13. நெய்தற்பண் புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு - தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து - யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும். கவிகளின் சிந்தனையில் கடல் அலையொலி சோகத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றியிருக்கிறது. குழலிசையிலும், கடலலையிலும், மாலை வானின் செக்கர் நிறவொளியிலும், உலகில் முதல் கவிஞனே சோகத்தைத்தான் கண்டிருக்க முடியும் போலிருக்கிறது. அதனால்தான் நெஞ்சின் சோகத்துக்கு எதிரொலிகளாக அமைய முடிந்தவற்றை வரிசைப்படுத்தும் போதெல்லாம் இவற்றையே ஒன்று சேர்த்துத் தொகுத்து வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். சுவை, ஒளி, உறு, ஓசை, மணம் இவற்றிற்கும், மனிதனுடைய சிந்தனைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும். ஒரு சுவையோடு உறவு கொள்ளும் போதுகளில் எல்லாம் முதன் முதலாக அந்தச் சுவையைக் கண்ட வேளையின் நினைவுகள் வருகின்றன. ஓர் ஓசை, ஒரு மணம், ஓர் உணர்வு, எல்லாமே அதன் முதல் அநுபவத்தைச் சார்ந்த முதல் நினைவுகளுடனேயே வருகின்றன. புன்னை மரத் தோட்டத்தின் நறுமணம் அதே சூழ்நிலையில் அதே இடத்தில் முன்பு கண்ட கண்ணுக்கினியாளின் - ஆடல் பாடலை நினைவூட்டியது. இப்போது வெகு தொலைவிலிருந்து செவியை அணுகும் அந்த நெய்தற்பண்ணும் அவளுடைய குரலைப் போலவே இருந்தது. எதிரே தீயணைந்து வெறும் புகைமட்டும் எழும் கலங்கரைவிளக்கத்துப் பாறையில் அந்தப் புகை எழுச்சியும் கூட ஒரு மோனமான சோகத்தைக் குறிக்கும் அடையாளம் போல் தோன்றியது. நெஞ்சின் இரங்கலைத் தத்ரூபமாக எடுத்தியம்ப நெய்தற்பண்ணைவிட வேறு சிறந்த இசையில்லை. இப்போது இந்த வைகறையில் எங்கிருந்தோ தொலைதூரத்துக் கந்தர்வ உலகிலிருந்து வருவதைப் போன்று மெல்லிய ஒலியலைகளாக வரும் இந்தக் குரலோ - 'இது நெய்தற்பண்' - என்று கண்டுபிடிக்க முடிந்ததை விட 'நெய்தற்பண் இப்படித்தான் இருக்க வேண்டும்' - என்று வரையறுக்கும் அழகிய எல்லையாகவே கொள்ளத்தக்கதாயிருந்தது. அருங்காலையில் மங்கலான ஒளியில் கடலருகே புன்னைப் பூ மணக்கும் சூழலில் வந்த இசைக் குரலில் மனமுருகி நடந்து கொண்டிருந்த சாரகுமாரனுக்கு வேறு கடமைகளை நினைவூட்டலானான் முடிநாகன். "முரசமேடைக் கரந்து படையிலிருந்து செல்லும் இரகசிய வழிகள் எங்கெங்கே போய் முடிகின்றன என்று கண்டு பிடித்துவிட்டதற்காக மட்டுமே முதிய பாண்டியர் நம்மைப் பாராட்டிவிடமாட்டார். அரச குடும்பத்து மதிநுட்பம் சாதாரண ஒற்றர்களைப் போல் புறச் செய்திகளை அறிவதற்காக மட்டும் பயன்படக்கூடாது. 'தோற்றம் அதன் பின்னுள்ள கருத்து கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - எல்லாவற்றிற்கும் மேலாகத் தொகுத்துணரும் ஞானம்' - ஆகிய அனைத்தும் வேண்டுமென்று கூறியிருக்கிறார் பெரியவர். வெறும் தைரியத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர் ஏமாறமாட்டார். ஆகவே இந்த முரசமேடைக்குக் கீழே உள்ள வழிகள் பற்றி இன்னும் அதிக நுணுக்கமான உண்மைகள் எவையேனும் நம் கவனத்திலிருந்தோ, சிந்தனையிலிருந்தோ தப்பியிருந்தால் அவற்றையும் கவனித்துச் சிந்திக்க வேண்டும் இளையபாண்டியரே!" என்று காதில் வந்து இழையும் நெஞ்தற்பண்ணை இரசிக்க முடியாமல் உடன் பேசிக் கொண்டே வந்த முடிநாகனின் பேச்சு சாரகுமாரனுக்கு வெறுப்பூட்டினாலும் கேட்டுத் தீர வேண்டியிருந்தது. சிகண்டியாரின் இசைக்கலையின் மிக உயரிய நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்தவனும், அந்தக் கலையை உயிரினும் மேலானதாக மதிப்பவனும் ஆகிய சாரகுமாரனோ நெய்தற் பண்ணை இதுவரை வேறெவரும் இத்தனை நெஞ்சுருகப் பாடிக் கேட்டதில்லை. நேரம் வேறு பொருத்தமாக அமைந்து விட்டது. அதனாலும் அந்த இசையின் மதிப்புப் பன்மடங்காகப் பெருகிவிட்டது. அருகில் நெருங்க நெருங்க அவனுடைய சந்தேகத்துக்குத் தெளிவு கிடைப்பதுபோல் அந்தக் குரல் அவளுடையது என்றே தெரிந்தது. இனிமையின் நீரொழுக்குப் போன்ற இடையறாத அந்தச் சொல் மதுரம் அவளுக்கே சொந்தமானதல்லவா? இடமும் பாணர்கள் தங்கியிருந்த புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியாயிருக்கவே அவன் தன் அநுமானத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வாய்ப்பிருந்தது. அப்போது குரலுக்குரியவளின் பொலிவு நிறைந்த முகமும் அவனுள் நினைவில் தோன்றியது. முகத்தின் அழகைக் குரலும், குரலின் அழகை முகமும் மிகுவிப்பனவாயிருந்தன. "ஏதேது? இசை, நாடகம், போன்ற கலைகள் வெறும் விருப்பத்தைத்தான் பெருக்கும் என்று தங்கள் பாட்டனார் கூறியது பொய்யாயிராது போலிருக்கிறதே?" என்று குறும்புச் சிரிப்போடு மறுபடி முடிநாகன் குறுக்கிட்ட போது இளையபாண்டியனுக்குக் கோபமே வந்துவிட்டது. ஒரு கணம் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக திரும்பி முடிநாகனை உறுத்துப் பார்த்தான் சாரகுமாரன். முடிநாகனின் பேச்சு அவ்வளவில் நின்று போயிற்று. அமைதியாக இளைய பாண்டியரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் - இசைக்குரல் மிக அருகே ஒலிப்பது போல் தோன்றவே தயங்கி நின்று அந்தப் புன்னைமரக் கூட்டத்தில் சுற்றும் முற்றும் கவனிக்கலானாளன் சாரகுமாரன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |