10. பெரியவர் கட்டளை பெரிய பாண்டியருடைய சாதுரியமான பேச்சுக்கு முன் குமாரபாண்டியனும் முடிநாகனும் திறனிழந்து நிற்க நேர்ந்தது. அவரோ மேலும் தொடர்ந்தார். "அழகை நிரூபிப்பதற்காக ஒரு காப்புக் கட்டிக் கொண்டது போல் கடவுள் சில பெண்களைப் படைப்பதும் உண்டு அல்லவா?" முடிநாகனும், இளையபாண்டியனும் இதைச் செவியுற்றுத் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டாற்போலத் தலைகுனிந்தார்கள். "ஏன் இருவரும் தலை குனிகிறீர்கள்? உங்களைப் போன்றவர்கள் உருக்குலைவதற்காகப் பெண்களையும் உருவாக்கியிருக்கிறானே இறைவன்?" என்று மேலும் அவர் வினவியபோது தான் இதே சொற்களை இதே கடுமையான குரலில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கேட்டது நினைவு வந்தது இளையபாண்டியனுக்கு. பெரியவர் மாறுவேடத்தில் அங்கு வந்ததோடு அமையாமல் தனக்கும் முடிநாகனுக்கும் மிக அருகிலே நின்று இருவர் பேச்சையும் ஒட்டுக் கேட்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விருப்பமானது, அறியும் திறனை மங்கச் செய்து விடுகிறது என்பதை இப்போது நன்றாக உணர்ந்தான் இளையபாண்டியன். கண்ணுக்கினியாளின் ஆடல் பாடல்களில் திளைத்த தனது விருப்பம் தனது அருகில் வந்து நின்ற முதியவரை உணரும் ஆற்றலை இழக்கச் செய்திருக்க வேண்டுமென்று இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மேலும் தலைகுனிந்தான். "அரசகுமாரர்கள் தெருவில் திரியும் பொதுமக்கள் போல் தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தெரிவிப்பதும் பேசித் திரிவதும் விந்தைதான். 'எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம்' என்பதை அருகிருக்கும் அமைச்சர்கள் கூட உணர்வதற்கோ கண்டுபிடிப்பதற்கோ அரிதாக வைத்துக் கொள்ளவேண்டுமென்று அரச இலட்சணம் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. நீயோ பரிசுக்குப் பாடும் பாண்மகளைப் படைத்த இறைவனை வியந்து உருகுகிறாய்." "தவறு என்னுடையதுதான். இளையபாண்டியரை அரண்மனைக்கு அழைத்து வராமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்குப் போவதற்குத் துணை நின்றிருக்கக் கூடாது" என்று முடிநாகன் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பயந்தபடி வெளியிடலானான். அதைக் கேட்டு அவன் மேற் சீறினார் பெரியவர். "நீ என்னிடம் கூறிய கூற்றுப்படி நீங்களிருவரும்தான் புன்னைத் தோட்டத்திற்கே போகவில்லையே? முதலில் பொய் கூறிவிட்டு அப்புறம் ஏன் தடுமாறுகிறாய்? சாதித்த பொய்க்கு ஏற்பப் பேசத்தெரிய வேண்டும். அல்லது பேசியதற்கு ஏற்பச் சாதிக்கத் தெரியவேண்டும். உங்களுக்கோ இரண்டு வகையிலுமே தேர்ச்சியில்லை" என்று வஞ்சப் புகழ்ச்சியில் இறங்கினார் பெரியவர். முடிநாகன் அவருக்கு மறுமொழி கூறும் சக்தி இழந்தான். "கடமையும், ஆண்மையுமே, அரச குடும்பத்தின் பெருநிதிகள். அவற்றை மறந்தோ, இழந்தோ உருகுவதும், நெகிழ்வதும் தலைமேலுள்ள பொறுப்புக்களைப் பாழாக்கிவிடும். இதை நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நகரத்தைப் பரிசோதிக்க நீங்கள் புறப்பட்டுச் சென்றால் உங்களைப் பரிசோதிக்க நான் பின் தொடர்ந்ததில் தவறென்ன?" - என்று பெரியவர் சிறிது கடுமை குறைந்து ஆறுதலாகப் பேசத் தொடங்கிய பின்பே இருவரும் தலை நிமிர்ந்தனர். "தவறு உன்னுடையதில்லை குழந்தாய்! அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அளவு மீறிய கலை உணர்வு ஆகாது! உன் தாய் வழிவந்த இசை ஞானமும், நம் புலவர் பெருமக்கள் கடமையைக் கற்பிப்பதை விட கலையை உனக்கு அதிகமாகக் கற்பித்திருப்பதுமே இதற்குக் காரணம். இசையும் கூத்தும் காமத்தின் இரு கதவுகள். அவற்றைக் கேட்கலாம். காணலாம். கதவுகளை உடைத்துக் கொண்டு புக முயலாதார் மிகவும் குறைவு. உன்னைக் காண நான் நாணப்படுகிறேன். இனி நீ இலக்கண இலக்கியங்களைக் கற்றதை விட அதிகமாக அரச தந்திரங்களையும், போர்த்துறை நுணுக்கங்களையும் கற்க வேண்டும். உன்னுடைய கல்வியில் விரைவாக ஒரு மாறுதல் வேண்டும். இல்லாவிட்டால் நீ ஆட்சிக்குப் பயன்படாதவனாகி விடுவாய்" என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார் பெரியவர். முடிநாகன் ஏதோ பதில் கூறுவதற்கு முயன்றான். அவர் அவனைப் பேச விடவில்லை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |