http://www.chennailibrary.com





கதை முகம்

     இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே 'கதை முகம்' என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். 'முகஞ் செய்தல்' - என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஓவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும் முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசியமென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன்.

     இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறுபுறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது?

     சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்த்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது. இதன் பின்பே பாண்டியர்களின் தலைநகர் மதுரைக்கு மாறியது. கபாடபுரம் அழிந்த பின்னரும் சோழர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர். ஏனென்றால் கபாடபுர நகரம் கடல் கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும் பற்பல ஆண்டுகளுக்கும் பின்பு கடைச் சங்க காலத்திற்கும் கூடக் காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டுப் புலவர்கள் பாடும் இலக்கிய நகராக இருந்தது.

     பாண்டியர்களின் பொன் மயமான - பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம்பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்தரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கியமில்லை. தமிழரசர்களின் அழிந்த கோடி நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோநகராயிருந்து கடல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே 'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணியுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன். கால முறைப்படிப் பார்த்தால் கபாடபுரத்தைத் தான் நான் முன்னால் எழுதியிருக்க வேண்டும். ஆயினும் கபாடபுரத்தை விடக் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி அறிய வரலாறும் இலக்கியங்களும் நிறைய இருந்ததனாலும், கபாடபுரத்தைப் பற்றிய ஓர் இலக்கிய அநுமான ஓவியம் என் மனதில் வரையப் பெற்று முற்றுப் பெற சிறிது அதிக காலம் பிடித்ததனாலுமே இவ்வளவு காலந்தாழ்ந்தது. இம்முறையே சேரர் கோநகரை விளக்கி அணி செய்தும் இனி ஒன்று பின்னர் எழுத எண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தக் கதையின் முகத்திற்கு வருவோம்.

     முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங்கரையில் இருந்த தென்மதுரைத் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் கோநகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோநகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram0.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.