16. எயினர் நாடு தன் தாய் திலோத்தமையாருக்குச் சாரகுமாரன் நிறைய ஆறுதல் கூற வேண்டியிருந்தது. எவ்வளவு ஆறுதல் கூறியும் பழந்தீவுகளில் அவன் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதை மகனிடம் கவலையோடும், பாசத்தோடும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவள். அறிவுக்கும் அன்புக்குமிடையே இளையபாண்டியனின் உள்ளம் சில நாழிகை நேரம் ஊசலாடியது. பாசம் என்னும் மெல்லிய உணர்வும், அறிவு என்னும் தீவிரமான கடமையும் போராடின. தான் ஆறுதல் கூறியது போதாதென்று முடிநாகனைக் கொண்டும் தாய்க்கு ஆறுதல் கூறச் செய்தான் இளையபாண்டியன். "இளையபாண்டியருக்குத் துணையாக அடியேனும் உடன் செல்லுவதால் கோப்பெருந்தேவி - இவ்வளவு மிகையாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக அரசகுமாரர்கள் பட்டத்துக்கு வருமுன் தன் நாட்டிற்கு நான்கு புறத்துமுள்ள கடல் எல்லை, நிலவெல்லைகளிலுள்ள பகுதிகளை அரசதந்திர முறையில் சுற்றிப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என்பதனாலேயே பெரியபாண்டியர் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பட்டத்திற்கு வந்தபின் இத்தகைய சுற்றுப் பயணங்களைச் செய்ய முடியாது போகும். செய்ய முடிந்தாலும் அது தன்னிச்சையானதாகவும், சுதந்திரமானதாகவும் இராது. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால் கோப்பெருந்தேவி இளையபாண்டியருக்கு முழு மனத்துடன் விடை கொடுக்க முடியும்" என்று முடிநாகன் எடுத்துக் கூறியபோதும் கூடக் கோப்பெருந்தேவி அரைகுறை மனநிலையில் தான் இருந்தாள். அவளுடைய மனநிலையை மகன் சாரகுமாரன் மூலமாகக் கேள்விப்பட்டு அநாகுலபாண்டியன் வந்து கடுமையாக எடுத்துக் கூறியபின்பே அவள் இணங்கினாள். "மகனிடம் உனக்குப் பாசமும், அன்பும், இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக கடமையை மறந்துவிடலாகாது. அரச குடும்பத்துப் பிள்ளையைச் செல்லமாக வளர்க்க நினைப்பதை விட அதிகமாக ஒரு தாய் அவனுக்கும், அவன் பிறந்த நாட்டிற்கும் வேறெந்தக் கெடுதலையும் செய்துவிட முடியாது என்பதை நினைவு வைத்துக் கொள். நீ இன்று உன் மகன் மேல் மட்டும் பாசம் காண்பிக்கிறாய்! அந்த மகனோ நாளை இந்த நாட்டின் உயிர்க்குலத்தின்மேல் எல்லாம் பாசம் காண்பித்து ஆள வேண்டியவன். நாளைப் பரந்த பாசத்தைக் காண்பிக்க வேண்டியவர்களை இன்று நாம் குறுகிய பாசத்தால் வளர்ப்பது கூடத் தவறு." "குறுகிய பாசத்தால் பேணப்பட்டுச் செல்வப் பிள்ளைகளாகவும், சவலைப் பிள்ளைகளாகவும் வளர்க்கப் படுகிறவர்கள் நாளை பரந்த அன்பையும், பாசத்தையும், செலுத்த முடியாதவர்களாகிவிடுவார்கள். இளைய பாண்டியனைப் பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீ இணங்கவில்லை என்பது தெரிந்தால் பெரியபாண்டியரே உன்னிடம் பேசவருவார். அவர் எதிரே வந்து நின்றால் உனக்குக் கைகால் பதறும். பேசுவதற்குச் சொற்கள் வராமற் போய்விடும்" என்று அநாகுலபாண்டியன் இவ்வளவெல்லாம் எடுத்துக் கூறிய பின்பே திலோத்தமை இதற்கு இணங்கினாள். பெரியபாண்டியர் தன் எதிரில் வந்துநின்று கடுமையான சொற்களில் திடமாக விவாதிப்பார் என்பதைக் கேள்விப்பட்டதும் அந்நிலை வரை போகவிடுவதில் பயனில்லை என்று தோன்றியது அவளுக்கு. "நான் பெண்! இதற்கு மேல் அரசியல் காரணங்களின் விளைவுகளை மறுக்கச் சக்தியில்லாதவள். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று சோகம் இடறும் இனிய குரலில் கணவனுக்குப் பதிலிறுத்தாள் திலோத்தமை. இளையபாண்டியனும், முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் பயணம் செய்வது உறுதியாயிற்று. சிகண்டியார், அவிநயனார் ஆகிய ஆசிரியர்களிடம் கூறி விடைபெறுவதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பேரப்பிள்ளையாண்டானாகிய சாரகுமாரனை அழைத்துக் கொண்டு போனார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |