15. பழந்தீவுப் பயணம் இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து வெயிலேறியிருந்தது. நீராடிக் காலைக் கடன்களை முடித்த பின்னர் இருவரும் பெரிய பாண்டியரைச் சந்திக்கச் சென்றார்கள். முடிநாகன் மட்டும் உற்சாகமின்றி இருந்தான். "பெரிய பாண்டியரிடம் நமது சாதனைகளாகவோ, வெற்றிகளாகவோ, கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் போகிறோம் சாரகுமாரரே! 'சுரங்கப் பாதைகள் தொடங்குமிடத்தையும், முடியுமிடத்தையும் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம்' என்று நான் கூறுவதை அவர் பொருட்படுத்தி மதிக்கவே மாட்டார். ஏற்கனவே உங்கள் மேல் அவருக்கு ஒரு குறை இருக்கிறது. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கலை ஆர்வமோ, முனைப்போ அளவுக்கதிகமாக இருப்பதை - மறுக்கிற மனம் அவருடையது. கலைகளில் ஆர்வம் காண்கிறவன் விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற மெல்லிய மனப்பான்மையை அடைந்து விடுகிறான். இந்த மெல்லிய மனப்பான்மை அரச தந்திரத்துக்கு இடையூறானது. பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாத சூழ்ச்சித் திறனும், நுணுக்கமும் உள்ள வலிய மனமே அரசனுக்கு வேண்டுமென்பவர் அவர். எனவே, அவரால் நம்முடைய அனுபவங்களை வெற்றிகளாக ஒப்புக் கொள்ள முடியாது என்று அஞ்சித் தயங்கியபடியே அவருக்கு முன் போக வேண்டியவர்களாயிருக்கிறோம் நாம்" என்றான் அவன். முடிநாகன் கூறியபடியேதான் ஆயிற்று. அவர்கள் கூறியவற்றை எல்லாம் மிக அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவில் அந்த அலட்சியத்திற்கு ஒரு முத்திரை வைப்பது போல் புன்முறுவல் பூத்தார் வெண்தேர்ச்செழிய மாமன்னர். "இப்படிச் சுரங்கங்களும், சூழ்ச்சிகளும் செய்து கொண்டு வாழ்கிற அவுணர்களை நம்பித் தேர்க்கோட்டத்தை ஒப்படைத்திருக்கிறீர்களே; அது என்ன நம்பிக்கையோ?" என்று சிறிது துணிவுடனேயே அவரிடம் நேருக்கு நேர் வினாவினான் இளையபாண்டியன். அவனுக்கு உடன் மறுமொழி கூறாமல் - அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து நோக்கினார் பெரிய பாண்டியர். பின்பு நிதானமாகவும் சுருக்கமாகவும் அவனை நோக்கிச் சில வார்த்தைகளைக் கூறலானார். "உன்னுடைய கேள்விக்கு விடை இங்கே இல்லை. இந்தப் புதிய கோ நகரத்தின் தென்பகுதிக் கடலுக்குள் அங்கங்கே காடுகளாகவும், மலைகளாகவும், சிதறிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழந்தீவுகளில் இருக்கிறது அந்த விடை." "இருக்கட்டும்! அந்தப் பழந்தீவுகள் எல்லாம் கபாடபுரக் கோ நகரத்தின் ஆணைகளுக்கு உட்பட்ட சிற்றரசுகளல்லவா? அவைகளை நம் பகைகளாகக் கருத நேர்வது எப்படி?" என்று மேலும் விடாமல் வினாவினான் சாரகுமாரன். "நீதி, அநீதிகளும், நியாய அநியாயங்களும் தெரியாத அந்தக் காட்டு மனிதர்களிடம் நட்பு இருப்பது போல் பாவனை செய்து நமது அரச தந்திரத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறோமே ஒழிய வேறு பொருள் அந்த உறவுக்கு இல்லை." "அது உறவா, பகையா, என்பதே இன்னும் விளக்கப்படவில்லையே?" "விளக்கப்படாமலிருக்கிறவரை தான் சில நிலைமைகளுக்குப் பாதுகாப்பு அதிகம். சில வேளைகளில் அவசரப்பட்டு அவற்றை விளக்கி முடிவு கண்டுவிடுவது கூடச் சிறுபிள்ளைத் தனமாக முடிந்து விடும்! பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் நமது தேர்க்கோட்டத்தில் அடிமைகளைப் போல் பணிபுரிகிறார்கள். தென்பழந்தீவுகளிலுள்ள வானளாவிய மரங்களிலிருந்து வைரம் பாய்ந்த அடிமரப் பகுதிகளும், பிற சட்டங்களும், நமது தேர்க் கோட்டத்திற்காகக் கிடைக்கின்றன. கபாடபுரத்திற்கும், அந்நிய தேசங்களுக்கும் இடையே இராஜபாட்டையைப் போல பயன்படும் கடல்வழிகள் எல்லாம் இந்தத் தென்பழந்தீவுகளை ஊடறுத்துக் கொண்டே செல்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தப் பழந்தீவுகளின் அவுணர்களோடு நாம் கொண்டிருப்பது பகையா, உறவா என்பதை அழுத்தி உறைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல்வதுகூட அவசியம்தானா என்பதையும் அதன் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்." "இப்படியே தொடரவிடுவதிலுள்ள பயன் என்னவாக இருக்குமென்று புரியவில்லை." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |