http://www.chennailibrary.com





11. முரசமேடை முடிவுகள்

     அன்றிரவு நடுயாமத்திற்குச் சற்று முன்பாக இளைய பாண்டியனான சாரகுமாரனும், தேர்ப்பாகன் முடிநாகனும் மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். "போய் வருக! வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார் முதிய பாண்டியர்.

     அவருடைய வாழ்த்தினால் முடிநாகன் பெருமையடைந்து விடவில்லை என்றாலும், தங்களை முழுமையாக உறைத்துப் பார்ப்பதற்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவன் கபாடபுரத்தின் காவல் தெய்வங்களையும், வழிபடு கடவுளர்களையும் மனமார வேண்டிக் கொண்டிருந்தான். செய்ய வேண்டிய சோதனைகளையும், ஒற்றறிதல் வேலைகளையும் அவுணர் வீதியைச் சார்ந்த இடங்களிலும் சுரங்கப் பகுதியிலுமே நிகழ்த்த வேண்டியிருந்ததனால் அவுணர்கள் போன்றதொரு கோலத்தையே அவர்களிருவரும் மாறுவேடமாகப் புனைந்து கொண்டிருந்தனர். கோட்டைப் புறமதில்களைக் கடந்து அவுணர்வீதியை அடைந்தபோது வீதி பேய் அமைதியில் மூழ்கியிருந்தது. வானில் மேகம் கவிந்திருந்ததனால் இருட்டும் அதிகமாக இருந்தது. முரசமேடையைச் சுற்றி யாரும் தென்படவில்லை. சூனியமானதொரு பயங்கர நிலை நிலவியது அங்கே.

     முடிநாகன் வலது புறமும், இளையபாண்டியன் இடது புறமுமாக முரசமேடையைச் சூழ்ந்து கீழே இறங்குவதற்கான சுரங்க வழி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்கள் மேடையும் பக்கச் சுவர்களும், மேலே மலையைக் கவிழ்த்து நிறுத்தி வைத்தாற் போன்ற மாபெரும் முரசமுமாக இருந்த அந்த இடத்தில் முந்திய இரவு மனிதர்கள் திடீர் திடீர் என்று அங்கு வந்ததுமே முரசடியில் மறைவதைக் கண்ணுக்கெதிரில் கண்டிருந்தும் இன்று அந்த ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள் அவர்கள்.

     அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது பாட்டனார் சிரித்த சிரிப்பும், வாழ்த்திய வாழ்த்தும் நினைவு வந்தன. எதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் அதைப் போல் பெரிய தோல்வி வேறெதுவும் இருக்க முடியாது. நீண்ட நேரம் முரசமேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் வேற்றவர் எவரேனும் சந்தேகக் கண்ணோடு காண நேரிட்டும் விடும். இந்த மனவேதனையில் இருள் வேறு அவர்களுக்கு எதிரியாகி இருந்தது. ஒரு விதத்தில் அந்த இருளே துணையாகவும் இருந்தது. இறுதியில் முடிநாகன் தான் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தான்.

     முரசமேடையின் பக்கச் சுவர்களிலே அவர்கள் தேடிய வழி அகப்படவில்லை. கீழே தரையில் வெண்கலத்தை மிதிப்பது போலத் திமுதிமு வென்று ஒலி அதிரவே முடிநாகன் கையால் கீழே தொட்டுத் தடவிப் பார்த்தபோது மணலுக்கு அடியில் கனமான மரப்பலகை தளமாக இருந்தது. அந்தப் பலகையை ஒவ்வொரு நுனியாகத் தொட்டுப் பார்த்தபோது நடுவில் ஐந்தாறு விரற்கடை இடைவெளியோடு பக்கத்துக்கு ஒன்றாய் இரண்டிடங்களில் மேலே தூக்குவதற்கு வாய்ப்பாக இரும்பு வளையங்கள் இடப்பட்டிருந்தன. பக்கத்தில் மேடையருகே மணற் குவியலொன்றும் நிரந்தரமாக இருந்தது. ஒவ்வொரு முறை திறந்து மூடியபின்பும் அந்த இடம் தரைபோல் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே மணலை இட்டு நிரப்பிவிடுவார்கள் போலும் என்று அநுமானம் செய்ய முடிந்தது. மணலை இட்டு நிரப்பினாலும் தரைமேல் நடக்கும் போது இருக்கும் ஓசைக்கும் இந்த மரப்பலகைக்கு மேல் மணல் மூடிய இடத்தில் நடக்கும்போது இருக்கும் ஓசைக்கும் வேறுபாடு இருந்தது. இதில் நடக்கும்போது ஓசை அதிர்ந்தது.

     "வழி தெரிந்துவிட்டது" - என்ற முடிநாகனுடைய காதருகில் உற்சாகமாகக் குரல் கொடுத்தான் சாரகுமாரன்.

     "இருளில் மெல்லப் பேச வேண்டும். முடியுமானால் பேசாமலே காரியங்களைத் தொடர்வதும் நல்லது. இந்த விதமான வேளைகளில் மௌனமும் குறிப்பறிதலுமே பெரிய துணைகள். இருளுக்குள் ஆயிரம் செவிகள் இருக்கலாம். பதினாயிரம் கண்கள் இருக்கலாம். எனவே கவனமும் விழிப்புமாகக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும்" - என்று இளையபாண்டியனிடம் மிக மெல்லிய குரலில் காதருகே கூறி எச்சரித்து விட்டு இரும்பு வளையத்தைப் பற்றிப் பலகையைத் தூக்கத் தொடங்கினான். மற்றொரு பக்க வளையத்தைக் குறிப்பறிந்து சாரகுமாரன் மேலே தூக்கலானான். கீழே இருளில் படிகளைப் போல் மங்கலாகத் தெரிந்தன.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram11.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.