அம்பலவாண தேசிகர்

அருளிய

நமச்சிவாய மாலை

சீரேற்று நின்கருணைச் சித்தமே புக்குமலப்
போரேற்றி நிற்கப் பொருந்திடுவ தெந்நாளோ
வாரேற்றுங் கொங்கை மகளிர் அறக்கருணைத்
தூரேற்றும் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 1

வன்னமே நின்னருளை மன்னின்மல வன்னமெலாம்
பின்னமே ஆக்குமருட் பேறளிப்ப தெந்நாளோ
வன்னமே இல்லா வடிவே வருங்கருணைச்
சொன்னமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 2

ஊழே கருணைக் கொருப்பட்டும் ஊழென்னுமலக்
காழே உரைக்குமிந்தக் கற்பகல்வ தெந்நாளோ
பாழே அகலின் பயிர்பா ழெனார்கருணைத்
தோழேதென் னாவடுதண் டுறைநமச்சி வாயனே. 3

வித்தவா தீப்பிறப்பில் விட்டதால் சங்கமலப்
பித்தவா மாற்றியருட் பேறளிப்ப தெந்நாளோ
தொத்தவா உற்ற அருள் தொண்டர்க்கு நன்மேனி
ஒத்தவா ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 4

இற்றகர்த்தார்ச் காசை எழலால் அருளின்மலக்
கற்றகர்த்து நின்னருளைக் காட்டுவதிங் கெந்நாளோ
சொற்றகர்த்து நின்னருளில் தோய்வார் உளத்தமுதாய்
உற்றகற்றா ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 5

கற்றகலா திற்சுகத்தைக் காதலிக்கும் என்னெஞ்சுப்
பற்றகற்றி நின்னருளைப் பாவிப்ப தெந்நாளோ
சற்றகலா துற்றவர்க்குச் சர்க்கரையே நற்றவரை
உற்றகலா ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 6

விதித்திடுமால் இருவினைக்கே வெய்யமலம் தீயேனைச்
சதித்திடுமால் நின்னருளைச் சார்ந்திடுவ தெந்நாளோ
துதித்திடுமால் உற்ற இன்பத் தொண்டர்க்கு நின்னருளே
உதித்திடுமால் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 7

புண்டகைய நற்றுகிலைப் பூட்டியிருள் மாதருளக்
கண்டகையும் மாயக் கலியகல்வ தெந்நாளோ
தண்டகையும் தீத்தரித்த கையா தவர்க்கமுதாம்
ஒண்டகையே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 8

கற்றவனே ருற்றிலமே காதலிக்கும் என்னெஞ்சு
நற்றவனே ருற்றருளை நாடுவதிங் கெந்நாளோ
சற்றவநேர் நில்லாத் தவர்க்கமுத மாய்நிறைந்தங்
குற்றவனே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 9

சொற்பவமே மாதரின்பு சொல்லிறந்தன் னார்களின்பம்
அற்பகலும் துய்ப்பேற்குன் அருள்தருவ தெந்நாளோ
இற்பவமே மாய அருள் ஏய்வார் உளத்தமுதாம்
உற்பவமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 10

உண்பொருளே நோக்கி உலாவுமனம் ஊணொழித்தென்
கண்பொருளே நோக்க அருட் கண்தருவ தெந்நாளோ!
விண்பொருளே மிக்கோர் விழுங்குமமு தேகருணை
ஒண்பொருளே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 11

பொய்க்கயலாம் நின்கருணை பூண்பதற்குப் பொய்மாதென்
மெய்க்கயலாய் நிற்க விதித்திடுவ தெந்நாளோ
இக்கயலா வேடன் எழிலெரித்த வாநோக்குக்
குக்கயலே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 12

தீக்கயலே நீயாமால் சேர உனைத் தீச்சொலென்றன்
வாய்க்கயலே யாகவுனை வைத்திடுவ தெந்நாளோ
நோய்க்கயலே உற்றதவ நுண்ணியரோ டொத்த அரு
ளோய்க்கயலே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 13

செகத்தயலே நீயாமால் சேர்ந்தவுடற் போகமென்றன்
அகத்தயலே யாக அளித்திடுவ தெந்நாளோ
பகுத்தயலே தானாகப் பார்க்குமான் மாக்கள்
சுகத்தயலே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 14

எண்ணுக் கயலே எழுமா நிதிப்பொருளென்
கண்ணுக் கயலேயாய்க் காட்டுவதிங் கெந்நாளோ
விண்ணுக் கயலே விடுஞ்சுகத்தை வேண்டுமக்கள்
உண்ணுக் கயலேதண் டுறைநமச்சி வாயனே. 15

மோகத் தயலே முளைப்பாய்நீ மாதரின்பென்
ஆகத் தயலாய் அளித்திடுவ தெந்நாளோ
சோகத் தயலே சுகத்திலிறு மாக்குமக்கள்
ஊகத் தயலேதண் டுறைநமச்சி வாயனே. 16

போகத் தயலே எனுமால்நீ பொய்ம்மலமென்
பாகத்தய லேய அருள் பண்பளிப்ப தெந்நாளோ
சொகத் தயலே சுகத்திலிறு மாக்குமக்கள்
ஊகத் தயலேதண் டுறைநமச்சி வாயனே. 17

இன்பத் தயலே எழுமால்நீ தீமலமான்
இன்பத் தயலாக நீக்குவிப்ப தெந்நாளோ
அன்பற் றயலார்க் கருத்தியிறு மாக்குமக்கள்
துன்பத் தயலேதண் டுறைநமச்சி வாயனே. 18

மாசுக் கயலே மதிப்பான்நீ தீமலத்தின்
தேசுக் கயலாரைச் சேர்ந்திடுவ தெந்நாளோ
ஆசைக் கயலாருக் காவிமனம் ஈயுமக்கள்
ஓசைக் கயலேதண் டுறைநமச்சி வாயனே. 19

திண்மைக் கயலாமுன் தேசெனுமால் தீயமலப்
பெண்மைக் கயலாரைப் பெற்றிடுவ தெந்நாளோ
வண்மைக் கயலாக்கும் மாதரின்பஞ் சேருமக்கள்
உண்மைக் கயலேதண் டுறைநமச்சி வாயனே. 20

கள்ளத் தயலாங் கருணையெனும் மான்மலத்தின்
பள்ளத் தயலாரைப் பற்றிடுவ தெந்நாளோ
வெள்ளத்தய லாக்கும்மருள் மேவுமங்கை இன்புறுவார்
உள்ளத் தயலேதண் டுறைநமச்சி வாயனே. 21

கோணுக் கயலாய்க் குறிப்பானீ தீயமல
நாணுக் கயலாரை நண்ணுவிப்ப தெந்நாளோ
மாணுக் கயலாக்கும் மாதரின்பஞ் சேருமக்கள்
ஊணுக் கயலேதண் டுறைநமச்சி வாயனே. 22

கன்னவாய் செய்யக் கருவிகொடுத் தொக்கநின்றும்
இன்னல்வாய்த் தீநிரயத் தேற்றுவிப்ப தெவ்வாறோ
மன்னுவாய் தீதகல மாதவர்க்கு மற்றுமன்பாய்
உன்னுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 23

எள்ளுவாய் தீதை உணஏயுங் கருவிதந்து
தள்ளுவாய் நீநரகைத் தந்திடுவ தெவ்வாறோ
கொள்ளுவாய் முத்தர்தனுக் கோவிலுளம் நீயாக
உள்ளுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 24

மணந்தாள் அல் லாரை மருவுகைக்கு அங்குஅங்கம்
புணர்ந்தாய் நரகதனிற் போடுவதிங் கெவ்வாறோ
கொணர்ந்தாய்நன் மேனி கொடியேன் கொடுமையற
உணர்ந்தாய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 25

கள்ளுவிற் பார்க்கேற்ற கருவியளித் துள்நின்றும்
கொள்ளுவிப்பாய் நீ நரகிற் கூட்டுவதிங் கெவ்வாறோ
தள்ளுவிப்பாய் தீதைப் தவர்க்கமுத மாயுளத்தங்(கு)
உள்ளுவிப்பாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 26

குந்தமே ஈந்தும் கொலைக்குளருங் கூட்டியென்னால்
அந்தமே யாக்கிநர காக்குவதிங் கெவ்வாறோ
தந்தமேல் இச்சையறச் சார்ந்ததவத் தோர் உளத்துள்
தொந்தமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 27

கொல்லுவாய்க் கெல்லாம் கொலைக்கருவி ஈந்துளரும்
நல்குவாய் நீநரகில் நண்ணுவிப்ப தெவ்வாறோ
புல்குவார் உள்ளம் புகுவாய்பொய் மக்களுளத்து
ஒல்குவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 28

தேனே தினஊன் கொல உயிரைக் கூட்டியும்நீ
தானே நிரயமெற்குத் தந்திடுவ தெவ்வாறோ
தேனே புலால்மறுத்த செல்வர் உளம்புகுந்த
ஊனேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 29

வலைவாய்ப் படவகையுங் காட்டி உயிர்மாய்த்துத்
தலைவாய் நரகமெற்குத் தந்திடுவ தெவ்வாறோ
மலைவாய் இலாத அருள் மன்னுவார் உள்ளத்(து)
உளைவாய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 30

களிப்பாய்க் குருநிந்தை கத்துதற்குச் சிந்தை
அளிப்பாய் நரகதற்கும் ஆக்குவதிங் கெவ்வாறோ
துளிப்பார்கண் ணீர்வாய் துதிப்பாரைத் தாளில்
ஒளிப்பாய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 31

இடிப்பார்க்குக் கோயில் உடல் ஈந்தும் பிரேரித்தும்
கொடுப்பாய் நரகக் குழிவைப்ப தெவ்வாறோ
எடுப்பாய்த் திருக்கோயில் ஏத்துவார் நீயாய்த்
தொடுப்பாய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 32

ஈட்டுவாய்க் கெல்லாம் இயற்று மலவினைக்காய்க்
கூட்டுவாய் நின்செயலாய்க் கூறிடுவ தெத்தாலோ
காட்டுவாய் தீதகலக் காண்பார்க்கு நின்னருளே
ஊட்டுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 33

கூட்டுவாய் தீதினிது கூடுமிருள் மான்நோக்கி
ஆட்டுவாய் நின்செயலாய் ஆக்குவதிங் கெத்தாலோ
கேட்டுவாய்த் தீநெஞ்சைக் கிட்டாமல் நின்னோக்கால்
ஓட்டுவாய் ஆவாடுதண் டுறைநமச்சி வாயனே. 34

ஆக்குவாய் நீவினைக்கீ டான்மலத்தின் பின்னாகத்
தாக்குவாய் நின்செயலாய்ச் சாற்றிடுவ தெத்தாலோ
நீக்குவாய் ஐம்புலனும் நீங்காத அன்பரன்பாய்
ஊக்குவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 35

ஆட்டுவிப்பாய் நீவினைக்கீ டவ்வினையும் நீதானே
ஈட்டுவிப்பாய் என்ன இசைத்திடுவ தெத்தாலோ
காட்டுவிப்பாய் பொய்யகலக் காண்பார்க்கு நின்னைஇன்பாய்
ஊட்டுவிப்பாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 36

பூட்டுவாய் நீகருவி பூண்பார்க்குப் பொய்வினையைக்
கூட்டுவாய் நின்செயலாய்க் கூறிடுவ தெத்தாலோ
வீட்டுவாய்த் தீதுக்கு இருநிரயத் தாக்கிமலம்
ஓட்டுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 37

மதித்திடுமா லால்வினையும் மனப்படலால் மலத்தைமுன்னாய்
விதித்திடலாம் தீநீயாய் விளம்பிடுவ தெத்தாலோ
சதித்திடலால் உளத்தைமலம் தகுநிரயத் தாக்கிஅருள்
உதித்திடுமால் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 38

பொய்விப்பார் அங்கத்தில் பூண்டபணி யால்மருளச்
செய்விப்பார் நின்செயலாய்ச் சேர்த்திடுவ தெத்தாலோ
மெய்விப்பாய் உன்னை விரும்ப அரு ளாரமுதத்(து)
உய்விப்பாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 39

விதித்திடஎப் பிறப்பினுளும் மேவுமலம் மிக்கென்னைச்
சதித்திடவும் நின்செயலாய்ச் சாற்றிடுவ தெத்தாலோ
மதித்திடநின் அன்பரன்பை மன்னியருள் மெய்நீயா
உதித்திடுமால் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 40

தற்பகையைக் காய்ந்த தவர்க்குவிட மானமல
இற்பகையை நன்றென் றிசைத்திடுவ தெத்தாலோ
கற்பகலா மாதைக் கடிந்ததவத் தோருளத்துள்
உற்பவமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 41

துன்றுவாய் எல்லாம் துலங்கக் கருவிதந்து
நின்றதால் ஈட்டுவித்தல் நீஎன்ப தெத்தாலோ
பொன்றுங்கால் தீநரகிற் பூட்டிமல மோட்ட உளம்
ஒன்றுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 42

வானே ருடலுளமும் வாங்கவும்நீ தீயேற்குத்
தானே பிராரத்தஞ் சாற்றிடுவ தெத்தாலோ
தேனே உயிர்க்குயிரே சேர்ந்ததவத் தோர்தரித்த
ஊனேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 43

காட்டுவாய் நீவினையைக் காதலித்து நிற்காகக்
கூட்டுவேன் எற்கென்னக் கூறிடுவ தெத்தாலோ
ஊட்டுவாய் நற்றவர்கள் ஊட்ட அடை உண்டுமலம்
ஓட்டுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 44

புல்குவாய் எல்லாம் புணருவாய் என்னைஅற
நல்குவாய் அவ்வினைக்கு நானென்ப தெத்தாலோ
செல்குவாய்க் குன்னருளைச் சேராதார் உள்ளமுற
ஒல்குவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 45

வான்றீ செயினுமுளம் மன்னிமலம் மாற்றியருள்
தேன்றீன் இடவும்வினை சேருமென்ப தெத்தாலோ
மான்றீ என இலத்தை மாற்றுவார் நெஞ்சமுதாய்த்
தோன்றீதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 46

களித்திடுமால் இருவினையைக் கைக்கொடுக்க வாங்கிநிற்கே
அளித்திடுமால் எற்கென் றறைந்திடுவ தெத்தாலோ
குளித்திடுமால் நின்பதத்திற் கூடியயான் நீயாய்
ஒளித்திடுமால் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 47

கண்கதிரே நோக்குஇருள் காணாதென் ஆவிஅருள்
தண்கதிரே நோக்கில்வினை தாக்குமென்ப தெத்தாலோ
விண்கதிரே தீதை விளைக்குமிரு ளோட்டுமருள்
ஒண்கதிரே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 48

யானேநீ யாலென்றன் அங்கமும்நின் அங்கமதால்
கோனே வினையெனக்குக் கூடுமென்ப தெத்தாலோ
தீனே விரும்பிச் செயற்படுவார் அங்கமுறா
தோனேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 49

காழே மலமகலக் காட்டி உனைக்கருணை
வாழ்வே அளித்தும்வினை வைப்ப தென்பதெத்தாலோ
ஊழே அகல அருள் ஊணாக்கி ஊட்டும் அருள்
தோழேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 50

ஆவியும்நீ என்றன் அங்கமும்நின் அங்கம்வினை
தாவியுமேல் சாருமெனச் சாற்றிடுவ தெத்தலோ
சாவியமேல் நோக்கும் தவருளத்தை நீங்காத
ஒவியமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 51

ஊணே உனக்கூட்டி உண்டும் உனக்குழைத்தும்
கோணையறுப் பார்க்குவினை கூடுமென்ப தெத்தாலோ
வீணே தொழில்புரியா மிக்கவர்கள் உற்ற அருள்
தூணேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 52

புண்ணியமேல் பாவங்கீழ் போக்குமற நின்பாலில்
பண்ணியதே அவ்வினையைப் பாற்றின்முத்தற் கேனாமோ
எண்ணியுமே நின்னடியார்க் கீவார்கள் மும்மலமும்
உண்ணையுமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 53

நீக்கிமால் நெஞ்ச நினைவை நினக்காக
ஆக்குமால் ஊழெற் கணையுமென்ப தென்னாமோ
போக்குமால் போக்கியுன்றன் பொன்னடியால் ஊழகற்றி
ஊக்குமால் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 54

ஓட்டிமால் ஐம்புலனை உற்றஎனை மாற்றிநெஞ்சம்
ஈட்டுமால் நிற்காய் இதாகிதமெற் கென்னாமோ
ஆட்டுமால் உற்றவினை அற்றார்க் குனையமுதாய்
ஊட்டுமால் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 55

அங்கத்தால் உற்ற அருநோய் அணையலும் உன்
சங்கத்தால் மாற்றுமெற்கூழ் சாருமென்ப தென்னாமோ
மங்கத்தான் ஊழை மருவுமுயிர் தானான
துங்கத்தாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 56

சித்தமும் தீய கரணமுஞ் சித்திலே
ஒத்ததே என்னமுத்தற் கூழென்ப தென்னாமோ
பித்தமே மாற்றிப் பெறுஞ்செயலும் நின்செயலாய்
ஒத்ததே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 57

கன்னமே வான்பொருளிற் காதல் உனக்காக
உன்னுமே நெஞ்சம் உறுவினைஎற் கென்னாமோ
வன்னமே தீக்கை மனுவால் மறைந்தருளாய்த்
துன்னுமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 58

பரியுமே நற்பொருளைப் பற்றி உனக்காக்த்
தெரியுமே நெஞ்சம்பொய்த் தீவினைஎற் கென்னாமோ
திரியுமே ஆவிதனுச் சேர்ந்தபொரு ளோடன்பாய்ச்
சொரியுமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 59

தேட்டமே நீயாய்த் திரண்டபொருள் நிற்காக
வீட்டுமேல் கண்கள் இதாகிதமெற் கென்னாமோ
நாட்டமே எள்ளளவு நாடிலுனை மும்மலமும்
ஓட்டமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 60

நாவேயும் இன்பமதை நண்ணிமனம் உன்நாவுக்
காவே கருதல் அருவினைஎற் கென்னாமோ
சாவே விடுத்ததவர் தற்பரத்தோ டுற்றபரந்
தேவேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 61

கெந்தமே நற்பொருளைக் கேடிலுனக் காகமனம்
உந்துமே யாகில் உறுவினைஎற் கென்னாமோ
பந்தமே அற்றார் பரத்தோ டுறுபரமாம்
மொந்தமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 62

பாதமேல் உற்ற பணிபலவும் நின்னடிக்கென்
போதமே யேற்றப் புகின்வினையெற் கென்னாமோ
சேதமேல் தீயமலம் சேர்ந்தவெலாம் நீயாமென்(று)
ஓதுமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 63

பாணிமேல் உற்ற பணிபலவும் நின்னடிக்காய்ப்
பூணுமே நெஞ்சம் புதுவினையெற் கென்னாமோ
நாணுமேல் தீயமலம் நன்குடலும் நீயாக
ஊணுமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 64

அங்கமேல் உற்ற அவலவினை போக்கிநெஞ்சுன்
சங்கமே ஆக்கில்வினை தாக்குமென்ப தென்னாமோ
மங்குமேல் தீயமலம் மற்றவெல்லாம் நீயாக்கும்
துங்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 65

