http://www.chennailibrary.com





12. அந்த ஒளிக்கீற்று

     இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.

     "மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர வேண்டுமானால் இந்த அவுணர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்!" என்று வினாவிய இளையபாண்டியனுக்கு முடிநாகனிடமிருந்து விளக்கமான மறுமொழி கிடைத்தது.

     "தங்கள் பாட்டனார் இந்த அழகிய புதுக் கோ நகரத்தைப் படைக்கும் போது - கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வானளாவிய மதிற்சுவர்களை மேலெழுப்புவதற்கும், அகழிகளைத் தோன்றுவதற்கும் - உடல் வலிமைமிக்க பணியாட்களாகக் கிடைத்தவர்கள் இந்த முரட்டு அவுணர்களும், குறும்பர்களும், கடம்பர்களுமாகத்தான் இருந்தனர். அந்த நிலையில் இவர்களை நம்பியும் ஆக வேண்டியிருந்தது. முழுமையாக நம்பவும் முடியவில்லை. உடனிருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகத் தோன்றவில்லை. என்றாலும் மற்றவர்கள் எல்லாரும் அறிய அவர்களை விரோதிகளாகக் கருதுவதோ, பகைவர்களாக நிரூபித்து முடிவு கற்பிப்பதோ அரச தந்திரமாகாது."

     "'நம்மை எதிர்க்கும் ஒரு விரோதிக்கு நம்முடைய - மற்ற விரோதிகள் எல்லாம் யார் யாராக இருப்பார்கள் என்று அநுமானம் செய்யும் வாய்ப்பைக் கூடக் கொடுக்கலாகாது' என்றெண்ணும் இயல்புடையவர் தங்கள் பாட்டனார். அதனால் தான் கோ நகரத்தை அமைக்கும் பணியை இவர்களிடம் விட்டிருந்தார். ஆனால் இவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு - இப்படி இரகசிய வழிகளையும் கரந்து படைகளையும் சுருங்கை மார்க்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எங்கெங்கே என்னென்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்."

     பேசிக் கொண்டே அவர்களிருவரும் அந்த ஒளிக் கீற்றுப் புறப்பட்ட இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்கிப் பார்த்ததும் தான் அந்த இடத்தில் அவர்கள் அடைந்த வழியின் மற்றொரு நுனி தேர்க்கோட்டத்தின் உள்ளே மரங்களடர்ந்த புதர் ஒன்றினருகே கொண்டு போய்விடுகிறது என்பது தெரிந்தது. சிலுசிலுவென்று உள்ளே நுழைந்துவந்த காற்றும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டதுதான் என்று தெரிந்தது. வழியின் முடிவில் தேர்க்கோட்டத்துப் புதரருகே மதிற்சுவரை ஒட்டினாற்போல - மேலே ஏறி நின்றபோது இன்னும் பொழுது புலரவில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

     'வழியைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் விடிந்துவிடுமோ' - என்று உள்ளே இருள்வழியில் தோன்றிய பரபரப்பும் பயமும் வீண் பிரமையே என்பதனை இப்போது அவர்கள் இருவரும் உணர்ந்தனர். உள்ளே இறங்கி, அந்தச் சுரங்கவழி போய் முடிகிற மற்றோர் இடத்தையும் கண்டுபிடிக்கப் போதுமான காலமும் வாய்ப்பும் இருக்குமென்று தோன்றியது. எஞ்சியுள்ள காலத்தை வீணாக்காமல் செயல்படலாமென்று இளையபாண்டியனும் முடிநாகனும் எண்ணினர்.

     "எதற்கும் இந்தப் புதரருகே இந்தப் பகுதி எங்கிருக்கிறதென்று அடையாளம் தெரிகிறார் போல எதிர்புறமுள்ள மதிற்சுவரில் ஒரு குறியீடு செய்து வைப்பது நல்லது. முரசமேடை வழியிலிருந்து இங்கே புறப்பட்டு வராமல் - இங்கிருந்து முரசமேடைப் பகுதிக்குப் போக வேண்டிய அவசியம் என்றாவது வருமானால், இங்கு இந்த மதிற்சுவரில் உள்ள குறியீட்டைப் பார்த்து வழி தொடங்குமிடத்தை அறிய முடியும்" என்று முடிநாகன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுச் செயல்புரிந்தான் இளையபாண்டியன்.

     அந்தப் புதருக்கு நேர் எதிரே மதிற்சுவரில் 'வழி இங்கே விளங்கும்' - என்பதை மிகவும் குறிப்பாக உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற முறையில் விளக்குப் போல் உருத்தோன்றக் கோடுகள் கீறிவைத்தான். பெரும் பரப்பாக விரிந்துகிடந்த தேர்க்கோட்டப் பகுதியில் அது எந்த இடம் என்பதையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துத் தெளிவாக நினைவு வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram12.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.