் நவிற்றி நவையுற நாடியென்றும்
பாவித்தல் உள்ளம் இதத்தோ(டு) அகிதப் படுத்திமலம்
மேவித்துத் தீவினை வேறாக்கி உன்னை விரும்ப என்பால்
தாவித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 48

புழுவிய தாகம் புகுந்தனன் நானுன்றன் பொன்னடியை
வழுவிய தாலின்ன மன்னநின் பாதத்தை மன்னலின்றி
நழுவிய தாமென்னை நன்மா மலரடி நண்ண இந்நாள்
தழுவிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 49

நெறித்தனள் மங்கைதன் நெற்றிப் புருவத்தை நீசிவத்தைக்
குறித்தனை யேன் எனப் பற்கடித் தான்தந்தைகூழைகையால்
பறித்தனள் தாய் அறப் பாசப் பகைகள் பதைக்கக்கண்ணால்
தறித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 50

இடைப்பட்ட மாதர் தனக்கிரி மீதில் எடுத்துக்கண்ணால்
உடைபட் டிட உருட் டிப்பின்னும் மேலும் உயர்த்தித்துன்பப்
படைபட்ட யானுன்றன் பாதத் தவரொடும் பற்றிநின்பால்
தடைபட்ட வாறென்கொல் தில்லையுள் ஆடிய சங்கரனே. 51

முளைத்ததென் ஆவி மலத்தோ டடங்கி முழுதுமதாய்க்
கிளைத்தது வாகும் கரணங்க ளாகக் கெழுமிப்பொய்யை
விளைத்தது வாகும்மிக் கோரொடுங் கூடி விரும்பநின்பால்
வளைத்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய மன்னவனே. 52

தொழுத்திய தல்லச் சுகம் உனை நோக்கித் துதிக்குமங்கைக்
குழுத்திய(து) உன்னைக் குறுகாக் கொடுந்தொழில் கூட்டிநெஞ்சை
அழுத்திய தீதை அகற்றிநின் பாதம் அடைந்தடியேன்
வழுத்திய வாறென்கொல் தில்லையுள் ஆடிய மன்னவனே. 53

ஊழ்வித் திதாகிதம் அங்குரம் காமம் உளத்துமுளை
சூழ்வித்து வஞ்சிப் பயோதரக் கொம்பதைச் சுற்றிவிடாக்
காழ்வித்து நின்பதக் கொம்பிற் படர்ந்துமெய் காய்க்கஎன்னை
வாழ்வித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய மன்னவனே. 54

உரிப்பித்த வாபித்தை உள்ளொளி யோடொளி ஒக்கநெஞ்சில்
தெரிப்பித்த வாவினை யாவையுந் தீர்த் திருவிழியால்
எரிப்பித்த வாதிருப் பாதத்துள் என்னை இருத்திஇன்பாய்
மரிப்பித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய மன்னவனே. 55

உருத்திய தென்னஎன் உள்ளத்தின் ஒர்ந்ததற் கோருடலை
இருத்திய வாறும் இழந்தெனிந் நாளிதை இன்பமெனப்
பொருந்திய தீமலப் பொய்யைஎற் காகநின் பொன்னடியால்
வருத்திய வாறென்கொல் தில்லையுள் ஆடிய மன்னவனே. 56

குணங்கிய தன்றுநின் பாதத்து நோக்குக் குறித்தவுள்ளம்
பிணங்கிய தீமலப் பெற்றிய தாமதைப் பேதமற
இணங்கிய தாலுனை யானேத்து கில்லேன் இதைப்பிரிந்து
வணங்கிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய மன்னவனே. 57

தொழுவேனின் பாதப் பரிசைமிக் கோரெனச் சூழ்ந்தடியில்
அழுவேன் அவரென உள்ளமவ் வாறன் றகமகிழ்ந்து
விழுவேன் செகத்துள்நின் பாதத்தைவேண்ட விருப்பமந்ததோ
வழுவேஎவ் வாற்றுந் தில்லையுள் ஆடிய மன்னவனே. 58

புளிப்பட்ட தாமிரம் போலுமென் ஆவிநின் போதமுற்றார்
உளிற்பட்ட காலம் அறக்களிம் பென்னஎன் உள்ளமையல்
ஒளிப்பட்ட தாகும்மிக் கோரொடு நின்னபடி உன்ன இந்நாள்
வெளிப்பட்ட வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 59

துளைத்தது காமன் பகழியென் நெஞ்சைச் சுடுநெருப்பாய்க்
கிளைத்தது வான்மதி தீர்க்கும் மருந்தெனக் கேடிலருள்
முளைத்தது மாதின் முயக்க மருந்தென முற்றிப்பொய்யா
விளைத்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 60

தெரிவித்த நின்னருட் பாதக் கதிரென்றன் சித்தம்புக்குப்
பிரிவித் தக இருள் யானீய தாக்கிப் பிரிவிலுடல்
வருவித்த தன்பணிக் காய்வினை நிற்கென மன்னிநின்பால்
விரிவித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 61

இரவிய தாம் அருள் ஆவணம் தீதிருள் ஏயுமுடல்
மருவிய நீதந்த தாயுமுன் பாதம் மறைத்திருளாய்ப்
பரவிய தாமலம் வேறதுவாகப் பரிந்தென்நெஞ்சில்
விரவிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 62

ஒடுக்குமென் தாய்பரி வால்தந்தை வஞ்சத் துலகியல்பாய்
அடுக்குமின் னார்புலன் ஐந்தால் அடக்க மிக உருவால்
தடுக்கும் புதல்வரிப் பாசப் பகையறச் சார்ந்தருளில்
விடுக்குமெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 63

துலக்கும் அறிவினைக் காயம் வினையுமத் தூய்மையதாய்க்
கலக்கும் மலங்கல வாவிடின் காமன் கணைக்குநெஞ்சம்
இலக்கு மலக்கதிர்ப் பாதத்தை நாட்டி இருளகத்தில்
விலக்குமெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 64

சுடுகின்ற தோர்புறம் காமமற் றோர்புறம் சூழ்பசித்தீ
அடுகின்ற தோர்புறம் நோயொரு பாலில் அமர்கையினால்
தொடுகின்ற வாறெங்ஙன் நீயென யாவையுந் துன்பமென
விடுகின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 65

நடக்கின்ற தீது நடவாத தீதென நாட்டியருள்
கொடுக்கின்ற ஆரியன் தன்பால் இருந்தும் கொடுவினையால்
அடுக்கின்ற மாதர்க் கவாவுமென் நெஞ்சறி யாமையற
விடுக்கின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 66

தொடுவித்த் மெய் ஐம் புலனறி யாமை துடைத்தற்கருள்
குடிவைத் திட அன்பு நின்பால் அறமலம் கொங்கைமின்மைப்
படிவைத்துத் தன்வச மாக்கும் புலனெறி பற்றிஅதை
விடுவித்து வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 67

உதித்தனை நெஞ்சத்துள் நீஎன்றன் ஆவிஉன் னோடுறவாய்
மதித்தன வந்தவை நிற்காய் மலத்தொடு வந்ததெல்லாஞ்
சிதைத்தன தீய பிராரத்த தேகமுஞ் சீவனுக்காய்
வித்ததெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 68

இரும்பிய லாகுமென் நெஞ்சம்பொய் மாதர்க் கிசைந்தருளின்
திரும்பிய தாலென்ன தீவினை யோமலம் தீத்தனுவைக்
கரும்பிய லாக்கிநின் அன்பரை வேம்பெனக் காட்டுமிதால்
விரும்பிய வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 69

இலையுற்ற ஆணவம் நீபே ரறிவு எழிற்பகழி
முலையுற்ற ஆதி முடித்தாமம் ஆகும் முழுமதியாங்
கலையுற்ற துன்சடை காமன் கருதிக் கணைதொடுப்பான்
விலையுற்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 70

நினையுற் றிடுமென் அறிவு மனம்பொறி நின்பணியாந்
தனையுற் றிடுவது யானறி யாமையைச் சார்தலின்றால்
பினையுற் றிடுவதென் தேகப் பிராரத்தப் பெற்றியிரு
வினையுற் றிடுவதென் தில்லையுள் ஆடிய வித்தகனே. 71

ஆவிநின் பாலன்பென் அங்கமும் நின்பணி அங்கமொன்றைத்
தாவில துன்செயல் யானோ எனக்கிலைத் தத்துவத்தால்
ஆவதொன் றெற்கிலை யாமாலென் பால்விட் டகன்றவினை
மேவிய வாறென்கொல் தில்லையுள் ஆதிய வித்தகனே. 72

கொனையுற்ற தாமலம் யானறி யாமைக் கொடுங்கருவி
யினையுற்ற வாறெங்ஙன் மாறா உடலம் பிறக்கவினை
தனையுற்ற வாறெங்ஙன் ஈன்றாள் தரிக்கத் தரிக்குஞ்சத்தி
வினையுற்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 73

முளைக்கின்ற காலும் முளைக்குமுற் காலும்பொய் மோகநெஞ்சில்
கிளைக்கின்ற தாலதற் கேற்ற தனுவினைக் கிஞ்சனுற
வளைக்கின்ற வாக்கினை நின்செயல் மற்றுமென
விளைக்கின்ற வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 74

திரிவித்தென் நெஞ்சத்தைத் தீவினை யாவையுந் தீங்கரும்பாய்
வருவித்துத் தீய பிறப்பினை ஆக்கும் மலமதற
விரிவித்த நின்செயல் பொய்யாத தீதையும் ஐயனீயாய்
விரிவித்த வாறென்கொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 75

உதிக்குமுற் காலுமெக் காலத்தும் உள்ளத்தை உற்றுமலம்
சதிக்கும் பிறவிக்குத் தானுட னாக அச் சத்தியற
மதிக்குநின் சக்தி மருளாய் மயக்கமும் மன்னநியாய்
விதிப்பதெவ் வாறுசொல் தில்லையுள் ஆடிய வித்தகனே. 76

அதிசய மாலை முற்றிற்று