ஆகமேல் உற்றங் கணைவாரை என்னெஞ்சுன்
பாகமே யாகப் படுத்தின்வினை என்னாமோ
மோகமே இல்லாத முத்தர்தமை நீயாக்கும்
யோகமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 66

போகமே நோக்கிப் புணர்வாரை உன்னடிக்காம்
பாகமே யாகப் படுத்துவித்தால் ஆகாதோ
வேகமே யாக விசைவாரை நீயாக்கும்
யோகமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 67

காதலே உற்றுக் கருதுவார் தம்மையருட்
பாதமே நோக்குதற்குப் பண்ணுவித்தால் ஆகாதோ
பேதமே அற்றாரைப் பின்னமறத் தானாக்கும்
ஓதமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 68

மயலே மிகநோக்கி மன்னுவார் நின்னடிக்காஞ்
செயலே விரும்புதற்குச் செய்வித்தால் ஆகாதோ
இயலே விரும்பி இசையாதார் தங்கட்(கு)
அயலேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 69

வாக்குமேல் காயமனம் மற்றதெல்லாம் உன்னடியை
நோக்குமே ஓர்கருவி நோயாக நோக்கிமிக
நீக்கமே செல்வா நிறைவாகும் நீயாக
ஊக்குமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 70

இருபாற்கும் ஓர்கருவி ஏயுமால் தீதை
மருவார்க்கு நன்கருளே மன்னுவித்து மாலை
ஒருவார்க்குப் பொய்யே உறுவித்துத் தீதில்
உறுவாக்கும் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 71

கன்மத்தால் அஞ்ஞானம் காட்டலால் நின்கருணைத்
தன்மத்தால் நீயாகக்ச் சாற்றியிட லாகாதோ
வன்மத்தால் செய்கை வருவிப்பார் ஈடழித்த
உன்மத்தா ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 72

சாதியே உற்றாரைச் சாதிசொல்ல லாங்கருணை
ஆதியே ஆகிலப்பேர் ஆக்கியிடல் ஆகாதோ
ஓதியே சாதி ஒளிப்பாரோடு ஒட்டாநற்
சோதியே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 73

பாயும் பரிபாயப் பாகனென லாம்கருணை
ஏயும் உயிரதனை ஈசனெனல் ஆகாதோ
சாயும் மலமதறச் சார்ந்த உயிர் மேற்கருணை
தோயும்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 74

அங்கமேல் செல்லவுற்ற ஆவிஎன லாம்கருணைச்
சங்கமே சொலின்நீயாச் சாற்றியிடல் ஆகாதோ
பங்கமேல் தீயமலம் பற்றுமுடல் நீயாக்கும்
துங்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 75

ஆகமே உற்றாரை ஆகமென லாம்கருணை
ஏகமே யாகில் அருள் ஈசனெனல் ஆகாதோ
பாகமே உற்றாரைப் பற்றியருள் தானாக்கும்
யோகமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 76

பொன்னோ டுறுஞ்சீலை பொன்னதென லாம்கருணை
தன்னொடுறு வாரையருள் தானெனலும் ஆகாதோ
என்னோ டுடல்வினையும் ஏற்றுமலம் மாற்றுமருள்
சொன்னாதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 77

லிங்கமே உற்றமணல் லிங்கமென லாம்கருணைச்
சங்கமேல் ஆவிஅருள் தானெனலும் ஆகாதோ
பங்கமேல் தீயமலம் பற்றுமுயர் நீயான
துங்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 78

மந்திரமே சேரின் மனுவெனலாம் மெய்ஞ்ஞானத்
தந்திரமே சேரினருள் தானெனலும் ஆகாதோ
அந்தரமே நின்பதமென் றாதரிப்பார் அங்கமறாச்
சுந்தரமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 79

சாதியே மாறுஞ் சமயத்தென லாம்ஞான
நீதியே யாகிலருள் நீதியெனல் ஆகாதோ
ஆதியே ஆவிஅறில் அப்பரத்தோ டுற்ற அருட்
சோதியே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 80

நீரே கடம்மருவின் நீரதென லாம்கருணைச்
சீரேல் உயிர்கருணைச் சித்தெனலும் ஆகாதோ
பாரேர் இருவினையைப் பற்றிமல வேரறுத்த
சூரேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 81

முட்டேறு வாரையந்த முட்டதென லாம்கருணை
தொட்டேறு வாரையருட் சோதியெனல் ஆகாதோ
விட்டேறு வாருடலை மேவியருள் தானாக்கும்
சுட்டேறே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 82

கெடுக்கும் வினையுருவாய்க் கெடுக்குமென லாமுன்னைக்
கொடுக்கும் கருணையுருக் கொண்டதெனல் ஆகாதோ
தடுக்கும் மலமதறத் தத்துவமே நிற்காய்
ஒடுக்குந்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 83

பாதகமே செய்தாரைப் பாவியென லாம்கருணைப்
போதகமே செய்யிலருட் பொற்பெனலும் ஆகாதோ
சாதகமே நீயாம் தவத்தோர் தனுவையறாத்
தோதகமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 84

பித்தமே உற்றாரைப் பித்ததென லாம்கருணைச்
சித்தமே ஆகில்நீயாய்ச் செப்பியிடல் ஆகாதோ
அத்தமே நீயாக ஆர்ச்சிப்பார் அங்கமறாச்
சுத்தமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 85

திய்யேற் களித்தபொருள் தீயதென லாம்கருணை
மெய்யேற் களிக்கிலருள் மெய்யெனலும் ஆகாதோ
பொய்யேற்கு நின்னருளைப் பூட்டிஉயிர் வாங்குமருள்
துய்யோய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 86

பாவியே ஏற்றபொருள் பாவமென லாம்கருணை
மேவியே ஏற்கிலருள் மெய்யெனலும் ஆகாதோ
ஆவியே நீயாக அற்றவர்மேல் உற்ற அருள்
தூவியே ஆவதண் டுறைநமச்சி வாயனே. 87

பொக்கமேய் வார்க்கீகை பொக்கமென லாம்கருணைப்
பக்கமேய் வார்க்குஅருட் பண்பெனலும் ஆகாதோ
அக்கமே நீயாக ஆக்குவார் உள்ளமுற்ற
சொக்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 88

இழிவோர்கட் கீகை இழிவெனலாம் நின்கருணை
மொழிவோர்கட் கீகையருள் முற்றெனலும் ஆகாதோ
அழிவோர் அகமதுற்ற அங்கமென்றுஞ் செல்லா
ஒழிவேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 89

சிக்கேய்வார்க் கீகைமலச் சிக்கெனலாம் நின்கருணை
மெய்க்கேய்வார்க் கீகையருள் மெய்யெனலும் ஆகாதோ
பொய்க்கேய்வார் உள்ளம் பொருந்தாத நற்கருணைச்
சொக்கேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 90

மத்தமேல் உற்றார் உன் மத்ததென லாம்கருணைப்
பித்தமேல் உற்றார் உன் பித்ததெனல் ஆகாதோ
சித்தமே நீயான சித்தர் செயலுகந்த
சுத்தமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 91

பேயொத்தார் உற்றசெயல் பேயெனலாம் நின்கருணை
யாயொத்தார் செய்கை அருளெனலும் ஆகாதோ
நீயொத்தார் ஒத்து நினைக்கில்நின தாக்கும் அருள்
தூயொத்தாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 92

கள்ளேய்வார் உற்றசெயல் கள்ளதென லாம்கருணை
நள்ளேய்வார் செய்கைஅருள் நல்கெனலும் ஆகாதோ
எள்ளேயும் இல்லத்து இசையாதார் அங்கமுற்ற
உள்ளேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 93

மாலேய்வார் செய்கைஅந்த மையலென லாம்கருணை
யாலேய்வார் செய்கை அருளெனலும் ஆகாதோ
தோலேயும் அங்கம் துடைப்பார் உளம்புகுந்த
நூலேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 94

தீங்குவாய் எல்லாம் செலினும் உனைஅளித்து
வாங்குவாய் நின்செயற்கு வைப்பதற்கென் கைம்மாறே
நீங்குவாய் எல்லாம் நிரப்பியநன் முத்தருளத்(து)
ஓங்குவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 95

மருவனே ருற்றமருட் செல்வம் அறஈசன்
தருவனே என்ன உருத் தந்ததற்கென் கைம்மாறே
பருவநே ராக அருட் பண்பாங் கருணை
ஒருவனே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 96

களவே பலிப்பதற்காய்க் காணில் களவின்
அளவே கெடாதருளை ஆக்குநிற்கென் கைம்மாறே
மெளவே உனைநோக்கி மேவுவார் தங்கட்(கு)
உளமேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 97

ஈற்றுவாய் நோயில் எழுவாயும் துன்பத்தால்
கூற்றுவாய்க் கேற்றவுருக் கொண்டதற்கென் கைம்மாறே
வேற்றுவாய் ஐம்புலனும் வேறாக நன்மேனி
தோற்றுவாய் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 98

மகப்பேறே இச்சையால் வந்திக்க நின்னைஅந்த
வகைப்பேறே அன்றிஅருள் வைப்பதற்கென் கைம்மாறே
பகைப்பேறே இல்லமெனப் பார்த்தகல்வார் நெஞ்சிற்
சுகப்பேறே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 99

அற்றோயும் நற்கண்போல் ஆரிருளை ஆர்மதிக்கோர்
கற்றோயும் நற்கதிர்போல் காட்டுநிற்கென் கைம்மாறே
இற்றோய் விலாத அன்பர் ஏயும் இடந்தோறும்
உற்றோய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 100

தீனே நினைவுடற்குத் தேடினன் காண்நினைவைத்
தானே நினைத்தேடத் தந்ததற்கென் கைம்மாறே
தேனே உனையடைந்த செல்வர்க்கமு தான அரு
ளோனேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 101

அல்லேயக் கண்ணுக்கில் ஆயிழைதன் இன்பமல்லால்
இல்லே எனுமால் எரித்ததற்கென் கைம்மாறே
எல்லே தவத்தோர்கள் இன்பமே ஆங்கவர்கள்
சொல்லேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 102

பெத்தமே புல்ழுதலாய்ப் பெற்றதெல்லாம் நம்மருளைத்
தொத்துமே என்ன உருத் தோய்ந்ததற்கென் கைம்மாறே
சித்தமே புக்கிருந்த தீவினையும் நிற்காக்குஞ்
சுத்தமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 103

மித்தே அகலவலம் மேவுதற்குப் பூவையிடு
வித்தே தொழமேனி வேண்டுகைக்கென் கைம்மாறே
முத்தே கருணைமுளைத்தென்மலம் மாற்றுமின்பத்
தொத்தேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 104

போகமே உண்ணாதுன் பொன்னடியை நோக்கும் நெஞ்சன்
ஆகமே நீயாய் அமைத்ததற்கென் கைம்மாறே
மோகமே மிக்கோர் மொழியும் முகக்கருணை
யோகமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 105

இருவினையே தீதென்பால் ஏய்ந்ததுநிற் காக்க உரு
மருவினையே பூசை மகிழ்தலுக்கென் கைம்மாறே
திருவினையே இருவினையைத் தீர்க்குமெனும் அன்பருணும்
ஒருவினையே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 106

புத்திவாய் எல்லாம் புகுந்துபொருள் வாங்கிஎன்பால்
அத்துவா சுத்தி அமைத்தற்கென் கைம்மாறே
பித்துவாய் ஐம்புலனைப் பேர்த்துநினக் காக்கும் அன்பர்க்
கொத்தவா ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 107

கன்னமே வாயாய்நீ கள்ளமலம் ஐந்தினையும்
பின்னமே செய்தருளைப் பெய்ததற்கென் கைம்மாறே
வன்னமே இல்லா வடிவேமிக் கோர்க்குதவுஞ்
சொன்னமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 108

காதே வழியாக்கிக் காதலுற நின்கருணைத்
தூதே அளித்த துணைவ நிற்கென் கைம்மாறே
தீதே அகற்றஎன்றன் தீயவுருப் போலமைந்த
சூதேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 109

சேதனமே மாற்றித்தன் செய்தியதா க்கும் உடல்நிற்(கு)
ஆதனமே யாக அமைத்தற்கென் கைம்மாறே
சாதனமே பூண்டுடலைச் சாராதார் உண்ணுமருள்
ஓதனமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 110

சிறைவாய்ப் புலன்கணையாய்ச் சிந்தையுள் ளும்புக்கு
நிறைவாய் மலமொதுக்கி நின்றதற்கென் கைம்மாறே
இறைவா நினைவுனக்கே ஈந்தார்கள் உள்ளத்(து)
உறைவாய்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 111

பூவியமே நோக்கஎற்கிப் பூமிசையின் நின்னுருவாம்
பாவியமே செய்த பரிசதற்கென் கைம்மாறே
ஆவியைமேல் நோக்கிஅறி யாமைஅறுப் பார் உளத்துள்
ஓவியமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 112

உற்றே இருவினையும் ஓர்வினையே யாகவுளம்
நிற்றே பிராரத்தம் நீக்குதற்கென் கைம்மாறே
நற்றேற் குனையும்பொய் நள்ளிருளுங் காட்டுமருள்
ஒற்றேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 113

நாட்டமே வாயாய் நடந்துளத்தை வாங்கிமலக்
கோட்டமே மாற்றிஅருள் கூட்டுதற்கென் கைம்மாறே
ஆட்டமே நிற்காய் அமைப்பார்கள் ஆடுமருள்
தோட்டமே ஆவடுதண் டுறைநமச்சி வாயவே. 114

மலமே அகலுகைக்கு வாய்த்த கருவிக்
குலமே அளித்தறிவைக் கூட்டுகைக்கென் கைம்மாறே
இலமே பகைத்திங் கெழுவார்கட் குற்ற
நலமேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 115

இருளே மலம்கருவி ஈயாக்காண் நீயும்
பொருளே எனவிளக்கிப் பூண்டதற்கென் கைம்மாறே
மருளே அகல மருவுமுயிர் தானாம்
அருளேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 116

ஊனே விரும்பி உயிர்செகுக்கும் தீயமனம்
தானே அகல அருட் சார்ந்ததற்கென் கைம்மாறே
கோனே உயிர்க்குயிரே கோலம்பல வான அருள்
தேனேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 117

அங்கமே நோக்கி அணையுமக ளீர்தம்
சங்கமே மாற்ற அருள் தந்ததற்கென் கைம்மாறே
மங்கமேல் தீது மருவுங் கருணைகொண்ட
துங்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 118

தந்திரமே தீதனைத்தும் தானாய்த் தழுவும்நெஞ்சுன்
மந்திரமே நோக்க அருள் வைத்ததற்கென் கைம்மாறே!
அந்தரமே நில்லா அகன்ற அறி வாய்நிறைந்த
சுந்தரமே! ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 119

தாயர்பால் உற்றுத்தருக்கும்மனம் உன்னடியில்
பாய அருளளித்த பண்பதற்கென் கைம்மாறே
மாயும் மலமதற வாழுமுயிர் தானாகத்
தோயுந்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 120

தந்தைபால் உற்றுத் தருக்கும்மனம் உன்னடியில்
வந்தனையே செய்ய அருள் வைத்ததற்கென் கைம்மாறே
சிந்தனையே நீயாய்ச் செறிந்த உயிர் நீயாகும்
தொந்தனையே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 121

பாசமே தானாகப் பற்றும்மனம் உன்பூசை
நேசமே தானாக நின்றதற்கென் கைம்மாறே
நாசமே இல்லா நவைவேர் அறுத்த உயிர்
வாசமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 122

காமமே உற்ற கடுவிருளை உன்மேனி
நாமமே ஓட்டிஅருள் நாட்டுகைக்கென் கைம்மாறே
தாமமே சாத்தித் தருக்குந்தவத் தோர் உளத்துச்
சேமமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 123

காயமே தானாய்க் கருதுமனம் உன்னடியிற்
சாயமேல் வைத்த சதுரதற்னென் கைம்மாறே
ஞாயமே யாக நடப்பார்கள் ஆடும் அருள்
தோயமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 124

தன்னியல்பே மாற்றித் தகும்பொதுவே ஆக்குமலம்
அன்னியமே ஆக்கைக்கு அளித்ததற்கென் கைம்மாறே
என்னியல்பே நீயாய் எழுகைக்கு எழுப்புமருள்
உன்னியல்பே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 125

மாற்றி மலத்தை வருமுயிரை நீயாகத்
தேற்றி நடத்துஞ் செயலதற்கென் கைம்மாறே
ஆற்றுந் தனுவை அறிவிட்டார் தாமாகத்
தோற்றுந்தென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 126

வன்னமே தீக்கை மருவமல வன்னமதைப்
பின்னமே ஆக்குமருட் பேறதற்கென் கைம்மாறே
கன்னமே நின்புகழைக் காதலிக்கக் காதலுற்ற
சொன்னமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 127

மலமாலே நோக்கி வருமுயிரை நீயாம்
குலமாலே யாக அருள் கொண்டதற்கென் கைம்மாறே
பலமாலே யாகப் படுத்திமலம் மாற்றிமிக்க
நலமாலே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 128

மலமேல் ஒருமலமாய் வாய்த்த கருவிக்
குலமே அருளாகக் கொண்டதற்கென் கைம்மாறே
நலமே இலதாக நாட்டுமலம் தீர்த்த அருட்
செலமேதென் ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 129

இருவினையே மும்மலத்தோ டொன்றாக ஏய்ந்து
வருவினையே நின்னடிக்காய் வைத்ததற்கென் கைம்மாறே
கருவினையே மாற்றிஉனைக் காதலிப்பார் தங்கட்கு
ஒருவினையே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 130

இருவினையே திருவினையாய் ஏயும் இருவினையும்
ஒருவினையே ஆக அருள் ஊக்குதற்கென் கைம்மாறே
மருவினையே யாக்கை மருவாரை மாற்றார்க்(கு)
ஒருவினையே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 131

தம்பனையே நீயாம் தகுங்காமே யானாகும்
வெம்பும் அனல்வினையாய் வேண்டுகைக்கென் கைம்மாறே
நம்புமுயிர் நீயாக நாட்டிவினை மாற்றுமருள்
செம்பனே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 132

மந்திரமே நீயாய் மருவுமங்கம் யானாய்ப்பொய்ப்
பங்தவினை பாம்பாகப் பண்ணுதற்கென் கைம்மாறே
தங்திரமே நீயாய்த் தழுவிவினை மாற்றுமருட்
சுந்தரமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 133

இங்கே வினையதனை ஏயுமுடல் பாத்திரம் உன்
நன்கையே ஏந்தி நடக்குதற்கென் கைம்மாறே
மங்கமேல் தீயவுடல் மற்றுமுடல் ஈயாத
துங்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயானே. 134

இங்குப்போம் பாத்திரத்தில் இங்கிலையால் அங்கத்துத்
தங்கும் வினைதீர்த்த சதுரதற்கென் கைம்மாறே
சங்கமே நீயாய்த் தரிக்கின்வினை மாற்றுமிக்க
துங்கமே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 135

உன்னியல்பே என்னோடு உறுமியல்பாம் என்னியல்பே
உன்னியல்பை ஒட்டி உணர்வதற்கென் கைம்மாறே
தன்னியல்பே எல்லாம் தவிர்ந்தநடை தானாகும்
உன்னியல்பே ஆவடுதண் டுறைநமச்சி வாயனே. 136

நமச்சிவாய மாலை முற்றிற்று